( தீபாவளி நல்வாழ்த்துக்கள்)
ஷ்ரவன் சீக்கிரமாக எதிர்காலத்தில் தன் மீது சந்தேகம் வராதபடி
ஒரு கற்பனை எதிரியை உருவாக்க நினைத்தான். அவர்கள் தேடும்
ஒரு இளைஞனை அவர்களுக்குச் சுட்டிக் காட்டினால் ஒழிய அவர்கள், யோகியைத்
தேடும் ஒரு இளைஞனைத் தேடிக் கொண்டே இருப்பார்கள். அப்படித்
தேடும் போது அவன் மீதும் சந்தேகம் வர வாய்ப்பிருக்கிறது. அவன் இன்னமும்
கண்டுபிடிக்கப்படும் விளிம்பில் தான் இருக்கிறான்...
ஷ்ரவன் தயங்கியபடி சொன்னான். “யோகாலயத்தின்
வாசலில் ஒரு இளைஞனை நான் அடிக்கடி என் மனக்காட்சியில் பார்க்கிறேன். ஓநாயை உள்ளே
அனுப்பி விட்டு அவன் வெளியிலேயே நிற்கிறான். அவன் உள்ளே
ஏன் நுழைவதில்லை என்று எனக்குத் தெரியவில்லை. உண்மையைச்
சொன்னால் அந்த இளைஞன் தெரிவதே என் பிரமையா என்று கூட எனக்குத் தெரியவில்லை...”
பிரம்மானந்தாவும், பாண்டியனும்
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். பின் பாண்டியன்
ஷ்ரவனிடம் சொன்னார். “எதையும் நீங்கள் பிரமை என்று நினைக்காதீர்கள் ஷ்ரவனானந்தா. உங்களுக்குத்
தெரியும் காட்சியை நீங்கள் சொல்லுங்கள். அந்த இளைஞனின் தோற்றத்தை
உங்களால் விவரிக்க முடியுமா?”
ஷ்ரவன் சொன்னான். “சற்றுப்
பொறுங்கள். நான் பார்த்துச் சொல்கிறேன்”
சொல்லி விட்டு அவன் கண்களை மூடிக் கொண்டான். என்ன சொல்வது
என்று யோசித்தான். யோகாலயத்தைக் கண்காணிக்க அவன் ஏற்பாடு செய்திருந்தவர்களில்
ஒருவன், ஷ்ரவன் யோகாலயத்தில் துறவியாக வருவதற்கு இரண்டு நாட்கள் முன்பு
தான், டில்லியில் இருக்கும் அவன் தந்தைக்கு உடல்நலம் சரியில்லை
என்று போய் விட்டான். அவன் தந்தை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதால்
அவன் இனி சீக்கிரத்தில் வருவதற்கில்லை. அதனால் ஷ்ரவன் சொன்னதை
வைத்து இவர்கள் அவனைப் பிடிக்கவும் வாய்ப்பில்லை...
ஷ்ரவன் அவனை விவரிக்க ஆரம்பித்தான். “ஒல்லியான
சிவந்த தேகம். சுருள் தலைமுடி. அவன் வலது
கண்ணிற்கு மேல் ஒரு சின்னத் தழும்பு தெரிகிறது. நீளமான
கழுத்து.. அவன் ஓநாயை அனுப்பி விட்டு அதையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறான்....”
ஷ்ரவன் கண்களை மூடியவுடனேயே பாண்டியன்
அவன் சொல்வதை கைபேசியில் ஒலிப்பதிவு செய்ய ஏற்பாடு செய்து விட்டிருந்தார்.
ஷ்ரவன் தொடர்ந்தான். “ம்ம்ம்....
அவன் மறைந்து விட்டான்.”
கண்களைத் திறந்த ஷ்ரவன் முகத்தில் திகைப்பு
தெரிந்தது. “அதே இளைஞனைத் தான் நான் ஒவ்வொரு முறையும் நம் யோகாலய வாசலில்
பார்க்கிறேன். உங்களுக்கு அவனை அடையாளம் தெரிகிறதா?”
பாண்டியன் சொன்னார். “எங்களுக்குத்
தெரியவில்லை. ஆனால் எங்கள் ஆட்கள் யாருக்காவது அவனைத் தெரிந்திருக்கலாம்...”
ஷ்ரவனிடம் பிரம்மானந்தா கேட்டார். “இனி உனக்குக்
காட்சி எதுவும் தெரியாதா?”
“இப்போதைக்குத்
தெரியாது. ஆனால் மறுபடியும் கண்டிப்பாக எப்போதாவது திடீரென்று தெரிய
ஆரம்பிக்கும். அப்போது உங்களுக்கு மீண்டும் சொல்கிறேன்.”
பிரம்மானந்தா ஷ்ரவனிடம் சொன்னார். “எப்போது
தெரிந்தாலும் நீ பாண்டியனிடம் உடனடியாக வந்து சொல்லலாம் ஷ்ரவனானந்தா. அதற்கு
நீ தயங்கவே வேண்டாம்.”
ஷ்ரவன் தலையசைத்தான். பின் அவரைத்
தரிசிக்க வாய்ப்பு கிடைத்ததற்கு உணர்ச்சிவசப்பட்டு மெய்யுருகி நின்று நடித்து, இருவரையும்
வணங்கி விட்டு அவன் அங்கிருந்து விடைபெற்றான்.
அவன் சென்றவுடன் பாண்டியன் கண்ணனை அழைத்து
ஷ்ரவன் பேசிய ஒலிப்பதிவைப் போட்டுக் கேட்க வைத்தார்.
‘ஒல்லியான
சிவந்த தேகம். சுருள் தலைமுடி. அவன் வலது
கண்ணிற்கு மேல் ஒரு தழும்பு, நீளமான கழுத்து..’ என்ற வர்ணனைகளைக்
கேட்ட கண்ணன் சொன்னார். “இந்த வர்ணனைக்குப் பொருந்துகிற ஆள் சில நாட்களுக்கு முன்பு
வரைக்கும் நம் யோகாலயத்தை வேவு பார்த்துக் கொண்டு இருந்தான். நாலைந்து
நாளாகத் தான் அவனைப் பார்க்க முடியவில்லை.”
பாண்டியனும் பிரம்மானந்தாவும் திகைத்தார்கள். பல ஆட்கள்
சேர்ந்து கண்காணித்து, வெளியே பல அதிநுட்ப காமிராக்கள் மூலம் பார்த்து கண்ணனுக்குத்
தெரிய வந்திருக்கும் ஒரு சத்தியத்தை, எந்த அதிக சிரமமும்
இல்லாமல், காட்சியாகவே பார்த்துச் சொன்ன ஷ்ரவன் அவர்களைப் பிரமிக்க
வைத்தான். அவனுக்குக் கிடைத்திருக்கும் அந்த அபூர்வ சக்தி அவர்களுக்கு
அற்புதமாகத் தோன்றியது.
அப்படிப்பட்ட அபூர்வ சக்தி உள்ளவன்
தன் பக்தனாக இருப்பது பிரம்மானந்தாவுக்குப் பெருமையாக இருந்தது. அதே நேரத்தில்
அவர் மனதின் ஓரத்தில் கொஞ்சம் பொறாமையும் எழுந்தது. ஏதேதோ கற்பனைக்
கதைகளைச் சொல்லி, இல்லாத அபூர்வ சக்திகள் பலதும் தன்னிடம் இருப்பதாக அடுத்தவர்களை
நம்ப வைக்க அவர் பிரம்மப் பிரயத்தனம் செய்து கொண்டிருக்கையில், ஷ்ரவனுக்கு
எந்த முயற்சியும் இல்லாமல் இப்படி ஒரு அபூர்வ சக்தி இயல்பாகவே கிடைத்திருப்பது அவரைப்
பொறாமைப்படவும் வைத்தது. நல்ல வேளையாக
அவனுடைய சக்தியின் பெருமை அவனுக்குத் தெரியாமல் அவனை விட அவரை உயர்வாகவும், யோகியாகவும்
நினைத்து அவருடைய பக்தனாக மாறியிருப்பது அவருக்கு அற்ப திருப்தியையும் தந்தது.
ஆனால் இது போன்ற மனச்சிக்கல்கள் இல்லாத
பாண்டியன், ஷ்ரவனின் இந்தச் சக்தியைப் பயன்படுத்திக் கொண்டு எதிரியைக்
கண்டுபிடித்து அழிப்பது குறித்து யோசித்துக் கொண்டிருந்தார். கண்ணன்
அவர்களுடைய காமிராக்களிலும், அலைபேசிகளிலும் எடுத்து வைத்திருந்த புகைப்படங்களில், ஷ்ரவன்
சொன்ன ஆளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு வந்து பாண்டியனிடமும், பிரம்மானந்தாவிடமும்
காட்டினார்.
தொலைவிலிருந்தும், ஓரளவு அருகிலிருந்தும்
பல கோணங்களில் எடுக்கப்பட்ட அந்தப் புகைப்படங்களைப் பார்த்து இருவரும் ஆச்சரியப்பட்டார்கள். ‘ஷ்ரவன்
எத்தனை துல்லியமாக அந்த ஆளை வர்ணித்திருக்கிறான்.’
பிரம்மானந்தா பாண்டியனிடம் சொன்னார். “யோசிச்சுப்
பார்த்தா ஷ்ரவன் சொல்றது எல்லாமே பொருந்தி வருது பாண்டியன். எதிரியை
ஷ்ரவன் கண்டுபிடிச்சு வர்ணிச்சது மட்டுமில்லாம, எதிரி யோகாலயத்துக்கு
உள்ளே வராமல் வெளியவே நிக்கறான்னு சொன்னதும் சரியாயிருக்கு. தேவானந்தகிரி
வந்து பூஜைகள் செஞ்சுட்டு போயிருக்கார். அதனால அந்த ஏவல்
சக்திய உள்ளேயிருந்து வெளியே துரத்த முடியாட்டியும், வெளியே
இருந்து உள்ளே வர அந்த இளைஞனை விடமாட்டேங்குது போல இருக்கு. கண்ணன்
சொல்றத பார்த்தா, கிட்டத்தட்ட ஷ்ரவன் இங்கே வந்து சேர்றதுக்கு முன்னால வரைக்கும், அந்த எதிரி
தானே நேர்ல இங்கே வந்து கண்காணிச்சுகிட்டு இருந்திருக்கான்னு தெரியுது. ஷ்ரவன்
இங்கே வந்து சேர்ந்த பிறகு ஏதோ ஒரு காரணத்தினால அவன் தலைமறைவாயிருக்கான்...”
பாண்டியன் சொன்னார். “இதுல புரியாததும்
நிறைய இருக்கு யோகிஜி. அந்த எதிரி நமக்கு முன்னே பின்னே தெரிஞ்சவனாகவும் இல்லை. அப்புறம்
ஏன் அவன் நமக்கு எதிராய் செயல்படறான்? அவன் பின்னணியில
யார் இருக்கா? சைத்ராவோட தாத்தாவா, இல்லை வேற
யாராவதா? இந்த செய்வினையைச் செஞ்ச ஆள் யார்? இதையெல்லாம்
நாம ஷ்ரவனை வெச்சே தெரிஞ்சுக்கலாம்னு நான் நினைக்கறேன். ஆனால் அவனுக்கும்
அவன் கிட்ட இருக்கற சக்தியை முழுசாய் பயன்படுத்திக்கற வித்தை தெரியலைன்னு தோணுது. அதற்கு
தேவானந்தகிரி கிட்டே பேசினா நமக்கு சரியான ஆலோசனை கிடைக்கும்னு தோனுது.”
சென்ற முறை தேவானந்தகிரிக்குப் போன்
செய்த போது அவருடைய உதவியாளன் அவர் எதோ பூஜையிலிருப்பதாகச் சொல்லி, காத்திருக்கச்
சொன்னது நினைவுக்கு வந்ததால் பிரம்மானந்தா போன் செய்து பேச, சிறிது
தயக்கம் காட்டினார். அவருக்கு இது போன்ற அலட்சியங்கள் தாங்க முடியாதவை. ஆனால் வேலையாக
வேண்டியிருந்தால் யார் காலையும் பிடிக்கவும் தயாராக இருந்த பாண்டியன், அவர் பேசக்
காத்திருக்காமல் தானே தேவானந்தகிரிக்குப் போன் செய்தார். முன்பே
அவருடன் சில முறை பேசி இருந்ததால் நட்புடன் பேசும் அளவுக்கு அவருடன் பாண்டியன் பழக்கமாகி
இருந்தார்.
நல்ல வேளையாக தேவானந்தகிரியே கைபேசியை
எடுத்தார். அவரிடம் எதிரி குறித்து ஷ்ரவன் சொன்ன தகவல்களை எல்லாம் விவரித்துச்
சொன்ன பாண்டியன் தொடர்ந்து சொன்னார். “நீங்க பூஜை செய்துட்டு
போனதால அந்த எதிரியால் மறைவாகவோ, ரகசியமாகவோ உள்ளே வர முடியலைன்னு நினைக்கிறோம். வர முடிஞ்சிருந்தால்
மாறுவேஷத்திலேயாவது எப்படியாவது அவன் உள்ளே வந்திருப்பான்.”
உண்மையில் எதிரி உள்ளே வர முடியாதபடி
தேவானந்தகிரி எந்த ரட்சையும் யோகாலயத்தில் செய்யவில்லை. அப்படிச்
செய்வதானால் சில தகடுகளை மந்திரித்து வெளி கேட் அருகேயும், மற்ற மூன்று
திசைகளிலும் புதைத்து வைத்திருக்க வேண்டும். அதனால்
எதிரி உள்ளே வராமலிருந்ததில் அவர் பங்கு எதுவுமில்லை. ஆனால் அவர்
செய்யாத வேலைக்கும் கிடைக்கும் பெருமையை தேவானந்தகிரியால் மறுத்து உண்மையைச் சொல்லவில்லை.
பாண்டியன் கேட்டார். “எதிரியைப்
பற்றிக் கூடுதல் விவரங்களை ஷ்ரவன் மூலமாகவே நாங்கள் தெரிஞ்சுக்க முயற்சி செய்யலாம்னு
இருக்கோம். அதற்கு நீங்க ஏதாவது ஆலோசனை சொல்ல முடியுமா?”
தேவானந்தகிரி ஆலோசனை சொன்னார்.
No comments:
Post a Comment