சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, December 12, 2022

யாரோ ஒருவன்? 116


ன்வர் தன் சந்தேகத்தை நரேந்திரனிடம் தெரிவித்து அந்த வீட்டின் அமைப்பையும் விவரித்த போது நரேந்திரனுக்கு அன்வரின் சந்தேகம் சரியாக இருக்கலாம் என்று தோன்றினாலும் வேறு சில சாத்தியக்கூறுகளுக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் கூடத் தோன்றியது.

அவன் அன்வரிடம் சொன்னான். “நீ சொல்வதைப் பார்க்கும் போது அந்த வீட்டில் மறைக்க ஏதோ இருக்கின்றது அல்லது காப்பாற்ற ஏதோ இருக்கின்றது என்பது நமக்கு நிச்சயமாகத் தெரிகிறது. இல்லா விட்டால் அந்தக் கூர்க்காவின் நடவடிக்கைகள் அந்த விதத்தில் இருக்காது. ஆனால் மறைக்கவோ காப்பாற்றவோ முயற்சி செய்வது அஜீம் அகமதுக்காகத் தான் இருக்க வேண்டுமென்றில்லை. உள்ளேயிருக்கும் வேறு யாராவது உள்ளூர் குற்றவாளிக்காகக்கூட இருக்கலாம். இல்லையென்றால் ஏதாவது கடத்தல் பொருள்களோ, போதைப் பொருள்களோ கூட உள்ளே இருக்கலாம்.”

அன்வர் அந்தக் கோணங்களில் சிந்தித்திருக்கவில்லை. அவன் மெல்லச் சொன்னான். “இருக்கலாம் சார். எனக்கு அந்த வீடு ஒரு தொழிற்சாலைக்கு எதிரில் இருப்பது தான் அஜீம் அகமது இருப்பதற்கு எதிரான அம்சமாகப் பட்டது. இதை யோசித்திருக்கவில்லை.”

நரேந்திரன் புன்னகையுடன் சொன்னான். “அந்தத் தொழிற்சாலை கூடப் பாதகமான அம்சமில்லை. தினமும் மூன்று சமயங்களில் இருபதிருபது நிமிடங்கள் கூட்டமும், நெரிசலுமாக இருக்கும். அதாவது மொத்தத்தில் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம். அது எப்போதும் உள்ளேயே இருப்பவனுக்கு  ஒரு பெரிய தொந்திரவாக இருக்காது. சொல்லப்போனால் அவன் யாரும் பின் தொடராமல் அந்த வீட்டிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால் அந்த சந்தடி நேரத்தை அவன் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒன்றே ஒன்று - அவனும் அந்த தொழிலாளிகளின் சீருடையையே தயாராக வைத்திருந்தால் போதும். ஒருவேளை அஜீம் அகமது நீ சந்தேகப்படுவது போல அந்த வீட்டுக்குள்ளேயே இருந்தால் கண்டிப்பாக அந்தச் சீருடையைத் தனக்காகத் தயார்ப்படுத்தி வைத்திருப்பான்.”

அன்வருக்கு நரேந்திரனின் புத்திக்கூர்மை வெகுவாகக் கவர்ந்தது. “இருக்கலாம் சார்என்றான். பின் ஒரு வரைபடத்தை நரேந்திரன் முன் வைத்தான். அது அந்த வீடு இருக்கும் பகுதியின் வரைபடம். “அவனுக்கு இங்கே இன்னொரு சாதகமான அம்சம் என்னவென்றால் காசியாபாத், டெல்லி போகும் தேசிய நெடுஞ்சாலை அரை கிலோமீட்டர் தூரத்திலேயே இருக்கிறது. அவன் தப்பித்துப் போக அது வசதி. அதே மாதிரி அந்த வீட்டுக்குப் பின்னால் வீடுகள் எதுவும் இல்லை. அது காலி மனையிடம் தான். அவன் இரவோடிரவாகத் தப்பிக்க வேண்டுமென்றால் அவன் பின்பக்கமாகக்கூடத் தப்பிக்கலாம்.”

நரேந்திரனுக்கு அன்வரின் அறிவுக்கூர்மை பிடித்திருந்தது. அன்வர் சொன்னது போல் அதெல்லாம் அஜீம் அகமதுக்குச் சாதகமான அம்சங்கள் தான்.   

நரேந்திரன் சொன்னான். “நீ சொல்வது சரிதான். எதற்கும் துபாயிலிருக்கும் அந்த வீட்டுச் சொந்தக்காரன் பற்றி விசாரி.”

விசாரித்து விட்டேன் சார். அவன் மும்பை ஐஐடியில் படித்தவன். துபாயில் ஒரு ஐ.டி கம்பெனியில் பெரிய பொறுப்பில் இருக்கிறான். மூன்று வருஷங்களுக்கு முன்னால் காதல் கல்யாணம் ஆகி ஒரு வயதில் ஒரு மகள் இருக்கிறாள். அவன் மீது இது வரை எந்த வழக்கும் இல்லை. புகார்களும் எதுவும் இல்லை...”

நரேந்திரன் புன்னகைத்தபடி சொன்னான். “சபாஷ். வேறு வகைகளிலும் நாம் விசாரிக்கலாம். நீ இனி அந்த வீட்டைக் கவனிப்பதோ, அந்த தொழிற்சாலை வாட்ச்மேனிடம் அதிகம் பேசுவதோ வேண்டாம். அந்தக் கூர்க்காவுக்கு உன் மீது ஏதாவது சின்ன சந்தேகம் வந்திருந்தாலும் அது தீர்ந்து போகட்டும். ஏனென்றால் அஜீம் அகமது எப்போதுமே மிக எச்சரிக்கையாக இருப்பவன். ஒரு இடத்திற்குப் பதுங்கப் போகும் போதே இன்னொரு இடத்தையும் தயார் செய்து விட்டு தான் போவான். சந்தேகப்படுகிறார்கள், கண்டுபிடிக்கப்பட்டு விட்டோம் என்ற சிறிய சந்தேகம் அவனுக்கு வந்தாலும் உடனடியாக அவன் இடம் மாறி விடுவான். பிறகு அந்த இடத்தைக் கண்டுபிடிக்க நாம் சிரமப்பட வேண்டியிருக்கும். தேடல் வேட்டையை மறுபடி ஆரம்பிக்க வேண்டியிருக்கும்....”
 
பீம்சிங் சனிக்கிழமை இரவே விமானத்தில் கோயமுத்தூர் போய்ச் சேர்ந்து விட்டான். அவனுக்கு தன்னுள் ஏதோ ஒரு சக்தி கூடியிருப்பதை இப்போது ஒவ்வொரு கணமும் உணர முடிகிறது. அது அவனுக்குத் தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் கூட்டியிருந்தது. ஆனால் அவனுக்கு மிக அசௌகரியமாக இருந்த விஷயம் காளிங்க சுவாமியின் சக்தி வாய்ந்த கண்கள் இப்போதும் அவனுள்ளே இருந்து அவன் பார்ப்பதையும் அவன் உணர்வதையும் கவனித்துக் கொண்டிருப்பது போல உணர்ந்தது தான். காளி கோயிலை விட்டு வெளியே வருகையில் உணர்ந்ததை அவன் கோயமுத்தூர் போய்ச் சேர்ந்த போதும் உணர்கிறான். அவரிடமிருக்கும் சக்தி ஒன்றை அவனிடம் ஒட்ட வைத்து விட்டு அதன் மூலம் அவரும் அவன் போகுமிடமெல்லாம் நடப்பதைப் பார்த்துக் கொண்டு இருப்பதாக அவனுக்குத் தோன்றியது.   மந்திரக்கவசம் என்று அவர் குறிப்பிட்டது அவருடைய சக்தியைத் தானா என்ற சந்தேகமும் அவனுக்கு வந்தது.

கோயமுத்தூரில் ரேஸ்கோர்ஸ் பகுதிக்கு அருகில் இருக்கும் ஒரு நட்த்திர ஓட்டலில் பீம்சிங் தங்கினான். இரவு பத்தரை மணிக்கு அவன் ஓட்டல் அறையிலிருந்து கிளம்பினான். நாகராஜ் வசிக்கும் வீடு ஓட்டலில் இருந்து பத்து நிமிட நடை தூரத்தில் தான் இருக்கிறது. பீம்சிங் நிதானமாக நடக்க ஆரம்பித்தான். எந்த இடத்தில் வேலைக்குப் போகிறோமோ அந்த இடத்தின் சந்து பொந்துகளை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது அவன் படித்திருந்த ஆரம்ப பாடம். அப்படி அறிந்து கொண்டால் தான் ஒரு ஆபத்தான சூழ்நிலை உருவானால் அதில் உள்ள சாதகமான அம்சங்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். அதே போல் பாதகமான அம்சங்களைத் தவிர்க்க முடியும். அவன் அமைதியாகவும் கவனமாகவும் பார்த்துக் கொண்டே அந்த வீதிகளில் சுற்றினான்.

இரவு சரியாக பதினொன்றரை மணிக்கு அவன் நாகராஜ் வீட்டின் எதிர்ப்புறம் வந்து நின்றான். நின்று அந்த வீட்டையும், அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் அங்கிருக்கும் சூழலையும் மிக உன்னிப்பாக அவன் கவனிக்க ஆரம்பித்தான். வீட்டிற்குள் திருடுவது எப்படி என்பதை காளிங்க சுவாமி மிகவும் தெளிவாக விளக்கி இருந்தாலும் வெளிச்சூழ்நிலைகளை அவனே தான் கவனித்துக் கொள்ள வேண்டும். எத்தனையோ நேரங்களில் வீட்டுக்குள் உள்ள சூழ்நிலைகள் சாதகமாக இருந்தாலும் வெளியே உள்ள சூழ்நிலைகள் சரியாக இல்லா விட்டால் பிரச்சினைகள் வந்து தோல்விகள் ஏற்படலாம். ரோந்து போகும் போலீஸ் கூட ஒருவனைச் சிக்க வைத்து விடலாம். பக்கத்து வீட்டுக் காரர்கள் கூடத் திருடனைப் பிடித்துக் கொடுத்து விடலாம்.  சமயங்களில் வழிப்போக்கர்கள் கூட ஆபத்தாகலாம். எதிர்பாராத விஷயங்கள், சூழ்நிலைகள், நபர்கள் என்று எத்தனையோ வர வாய்ப்பிருக்கிறது என்றாலும்  எதிர்பார்க்க வேண்டிய விஷயங்களை ஒருவன் கவனித்து தயார்ப்படுத்திக் கொண்டே ஆக வேண்டும். அதனால் தான் முந்தைய நாளே அதே நேரத்தில் வந்து அதே சூழலில் இருந்து பார்த்து தன்னை மறுநாளுக்கு மானசீகமாய்த் தயார்ப்படுத்திக் கொண்ட பின்னரே பீம்சிங் அங்கிருந்து சரியாக ஒரு மணிக்கு நகர்ந்தான்.

பீம்சிங் வந்த கணத்திலிருந்து ஜன்னல் வழியாக அவனையே கவனித்தபடி நின்றிருந்த நாகராஜ் பிறகு அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்தான். நாளைக்கு எல்லா விதங்களிலும் அவனுக்கு அக்னிப் பரிட்சை தான். என்ன ஆகும் என்று அவனுக்கும் நிச்சயமாகத் தெரிந்திருக்கவில்லை. எத்தனை தான் சக்திகள் படைத்தாலும் இறைவன் அவ்வப்போது நடக்கவிருப்பதைத் திரையிட்டு மறைத்துக் கொள்கிற போது அதையும் மீறிப் பார்க்க யாராலும் முடிவதில்லை! அதில் அவனோ காளிங்க சுவாமியோ விதிவிலக்கல்ல….

(தொடரும்)
என்.கணேசன்

7 comments:

  1. Thrilling and very interesting.Nice reading.

    ReplyDelete
  2. நாகராஜ் அதை அறிந்திருக்கிறான் என்பது ஆச்சரியம்... ஆனால், எப்போதும் நாகராஜ் வீட்டையே கவனித்திருக்கும் வேலாயுதம் இதில் ஏதாவது கேம் விளையாடுவாரா?

    ReplyDelete
  3. Verry interesting.

    ReplyDelete
  4. Can’t wait… as usual you are awesome anna. for super star rajini birthday can you publish a bonus chapter ganeshan anna :-)… chandru..

    ReplyDelete
  5. Interesting Sir, how many episodes are left sir?

    ReplyDelete