சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, October 31, 2022

யாரோ ஒருவன்? 110


னார்தன் த்ரிவேதிக்கு காளிங்க சுவாமி ஒரேயடியாக மறுத்து விடாமல், அபசகுனமாக பிரச்னை தீராது என்று சொல்லி விடாமல், வழி இருக்கிறது, அந்த ரத்தினக்கல்லைக் கொண்டு வந்து தந்தால் என்ன வேண்டுமோ செய்து தருகிறேன் என்று சொன்னது பெருத்த நிம்மதியைத் தந்தது. அது மட்டுமல்ல திருடப் போகிறவன் சாதாரணமாகப் போனால் அந்த ரத்தினத்தை நாகசக்தி உடைய நாகராஜ் மகராஜிடமிருந்து எடுத்து வந்து விட முடியாது என்பதனால் போகிறவனுக்கு சக்தி கவசம் போல எதோ ஒன்றை ஏற்படுத்தி அனுப்புகிறேன் என்று ஏற்றுக் கொண்டதும், அந்தக் காளி கோயிலுக்குப் போகிறவனை பாம்புகள் கடிக்காது என்று உத்திரவாதம் தந்து அதுவும் அவன் பயத்தைப் போக்காததைச் சொன்னவுடன் பாம்புகளே அங்கு இல்லாதபடி பார்த்துக் கொள்கிறேன் என்று மிகவும் பெருந்தன்மையாகச் சொன்னதும் தனக்கு வரப் போகும் நல்ல காலத்தின் அறிகுறியாகவே அவருக்கு மேலும் தோன்றியது.

நேற்று ஆஸ்பத்திரியிலிருந்து டாக்டர் அவருக்குப் போன் செய்து சஞ்சய் ஷர்மாவையும், மதன்லாலையும் டிஸ்சார்ஜ் செய்து ஆஸ்பத்திரியிலிருந்து கூட்டிக் கொண்டு போய் விடலாம் என்று சொன்னார். இனி வீட்டில் இருந்து கொண்டே வேளா வேளைக்கு மருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தால் போதும், நாள்போக்கில் உடல்நலம், மனநலம் இரண்டிலும் இருவரும் முன்னேற்றம் அடைவார்கள் என்று சொன்னார். ஆஸ்பத்திரியில் அவர்கள் மட்டுமல்லாமல்  அத்தனை பாதுகாவலர்களும் இருப்பதும் வெளியே அனாவசியமாகப் பலர் கவனத்தைக் கவர ஆரம்பித்திருக்கின்றது என்றும் அவர் சூசகமாகத் தெரிவித்தார்.

ஜனார்தன் த்ரிவேதி போனில் அஜீம் அகமதைக் கலந்தாலோசித்தார். “இனி ரெண்டு பேரையும் அவங்கவங்க வீட்டுக்கே அனுப்பி வெச்சுட்டா என்ன?” என்று அவர் கேட்டார்.

அஜீம் அகமது சொன்னான். “அடுத்த நாளே மகேந்திரன் மகன் அவங்க வீட்டு வாசலில் விசாரணைக்கு வந்து நிற்பான். அவன் தப்பு வெளியே தெரியாமல் இருக்க இத்தனை நாள் எங்கே போயிருந்தீங்க, ஏன் போயிருந்தீங்கன்னு கேட்டுட்டு ஒன்னுமே தெரியாத மாதிரி விசாரணையை விட்ட இடத்திலிருந்து ஆரம்பிப்பான்...”

ஜனார்தன் த்ரிவேதி திகைத்தார். அந்தத் திமிர் பிடித்தவன் செய்தாலும் செய்வான். ”எங்க அரசியல்ல கூட நான் இந்த மாதிரி ஜகஜ்ஜாலக் கில்லாடியைப் பார்த்ததில்லை.... இத்தனைக்கும் இவன் இப்ப தான் வேலைலயே சேர்ந்திருக்கிறான்... அதுக்குள்ளே இத்தனை துணிச்சல், இத்தனை அராஜகம்....”

“அவன் சின்ன வயசுலே இருந்தே ஒரே ஒரு குறிக்கோளாட தான் வாழ்ந்திருக்கிறான். அப்படிப்பட்ட ஆள்க எப்பவுமே ஆபத்தானவங்க தான். ஏன்னா அவங்க இது வரைக்கும் வேறெதையுமே யோசிச்சதில்லை. குறிக்கோள் நிறைவேறுகிற வரைக்கும் வேறெதையும் யோசிக்கப் போறதுமில்லை...” அஜீம் அகமது இயற்கைக் கோட்பாடு ஒன்றை விளக்குவது போல் விளக்கினான்.

உலகத்தின் பல பகுதிகளிலும் எத்தனையோ வேலைகள் இருக்கக்கூடிய அஜீம் அகமது நரேந்திரனைப் பற்றி இத்தனை தீர்க்கமாகத் தெரிந்து வைத்துக் கொண்டிருப்பது ஜனார்தன் த்ரிவேதிக்கு ஆச்சரியமாக இருந்தது. அவன் இது வரைக்கும் நரேந்திரனை அந்தப் பெயரில் அல்லாமல் மகேந்திரன் மகன் என்றே சொல்வது வேடிக்கையாக இருந்தது....

இருவரும் யோசித்து இப்போதைக்கு சஞ்சய் ஷர்மாவையும், மதன்லாலையும் ஒரு தனியிடத்தில் பாதுகாப்பாகத் தங்க வைப்பது என்று முடிவு செய்தார்கள்.


ஜீம் அகமது எப்போதுமே ஒரு இலக்கை எடுத்துக் கொண்டால் ஒரு திட்டத்தை மட்டும் வைத்துக் கொண்டு இயங்குவதில்லை. எப்போதுமே இரண்டாவது திட்டத்தையும் கைவசம் வைத்துக் கொண்டு தானிருப்பான். முதல் திட்டம் நிறைவேறாமல் போனால் இரண்டாவது திட்டத்தை கால விரயம் இல்லாமல் உடனடியாக எடுத்துக் கொண்டு செயல்படுவான். அவனுடைய தொடர் வெற்றிகளுக்கு அது ஒரு முக்கிய காரணமாக இருந்தது.  இப்போதும் மகேந்திரன் மகனுக்குப் பாடம் புகட்ட அவன் இரண்டு திட்டங்களை வைத்திருக்கிறான். ஒன்று காளிங்க சுவாமி காட்டப்போகும் வழி. இன்னொன்று அவனுடைய தனி வழி.

இந்த முறை மதன்லாலையும், சஞ்சய் ஷர்மாவையும் கண்டுபிடித்துக் காப்பாற்றியது அவனுக்கு ஒரு சிறு வெற்றியாக இருந்தாலும் அதில் மகேந்திரன் மகனைச் சிக்க வைக்க முடியாமல் போனதும், மகேந்திரன் மகன் எந்தவிதமான பாதிப்புமில்லாமல் நடமாடிக் கொண்டிருப்பதும் அந்த வெற்றியைக் கொண்டாட முடியாதபடி உறுத்தலாக இருந்தது.

மகேந்திரன் மகன் எப்படி மதன்லால், சஞ்சயைக் கடத்திய சிக்கலில் இருந்து தப்பினான் என்று காளிங்க சுவாமி மூலம் தெரிந்த பின் அஜீம் அகமதுக்குத் தெளிவு பிறந்தது.  பிறகு நாகராஜ் மகராஜ் என்ற மனிதனைப் பற்றிய விரிவான தகவல்களையும் பெற்றுப் புரிந்து கொண்டான். நாகராஜ் மகராஜ் தன் சக்திகள் விஷயத்திலும் சரி அரசியல் செல்வாக்கிலும் சரி அசைக்க முடியாத உச்சத்தில் இருப்பதும் புரிந்தது. அதே போல் காளிங்க சுவாமியும் குறைந்தவர் அல்ல என்பதை அவன் நேரடியாகவே தெரிந்து வைத்திருக்கிறான். காளிங்க சுவாமி நாகராஜ் மகராஜிடமிருந்து ஒரு குறிப்பிட்ட ரத்தினத்தை எடுத்து வந்தால் பின் தன்னால் அவர்களுக்கு உதவ முடியும் என்று வாக்கு தந்திருக்கிறார். எப்படி எடுத்து வருவது என்பதற்கும் உதவி செய்தே ஆளை அனுப்புகிறார்.

அவர் இத்தனையும் இவர்களுக்காகத் தான் செய்கிறார் என்று அஜீம் அகமதால் ஜனார்தன் த்ரிவேதி போல் நம்ப முடியவில்லை. காளிங்க சுவாமிக்கு நாகராஜ் மகராஜ் எதிரியாக இருக்கலாம். அல்லது நாகராஜ் மகராஜிடம் இருக்கும் அந்த ரத்தினம் காளிங்க சுவாமிக்குத் தேவைப்பட்டும் இருக்கலாம். ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல இவர்களுக்கு உதவுவது போல் அந்த சுவாமிஜி தன் காரியத்தையும் கூடச் சாதிக்க திட்டம் போட்டிருக்கலாம். ஆனால் வாக்கு தந்தால் கண்டிப்பாகச் செய்து தரக்கூடிய ஆள் தான் அவர் என்பதில் சந்தேகமில்லை. அதனால் ஒருவேளை பீம்சிங் அவர் சொன்னபடி போய் ரத்தினத்தை எடுத்துக் கொண்டு வந்தால் இவர்கள் வேலையும் ஆகும்.

அதே நேரத்தில் நாகராஜ் மகராஜிடமிருந்து பீம்சிங் அந்த ரத்தினத்தைக் கொண்டு வர முடியாமல் போகவும் வாய்ப்பிருக்கிறது. இரண்டு சக்தி வாய்ந்த ஆட்களுக்கு இடையே வரும் யுத்தத்தில் யார் வேண்டுமானாலும் ஜெயிக்கலாம். அப்படி ஆனால் மகேந்திரன் மகனை அழிக்க காளிங்க சுவாமியின் உதவி கிடைக்க வழியில்லை. அந்த நிலை வந்தால் அஜீம் அகமதே தான் தனக்கு சவால் விட்டபடி வளர்ந்து வரும் மகேந்திரன் மகன் கதையை முடித்து விட வேண்டியிருக்கும். அப்போது ஜனார்தன் த்ரிவேதிக்கு என்ன ஆகிறது என்றோ, மதன்லால் சஞ்சய்க்கு என்ன ஆகிறது என்றோ யோசிக்கவும் அஜீம் அகமதுக்கு நேரமில்லை. எதிரியை அழித்து விட்டு, தான் யார் என்று நிரூபித்து விட்டு, இந்த நாட்டிலிருந்து அமைதியாக வெளியேறுவது தான் அவனுடைய திட்ட எண் இரண்டு.

முதல் திட்டம் முடியாமல் போனால் திட்ட எண் இரண்டு உடனடியாகச் செயல்படுத்தப்படும். திட்ட எண் இரண்டுக்கு வேண்டிய ஏற்பாடுகளையும் ரகசியமாக அஜீம் அகமது செய்ய ஆரம்பித்தான். இனி ஒரு வாரத்திற்குள் வந்த காரியம் முடிந்து இந்தியாவை விட்டு அவன் போய் விடுவான்...

     
பீம்சிங் ஒரு வேலையை ஏற்றுக் கொண்டபின் அதைச் சரிவர செய்யாமல் இருந்ததில்லை. முன்பணம் மூன்று லட்சம் அஜீம் அகமதிடம் பேசிய அன்றே அவன் வங்கிக் கணக்கில் வந்து சேர்ந்திருந்ததால் பிறகு எதையும் யோசிக்கவில்லை. பெரும்பாலும் முன்பணம் வந்து சேர்ந்தவுடனேயே அந்த வேலையை எப்படி செய்வது எப்போது செய்வது என்று அவன் திட்டம் தீட்ட ஆரம்பித்து விடுவான். ஆனால் இந்தப் புதிய வேலையில் எல்லாவற்றையும் காளிங்க சுவாமியே சொல்வார், அதே போல் செய்தால் போதும் என்று அவனுக்குச் சொல்லப்பட்டு இருந்ததால் அந்த வேலையும் அவனுக்கு இருக்கவில்லை.

காளிங்க சுவாமி சொன்னது போலவே வெள்ளிக்கிழமை ராகு காலம் ஆரம்பித்து பத்து நிமிடங்களில் அனுமாரைக் கும்பிட்டு விட்டுக் கிளம்பினான். டேராடூனுக்கு பன்னிரண்டரை மணிக்கு விமானம். அங்கிருந்து ஒரு மணி நேரத்திற்குள் அவன் கார் அல்லது ஜீப்பில் ரிஷிகேசம் போய் விடலாம். அதன் பிறகு அந்தக் காட்டுக்குள் அவன் சுமார் மூன்று மைல் நடந்து தான் அந்தக் காளி கோயிலை எட்ட வேண்டும். அங்கு பாம்பு ஒன்றைக் கூட அவன் பார்க்க வேண்டியிருக்காது என்று காளிங்க சுவாமி தந்திருக்கும் வாக்கையும் மீறி உள்ளூர ஒரு பயம் எட்டிப் பார்த்ததை அவனால் தடுக்க முடியவில்லை.

(தொடரும்)
என்.கணேசன்




7 comments:

  1. Super sir, first comment. After completing evening class I was late on every Monday

    ReplyDelete
  2. Arjun,உங்களை முந்திட்டேன்

    ReplyDelete
    Replies
    1. velai busyil naan vandhadhu late.

      Delete
    2. It's ok sir. Just for fun I told like that

      Delete
  3. கதை விறுவிறுப்பாக செல்கிறது...

    ReplyDelete
  4. அஜீம் அகமது காளிங்க சுவாமியின் திட்டத்தை கண்டறிந்து விட்டான்... அந்த ரத்தினக்கல்லை பற்றியும் அறிந்தால் ஆச்சரியப்படுவதிற்கில்லை....

    ReplyDelete