என்.கணேசன்
தன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.
என்.கணேசன்
ஆம்பி குமாரன் பரம திருப்தியான மனநிலையில் இருந்தான். எல்லாமே
அவன் எதிர்பார்த்ததற்கும் மேலாகவே நன்றாக நடப்பது போல் அவனுக்குத் தோன்றியது. அலெக்ஸாண்டரின் பரிசுப் பொருள்கள் முதல் சந்திப்பிலேயே
நிறைய அவனுக்குக் கிடைத்திருந்த போதிலும் தட்சசீலம் வந்து சேர்ந்த பிறகு விருந்தினர்
மாளிகையில் ஆம்பி குமாரன் செய்திருந்த சிறப்பான ஏற்பாடுகளைப் பார்த்து விட்டு மேலும்
தாராளமாகப் பரிசுகள் தந்தான். அலெக்ஸாண்டரிடம் இருந்த மிகச்சிறந்த போர்க்குதிரைகளைப்
பார்த்து ஆம்பி குமாரன் வியந்ததைக் கண்டு உடனே முப்பது போர்க்குதிரைகளைப் பரிசாகத்
தந்தான். பரிசாகக் கிடைத்த மற்ற பொருள்களைக் காட்டிலும் அந்தப் போர்க்குதிரைகள் ஆம்பி
குமாரனின் மனதைக் குளிர்வித்தன. அலெக்ஸாண்டருடைய தாராளத்தைப் பார்த்து ஆம்பி குமாரன்
இவனை நட்பாக்கிக் கொள்ளத் தானெடுத்த முடிவு சரியானது தான் என்று மிகச் சந்தோஷமாக எண்ணிக்
கொண்டான்.
சசிகுப்தன் அலெக்ஸாண்டருடன்
வந்திருப்பது பல விஷயங்களைச் சுலபமாக்கி இருந்தது. அலெக்ஸாண்டரின் தேவைகளையும், அவன்
மனநிலைகளையும் மிகத் தெளிவாக அறிந்திருந்த சசிகுப்தன் அவற்றை ஆம்பி குமாரனிடம் தெரிவித்ததால்
அலெக்ஸாண்டருக்கு எந்தக் குறையும் இல்லாமல் ஆம்பி குமாரனால் பார்த்துக் கொள்ள முடிந்தது.
அத்தோடு அலெக்ஸாண்டரின் பல பரிமாணங்களையும் ஆம்பி குமாரனால் அறிந்து கொள்ள முடிந்தது.
அலெக்ஸாண்டர் போர் நுணுக்கங்களை ஆழமாகத் தெரிந்து வைத்திருந்தது போலவே வாழ்க்கையின் போகங்களையும் ஆழமாக அனுபவிக்கத் தெரிந்து வைத்திருந்தான். அதே நேரத்தில் எதிலிருந்தும் எப்போது வேண்டுமானாலும் விலக முடிந்த வித்தையும் அவனுக்கு மிக நன்றாகத் தெரிந்திருந்தது. அதே போல வழிபாடுகளிலும் கூட அவனுக்கு முழுமையான ஈடுபாடு இருந்தது. தன் வெற்றிகளுக்காக தட்சசீலத்தில் வழிபாடுகளை அவன் நடத்தினான். யவனர்களின் வித்தியாசமான வழிபாட்டு முறைகளை ஆம்பி குமாரன் அப்போது தான் பார்க்கிறான்.
அந்த
வழிபாடுகளை எல்லாம் முடித்து விட்டு அலெக்ஸாண்டர் ஆம்பி குமாரனிடம் கேட்டான். “நண்பா
நாமிருவரும் இணைந்து விட்டோம். வீரர்கள் இணைந்த பின் அடுத்து செய்ய வேண்டியது பராக்கிரமங்களையே
அல்லவா? எங்கிருந்து ஆரம்பிக்கலாம்?”
ஆம்பி
குமாரன் இந்த ஒரு கேள்விக்காகத் தான் காத்திருந்தான். கேகய நாட்டுடன் தீர்க்க வேண்டிய
ஒரு பழைய கணக்கு அவனுக்கும் இன்னும் பாக்கியிருக்கிறது. அதைத் தீர்க்க வேண்டும். அதற்கு
இது மிகநல்ல சந்தர்ப்பம். “அருகில் கேகய நாடு இருக்கிறது நண்பா. அங்கே பெருஞ்செல்வம்
கொட்டிக் கிடக்கிறது……”
காந்தாரத்தில் நடக்கும் நிகழ்வுகள்
குறித்த தகவல்கள் கேகய நாட்டுக்குத் தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருந்தன. கேகய மன்னர்
புருஷோத்தமன் அந்தத் தகவல்களில் கவலையடைந்து விடவில்லை. அவர் தன் அமைச்சர் இந்திரதத்திடம்
சொன்னார். ”ஆம்பி குமாரன் அந்த யவன அரசனிடம் தன் நாட்டை அடகு வைத்து விட்டான்.. இது
அவன் தந்தை உயிரோடு இருந்திருந்தால் கண்டிப்பாக நடந்திருக்காது. அவர் வீரமும்,
தன்மானமும் உள்ள மனிதர். இருக்கட்டும். இது ஆம்பி குமாரனின் தனிப்பட்ட விஷயம்….”
இந்திரதத்
கவலையுடன் சொன்னார். “ஆனால் யவன அரசன் அலெக்ஸாண்டர் காந்தாரத்தோடு நிற்க மாட்டானே.
அடுத்தது நம்மிடமும் அவன் வராமலிருக்க மாட்டானே? அவன் வரும் போது அவனுடன் ஆம்பி குமாரனுமல்லவா
சேர்ந்து கொள்வான்?”
புருஷோத்தமன்
இந்திரதத்தை வியப்புடன் பார்த்தார். “நீ நம் படை வலிமையைச் சந்தேகிக்கிறாயா இந்திரதத்?
எத்தனை பெரிய படை வந்தாலும் அதைச் சந்திக்கக்கூடிய வலிமையோடல்லவா நாம் இருக்கிறோம்?
நீயே கவலைப்படுவது நம்மைக் குறைத்து மதிப்பிடுவது போல அல்லவா இருக்கிறது?”
இந்திரதத்
சொன்னார். “நம் வலிமை மீது எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை அரசே. யவனப்படையும் காந்தாரப்
படையும் இணைந்து வந்தாலும் சந்திக்கும் வலிமையுடன் தான் நாம் இருக்கிறோம். அதே நேரத்தில்
எதிரியைக் குறைத்து மதிப்பிடுவதும் சரியல்லவே. அலெக்ஸாண்டரின் படை வலிமையை விட போர்த்
தந்திரங்களில் அவன் யுக்திகள் சிறந்தவை என்று சொல்கிறார்கள்”
புருஷோத்தமன்
கேட்டார். “நாமும் அறிவில் சளைத்தவர்கள் இல்லையே இந்திரதத்? எல்லா யுக்திகளையும் அனுமானிக்க
முடிந்த அறிவு நம்மிடம் இல்லையா என்ன?”
இந்திரதத்
பதில் ஏதும் சொல்லத் தயங்கினார். உண்மையில் அவருக்கு அந்தச் சந்தேகம் ஆரம்பத்திலிருந்தே
இல்லை. ஆனால் விஷ்ணுகுப்தர் அலெக்ஸாண்டரைப் பற்றிச் சொன்னதை அவரால் அலட்சியம் செய்ய
முடியவில்லை. அவருக்கு அலெக்ஸாண்டரைப் பற்றித் தெரியா
விட்டாலும் விஷ்ணுகுப்தரைத் தெரியும். அவர் வெற்று வார்த்தைகளையோ, அரைகுறை அனுமானங்களையோ
சொல்பவர் அல்ல. அவர் சொன்ன வார்த்தைகள் இப்போதும் இந்திரதத் காதுகளில் ரீங்காரம் செய்கின்றன.
”அலெக்ஸாண்டரின்
போர் யுக்தியையும், தந்திரத்தையும் தான் உன்னிடம் எச்சரிக்கிறேன். போரிடப்
போகும் இடங்களைப் பற்றி முழுவதுமாகவும் தெளிவாகவும் அறிந்து கொள்ளாமல் அலெக்ஸாண்டர்
போருக்குப் போவதில்லை. என் கணிப்பு
சரியாக இருக்குமானால் இங்கே வருவதற்கு முன்பும் அதை மனதில் தெளிவுபடுத்திக் கொண்ட பிறகு
தான் வருவான். போரில் உங்கள் அனுபவத்தை விட அவனுடைய அனுபவம் அதிகம் இந்திரதத். அவன் அறிவின்
விசாலம் உங்களை வெல்லும் வழியை அவனுக்குக் காண்பிக்காமல் இருக்க வழியில்லை. ஏனென்றால்
உங்களைப் போல் எத்தனையோ எதிரிகளைப் பார்த்து, வென்று
விட்டு வந்து கொண்டிருப்பவன் அவன். அவன் இது வரை தோல்வியே
கண்டறியாதவன் என்று சொல்கிறார்கள். ஆம்பி குமாரனின்
உதவியும் அவனுக்கு இருக்குமானால் அவனுக்கு கேகய நாடு எளிமையாகவே இருக்கும்”
ஆனால் நண்பர் சொன்னதை
அவர் அப்படியே மன்னரிடம் சொல்ல முடியாது. இந்திரதத்
மிகவும் கவனமாகச் சொன்னார். “நம்மிடம் அந்த அறிவு இல்லாமல் இல்லை அரசே. ஆனால் அலெக்ஸாண்டரும்
பல நாடுகளை வென்ற அனுபவம் இருப்பவன் அவன் இது வரை தோல்வியே காணாதவன் என்றும் சொல்கிறார்கள்.
அதனால் அவனைக் குறைத்து மதிப்பிடும் தவறை நாம் செய்துவிடக்கூடாது என்று தான் எண்ணு,கிறேன்”
புருஷோத்தமன்
சேனாதிபதியைப் பார்த்தார். ”என்ன சேனாதிபதி. அலெக்ஸாண்டரும் ஆம்பி குமாரனும் சேர்ந்து
படையுடன் வந்தால் சக்தியிலும், யுக்தியிலும் நாம் அவர்களுக்குக் குறைந்து விடுவோமா
என்ன?”
சேனாதிபதி
சொன்ன பதிலில் இந்திரதத்தின் மனம் தங்கவில்லை. மகதம் சென்ற விஷ்ணுகுப்தர் இன்னும் திரும்பி
வரவில்லை. கண்டிப்பாக தனநந்தனை அவர் கண்டு பேசியிருப்பார். அவன் என்ன சொன்னான் என்று தெரியவில்லை. சொன்ன பதில்
சாதகமாக இருந்திருந்தால் விஷ்ணுகுப்தர் மிக விரைவாக இங்கே வந்து சொல்லியிருப்பார்.
சொல்லக்கூடிய நல்ல செய்தியாக இருந்திராதது தான் அவர் வரும் வேகத்தைக் குறைத்திருக்க
வேண்டும். நண்பரை எண்ணுகையில் அவருக்கு மனம் வலித்தது. சுய மரியாதை மிக்க மனிதர் அவர்.
தனக்காக எதையும் யாரிடமும் கேட்கத் துணியாதவர். அப்படி உதவி கேட்பதை விட இறப்பது கௌரவம்
என்று நினைக்கக்கூடிய மனிதர் அவர். அப்படிப்பட்டவர் பாரதம் அன்னியர் வசம் போய்விடக்கூடாது
என்ற தேசபக்தி காரணமாக தந்தையைக் கொன்றவனாக
இருந்தாலும், முன்பே அவமதித்தவனாக இருந்தாலும் தனநந்தனிடம் உதவி கேட்கப் போயிருந்தார்….
”விஷ்ணு. இந்தப் பாரதம் உன்னை ஈன்று பெருமை அடைந்திருக்கிறது. ஆனால் நீ பயப்பட்டது
நடந்து விட்டது. அலெக்ஸாண்டர் பாரதத்தின் உள்ளே நுழைந்து விட்டான். இனி என்ன நடக்குமோ?”
“யவன
மன்னர் அலெக்ஸாண்டரிடமிருந்து ஒரு தூதன் வந்திருக்கிறான் அரசே. தங்கள் அனுமதி வேண்டி
வாயிலில் நிற்கின்றான்.” என்று வாயிற்காவலன் மன்னரிடம் சொல்வது காதுகளில் விழ இந்திரதத்
கவனம் நிகழ்காலத்துக்குத் திரும்பியது.
“உள்ளே
அனுப்பு” என்று புருஷோத்தமன் சொன்னார்.
சிறிது
நேரத்தில் யவன் தூதன் உள்ளே வந்து தலைவணங்கிச் சொன்னான். “கேகய மன்னரை, மன்னர் மாவீர்ர்
அலெக்ஸாண்டரின் தூதனாகிய நான் வணங்குகிறேன்.”
வலது
கையை உயர்த்தி ஆசி தெரிவித்த புருஷோத்தமன் சொன்னார். “சொல் தூதனே. என்ன செய்தி கொண்டு
வந்திருக்கிறாய்?”
தூதன்
மறுபடி தலைவணங்கி விட்டுச் சொன்னான். “மன்னர் மாவீர்ர் அலெக்ஸாண்டர் தலைமையை தங்கள்
அண்டை நாடான காந்தாரத்தின் அரசர் ஏற்றுக் கொண்டதைத் தாங்கள் அறிந்திருப்பீர்கள் என்று
நம்புகிறேன். மாவீரர் அலெக்ஸாண்டர் தங்களையும் சந்திக்க விரும்புகிறார்.”
புருஷோத்தமன்
சொன்னார். “கண்டிப்பாகச் சந்திப்போம் என்று உன் மன்னரிடம் சென்று சொல் வீரனே. ஆம்பி
குமாரனைப் போல் அடிமையாக அலெக்ஸாண்டரைச் சந்திப்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஒரு வீரனாகப்
போர்க்களத்தில் சந்திப்போம் என்று போய்ச் சொல்”
அந்தப்
பதிலில் யவன தூதன் எந்த உணர்ச்சியும் காட்டவில்லை. “அப்படியே ஆகட்டும் கேகய மன்னரே”
என்று சொல்லித் தலைவணங்கி விட்டு அங்கிருந்து வெளியேறினான்.
(தொடரும்)
என்.கணேசன்