சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, October 13, 2022

சாணக்கியன் 26

 

ந்திரதத் விஷ்ணுகுப்தரிடம் கவலையுடன் கேட்டார். ”அலெக்ஸாண்டரை அனைவரும் சேர்ந்து எதிர்த்தால் தான் வெற்றி காண முடியும் என்று நீ சொன்னாய் விஷ்ணு. ஆனால் யாரும் அவரவர்களுக்கு ஆபத்து வராமல் ஒன்று சேர மாட்டார்களே. மனித சுபாவத்தை என்னை விட நன்றாக அறிந்தவன் நீயல்லவா? அவர்களுக்கு எல்லாவற்றையும் புரிய வைத்து அனைவரையும் ஒன்று சேர்ப்பவர் யார்?”

 

நான் முயற்சி செய்கிறேன் இந்திரதத். இது போன்ற சூழ்நிலைகளில் பெரியவர்களும், வலிமையானவர்களும் முடிவெடுப்பது தான் மிக முக்கியம். அவர்கள் முடிவெடுத்தால் கண்டிப்பாக மற்றவர்கள் இணைந்து கொள்வார்கள்.”

 

இதற்குத் தலைமை தாங்குவது யார் என்ற கேள்வி எழுகிறதே விஷ்ணு. நீ சொன்ன பெரியவர்களில், வலிமையானவர்களில் அதிக படை வலிமை படைத்தவர்கள் யார்?”

 

மகதம்

 

இந்திரதத் விஷ்ணுகுப்தரைத் திகைப்புடன் பார்த்தார். “தனநந்தனிடம் நீயே நேரில் போய் அறிவுரை சொல்லப் போகிறாயா விஷ்ணு

 

விஷ்ணுகுப்தர் தன் தந்தையைக் கொன்ற தனநந்தனிடம் போய் இது குறித்து அறிவுரை சொல்வதை இந்திரதத்தால் நினைத்துப் பார்க்க முடியவில்லை.

 

விஷ்ணுகுப்தர் அமைதியாகச் சொன்னார். “அறிவுரை சொல்வதை தனநந்தன் சிறிதும் விரும்ப மாட்டான் இந்திரதத். அதனால் அவனிடம் நான் அறிவுரை சொல்லப் போவதில்லை. உதவி கேட்கப் போகிறேன். பாரதம் அன்னியரால் வெல்லப்பட உள்ளது. நீ தலைமையேற்று அவர்களைத் துரத்தியடித்து பெருமை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப் போகிறேன்....”

 

சந்திரகுப்தனைப் போலவே இந்திரதத்தும் நண்பனின் மனவலிமையையும், உயர் குணத்தையும் கண்டு வியந்து போனார்.  தன்னுடைய வெறுப்பைக் குழி தோண்டிப் புதைத்து விட்டு பாரத மண்ணின் பாதுகாப்பிற்காக இப்படி பகைவனிடமே சென்று வேண்டுகோள் விடுக்கும் பெருந்தன்மை எத்தனை பேருக்கு வரும்? எத்தனை பேரால் இது முடியும்?

 

நீ சொல்வதற்கு தனநந்தன் செவி மடுப்பான் என்று நீ நம்புகிறாயா விஷ்ணு

 

முயற்சி செய்யும் கடமை எனக்கிருக்கிறது இந்திரதத். அதன் விளைவு என்னவாக இருக்கும் என்பது தனநந்தனுக்கும், இறைவனுக்குமே வெளிச்சம். நல்ல எண்ணத்தால், தேசபக்தியால் இதற்கு தனநந்தன் உடன்படுவான் என்று நான் நம்பவில்லை.  ஆனால் புகழுக்காகவும், அனைவரையும் தலைமை தாங்கிப் போகும் பெருமைக்காகவும் இதற்கு உடன்படும் வாய்ப்பு இருக்கிறது என்று தோன்றுகிறது.... காரணம் எதுவாக இருந்தாலும் நல்லது நடந்தால் சரி”

 

இந்திரதத் அதற்குக் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. அது நடக்கலாம். அல்லது நடக்காமலும் போகலாம். அவரை இன்னொரு சிந்தனை வாட்டி எடுக்க ஆரம்பித்தது. அதை அவர் நண்பனிடம் வெளிப்படையாகவே சொன்னார். “கேகய மன்னர் தனநந்தனின் தலைமையை ஏற்கக் கண்டிப்பாக உடன்பட மாட்டார் விஷ்ணு. அவருக்கு அவன் மீது உயர்ந்த அபிப்பிராயம் இல்லை. அவன் தலைமை ஏற்பதைச் சிறுமையாக அவர் கருதுவார்…”

 

விஷ்ணுகுப்தர் சொன்னார். “அதை அவர் பெருமையாக நினைக்க முடியாது என்பதை நானும் அறிவேன் இந்திரதத். ஆனால் சில சமயங்களில் நாம் இரண்டு சிறுமைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது. அலெக்ஸாண்டரிடம் தோற்பதை விட இது சிறுமை அல்ல என்பதை நீ தான் அவருக்குப் புரிய வைக்க வேண்டும் நண்பா….”

 

இந்திரதத் சொன்னார். “அவரிடம் அலெக்ஸாண்டரிடம் தோற்க வேண்டியிருக்கும் என்பதைப் புரிய வைப்பதே எனக்கு மிகவும் கஷ்டம் தான் விஷ்ணு. அதைப் புரிய வைக்க முடிந்தால் அல்லவா அதை விட இந்தச் சிறுமை சிறியது என்பதை நான் புரிய வைக்க முடியும். உண்மையைச் சொன்னால் நானே அலெக்ஸாண்டர் எங்களைத் தோற்கடிக்க முடியும் என்பதை ஆரம்பத்தில் நம்பவில்லை அல்லவா? இப்போதும் அதைச் சொல்வது நீ என்பதால், உன் அறிவுக்கூர்மை ஆணித்தரமாக யூகிப்பது நடக்காமல் போகாது என்று நம்புவதால் தான் நானே அலெக்ஸாண்டர் எங்களை வெல்வது சாத்தியமாக இருக்கலாம் என்று நம்புகிறேன்.  எதற்கும் நீ மகதம் போய் விட்டு வா விஷ்ணு. தனநந்தனின் முடிவு என்ன என்று தெரிந்த பின் தான் எங்கள் மன்னரிடம் இதை நான் சொல்ல முடியும். அவனே மறுப்பானானால் எங்கள்  மன்னரிடம் நான் அதைப் பேசுவது கூட அர்த்தமற்றது...”

 

விஷ்ணுகுப்தர் பெருமூச்சு விட்டார். நண்பன் சொன்னதில் அவர் எந்தத் தவறும் காணவில்லை. இந்திரதத் அவருடைய நண்பனாக இருக்கலாம். ஆனால் இந்திரதத்துக்கு கேகய நாட்டின் அமைச்சர் பொறுப்பும் இருக்கிறது. விஷ்ணுகுப்தர் அவரிடம் பேசியது போல அவர் கேகய மன்னரிடம் சென்று பேச முடியாது….  ஆரம்ப இடத்திலேயே அதுவும் நண்பனிடத்திலேயே சம்மதிக்க வைப்பதில் இத்தனை சிக்கல்கள் என்றால் மற்ற இடங்களில் எப்படி இருக்கும் என்று யோசித்த போது ஒரு பாரம் அவர் நெஞ்சை அழுத்தியது.

 

நண்பனைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்த இந்திரதத் அவரது வேதனையை உணர்ந்து கொண்டு வருத்தத்துடன் மென்மையாகச் சொன்னார். “விஷ்ணு. ஒன்றுபட்ட பாரதம் என்ற உன்னுடைய கனவில் நான் பங்கெடுத்துக் கொள்ளலாம். ஆனால் பலருக்கும் அது நிஜத்தில் புரியாத கற்பனை பிம்பமாகவே இருக்கும் என்பதே யதார்த்தம். என்ன தான் உன்னதங்களைச் சொல்லி நீ அதைப் புரிய வைக்க முயன்றாலும் அவரவர் தனிப்பட்ட லாப நஷ்டங்களை வைத்தே ஒவ்வொருவரும் எதையும் தீர்மானிப்பார்கள் என்பதே உண்மை…”

 

விஷ்ணுகுப்தர் கண நேரத்தில் மனதில் இடம் பிடித்த பாரத்தைத் தள்ளி விட்டு அமைதியாகச் சொன்னார். “நீ சொல்லும் யதார்த்த நிலை எனக்கும் புரியாமல் இல்லை இந்திரதத். ஆனால் யதார்த்தங்களை நாம் தான் உருவாக்குகிறோம். இருக்கின்ற நிலைமைகளை அப்படியே ஏற்றுக் கொள்வதால் எதுவும் எப்போதும் மாறிவிடுவதில்லை. பலரும் போகும் போக்கிலேயே நம்மைப் போல் அறிந்தவர்களும் போவோமானால் நம் அறிவுக்கு அர்த்தமில்லாமல் போகிறது என்பதோடு நல்ல மாற்றங்களை சமூகத்தில் நம்மால் ஏற்படுத்தி விடவும் முடியாது. சொல்ல வேண்டிய உன்னதங்களை சலிக்காமல் சொல்லியே ஆக வேண்டும். நன்மைகள் என்றும் தீமைகளின் வேகத்தில் மனிதர்கள் மனதில் பதியாது. என்றாலும் சொல்லும் நல்ல விஷயங்கள் சிலர் மனதிலாவது சிறிது தங்கும். பின் கூடுதல் இடம் பிடிக்கும். இன்றில்லா விட்டாலும் சில காலம் கழித்தாவது அது பலனளிக்கும். அந்த நம்பிக்கை எனக்கு உள்ளது….”

 

விஷ்ணுகுப்தரின் வார்த்தைகளில் நெகிழ்ந்து போன இந்திரதத் பதில் சொல்ல வார்த்தைகள் கிடைக்காமல் மௌனமாக கைகூப்பினார்.

 

விஷ்ணுகுப்தரின் தொடர்ந்த பயணத்தில் சிற்றரசுகளையும், குடியரசுகளையும் அவர் கடக்க வேண்டியிருந்தது. அவர்களுடன் பேசி எந்தப் பேருதவியும் கிடைக்க வழியில்லை என்றாலும், இரவில் தங்குகின்ற இடங்களில் தங்குகின்ற நேரத்தில் அவர் சிற்றரசர்களிடமும், மக்கள் தலைவர்களிடமும் பாரதத்தின் எல்லையில் புதிதாக உருவாகியிருக்கும் நிலைமை குறித்து பேசினார். அவர்கள்  தோற்றத்தில் மாறுபட்டார்களேயொழிய அடிப்படை எண்ண ஓட்டங்களில் ஒன்று போலவே இருந்தார்கள். பாரத மண்ணின் மைந்தர்கள் என்ற சிந்தனை கிட்டத்தட்ட எங்குமே காணப்படவில்லை. ஒரு சிலர் மட்டுமே அவர் சொன்ன பிறகாவது அதை உணரவும், சிந்திக்கவும் முடிந்தவர்களாக இருந்தார்கள். அவர்களும் சில குடியரசுகளில் இருக்கும் சிந்தனையாளர்களாக இருந்தார்கள். அவர்களும் சிந்தனைக்கு உயர்வாகத் தோன்றும் இது நிஜமானால் மிக நன்றாக இருக்கும் என்று நினைத்தார்களே ஒழிய அது நிஜமாகும் என்று நம்பியதாகத் தெரியவில்லை.

 

மற்றவர்கள் அனைவரும் அலெக்ஸாண்டர் வரட்டும், பார்த்துக் கொள்ளலாம் என்றும் அடுத்தவர்கள் எல்லாரும் என்ன செய்கிறார்களோ அதையே செய்யலாம் என்றும் நினைப்பதாகச் சொன்னார்கள். போரிட்டு வெல்ல  முடியா விட்டால் சரணடைந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வது தான் அவர்கள் நிலைப்பாடாக இருந்தது. அதற்கு மேல் அவர்களுக்குச் சிந்திக்க எதுவும் இருக்கவில்லை. பலருக்குத் தங்கள் எல்லைகளைத் தாண்டி எதையும் யோசிக்க முடியவில்லை. அனைவரும் தட்சசீல ஆச்சாரியரை உயர்வாக நினைத்தார்கள். மரியாதையுடன் நடத்தினார்கள். ஆனால் அவர் தன்னுடைய சித்தாந்தங்களையும், தேசபக்தியையும் அவர்களுக்குப் புரிய வைக்க முடியவில்லை.

 

வேதங்கள், உபநிஷத்துக்களை உருவாக்கிய பாரதம், மாமுனிவர்களையும், யோகிகளையும், மகாவீரரையும், புத்தனையும் உருவாக்கிய பாரதம் இக்காலத்திற்குத் தேவையான மகாபுருஷர்களை உருவாக்கத் தவறி விட்டதோ என்று அவர் வருத்தப்பட்டார்.   அவர் பார்க்கின்ற இடங்களில் எல்லாம் ஞான சூனியங்களே அதிகம் இருந்தார்கள் அவர்களுக்குத் தனிப்பட்ட லாப நஷ்டங்களில் இருக்கும் கவனம், அறிவுகூர்மை எல்லாம் மற்ற விஷயங்களுக்கு நகர்ந்து விடாமல் இருப்பதாகவே அவருக்குத் தோன்றியது

 

மகதம் நோக்கிச் சென்ற அவரது பயணத்தில் இருந்த வேகம் வழியில் அவர் சிந்தனைகளை முக்கியமானவர்களிடம் சேர்க்க வைக்க முடிவதில் இருக்கவில்லை. அதில் அவருக்குப் பெரிய ஏமாற்றமும் இருக்கவில்லை. ஏனென்றால் அவர் அவர்களிடம் அதிகம் எதிர்பார்த்திருக்கவும் இல்லை. ஒரே ஒருவனின் தீர்மானம் தான் இப்போதைக்கு வரலாற்றை எழுதப் போகிறது. அவன் முன்னுக்கு வந்தால் அவன் பின்வர மற்றவர்களைத் திரட்டுவதில் சிரமம் பெரிதாக இருக்கப் போவதில்லை. அப்படிச் சிலர் வராமல் இருந்தாலும் பாதிப்பு எதுவும் இருக்கப் போவதில்லை. தனநந்தன் என்ன தீர்மானிப்பானோ?

 

(தொடரும்)

என்.கணேசன்



இந்த நாவலையும், அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -

(அல்லது)


நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் ரிஜிஸ்டர் தபால் அல்லது குரியர் மூலமாகப் பெற்றுக் கொள்ளலாம். 

உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்(ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)

நூல்களின் குறிப்பு மற்றும் விலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் - என்.கணேசன் நூல்கள்


அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.


நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை  nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும்.

8 comments:

  1. You have done a great service to Tamil readers by writing about this extraordinary man 'Chanakyan'. In your words he came again alive in our hearts sir. May God bless you.

    ReplyDelete
  2. புருஷோத்தமனின் புகழ் அலெக்ஸாண்டரை எதிர்த்து பெரும் சேதத்தை உண்டாக்கியது. அது சாணக்கியரால் என்கிறீர்களா

    ReplyDelete
    Replies
    1. அந்த நிகழ்வு வரும் போது விளங்கும். பொறுங்கள்.

      Delete
  3. விஸ்ணு குப்தரின் தேசபக்தி அற்புதமானது... அந்த காலம் உருவாக்கிய அவதார புருஷர் அவர் தானோ? என்பது போல தோன்றுகிறது...

    ReplyDelete
  4. சாணக்கியர் போல, மனிதரில் எத்தனை நிறங்கள் சிவகாமி போல எந்த விஷயத்திலும் தன்னை உட்படுத்தி கண நேரத்தில் அதிலிருந்து மீண்டு சமநிலைக்கு வருவது எப்படி சார். இதற்கு ஏதேனும் செய்முறை உள்ளதா சார்.

    ReplyDelete
    Replies
    1. எல்லா நேரங்களிலும், நம் நோக்கம் அல்லது இலக்கு என்ன என்பதில் தெளிவும், முழுமையான விழிப்புணர்வும் இருந்தால் எதிலிருந்தும் கண நேரத்தில் மீண்டு சமநிலைக்கு ஒருவன் வர முடியும். சொல்லும் அளவுக்கு எதுவும் சுலபமல்ல. ஆனால் தொடர்ச்சியாய் முயற்சி செய்பவனுக்கு அது முடியாததுமல்ல.

      Delete