பாண்டியன் உறங்கத் தயாரான போது டாக்டர் சுகுமாரனின் அழைப்பு
அவர் அலைபேசியில் வந்தது. ’தூக்கத்திற்கும் இந்த டாக்டருக்கும் நெருங்கிய சம்பந்தம்
இருக்கின்றது’ என்று புன்னகையுடன் பாண்டியன் நினைத்தார். பெரும்பாலும்
அவரை உறங்க விடாதவராகத் தான் டாக்டர் இருக்கின்றார்...
“ஹலோ டாக்டர். சொல்லுங்க. என்ன விசேஷம்?”
“விசேஷ காலமெல்லாம்
முடிஞ்சு போயிடுச்சு. பிரச்சினைக் காலம் தான் இப்ப நடக்குது. அதனால என்ன
பிரச்சினைன்னு தான் நீங்க கேட்கணும்.”
“நடக்கறதை
எல்லாம் பிரச்சினைன்னு நினைக்கறது தான் உண்மையான பிரச்சினை. எல்லாத்தையும்
சரி செய்ய வேண்டிய சூழ்நிலைன்னு நினைச்சுப் பாருங்க. பிரச்சினைங்கறதே
உங்க வாழ்க்கைல இருக்காது.”
“தத்துவம்
கேட்டு ரசிக்கற நிலைமைல நான் இல்லை. ஏதாவது முன்னேற்றம்
இருக்கா? எதிரியைக் கண்டுபிடிச்சுட்டீங்களா?”
“கண்டுபிடிக்க
ஆரம்பிச்சுட்டோம்.”
“யாரந்த
நாய்?”
“நாளைக்கு
நேர்ல வாங்க. சொல்றேன். இப்ப நான் தூங்கணும்” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்து விட்டு பாண்டியன் படுக்கையில் சாய்ந்தார்.
ஆடிட்டர் திவாகரன் அலுவலகம் உள்ள தெரு நள்ளிரவு நேரத்தில்
வெறிச்சோடி இருந்தது. ஆள் நடமாட்டம் அங்கு இருக்கவில்லை. எப்போதாவது
வரும் வாகனங்கள் கூட அந்த நேரத்தில் அதிகமில்லை. அதனால்
அங்கே மயான அமைதி நிலவியது. அந்த அமைதியைக் குலைக்காமல் மின்சார பைக் ஒன்று மெல்ல அத்தெருவில்
நுழைந்தது. அந்த பைக்கில் வரும் நபருக்கு வேலை ஆடிட்டர் திவாகரன் அலுவலகத்தில்
தான் என்றாலும் அவன் அதற்கு நான்கு கட்டிடங்கள் முன்பாகவே உள்ள ஒரு வீட்டின் முன் தன்
பைக்கை நிறுத்தினான். அந்த வீட்டின் முன் பகுதியில் கண்காணிக்கும் காமிராக்கள்
இல்லை என்பது தான் அதற்குக் காரணம்.
அவன் ஒரு தொப்பியும், முகக்கவசமும்
அணிந்திருந்ததால், காமிராக்கள் இருந்திருந்தாலும் அவனுடைய அடையாளம் யாருக்கும்
தெரியப்போவதில்லை என்றாலும் தன் பைக்கோடு சேர்த்து, எந்தக்
காமிரா பதிவிலும் சிக்க விரும்பவில்லை. பைக்கை அந்த வீட்டின்
முன் நிறுத்தி விட்டு தலையைக் குனிந்து நடந்த அவன் ஆடிட்டர் திவாகரன் அலுவலகம் வந்தவுடன்
தலையை நிமிர்த்தாமலேயே இரண்டு பக்கமும் பார்த்தான். யாரும்
இல்லை. தன் கையில் இருந்த கள்ளச்சாவியால் பூட்டைத் திறந்து கொண்டு
அவன் உள்ளே நுழைந்து, கதவை முன்பிருந்தது போலவே மூடினான்.
உள்ளே பணம் வைக்கும் ஒரு அறையைத் தவிர
மற்ற இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் இல்லை. காரணம்
அந்த இடங்களில் கம்ப்யூட்டர்களைத் தவிர திருட்டுப் போக விலையுயர்ந்த பொருள்கள் எதுவும்
இல்லை. ஹாலில்
அவன் விளக்கைப் போடவில்லை. அப்படிப் போட்டால் கதவிடுக்கில் வெளியே வெளிச்சம் தெரியும். தன் கைபேசியில்
உள்ள டார்ச் வெளிச்சத்தின் உதவியால் திவாகரனின் அறைக்கு வந்த அவன் இன்னொரு கள்ளச் சாவியால்
அவர் அறைக்கதவைத் திறந்து விளக்கைப் போட்டு விட்டு சாவகாசமாக அவர் நாற்காலியில் அமர்ந்தான். பின் அந்த
அறையில் ஒவ்வொன்றும் எப்படி வைக்கப்பட்டு இருக்கிறது என்பதை முதலில் ஆராய்ந்து மனதில்
ஒழுங்காக அதைக் குறித்துக் கொண்டான். அவன் கிளம்பிப்
போகும் போது எல்லாம் இப்படியே இருக்க வேண்டும். இங்கு அவன்
வந்து போயிருக்கும் சுவடே தெரியக்கூடாது...
பிறகு அவன் அவருடைய கம்ப்யூட்டரை ஆன்
செய்தான். அவருடைய ’பாஸ்வர்டை’க் கண்டுபிடிக்க
அவனுக்கு நிறைய நேரம் தேவைப்படவில்லை. அவன் அதில் கைதேர்ந்த
நிபுணன். மேலும் அவரைப் போன்ற வயதானவர்களின் பாஸ்வர்டைக் கண்டுபிடிப்பது
மிகவும் எளிது. மிகவும் கஷ்டமான பாஸ்வர்டாக இருந்தாலும் அவனுக்குத் தேவையான
அதிகபட்ச நேரம் ஒரு மணி நேரம் தான்.
அவருடைய கம்ப்யூட்டரைத் திறந்த அவன்
அதில் உள்ள கோப்புகள் அனைத்தையும் அவனுடைய பென் ட்ரைவில் நகலெடுத்துக் கொண்டான். பின்
அவர் மேஜை மீது வைத்திருந்த டயரியை ஆராய்ந்து அதில், முக்கியமாக இருக்கலாம் என்று அவனுக்குத் தோன்றிய
சில பக்கங்களை கைபேசியில் புகைப்படம் எடுத்துக் கொண்டான். வேறெதாவது
ரகசியமாய் வைத்திருக்கிறாரா என்று மேஜை மற்றும் பீரோவுக்குள் இருப்பவற்றை ஆராய்ந்தான்.
அங்கிருப்பவற்றில் எதுவும் முக்கியமாய்த் தோன்றவில்லை. பின் அங்கிருந்து கிளம்பும் முன் எல்லாமே முன்பிருந்தது போலவே இருக்கிறதல்லவா
என்று சரிபார்த்துக் கொண்டு கிளம்பினான். முன் கதவைத் திறந்து
வெளியே வரும் போது, யாராவது பார்க்கிறார்களா என்று எச்சரிக்கையுடன்
கவனித்தான். யாருமிருக்கவில்லை. வெளிக்கதவைப்
பூட்டிக் கொண்டு அமைதியாக அவன் தலைகுனிந்தபடியே பைக்கை நோக்கிச் சென்றான்.
எதாவது சந்தேகம் வந்தால் ஒழிய, அந்த அலுவலகத்தில் யாரும்
அந்த இரவு காமிராப் பதிவுகளை மறுநாள் பார்க்கப் போவதில்லை. சந்தேகம்
வரும்படியாக அவன் உள்ளே எந்தத் தடயத்தையும் விட்டு விட்டு வரவில்லை.
மறுநாள் காலையில் ஷ்ரவன் தோட்ட வேலை
செய்து கொண்டிருக்கையில் கல்பனானந்தா அவனை நெருங்கவில்லை. ஆனால் கண்ணன் அவனிடம் வந்து
சொன்னார். “மேனேஜர் உங்களை அழைக்கிறார் ஷ்ரவனானந்தா”
வேலையைப் பாதியிலேயே விட்டுப் போவதால் கல்பனானந்தாவிடம் சொல்லிக்
கொண்டு போகலாம் என்று எண்ணி ஷ்ரவன் அவளைப் பார்வையால் தேடிய போது கண்ணன் சொன்னார். “நான் அவரிடம் சொல்லிக்
கொள்கிறேன். நீங்கள் போங்கள்.”
ஷ்ரவன் போன போது பாண்டியன் மட்டும் தான் இருந்தார். பிரம்மானந்தா அங்கிருக்கவில்லை.
பாண்டியன் நீண்ட காலம் பழகியவர் போல நட்புடன் புன்னகைத்தபடி வரவேற்றார்.
“உங்களை மீண்டும் தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும் ஷ்ரவனானந்தா.
உங்கள் உதவி எனக்குத் தேவைப்படுகிறது. அதனால் தான்
அழைத்தேன்.”
“தொந்தரவு என்ற பெரிய வார்த்தைகளை எல்லாம் அடியேனிடம் சொல்லாதீர்கள்ஜி.”
என்று ஷ்ரவன் சொன்னான்.
பாண்டியன் அதற்கு மேல் உபசார வார்த்தைகள் எதுவும் சொல்லாமல்
அவருடைய அலைபேசியில் இருந்த சில புகைப்படங்களை ஷ்ரவனிடம் காட்டினார். “நீங்கள் உங்கள் மனக்காட்சியில்
பார்த்தது இந்த ஆளைத் தானா?”
அவற்றைப் பார்த்த ஷ்ரவன் முகத்தில் பெரும் திகைப்பைக் காட்டிச்
சொன்னான். “இவனே
தான். இப்படி உண்மையிலேயே ஒரு ஆள் இருக்கிறானா? நான் இதைப் பார்க்கும் வரையில், இப்படி ஒரு இளைஞன் இருப்பான்
என்று நம்பவேயில்லைஜி”
பாண்டியன் புன்னகைத்தார். அந்த நேரத்தில் அவருடைய உதவியாளன் வந்து சொன்னான்.
“டாக்டர் சுகுமாரன் வந்திருக்கிறார். அவரை அங்கேயே
உட்கார வைக்கட்டுமா, இல்லை இங்கே அனுப்பி வைக்கட்டுமா?”
பாண்டியன் ஷ்ரவனைக் கூர்ந்து பார்த்தபடி யோசித்து விட்டு ”அவரை உள்ளே அனுப்பு”
என்றார். உதவியாளன் சென்ற பின் அவர் ஷ்ரவனிடம்
சொன்னார். “அவர் எங்களுடைய நெருங்கிய நண்பர். பெரிய டாக்டர்.”
ஷ்ரவன் தலையசைத்தான்.
டாக்டர் சுகுமாரன் உள்ளே நுழைந்தார். அங்கு வேறொரு
நபரும் இருப்பதைப் பார்த்த அவர் ஏமாற்றமடைந்தார். அவருக்கு பாண்டியனிடம்
பேச நிறைய இருந்தது….
“டாக்டர் இவர் எங்களுடைய புதிய துறவி ஷ்ரவனானந்தா.”
ஷ்ரவன் சுகுமாரனைப் பார்த்து கைகூப்பினான். டாக்டர் சுகுமாரனும் குழப்பத்துடன்
கைகூப்பியபடி உட்கார்ந்தார். இதுவரை அவரிடம் பாண்டியன் அவர்களுடைய
துறவிகள் யாரையும் அறிமுகப்படுத்தியதில்லை…
டாக்டர் சுகுமாரனைப் பார்த்த ஷ்ரவனின் முகம் பயங்கரமாய் மாறியது. எதையோ பார்த்து பயந்தவன்
போல் அவன் காட்டிக் கொண்டான். டாக்டர் சுகுமாரன் ’என்ன ஆச்சு இந்த ஆளுக்கு?’ என்று எண்ணியபடி அவனைப் பார்த்தார்.
பாண்டியனும் ஷ்ரவனைத் திகைப்புடன் பார்த்தார். “என்ன ஷ்ரவனானந்தா?”
ஷ்ரவன் தனக்கு திடீரென்று பேச்சு வராதது போல் காட்டிக் கொண்டு
தடுமாறினான். பின் சொன்னான். “மண்டை ஓடு…. மண்டை
ஓடு…”
டாக்டர் சுகுமாரன் சடாரென்று எழுந்து விட்டார். “எங்கே…. எங்கே…?” அவர் முகத்தில் பீதி தெரிந்தது. அதைப் பார்த்து மனதுக்குள் சிரித்துக் கொண்ட பாண்டியன் ஷ்ரவனைக் கேட்டார்.
“என்ன சொல்கிறீர்கள் ஷ்ரவனானந்தா?”
“இவரைப் பார்க்கும் போது பக்கத்தில் ஒரு மண்டை ஓடு தெரிகிறதுஜி….” ஷ்ரவன் சொன்னான்.
“என்ன இழவிது? இவருக்கும் மண்டை ஓடு தெரியுதா?
என்ன பாண்டியன் இது?” டாக்டர் சுகுமாரன் திகிலுடன்
கேட்டார்.
(தொடரும்)
என்.கணேசன்

No comments:
Post a Comment