“என்ன
செய்தி?” என்று சிவாஜி தன் ஒற்றர் தலைவனிடம் கேட்டான்.
“முகலாயச்
சக்கரவர்த்தி இளவரசர் முவாசிம்மையும், ராஜா ஜஸ்வந்த்சிங்கையும் திரும்ப வரவழைத்துக்
கொண்டு தக்காணத்திற்கு ராஜா ஜெய்சிங்கையும், தில்லர்கானையும் பெரும்படையுடன் அனுப்பி
இருக்கிறார் மன்னா!” ஒற்றர் தலைவன் குரலில் கவலை தொனித்ததாக சிவாஜி உணர்ந்து நிமிர்ந்து
உட்கார்ந்தான். ஆபத்தின் அறிகுறி தெரியாமல் ஒற்றர் தலைவன் கவலைப்பட மாட்டான்.
சிவாஜி
ராஜா ஜெய்சிங் பெயரை ராஜபுதன மாவீரர் என்ற அளவில்
கேள்விப்பட்டிருக்கிறான். ஆனால் தில்லர்கான் அவன் கேட்டறியாத பெயர். சிவாஜி
ஒற்றர் தலைவனிடம் சொன்னான். “இருவர் பற்றியும் நான் விரிவாக அறிய விரும்புகிறேன்”
“ராஜா
ஜெய்சிங் ஷாஜஹான் சக்கரவர்த்தியாக இருந்த போதே அவருடன் சேர்ந்து பல போர்கள் கண்டவர்.
வடக்கில் கந்தஹார் கோட்டையை, போராடி முகலாயர்களுக்குப் பெற்றுத் தந்ததால் ஷாஜஹான் அவருக்கு
மிர்சா ராஜா என்ற பட்டத்தை அளித்து கௌரவப்படுத்தியிருக்கிறார். பின் அரியாசனப் போட்டி
நடந்த போது ஷாஜஹானின் மூத்த மகனான தாரா ஷுகோவுடன் சேர்ந்திருந்தவர் அவர். தாரா ஷுகோவ்
ராஜா ஜெய்சிங்கை சரியாக நடத்தியிருந்து, அவருடைய அறிவுரையையும் கேட்டிருந்தால் இன்று
தாரா ஷுகோவ் தான் சக்கரவர்த்தியாக இருந்திருப்பார் என்று அரசியல் கூர்நோக்காளர்கள்
கருதுகிறார்கள் மன்னா. ஆனால் விதியும், மதியும் சதி செய்ய தாரா ஷுகோவ் அரியணையையும்,
தலையையும் சேர்த்தே இழந்தது வரலாறு. தனக்கு எதிராக இருந்தவர்களையெல்லாம் மன்னிக்காத
சக்கரவர்த்தி ஔரங்கசீப், தனக்கு லாபம் தரக்கூடிய விஷயங்களில் சில விதிவிலக்குகளை அனுமதிப்பதுண்டு.
அந்த வகையில் ராஜா ஜெய்சிங்குக்கு பதவியும், அந்தஸ்தும் தந்து தன் பக்கம் இழுத்துக்
கொண்டிருக்கிறார். ராஜபுதன மாவீரனான ஜெய்சிங்
மிகுந்த அறிவாளியும் கூட. பண்பாளர், வாக்கு மாறாதவர், எந்தப் பாதகமான சூழ்நிலைகளிலும்
தளராதவர் என்றெல்லாம் அவரை அறிந்தவர்கள் சொல்கிறார்கள்…”
“தில்லர்கான்?”
“தில்லர்கானும்
ஷாஜஹான் சக்கரவர்த்தியாக இருந்த போதே முகலாயர்களுடன் இருந்த மாவீரர். பலவான். போர்க்களத்தில்
எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பவர். இந்த இருவருக்கும் முகலாயச் சக்கரவர்த்தி
இட்டிருக்கிற ஒரே கட்டளை உங்களை வீழ்த்த வேண்டும் என்பது தான். ’எத்தனை கூடுதல் படை
தேவைப்பட்டாலும் அனுப்பி வைக்கிறேன். எத்தனை செல்வம் தேவைப்பட்டாலும் தருகிறேன். சிவாஜியை
வீழ்த்தி சிறைப்பிடித்து வாருங்கள் அல்லது நட்புக்கரம் ஏற்க வைத்து டெல்லிக்கு அழைத்து
வாருங்கள்’ என்று சக்கரவர்த்தி சொல்லி அனுப்பியதாகக் கேள்வி”
இப்போது
வரும் எதிரிகள் திறமையானவர்கள், வலிமையானவர்கள் என்று அறிந்த பின்னரும் சிவாஜி கலக்கம்
அடையவில்லை. பார்த்துக் கொள்வோம் என்று ஆரம்பத்தில் சற்று அலட்சியமாகவே இருந்தான்.
சமீப காலங்களில் தக்காணத்தில் அவன் கையே ஓங்கியிருந்தது. பல துறைமுக நகரங்கள் அவன்
வசமாகியிருந்தன. கப்பற்படையையும் அவன் வலிமைப் படுத்தி இருக்கிறான். நிதி நிலைமையும்
மிக நன்றாகவே இருந்தது.
ஆனால்
இது வரை அவனுக்குச் சாதகமாக இருந்த விதி இப்போது இடம் மாறி அவனுக்கு எதிராகச் சம்பவங்களைப்
பின்ன ஆரம்பித்தது. ராஜா ஜெய்சிங் சிவாஜியைப் பற்றிய முழு விவரங்களையும் பெற்றிருந்ததால்
மிக புத்திசாலித்தனமாகக் காய்களை நடத்தினார். சிவாஜிக்கு எதிராக அவன் மீது வருத்தமுள்ளவர்கள்
எல்லோரையும் ஒன்று கூட்ட ஆரம்பித்தார்.
பீஜாப்பூர்
சுல்தான் அலி ஆதில்ஷா ஷாஹாஜி உள்ள வரை சிவாஜியுடன் சமாதானமாகவே இருந்தான். ஷாஹாஜியின்
மறைவுக்குப் பின் அவருடைய சேவைகளை எல்லாம் பாராட்டி இரங்கல் கடிதத்தை வெங்கோஜிக்குத்
தான் அனுப்பி வைத்தான். ஷாஹாஜி கட்டுப்பாட்டில் இருந்த கர்நாடக, தஞ்சாவூர் பகுதிகளை
வெங்கோஜியிடம் ஒப்படைத்தான். ஆனால் எல்லா விதங்களிலும் வளர்ந்து வரும் சிவாஜி ஷாஹாஜிக்குப்
பிறகு அவனிடம் பழையபடி நட்பு பாராட்டி அமைதியாக இருப்பான் என்று அவனால் நம்பியிருக்க
முடியவில்லை. அதனால் சிவாஜியுடன் மட்டும் தொடந்து சமாதானமாக இருக்க அவன் மனமும், சூழ்நிலைகளும்
அனுமதிக்கவில்லை. ஜெய்சிங் மூலம் சிவாஜியை எதிர்க்க முகலாயர்கள் நட்புக்கரம் நீட்டிய
போது அவன் அவர்கள் பக்கமே சாய்ந்தான்.
அப்சல்கானின்
மகன் ஃபசல்கான், சிவாஜியுடன் பகைமை பாராட்டிய சிற்றரசர்கள், கோட்டைத்தலைவர்கள் ஆகியோரையும்
ராஜா ஜெய்சிங் தன் பக்கம் இழுத்தார். சிவாஜி மேல் அதிருப்தி அல்லது பொறாமை கொண்ட மற்ற
சிலர் தாமாகவே ராஜா ஜெய்சிங்குடன் சேர்ந்தனர். பம்பாய் மற்றும் கோவா பகுதிகளில் இருந்த
ஐரோப்பியக் கப்பல் படையினருக்கு தங்களுடன் இணைய அழைப்பு விடுத்து அவர்களையும் ராஜா
ஜெய்சிங் சேர்த்துக் கொண்டார்.
சிவாஜிக்கு
எதிராக மற்ற எல்லோரையும் சேர்த்துக் கொண்டு விட்ட பின் ராஜா ஜெய்சிங் சிவாஜியின் சிங்கக்கோட்டை
நோக்கி படையுடன் புறப்பட்டார். வழியில் இருந்த சிவாஜியின் ஆளுமைக்குட்பட்ட பகுதிகள்
எல்லாம் தன்வசப்படுத்திக் கொண்டு அவர் முன்னேறினார். தில்லர்கான் ஒரு தனிப்படையுடன்
சிவாஜியின் முக்கியக் கோட்டையான புரந்தர் கோட்டையைக் கைப்பற்றப் புறப்பட்டான்.
புரந்தர்
கோட்டையின் தலைவன் முரார் பாஜி மாவீரன். கொரில்லாப் போர்முறையில் தலைசிறந்தவன். அவன்
கொரில்லா தாக்குதல் முறைகளைப் பயன்படுத்தி முகலாயப்படையையும், தில்லர்கானையும் திக்குமுக்காட
வைத்துக் கொண்டிருக்கும் செய்தி சிவாஜியை வந்து சேர்ந்தாலும் தில்லர்கானும் பின் வாங்காமல்
கடுமையாகப் போரிட்டுக் கொண்டிருக்கிறான் என்ற செய்தியும் பின் தொடர்ந்தது.
இப்படி
சிவாஜி முதல் முறையாக அதிபுத்திசாலித்தனமும், பெரும்படை வலிமையும் கொண்ட ஒரு கூட்டு
எதிர்ப்பைச் சந்திக்க நேர்ந்தது. ஒரு பக்கம் இப்படி அவனை நெருக்கடிக்கு உள்ளாக்கிக்
கொண்டிருந்த ராஜா ஜெய்சிங் மறுபக்கம் தூதர்கள் மூலமாக சமாதான உடன்படிக்கை ஏற்படுத்திக்
கொள்ள வரும்படி அழைப்பையும் விடுக்க ஆரம்பித்தார்.
சக்கர
வியூகத்தில் சிக்கிக் கொண்டது போல் உணர்ந்த சிவாஜி இந்த நிலை நீடித்தால் தோல்வி நிச்சயம்
என்று உணர ஆரம்பித்தான். வாழ்க்கையின் இக்கட்டான சமயங்களில், அவன் அறிவுக்குத் தீர்வுகள்
எட்டாத நேரங்களில், அன்னை பவானியின் உதவியை நாடும் சிவாஜி ஒரு நாள் நீண்ட பிரார்த்தனையைச்
செய்தான்.
அது
போன்ற தீவிரப் பிரார்த்தனைகளில் அன்னை பவானியின் பதில் கிடைக்காமல் அவன் பிரார்த்தனையிலிருந்து
எழுந்தது இல்லை. வரம் கிடைக்காமல் தவம் கலையாத மகா தவசிகளைப் போல் சிவாஜியும் அன்னை
பவானி முன் அமர்ந்திருப்பான். அன்றைய பிரார்த்தனை வழக்கத்தை விட நீண்டது. கடைசியில்
அன்னை பவானி அவன் உணர்வில் பதில் அளித்தாள்.
“மகனே.
உனக்கு காலம் இப்போது சாதகமாக இல்லை. அப்சல்கானையும், செயிஷ்டகானையும் சமாளித்து வென்றது
போல் நீ ஜெய்சிங்கை வெல்ல முடியாது. உடைவதை விடப் பணிவது புத்திசாலித்தனம் மகனே. அதனால்
சமாதானத்தை ஏற்றுக் கொள். ஆபத்துக்கள் உனக்கு இனியும் காத்திருக்கின்றன. ஆனால் நான்
உன் உடனிருந்து காப்பேன் என்பது மட்டும் நிச்சயம்”
ஒரு
விதச் சிலிர்ப்பிலிருந்து மீண்ட சிவாஜி அன்னை பவானியின் அறிவுரையை ஆழ்ந்து யோசித்துக்
கொண்டிருக்கையில் அவனுடைய மிகச் சக்தி வாய்ந்த புரந்தர் கோட்டையின் கீழ் பகுதிகளைக்
கண்ணி வெடி வைத்துத் தகர்த்து ருத்ர மால் பகுதியை தில்லர் கான் கைப்பற்றி விட்டதாகவும்,
பலத்த காயங்களுடன் கடைசி வரை போராடி முகலாயச் சேனைக்குப் பலத்த சேதத்தை ஏற்படுத்தி
விட்டு முரார் பாஜி வீரமரணம் அடைந்ததாகவும் சிவாஜிக்குத் தகவல் வந்து சேர்ந்தது.
முரார்
பாஜியின் வீரமரணம் சிவாஜியை மிகவும் பாதித்தது. காலம் எதிராக இருக்கும் போது போராட்டத்தைத்
தொடர்வதில் அர்த்தமில்லை என்பது புரிந்தது. இனி எத்தனை உயிர்களைப் பலி கொடுத்தாலும்
வெல்வது சாத்தியமில்லை என்று விதி உறுதியாக இருக்கும் போது வீரம் என்ற பெயரில் உயிர்ப்பலிகளை
அனுமதிப்பதில் அர்த்தமில்லை என்று சிவாஜி உணர்ந்தான்.
பகைவனிடம்
பணிவது அவனுக்கு மிகவும் கஷ்டமான விஷயம். உயிரை விடுவது கூட அதை விட மேல் என்று நினைப்பவன்
அவன். ஆனால் சுயராஜ்ஜியம் என்ற பெருங்கனவைக் கண்டு வரும் அவன் வீரம் என்ற பெயரில் மடிவது
முட்டாள்தனம் என்பதை உணர்ந்தான். உடைவதை விடப் பணிவது புத்திசாலித்தனம் மகனே என்ற அன்னையின்
வார்த்தைகள் கசந்த போதிலும் அதில் உண்மையும் இருப்பதை உணர்ந்த அவன் இப்போதைக்குப் பணிந்து
தன்னையும், தன் கனவையும் காப்பாற்றிக் கொள்ளத் தீர்மானித்தான்.