சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, December 26, 2022

யாரோ ஒருவன்? 118



ரத், ரஞ்சனி, தீபக் மூன்று பேரும் மதியம் பன்னிரண்டு மணியளவில் கல்யாணின் வீட்டை அடைந்தார்கள். ஆனால் மூன்று பேர் பார்வையும் பக்கத்து வீட்டின் மீதே இருந்தது. சரத் படபடப்புடனும், ரஞ்சனி பரபரப்புடனும், தீபக் ஆர்வத்துடன் அந்த வீட்டைப் பார்த்தார்கள். அங்கே யாரும் தென்படவில்லை. ரஞ்சனியிடம் தீபக் தாழ்ந்த குரலில் சொன்னான். “அவர் எப்பவும் தியானம், பூஜைன்னு வீட்டுக்குள்ளேயே இருப்பார். தேவையில்லாம வெளியே வர மாட்டார்?”

ரஞ்சனி தலையசைத்தாள். அதற்கு மேல் பக்கத்து வீட்டைக் கவனிக்க முடியாதபடி தர்ஷினி ஓடி வந்தாள். “ஆண்ட்டி. உங்களுக்கு இப்ப தான் இங்கே வர வழி தெரிஞ்சுதா?”

கேட்டுக் கொண்டே அன்புடன் அணைத்துக் கொண்ட தர்ஷினியிடம் புன்னகையுடன் ரஞ்சனி சொன்னாள். “வரணும்னு நினைக்கறது. ஏதாவது ஒரு வேலை, தடங்கல் வந்துகிட்டே இருந்துச்சு. நானும் சரி நாளைக்கு போலாம், நாளானிக்குப் போலாம்னு நினைச்சு இருந்துடுவேன். இன்னைக்கு தான் வர முடிஞ்சுருக்கு

வீட்டுக்குள்ளே போகையில்இன்னைக்கு கூட பக்கத்துக்கு வீட்டுக்கு வர இருந்ததால வந்திருக்கீங்கஎன்று தர்ஷினி பொய்க்கோபத்துடன் குற்றம் சாட்டினாள்.

இல்லாட்டியும் அடுத்த வாரமாவது கண்டிப்பா வந்திருப்பேன் தர்ஷினி. உன்னை மாதிரி எனக்கு ஒரு பொண்ணு இருந்திருந்தாலாவது ஏதாவது சின்ன உதவியாவது வீட்டுல கிடைச்சிருக்கும். உன் ஃப்ரண்ட் தன்னோட வேலையைக் கூட அவன் செஞ்சுக்க மாட்டான். அவன் பின்னாடியே ஒரு ஆள் வேணும்என்று ரஞ்சனி சொல்ல தீபக் தாயை முறைத்தான்.

மேகலா அவளை வரவேற்றபடி சொன்னாள். “இவளை மாதிரி ஒரு பொண்ணு இருந்திருந்தாலும் உங்களுக்கு எந்த உதவியும் கிடைச்சிருக்காது. இங்கே இருக்கற துரும்பை அந்தப் பக்கம் வைக்க மாட்டா. அப்படியே எடுத்து வெச்சிட்டாலும் அதைச் சொல்லியே ஒரு வருஷம் வேறெந்த வேலையும் செய்யாம ஓட்டிடுவா

தர்ஷினி தாயைக் கோபித்துக் கொண்டாள். “எப்ப பாரு குற்றம் சொல்லிட்டே இரு.”

வேலாயுதம்வீட்டுக்கு வீடு வாசற்படி தான்.” என்றபடியே வந்து புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து அவர்களை வரவேற்றார். “வாங்க…”

கல்யாணும் வந்துவா ரஞ்சனி. வாடாஎன்று வரவேற்று அவர்கள் புன்னகை செய்து கடந்தவுடன் பின் தங்கினான். நண்பன் நின்றதைப் பார்த்த சரத்தும் அங்கேயே நின்று விட்டான். மேகலாவும் ரஞ்சனியும் பேசிக் கொண்டே ஒரு சோபாவில் அமர தர்ஷினியும் தீபக்கும் பேசிக் கொண்டே இன்னொரு சோபாவில் அமரப் போனார்கள். வேலாயுதம் தீபக் அமரப் போகும் முன் அவன் கையைப் பிடித்து சற்றுத் தள்ளி அழைத்துக் கொண்டு போய் கேட்டார். “இன்னைக்குக் காலைல நீ வாக்கிங் போகலயா?”

தீபக் தர்ஷினியை அர்த்தமுள்ள ஒரு பார்வை பார்த்து விட்டு அவரிடம் சொன்னான். “இன்னைக்கு ஒரே தலைவலி தாத்தா

பரவாயில்ல. உடம்புன்னா அதெல்லாம் இருக்கும் தான். நீ ஒன்னு செய்யறியா? நீ உன் அம்மா கூட அங்கே போகறப்ப இந்த வீட்டுல நடந்த திருட்டு பத்தி மெல்லக் கேட்டுப்பாரேன். அவன் என்ன சொல்றான்னு பார்ப்போம்.”

தீபக் சொன்னான். “தாத்தா. அம்மாக்கு மட்டும் தான் அப்பாயின்மெண்ட். நான் கூட எல்லாம் போக முடியாது. எதோ எங்கம்மா புண்ணியத்துல அவங்களுக்கு ஓசில ஒரு அப்பாயின்மெண்ட் கிடைச்சிருக்கு. அதுமட்டுமில்லாம அவர் ஆள் ஒரு மாதிரி தாத்தா. வாக்கிங் போகிறப்பவே எதாவது கேட்டா பதில் சொல்லப் பிடிக்காட்டி அவர் பாட்டுக்கு வேகமாய் போய்கிட்டே இருப்பார். அதனால அதெல்லாம் கேட்டு பிரயோஜனம் இல்லை. நீங்க பேசாம ஒரு காரியம் பண்ணுங்க. போலீஸ்ல புகார் குடுங்க. அவங்க வேலைய நாம ஏன் பார்க்கணும்...”

இந்தப் பைத்தியக்காரனுக்கு எப்படி விளக்குவது என்று வேலாயுதம் சலிப்புடன் பார்த்து மெல்ல அவன் கையை விட்டு விட்டு நகர்ந்தார். தப்பித்தால் போதும் என்று போய் தர்ஷினியருகே உட்கார்ந்து கொண்டான். தர்ஷினி ஆச்சரியத்துடன் கேட்டாள். “நீ எப்படி எங்க தாத்தா கிட்ட இருந்து இவ்வளவு சீக்கிரம் தப்பிச்சே? நான், நான் தான் வந்து உன்னைக் காப்பாத்த வேண்டியிருக்கும்னு நினைச்சேன்.”

“போலீஸ்ல புகார் பண்ணுங்கன்னு சொன்னேன். உடனடியா நகர்ந்துட்டார். ஏய் எனக்கு ஒரு சந்தேகம். அந்த ரத்தினக்கல் சின்ன வயசுல இவர் எங்கேயிருந்தாவது ஆட்டையப் போட்டதாய் இருக்குமோ? அதனால தான் தயங்கறாரோ?”

தர்ஷினி தன் தாத்தாவைக் கூர்ந்து பார்த்தபடி சொன்னாள். “இருந்தாலும் இருக்கும்.... இவர் செய்யக்கூடிய ஆள் தான்”

அதே நேரத்தில் சரத்திடம் கல்யாண் கேட்டுக் கொண்டிருந்தான். “ரஞ்சனி என்ன கேட்கப் போறேன்னு எதாவது சொன்னாளா?”

“இல்லை. தீபக் தான் நாகராஜ் கிட்ட அப்படிப் பேசணும், இப்படிப் பேசணும்னெல்லாம் சொல்லிகிட்டிருந்தான். “எல்லாம் எனக்குத் தெரியும். கொஞ்சம் சும்மா இருடா”ன்னு சொல்லி அவன் வாயை அடைச்சுட்டா. ஆனா மாதவனைப் பத்தி தான் கேட்கப் போறான்னு உள்மனசு சொல்லுது” சொல்லச் சொல்ல அவனுக்கு குரல் வலுவிழந்தது.

கல்யாணின் அடிமனதில் சலிப்பு கலந்த ஆத்திரம் எழுந்தாலும் அது முகத்தையோ நாக்கையோ எட்டவில்லை. அவன் பொறுமையாகச் சொன்னான். “அவள் என்ன கேட்டாலும் சரி, நாகராஜ் என்ன சொன்னாலும் சரி நீ கவலைப்படாதே. எப்படியும் அவன் கிட்ட பேசிட்டு திரும்பி இங்கே தான் ரஞ்சனி திரும்பி வரப்போறா? அவன் எதாவது வில்லங்கமா சொன்னான்னா அதை உடனடியாய் நம்ம கிட்ட கேட்காம அவ இருக்க மாட்டா சரத். அப்படி எதாவது கேட்டா நீ வாயையே திறக்காதே. அமைதியாயிரு. நான் அவ கிட்ட பேசிக்கறேன். திருப்தி தானே?”

சரத்துக்கு ஓரளவு திருப்தியாக இருந்தது. அவன் மெல்லத் தலையசைத்தான்.


சுதர்ஷன் கடிகாரத்தைப் பார்த்தான். மணி இரண்டரை. இனி அரை மணி நேரத்தில் தீபக்கின் தாய் வந்து விடுவாள். இது வரை யார் வந்த போதும் அங்கு அவன் இல்லாமல் இருந்ததில்லை. ஆனால் இன்று அவள் இங்கு வரும் நேரத்தில் அங்கிருக்க வேண்டாம் என்று சுதர்ஷன் ஏற்கெனவே முடிவு செய்திருந்தான். நாகராஜிடம் போய்ச் சொன்னான். “சில பேக்கிங் சாமான்கள் வாங்கணும். டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ் வரைக்கும் போயிட்டு வந்துடறேன்”

நாகராஜ் தலையை அசைத்தான். சுதர்ஷன் வெளியேறினான். எத்தனையோ சிந்தனைகள் மனதில் அலைபாய நாகராஜ் கண்களை மூடிக்கொண்டு சிறிது நேரம் அமர்ந்திருந்தான். கடிகாரம் 2.55 என்று நேரம் காட்டியது. இனி ஐந்து நிமிடங்கள் கழித்து ரஞ்சனி வந்து விடுவாள். எழுந்து போய் அலமாரியில் இருந்த கருப்புக் கண்ணாடியை எடுத்து போட்டுக் கொண்டு மீண்டும் அமர்ந்தான். இதை சத்தியமங்கலம் போன அன்று அணிந்த பிறகு கழட்டியது. பிறகு இன்று வரை அணியவில்லை. இப்போது அவனுக்கு அது மறுபடியும் தேவைப்படுகிறது.


ஞ்சனி மேகலாவிடம் ஒரு பெரிய தாம்பாளத்தட்டு கேட்டாள். மேகலா எடுத்துக் கொடுத்தவுடன் அதில் ஏற்கெனவே பையில் எடுத்து வந்திருந்த பூ, பழங்கள், வெற்றிலை, பாக்கு, எலுமிச்சையோடு ஐந்தாயிரம் ரூபாயும் எடுத்து வைத்து விட்டு ரஞ்சனி மேகலாவிடம் சொன்னாள். “அவர் எல்லார் கிட்டயும் அஞ்சு லட்சம் ரூபாய் வாங்கறாராம். அத்தனை நம்மளால தர முடியாட்டியும் மரியாதைக்கு ஒரு சின்னத் தொகையாவது தந்து கேட்கறது தானே மரியாதை”

மேகலா ஆமென்று தலையசைத்தாள். “உங்களுக்கு அவர் கிட்ட என்ன கேட்கணும்?”  

ரஞ்சனி சொன்னாள். “எப்பவோ இறந்து போன ஆத்மா ஒன்னு சில நாளா அடிக்கடி என் நினைவுக்கு வருது. என்ன காரணம்னு தெரியலை. அதைக் கேட்கணும்னு தான்...”

சொல்லச் சொல்ல அவள் கண்கள் லேசாகக் கலங்கியதைக் கவனித்த மேகலாவுக்கு மனம் நெகிழ்ந்தது. ’அப்பாவோ, அம்மாவோ இருக்கும். பாவம். காலம் எத்தனை போனாலும் அந்த அன்பு குறைஞ்சுடுமா என்ன?’

தாம்பாளம் எடுத்துக் கொண்டு ரஞ்சனி கிளம்பிய போது வாசல் வரை தாயைக் கொண்டு போய் விட தீபக்கும் போனான். சரத், கல்யாண், வேலாயுதம் மூன்று பேரும் படபடப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்...

(தொடரும்)
என்.கணேசன்




   

6 comments:

  1. could have been more content sir....we had to wait for another 2 to 3 weeks for the meeting!

    ReplyDelete
  2. உங்களுடைய சிறுகதைத் தொகுப்பு படிக்கும் வாய்ப்பு நேற்று தான் கிட்டியது.என்ன சொல்ல! ஒவ்வொன்றும் ஒளிமுத்து.நான் அரசுப் பள்ளி ஆசிரியை கணேசன் சார்.மாணவர்களுக்குப்பாடமாக வைக்கும் அளவு உயர்ந்த தரம்!

    ReplyDelete
  3. விறுவிறுப்பு கூடுகிறது..

    Cant wait for one week

    ReplyDelete
  4. இந்த வாரமும் சந்திப்பு நிகழவில்லையா...? ஏமாற்றமாக உள்ளது...

    ReplyDelete
  5. Disappointed as the meeting didn't happen. Eagerly waiting for next Monday.

    ReplyDelete
  6. Sir please give us new year bonus episode.. Waiting is painful

    ReplyDelete