சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, December 8, 2022

சாணக்கியன் 34

 


ன்று காலையிலிருந்தே காந்தார வீரர்களின் நடமாட்டம் தட்சசீல தெருக்களில் அதிகமாக இருந்தது. இடையிடையே குதிரைகள் யானைகள் மீதமர்ந்தும் கூட வீரர்கள் போய்க் கொண்டிருந்தார்கள். கல்விக்கூட வாயிலில் நின்று கொண்டு அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த சாரங்கராவ் சந்திரகுப்தனிடம் கேட்டான். “காந்தாரம் போருக்குத் தயாராகிறதா என்ன? வீரர்கள் இப்படி வரிசையாகப் போய்க் கொண்டேயிருக்கிறார்களே...”

 

அவன் கேட்டதில் தவறில்லை. வீரர்கள் எல்லோரும் சீருடையில் இருந்தார்கள். ஆயுதங்களை ஏந்திய வண்ணம் தான் சென்று கொண்டிருந்தார்கள். சந்திரகுப்தன் யோசனையுடன் சொன்னான். “போருக்குப் போவது என்றால் போகும் வீரர்கள் போகும் விதத்திலேயே அது தெரிந்து விடும்.  வழக்கமான பயிற்சிகளுக்கோ, பயணத்திற்கோ போவது போல் தான் தெரிகிறது.”

 

விஜயன் சொன்னான். “போய் விசாரித்தால் தெரிந்துவிடப் போகிறது”. சொன்னதோடு நிற்காமல் வேகமாக அவனும் தெருவில் நடக்க ஆரம்பித்தான்.  இயல்பாகவே நட்புடனும், நகைச்சுவையாகவும் பேசக்கூடிய அவன் சென்று சில வீரர்களிடம் பேச்சுக் கொடுத்து விஷயங்களைத் தெரிந்து கொண்டு விட்டு இரண்டு நாழிகை கழித்து வந்து சேர்ந்தான்.

 

எல்லைப்பகுதியில் யாரையோ வரவேற்க ஆம்பிகுமாரன் படையைத் திரட்டிக் கொண்டு போகிறானாம். அது யாரென்று வீரர்களுக்கும் தெரியவில்லை.”

 

விஜயன் சொன்னவுடன் சந்திரகுப்தன் யோசிக்காமல் சொன்னான். “அலெக்ஸாண்டரைத் தான் ஆம்பி குமாரன் வரவேற்கப் போகிறான் என்று நான் நினைக்கிறேன்.”

 

சாரங்கராவ் சந்திரகுப்தனை ஆச்சரியத்துடன் பார்த்தபடி கேட்டான். “எதை வைத்து அவ்வளவு நிச்சயமாக நீ சொல்கிறாய் நண்பா?”

 

ஆம்பி குமாரன் படையோடு சென்று வரவேற்கும்படியான நண்பர்கள் நமக்குத் தெரிந்து யாரும் இல்லை. அக்கம் பக்கத்திலும் அவ்வளவு பெரிய நண்பர்களை அவன் சம்பாதித்து வைத்துக் கொண்டதில்லை. அதனால் புதிய நண்பனான அலெக்ஸாண்டரை வரவேற்கத் தான் போகிறான் என்று நினைக்கிறேன். அசத்தும்படியான மரியாதை செலுத்தி அவனைத் திருப்திப்படுத்தவும், அவனிடம் நல்ல பெயர் வாங்கவும் தான் இதைச் செய்கிறான் என்று தோன்றுகிறது

 

சரியான முடிவுகளைக் குறைவான நேரத்தில் சந்திரகுப்தன் எப்படி எட்டுகிறான் என்று சாரங்கராவ் வியந்தான். ஆச்சாரியர் விஷ்ணுகுப்தரைக் கவனித்தே வாழ்ந்து வருவதன் விளைவாக இருக்கலாம் என்று அவனுக்குத் தோன்றியது.

 

ஆச்சாரியர் விஷ்ணுகுப்தர் இன்னும் வந்து சேரவில்லை.  அவர் இல்லாதது சந்திரகுப்தனுக்குப் பெரும் குறையாகவே இருந்தது. இத்தனை காலம் அவன் அவரைப் பிரிந்து இருந்ததே இல்லை. தாயையும், தாய்மாமனையும் பிரிந்து இருந்த ஆரம்பக் காலக்கட்டத்தில் கூட இந்த அளவு ஆழத்தில் பிரிவை சந்திரகுப்தன் உணர்ந்ததில்லை. ஆனால் இப்போதோ  ஆச்சாரியரைப் பிரிந்து இருப்பது சந்திரகுப்தனுக்கு  மிக முக்கியமான எதையோ இழந்திருப்பது போலத் தோன்றுகிறது. குழந்தையாக இருந்த போதே தந்தையை இழந்திருந்த அவன் மனதில் விஷ்ணுகுப்தர் ஆச்சாரியராக மட்டுமல்ல ஒரு தந்தையாகவும் கூட இருந்தார். அவன் அந்தப் பிரிவில் சோகமாக அமர்ந்திருக்கும் சமயங்களில் அவன் நண்பர்கள் அவனைக் கிண்டல் செய்வார்கள். அதிகமாக அவனைக் கிண்டல் செய்வது விஜயன் தான். ஆச்சாரியர் இல்லாமல் இருப்பது அவனுக்குத் தான் பெரும் சுதந்திரமாக இருந்தது. விஷ்ணுகுப்தர் அளவுக்கு மற்ற ஆசிரியர்கள் கேள்விகள் கேட்டு அவனைத் துன்புறுத்துவதில்லை.

 

ஆம்பிகுமாரன் அலெக்ஸாண்டரைப் படையுடன் வரவேற்கப் போவது தெரிந்தால் ஆச்சாரியர் என்ன நினைப்பார் என்று சந்திரகுப்தன் யோசித்துப் பார்த்தான்.  ஒரு போக்கின் ஆரம்பத்தைத் துல்லியமாகக் கணக்கெடுத்த பின், விளைவுகளில் அவர் அதிகம் பாதிக்கப்படுவதில்லை. ஆம்பிகுமாரன் நட்புக்கரம் நீட்டி தூதனுப்பிய போதே அவன் போக்கு அவருக்குப் புரிந்து விட்டிருக்கும் என்பதால் பெரிதாக கவலைப்பட்டிருக்க மாட்டார்…… அவர் கவலை எல்லாம் தனநந்தன் அவர் வேண்டுகோளுக்கு எப்படிப் பதில் கொடுக்கிறான் என்பதில் தான் இருக்கும். தனநந்தன் ஆச்சாரியருக்கு நல்ல பதில் தருவானா, படையுடன் கிளம்பியிருப்பானா?

 

அவர்கள் பயிற்சிக்குச் செல்லும் போது ஆம்பிகுமாரன் படையுடன் அலெக்ஸாண்டரை வரவேற்கப் போவதை சின்ஹரனிடமும் தெரிவித்தார்கள். இந்தச் சமயத்தில் காந்தாரத்தின் சேனாதிபதியாக இல்லாமல் இருப்பது பாக்கியமாகவே அவனுக்குத் தோன்றியது. இல்லாவிட்டால் ஆம்பி குமாரனின் முட்டாள்தனங்களுக்குத் தலையாட்டிச் சம்மதிக்க வேண்டி இருந்திருக்கும். நடப்பதெல்லாம் நன்மைக்கே என்ற திருப்திகரமான மனநிலை அவனிடம் இப்போது குடிகொள்ள ஆரம்பித்திருக்கிறது. முக்கியமாக சந்திரகுப்தனைப் போன்ற ஒரு வீரனுக்குப் பயிற்சிகள் அளிப்பது அவனுக்குப் பெருமையாக இருந்தது. சொல்லிக் கொடுப்பதை வேகமாகப் புரிந்து கொண்டு அதில் தேர்ச்சியடையும் வரை சந்திரகுப்தன் இளைப்பாறுவதில்லை. ஆச்சாரியரின் பிரியமான இந்த மாணவன் ஒரு காலத்தில் உச்சத்தைத் தொடுவான் என்பதில் சின்ஹரனுக்குச் சந்தேகம் இல்லை. பயிற்றுவிப்பதன் மூலம் அவனும் சந்திரகுப்தனுக்கு ஆசிரியனாக இருப்பது அவனுக்கு மனநிறைவைத் தந்தது. ஒரு காலத்தில் கடமை தவறியிருந்ததால் ஏற்பட்ட மனசாட்சி உறுத்தலுக்கு மருந்து தடவுவது போல் அவன் இந்தப் பயிற்சிகள் தரும் போது உணர்ந்தான். சந்திரகுப்தனைப் போலவே வேறு சில துடிப்பான மாணவர்களும் நல்ல முன்னேற்றத்தைக் காட்டினார்கள். அவர்களுடன் இருக்கையில் அவன் காலத்தை மறந்து இருப்பான்.

 

இரவு நேரங்களில் மட்டும் தனிமை அவனைக் கொல்லும். சில சமயங்களில் மைனிகாவின் நினைவு வரும் போது மனதின் ரணங்கள் புதுப்பிக்கப்படும். ஆழமாக நேசித்தவர்களால் ஏமாற்றப்படுவது யாருக்கும் சகிக்க முடிந்ததல்லவே! ”எப்படி உன்னால் முடிந்தது? எப்படி உனக்கு மனம் வந்தது?” என்று அவனால் திரும்பத் திரும்ப மானசீகமாக அவளைக் கேட்காமல் இருக்க முடியவில்லை. இத்தனை தூரம் ஏமாற்றிய பிறகும் அவளுக்குச் சொல்ல ஏதாவது சரியான காரணமிருக்கும் என்று அவன் உள்மனம் நம்புவது பைத்தியக்காரத்தனம் என்றாலும் அதை அவனால் தவிர்க்க முடியவில்லை.

 

ட்சசீல எல்லையிலிருந்து சிறிது தூரத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய முகாம் ஒன்றை ஆம்பி குமாரன் அமைத்திருந்தான். மாவீரன் அலெக்ஸாண்டரை அங்கேயே வரவேற்று உபசரிக்க சகல ஏற்பாடுகளையும் அவன் செய்திருந்தான். முதல் சந்திப்பிலேயே அவன் உபசரிப்பில் மாவீரன் அலெக்ஸாண்டர் திக்குமுக்காடிப் போக வேண்டும்! அந்த மாவீரன் எத்தனையோ அரசர்களைச் சந்தித்திருக்கக்கூடும். எத்தனையோ செல்வச் செழிப்பையும் கண்டிருக்கக்கூடும். ஆனால் அவன் தற்போது சந்திக்கவிருக்கும் காந்தார அரசனைப் போன்ற ஒருவனைச் சந்தித்திருக்கவில்லை என்பதை உணர வேண்டும். இந்த அளவு யாரும் உபசரிக்கவில்லை என்று நினைக்க வேண்டும். காந்தார அரசனைக் கண்டு அவன் பிரமிக்க வேண்டும். அதற்காகவே விலைமதிக்க முடியாத ரத்தினக் கற்களைக் கோர்த்த தலைப்பாகையும், பட்டாடைகளையும் அவன் அணிந்திருந்தான். அவன் தோற்றத்தைக் கண்டு அவனுடைய படைத்தலைவர்களும், அதிகாரிகளும் பாராட்டினார்கள்.

 

விரல் விட்டு எண்ணக்கூடிய படைத்தலைவர்கள், அதிகாரிகள் தவிர மற்றவர்கள் எல்லாம் புதியவர்களே. அவர்கள் அவன் தந்தை காலத்து ஆட்கள் அல்ல. புதியவர்களுக்குப் பாராட்டிப் பிழைக்கும் வழி தெளிவாகத் தெரிந்திருந்தது. அவன் நீக்காமல் வைத்திருந்த பழையவர்களும் அனுசரணையானவர்களே. அதனால் தான் அவன் அவர்களை நீக்காமல் இருந்தான்.  

 

இன்று சூரியாஸ்தமனத்திற்குள் அலெக்ஸாண்டர் வந்து விடுவான். ஆம்பி குமாரன் வரவேற்பு ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டான். ஒரு பக்கம் யானைகள், ஒரு பக்கம் குதிரைகள், ஒரு பக்கம் காலாட்படை வீரர்கள் என நேர்த்தியாக அணிவகுத்து நின்றிருந்தார்கள். ஒரு பக்கம் நடன மங்கைகள் நின்றிருக்க, இன்னொரு பக்கம் மங்கல வாத்தியங்களோடு வாசிப்பவர்கள் நின்றிருந்தார்கள். அலெக்ஸாண்டருக்குப் பரிசளிக்க முத்துமாலைகளும், வேறு பரிசுப் பொருள்களும் முகாமிற்குள் தனியாக வைக்கப்பட்டிருந்தன.

 

ஆம்பி குமாரன் தட்சசீலத்தின் அரச விருந்தினர் மாளிகையையும் புதுப்பித்து அலங்கரித்து வைத்திருந்தான். அலெக்ஸாண்டர் தங்க அங்கே ஒரு குறையும் இருக்காது. அவனோடு வரும் முக்கியஸ்தர்கள் தங்கவும் அதற்குத் தக்க அறைகள் இருந்தன. அவன் தந்தை இருந்த வரையில் அந்த அறைகளில் அவரிடம் நட்பு பாராட்டிய அரசர்கள் சிலரும், அறிஞர்கள் பலரும் வந்து தங்கி இருக்கிறார்கள். யாரும் இளையவர்கள் அல்ல. எல்லாரும் கிழங்கள்…. எல்லாரும் கிட்டத்தட்ட அவர் வயது ஆட்களே. ஆம்பி குமாரனுக்கு இப்போதெல்லாம் அது போன்ற கிழங்களிடம் பொறுமை இருப்பதில்லை. அவர்கள் பேச்சு செய்கைகள் எல்லாம் அவன் தந்தையையே நினைவுபடுத்துவது போல் இருப்பது காரணமாக இருக்கலாம். நல்லவேளையாக அலெக்ஸாண்டர் அவன் வயதினனாக இருக்கிறான்….

 

மெல்ல தொலைவிலிருந்து குதிரைகளின் குளம்படிச் சத்தம் கேட்க ஆரம்பித்தது. அலெக்ஸாண்டர் நெருங்கி விட்டான். ஆம்பி குமாரன் மங்கல வாத்தியங்களை இசைப்பவர்களை நோக்கி கையசைத்தான். அவர்கள் இசைக்க ஆரம்பிக்க ஆம்பி குமாரன் அலெக்ஸாண்டரை வரவேற்கத் தயாரானான். அவன் இதயத்துடிப்புகள் வேகமெடுத்தன

 

(தொடரும்)

என்.கணேசன்  


      

3 comments:

  1. Ambi kumaran is making historical blunder. What to do?

    ReplyDelete
  2. வடநாட்டு மன்னர்களான வீரசிவாஜி, சந்திரகுப்தனை அடுத்து, அவர்களைவிடவும் மேன்மையான தமிழ்நாட்டு அரசர்களான ராஜேந்திர சோழன், தலையாலங்கானத்து செருவென்ற பாண்டிய நெடுஞ்செழியன், மன்னர் சேதுபதி, வீரமங்கை வேலுநாச்சியார் போன்றவர்களை பற்றியும் எழுதுங்கள் கணேசன் சார்.

    ReplyDelete
  3. ஆம்பிக்குமாரனுக்கு அறிவு இல்லை என்றாலும்... பலசாலிகளின் காலில் விழுந்து பிழைத்துக்கொள்வான்....

    ReplyDelete