சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, December 5, 2022

யாரோ ஒருவன்? 115


டெல்லியை அடுத்த நோய்டா பகுதியில் தொழிற்சாலைகள் அதிகம். வெளியூர்களிலிருந்து அந்தத் தொழிற்சாலைகளில் வேலைக்கு வருபவர்கள் தினமும் தங்கள் ஊருக்குப் போய் வருவது சிரமமானதால் அந்தப் பகுதியிலேயே சிறிய ஃப்ளாட்களை வாடகைக்கு எடுத்து நாலைந்து பேர் சேர்ந்து தங்கும் ஏற்பாட்டைச் செய்து கொண்டார்கள். வேலைக்குச் செல்லும் ஆண்கள் மட்டும் தங்கும் அந்த ஃப்ளாட்கள் எல்லாம் சுத்தமானதாக இருக்காது. அந்தத் தொழிலாளிகளுக்கு சுத்தமாக வைத்துக் கொள்ள நேரமும் இருக்காது. அடிப்படை வசதிகள் மட்டுமே அந்த ஃப்ளாட்களில் இருக்கும். அந்த வகை ஃப்ளாட்கள் தான் அந்தப் பகுதியில் மிக அதிகம். மற்ற சுத்தமான  பெரிய ஃப்ளாட்கள் உயர் அதிகாரிகள், நிர்வாகிகள் தங்கும்படியானதாயிருக்கும். அவை எண்ணிக்கையில் குறைவு. மற்றபடி தனிப்பட்ட வீடுகள் மிகவும் குறைவு. அதிலும் வசதியான வீடுகள், அதிகம் யாரும் வராமல் தனிமையாக இருக்கும் வீடுகள் மிக மிகக் குறைவு.

அதனால் அன்வருக்கு நரேந்திரன் சொன்ன அந்த மாதிரியான தனியான வீடுகளைத் தேர்ந்தெடுப்பதில் சிரமம் அதிகமிருக்கவில்லை. ஒட்டு மொத்தத்தில் பத்து வீடுகள் மட்டுமே அப்படி இருந்தன. அந்தப் பத்து வீடுகளில் ஒன்றில் ரிப்பேர் வேலைகள் நடந்து கொண்டிருந்தன. வேலைக்காரர்கள் வருவதும் போவதுமாக இருந்ததால் அதைத் தன் லிஸ்டில் இருந்து அன்வர் எடுத்து விட்டான். இன்னொரு வீட்டில் ஒரு மார்வாடி குடும்பம் திடீரென்று ஒரு நாள் இரண்டு பெரிய கார்களில் வந்து சேர்ந்தது. பெரியவர்கள், குழந்தைகள் எனக் கூச்சலும் சத்தமுமாய் அந்தப் பகுதியே கலகலக்க அந்த வீட்டிலும் கண்டிப்பாக அஜீம் அகமது இருக்க வழியில்லை என்று நினைத்தான்...

இப்படி ஒவ்வொன்றாக ஒவ்வொரு நாளிலும் கழித்துக் கொண்டே வந்து ஒரு வாரத்தில் அஜீம் அகமது இருக்கலாம் என்று சந்தேகப்படும்படியான வீடுகள் மூன்று தான் மிஞ்சின. அதிலும் ஒன்றில் அவனுக்கு அஜீம் அகமது தங்கியிருக்கும்படியான வாய்ப்புகள் அதிகம் தெரிந்தன.  அந்த வீட்டுக்கு வெளியே இருந்த கூர்க்கா அந்த வீட்டைக் கடக்கும் ஒவ்வொரு மனிதனையும் மிகவும் கூர்ந்து பார்ப்பவனாக இருந்தான். பொதுவாக இப்படிக் காவலிருக்கும் கூர்க்காக்கள் உட்கார்ந்தும் நின்றும் சலித்துப் போய் வேடிக்கை பார்ப்பவர்களாகத் தான் இருப்பார்கள். அவர்களும் கூர்ந்து பார்ப்பார்கள் என்றாலும் அவர்களின் பார்வைக்கூர்மை பொழுது போகாமல் புதிதாய் வந்திருப்பவர்களை வேடிக்கை பார்க்கும் கூர்மையாக இருக்குமே ஒழிய சந்தேகத்துடன் பார்க்கும் கூர்மையாக கண்டிப்பாக இருக்காது. ஆனால் இந்த கூர்க்கா அந்த வீட்டைப் பார்ப்பவர்களையும், கடப்பவர்களையும் ஒற்றர்களாக இருக்குமோ என்று பார்ப்பது போல் இருந்தது. அந்த வீடு அழகாகவும், பூந்தோட்டம், புல்வெளியெல்லாம் கொண்டதாகவும் இருந்தது.  ஒருவர் கூட உள்ளிருந்து வெளியே வந்தோ, வெளியே இருந்து உள்ளே போயோ அன்வர் இந்த ஒரு வாரத்தில் பார்க்கவில்லை.

ஒரே ஒரு எதிர்மாறான அம்சம் என்னவென்றால் எதிரிலேயே ஒரு தொழிற்சாலை இருந்தது.  தொழிற்சாலையில் மூன்று ஷிஃப்டில் வேலைகள் செய்தார்கள். ஒவ்வொரு ஷிஃப்டிலும் சுமார் ஐநூறு ஆட்கள் வேலை செய்வார்கள்.  காலை ஆறு மணி, மதியம் இரண்டு மணி, இரவு பத்து மணி ஆகிய மூன்று நேரங்களிலும் சுமார் இருபது நிமிடங்கள் ஐநூறு ஆட்கள் உள்ளே வருவது ஐநூறு ஆட்கள் வெளியேறுவது என்று கூட்டம் அதிகமாக இருக்கும்.  மற்ற நேரங்களில் அங்கே அதிகப் போக்குவரத்தோ ஆள் நடமாட்டமோ இருக்காது. ஏனென்றால் தெருவின் ஒரு பக்கம் தொழிற்சாலை இருக்க மறுபக்கம் இரண்டு வீடுகள், அடுத்து ஐந்து வீட்டு மனைகள், கடைசியாக அன்வர் சந்தேகப்படும் அந்த வீடு இருந்தது. ஆட்கள் இருப்பதும் அந்த முதலிரண்டு வீடுகளாகவே தெரிந்தன.  

அன்வருக்கு தினந்தோறும் அந்தத் தொழிற்சாலைக்குத் தர குரியர் தபால் ஏதாவது இருக்கும். அதே போல் மாலையில் அந்தத் தொழிற்சாலையில் இருந்து எடுத்துப் போவதற்கும் குரியர் தபால் இருக்கும். காலை மணி பதினொன்றிலிருந்து மதியம் பன்னிரண்டரை வரை ஒவ்வொரு நாளில் ஒவ்வொரு வேளையில் அவன் அங்கு வருவான். ஒவ்வொரு முறையும் எதிர் வீட்டில் இருக்கும் அந்தக் கூர்க்கா அவனையே கூர்மையாகப் பார்ப்பான். அன்ர் அந்த வீட்டைக் கூர்ந்து பார்ப்பதைத் தவிர்த்து சாதாரணமாக நகர்ந்து போவான். ஒரே ஒரு சமயத்தில் போனில் பேசுவது போல அங்கே நின்று குரியர் ஆட்கள் பேசிக் கொள்ளும் விஷயங்களைப் பேசியபடி வெற்றிடத்தைப் பார்க்கும் பாவனையில் குறிப்பில்லாமல் அந்த வீட்டைப் பார்த்தான். அப்போது அது வரை அமர்ந்திருந்த கூர்க்கா பதற்றத்துடன் மெல்ல எழுந்ததைக் கவனித்தான். “சரிடா. இன்னும் நிறைய டெலிவரி பண்றதுக்கு இருக்கு. ராத்திரி பேசறேன். வை” என்று இயல்பாகப் பேசியபடி நகர்ந்தான். பின் எப்போதும் அவன் அப்படி போன் பேசவில்லை.

மாலை நேரங்களில் அன்வர் ஐந்தரையிலிருந்து ஏழு மணி வரை வேறு வேறு நேரங்களில் குரியர் தபால் எடுக்க வருபவன் போல வருவான்.  எந்த ஒரு சமயத்திலும் அந்த வீட்டில் யாரும் பார்க்கக் கிடைக்கவில்லை. வீட்டில் ஆள் இருப்பது போலவே தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் கூர்க்காவின் பார்வை அவன் அங்கிருந்து நகரும் வரை அவன் மேலேயே இருப்பதை உணர்ந்திருக்கிறான்.

ஒரு முறை கூட அந்தக் கூர்க்கா வேறு யாருடனாவது பேசிக் கொண்டிருந்து அவன் பார்க்கவில்லை.  போனில் கூட அவன் பேசிக் கொண்டிருந்ததில்லை. இது இயல்பாகத் தெரியவில்லை. அவன் கூர்க்கா வேடத்திலிருக்கும் அஜீம் அகமதின் பாதுகாவலன்களில் ஒருவனாக இருக்கும் என்று தோன்றியது.

அதை உறுதிப்படுத்திக் கொள்ள அன்வர் இருட்ட ஆரம்பித்திருக்கும் நேரத்தில் குரியர் வாங்க அந்தத் தொழிற்சாலைக்குப்  போன போது தொழிற்சாலை வாட்ச்மேனிடம் மெல்லக் கேட்டான். “ஏன் அண்ணேஉங்களுக்கு இந்த வேலை போரடிக்கலையா?”

அதையெல்லாம் பார்த்தா வயிறு நிறையுமா தம்பிஎன்று அந்த வயதான வாட்ச்மேன் சொன்னார்.

அன்வர் எதிர்வீட்டில் இருக்கும் கூர்க்காவை மறைத்து நின்றபடி மெல்லக் கேட்டான். ”ஏதோ பேச்சுத் துணைக்கு உங்களுக்கு எதிர் பங்களா கூர்க்கா இருக்கார். அவரும் இல்லைன்னா உங்களுக்கு ரொம்பவே போர் தான்….”

இது போன்ற சமயங்களில் யாரைப் பற்றிப் பேசுகிறோமோ அவர்களை நோக்கிப் பார்வை போவது இயற்கை. அப்படி அந்தக் கூர்க்காவை இந்த வாட்ச்மேன் பார்த்து விட்டால் அவனைப் பற்றித் தான் பேசுகிறார்கள் என்பது அவனுக்குத் தெரிந்து விடும். அன்வர் மீது சந்தேகம் ஏற்பட்டு விடும். அதனால் தான் அவன் மறைத்து நின்றான்.

வாட்ச்மேன் அவன் யூகித்தது போலவே எதிர்ப்பக்கம் பார்க்க முற்பட்டு, அவன் மறைத்து நின்றிருந்ததால் பிறகு அவன் முகம் பார்த்து சொன்னார். “அவன் ஒரு முசுடு தம்பி. கொஞ்ச நாளுக்கு முன்னாடி தான் அங்கே வேலைக்கு வந்தான். வந்த நாள்லயே அவன் கிட்ட பேச்சுக் கொடுக்கப் போனேன். அவன் சரியா பேசலைஅதுல இருந்து நானும் அந்த ஆள்கிட்ட பேசப் போறதில்லை…”

அந்த வீட்ல ஆள்களும் யாரும் இல்லை போலத் தெரியுது. ஆளே இல்லாத வீட்டைக் காவல் காக்கற நிலைமை வந்துடுச்சேன்னு கடுப்புல இருப்பான் போலருக்கு”

அப்படித்தான் தோணுது தம்பி. எப்பவாவது ஒரு தடவை ஒன்னு ரெண்டு பேர் அங்கே வந்து போறானுக. வீட்டு சொந்தக்காரன் துபாய்ல இருக்கான். துபாய் காசை செலவு பண்ண வழி தெரியல போலருக்கு. இந்த முசுடைச் சும்மா காவலுக்கு வெச்சுருக்கான்.”

அன்வருக்கு அந்த எதிர்வீடு அஜீம் அகமது வசித்து வரும் வீடாக இருக்கக்கூடும் என்ற சந்தேகம் வலுத்தது. போகும் போது அவன் அந்த வீட்டுப் பக்கம் திரும்பவில்லை. குரியர் கவர்கள் சரியாக இருக்கிறதா என்று கவனமாகச் சரிபார்ப்பவன் போல் எண்ணிப் பார்த்து விட்டு போனான்.

தொழிற்சாலை வாட்ச்மேனோடு பேசியபடி நின்ற குரியர் ஆளைச் சந்தேகத்துடன் பார்த்துக் கொண்டிருந்த கூர்க்கா அந்த ஆள் இந்தப் பக்கம் திரும்பாமல் குரியர் கவர்களை எண்ணியபடி போனதால் அந்த வாட்ச்மேனுடன் இந்த வீட்டைப் பற்றிப் பேசியிருந்திருக்க வழியில்லை என்று புரிந்து கொண்டான். ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசி விட்டுப் போகும் போது அந்தப் பக்கம் பார்வையையும் திருப்புவது மனித சுபாவம். பார்வையில் இருந்து மறையும் வரையும் கூட அந்த ஆள் திரும்பிப் பார்க்கவில்லை. கூர்க்கா நிம்மதியடைந்தான்.
      


(தொடரும்)
என்.கணேசன்   




3 comments:

  1. Super. They discovered Ajeem Ahmed's hiding place intelligently..

    ReplyDelete
  2. எல்லாம் சரி ஆனால் நான் மிக நீண்ட நாட்களாக காத்திருக்கிறேன் நாகராஜ் & ரஞ்சினியின் சந்திப்பிற்காக என் ஊகம் சரி எனில் அங்கே ஒரு twist எங்களுக்காக காத்திருக்கு…அதனால் தான் இன்னும் அச்சந்திப்பை suspense ஆகவே வைத்திருக்கிறீர்களா sir ..?

    ReplyDelete
  3. அஜீம் அகமது ஆட்களுக்கு சந்தேகம் வராத மாதிரி நடந்து ...அவுங்களையே நோட்டம் விடுறது சாதாராண விசயம் இல்ல...அன்வர் உண்மையிலே திறமைசாலி தான்....

    ReplyDelete