சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, October 24, 2022

யாரோ ஒருவன்? 109


ரத் கல்யாணிடம் மறுபடியும் குழப்பத்துடன் கேட்டான். “நீ சொன்ன மாதிரி அவன் இங்கே குடி வந்த பிறகு தான் நமக்கு மொட்டைக் கடுதாசி வந்துருக்கு. ஆனா நாகராஜை நாம இதுக்கு முன்னாடி பார்த்தது கூட இல்லையே. அப்படியிருக்கறப்ப அவனுக்கு ஏன் நம்ம மேல பகை?”

அது தான் தெரியல. இன்னொன்னையும் நீ யோசிச்சுப் பாரு. அந்த ரா அதிகாரியும் அப்பறமா தான் வந்தான். அந்த ரா அதிகாரி அடிக்கடி போய் நாகராஜைப் பார்க்கவும் செய்யறான். அவனுக்கும் நாகராஜுக்கும் எதுவும் சம்பந்தம் இருக்கற மாதிரி தெரியலை. ஆனாலும் அது நடக்குது. ஏன்?”

கல்யாண் கேட்ட போது அதுவும் சரத்துக்குச் சரியான சந்தேகமாகவே தோன்றியது. சிறிது யோசித்து விட்டு கவலையுடன் சொன்னான். “நிலைமை இப்படி இருக்கறப்ப ரஞ்சனி வேற ஞாயிற்றுக்கிழமை அவனைப் பார்த்து எதோ கேட்கப் போறா. அவன் என்ன சொல்வானோன்னு பயமா இருக்கு

கல்யாண் சரத்தைக் கேட்டான். “ரஞ்சனி அவன் கிட்ட என்ன கேட்கப் போறாள்னு உன் கிட்ட சொன்னாளா?”

சரத் சொன்னான். “இல்லை. தீபக் அந்தக் கேள்வியைக் கேட்டப்ப அதையெல்லாம் உன் கிட்ட சொல்ல மாட்டேன். அது என் தனிப்பட்ட விஷயம்னு சொல்லிட்டா. அதனால பிறகு நான் எதுவும் கேட்கப் போகலை. ஆனா நான் ஏற்கெனவே சந்தேகப்பட்ட மாதிரி அவ மாதவனைப் பத்தி தான் என்னவோ கேட்கப் போகிறாள்...”

முன்பு சொன்னதையே கல்யாண் திரும்பவும் சொன்னான். “ஒருவிதத்துல ரஞ்சனி அவனைச் சந்திக்கறது நல்லதுன்னு தான் நான் நினைக்கிறேன். அவ என்ன கேட்கிறா, அவ கேட்கறதுக்கு அவன் என்ன பதில் சொல்றான்ங்கறத வெச்சி நாம அவனைப் பத்தி ஒரு முடிவுக்கு வர முடியும்

கல்யாண் தன் தனிப்பட்ட நஷ்டங்களுக்குப் படும் கவலையில் நூறில் ஒரு பங்கு கூட இதற்குப் படவில்லை என்பதைக் கவனித்த சரத் தானும் சிறிது தைரியம் அடைந்தான்.

கல்யாண் சொன்னான். “ஞாயிற்றுக் கிழமை மதிய சாப்பாட்டுக்கு என் வீட்டுக்கே மூனு பேரும் வந்துடுங்க. மேகலா கூட சொல்லிகிட்டே இருக்கா ஒரு நாள் உங்க மூனு பேரையும் சாப்பிடக் கூப்பிடணும்னு. ரஞ்சனி சாப்பிட்டதுக்கு அப்புறமா நாகராஜ் கிட்டே கேட்கப் போகட்டும்

சரத் சம்மதித்தான். கல்யாண் அவனிடம் கேட்டான். “அவள் கேட்கறப்ப அவள் கூட யாராவது போகலாமா இல்லை தனியாகத்தான் அவள் போகணுமா?”

நாகராஜ் என்ன சொன்னான்னு தெரியல. ஆனா ரஞ்சனி தனியாகத் தான் போகிறதா சொன்னா

கல்யாண் தன் அடுத்த கட்ட நடவடிக்கையை ரஞ்சனி நாகராஜ் வீட்டுக்குப் போய், அங்கே அவன் என்ன சொல்கிறான் என்பதைத் தெரிந்து கொண்டபின் தீர்மானிப்பது என்று முடிவு செய்தான். பிரச்சினைகளைப் பார்த்து பயந்து கொண்டே இருப்பதை விட நேரடியாகவே சந்திப்பது தான் புத்திசாலித்தனமாக அவனுக்குத் தோன்றியது.

ரேந்திரன் அஜீம் அகமது இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தான். அஜீம் அகமது பற்றி ஒரு புத்தகமே எழுதும் அளவுக்கு அவன் அறிந்து கொண்டிருந்ததால் சிறிய அலட்சியம் கூட அவனைப் பிடிக்கும் முயற்சியில் தோல்வியை ஏற்படுத்திவிடும் என்பதை அவன் நிச்சயமாய் அறிந்திருந்தான்.

அஜீம் அகமது அதிபுத்திசாலி மட்டுமல்ல, மிகவும் எச்சரிக்கை உணர்வுள்ளவனும் கூட. அவனுடைய புத்திசாலித்தனமே அவனை அதிக அலட்சியமில்லாதவனாக மாற்றி இருந்தது. அதே போல அவனுக்கு அசட்டுத்தனமான தைரியம் எல்லாம் கிடையாது. ’என்ன வருகிறது பார்த்து விடுகிறேன்என்ற நிலைப்பாட்டை அவன் என்றுமே எடுக்க மாட்டான். மிக மிகப் பாதுகாப்பான நிலைமையில் இருந்து கொண்டே தன் கூர்மையான அறிவால் காய்களை நகர்த்துவானேயொழிய முன்னணிக்கு வந்து யுத்தம் செய்பவனாக அவன் என்றுமே இருந்ததில்லை. சொல்லப் போனால் அவனுக்கு மறைமுகமாக ஆதரவு தருபவர்கள் ஆட்சியில் இல்லாத போதும் தற்போது அவன் இந்தியாவுக்கு வந்திருப்பதையே வழக்கத்துக்கு மாறாகச் செய்திருக்கும் ஒரு அபூர்வ தைரியமான நடவடிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

நரேந்திரன் அஜீம் அகமதைக் கண்டுபிடிக்க மூன்று இளைஞர்களைத் தேர்ந்தெடுத்திருந்தான். அந்த மூன்று இளைஞர்களும் கூர்மையான அறிவு உடையவர்கள். மிக தைரியமானவர்கள். வேலையில் உற்சாகமுள்ளவர்கள். அந்த மூன்று குணங்களும் தற்போதைய முயற்சியில் மிக முக்கியமானவை என்பதால் தான் அவர்களை நரேந்திரன் தேர்ந்தெடுத்திருந்தான்.

நரேந்திரன் அவர்களை அழைத்து அஜீம் அகமது பற்றிய முக்கியக்குறிப்புகள் எல்லாம் சொல்லி அவன் பல வேடங்களில் இருக்கும் புகைப்படங்களைக் காட்டினான். அஜீம் அகமது எந்த வேடம் போட்டாலும் அந்த வேடத்திற்குரிய சூட்சும நடவடிக்கைகளைக் கூட  தத்ரூபமாகப் பிரதிபலித்து அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடக்கூடியவன் என்பதையும் சொன்னான். அடுத்ததாய் இங்கே அஜீம் அகமதின் ஸ்லீப்பர் செல்களாகச் செயல்படும் மூன்று பேருடைய புகைப்படங்களைக் காட்டினான்.

அஜீம் அகமது யாரையும் சீக்கிரத்தில் நம்பி விடுகிறவன் அல்ல. அவனுடைய இயக்க ஆள்களே கூட அவனை லேசில் நெருங்கி விட முடியாது. அவன் நம்பித் தெளிந்த ஆட்களை மட்டும் தான் அவன் தன்னை ஓரளவாவது நெருங்க விடுவான். இந்த ஸ்லீப்பர் செல்கள் மூன்று பேர் அப்படிப்பட்ட ஆள்கள். இவர்கள் பிடிபட்டாலும் கூட எத்தனை சித்திரவதை செய்தாலும் அவனைக் காட்டிக் கொடுக்காதவர்கள். இவர்கள் மூவரும் கூட அவனைப் போலவே மிக எச்சரிக்கையானவர்கள். இவர்களில் ஒருவனுக்குக் கூட, தான் கண்காணிக்கப்படுகிறோம் என்ற சந்தேகம் வந்தால் போதும் அஜீம் அகமது உடனே தானிருக்கும் இடத்தை மாற்றி விடுவான். இந்தியா விட்டுப் போனாலும் போய் விடுவான்….”

இந்த மூன்று பேரும் சில நாட்களாக புறநகர்ப்பகுதி நோய்டாவில் அதிகம் காணப்படுகிறார்கள். அதனால் அஜீம் அகமது அங்கே தான் எங்கேயோ ஒளிந்து கொன்ண்டிருக்கிறான் என்று சந்தேகப்படுகிறோம். ஆனால் இது வரை நாம் அந்த மூன்று பேரையும் பின் தொடரவில்லை. அவர்களை நாம் கண்காணிக்கிறோம் என்ற சந்தேகத்தை அவர்களுக்குச் சிறிதும் ஏற்படுத்தவில்லை. நோய்டாவில் நம் வழக்கமான பாணியில் கண்காணிக்க ஆட்களை ஏற்பாடு செய்தால் கண்டிப்பாக அஜீம் அகமதும், அவன் ஆட்களும் அவர்களை மோப்பம் பிடித்து விடுவார்கள். அதனால் நாம் வழக்கமான தெருவியாபாரிகள், பிச்சைக்காரர்கள் மாதிரியான வேடங்களில் ஆட்களை அந்தப் பகுதிக்கு அனுப்ப முடியாது…”

நரேந்திரன் நிறுத்திய போது மூவரும் அடுத்தது என்ன, தங்களுக்கு என்ன கட்டளை என்ற ஆவலும் எதிர்பார்ப்புமாகக் கலந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். மூவரில் அன்வர் என்ற இளைஞன் அஜீம் அகமது போலவே எச்சரிக்கையானவன், போடும் வேடத்திற்கேற்ற கதாபாத்திரமாகவே மாறிவிடக்கூடியவன் என்பதால் அஜீம் அகமதைக் கண்டுபிடிக்க நோய்டா பகுதியில் உளவு பார்க்க நரேந்திரன் அவனையே தேர்ந்தெடுத்தான். மற்ற இருவரான ஜெய்தீப்பும், விக்டரும் கூட குறையில்லாமல் கச்சிதமாகவே இயங்கக்கூடியவர்கள் என்பதால் நோய்டாவிற்கு அந்தப் பக்க, இந்தப் பக்கப் பகுதிகளில் உளவு பார்க்க அவர்கள் இருவரையும் தேர்ந்தெடுத்திருந்தான்.
 
நரேந்திரன் தொடர்ந்து சொன்னான். நோய்டா பகுதியில் அதிகமானவர்கள் பயன்படுத்தக்கூடிய குரியர் கம்பெனியில் உங்கள் மூவருக்கும் வேலைக்கு ஏற்பாடு செய்திருக்கிறேன். நோய்டா பகுதிக்கு அன்வர், அதற்கு இருபக்க பகுதிகளுக்கு ஜெய்தீப், விக்டரை நியமிக்கிறேன். நீங்கள் உண்மையாகவே குரியர் கம்பெனிக்கு வேலை செய்வதால் தபால்களை நிஜமாகவே பட்டுவாடா செய்வதால் உங்கள் மேல் அஜீம் அகமது ஆட்களுக்கு எந்தச் சந்தேகமும் வராது. நீங்கள் அஜீம் அகமதும், அவன் ஆட்களும் எங்காவது தெரிகிறார்களா என்று பாருங்கள். அவர்கள் உண்மையாகவே உங்களுக்குப் பார்க்கக் கிடைத்தாலும் கூர்ந்து பார்ப்பதாகக் காட்டிக் கொள்ளக்கூடாது. ஒரு நேரத்தில் ஒரு தடவைக்கு மேல் அவர்களைப் பார்க்கக்கூடாது. நீங்கள் குரியர் ஆட்கள் அல்ல உளவாளிகள் என்ற சந்தேகம் அவர்களுக்குச் சிறிதும் வந்து விடாமல் பார்த்துக் கொள்வது மிக முக்கியம். இயல்பாக இருங்கள். முதல் பார்வையிலேயே அதிகம் கவனித்து விடுங்கள். அன்வர் முக்கியமாக உனக்குத் தான் அவனைக் கண்டுபிடிக்கும் வாய்ப்பு அதிகம். அதனால் நீ தான் மற்றவர்களை விட அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்…”


அன்வரும், மற்ற இருவரும் தலையசைத்தார்கள்.

(தொடரும்)
என்.கணேசன்

4 comments:

  1. இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. தீபாவளி வாழ்த்துகள்

    ReplyDelete
  3. Super Planning. Eagerly waiting for next Monday.

    ReplyDelete
  4. நரேந்திரனும் அஜீம்க்கு சளைத்தவன் அல்ல...

    ReplyDelete