விஷ்ணுகுப்தர் மறுநாள் அதிகாலையிலேயே தன் சந்தியா வந்தனத்தை வேகமாய் முடித்து விட்டு தட்சசீலத்தில் ஒரு வணிகரைச் சந்தித்துப் பேசி விட்டு வந்தார். அந்த வணிகர் அடிக்கடி பாரசீகம் வரை சென்று பொருட்களை விற்று, அங்குள்ள பொருட்களை வாங்கிக் கொண்டு வந்து இங்கு விற்பவர். போகும் போதும், வரும் போதும் இடையில் உள்ள பிரதேசங்களிலும் வாணிபத்தைச் செய்பவர். அதனால் அங்கே இருக்கும் நிலவரங்களை உற்றுக் கவனிக்கும் வாய்ப்பிருப்பவர். அவரிடம் பாரசீகம் வரை உள்ள நிலவரங்களை விஷ்ணுகுப்தர் எப்போதும் கேட்டறிந்து கொள்வது வழக்கம். சில சமயங்களில் எதையாவது குறிப்பிட்டுச் சொல்லி அதைப் பற்றிய விவரங்களைக் கூர்மையாகக் கண்டறிந்து வரும்படியும் விஷ்ணுகுப்தர் அவரிடம் சொல்வார். அந்த வணிகரின் மகன் கல்வி கற்பதில் மிகவும் பின் தங்கி இருந்தவன். அவனைத் தன் தனிப்பட்ட அக்கறையால் முன்னேற வைத்தவர் விஷ்ணுகுப்தர் என்பதால் விஷ்ணுகுப்தர் மீது அந்த வணிகர் நன்றியுணர்வு கலந்த மிகுந்த மரியாதை வைத்திருந்தபடியால் அவர் கூறும்படியே அந்தக் குறிப்பிட்ட விவரங்களை அந்த வணிகர் கண்டறிந்து வந்து சொல்வது வழக்கம். அவரிடம் சென்று பேசிய போது அவர் இரண்டு நாட்களில் பாரசீகத்திற்குக் கிளம்புவதாக விஷ்ணுகுப்தரிடம் சொன்னார். அவரிடம் தனக்கு வேண்டிய விவரங்களைச் சொல்லி அவை குறித்து கண்டறிந்து வந்து சொல்லும்படி கோரிக்கை விடுத்து விட்டு வந்த விஷ்ணுகுப்தர் அடுத்தபடியாக சந்திரகுப்தன் உள்ளிட்ட தன் முக்கிய மாணவர்களை அழைத்துக் கொண்டு சின்ஹரனைக் காணச் சென்றார்.
சின்ஹரன் விஷ்ணுகுப்தரின்
மாணவர்கள் முகத்தில் தெரிந்த கவலைகளின் ரேகைகளைப் பார்த்தான். அவர்கள் அளவு எந்த உணர்ச்சியையும்
எப்போதும் தன் முகத்தில் காட்டாத விஷ்ணுகுப்தரிடம் சின்ஹரன் கேட்டான். “என்ன ஆயிற்று
ஆச்சாரியரே. காந்தார அரசருக்கு ஏதாவது?...”
அவனைப் பொருத்த
வரை காந்தார அரசரின் மரணமும், ஆம்பி குமாரன் அரியணை ஏறுவதையும் தவிரத் தற்போதைக்குக்
கவலைக்குரிய தகவல் வேறெதுவும் இல்லை.
விஷ்ணுகுப்தர் சொன்னார்.
“காந்தார அரசர் இன்னும் உடலில் இருந்தும் மகனிடமிருந்தும் விடுதலை பெற்று விடவில்லை
சேனாதிபதி. இப்போதைய கவலைக்குரிய தகவல் அலெக்ஸாண்டர் பாரதம் நோக்கி கிளம்பியிருக்கிறான்.
அவனை எதிர்ப்பதற்குப் பதிலாக ஆம்பி குமாரன் அவனுக்கு நட்புக்கரம் நீட்ட முடிவெடுத்திருக்கிறான்
என்பது தான்...”
சின்ஹரன் திகைப்புடன்
கேட்டான். “ஆம்பி குமாரனுக்குப் பைத்தியம் பிடித்து விட்டதா ஆச்சாரியரே?”
“அவனுக்குப் பைத்தியம்
எப்போதோ பிடித்து விட்டது. இப்போது அது முற்றி விட்டது. அவ்வளவு தான்.... நீ உன் தாய்நாட்டுக்குக்
கடமையாற்ற வேண்டிய நேரம் நெருங்கி விட்டது சேனாதிபதி. நீ மட்டுமல்ல நாம் அனைவரும் வேகமாக
இயங்க வேண்டிய காலம் வந்து விட்டது.”
“நான் என்ன செய்ய
வேண்டும் என்று சொல்லுங்கள் ஆச்சாரியரே” என்று ஆவலுடன் சின்ஹரன் கேட்டான். தன் தவறுக்கு
ஏதாவது வகையில் விரைவிலேயே பிராயச்சித்தம் செய்ய முடிந்தால் அவன் மனப்பாரம் சிறிதாவது
குறையும்.
“உடனடியாக நீ செய்ய
வேண்டியது நான் தொலைதூரம் வேகமாகச் சென்று வருவதற்கு ஒரு நல்ல குதிரையை நீ தேர்ந்தெடுத்துத்
தர வேண்டும். அடுத்தபடியாக, நான் திரும்பி வருவதற்குள் நீ இவர்களுக்கு எல்லாப் போர்ப்பயிற்சிகளும்
தந்து தயார்நிலையில் இருத்த வேண்டும்...”
விஷ்ணுகுப்தர் தன் நீண்ட பயணத்தைத் துவங்குவதற்கு முன் சந்திரகுப்தனைத்
தனியாக அழைத்துச் சொன்னார். “சந்திரகுப்தா. உன் வாழ்வில் முக்கியமானதொரு கட்டம் நெருங்க
ஆரம்பித்திருக்கிறது. நீ முழுக் கவனத்துடன் உன் திறமைகளைக் கூர்மைப்படுத்திக் கொள்ள
வேண்டும். அதிர்ஷ்டம் என்பது வாய்ப்புகள் வரும் போது ஒருவன் தயாராக இருப்பதே. சந்தர்ப்ப
வசத்தால் நாம் பெறும் உயர்வுகள் இன்னொரு சந்தர்ப்ப வசத்தால் நம்மிடமிருந்து போயும்
விடலாம். ஆனால் ஒருவன் தகுதியாலும், உழைப்பாலும் சம்பாதித்துப் பெறுவதைத் தக்க வைத்துக்
கொள்ளும் சாமர்த்தியத்தையும் பெற்று விடுகிறான். அதனால் இனி நீ கற்க வேண்டியதையும்
விரைவில் கற்றுக் கொள். சின்ஹரன் மிகவும் திறமையானவன். அனுபவம் உள்ளவன். அவன் கற்றுத்
தரும் சூட்சுமங்களை முழுவதுமாகக் கற்றுக் கொண்டு விடு. இனி நம்மிடம் அதிக காலம் இல்லை....”
சந்திரகுப்தன் எப்போதும்
போல அவர் சொல்வதை எல்லாம் மிகக் கவனமாகக் கேட்டுக் கொண்டான். அவனைப் பொருத்த வரை அவர்
சொல்லும் எதுவும் அலட்சியப்படத் தகுந்தது அல்ல. பின் சரியென்று தலையசைத்தான்.
அவர் மெல்லக் கேட்டார்.
“பாடலிபுத்திரத்தில் உன் தாயாரிடம் நான் எதாவது சொல்ல வேண்டுமா?”
தாயாரின் நினைவு
சந்திரகுப்தனை மென்மையாக்கியது. அவளை விட்டு வந்து காலம் நிறைய ஆகி விட்டது. அவனுக்குத்
தாயிடம் எத்தனையோ சொல்ல இருந்தன. சிறுவனாக அவளைப் பிரிந்த அவன் இளைஞனாக உருமாறி இருக்கும்
இந்த இடைப்பட்ட காலத்தில் எத்தனையோ சம்பவங்களை அவளிடம் சொல்ல அவன் மனதில் சேகரித்து
வைத்திருக்கிறான். ஆனால் அவை ஆச்சாரியரிடம் சொல்லி அனுப்பக் கூடியவை அல்ல.... ”அவருடைய
ஆசியாலும் பிரார்த்தனையாலும் நான் மிகவும் நலமாக இருப்பதாகச் சொல்லுங்கள் ஆச்சாரியரே....”
இந்திரதத் விஷ்ணுகுப்தரின் வருகையைச் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை.
வந்திருப்பது தன் நண்பன் தானா, இது கனவு ஒன்றும் அல்லவே என்று சந்தேகப்பட்டு சந்தேகம்
தெளிந்த பின் அவர் ஓடி வந்து நண்பனை அரவணைத்துக் கொண்டார். நண்பனை உபசரித்து அமர வைத்த
பின் அவர் கேட்டார். ”என்ன விஷ்ணு திடீரென்று....?”
விஷ்ணு குப்தர்
ஆம்பி குமாரனின் உத்தேசத்தைச் சொன்ன போது அவரும் திகைத்தார். ஆனால் அனைவரும் ஒன்று
பட்டு அலெக்சாண்டர் ஆம்பி குமாரன் கூட்டணியை எதிர்த்தால் ஒழிய யாரும் தங்களைக் காப்பாற்றிக்
கொள்ள முடியாது என்று விஷ்ணுகுப்தர் சொன்ன போது அவர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.
“கேகய நாட்டின்
படை வலிமையை நீ சரியாகப் தெரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன் நண்பா. ஆம்பி குமாரனையும்,
அலெக்ஸாண்டரையும் எதிர் கொள்ளும் வலிமையை நாங்கள் நிச்சயமாகப் பெற்றிருக்கிறோம்...”
மனதில் எழுந்த சலிப்பை
வெளிப்படுத்திக் கொள்ளாமல் விஷ்ணுகுப்தர் பொறுமையாக சந்திரகுப்தனிடம் சொன்னபடியே அலெக்ஸாண்டரின்
அனைத்து வலிமைகளையும் நண்பனிடன் சொன்னார். கேட்டுக் கொண்ட இந்திரதத் அலெக்ஸாண்டரின் விசேஷத்
தன்மைகளை எண்ணி வியந்தாலும் தங்களால் அவர்களை வெல்ல முடியும் என்ற எண்ணத்தை மாற்றிக்
கொள்ள முடியாதவராக இருந்தார். “விஷ்ணு
நான் படை வலிமையை மட்டும் பேசவில்லை. நீ சொன்னபடி அலெக்ஸாண்டர் வலிமையானவனாகவே இருந்தாலும்
கூட நாங்கள் எங்களுக்குத் தெரியாத ஏதோ ஒரு பிரதேசத்துக்குச் சென்று அவனுடன் போரிடப்போவதில்லை.
அவன் தான் இங்கே வரப் போகிறான். இங்கே ஒவ்வொரு இடமும் நாங்கள் நன்கறிந்தவை. அவனுக்குத்
தான் இந்த இடங்கள் புதியவை. இங்குள்ள மலைப்பகுதிகளும், நதியும், மற்ற பகுதிகளும் நாங்கள் தினமும் வாழ்ந்தும், பயன்படுத்தியும் வரும்
இடங்கள். போர்களில் இரு பக்கங்களின்
படை வலிமை மட்டும் வெற்றியைத் தீர்மானிப்பதில்லை. அந்த இடம், சீதோஷ்ணம் போன்றவை கூட
அவற்றைத் தீர்மானிப்பவையாகவே இருக்கின்றன. இதெல்லாம் நீ அறியாதவை அல்ல... எங்கள் பூமியில்
வந்து போரிடப்போகும் அவர்களை வெல்லும் வலிமை எங்களுக்கு இருக்கிறது என்பதில் எனக்குச்
சந்தேகம் இல்லை....”
விஷ்ணுகுப்தர் பொறுமையாக
அத்தனையும் கேட்டுக் கொண்ட பின் சொன்னார். “நானும் படை வலிமையை மட்டும் பேசவில்லை.
அலெக்ஸாண்டரின் போர் யுக்தியையும், தந்திரத்தையும் தான் உன்னிடம் எச்சரிக்கிறேன். போரிடப்
போகும் இடங்களைப் பற்றி முழுவதுமாகவும் தெளிவாகவும் அறிந்து கொள்ளாமல் அலெக்ஸாண்டர்
போருக்குப் போவதில்லை. என் கணிப்பு சரியாக
இருக்குமானால் இங்கே வருவதற்கு முன்பும் அதை மனதில் தெளிவுபடுத்திக் கொண்ட பிறகு தான்
வருவான். போரில் உங்கள் அனுபவத்தை விட அவனுடைய அனுபவம் அதிகம் இந்திரதத். அவன் அறிவின்
விசாலம் உங்களை வெல்லும் வழியை அவனுக்குக் காண்பிக்காமல் இருக்க வழியில்லை. ஏனென்றால்
உங்களைப் போல் எத்தனையோ எதிரிகளைப் பார்த்து, வென்று விட்டு வந்து கொண்டிருப்பவன் அவன்.
அவன் இது வரை தோல்வியே கண்டறியாதவன் என்று சொல்கிறார்கள். ஆம்பி குமாரனின் உதவியும்
அவனுக்கு இருக்குமானால் அவனுக்கு கேகய நாடு எளிமையாகவே இருக்கும்”
இந்திரதத் தன் நண்பனை
ஆழ்ந்த ஆலோசனையுடன் பார்த்தார். விஷ்ணுகுப்தரின்
அறிவு ஒருவனை இந்த உயர்விற்கு நினைக்கிறது என்றால் அந்த மனிதன் ஆபத்தை விளைவிக்க முடிந்தவனாகவே
இருக்க வேண்டும். ஏனென்றால் தெளிவாகத் தெரிந்து கொள்ளாமல் எதைப் பற்றியும் அனுமானத்தில்
பேசும் ஆள் விஷ்ணுகுப்தர் அல்ல. அனாவசியமான வார்த்தைகள் அவரிடம் கிடையவும் கிடையாது....
அலெக்ஸாண்டரின் அறிவுக்கூர்மையை விட விஷ்ணுகுப்தரின் அறிவுக்கூர்மைக்கு அதிக முக்கியத்துவம்
தந்த இந்திரதத் உண்மையாகவே ஆபத்தை மெள்ள உணர ஆரம்பித்தார்.
(தொடரும்)
என்.கணேசன்
(அல்லது)
நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பே, போன் பே, மற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம். (ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)
நூல்களின் குறிப்பு மற்றும் விலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் - என்.கணேசன் நூல்கள்
அக்கவுண்ட் விவரங்கள் -
G-pay UPI ID : gshubha1968@oksbi
Phonepe UPI ID: nganeshanbooks@ybl
வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch
IFSC Code DBSS0IN0188
A/c No.0188386000001146
தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.
நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும்.
Nice way of unfolding the historical events sir. Very interesting.
ReplyDeleteஐயா, சாணக்கியர் போல எதையும் கூர்மையாக கவனிப்பது எப்படி?
ReplyDeleteஅறிந்து கொள்ளும் அவசியமும், ஆர்வமும் இருந்தால், கூர்மையாகக் கவனிக்கும் கலை தானாக ஒருவனுக்கு வந்துவிடும்.
DeleteNice Reply.Tks.
Deleteவிஷ்ணு குப்தரின் இந்த பயணமும் அவர் எடுக்கும் முயற்சிகளும் எந்த அளவு வெற்றிபெறும் என்று தெரிரவில்லையே...
ReplyDelete