ஆடிட்டர் திவாகரனின் அலுவலகத்தை தினமும் சுத்தம் செய்யும்
வேலைக்காரி வழக்கம் போல் காலை ஏழரை மணிக்கு வந்து அலுவலத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தாள். சுமார்
எட்டு மணியளவில் ஒரு முதியவரும், இளைஞனும் அங்கே வந்தார்கள். முதியவர்
வேட்டி, சட்டை, தோளில் துண்டு என கிராமத்து உடையில் இருந்தார். உடன் வந்திருந்த
இளைஞன் பேண்ட், ஷர்ட் அணிந்திருந்தான்.
அலுவலகத்திற்குள் நுழைந்த அவர்களைப்
பார்த்த வேலைக்காரி, அலுவலகத்தைக் கூட்டுவதை நிறுத்தி ’என்ன வேண்டும்?’ என்பதைப்
போல் பார்த்தாள். இளைஞன்
அவளிடம் கேட்டான். “ஆபிஸ்ல எல்லாம் எத்தனை மணிக்கு வருவாங்க?”
“ஸ்டாஃப்
எல்லாம் ஒன்பதரைக்கு வருவாங்க. ஆடிட்டர்கள் வர்றப்ப பத்து மணியாயிடும்” என்று அவள்
சொன்னதும் அந்த இளைஞன் முதியவரைப் பார்த்தான். முதியவர்
யோசிப்பதாகக் காட்டிக் கொண்டு அலுவலகத்தை ஆராய்ந்தார். வலது புறம்
வரிசையாக ஏழு நாற்காலிகள் வைக்கப்பட்டிருந்தன. நான்காவது
நாற்காலியில் தான் அலுவலகத்தின் பெரிய பூட்டோடு சாவிக் கொத்தையும் வேலைக்காரி வைத்திருந்தாள்.
அதைப் பார்த்து விட்டு அவர் “ஆடிட்டர்
கிட்ட பேசிட்டு முடிவு செய்யலாம்” என்று சொன்னபடியே அலைபேசியை எடுத்து அதைப் பார்த்தபடியே போய்
சாவிக் கொத்து இருக்கும் நாற்காலிக்கு அடுத்த நாற்காலியில் அமர்ந்தார். அவர் தோளில்
இருந்த துண்டை அவர் அந்த சாவிக் கொத்தின் மீது வைத்தார். பின் அலைபேசியில்
அவர் எண்களை அழுத்த ஆரம்பித்தார். வேலைக்காரி மறுபடியும் கூட்ட ஆரம்பித்தாள்.
“ஹலோ சார்...
நாங்க உங்க ஆபிஸ்க்கு வந்திருக்கோம்.... என்ன...
சரியாய் கேட்கலை.... இருங்க வெளியே வர்றேன் என்று சொன்னபடி துண்டை எடுக்கும் சாக்கில்
கொத்தாக அந்த சாவிக்கொத்தையும் இன்னொரு கையில் எடுத்துக் கொண்டு வெளியே வந்தார். அவர் பின்னாலேயே
வெளியே வந்த இளைஞன் அவன் கையில் வைத்திருந்த பையில் இருந்து ஒரு சதுரப் பெட்டியை எடுத்தான். அதில் இளகிய மெழுகு இருந்தது. அவன் அவருக்கு
எதிர்ப்பக்கம் நின்று கொண்டு அவர் நீட்டிய சாவி கொத்தை வாங்கிக் கொண்டு மின்னல் வேகத்தில்
அந்த இளகிய மெழுகில் பதிக்க ஆரம்பித்தான். உள்ளேயிருக்கும்
வேலைக்காரி பார்த்தால் முதியவரின் முதுகுப் பக்கம் தான் தெரியும்படி அவர் மறைத்து நின்றிருக்க, தெருவில்
போகும் ஓரிருவர் பார்த்தாலும் தெரியாதபடி மறைத்து இளைஞன் நின்றிருந்தான். ஒரு நிமிடத்தில்
நான்கு சாவிகளின் அச்சை அவன் எடுத்து விட்டு, வேகமாக
முதியவரின் துண்டினால் சாவிகளை நன்றாகத் துடைத்து மறுபடியும் அவரிடமே தந்தான்.
அவர் துண்டோடு அதை வாங்கிக் கொண்டு
அலைபேசியில் பேசிக் கொண்டே மறுபடியும் உள்ளே வந்தார். “அப்படின்னா
நாங்க ரெண்டு பேரும் டிபன் சாப்ட்டுட்டு பத்தரை மணிக்கு வர்றோம். எங்களுக்கு
வேலையை முடிச்சுட்டு மூனு மணி பஸ்ல ஊர் போய் சேரணும்...” என்று சொல்லியபடி
முன்பு அமர்ந்திருந்த நாற்காலியில் அமர்ந்து துண்டோடு பக்கத்து நாற்காலியில் முன்பிருந்தபடியே
சாவியைத் துண்டுடன் வைத்தார். திரும்பவும் துண்டை மட்டும் எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டபடி
அவர் அந்த இளைஞனிடம் சொன்னார். “ஆடிட்டர் பத்தரைக்கு வரச் சொல்றார்...”
அந்த இளைஞன் தலையசைத்தான். வேலைக்காரியிடம்
அந்த இளைஞன் சொன்னான். “சரிம்மா. நாங்க அப்பறமா வர்றோம்.”
அவள் தலையசைக்க அவர்கள் இருவரும் கிளம்பினார்கள். வேலைக்காரிக்கு
எல்லாமே இயல்பாய் தான் தெரிந்தது. அவர்கள் வரவும், பேச்சும், நடவடிக்கையும்
சந்தேகத்தை ஏற்படுத்தவில்லை. அவள் தன் வேலையைத் தொடர்ந்தாள்.
பிரம்மானந்தாவைச் சந்திக்க கல்பனானந்தா சென்ற போது அவர் தன்
வெளியூர் பயணப் பிரதாபங்களை சமூக வலைத்தளப் பொறுப்பாளரிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அந்தத்
துறவி தான் பிரம்மானந்தாவின் புகழை சமூக ஊடகங்களில் பரப்பும் குழுவின் தலைவர். அந்தக்
குழுவினர் தான் ’கோபமூட்டும் கேள்விக்கு யோகிஜி அலட்டிக் கொள்ளாமல் பதிலடி’,
‘விஷமத்தனமான விமர்சகருக்கு மூக்குடைப்பு’, ’கடவுள்
போல் சர்வசக்தி பெற யோகிஜி கூறும் சூட்சும வழிகள்’, ’யோகிஜியின்
பக்தர்கள் வாழ்வில் நடந்த அற்புதங்கள்’ ’வெளிநாட்டில் பரவும்
யோகிஜியின் புகழ்’ போன்ற தலைப்புகளில் இணையத்தில் கட்டுரைகளும், காணொலிகளும்
வெளியிடுபவர்கள்.
கல்பனானந்தா சென்ற போதும் அது போன்ற
ஒரு காணொலிக்கான தகவலைத் தான் பிரம்மானந்தா அந்தத் துறவியிடம் சொல்லிக் கொண்டிருந்தார். பெரும்பாலும்
அன்றிரவுக்குள் அந்தக் காணொலி வெளியாகிவிடும். அந்தக்
குழுவினரே பல புனைப்பெயர்களில் நூற்றுக் கணக்கில் அந்தக் காணொலிக்கு உடனடியாகப் பாராட்டும், பிரமிப்பும்
தெரிவிப்பார்கள். அதைப் பார்த்து விட்டு, இத்தனை
பேர் பாராட்டும், பிரமிப்பும் தெரிவித்திருக்கிறார்கள் என்றால் அது உண்மையாகத்
தானிருக்கும் என்று மற்றவர்கள் பலரும் பாராட்டுகள் தெரிவிப்பார்கள். சிலர் அவரைச்
சந்திக்கத் துடிப்பார்கள். புகழ் சேர்ந்து பெருகுவது இப்படித்தான்...
கல்பனானந்தாவைப் பார்த்ததும் பிரம்மானந்தர்
அவரை அமரும்படி சைகை செய்து விட்டு அந்தத் துறவியிடம் அதுவரை சொல்லிக் கொண்டிருந்ததை, சுருக்கமாகச்
சொல்லி அனுப்பி வைத்தார். அந்தத் துறவி போகும் போது கல்பனானந்தாவுக்கும் சேர்த்து வணக்கம்
தெரிவித்து விட்டுப் போனார்.
கல்பனானந்தாவிடம் பிரம்மானந்தா தன்
பயண விஷயங்களை ஒரு நிமிடம் சொல்லி விட்டு, ஷ்ரவனைப்
பற்றி விசாரித்தார். பாண்டியனிடம் சொன்ன தகவல்களை கல்பனானந்தா அவரிடமும் சொன்னாள். பாண்டியன்
விரிவாகவே அதைச் சொல்லியிருக்கிறார் என்பது, பிரம்மானந்தா
அதைக் கேட்ட விதத்திலேயே அவளுக்குப் புரிந்தது. எல்லாவற்றையும்
கேட்டு விட்டு பிரம்மானந்தா சொன்னார். “இன்றைக்கு சத்சங்க
நேரத்தில் என்னைச் சந்திக்க அவனை இங்கே வரச் சொல்”
கல்பனானந்தா தலையசைத்தாள். இது புதிய துறவிகள் யாருக்கும் இதுவரை கிடைத்திருக்காத கௌரவம். ஷ்ரவன்
உண்மையாக துறவறம் பூண்டு அமைதி காண யோகாலயம் வந்தவன் அல்ல என்பதும் அவளுக்கு நாளுக்கு
நாள் உறுதியாகிறது. ஏதோ ஒரு
சக்தி அவன் வசமாகியிருக்கின்றது என்று அவள் நம்பினாள். அதோடு, துறவு அல்லாமல்
வேறெதோ உத்தேசத்துடன் அவன் வந்திருக்கிறான் என்பதையும் அவளால் யூகிக்க முடிந்தது. அது என்ன
என்பது தெரியா விட்டாலும், திட்டமிட்டு படிப்படியாக அவன் முன்னேறுவதை அவள் பார்க்கிறாள். வந்த முதல் வாரத்திலேயே அவன் பாண்டியனைச் சந்தித்துப் பேசியது
மட்டுமல்லாமல், பிரம்மானந்தாவையும் சந்தித்துப் பேசப் போகிறான். இதெல்லாம்
எதில் போய் முடியுமோ?
மாலையில் ஷ்ரவன் தோட்ட வேலை செய்து
கொண்டிருந்த போது வந்த கல்பனானந்தா பிரம்மானந்தா அவனை வரச் சொன்னதைத் தெரிவித்தாள். வழக்கமாக அவளிடம் நடிக்கும் ஷ்ரவன், அவள் எதிரிகளின்
ஆள் அல்ல என்பதால், அப்போது நடிக்க முற்படவில்லை. அவளுடைய
முழு நம்பிக்கையையும் பெற விரும்பியதால் அவன் நடிக்காமல் வெறுமனே தலையசைத்தான். அவளுடைய
நம்பிக்கையை முழுதாய்ப் பெற முக்தானந்தாவின் பெயரைப் பயன்படுத்திக் கொள்வதும் நல்லது
என்று அவனுக்குத் தோன்றியதால் அவன் சொன்னான். “சுவாமி
முக்தானந்தா உங்களைப் பற்றி மிக உயர்வாகச் சொன்னார்.”
அவன் முக்தானந்தாவின் பெயரைச் சொன்னது
அவளை மிகவும் பாதித்தது. பழைய நினைவுகளில் ஆழ்ந்தபடி அவள் ”மிக நல்ல
மனிதர் அவர்” என்று சொன்ன போது, அவள் குரல்
கரகரத்தது. ஒருகாலத்தில் மணிக்கணக்கில் அவருடன் பேசிக் கொண்டிருந்தவள்
அவள். ஆனால் அவருடன் பேசி நீண்ட காலம் ஆகிறது… அதிகம்
பேசாத அவர் அவனிடம் அவளைப் பற்றிச் சொல்லும் அளவு குறுகிய காலத்தில் அவனுடன் நெருக்கமாகி
விட்டது அவளுக்கு ஆச்சரியமாகவும் இருந்தது. அவள் அவனிடம்
கேட்க நினைத்தாள். ’எப்படியிருக்கிறார் அவர்?’ ஆனால் யோகாலயத்திலேயே
இருக்கும் அவள், சமீபத்தில் அங்கு வந்து சேர்ந்திருந்த அவனிடம் அந்தக் கேள்வியைக்
கேட்பது அபத்தம் என்று தோன்ற, அவள் மௌனமாக இருந்தாள்.
கண்காணிக்கும் ஆள் சுமார் நூறடி தூரத்தில்
அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தான். எத்தனை நிமிடங்கள், எத்தனை
வினாடிகள் அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள் என்பதைக் கூட அவன் பாண்டியனிடம் தெரிவிப்பான்
என்பது கல்பனாவுக்குத் தெரியும். அதை ஷ்ரவனும் அறிவான் என்பதையும் அவள் யூகித்தாள்.
ஷ்ரவன் செடிகளைக் காட்டிக் கொண்டே அவளிடம்
தாழ்ந்த குரலில் கேட்டான். “நிஜ யோகியைப் பார்த்திருக்கிறீர்களா என்று நான் கேட்டதற்கு
நீங்கள் பதில் சொல்லவில்லை சுவாமினி.”
செடிகளைப் பற்றி ஷ்ரவன் எதோ கேள்வி
கேட்டதாகத் தான் கண்காணிப்பவனுக்குத் தோன்றும். கல்பனானந்தா
சொன்னாள். “பார்த்திருக்கிறேன்.”
(தொடரும்)
என்.கணேசன்
(வரும் தீபாவளியை ஒட்டி போனஸாக அடுத்த அத்தியாயம் 19.10.2025 மாலையில் வெளிவரும். வழக்கம் போல் திங்கள் அன்று அதற்கு அடுத்த அத்தியாயமும் வெளியாகும்)
No comments:
Post a Comment