சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, December 15, 2022

சாணக்கியன் 35

 

ம்பி குமாரன் கண்களுக்கு அலெக்ஸாண்டர் தேவலோகத்திலிருந்து வந்தவன் போலத் தோன்றினான். தொலைவில் குதிரைகளில் வந்து கொண்டிருந்தவர்களுக்கு மத்தியில் யார் அலெக்ஸாண்டர் என்ற சந்தேகம் எழவே காரணமிருக்கவில்லை.  நட்சத்திரங்களுக்கு நடுவே நிலவைக் கண்டுபிடிப்பதில் சிரமம் இல்லாதது போலவே இதுவும் சிரமம் இல்லாததாக ஆம்பி குமாரனுக்குத் தோன்றியது. குறை ஏதேனும் சொல்லித்தானாக வேண்டும் என்றால் உயரம் மட்டும் சற்று குறைவு என்று சொல்லலாம். வித்தியாசமான இறகுகள் பதித்த அவனது நீண்ட தலைக்கவசம் அந்தக் குறையையும் சரிசெய்து விட்டது….

 

தொலைவில் வந்து கொண்டிருந்தவர்கள் திடீரென்று தொடராமல் அப்படியே நின்று விட, ஆம்பி குமாரன் திகைத்தான். ’என்ன ஆயிற்று அவர்களுக்கு? ஏன் அங்கேயே நின்று விட்டார்கள்?’ என்று அவன் கவலையுடன் யோசித்துக் கொண்டிருக்கையில், அலெக்ஸாண்டர் மட்டும் குதிரையில் முன்னுக்கு வந்தான்.

 

ஆம்பி குமாரன் இனி இங்கேயே நிற்பது சரியல்ல என்று தீர்மானித்து தானும் தன் குதிரையேறி முன்னுக்கு விரைந்தான்.  இருவரும் நெருங்கிவிட்டபின் ஒருவரை ஒருவர் பார்த்தபடி சில கணங்கள் நின்றார்கள். அலெக்ஸாண்டரின் கூரிய பார்வை ஆழமாக ஆம்பி குமாரனைப் பார்த்தது. ஆம்பி குமாரன் ஒருவித அசௌகரியத்தை உணர்ந்தான். பிறகு அலெக்ஸாண்டர் அவனைப் பார்த்து நட்புடன் புன்னகைத்த பின் தான் ஆம்பி குமாரன் நிம்மதியை உணர்ந்தான்.

 

அலெக்ஸாண்டர் என்னவோ சொன்னான். அவன் சொன்னது என்ன என்று தெரியாமல் ஆம்பி குமாரன் விழிக்க, அலெக்ஸாண்டர் பின்னால் திரும்பாமலேயே கையை மட்டும் உயர்த்தி தன் ஆட்களுக்குச் சைகை செய்தான். உடனே அலெக்ஸாண்டருடன் வந்திருந்த சசிகுப்தன் தன் குதிரையுடன் வேகமாக வந்து சேர்ந்தான்.

 

அவனைப் பார்த்தவுடன் ஆம்பி குமாரன் சற்று நிம்மதியடைந்தான். இந்தக் கூட்டத்தில் முன்பே அறிந்தவன் ஒருவன் இருப்பது இந்தப் புதிய நட்பைச் சுலபமாக்கும் என்று அவனுக்குத் தோன்றியது. சசிகுப்தன் ஆம்பி குமாரனைப் பார்த்து வணக்கம் தெரிவித்தான். அவன் வந்தவுடன் அலெக்ஸாண்டர் முன்பு சொன்னதையே திரும்பவும் சொன்னான். சசிகுப்தன் உடனே அதை மொழி பெயர்த்தான். “சக்கரவர்த்தி சொல்கிறார். “நீ அழைத்தபடி வந்து விட்டேன் நண்பனே

 

முதல் வாக்கியத்திலேயே நண்பனே என்று அலெக்ஸாண்டர் அவனை அழைத்தது ஆம்பி குமாரனுக்கு மிகப்பெரிய பாக்கியம் என்று தோன்றியது. உணர்ச்சிப் பெருக்கில் பேச வார்த்தைகள் வராமல் ஒரு கணம் நின்ற ஆம்பி குமாரன் பின் தன்னைச் சுதாரித்துக் கொண்டு சொன்னான். “என் அழைப்பை ஏற்று இங்கு வந்து என்னை கௌரவித்திருக்கிறாய் நண்பா. நன்றி

 

சசிகுப்தன் அதை மொழி பெயர்த்துச் சொன்னவுடன் அலெக்ஸாண்டர் குதிரையில் இருந்து கீழிறங்க ஆம்பி குமாரனும் குதிரையிலிருந்து கீழே இறங்கினான். இருவரும் நட்புடன் ஆரத்தழுவிக் கொண்டார்கள்.

 

அலெக்ஸாண்டர் சொன்னான். “போரில் அல்லாமல் நட்பில் இணைவது என்றுமே இனிமையானது. அதனால் நட்பைத் தேர்ந்தெடுத்ததற்கு நானும் உனக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன் நண்பனே

 

சசிகுப்தன் அதை மொழிபெயர்த்துச் சொன்னதும் ஒரு கணம் ஆம்பி குமாரன் துணுக்குற்றான்.நீ நட்பைத் தேர்ந்தெடுத்திரா விட்டால் நான் போரில் உன்னை வென்றிருக்க வேண்டியிருக்கும் என்று சொல்கிறானா இவன்?’

 

மெல்ல சுதாரித்துக் கொண்டு ஆம்பி குமாரன் சொன்னான். “போரிட்டே ஆக வேண்டிய கட்டாயம் ஒரு நாட்டுக்கு நீரும் உணவும் மறுக்கப்படும் போது தான் ஏற்படுகிறது நண்பனே. மற்றபடி புத்திசாலிகளுக்குள் போருக்கு அவசியம் என்ன இருக்கிறது? செல்வம் தான் உன் தேவை என்றால் அது என்னிடம் அளவுக்கு அதிகமாகவே இருக்கிறது. நண்பனான உன்னுடன் அதைப் பகிர்ந்து கொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை

 

அலெக்ஸாண்டர் ஆம்பி குமாரனின் வார்த்தைகளில் பெருந்திருப்தி அடைந்தான். ”நட்புடன் நீ காட்டும் இந்தப் பெருந்தன்மையை நான் என்றைக்கும் மறக்க மாட்டேன் நண்பா. இந்தப் பெருந்தன்மை கண்டிப்பாக ஒருதலைப்பட்சமாக இருக்காது என்பதை மட்டும் நான் வாக்களிக்கிறேன்

 

அலெக்ஸாண்டரின் வார்த்தைகளைக் கேட்டவுடன் ஆம்பி குமாரனும் திருப்தியும் நிம்மதியுமடைந்தான். சற்று முன் துணுக்குற்றது அவசியமில்லாதது என்பதை அலெக்ஸாண்டரின் இந்த வார்த்தைகள் உறுதிப்படுத்தி விட்டன.

 

அடுத்து உடன் வந்தவர்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுதல், பரஸ்பரம் பரிசுப் பொருள்கள் பரிமாறிக் கொள்ளுதல், அறுசுவை உணவு, இளைப்பாறுதல், நடனத்தை இசையுடன் ரசித்தல் ஆகியவை தொடர்ந்தன. ஆம்பி குமாரன் அவர்களுக்கு எதிலும் எந்தக் குறையும் வைக்கவில்லை. அலெக்ஸாண்டரும் பரமதிருப்தி அடைந்தான்.

அலெக்ஸாண்டரின் படையினர் தங்குவதற்கு ஏற்கெனவே அங்கு ஆம்பி குமாரன் சகல ஏற்பாடுகளையும் செய்திருந்தான். அவர்களை அங்கே தங்கவைத்து அலெக்ஸாண்டரையும், அவனோடு வந்திருக்கும் அவன் தளபதிகள், சசிகுப்தன் முதலான முக்கியஸ்தர்களை அழைத்துக் கொண்டு ஆம்பிகுமாரன் தட்சசீலம் நோக்கிப் புறப்பட்டான். 

 

அலெக்ஸாண்டரை அழைத்துக் கொண்டு ஆம்பிகுமாரன் தட்சசீலம் நெருங்கி விட்டான் என்ற செய்தி  நகருக்குள் வேகமாகப் பரவியது. அந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட பின் கல்விக்கூடத்தில் சந்திரகுப்தனுக்கும் அவன் நண்பர்களுக்கும் இருப்பு கொள்ளவில்லை. அவர்கள் வாசலுக்கு வந்து அலெக்ஸாண்டரைப் பார்க்கக் காத்திருந்தார்கள். அவர்கள் அவனைப் பற்றி எத்தனையோ கேள்விப்பட்டிருக்கிறார்கள். அவன் பார்க்க எப்படி இருப்பான் என்று அறிந்து கொள்ளும் ஆர்வம் அதிகமாக அவர்களிடம் இருந்தது.

 

ஆச்சாரியர் விஷ்ணுகுப்தர் இப்போது இங்கு இருந்திருந்தால் அவர்களோடு இதே ஆர்வத்துடன் இங்கே காத்துக் கொண்டிருப்பாரா என்ற கேள்வியை சந்திரகுப்தன் தனக்குள் கேட்டுக் கொண்டான்.  அலெக்ஸாண்டரை ஆம்பி குமாரன் வரவேற்று அழைத்துக் கொண்டு வருவது அவருக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியிருந்தாலும் அவனை நேரில் பார்த்து மதிப்பிட அவரும் விரும்பியிருப்பார் என்று தோன்றியது. பாரதத்தை ஆக்கிரமிக்க நினைக்கும் அன்னியர்கள் யாராக இருந்தாலும் அந்த நபரை ஆச்சாரியர் எதிரியாகத் தான் பார்ப்பார். அதனால் எதிரியை நேரில் பார்த்து மதிப்பிடும் சந்தர்ப்பத்தை அவர் கண்டிப்பாகத் தவற விட்டிருக்க மாட்டார்

 

அலெக்ஸாண்டரைப் பார்த்தோம் என்று சொன்னால் அவனிடம் என்ன பார்த்தீர்கள், என்ன உணர்ந்தீர்கள், என்ன கணித்தீர்கள், உடனிருந்தவர்கள் யார் யார் என்றெல்லாம் ஆச்சாரியர் கண்டிப்பாகக் கேட்பார். அதனால் அவரிடம் சொல்ல வேண்டும் என்ற சிந்தனையுடனேயே பார்த்தால் கூடுதலாகப் பார்ப்போம்என்று சந்திரகுப்தன் சொல்ல சாரங்கராவ் தலையை ஆட்டினான்.

 

விஜயன் விளையாட்டாகச் சொன்னான். “ஆச்சாரியருக்குப் பதில் சொல்லிக் கஷ்டப்படுவதை விட அலெக்ஸாண்டருடனேயே போய் விடுவது நல்லது என்று தோன்றுகிறது. அவன் கண்டிப்பாகக் கேள்விகள் கேட்டு நம்மைச் சித்திரவதை செய்ய மாட்டான்.”

 

எல்லோரும் சிரித்தார்கள். ஆனால் அனைவர் பார்வையும் கூர்மையாகியது. வாத்தியங்கள் இசைத்தபடி வந்த ஆட்கள் முதலில் தெரிந்தார்கள் அவர்களைத் தொடர்ந்து குதிரைகளில் காந்தார வீரர்கள் வருவது தெரிந்தது. வீரர்களையும் தொடர்ந்து ஆம்பி குமாரன் தெரிந்தான். அவனுக்குப் பின்னால் அலெக்ஸாண்டர் தெரிந்தான். அவனைப் பார்த்தவுடனேயே அவனைப் பற்றிக் கேள்விப்பட்டதாக ஆச்சாரியர் சொன்னவை எல்லாம் சந்திரகுப்தனுக்கு நினைவு வந்தது.   அலெக்ஸாண்டர் நெருங்க நெருங்க சந்திரகுப்தன் அவனை ஆர்வத்துடன் கூர்ந்து பார்த்தான்.

 

அலெக்ஸாண்டர் இருபக்கமும் கூர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்து கொண்டிருந்தான். இருமருங்கிலும் கைகூப்பியபடி நின்றிருந்த மக்களும் புதிய யவன அரசனை வேடிக்கை பார்த்தனர். அனைவரும் கைகூப்பி நிற்க ஓரிடத்தில் சில இளைஞர்கள் மட்டும் கைகூப்பாமல் நிற்பது அவர்களை அலெக்ஸாண்டருக்கு வித்தியாசப்படுத்திக் காட்டியது. ஆனால் அந்த இளைஞர்களில் சிலர் அவனை மிகவும் கூர்மையாகப் பார்த்த விதம் அலெக்ஸாண்டருக்கு வேடிக்கையாக இருந்தது. அதிலும் ஒரு இளைஞன் அவன் பார்வையால் அலெக்ஸாண்டரின் மனதில் என்ன இருக்கிறது என்று அறிய முற்படுவது போல் அலெக்ஸாண்டருக்குத் தோன்ற அலெக்ஸாண்டரும் அந்த இளைஞனைக் கூர்மையாகப் பார்த்தான். இருவர்  பார்வைகளும் கூர்மையாகச் சந்தித்துக் கொண்டன.

 

ஆம்பி குமாரன் தட்சசீலக் கல்விக்கூட மாணவர்களின் வணங்காத கைகளையும், அலட்சிய தோரணையையும் கண்டு கோபம் கொண்டாலும் அதை வெளியே காட்டிக் கொள்ள முடியவில்லை. ‘இந்தக் கால இளைஞர்களுக்கு மரியாதையே தெரிவதில்லை. மாணவர்களும் ஆச்சாரியர் விஷ்ணுகுப்தரைப் போலவே இருக்கிறார்கள்.’ என்று மனதில் கடுகடுத்தான். அவர்களை அலட்சியப்படுத்தி ’இது தான் புகழ்பெற்ற தட்சசீல கல்விக்கூடம்’ என்று அலெக்ஸாண்டரிடம் சொல்ல ஒரு கணம் நினைத்தான். ஆனால் அலெக்ஸாண்டர் கல்வியறிவில் சிறந்தவன் என்று கேள்விப்பட்டிருந்ததால் அவன் ஆர்வத்துடன் ஆம்பிகுமாரனும் இங்கே தான் படித்தானா, எவ்வளவு படித்தான் என்றெல்லாம் கேட்க ஆரம்பித்து பேச்சு கல்வி பக்கம் நகர்ந்தால் அது தேவையில்லாத மனக்கசப்பு என்று எண்ணியவனாக அவன் மௌனமாக கல்விக்கூடத்தைக் கடந்தான்.   

 

அலெக்ஸாண்டரும் தன்னைக் கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருந்த சந்திரகுப்தனைப் பார்த்து மிக மெல்லியதாய் புன்முறுவல் பூத்தபடி அவனைக் கடந்தான். அந்த இளைஞனும் அவனைப் போலவே துடிப்பானவனாகத் தோன்றினான். அவர்களுக்குள் இந்த ஒரு ஒற்றுமை மட்டுமல்ல பாரதத்தில் அவர்கள் இருவருடைய எதிர்காலத்தையும் ஒரே மனிதர் தான் தீர்மானிக்கப் போகிறார் என்ற இன்னொரு ஒற்றுமையும் இருக்கிறது என்பதை அவன் அறிந்திருக்கவில்லை.

 

(தொடரும்)

என்.கணேசன்  




2 comments:

  1. You have truly given life to the historical characters sir. Feeling as if I am witnessing the events.

    ReplyDelete
  2. சிறப்பாக உள்ளது... நன்றி ஐயா...

    ReplyDelete