கல்பனா அவளுடைய பெற்றோருக்கு ஒரே மகள். அவளுடைய
தந்தை ஒரு அரசாங்க வேலையில் இருந்தார். அவர் குடிப்பழக்கத்திற்கு
ஆளாகியிருந்தாலும் கூட அந்தச் செலவையும் மீறி அவருடைய மாத சம்பளம் அவர்களுடைய சிறிய
குடும்பத்திற்குத் தாராளமாகப் போதுமானதாக இருந்தது. தாய் அதிகம்
படிக்காதவள். கணவனுக்குப் பயந்து வாழ்ந்தவள். ஏழைக் குடும்பத்திலிருந்து
வந்தவள் என்பதால் பணப்பிரச்சினை இல்லாமல் வாழ முடிவதே பெரும் பாக்கியம் என்று நினைத்தவள். தந்தை அதிகமாய்
அன்பு காட்டாதவராக இருந்தாலும், கல்பனாவும் வயதுக்கு வரும் வரை எந்தப் பிரச்சினையும் இல்லாமல்
இயல்பான வாழ்க்கை வாழ்ந்து வந்தாள். அதன் பின் தான்
அவளுடைய வாழ்க்கை நரகமாய் மாறியது.
காமாந்தகனான அவளுடைய தந்தை குடித்து
விட்டு வந்த போதெல்லாம் அவளிடம் முறை தவறி நடக்க ஆரம்பித்தார். அவளுடைய
தாயோ கணவனைக் கண்டிக்க முடியாமல் கண்ணீர் விடுவதோடு நிறுத்திக் கொண்டாள். எங்கு பாதுகாப்பாக
ஒரு பெண் இருக்க முடியுமோ, அங்கு பாதுகாப்பாக இருக்க முடியாத நிலைமை அவளுக்கு ஏற்பட்டது. அந்தப்
பிஞ்சு வயதில் என்ன செய்வது என்று அறியாமல் பெரும் மனப்போராட்டத்திற்குக் கல்பனா ஆளானாள். பல நாட்கள், தந்தை வருவதற்கு
முன் தன் அறைக்குள் போய் புகுந்து கொண்டால் மறுநாள் காலை வரை அவள் வெளியே வராமல் இருப்பாள். ஆனால் குடித்து
விட்டு வந்து அவர், அவளுடைய அறைக்கதவைத் தட்டி கலாட்டா செய்வார். அவளுடைய
தாயை அடிப்பார். பகலில் கல்பனாவை அடித்துத் துன்புறுத்துவார். இதை வெளியே
யாரிடமும் சொல்ல முடியாமல், வேறு போக்கிடமும் இல்லாமல் கல்பனா நரக வாழ்க்கை வாழ்ந்தாள்.
அந்த சமயங்களில் அவளுக்குப் பெரிதாய்
துணை நின்றவை நூலகத்தில் படிக்கக் கிடைத்த தன்னம்பிக்கை நூல்களும், சாதனையாளர்களின்
வாழ்க்கை வரலாறுகளும் தான். அவை தான் அவளுக்குத் தைரியத்தையும், நம்பிக்கையையும்
தந்து காப்பாற்றின. ஒவ்வொருவனும் தன்னைத் தானே காத்துக் கொள்ள வேண்டும், பிரச்சினைகளை
நேராகவே சந்திக்க வேண்டும், சூழ்நிலைகளை மீறி அவனவனே முன்னேற வேண்டும் என்ற பாடங்களை
அந்த நூல்கள் அவளுக்குக் கற்றுத் தந்தன. தன்னால் முடிந்த
அனைத்தையும் ஒரு மனிதன் செய்தானானால், அவன் சக்திக்கு
மீறியதை இறைவன் பார்த்துக் கொள்வான் என்ற தெளிவு பிறந்தது.
அதன் பின் ஒரு நாள் அவள் துணிந்து அவரை
எதிர்த்து நின்றாள். இனி இது போல் அவர் துன்புறுத்தினால் அருகில் உள்ள மகளிர்
காவல் நிலையத்திற்குப் போய் புகார் கொடுப்பதாய் பயமுறுத்தினாள். அப்போது
அவளுக்கு வயது பதினாறு. ஆரம்பத்தில் அவளுடைய தந்தை அதைப் போலி அச்சுறுத்தலாக எடுத்துக்
கொண்டார். ஆனால் அன்று அவள் உண்மையாகவே எதற்கும் தயாராக இருப்பதை அவரால்
உணர முடிந்தது. சட்டத்தில் குழந்தை பாலியல் சித்திரவதைக்கான தண்டனைகள் கடுமையானவை
என்பதை அவர் அறியாதவர் அல்ல. அவள் அப்படிப் புகார் செய்தால், சிறை செல்ல
வேண்டி வருவது மட்டுமல்லாமல், தன் அரசு வேலையையும் இழக்க வேண்டிவரும் என்ற பயம் அவருக்கு
எழுந்தது.
அன்று முதல் அவருடைய காமச்சேட்டைகளும், அவளை அடிப்பதும்
நின்று போயின. ஆனால் அன்றிலிருந்து அவளை எதிரியாக நினைக்க ஆரம்பித்தார். அவள் முன்னிலையில்
அவள் தாயை அதிகமாகத் துன்புறுத்த ஆரம்பித்தார். அது அவளுக்கு
வேறு விதமான சித்திரவதையாக இருந்தது. ’உன்னை அடிப்பதற்குப்
பதிலாகத் தான் உன் அம்மாவை அடிக்கிறேன்’ என்பதை எல்லா விதங்களிலும்
தெரியப்படுத்தினார். அம்மாவோ அதையும் விதி என்றே ஏற்றுக் கொள்பவளாக இருந்தாள். அவருக்கு
ஒத்துழைக்காமல் தண்டச்சோறாக இருக்கும் கல்பனா அங்கிருந்து வெளியேறினால் தான் அவள் அம்மாவைத்
துன்புறுத்துவது நிறுத்தப்படும் என்பதை அவர் வெளிப்படையாகவே தெரியப்படுத்தினார். பதினெட்டு
வயது வரை எப்படியோ அந்த வீட்டில் தாக்குப் பிடித்த அவள், பின் அங்கிருந்து
வெளியேறினாள். இந்த நித்திய சித்திரவதையிலிருந்து அவளையும், அவள் தாயையும்
காப்பாற்ற அவளுக்கு வேறுவழி தெரியவில்லை. வீட்டை விட்டு வெளியேறுகையில்
அவள் ஆழ்மனதில் ஒரு அணையாத அக்னி இருந்தது. ஒரு நாள்
அவளும் சாதித்துக் காட்டுவாள். அவளும் சிகரங்களை எட்டுவாள்!
வீட்டை விட்டு வெளியேறி வந்தவளுக்கு, அவளுடைய
நிலைமையை முழுமையாக அறிந்திருந்து, அடைக்கலம் தந்தது
பிரம்மானந்தா தான். அவர் அப்போது ஒரு வாடகை இடத்தில் யோகா வகுப்புகள் நடத்தி
வந்தார். அவளுடைய தந்தை யோகா கற்றுக் கொடுக்க எல்லாம் தன்னிடம் பணம்
இல்லை என்று பணம் தர மறுத்திருந்தார். ஆனாலும் ஒரு வருடத்துக்கு
முன்பு இலவசமாக அவளுக்கு பிரம்மானந்தா யோகா/தியானம்
கற்றுத் தந்திருந்தார். வீட்டை விட்டு வந்தவுடன் அவருடன் சேர்ந்து யோகா மற்றும் தியானம்
கற்றுத் தரும் பணியில் கல்பனா தன்னை இணைத்துக் கொண்டாள்.
அன்று அவர்கள் கற்றுத் தந்ததெல்லாம்
பத்மநாப நம்பூதிரி கற்றுத் தந்த பெயரிலேயே இருந்தது. அந்த யோகா மற்றும் தியான முறைகளை பத்மநாப நம்பூதிரி பள்ளியில்
தான் கற்றது என்று சொல்லிக் கொள்ள அன்று பிரம்மானந்தா தயங்கியதேயில்லை. ஆனால் அதையும்
மெருகேற்ற வேண்டும், மேம்படுத்த வேண்டும் என்ற ஆர்வம் பிரம்மானந்தாவிடம் அன்று
உண்மையாகவே இருந்தது. அதை கல்பனாவிடமும், அவருடன்
இருந்த மற்ற நண்பர்களிடமும் அவர் அன்று தெரிவித்திருக்கிறார். ஆனால் யோகாலயம்
பிரபலமாக ஆரம்பித்த போது, அவர் பத்மநாப நம்பூதிரியின் பெயரைச் சொல்வதில் ஒரு பிரச்சினையை
உணர்ந்தார். யோகாலயத்திற்கு வருவோர் அவரை விட அவர் குருவான பத்மநாப நம்பூதிரியை
உயர்வாக நினைக்கவும், மதிக்கவும் ஆரம்பித்தார்கள். சிலர் அவரைப்
பற்றியும், அவருடைய யோகா அமைப்பின் கிளைகள் எங்கேயெல்லாம் இருக்கின்றன
என்பதைப் பற்றியும் விசாரிக்க ஆரம்பித்தார்கள். உடனே பிரம்மானந்தா
பத்மநாப நம்பூதிரி பெயரைப் பயன்படுத்துவதை நிறுத்தினார். அவர் அந்த
யோகா, தியான முறைகளின் பெயர்களையும் நவீனமும், விஞ்ஞானமும்
கலந்த பெயர்களாய் மாற்றினார்.
அப்போது கல்பனாவிடம் அவர் சொன்னார். “நாம் இந்த
யோகாலயாவைப் பிரபலப்படுத்த வேண்டுமென்றால் அடுத்தவர்கள் பெயர்களை உபயோகப்படுத்துவதைக்
குறைத்துக் கொள்ள வேண்டும். இல்லா விட்டால் நாம் மற்றவர்களுக்கு விளம்பரம் செய்வது போல்
ஆகிவிடும். இது விளம்பர யுகம். எத்தனை
தான் உயர்வாக இருந்தாலும், விளம்பரமில்லா விட்டால், வித்தியாசமாக
எதையாவது செய்யா விட்டால், நம்மை யாரும் மதிக்க மாட்டார்கள். நாம் பின்தங்கி
விடுவோம்”
முன்பெல்லாம் சத்சங்கத்தில் எல்லா அறிஞர்களுடைய
புத்தகங்களையும், போதனைகளையும் பற்றி அவர்கள் பேசுவார்கள். அப்போது
அவரும் பேராசிரியர் சிவசங்கரன் சொல்லியிருந்த அறிஞர்கள் பற்றி எல்லாம் சொல்வார். அந்தச்
சமயத்தில் தான் ஒரு நாள் சிவசங்கரன் அடையாளம் காட்டியிருந்த ஒரு யோகியைப் பற்றியும்
சொன்னார். நிஜமாகவே அமைதியும், சாந்தமும்
அந்த யோகி முன்னிலையில் தான் உணர்ந்ததாகச் சொன்னாலும் அது மட்டும் போதாது என்றும், அது சொல்லிக்
கொள்ளும் அளவுக்குப் பெருமையல்ல என்று தனக்குத் தோன்றியதாகவும் சொன்னார்.
யோகாலயம் வளர்ந்தது. முக்தானந்தா
போன்ற சிலர் துறவறம் பூண்டு யோகாலயத்தில் துறவிகளாகச் சேர்ந்த போது, கல்பனாவும்
துறவறம் பூண்டு கல்பனானந்தாவாக ஆனாள். ஆனால் அதன் பின்
அவள் பிரம்மானந்தாவிடம் காண ஆரம்பித்த மாற்றங்கள் ஏராளம்.
அவர் மற்ற அறிஞர்களின் கருத்துக்களைச்
சொன்னாலும், அவர்களுடைய பெயர்களைச் சொல்வதையும் தவிர்த்து, தன் சொந்தக்
கருத்தாக சொல்ல ஆரம்பித்தார். அவர் ஓஷோவின் தீவிர ரசிகராக இருந்தவர். ஓஷோ எல்லா
மகான்கள், ஞானிகளையும் படித்திருந்து அவர்கள் ஞானத்தை விரிவாக விவரிப்பதைப்
பார்த்து பிரமித்தவர். சொற்பொழிவுகளில் அவருடைய நூல்களில் இருந்து தாராளமாக எடுத்துக்
கொண்டு பேசினாலும் ஓஷோவின் பெயரைச் சொல்வதையும் தவிர்த்தார். ஆனால் ஓஷோ
போல் குல்லாயும், வண்ண வண்ண நீண்ட அங்கிகளையும் அவர் அணிய ஆரம்பித்தார்.
குருவாகப் பிரபலமானதில் அவருக்கு ஆரம்பத்தில்
திருப்தி இருந்தாலும், போகப் போக அதுவும் சலித்தது. அதற்கும்
மேலாக இறையருள் பெற்ற ஒரு யோகியாகத் தன்னைக் காட்டிக் கொள்ள ஒரு நாள் திடீரென்று சதுரகிரி
மலையில் சித்தர்கள், யோகிகள் மற்றும் சுந்தரமகாலிங்கம் காட்சியளித்த கதையை அவிழ்த்து
விட்டார். அந்தக் கதையைச் சொன்ன தினத்தன்று அவர் கல்பனாவிடம் சொன்னார். “இது உண்மையாகவே
நடந்தது. ஆனால் யோகி கோரக்கர் இதை நான் அனுமதி தரும் வரை நீ வெளியே
சொல்லக்கூடாது என்று எனக்கு கட்டளை இட்டிருந்தார். அதனால்
தான் இத்தனை நாள் இதை நான் வெளியே சொல்லியிருக்கவில்லை. இப்போது
இதைச் சொல்லலாம் என்று யோகி கோரக்கர் நேற்றிரவு என் கனவில் சொன்னார். அதனால்
தான் சொல்கிறேன்” என்றார்.
தொடர்ந்த காலத்தில் அந்தக் கதையும்
அவருக்குச் சொல்லிச் சலித்து விட்டது. திடீரென்று அவர்
முந்தைய பிறவியில் பதஞ்சலி மகரிஷியின் சீடர் என்று சொல்ல ஆரம்பித்தார். இந்த முறை
அவர் கல்பனாவிடம் எந்த விளக்கமும் தரவில்லை. அதற்குப்
பின் எப்போதும் எதற்கும் அவளிடம் அவர் விளக்கம் தந்ததில்லை.
(தொடரும்)
என்.கணேசன்
Thanks. Desikan
ReplyDelete