தன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.
Monday, October 31, 2022
யாரோ ஒருவன்? 110
Sunday, October 30, 2022
Thursday, October 27, 2022
சாணக்கியன் 28
அலெக்ஸாண்டரின் கேள்விக்குப் புன்னகையுடன் சசிகுப்தன் பதில் சொன்னான். ”சக்கரவர்த்தி. அவன் அனுப்பிய தூதர் தங்களை வந்து சந்திக்கும் முன்பே தந்தை இறந்து விடுவார் என்று ஆம்பி குமாரன் உறுதியாக நம்பியிருக்கலாம். அவர் நோய்வாய்ப்பட்டு சாகும் தருவாயில் இருந்திருக்கலாம்.”
“ஒருவேளை அவர் இறக்கா
விட்டால்?”
“அவரைக் கொல்வது
என்று கூட ஆம்பி குமாரன் நினைத்திருக்கலாம். தானாக இறந்தால் சரி, இல்லா விட்டால் கிழவரைப்
படுக்கையிலேயே கொன்று விட ஆம்பிகுமாரனுக்கு அதிக நேரம் தேவைப்படாது. இயற்கை மரணமோ,
செயற்கை மரணமோ கண்டிப்பாகச் சம்பவிக்கும் என்று அவன் நிச்சயித்திருந்ததால் விரைவில்
அடுத்து நடக்க வேண்டியதைப் பார்ப்போம் என்று முடிவு செய்திருக்கலாம். இளவரசனாக அவன்
தங்களுக்குத் தகவல் அனுப்பியிருந்தால் அதற்குத் தாங்கள் அதிக முக்கியத்துவம் தர மாட்டீர்கள்
என்று நினைத்திருக்கலாம்...”
அலெக்ஸாண்டருக்கு
சசிகுப்தனின் பதில் சரியாகத் தான் தோன்றியது. அவனுக்கு சசிகுப்தனைப் பிடித்திருந்தது. படை வலிமை
பெரிதாக இல்லா விட்டாலும் பிழைக்கத் தெரிந்தவன். அவன் தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களைத்
துல்லியமாகத் தெரிந்து வைத்திருந்தான். அது மட்டுமல்லாமல் அதை வைத்து முடிவெடுப்பதிலும்
அவன் கெட்டிக்காரனாகத் தெரிந்தான். அதனால் தான் பாரசீக மன்னர் பக்கம் சாய்வதற்குப்
பதிலாக அவன் அலெக்ஸாண்டர் பக்கம் சாய்ந்திருக்கிறான். இங்கு தங்க வைத்து அலெக்ஸாண்டரை
உபசரிப்பதிலும் அவன் ஒரு குறையும் வைக்கவில்லை....
அலெக்ஸாண்டர் கேட்டான். “ஆம்பி குமாரனை நீ சந்தித்திருக்கிறாயா?
அவன் எப்படிப்பட்டவன் சசிகுப்தா?”
“நான்கைந்து வருடங்களுக்கு
முன்பு ஒரு முறை தட்சசீலத்துக்குச் சென்றிருந்த போது ஆம்பி குமாரனை நான் சந்தித்திருக்கிறேன்
சக்கரவர்த்தி. அவன் வீரன். அந்தச் சமயத்தில் அவனிடம் அறிவுகூர்மையையோ, மனப்பக்குவத்தையோ
என்னால் பார்க்க முடிந்திருக்கவில்லை. தட்சசீலக் கல்விக்கூடம் மிகவும் பிரசித்தி பெற்றது.
அங்கு சிறிது காலத்திற்கு மேல் அவனை வைத்திருக்க முடியாமல் அனுப்பி விட்டதாகக் கேள்வி.
எது எப்படியோ அவன் அதிகம் படிக்கவில்லை காலம் அவனை இப்போது மாற்றியிருக்கலாம். அவன்
தந்தையும், கேகய மன்னரும் நல்ல நண்பர்களாக இருந்தார்கள் என்றாலும் அவனுக்கு அந்த அண்டை
நாட்டுடன் நல்லுறவு இருக்கவில்லை. அவனாலேயே இரண்டு நாடுகளுக்கும் இடையே சின்னச் சின்னப்
பிரச்னைகள் இருந்து வந்திருக்கின்றன. சில நாட்களுக்கு முன்பு கூட கேகய நாடு தட்சசீலத்திற்குப்
படையை அனுப்பி ஆம்பிகுமாரனைக் கண்டித்திருக்கிறது என்பதை வணிகர்கள் மூலம் அறிந்தேன்.
அந்தச் சமயம் பார்த்து அவனுடைய சேனாதிபதி சின்ஹரன்
என்பவன் ஒரு தாசியோடு நாட்டை விட்டு ஓடிப் போய் விட்டதாகவும் கேள்விப்பட்டேன்....”
அலெக்ஸாண்டர் கிட்டத்தட்ட
இந்தத் தகவல்களை எல்லாம் பலரிடம் கேட்டு முன்கூட்டியே அறிந்திருந்தான். சசிகுப்தன் அத்தனையும் அறிந்திருந்தது அவன் மீது
அலெக்ஸாண்டருக்கு இருக்கும் அபிப்பிராயத்தை மேலும் உயர்த்தியது.
”அப்படியானால் இன்னேரம்
அவன் காந்தார அரசனாகியிருப்பான் என்று நீ நினைக்கிறாயா சசிகுப்தா”
“ஆம் சக்கரவர்த்தி.
இன்னும் சில நாட்களில் நமக்குக் கண்டிப்பாக அந்தச் செய்தி கிடைக்கும் என்றும் நம்புகிறேன்...”
சசிகுப்தன் சொன்னபடியே மூன்றாவது நாள் காந்தார அரசர் இறந்து போன செய்தி
அவர்களுக்கு வந்து சேர்ந்தது. சசிகுப்தனின் யூகப்படியே ஆம்பி குமாரன் தந்தை இறப்பதற்கு
இரண்டு அல்லது மூன்று நாட்கள் முன்னமேயே தன் தூதனை அனுப்பியிருக்க வேண்டும் என்பதையும்
அவர்களால் கணக்கிட முடிந்தது. ஆம்பி குமாரன்
அரசனாவதற்கு முன்னமேயே தன்னிடம் நட்பு பாராட்ட ஆசைப்பட்டு விரைந்து தூதனுப்பியது அலெக்ஸாண்டருக்கு
நல்ல சகுனமாகவே தோன்றியது.
இமயமலையின் தென்பகுதியில்
செல்வச்செழிப்பு மிக்க பகுதிகள் நிறைய இருப்பதாகக் கேள்விப்பட்டிருந்த அலெக்ஸாண்டருக்கு
ஆம்பி குமாரனின் அழைப்பு அந்தச் செல்வத்தை எடுத்துப் போக விடுத்த அழைப்பாகவே தோன்றியது.
அந்தச் செல்வம் மட்டும் அந்தப் பகுதியை நோக்கி அவனை ஈர்க்கவில்லை. அந்தப் பகுதியில்
நிறைய சக்தி வாய்ந்த துறவிகள் இருப்பதாகவும் அலெக்ஸாண்டர் கேள்விப்பட்டிருக்கிறான்.
அவர்களையும் சந்தித்துப் பேச அலெக்ஸாண்டர் ஆவலாக இருந்தான். அத்தனை சக்திகள் இருந்தும்
அவற்றைப் பயன்படுத்தாமல் துறக்க முடிந்த அந்த மனவலிமை அவனை ஆச்சரியப்பட வைத்தது. புறச்
செல்வத்தோடு அகச்செல்வத்தையும் அங்கிருந்து பெற்று எடுத்து வர வேண்டும்.......
அலெக்ஸாண்டர் தன்
ஆலோசகர்களுடன் கலந்தாலோசித்து விட்டு ஆம்பிகுமாரனுக்குத் தன் தூதன் மூலம் பதில் அனுப்பி
வைத்தான். அதன் மறுநாளே தன் படையோடு பாக்ட்ரியாவை
விட்டுக் கிளம்பினான்.
மகதநாட்டின் பிரதம அமைச்சர் ராக்ஷசர் தன்
முன் வந்து நின்ற ஒற்றனைக் கேள்விக்குறியுடன் பார்த்தார்.
“பல வருடங்களுக்கு
முன் நம் அரசவையில் வந்து பேசி அரசரைக் கோபமூட்டிச் சென்ற தட்சசீல ஆசிரியர் விஷ்ணுகுப்தர்
மறுபடியும் பாடலிபுத்திரம் வந்திருக்கிறார் பிரதம அமைச்சரே.”
ராக்ஷசர் ஆச்சாரியர்
விஷ்ணுகுப்தரை மறந்தே போயிருந்தார். ஒற்றன் சொன்னவுடன் பழையவற்றை நினைவுபடுத்திக் கொண்ட
அவர் நெற்றி சுருங்கியது. “எப்போது வந்தார்? எங்கே தங்கியிருக்கிறார்?”
“இன்று மாலையில்
தான் வந்தார் பிரதம அமைச்சரே. வந்தவர் முன்பு தங்கிய அதே பயணியர் விடுதியில் தான் தங்கியிருக்கிறார்.
சிறிது நேரம் பயணியர் விடுதியில் ஓய்வு எடுத்துக் கொண்டார். பிறகு முன்பு ஒரு ஏழை வீட்டுக்குச்
சென்று ஒரு சிறுவனை அழைத்துச் சென்றாரல்லவா, அந்தச் சிறுவனின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்”
ராக்ஷசர் கேட்டார்.
“அந்தச் சிறுவனும் உடன் இருக்கிறானா?”
“இல்லை பிரதம அமைச்சரே.
அவர் தனியாகத் தான் வந்திருக்கிறார். இப்போது அவர் அந்த வீட்டுக்குச் சென்றிருப்பதும்
தனியாகத் தான்”
“சரி. அவர் இந்த
நகரை விட்டுச் செல்லும் வரை அவரைக் கண்காணித்துக் கொண்டிரு. அவர் நடவடிக்கைகளை எனக்குத்
தெரிவித்துக் கொண்டிரு...”
நல்ல வேளையாக இப்போது அறிஞர்கள் கூட்டம் எதுவுமில்லை. ஒரு முறை அவமானப்பட்டுச் சென்றதால் அப்படி அறிஞர்கள் கூட்டம் நடைபெற்றாலும் அதில் விஷ்ணுகுப்தர் கலந்து கொள்ள மாட்டார் என்று தோன்றினாலும் அறிஞர்கள் கூட்டம் எதுவுமில்லை, அதனால் தனநந்தனும் விஷ்ணுகுப்தரும் சந்திக்கும் வாய்ப்பு எதுவுமில்லை என்றெல்லாம் கணக்கிட்டு ராக்ஷசர் கூடுதல் நிம்மதி அடைந்தார். மறுநாள் நடக்கப் போகும் நிகழ்வுகளை அறிய முடிந்திருந்தால் அந்த நிம்மதி காணாமல் போயிருக்கும். சில சமயங்களில் விதி முன்கூட்டியே சிலவற்றைத் தெரிவிக்காமல் கூடுதலாகச் சிறிது காலம் மனிதர்கள் நிம்மதியாக இருக்க அனுமதிக்கிறது...
விஷ்ணுகுப்தர் மூராவிடமும், அவளுடைய தமையனிடமும் சந்திரகுப்தன்
என்னவெல்லாம் கற்றுத் தேர்ந்திருக்கிறான் என்பதையும், அதில் எப்படியெல்லாம் முன்னேற்றம்
கண்டிருக்கிறான் என்பதையும் விவரித்துச் சொல்லச் சொல்ல அவர்கள் முகங்களில் எல்லையில்லாத
ஆனந்தம் தெரிந்தது. மூரா கண்கள் நன்றி மிகுதியில் கலங்கின. அவள் கைகூப்பியபடி சொன்னாள்.
”இந்தக் கடனை நாங்கள் எப்போது தீர்ப்போம் என்று தெரியவில்லை ஆசிரியரே”
“அவனை என்னோடு நம்பிக்கையோடு
அனுப்பி வைத்ததற்காக நானும் தங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் தாயே. எத்தனையோ
பிள்ளைகளுக்கு நான் ஆசிரியராக இருந்திருக்கிறேன். ஆனால் சந்திரகுப்தனைப் போன்ற ஒரு
மாணவன் எனக்கு இது வரை கிடைத்ததில்லை. எதிர்காலத்தில் இனி ஒருவன் கிடைப்பான் என்ற நம்பிக்கையும்
எனக்கில்லை....” விஷ்ணுகுப்தர் ஆத்மார்த்தமாகச் சொன்னார்.
“பெருந்தன்மையுடன்
பெரிய பெரிய வார்த்தைகளைச் சொல்கிறீர்கள் ஆசிரியரே. தங்களைச் சந்திக்காமல் இருந்திருந்தால்
என் மகன் இப்போதும் மாடு மேய்த்துக் கொண்டிருப்பான். நீங்கள் சொல்கின்ற இத்தனை பெருமைகளையும்
என் மகன் அடைந்திருக்க மாட்டான்.... “
விஷ்ணுகுப்தர் கனிவாகச்
சொன்னார். “தகுதிகளைக் கொடுக்கும் இறைவன் அவற்றைப் பயன்படுத்தும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக்
கொடுக்காமல் இருப்பதில்லை தாயே.”
சந்திரகுப்தனின்
தாய்மாமன் குரலடைக்கச் சொன்னார். “தகுதிகளைக் கண்டுபிடிக்கும் தகுதி கூட எங்களுக்கிருக்கவில்லை
ஆசிரியரே. கனவிலும் நாங்கள் அவனுக்கு எண்ணியும் பார்த்திருக்காத உயர்வு இது...”
“ஐயா. உங்களிடம்
நான் சொல்லியிருப்பது அவன் மூலதனமாக உருவாக்கி இருப்பதை மட்டும் தான். அந்த மூலதனத்தை
வைத்து அவன் என்ன உயர்வெல்லாம் அடைகிறான் என்பது உங்களால் இப்போதும் கற்பனையாலும் யூகிக்க
முடியாது என்பதை உறுதி கூறுகிறேன்...”
இருவருக்கும் நிஜமாகவே
எதையும் கற்பனையாலும் எண்ணிப் பார்க்க முடியவில்லை. ஏதோ ஒரு வேலையாக பாடலிபுத்திரம்
வந்திருப்பதாய் விஷ்ணுகுப்தர் சொல்லியிருந்தார்.
தாய்மாமன் கேட்டார்.
“தாங்கள் எத்தனை நாட்கள் இங்கிருப்பீர்கள் ஆசிரியரே”
“நாளை மாலைக்குள்
கிளம்பி விடுவேன்”
மூரா கேட்டாள்.
“சந்திரகுப்தனை நான் எப்போது மறுபடியும் காண முடியும் ஆச்சாரியரே?”
“ஓரிரு வருடங்களில்
காண முடியும் தாயே.... உங்கள் மகனிடம் நீங்கள் அனுப்பிய செய்தியாக என்ன சொல்லட்டும்
தாயே”
“அவன் கற்ற கல்விக்கும்,
அவன் அடைந்திருக்கும் முன்னேற்றத்திற்கும் அவன் தாய் பெருமைப்படுகிறாள் என்று சொல்லுங்கள்
ஆசிரியரே. அவன் வருகைக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறாள் என்பதையும் சொல்லுங்கள்”
(தொடரும்)
என்.கணேசன்
(அல்லது)
நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் ரிஜிஸ்டர் தபால் அல்லது குரியர் மூலமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பே, போன் பே, மற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம். (ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)
நூல்களின் குறிப்பு மற்றும் விலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் - என்.கணேசன் நூல்கள்
அக்கவுண்ட் விவரங்கள் -
G-pay UPI ID : gshubha1968@oksbi
Phonepe UPI ID: nganeshanbooks@ybl
வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch
IFSC Code DBSS0IN0188
A/c No.0188386000001146
தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.
நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும்.