சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, October 20, 2022

சாணக்கியன் 27

 

லெக்ஸாண்டர் ஹிந்துகுஷ் மலைமுகடுகளைப் பார்த்தபடி மௌனமாக அமர்ந்திருந்தான். அவன் தற்போது பாக்ட்ரியா பகுதியில் இருக்கிறான். அப்பகுதியில் தலைவனாக இருந்த சசிகுப்தன் முன்பு பாரசீக மன்னரின் கட்டுப்பாட்டில் இருந்து கொண்டு பாக்ட்ரியாவை ஆண்டு வந்தவன். போர் வரும் சமயங்களில் தன் படையுடன் சென்று பாரசீக மன்னருக்கு உதவுபவன். ஆனால் அலெக்ஸாண்டருடன் பாரசீக மன்னர் போரிட்ட போது மட்டும் சசிகுப்தன் பாரசீக மன்னருக்கு உதவுவதற்குப் பதிலாக அலெக்ஸாண்டருக்கு உதவி செய்து தன் பதவியைக் காப்பாற்றிக் கொண்டான். பாரதம் நோக்கிக் கிளம்பியிருக்கும் அலெக்ஸாண்டர் தன் படையுடன் அப்பகுதியில் சில நாட்கள் ஓய்வெடுக்கத் தீர்மானித்திருந்தான்.

 

இப்படித் தங்கியிருக்கும் சமயங்களில் அலெக்ஸாண்டர் பெரும்பாலும் தன் அடுத்த வெற்றிக்குத் தேவையானவற்றைத் திட்டமிடுவதும், ஆலோசிப்பதும் தான் வழக்கம். அந்தச் சமயங்களில் எப்போதும் அவனைச் சுற்றிப் படைத்தலைவர்கள், தகவல்கள் சொல்பவர்கள், ஒற்றர்கள் போன்றோர் இருந்து கொண்டேயிருப்பார்கள் என்றாலும்  அவன் அபூர்வமாகச் சில சமயங்களில் தனிமையை அதிகம் விரும்புவதுண்டு. அந்தச் சமயங்களில் அனாவசியமாக யாரும் வந்து பேசுவதை அவன் ரசிப்பதில்லை. அப்படிக் குறுக்கீடுகள் வருவதை அவன் தொந்தரவாகவே கருதுவான். அதனால் சரியான காரணம் இல்லாமல் அவன் தனிமையில் யாரும் குறுக்கிடுவதில்லை.

 

அந்தத் தனிமை நேரங்களில் அவன் மிக ஆழமானவன். போர் தந்திரங்களையும், உல்லாச விஷயங்களையும் தவிர்த்து விட்டுத் தத்துவார்த்தமான உண்மைகளை அவன் அதிகம் சிந்திக்கும் நேரமது. அரிஸ்டாட்டிலின் இணையற்ற மாணவனான அவன் அந்தச் சமயங்களில் மானிட வாழ்க்கையைப் பற்றியும் அறிவின் உச்ச விஷயங்களைப் பற்றியும் தான் சிந்தித்துக் கொண்டிருப்பான். உலகையே வென்று வரக் கிளம்பியிருக்கும் மாவீரனான அவன் சில சமயங்களில் இப்படி தத்துவார்த்த விஷயங்களைச் சிந்தித்துக் கொண்டு தனிமையில் அமர்ந்திருப்பது பலருக்கு ஆச்சரியமாக இருப்பதுண்டு. அவன் நன்றாகப் பேசும் மனநிலையில் இருக்கும் போது அவர்கள் அவனிடம் தங்கள் ஆச்சரியத்தை வாய்விட்டுச் சொல்வதும் உண்டு. அவர்களுடைய ஆச்சரியம் அவனை ஆச்சரியப்படுத்தும். இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது என்று அவனுக்குத் தோன்றும். எல்லைகளை மீறிப் புதிய புதிய தேசங்களை வெற்றிக் கொள்வது அவனுக்கு எந்த அளவு ஆனந்தத்தைத் தருகிறதோ அதே அளவு மானசீகமாகவும் எல்லைகளை மீறி யோசிக்க அவனுக்கு மிகவும் பிடிக்கும். புதிய உண்மைகளைக் கண்டுபிடிக்கவும் அதை வாழ்க்கையில் பயன்படுத்திக் கொள்ளவும் அவனுக்குப் பிடிக்கும். வெளியே அவன் வெல்லும் தேசங்கள் வெளிப்பார்வைக்குப் பெருமை என்றால் உள்ளே அவன் உணரும் உண்மைகள் உள்ளத்திற்குப் பேரானந்தம் தருபவை. அவன் ஆசிரியரான அரிஸ்டாட்டில் எத்தனையோ ஞான விதைகளை அவன் உள்ளத்தில் விதைத்திருக்கிறார். சில சமயங்களில் தனிமையில் அவற்றை யோசிக்கத் தோன்றும். மனித வாழ்க்கையின் விசித்திரங்களைப் பற்றி ஆராயத் தோன்றும். வெளிப்புற வெற்றிகளைப் போலவே உள்ளத்தின் வெற்றிகளும் முக்கியமானவையே. அதுவும் மகத்தான வீரமே. வெளிப்புற வெற்றிகளை மட்டும் பார்க்கவும் யோசிக்கவும் முடிவது பாதி வாழ்க்கை மட்டுமே வாழ்கிறவர்கள். அதனால் தான் அவன் முழு வாழ்க்கை வாழ முயற்சிப்பது அவர்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது....

 

அலெக்ஸாண்டர் சிந்தனை கலைந்து அவனருகே வந்து அமைதியாக நின்ற வீரனை மெல்லத் திரும்பிப் பார்த்தான். அவன் அப்படித் திரும்பிப் பார்க்காமல் இருந்திருந்தால் அந்த வீரன் போய் சிறிது நேரம் கழித்து வந்திருப்பான்.

 

வீரன் அவனை வணங்கி விட்டுச் சொன்னான். “தங்களைக் காண காந்தார அரசர் ஆம்பி குமாரனிடமிருந்து தூதர் ஒருவர் வந்திருக்கிறார், சக்கரவர்த்தி

 

அலெக்ஸாண்டர் ஒரு கணம் யோசித்து விட்டுச் சொன்னான். ”உள்ளே அனுப்பு. மொழிபெயர்ப்பாளனையும் வரச் சொல்.”

 

வீரன் சென்று காந்தார தூதரையும் மொழிபெயர்ப்பாளரையும் உள்ளே அனுப்பி வைத்தான்.

 

காந்தார தூதர் அலெக்ஸாண்டரை வணங்கி விட்டுச் சொன்னார். “வெற்றி மீது வெற்றி சேர்த்துக் கொண்டிருக்கும் சக்கரவர்த்திக்கு காந்தார அரசர் ஆம்பி குமாரர் வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் அனுப்பியுள்ளார்.....”

 

மொழிபெயர்ப்பாளன் அதை மொழிபெயர்த்துச் சொன்னதும் அலெக்ஸாண்டர் குழப்பத்துடன் கேட்டான். “நான் கேள்விப்பட்ட வரையில் ஆம்பி குமாரன் காந்தார இளவரசர் அல்லவா? அவரை காந்தார அரசர் என்று நீங்கள் கூறக்காரணம் என்ன தூதரே?”

 

மொழிபெயர்ப்பாளன் அதை மொழிபெயர்த்துச் சொன்னதும் தூதர் சொன்னார். “முந்தைய அரசர் இறைவனடி சேர்ந்து விட்டதால் ஆம்பி குமாரர் தற்போது காந்தார அரசராக  இருக்கிறார் சக்கரவர்த்தி.”

 

அலெக்ஸாண்டர் இது வரை அந்தச் செய்தியை அறியவில்லை. எல்லாச் செய்திகளையும் உடனுக்குடன் அறிய விரும்பும் அலெக்ஸாண்டர் இந்தச் செய்தி இதுவரை தன்னை ஏன் எட்டவில்லை என்று யோசித்தபடியே ’மேற்கொண்டு சொல்’ என்று சைகை செய்தான்.

 

காந்தார தூதர் அலெக்ஸாண்டரின் பெருமையையும், காந்தாரத்தின் வலிமையையும் பற்றி மிக உயர்வாகச் சொல்ல ஆரம்பித்தார். அலெக்ஸாண்டர் முகம் எந்த உணர்ச்சியையும் காட்டா விட்டாலும் உள்ளூர அவன் சுவாரசியம் இழந்தான். இது போன்ற உயர்வு நவிற்சிகளைக் கேட்டு அவனுக்குச் சலித்து விட்டது. மொழி பெயர்ப்பாளனும் வாக்கியத்துக்கு வாக்கியம் மொழிபெயர்த்துச் சலித்தான். கடைசியில் ஆம்பி குமாரன் அனுப்பிய செய்தி இது தான். மாவீரனான அலெக்ஸாண்டருடன் வலிமையான காந்தாரத்தின் அரசனான ஆம்பி குமாரன் நட்பு பாராட்ட விரும்புகிறான். இருவருடைய நட்பினால் இரு பக்கமும் இலாபமடைய நிறைய இருக்கிறது. அது குறித்துப் பேச ஆம்பி குமாரன் அலெக்ஸாண்டரை ஒரு முறை சந்திக்க விரும்புகிறான்...

 

அலெக்ஸாண்டர் சுருக்கமாகச் சொன்னான். “மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் தெரிவித்தேன் என்று தங்கள் அரசரிடம் கூறுங்கள் தூதரே. நானும் ஆம்பி குமாரரைச் சந்திக்க விரும்புகிறேன். எங்கு எப்போது சந்திக்கலாம் என்பதை விரைவில் என் தூதர் மூலம் சொல்லி அனுப்புகிறேன் என்று அவரிடம் தெரிவியுங்கள்”

 

காந்தார தூதர் மீண்டும் பணிவுடன் வணங்கி நன்றி தெரிவித்து விட்டுச் சென்றார். அவர் சென்ற பிறகு சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்து விட்டு அலெக்ஸாண்டர் சசிகுப்தனை வரவழைத்தான்.

 

சசிகுப்தன் உடனே வந்தான். பணிவுடன் வணங்கி விட்டு நின்ற அவனிடம் அலெக்ஸாண்டர் கேட்டான். “காந்தார அரசர் இறந்ததும், ஆம்பி குமாரன் அரியணை ஏறியதும் நீ அறிவாயா சசிகுப்தா?”

 

“இல்லை சக்கரவர்த்தி. தங்களுக்கு இந்தச் செய்தியைத் தெரிவித்தது யார்?”

 

“ஆம்பி குமாரனிடமிருந்து வந்த ஒரு தூதன் தான் அதைச் சொன்னான்.”

 

“இருக்கலாம் சக்கரவர்த்தி. காந்தார அரசர் வயோதிகத்தின் காரணமாகச் சில காலம் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார் என்று காந்தாரத்திலிருந்து வருபவர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்....”

 

“இது போன்ற ஆட்சி மாற்றச் செய்திகள் எனக்கு உடனுக்குடன் கிடைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் சசிகுப்தா. குறிப்பாக நான் போகவிருக்கிற பிரதேசங்களில் நடப்பவை எனக்கு முதலில் தெரிய வருவது முக்கியம். பல நேரங்களில் வெற்றி தோல்விகளை நிர்ணயிப்பது நிலவரங்களை முன்கூட்டியே அறிந்திருப்பது தான்...”

 

இந்த ஒரு தகவல் அலெக்ஸாண்டரைப் பொருத்த வரை எதையும் நிர்ணயிக்கப் போகும் தகவல் அல்ல என்பதை சசிகுப்தன் அறிவான். அதை அப்படி அலெக்ஸாண்டரும் நினைக்கவில்லை என்பதையும் அவன் அறிவான். இப்போது அலெக்ஸாண்டர் அதிருப்தியடைந்திருப்பது முக்கியமோ இல்லையோ போகவிருக்கும் இடத்தில் நடந்த செய்தி எப்படி தனக்கு முதலில் கிடைக்கவில்லை என்பதால் தான் என்பதும் அவனுக்குப் புரிந்தது. மிகவும் கூர்மையான அறிவு படைத்த சசிகுப்தன் சில மனக்கணக்குகள் போட்டு என்ன நடந்திருக்கும் என்பதை யூகித்தவனாக மெல்லச் சொன்னான். ”காந்தாரத்திலிருந்து வரும் வணிகர்கள் கூட இதை நமக்குச் சொல்லவில்லை என்பதால் அவர்கள் அங்கிருந்து கிளம்பும் போதும் இதை அவர்களும் அறிந்திருக்கவில்லை என்று தெரிகிறது.”

 

அலெக்ஸாண்டர் சந்தேகத்துடன் கேட்டான். “நாட்டில் அரசர் இறப்பதும், இளவரசர் அரசராவதும் கூட எப்படி மக்களுக்குத் தெரியாமல் போகும் சசிகுப்தா?”

 

“நடக்கும் போது கண்டிப்பாகத் தெரிய வரும் சக்கரவர்த்தி. அவர்களுக்குத் தெரியவில்லை என்றால் நடக்கவில்லை என்று தான் அர்த்தம்”

 

“நீ சொல்வதைப் பார்த்தால் அரசர் இருக்கும் போதே இளவரசன் ஆம்பி குமாரன் தன்னை அரசனாகச் சொல்லிக் கொண்டு தூதரை அனுப்பியிருப்பது போல் அல்லவா தெரிகிறது. ஆம்பி குமாரன் அப்படி ஏன் செய்கிறான்?” அலெக்ஸாண்டர் திகைப்புடன் கேட்டான்.

 

(தொடரும்)

என்.கணேசன்

 



இந்த நாவலையும், அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -

(அல்லது)


நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் ரிஜிஸ்டர் தபால் அல்லது குரியர் மூலமாகப் பெற்றுக் கொள்ளலாம். 

உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்(ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)

நூல்களின் குறிப்பு மற்றும் விலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் - என்.கணேசன் நூல்கள்


அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.


நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை  nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும்.

3 comments:

  1. Great introduction of Alexander the great.

    ReplyDelete
  2. Happy to get to know more about Alexander..student of Aristotle

    ReplyDelete
  3. அலெக்சாண்டரின் மன சிந்தனை... அற்புதமான கருத்து... நம் வாழ்க்கைக்கும் அது பொருந்தக்கூடியதே....

    ReplyDelete