கல்யாணுக்கு யோசிக்க யோசிக்க தாங்கள் செய்திருப்பது வடிகட்டிய முட்டாள்தனம் என்று புரிய ஆரம்பித்தது. சாதாரணமாகவே நாகரத்தினங்கள் வைத்திருந்து சக்தி படைத்தவனாக இருக்கும் நாகராஜ் ஒரு அரை மணி நேர சந்திப்புக்கு ஐந்து லட்சம் வாங்குகிறான். அப்படிக் கொடுத்து அவனைத் தரிசித்து அருள்வாக்கு வாங்க மாதக்கணக்கில் ஆட்கள் காத்திருக்கிறார்கள், அவனுக்குத் தெரிந்த மில் அதிபர் மாதிரியான ஆட்கள் அவனைச் சந்தித்த பிறகு கோடிக்கணக்கில் லாபம் கிடைப்பதாகச் சொல்கிறார்கள் என்பதெல்லாம் அவன் சக்திகளின் அளவைச் சொல்கின்றன. அப்படிப்பட்டவனுக்கு இப்போது விசேஷ நாகரத்தினமும் கிடைத்திருக்கிறது. அதனால் அவனுக்குப் பலமடங்கு சக்திகள் கூடியிருக்கும். அப்படிப்பட்ட சக்திமானின் வீட்டிலிருந்தே அந்த விசேஷ நாகரத்தினத்தைத் திருடக் குறைந்தபட்ச அறிவு படைத்தவனே முயற்சி செய்ய மாட்டானே. இந்தக் கிழவர் ”அவன் என்னைப் பார்த்து சிரிக்கிறான். அதனால் அவனுக்குத் தெரியவில்லை என்று அர்த்தம்” என்று சொன்னதை வைத்து பேராசையினால் முயற்சி செய்யப் போய் அவன் அனுப்பிய ஆள்களை வைத்தே நாகராஜ் அவனிடமிருந்த ஒரே ஒரு சின்ன நாகரத்தினத்தையும் திருடிக் கொண்டானே! நாகராஜின் சிரிப்புக்கு அர்த்தம் இப்போதல்லவா புரிகிறது! அப்படி அவர்களைத் தூங்க வைத்து, அந்த ஆட்களை மயங்க வைத்து இந்த வேலையைச் செய்த நாகராஜுக்கு இந்த வீட்டிலிருந்து எல்லா நகைகள், பணத்தையும் கூட எடுத்துக் கொண்டு போகவும் முடிந்திருக்கும். அவர்களைக் கொன்று விட்டுப் போகவும் கூட முடிந்திருக்கும்.... இதை நினைக்கையில் அவனுக்கு உடல் நடுங்கியது.
வேலாயுதம் திகிலுடன்
கேட்டார். “ஏண்டா நடுங்கறே?”
கல்யாண் காரணத்தைச்
சொன்ன போது அவருக்கும் அது சரிதான் என்று புரிய அவர் பீதியுடன் அவனைப் பார்த்தார்.
“இனி என்னடா செய்யறது?”
அவனுக்கு வழியெதுவும்
புலப்படவில்லை. “ஒன்னுமே புரியலை” என்று சொல்லியபடி
எழுந்தான். இனி இதையே யோசித்துக் கொண்டிருந்தால் பைத்தியம் தான் பிடிக்கும்... அவன்
வெளியே வர வேலாயுதம் பின்னாலேயே வந்தார்.
வெளியே பக்கத்து
வீட்டில் அதிசயமாக நாகராஜும், சுதர்சனும் செடிகளுக்கு இடையே இருந்த களைகளைப் பிடுங்கிக்
கொண்டிருந்தார்கள். சுதர்சன் அந்தப் பக்கத்து காம்பவுண்டு சுவர்பக்கம் இருக்க, நாகராஜ்
இவர்கள் வீட்டுக் காம்பவுண்டு சுவர்பக்கம் தான் இருந்தான்.
வேலாயுதம் மகனிடம்
கேட்டார். “நான் அவன் கிட்ட போய் பேச்சுக் கொடுத்துப் பார்க்கட்டுமா?”
“என்னன்னு பேசப்
போறீங்க?” கல்யாண் திகிலுடன் கேட்டான். ஏதாவது ஏடாகூடமாய் பேசி இன்னும் நிலைமையை அவர்
மோசமாக்கி விடுவாரோ என்ற பயம் அவனுக்கு இருந்தது.
வேலாயுதம் அவனுக்குப்
பதில் சொல்லவில்லை. ”அவன் என்ன தான் சொல்றான்னு பார்ப்போமே! என்று தனக்குள்ளேயே பேசுவது
போல் சத்தமாய் சொல்லி விட்டு கல்யாண் தடுப்பதற்குள் அவர் “குட் மார்னிங்” என்று சத்தமாகச்
சொன்னபடியே காம்பவுண்ட் சுவர் பக்கம் போனார்.
நாகராஜ் நிமிர்ந்து
பார்த்து “குட் மார்னிங்” என்று புன்னகையுடன் சொன்னான்.
வேலாயுதம் ரகசியம்
ஒன்றை அவனுடன் பகிர்ந்து கொள்பவர் போலத் தாழ்ந்த குரலில் சொன்னார். “மூனு நாளைக்கு
முன்னால அதிகாலைல நம்ம ரெண்டு பேர் வீட்டுக்கும் திருடர்கள் வந்திருக்கற மாதிரி தெரியுது.
எதிர்வீட்டுக்காரர் தான் சொன்னார். எங்க வீட்டிலிருந்து வெளியே வந்து உங்க வீட்டுக்குள்ளே
போனாங்களாம். அவனுக அவரைப் பார்த்தும் கூட கொஞ்சமும் பயப்படலையாம். அதனால அவர் நாம
தான் எதோ வேலையை அவனுக கிட்ட ஒப்படைச்சிருக்கோம்னு நினைச்சிருக்காரு. அவர் சொன்ன பிறகு
வீட்ல எல்லாம் செக் பண்ணிப் பார்த்தோம். ஒன்னு ரெண்டு சின்னப் பொருள்கள் தான் காணாம
போயிருக்கு. நீங்க உங்க வீட்டுல எல்லாம் இருக்கான்னு பார்த்தீங்களா?”
அவர் பின்னாலேயே
வந்து நின்ற கல்யாணுக்கு அவர் புத்திசாலித்தனமாய் தான் பேசியிருப்பது போலப் பட்டது.
நாகராஜ் எல்லாம் அறிவான் என்றாலும் கூட இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறான் என்று அறிய
அவரைப் போலவே கல்யாணும் ஆவலாக இருந்தான்.
நாகராஜ்
சொன்னான். “இந்த வீட்டுல திருடறதுக்கு விலை மதிக்க முடியாததுன்னு சொல்ல எங்க உயிரைத்
தவிர எதுவுமே இல்லையே. அதனால ஒருவேளை திருடர்கள் வந்திருந்தாலும் ஏமாந்து தான் போயிருப்பாங்க”
சொல்லி
மீண்டும் ஒரு சிறியதாய் ஒரு புன்முறுவல் பூத்து விட்டு அந்தப்பக்கம் திரும்பி நாகராஜ்
மறுபடி களை பிடுங்க ஆரம்பித்தான். அவன் அதிர்ச்சியோ ஆர்வமோ காட்டாமல் திருட்டு
சம்பந்தமாகவோ, திருடர்கள் சம்பந்தமாகவோ வேறெந்தக் கேள்வியும் கேட்காமல் பேச்சை முடித்துக்
கொண்டது இருவரையும் ஏமாற்றத்திற்குள்ளாக்கியது. கல்யாண் பக்கம் அவன் திரும்பக்கூட இல்லை.
அவர்கள் திரும்பவும்
கார் பக்கம் வந்தவுடன் வேலாயுதம் சொன்னார். “அங்கே விலை மதிக்க முடியாததே உயிர் தானாம்.
நீ சொன்ன மாதிரி ‘உங்க உயிர் போகாம இருக்கிறதே அதிர்ஷ்டம் தான்’னு அவன் நமக்கு சொல்லாமல்
சொல்றானா?”
அஜீம் அகமது ரிஷிகேசத்திலிருந்து டெல்லிக்கு வந்து கொண்டிருக்கும்
போதே போன் மூலமாக ஒருவனிடம் பேசி நாகராஜ் மகராஜ் என்ற நாகசக்தி படைத்த மனிதனைப் பற்றிய
எல்லாத்தகவல்களும் தனக்கு ஒரு நாளில் வந்தாக வேண்டும் என்று கட்டளையிட்டான். பின் அடுத்து
ஒருவனுக்குப் போன் செய்து உடனடியாகச் சென்று பீம்சிங்கைச் சந்திக்கச் சொன்னான். பீம்சிங்கைச்
சந்திக்கும் முறையை விளக்கி, விலாசத்தையும் அவனுக்குத் தந்தான்.
காலை பத்து மணிக்கு
அஜீம் அகமதின் ஆள் சாந்தினி சௌக் பகுதியில் இருந்த செல்வந்தர்கள் மட்டுமே வசிக்க முடிந்த
அந்தப் பெரிய அபார்ட்மெண்ட்ஸை அண்ணாந்து பார்த்தான். பின் பீம்சிங்குக்குப் போன் செய்தான்.
மூன்று முறை அடித்தவுடன் இணைப்பைத் துண்டித்து மறுபடி மூன்று நிமிடம் கழித்து போன்
செய்து அது மூன்று முறை அடித்தவுடன் இணைப்பை மறுபடி துண்டித்து, சரியாக மூன்று நிமிடம்
கழித்து மூன்றாவது முறையும் போன் செய்தான். மூன்றாம் முறை அடித்த போது பீம்சிங் போனை
எடுத்தான். ‘ஹலோ” என்று எச்சரிக்கையுடன் அவன் குரல் கேட்டது.
“நமஸ்தேஜி. அஜீம்ஜி
ஒரு புது வேலை விஷயமா உங்க கிட்டே பேச விரும்பறார்”
“நீங்க எங்கே இருக்கீங்க?”
“உங்க அபார்ட்மெண்ட்ஸுக்கு
எதிர்ப்பக்கம் நின்னுகிட்டிருக்கேன் ஜீ”
சிறிது நேரம் பீம்சிங்
ஒன்றும் சொல்லவில்லை. தன் ஃப்ளாட்டிலிருந்து வெளியே தெரியும் ஆளைப் பார்த்த பின் தான்
உள்ளே அழைப்பதா இல்லை வேண்டாமா என்று முடிவு செய்வான் போலிருக்கிறது. அஜீம் அகமதின்
ஆள் வெயில் விழும் இடத்தில் நின்று கொண்டு மூன்றாவது மாடியைப் பார்த்தான். ஏ3 எந்தப்
பக்கம் என்று சரியாகத் தெரியவில்லை....
பீம்சிங்கின் குரல்
கேட்டது. “சரி செக்யூரிட்டி கிட்ட போங்க. நான் சொல்லியிருக்கேன். உள்ளே விடுவான்”
அவன் சொன்னபடியே
செக்யூரிட்டி வேறெதுவும் கேள்வி கேட்காமல் அஜீம் அகமதின் ஆளை உள்ளே விட்டு லிஃப்ட்
இருக்கும் பக்கம் கைகாட்டினான்.
அஜீம் அகமதின் ஆளை ஏ3 ஃப்ளாட்டில் இருந்த பீம்சிங் சிரிப்பே இல்லாத முகத்துடன் வரவேற்றான். அஜீம் அகமதின்
ஆள் அஜீம் அகமதுக்குப் போன் செய்து அவன் குரல் கேட்டவுடன் செல்போனை பீம்சிங்கிடம் கொடுத்தான்.
“பீம்சிங்.
உன் கடவுள் உனக்கு வேறெந்த வேலைக்கும் வழிகாட்டிடலையே” என்ற அஜீம் அகமதின் குரலைக்
கேட்டவுடன் பீம்சிங் வாய்விட்டுச் சிரித்தபடி சொன்னான். “இல்லைஜி.”
“சரி உனக்கொரு வேலை இருக்கிறது” என்று சொன்ன அஜீம் அகமது
வேலையை விவரித்துச் சொல்லி விட்டு “காளிங்க சுவாமியோட காட்டு
காளி கோயிலுக்கு 22ஆம் தேதி வெள்ளிக்கிழமை
ராகு காலத்துல வீட்ல இருந்து கிளம்பி இருட்டறதுக்குள்ளே போய்ச் சேரணுமாம். அவர் எதோ உனக்கு சக்தி மந்திரக்கவசம்
போட்டு அனுப்பறாராம். 24ஆம் தேதி ராத்திரி இந்த வேலையை அவர் சொன்ன
மாதிரி முடிக்கணுமாம். இந்த வேலைக்கு உன் ரேட்டு என்னன்னு சொல்லு”
“இந்த
வேலை நமக்கு ஆகாது அஜீம்ஜீ. மன்னிச்சுடுங்க. ஆளை விடுங்க”
அஜீம் அகமது திகைப்புடன் கேட்டான். “ஏன்?”
பீம்சிங்
சொன்னான். “அந்தக் காட்டு காளிக் கோயில் பத்தி நிறைய கேள்விப்பட்டிருக்கேன்.
ஒரு பாம்பு சுற்று வட்டாரத்துல இருந்தாலே மனுஷனுக்குத் தூக்கம் வர மாட்டேன்குது. அப்படி இருக்கறப்ப அந்தக்
கோயில்ல நூத்துக்கணக்குல பாம்புக இருக்கு.”
அஜீம்
அகமது சொன்னான். “உன்னை அந்தப் பாம்புகள் கடிக்காதுன்னு அந்த சுவாமிஜி உத்திரவாதம்
கொடுத்திருக்கார் பீம்சிங்”
”சுவாமிஜி என்ன தான் சொன்னாலும் சுற்றி பாம்புகள்
தெரியற இடத்துக்கு அப்படியெல்லாம் தைரியமாய் என்னால போய்ட்டு வர முடியாதுஜீ.” பீம்சிங் திட்டவட்டமாய் சொல்லி
விட்டான்.
(தொடரும்)
என்.கணேசன்
May be Ajeem will go himself!
ReplyDeleteI too guess so
DeleteIn this super novel you are not letting us guess correctly. That's your art sir.
ReplyDeleteஅந்த ரஞ்சனி சந்திப்பு எப்ப வரும்னு தெரியலையே.... பீம்சிங்-ஐ எப்படியாவது பேசி அஜீம் அகமது சம்மதிக்க வைத்து விடுவான்..
ReplyDeletechapters could be bit more lengthy Sir! Please consider for next new novels. Thanks. Nathiya.
ReplyDeleteWe needed Two episodes of Deepavali bonus...
ReplyDeleteதீபாவளி போனஸ் பலவருடங்களாகத் தருவதால் தீபாவளி அன்று காலை ஒரு அப்டேட்டும், மாலை ஒரு அப்டேட்டும் இருக்கும்.
Delete