பர்வதராஜனின் மரணத்தை ஜீவசித்தி மூலம் கேள்விப்பட்ட போது ராக்ஷசரும் அதிர்ச்சியடைந்தார். விஷாகா மூலம் சந்திரகுப்தன் உடலில் விஷம் ஏற்றிக் கொல்வது என்ற அவர்கள் திட்டம் நிறைவேறுவதற்குப் பதிலாக பர்வதராஜன் விஷத்தால் இறந்தது எப்படி என்று குழம்பிய அவர் கேட்டார். ”இது எப்படி நடந்தது?”
“தெரியவில்லை
பிரபு. நடன நிகழ்ச்சிகள் இரவு வரை சிறப்பாக நடைபெற்றன. அந்த நிகழ்ச்சிகள்
முடிந்த பின் சந்திரகுப்தனும் மற்றவர்களும் கிளம்பிச் சென்று விட்டனர். ஹிமவாதகூட
அரசர் தன் பணியாளையும், காவலர்களையும் அனுப்பி விட்டார். பின் என்ன
நடந்தது என்று தெரியவில்லை”
“மலைகேது?”
“ஹிமவாதகூட
இளவரசர் உடல்நலக்குறைவு காரணமாக நடன நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை பிரபு”
”விஷாகா
என்ன சொல்கிறாள்?”
“விஷாகா
தலைமறைவாகி விட்டாள் பிரபு. அவள் என்னவானாள் என்று தெரியவில்லை”
விஷாகா சந்திரகுப்தனை விட்டு விட்டு
பர்வதராஜனைக் கொன்றிருக்கக்கூடுமோ என்று ராக்ஷசருக்குச்
சந்தேகம் எழுந்தது. ஆனால் அப்படி அவள் நடந்து கொள்ளக் காரணம் எதுவுமிருக்க வழியில்லையே
என்றும் ராக்ஷசருக்குத் தோன்றியது. அவள் தனநந்தனைத்
தீவிரமாக ஆதரிப்பவள். அப்படிப்பட்டவள் திட்டத்தை நிறைவேற்றாமல் போனதும், இப்படித்
திடீரென்று தலைமறைவானதும் அவரைக் குழப்பியது.
ஜீவசித்தி மெல்லச் சொன்னான். “ஒருவேளை
நம் திட்டம் எப்படியோ வெளிப்பட்டு சாணக்கியர் ஏதாவது செய்திருக்கிறாரோ என்ற சந்தேகமும்
எழுகிறது பிரபு.“
ராக்ஷசர் ஜீவசித்தியைக்
கேள்விக்குறியுடன் பார்த்தார். ஜீவசித்தி மெல்லச் சொன்னான். “நடன நிகழ்ச்சியின்
போது ஹிமவாதகூட அரசர் இரண்டு கோப்பை மதுவருந்தியிருக்கிறார். அந்த மதுவில்
விஷம் கலக்கப் பட்டிருக்கவும் வாய்ப்பிருக்கிறது.”
யோசித்துப் பார்க்கையில் ராக்ஷசருக்கு
அந்தக் கருத்து அர்த்தமில்லாததாகத் தெரியவில்லை. சாணக்கியர்
அப்படிச் செய்திருக்கலாம் என்றே தோன்றியது. விஷாகா
அதைக் கண்டு பயந்து தப்பியோடியிருக்கலாம்..... அல்லது
அவள் சிறைப்பட்டிருக்கலாம். அவர் மெல்லக் கேட்டார். “இது குறித்து
மலைகேதுவின் அபிப்பிராயம் என்ன?”
“மலைகேதுவும்
தலைமறைவாகி விட்டார் பிரபு. இன்று
அதிகாலையில் மலைகேதுவும் அவரது காவலர்களும் அவசர அவசரமாக மாளிகையை விட்டு மாறு வேடத்தில்
வெளியேறியதாகப் பணியாளர்கள் கூறுகிறார்கள்.
அவரும் தன் உயிருக்குப் பயந்து தப்பியோடியது போல் தெரிகிறது...”
ராக்ஷசர் யோசித்தார். மலைகேதுவையும், மற்ற மன்னர்களையும்
சாணக்கியருக்கு எதிராகத் திருப்பி விட இது நல்ல சந்தர்ப்பம் என்று அவருக்குத் தோன்றியது. இந்த சூழ்நிலையைத்
தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ள அவர் நினைத்தார். தற்போது
ஜீவசித்தி மற்றும் அவர் நண்பர் சந்தன் தாஸ் மட்டுமே அவருடன் தொடர்பில் உள்ளார்கள். அவர்களால்
மலைகேதுவைக் கண்டுபிடிப்பது முடியாத காரியம். அவருடைய
ஒற்றர்களால் மட்டுமே அது முடியும். தற்போது அவருடைய
பாதுகாப்பு கருதி ஒற்றர்கள் அவரை நெருங்காமல் இருக்கிறார்கள். ஜீவசித்தி
மூலம் ஒரு ஒற்றனையாவது வரவழைத்து தப்பியோடிய மலைகேதுவை எப்படியாவது தொடர்பு கொள்ள முடிவு
செய்தார்.
அதை அவர் தெரிவித்த போது ஜீவசித்தி
சொன்னான். “சாணக்கியரின் ஒற்றர்கள் நடமாட்டமும் கண்காணிப்பும் எல்லா
இடங்களிலும் அதிகமாய் இருக்கிறது பிரபு. அதனால் தங்கள் ஒற்றரை
இங்கு அழைத்து வருவது இருவருக்குமே நல்லதல்ல. அதனால்
தாங்கள் கடிதம் எதாவது எழுதித் தந்தால் அதை என்னால் தங்கள் ஒற்றனிடம் தந்து மலைகேதுவைக்
கண்டுபிடித்து தரச் சொல்ல முடியும்.”
ஜீவசித்தி சொல்வதும் சரியாகத் தோன்றவே
ராக்ஷசர் சம்மதித்தார். நாளையே
கடிதம் எழுதித்தருவதாகச் சொன்னார். அவன் சென்ற பின்
சிறிது நேரத்தில் வெளியே பறையறிவிக்கும் ஓசை கேட்டது. ராக்ஷசர் ஜன்னல்
அருகே மறைவாக நின்று கொண்டு காதுகளைக் கூர்மையாக்கினார். “....ஹிமவாதகூட
அரசர் பர்வதராஜர் நேற்று நள்ளிரவில் மர்மமான முறையில் உயிரிழந்திருக்கிறார் என்று இதன்
மூலம் அறிவிக்கப்படுகிறது. அவர் மரணத்திற்குக் காரணமானவர்கள் குறித்த தகவல்களைத் தருபவர்களுக்குத்
தகுந்த சன்மானம் தரப்படும் என்றும் தகவல் தருபவர்கள் உடனடியாக பிரதம அமைச்சரைத் தொடர்பு
கொள்ள வேண்டும் என்றும் இதன் மூலம் அறிவிக்கப் படுகிறது...”
பர்வதராஜனைக் கொன்றது தாங்கள் அல்ல
என்பதால், பாடலிபுத்திரத்தில் பர்வதராஜனைக் கொல்ல முடிந்த ஆட்கள் சாணக்கியரையும், சந்திரகுப்தனையும்
தவிர வேறு யாருமில்லை என்று ராக்ஷசர் உறுதியாக நம்பினார். கொன்றவர்களே
பர்வதராஜனின் மரணத்திற்குக் காரணமானவர்கள் குறித்த தகவல்களைத் தருபவர்களுக்குத் தகுந்த
சன்மானம் தரப்படும் என்று பறையறிவித்துச் சொல்வது ராக்ஷசருக்கு
வேடிக்கையாக இருந்தது. சாணக்கியரைப் பற்றி அது நிறையவே புரியவும் வைத்தது.
மலைகேதுவுக்கு நடந்ததெல்லாம் கனவு போல இருந்தது. சுசித்தார்த்தக் இல்லாவிட்டால் பாடலிபுத்திரத்திலிருந்து
அவன் தப்பி வந்திருக்க முடியாது என்பதில் அவனுக்கு சந்தேகமேயில்லை. குழப்பமான
மனநிலையில் இருந்த அவன் சாணக்கியரின் சதியில் சிக்கி இன்னேரம் தந்தையைப் பின் தொடர்ந்து
மேலுலகத்திற்கே போயிருந்தாலும் போயிருப்பான். நல்ல வேளையாக
அவனை சுசித்தார்த்தக்கின் சமயோசிதம் காப்பாற்றியது. இப்போது
ஒரு வனப் பகுதியில் அவர்கள் இருக்கிறார்கள். ஹிமவாதகூட
இளவரசன் கௌரவமாக இருக்கக்கூடிய சூழல் அல்ல அது என்றாலும் உயிரோடிருப்பதே அதிர்ஷ்டம்
தான். இனி என்ன செய்வதென்று அவன் ஆழமாக யோசிக்க ஆரம்பித்தான்.
உயிர் தப்பிக்க சுசித்தார்த்தக்கின்
உதவியை அவன் நாடியிருந்தாலும் இனிமேல் என்ன செய்வதென்பதற்கும் சுசித்தார்த்தக்கின்
உதவியை நாடுவது முட்டாள்தனம் என்று அவனுடைய அறிவு எச்சரித்தது. அதை அவனே
தான் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். அவன் நிலையில் அவன்
தந்தை இருந்திருந்தால் என்ன செய்திருப்பார் என்று யோசித்தான். இது வரை அவன்
தந்தை சொன்னதையும், செய்ததையும் அருகிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த அனுபவத்தை வைத்து
ஒரு முடிவுக்கு வந்து உடனே சாணக்கியருக்கு
ஒரு மடல் எழுதினான்.
“பெருமதிப்பிற்குரிய
ஆச்சாரியர் அவர்களுக்கு,
வணக்கம். தாங்கள்
என் தந்தையின் நம்பிக்கைக்குரியவராகவும், அவர் பூஜிக்கும்
ஸ்தானத்திலும் இருந்தவர். அவர் தங்கள் ஒருவரை நம்பியே மகதத்தை தனநந்தனிடமிருந்து மீட்கும்
பணியில் தங்களுடன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் என்பதும் தங்களுக்கு மிக நன்றாகத் தெரியும். ஆனால் அப்படிப்பட்டவர்
உயிரை, மகதத்தை வென்றவுடன் அதன் நிர்வாகத்தைக் கையில் எடுத்துக்
கொண்ட தாங்கள், காப்பாற்றாமல்
விட்டதை மிகுந்த துர்ப்பாக்கியமாகவே நான் கருதுகிறேன். சர்வ வல்லமையுள்ளவராய்
தாங்கள் இருக்கையில் தங்கள் ஆட்சியிலேயே என் தந்தை துர்மரணம் அடைந்தார் என்பது தாங்க
முடியாத வேதனையாக இருக்கிறது. ஆனாலும் நடந்து முடிந்ததை மாற்றும் வல்லமை மனிதர்களுக்கு
இல்லை என்பதால் நான் அதைக் கடந்து வரவே விரும்புகிறேன். அதே நேரத்தில்
அவர் மரணத்திற்குக் காரணமானவர்கள் கண்டிப்பாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே என் அவா.
என் தந்தை இறந்து விட்டாலும் அவருக்கு
வாக்குறுதி தந்த தாங்கள் இன்னும் இருக்கிறீர்கள் என்பது என்னுடைய ஆசுவாசமாக இருக்கின்றது. தாங்கள் கொடுத்த வாக்கை மீறாதவர் என்பதால்
என் தந்தைக்குக் கொடுத்த வாக்கைக் கண்டிப்பாக நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கையும்
எனக்கு இருக்கிறது. தாங்கள் அவருக்கு வாக்களித்தபடி மகத
ராஜ்ஜியத்திலும், மகத நிதியிலும் சரி பாதியைப் பிரித்துத் தர
வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன். தற்போது மகதத்தில் ஆபத்தான
சூழல் நிலவுவதால் நான் நேரடியாக அங்கு வந்து இது குறித்துப் பேச முடியாத நிலையில் இருக்கிறேன்.
அதனால் தான் வெளியேயிருந்து கொண்டு இந்த மடலைத் தங்களுக்கு அனுப்புகிறேன்.
நாம் செய்து கொண்ட ஒப்பந்தத்தைத் தாங்கள் நிறைவேற்றி என் பாதுகாப்புக்கும்
உத்திரவாதம் அளித்தால் நான் மேற்கொண்டு பேச வேண்டியதை நேரில் வந்து பேசுவதற்குச் சித்தமாக
இருக்கிறேன்.
தங்கள் விரைவான
பதிலுக்கு நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.
அன்புடன்
தங்கள் மலைகேது”
எழுதி முடித்தபின் ஒரு காவலனிடம் மடலைத் தந்து சாணக்கியரிடன்
சென்று அந்த ஓலையைத் தந்து பதில் பெற்று வரும்படி கட்டளையிட்டான். அந்தக் காவலன் குதிரையேறிச்
சென்றவுடன் சுசித்தார்த்தக்கை அழைத்துச் சொன்னான். “சுசித்தார்த்தக்.
நான் எங்களுக்குச் சேர வேண்டிய சரிபாதியைக் கேட்டு சாணக்கியருக்கு மடல்
அனுப்பியிருக்கிறேன். என்ன பதில் வருமென்று நீ நினைக்கிறாய்?”
சுசித்தார்த்தக் சொன்னான். “அவர் மனதையும் உத்தேசத்தையும் சாதாரண பணியாளான
நானெப்படி அறிவேன் இளவரசே.”
மலைகேது புன்னகைத்தபடி சொன்னான். “என்னைப் பேராபத்திலிருந்து
சாதாரண பணியாளான நீ தான் காப்பாற்றியிருக்கிறாய். அப்படி இருக்கையில்
உன்னை சாதாரண பணியாளாக நான் எப்படி நினைக்க முடியும். கொடுத்த
வாக்கை சாணக்கியர் காப்பாற்றுவாரேயானால் கிடைப்பதில் தாராளமாக உனக்குத் தந்து உன்னைக்
கௌரவிப்பேன் சுசித்தார்த்தக்.”
சுசித்தார்த்தக் கைகூப்பியபடி உணர்ச்சிவசப்பட்டு சொன்னான். “தங்கள் அன்பை என் பாக்கியமாக
நான் நினைக்கிறேன் இளவரசே…. அவர் பதில் வரும் வரை நாம் என்ன செய்வது?”
“எங்கள் படைகள் பாடலிபுத்திரம் நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. அவற்றை வழியிலேயே சந்திக்கச் சென்று இணைந்து கொள்வது நல்லதென்று நினைக்கிறேன்
சுசித்தார்த்தக். ஒருவேளை என் கோரிக்கைக்கு சாணக்கியர் மறுத்தால்
நான்கு தேசப் படைகளுடன் அவரை நான் போர்க்களத்தில் சந்திக்க உத்தேசித்திருக்கிறேன்.
அதுவல்லவா ஒரு வீரனாக நான் செய்ய வேண்டிய செயல்?”
சுசித்தார்த்தக் ஆமோதித்தான். “ஆம் இளவரசே. அதுவே வீரம்.
அதுவே புத்திசாலித்தனம்”
(தொடரும்)
என்.கணேசன்
No comments:
Post a Comment