என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Sunday, October 19, 2025

யோகி 125

 

ல்பனானந்தாபார்த்திருக்கிறேன்என்று சொன்னது ஷ்ரவனுக்குப் பரபரப்பை ஏற்படுத்தியது. அவன் செடிகளைப் பார்த்தபடியே கேட்டான். “ஆவி சொன்னது போல அந்தப் பெண் துறவியும் பார்த்திருப்பதும் உண்மையா?”

 

ஆமாம். ஆனால் நான் இதற்கு மேல் நீங்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லப் போவதில்லை ஷ்ரவன். நீங்கள் எந்த உத்தேசத்தில் இங்கே வந்திருக்கிறீர்கள், உங்கள் பின்னணி என்ன என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் மிக ஆபத்தான வேலையில் இறங்கியிருக்கிறீர்கள் என்று உங்கள் மீதுள்ள அக்கறையால் எச்சரிக்கிறேன். கவனமாக இருங்கள்.” என்று கல்பனானந்தா அந்தச் செடிகளைப் பிடித்துக் காட்டியபடியே அவனிடம் சொன்னாள்.

 

ஷ்ரவனானந்தா என்றழைக்காமல் ஷ்ரவன் என்று அவள் அழைத்தது அவனை ஆச்சரியப்படுத்தவில்லை. அவன் கேட்டான். “உங்கள் எச்சரிக்கைக்கு நன்றி சுவாமினி. அந்த நிஜ யோகியை எங்கே எப்படி சந்தித்தீர்கள் என்பதை மட்டும் சொல்லுங்கள் போதும். அதற்கு மேல் நான் உங்களை எந்தக் கேள்வியும் கேட்டுத் தொந்தரவு செய்ய மாட்டேன்.”

 

எதற்காகக் கேட்கிறீர்கள்?”

 

அந்த நிஜ யோகியைச் சந்தித்து பயன்பெற வேண்டும் என்ற பேராவல் எனக்கு இருக்கிறது சுவாமினி. அதனால் தான் கேட்கிறேன்.”

 

அந்த நிஜ யோகியைச் சந்திப்பவர்கள் எல்லாம், அந்த சந்திப்பால் பயன் பெற்றுவிடுவதில்லை ஷ்ரவன்.”

 

நீங்கள் உங்கள் யோகிஜியின் அனுபவத்தை வைத்துச் சொல்கிறீர்களா சுவாமினி?”

 

கல்பனானந்தா அதிர்ந்தாள். பிரம்மானந்தா நிஜ யோகியைச் சந்தித்தது யோகாலயம் ஆரம்பிப்பதற்கும் முன்னால். அந்தப் பழைய நிகழ்வு கூட  இவனுக்கு எப்படித் தெரிய வந்தது என்று அவனை சந்தேகத்துடன் அவள் பார்த்தாள். இவன் நிறைய தகவல்களைத் தெரிந்து கொண்டு வந்திருக்கிறான் என்பது புரிந்தது.  ஆனால் அவள் ஒன்றும் சொல்லவில்லை.

 

அவன் சொன்னான். “எதையும் எந்த நோக்கத்தோடு அணுகுகிறோம் என்பதை வைத்து தான், எப்படிப்பட்ட பலன் கிடைக்கும் என்பது நிர்ணயமாகிறது சுவாமினி.”  

 

உண்மை என்று தலையசைத்த அவள் வறண்ட குரலில் சொன்னாள். “நாங்கள் அவரை எங்கே சந்தித்தோம் என்பது தெரிந்து கொள்வது உங்களுக்கு எந்த விதத்திலும் பயன்படப் போவதில்லை ஷ்ரவன். நாடோடி வாழ்க்கை வாழும் அவர் எங்கேயும் நீண்ட காலம் இருப்பவர் அல்ல. இனி தயவு செய்து எந்தக் கேள்வியும் என்னைக் கேட்காதீர்கள். அது எனக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் கூட ஆபத்தானது. ஏனென்றால் நாம் இருவரும் சேர்ந்து பேசுவது கூர்மையாகக் கண்காணிக்கப்படுகிறது என்பதை நீங்களே  கவனித்திருப்பீர்கள்.”

 

அவள் போய் விட்டாள். ’நாங்கள் அவரை எங்கே சந்தித்தோம்என்று பன்மையில் கல்பனானந்தா சொன்னதால், அந்த நிஜ யோகியை சைத்ராவும், அவளும் சேர்ந்தே சந்தித்திருப்பது ஷ்ரவனுக்கு உறுதியாகியது. சந்தித்த தகவல்களை  கல்பனானந்தா தெரிவித்தால் அவனுடைய வேலை சற்று எளிதாகலாம். ஆனால் அவள் இதுவரை சொன்னதையே அதிகபட்சமாக நினைக்கிறாள். அதற்கு மேல் சொல்வது ஆபத்து என்றும் நம்புகிறாள். எனவே அவளிடம் இனி எதுவும் அவன் கேட்பதும், அவளை ஆபத்திற்கு உள்ளாக்குவதும் சரியல்ல. இனி அவனுக்குத் தேவையானதை, அவனே கண்டுபிடிக்க வேண்டும்!

 

அன்று மாலையே சித்தானந்தாவை டாக்டர் அறைக்கு அனுப்பி விட்டார். காய்ச்சல் குணமாகி விட்டதால் ஓய்வெடுத்துக் கொண்டால் போதும் என்று சொல்லி விட்டார். சித்தானந்தா அறைக்கு வந்து விட்டதால் ஷ்ரவனும், முக்தானந்தாவும் மனம் விட்டுப் பேசிக் கொள்ள முடியவில்லை.

 

மாலை சத்சங்கம் செல்வதற்குப் பதிலாக யோகிஜியைச் சந்திக்கப் போவதாக ஷ்ரவன் சொன்ன போது சித்தானந்தா லாட்டரியில் கோடி ரூபாய் பரிசு கிடைத்திருக்கிறது என்று அவன் சொன்னதைப் போல அவனைப் பார்த்தார்.  முக்தானந்தா கவலையுடன் அவனைப் பார்த்தார்.

 

சத்சங்கத்திற்காக மணி அடித்த போது ஷ்ரவன் மந்திர ஜபம் செய்து பிரார்த்தித்து விட்டுக் கிளம்பினான். அவன் சென்ற போது பிரம்மானந்தாவுடன் பாண்டியனும் இருந்தார்.  ஷ்ரவன் அவரைப் பார்த்ததும் பெரும் பரவசம் அடைந்தவன் போல் காட்டிக் கொண்டு, பயபக்தியுடன் சாஷ்டாங்கமாக விழுந்து அவரை வணங்கினான். அவர் கையுயர்த்தி ஆசிர்வாதம் செய்தார்.

 

ஷ்ரவன் எழுந்து நாக்கு தழுதழுக்கச் சொன்னான். “உங்களை நேரில் சந்திக்க முடிந்ததன் மூலம், நான் ஜென்ம சாபல்யம் அடைந்து விட்டதாகவே நினைக்கிறேன் யோகிஜி. இனி இறந்தாலும் அது எனக்கு ஒரு பொருட்டே அல்ல.”

 

பிரம்மானந்தா புன்னகைத்தபடி அவருக்கு எதிரே இருந்த இருக்கையில் அமரும்படி சைகை செய்தார். ஷ்ரவன் பணிவுடன் கைகூப்பி பாண்டியனையும் வணங்கி விட்டு, கூப்பிய கைகளைப் பிரிக்காமல் அந்த இருக்கையின் விளிம்பில் உட்கார்ந்தான்.

 

ஷ்ரவனானந்தா, உனக்கு யோகாலயத்தில் தெரிந்த விசேஷக் காட்சிகளை  பாண்டியன் என்னிடம் சொன்னார்.” என்று உடனடியாக பிரம்மானந்தா விஷயத்துக்கு வந்தார். 

 

ஷ்ரவன் சோகமாக முகத்தை வைத்துக் கொண்டான். “இறைவனுடைய தரிசனமும், உங்களுடைய தரிசனமும் கிடைக்க தவமிருக்கும் எனக்கு இப்படி ஆவிகள், ஏவல் சக்திகள் எல்லாம் காட்சி தருவது வேதனையாக இருக்கிறது யோகிஜி. இதனால் நான் சபிக்கப்பட்டவனாகவே உணர்கிறேன்.” என்று வருத்தம் காட்டிச் சொன்னான்.

 

பிரம்மானந்தா சொன்னார்.  ஒரு போலீஸ்காரன் திருடர்களே என் கண்ணில் தென்படுகிறார்கள் என்று வருத்தப்படுவது போல் இருக்கிறது உன் பேச்சு. அப்படித் தெரிவது போலீஸ்காரனின் பாக்கியம். அப்படித் தெரிந்தால் தான் அவர்களைப் பிடிக்க முடியும் ஷ்ரவனானந்தா. எந்த ஒரு விசேஷ சக்தியும் யாருக்கும், கடவுளால் காரணமில்லாமல் தரப்படுவதில்லை. உனக்கும் காரணத்தோடு தான் அந்த விசேஷ சக்தி தரப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள். அதனால் நீ அதற்கு வருத்தப்படாமல் சந்தோஷப்பட வேண்டும்.”

 

ஷ்ரவன் பயபக்தியுடன் சொன்னான். “யோகாலயத்திலேயே அப்படிப் பார்க்க நேரிட்டவுடன் அது விசேஷசக்தியா, இல்லை பிரமையா என்று எனக்கு சந்தேகம் வர ஆரம்பித்து விட்டது யோகிஜி. நீங்கள் இருக்கும் இடத்தில் துஷ்ட சக்திகள் எப்படி உலாவ முடியும்?”

 

பிரம்மானந்தா கேட்டார். “நியாயமாகப் பார்த்தால் இறைவன் இருக்கும் இடத்தில் சைத்தானும், துஷ்டர்களும் இருக்க முடியாது. ஆனாலும் அப்படி இருப்பதை நாம் பார்க்கிறோமே ஷ்ரவனானந்தா. அது இறைவனின் சக்தியைக் குறைத்துக் காட்டுவதாகி விடாது. நல்லதும் கெட்டதும் கலந்தே பரவியிருக்கும்படி இறைவன் படைத்திருப்பதே அப்படி இருப்பதற்குக் காரணம். அதனால் நான் இருக்கும் இடத்தில் என் எதிரிகளும், துஷ்டர்களும் கூட இருக்கலாம். அந்த இயற்கை விதிக்கு முரணாக என் விஷயத்தில் அமைய வேண்டும் என்று நான் எப்போதுமே சுந்தரமகாலிங்கத்தை வேண்டிக் கொண்டு அவரைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியதில்லை.”

 

இது போன்ற விளக்கங்களை அவர் தந்தால், அவற்றைக் கேட்டுக் கொண்டிருப்பவர்களிடம் அவர் பிரமிப்பை எதிர்பார்ப்பது வழக்கம். அதனால் ஷ்ரவன் அதைத் தன் முகத்தில் உச்சத்தில் காட்டினான். பின் கண்களைப் பரவசத்துடன் மூடிக் கொண்டு அவன் தலைவணங்கினான்.   பிரம்மானந்தா திருப்தியடைந்தார். பாண்டியன் உணர்ச்சி எதுவும் காட்டாமல் அமர்ந்திருந்தார். அவருக்கு அவர்களைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கும் சதி வலையைப் பற்றி அவன் எதாவது புதிய தகவலைத் தெரிவித்தால் தேவலை என்றிருந்தது.

 

பொதுவாக இது போன்ற சந்தர்ப்பங்களில் பிரம்மானந்தாவுக்குத் தன் புகழை மற்றவர் வாயால் கேட்டுக் கொண்டிருக்க மிகவும் பிடிக்கும். ஆனால் பாண்டியன் மனநிலையைப் படிக்க முடிந்ததால் அவர் தனக்குப் பிடித்ததைத் தியாகம் செய்து ஷ்ரவனிடம் சொன்னார். “அதனால் நீ உனக்குத் தெரியும் காட்சிகளை தவிர்க்க நினைக்க வேண்டாம். அந்த சக்தியை கௌரவப்படுத்தி நீ வரவேற்க ஆரம்பிக்க வேண்டும். யோகாலயத்தில் உனக்குத் தெரிவதை எந்த விதமானத் தயக்கமும் இல்லாமல் நீ எங்களிடம் சொல்ல வேண்டும். பாண்டியனிடம் சொல்வது நீ என்னிடம் நேரடியாகச் சொல்வது போலத் தான்...”

 

கடவுளே சொல்லும் கட்டளை போல் அவர் சொல்வதைப் பயபக்தி காட்டி, கேட்டுக் கொண்டு ஷ்ரவன் தலையசைத்தான்.

 

இனி எதாவது சொல்ல வேண்டுமா என்பது போல் பிரம்மானந்தா பாண்டியனைப் பார்த்தார். அதற்கு மேல் அவரைப் பேச விட்டால் இடையில் அவருடைய சுயபுராணம் ஆரம்பித்து விடும் ஆபத்து இருப்பதை உணர்ந்த பாண்டியன், தானே ஷ்ரவனிடம் நேரடியாகக் கேட்டார். “என்னுடைய வாசலில் ஓநாயைப் பார்த்ததற்குப் பிறகு உங்களுக்கு வேறு ஏதாவது காட்சி தெரிந்திருக்கிறதா?”

 

ஷ்ரவன் தயக்கத்துடன் அவரைப் பார்த்தான். பாண்டியன் சொன்னார். ”எதுவாக இருந்தாலும் தயங்காமல் சொல்லுங்கள்.”


 (தொடரும்)

என்.கணேசன்

(தீபாவளி நல்வாழ்த்துக்கள்)




1 comment: