சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, December 19, 2022

யாரோ ஒருவன்? 117


ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வாக்கிங் போகையில் தீபக் உள்ளூர சிறிய பதற்றத்தை உணர்ந்தான். அன்று மதியம் மூன்று மணிக்கு அவனுடைய தாயைச் சந்திக்க நாகராஜ் ஒப்புக் கொண்டிருந்தது ஒரு பக்கம் அவனுக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும் இன்னொரு பக்கம் இனம் புரியாத ஒரு கலக்கத்தையும் ஏற்படுத்தியது ஏன் என்று அவனுக்குப் புரியவில்லை. நேற்றிலிருந்தே அவன் பொதுத் தேர்வுக்குப் பிள்ளையை அனுப்பும் தாயைப் போல தன் தாயைத் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கிறான். “கேள்வியை எல்லாம் வழ வழான்னு கேட்காம சரியா கேளு.... அவர் சிலசமயம் பட்டுன்னு பேசக்கூடியவர். அப்படி ஏதாவது சொன்னா வருத்தப்படாதே.... எல்லார் கிட்டயும் அஞ்சு லட்சம் வாங்கி அஞ்சு மாசம் கழிச்சு தான் சந்திக்கிறவர். எதோ என் மூஞ்சிக்காக இலவசமா இவ்வளவு சீக்கிரமா உன்னைச் சந்திக்க ஒத்துகிட்டிருக்கார்...”

ரஞ்சனி அவன் அளவு பதற்றத்தில் இருக்கவில்லை. அவளுக்குக் கேட்கச் சில கேள்விகள் இருக்கின்றன. அந்த மனிதர் ஒரு மகான் போன்றவர். அவரிடம் பயபக்தியோடு கேட்டு சொல்லும் பதிலைப் பெற்றுக் கொண்டு வந்து விடப் போகிறாள். அவ்வளவு தான். அதற்கேன் இவன் இவ்வளவு அறிவுரை சொல்கிறான் என்று ஆச்சரியமாய் இருந்தது. ஒரு கட்டத்தில் மகனைத் திட்டியே விட்டாள். “எல்லாம் எனக்குத் தெரியும். கொஞ்சம் சும்மா இருடா. காது புளிச்சுப் போகிற அளவு பாடம் நடத்தாதே.”

அம்மா அப்படித் திட்டிய பிறகு அவனுக்கு வேறுவிதமான பயம் பிடித்துக் கொண்டது. அம்மா நாகராஜின் மதிப்பு தெரியாமல் சாதாரணமாகப் பேசி நாகராஜுக்குக் கோபமோ வருத்தமோ வந்து விட்டால் என்ன செய்வது என்ற சந்தேகம் வந்துவிட்டது. அவன் இந்த மனக்குழப்பத்தில் இருக்கிற போது வேலாயுதம் அவனை அழைத்து அவர்கள் வீட்டுக்கு ஒரு நாள் அதிகாலை திருடர்கள் வந்து விட்டுப் போயிருப்பதாகவும், அது நாகராஜுக்குத் தெரிந்தாலும் தெரியாத மாதிரி நடிக்கின்றான் என்றும் சொல்லி  நீ பேச்சோட பேச்சா நான் அந்த திருடர்கள் வந்துட்டு போனதைச் சொல்லி புலம்பிகிட்டே இருக்கேன்னு சொல்லிப் பாரு. அவன் என்ன சொல்றான்னு  வந்து என்கிட்ட சொல்லுஎன்றார்.

அவரிடம்சரியான சந்தர்ப்பம் கிடைத்தால் சொல்கிறேன்என்று சொன்னாலும் அதையெல்லாம் நாகராஜிடம் கேட்பதில்லை என்று தீபக் முடிவு செய்திருந்தான். அதை அவன் தர்ஷினியிடம் சொல்லவும் செய்தான். “உன் தாத்தா சொல்றதை எல்லாம் நான் அவர் கிட்ட சொல்லிகிட்டிருந்தா அவர் நாளைலயிருந்து என்னை பக்கத்துலயே விட மாட்டார்.”

தர்ஷினியும் சொன்னாள். “தாத்தாவுக்குப் பைத்தியம் முத்திடுச்சு. அவரைக் கண்டுக்காதே. ஒரு சின்ன ரத்தினக்கல் காணோமாம். அதுக்கு அவர் பண்ணற ஆர்ப்பாட்டம் தாங்கல. இதுல எங்கப்பாவையும் சேர்த்துக்கறார். எதோ முழு சொத்தே போயிடுச்சுங்கற மாதிரி ரெண்டு பேரும் டென்ஷன் ஆறாங்க

அவளே கண்டு கொள்ள வேண்டாம் என்று சொன்னதால் தீபக் அவர் சொன்னதை  மனதிலிருந்து முற்றிலுமாக அகற்றி விட்டான்.  ஆனால் அம்மா ஏதாவது தவறாகச் சொன்னால் அதைப் பெருந்தன்மையோடு மன்னிக்க வேண்டும் என்று நாகராஜைத் தயார்ப்படுத்தி வைப்பது நல்லது என்று உள்ளுணர்வு சொல்லிக் கொண்டே இருந்ததால் ஞாயிற்றுக்கிழமை வாக்கிங் போகும் போது அவன் மெல்ல நாகராஜிடம் சொன்னான். “எங்கம்மா ரொம்ப புத்திசாலி. நல்லவங்க. ஆனா வெகுளி. அவங்க ஏதாவது பேசறதோ, சொல்றதோ மரியாதைக்குறைவு மாதிரி தோணினாலும் எனக்காக அவங்க மேல வருத்தப்படாதீங்க அங்கிள். ப்ளீஸ்

நாகராஜ் சிறிய புன்னகையுடன் சொன்னான். “எனக்கு நீயே பெரிய மரியாதை குடுத்து பேசற மாதிரி தோணலையே

தீபக் ஒரு கணம் திகைத்துப் பின் சிரித்து விட்டான். “என்ன அங்கிள் என்னை இப்படி காலை வாருறீங்க. என்ன கொஞ்சம் நச்சரிச்சிருப்பேன். அவ்வளவு தான். மரியாதை இல்லாம நான் நடந்திருக்கேனா. சொல்லுங்கஎன்று நாகராஜின் கைவிரல்களை இறுக்கிப் பிடித்துக் கொண்டே கேட்க நாகராஜ்எனக்கென்னவோ உன்னை விட உங்கம்மா மரியாதையா தான் நடந்துக்குவாங்கன்னு தான் தோணுது. அப்படி கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும் தீபக்கோட அம்மான்னு நான் விட்டுடறேன். சரிதானேஎன்றான்.

தீபக் நிம்மதியடைந்து சொன்னான். “அது போதும் அங்கிள்.... நாங்க மூனு பேரும் இன்னைக்கு காலைல பன்னிரண்டு மணிக்கே தர்ஷினி வீட்டுக்கு வந்துடுவோம். மதிய சாப்பாடு அங்கே தான்.  அங்கேயிருந்து அம்மா சரியா மூனு மணிக்கு வருவாங்க....”

அன்று நாகராஜின் வீட்டை எட்டும் முன்பே ஒரு குறுக்குத் தெருவில் தீபக் விடைபெற்றுக் கொண்டான். “அங்கிள் நான் இப்படியே போயிடறேன். பை. பை சுதர்ஷன் அங்கிள்

சுதர்ஷன் கேட்டான். “ஏன் இன்னைக்கு இங்கிருந்தே...?”

தர்ஷினியோட தாத்தா கிட்ட மாட்டினேன்னா பிடிச்சுக்குவார். எப்படியும் பன்னிரண்டு மணிக்கு வந்து அந்த ஆள் கிட்ட மாட்ட தான் போறேன். ஒரு நாளைக்கு ரெண்டு தடவை மாட்டிகிட்டா தாங்க மாட்டேன்.” என்று சொல்லி விட்டு அவன் குறுக்குத் தெருவில் தப்பிச் சென்றான்.

வேலாயுதம் நாகராஜும், சுதர்ஷனும் தனியாக வருவதையும், தீபக் உடன் இல்லாததையும் பார்த்து ஏமாந்து போனார். ’இன்னைக்குன்னு பாத்து ராஸ்கல் வாக்கிங்குக்கு போகாம இருந்துட்டானே. பையனுக்கு பொறுப்பும் அனுசரணையும் கம்மி தான்என்று மனதுக்குள் திட்டிக் கொண்டு நாகராஜுக்குச் சத்தமாககுட் மார்னிங்சொன்னார். 

நாகராஜ் வழக்கம் போல கையுயர்த்திகுட் மார்னிங்சொல்லியபடி தன் வீட்டுக்குள் நுழைந்தான்.

ன்று காலையிலிருந்தே சரத்தும் பெரும் மனக்கொந்தளிப்பில் இருந்தான். இன்றைய தினம் அமைதியாக ஆரம்பித்திருந்தும் அமைதியாக முடிவடையப் போவதில்லை என்று உள்ளுணர்வு அவனை எச்சரித்தது. ஒரு முடிவெடுத்த பிறகு அதை யாருக்காகவும் ரஞ்சனி மாற்றிக் கொள்பவள் அல்ல என்ற போதும்  அவனால் முயற்சி செய்யாமல் இருக்கவில்லை. குறைந்தபட்சம் நாகராஜ் பேச்சுக்கு ரஞ்சனி பெரிய முக்கியத்துவம் தராமல் இருந்தால் கூடப் போதும் என்று அவனுக்குத் தோன்றியது.

காலையில் மூவரும் டிபன் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது சரத் சொன்னான். “கல்யாண் வீட்ல அவன் செண்டிமெண்டா வெச்சிருந்த ஒரு ரத்தினக்கல்லைக் காணோமாம். பக்கத்து வீட்டு ஆள் நடவடிக்கையும் கொஞ்சம் சந்தேகம் வர்ற மாதிரி இருக்குன்னு சொல்றான்...”

தீபக் கடுங்கோபத்துடன் சொன்னான். “ஏம்ப்பா உங்க ஃப்ரண்டுக்கும் அவங்கப்பாவுக்கும் மூளையே கிடையாதா? ஒரு தடவை அவரைப் பார்க்கறதுக்கு அஞ்சு லட்சம் வாங்கறார். ஒரு நாளைக்கு அவர் நூறு பேரைப் பார்க்கணும்னாலும் அஞ்சஞ்சு லட்சம் குடுத்து அவரைப் பாக்க ஆள் இருக்கு. அவர் மனசு வெச்சா ஒரு நாளைக்கு கோடி கோடியாவே சம்பாதிக்கலாம். பல கோடி ரூபாய்ல வடநாட்டுல எத்தனையோ தர்மம் பண்றாரு. பெருந்தன்மையா இன்னைக்கு அம்மாவைப் பார்க்கறதுக்கு காசு கூட அவர் வாங்கலை.  அவரைப் போய் இப்படி சொல்ல அவங்களுக்கு வெக்கமா இல்லையா?”

சரத் எச்சிலை முழுங்கி விட்டு பலவீனமான குரலில் சொன்னான். “பணத்துக்காக அவன் செஞ்சிருப்பான்னு அவங்க சொல்லலை. அந்த ஆளோட செய்கை எல்லாம் மூடுமந்திரமா இருக்கு. மனசுல எதையோ வெச்சுட்டு தான் கோயமுத்தூர் வந்திருக்கான்னு அவங்க நினைக்கிறாங்க

தீபக் கோபம் குறையாமல் சொன்னான். “அவர் பாவம் சிவனேன்னு தன் வேலையைப் பார்த்துகிட்டு இருக்காரு. அந்த ஆள் கிட்ட பேசிப்பழகணும், ஏதாவது லாபமடையணும்னு ரெண்டு பேரும் ரொம்பவே முயற்சி பண்ணினாங்க. முடியாம போனவுடனே வாய்க்கு வந்த மாதிரி பேசறாங்க. அதை எல்லாம் கேட்டுட்டு வந்து நீங்களும் இங்கே சொல்றீங்க. கொஞ்சம் சும்மா இருங்கப்பா

தீபக் இந்த அளவு கோபப்பட்டு இதுவரை இருவரும் பார்த்ததில்லை. சிறிது நேரம் மௌனமாகச் சாப்பிட்டார்கள். சரத்துக்கு ஏனோ இவனது கோபம் இன்று வெடிக்கப் போகும் எரிமலைக்கு ஆரம்ப அறிகுறியாகத் தோன்ற ஆரம்பித்தது....

(தொடரும்)
என்.கணேசன்   



2 comments:

  1. Eagerly waiting for Nagarajan-Ranjani meeting.

    ReplyDelete
  2. அடுத்த வாரம் ஒரு மிகப்பெரிய உண்மை வெளிவர போகின்றது...

    ReplyDelete