சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, December 29, 2022

சாணக்கியன் 37

 

ம்பி குமாரன் கேகய நாட்டைப் பற்றிச் சொன்னவுடனேயே அலெக்ஸாண்டர் அதனுடன் போர் புரிந்து வெல்லத் துடிப்பான் என்று எதிர்பார்த்திருந்ததால் அலெக்ஸாண்டர் தூதனை அனுப்பத் தீர்மானித்தவுடன் ஏமாற்றமடைந்தான். ஆம்பி குமாரன் கேகய நாட்டை அவனுடைய எதிரி நாடு என்றும் சொல்லிப் பார்த்தான். அப்போதும் அலெக்ஸாண்டர் அதை ஒரு தகவல் போலக் கேட்டுக் கொண்டானேயொழிய நண்பனுடைய எதிரி தனக்கும் எதிரி என்று உடனே நிலைப்பாடு எடுக்காதது அவனுக்கு அதிருப்தியாகத் தான் இருந்தது. ஆனாலும் புருஷோத்தமனின் போர்க்குணம் பற்றித் தெரிந்திருந்ததால் அவர் தன்னைப் போல் நட்புக்கரம் நீட்டக்கூடியவரல்ல என்று மனசமாதானம் அடைந்தான். அலெக்ஸாண்டர் அனுப்பிய தூதன் புருஷோத்தமனின் அலட்சிய பதிலோடு இரண்டு நாட்களில் திரும்பி வரக்கூடும். வந்த பின் அலெக்ஸாண்டருடன் சேர்ந்து போருக்குச் சென்று கேகய மன்னன் புருஷோத்தமனைப் போர்க்களத்தில் சந்தித்து வென்று மண்டியிட வைக்க வேண்டும். முன்பு தந்திரமாக வந்து தட்சசீலத்தை ஆக்கிரமித்த கேகய அமைச்சர் இந்திரதத்தையும் சிறைப்படுத்த வேண்டும். அப்போது தான் ஆத்திரம் சற்றாவது குறையும் என்று ஆம்பி குமாரன் நம்பினான். அந்தக் காட்சிகளைக் கற்பனை செய்து பார்க்கும் போதே ஆம்பி குமாரனுக்கு இனித்தது.


அந்த மகிழ்வான மனநிலையை ஏற்படுத்திக் கொண்டு அலெக்ஸாண்டரை விருந்தினர் மாளிகையில் சந்திக்கச் சென்ற ஆம்பி குமாரனிடம் அலெக்ஸாண்டர் சொன்னான். “நண்பனே. இந்த பாரத பூமியில் நிறைய சக்தி வாய்ந்த யோகிகளும், துறவிகளும் இருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்களில் சிறந்த ஒருவருடன் நான் பேச விரும்புகிறேன்.”


ஆம்பி குமாரன் அலெக்ஸாண்டரின் இந்த விருப்பத்தை எதிர்பார்க்கவில்லை. இவன் முரண்பாடுகளின் தொகுப்பாக இருக்கிறானே என்று அலெக்ஸாண்டரைப் பற்றி எண்ணாமல் இருக்க முடியவில்லை. போகங்களிலும் மிகுந்த ஆர்வம் காட்டுகிறான். போரிலும் மிகுந்த ஆர்வம் காட்டுகிறான். அதோடு இப்படி துறவிகள் மீதும் ஆர்வம் காட்டுகிறானே. இது எப்படி இவனால் முடிகிறது என்று நினைத்தபடியே ஆம்பி குமாரன் சொன்னான். “நண்பா. நீ சொல்வது போன்ற துறவிகள் இப்பகுதியிலும் இருக்கிறார்கள் என்றாலும் அவர்கள் அணுகிப் பேச உகந்தவர்கள் அல்ல. அவர்கள் அகம்பாவம் கொண்டவர்கள். அரசர்களைக் கூட அவர்கள் மதிக்க மாட்டார்கள்.”


ஆம்பி குமாரனின் எச்சரிக்கை அலெக்ஸாண்டரை திகைக்க வைக்கவில்லை. அலெக்ஸாண்டர் அதை லட்சியம் செய்யாமல் சிறு புன்னகையுடன் சொன்னான். “அது போன்ற மனிதர்களை நான் அறிவேன் நண்பனே. என் குரு அரிஸ்டாட்டிலின் குரு ப்ளேட்டோவின் குரு சாக்ரசிடீஸ் அப்படிப் போன்ற நபர் தான். அவர் அரசாள்பவர்களை மதிக்காமல், அவர்களை அனுசரிக்காமல் எந்த வருத்தமும் இல்லாமல் உயிரையும் துறந்தவர்.”


அலெக்ஸாண்டர் அதை ஒரு உயர்வான விஷயமாகவே எடுத்துக் கொண்டு சொன்னது ஆம்பி குமாரனைத் திகைக்க வைத்தது. ‘இவனால் எப்படி இது போன்ற மனிதர்களை உயர்வாகவே நினைக்க முடிகிறது?’ என்று தனக்குள்ளே கேட்டுக் கொண்டான். அவனால் அது போன்ற மனிதர்களை என்றுமே சகிக்க முடிந்ததில்லை. ஆடைகள் உட்பட அனைத்தையும் துறந்த அந்தத் துறவிகளிடம் கர்வப்பட என்ன இருக்கிறது என்பது அவனுக்கு என்றுமே புரிந்ததில்லை. அவன் தந்தை பயபக்தியுடன் வணங்கிய துறவிகள் சிலரை அவன் பார்த்திருக்கிறான். அவர்கள் அரசன் வணங்கினாலும், அடிமை வணங்கினாலும் ஒரே போல் அலட்சியமாக இருப்பார்கள். கையை உயர்த்தி ஆசி வழங்குவதையே ஒரு பொக்கிஷத்தை வழங்குவது போல் காட்டிக் கொள்வார்கள். அவன் தந்தையும் அந்த ஆசியையே தன் பாக்கியமாக எண்ணிக் கொள்வார். அந்தத் துறவிகளின் அலட்சியத்திற்கு அவன் தந்தையைப் போன்ற அரசர்கள் தரும் மரியாதை தான் காரணம் என்று ஆம்பி குமாரனுக்கு இப்போதும் தோன்றுகிறது. அவன் அது போன்ற துறவிகளை என்றுமே லட்சியம் செய்ததில்லை. அவனைப் போலவே அலெக்ஸாண்டரும் இருக்காமல் அவர்களை மதித்து சந்திக்க விரும்புவது பிடிக்கவில்லை.


தட்சசீலத்திற்கு அருகிலிருக்கும் வனப்பகுதியில் சில சமணத்துறவிகள் இருக்கிறார்கள், அவர்கள் ஆடைகளையும் துறந்தவர்கள், நிர்வாணமாக இருப்பவர்கள், அழுக்கும், புழுதியும் மேனியில் கொண்டவர்கள், சிலர் பேசவும் மறுப்பவர்கள் என்றெல்லாம் ஆம்பி குமாரன் விவரித்தும் அலெக்ஸாண்டர் தன் விருப்பத்தை விட்டு விடவில்லை. அடுத்த போருக்குச் செல்வதற்கு முன் அப்படிப்பட்ட ஒரு துறவியிடமாவது சந்தித்துப் பேச வேண்டும் என்று பிடிவாதமாகச் சொல்லவே ஆம்பி குமாரன் அதற்கு ஏற்பாடு செய்வதாகத் தெரிவித்தான்.

அவன் தன் அமைச்சரையும், தட்சசீலத்துப் பண்டிதர்களையும் அலெக்ஸாண்டரின் முன்னிலையிலேயே அழைத்து அந்தத் துறவிகளில் சிறந்தவராகக் கருதப்படுபவர் யார் என்று விசாரித்தான். அவர்கள் ஏகோபித்த குரலில் தண்டராய சுவாமி என்ற துறவியைச் சொன்னார்கள். அவரை மிகச் சிறந்த ஞானி என்றும், அந்த வனத்தில் இருக்கும் பெரும்பாலான துறவிகள் தண்டராய சுவாமியின் சீடர்கள் என்றும் சொன்னார்கள்.


அலெக்ஸாண்டர் ஆர்வத்துடன் சொன்னான். “நான் தண்டராய சுவாமியிடம் பேச வேண்டும். அழைத்து வர ஏற்பாடு செய்யுங்கள்”


சசிகுப்தன் அதை மொழி பெயர்த்துச் சொன்னவுடன் ஒரு பண்டிதர் தயக்கத்துடன் சொன்னார். “அவர் பிக்‌ஷைக்காகக் கூட நகருக்குள் வருவதில்லை”


”என்னிடம் ஒரு முறை அவர் வந்து சென்றால் பின் தன் வாழ்நாளில் என்றுமே அவர் பிக்‌ஷைக்குச் செல்ல வேண்டியதில்லை” என்று உற்சாகமாக அலெக்ஸாண்டர் சொன்னான்.


அலெக்ஸாண்டரின் உற்சாகம் ஆம்பி குமாரனைத் தொற்றிக் கொள்ளவில்லை. அவனுடைய பழைய அனுபவங்கள் அதற்குத் தடையாக இருந்தன. அவனையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்த அலெக்ஸாண்டர் சொன்னான். “நீ உன் வீரர்களை ஒனெஸ்க்ரீட்டஸுடன் அனுப்பு நண்பா. அவன் அவரை அழைத்து வருவான்”


ஒனெஸ்க்ரீட்டஸ் அலெக்ஸாண்டரின் மொழிபெயர்ப்பாளன். ஞான மார்க்கத்தில் அவனைப் போலவே ஆர்வம் கொண்டவன். அவனுக்கு காந்தார வீரர்களுடன் காட்டுக்குள் சென்றது மிக வித்தியாசமான அனுபவமாக இருந்தது. காட்டுக்குள் ஆங்காங்கே பல துறவிகளை அவன் கண்டான். சிலர் தவக்கோலத்தில் இருந்தார்கள். சிலர் ஒரு குழுவாக அமைதியாக நடந்து சென்று கொண்டிருந்தார்கள். சிலர் காவியுடை அணிந்து கொண்டிருந்தார்கள். சிலர் நிர்வாணமாக இருந்தார்கள். பெரும்பாலானவர்களிடம் எல்லையில்லாத அமைதி தெரிந்தது. குதிரைகளில் சென்று கொண்டிருந்த காந்தார வீரர்களையும் ஒனெஸ்க்ரீட்டஸையும் யாருமே கண்டு கொள்ளவில்லை. அதே போல அந்தத் துறவிகள் அவர்களைக் கடந்து சென்ற விலங்குகளையும் கண்டு கொள்ளவில்லை. அவர்களைப் பொருத்த வரை இரு பிரிவினரிடையே எந்த வித்தியாசமும் இல்லை என்று எண்ணியபடியே ஒனெஸ்க்ரீட்டஸ் புன்னகைத்தான்.


நீண்ட பயணத்திற்குப் பின் அவர்கள் தண்டராய சுவாமியைச் சந்தித்தார்கள். ஒரு பாறையின் மீது இலைகளைப் பரப்பி அதன் மீது அந்த வயதான துறவி நிர்வாணமாகப் படுத்துக் கொண்டிருந்தார். அவர் முகம் ஞான ஒளியால் பிரகாசித்ததை ஒனெஸ்க்ரீட்டஸ் கவனித்தான். குதிரையிலிருந்து இறங்கி மிகவும் பணிவாக அவரைத் தலை வணங்கி நின்ற ஒனெஸ்க்ரீட்டஸ் வீரர்களைப் பார்த்து சைகை செய்ய அவர்கள் பெரிய தாம்பாளங்களில் கொண்டு வந்திருந்த கனிவகைகளையும், மற்ற பரிசுப்பொருள்களையும் தண்டராய சுவாமி முன்பு வைத்தார்கள்.


ஒனெஸ்க்ரீட்டஸ் சொன்னான். “துறவிகளில் சிறந்தவரே! ஞானத்தின் உறைவிடமே! ஆகாயக் கடவுள் ஜீயஸின் புத்திரனும், உலகாளப் பிறந்தவரும் ஆன மாவீரர் அலெக்ஸாண்டர் அனுப்பி இந்த அடியவன் ஒனெஸ்க்ரீட்டஸ் தங்களை நாடி வந்துள்ளேன். மாவீரர் அலெக்ஸாண்டர் தங்களுக்கு அனுப்பி இருக்கும் இந்தக் கனிகளையும், பரிசுகளையும் ஏற்றுக் கொள்ளும்படி தங்களை வேண்டிக் கொள்கிறேன். தங்களைச் சந்தித்துப் பேச மாமன்னர் அலெக்ஸாண்டர் விரும்புகிறார். எனவே தாங்கள் எங்களுடன் வந்தருளும்படி தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.”


தண்டராய சுவாமியின் விழிகள் ஒனெஸ்க்ரீட்டஸைச் சலனமேயில்லாமல் பார்த்தன. ”ஆடைகள் உட்பட அனைத்தையும் துறந்திருக்கும் எனக்கு நீ தாம்பாளங்களில் கொண்டு வந்திருக்கும் பொருள்களும், உன் காலடி மண்ணும் ஒன்று தான். எனக்கு விருப்பமும், பயனும் இல்லாத இந்தப் பொருள்களை நீ திரும்பவும் எடுத்துச் செல்வாயாக! யாரையும் சென்று சந்திக்கும் உத்தேசமும் எனக்கு இல்லை என்று உன்னை அனுப்பியவனிடம் சொல்வாயாக!” சொல்லி விட்டு தண்டராய சுவாமி தன் கண்களை மூடிக் கொண்டார்.


கோபத்தில் கொந்தளித்த ஒனெஸ்க்ரீட்டஸ் கடுமையான வார்த்தைகளால் அவரைப் பயமுறுத்த நினைத்தான். ஆனால் அந்தத் துறவி கண்களை மட்டுமல்லாமல் காதுகளையும் உள்ளூர மூடிக்கொண்டதாகவே அவனுக்குத் தோன்றியது. என்ன சொன்னாலும் அந்தத் துறவியின் காதுகளில் விழப் போவதில்லை என்பது தெளிவாகப் புரிய அங்கிருந்து அவன் வேகமாகக் கிளம்பினான்.



(தொடரும்)

என்.கணேசன்



3 comments:

  1. சூப்பர் சார். துறவிக்கு வேந்தன் துரும்பு என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது. சாணக்கியர், சந்திரகுப்தன் மட்டுமல்லாமல் இது போன்ற சிறிய கதாபாத்திரங்களையும் அருமையாகச் சித்தரித்திருப்பது சிறப்பு. நன்றி.

    ReplyDelete
  2. சூப்பர் சார்...‌‌விருவிருப்பாக சென்று கொண்டிருக்கிறது‌.‌.

    ReplyDelete