சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, December 19, 2019

இல்லுமினாட்டி 28

ந்த தடிமனான ஃபைலை அவருடைய மேஜையில் வைத்து விட்டு இம்மானுவல் சொன்னான். ”இதில் விஸ்வம் இந்தியாவில் ஹரித்வாரில் தங்கி இருந்த வீட்டில் அவனைச் சந்தித்த மனிதர்கள் முதற்கொண்டு எல்லாத் தகவல்களும் இருக்கின்றன தலைவரே. அங்கே மாஸ்டரைத் தவிர அவனை அதிகம் சந்தித்த மனிதர்கள் யாருமில்லை. அவனாகச் சென்று சந்தித்த மனிதர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவு குறைந்த மனிதர்களே. அவர்களுடனும் அவன் தொடர்ந்து தொடர்பில் இருக்கவில்லை. ஏதாவது ஒரு வேலையாக வேண்டிச் சந்தித்து, வேலை முடிந்த பின் அவர்களிடமிருந்தும் தூரமாகவே இருந்திருக்கிறான். மாஸ்டரின் ரகசிய ஆன்மீக இயக்கத்தில் சேர்வதற்கு முன் அவன் தொடர்பு வைத்திருந்தது சில அபூர்வ சக்திகள் இருந்த குருமார்களிடம் மட்டுமே. அந்தத் தொடர்பும் அவன் கற்று முடிந்த பின் இருக்கவில்லை. அவன் புனேயில் நம் இல்லுமினாட்டியின் நவீன்சந்திர ஷாவைச் சந்தித்த பிறகு அவனை மிக உன்னிப்பாக எங்கள் பார்வையிலேயே வைத்திருந்தோம். அவன் பின்னால் எப்போதுமே நம் ஆள் ஒருவன் இருந்திருக்கிறான். அப்படிக் கண்காணித்த போது கூட அவன் வேறு எந்த ஒரு ஆளுடனாவது நெருங்கிய தொடர்பில் இருந்த தடயம் நமக்குக் கிடைக்கவில்லை. அவன் லண்டனுக்குப் போய் நம் இல்லுமினாட்டியின் உறுப்பினர்களைப் பார்த்த போதும் சரி, பிறகு ம்யூனிக் நகரத்திற்கு வந்து நம் செயற்குழு உறுப்பினர்களைப் பார்த்த போதும் சரி அவனை யாரும் பின் தொடர்ந்து வரவில்லை என்பது உறுதி. ம்யூனிக் நகரத்திற்கு அவன் ஆரம்பத்தில் வந்த அந்த நாளுக்கு முன்னேயே யாராவது வந்து இங்கே அவனுக்காகக் காத்திருக்கும் வாய்ப்பு இருக்கிறதா என்பதையும் கூட எல்லாக் கோணங்களிலும் சோதித்துப் பார்த்து விட்டோம். அவனை யாரும் பின் தொடரவோ, கண்காணிக்கவோ இல்லை... ம்யூனிக்கில் இரண்டாவதும், கடைசியுமான கூட்டத்தில் பேச அவன் திரும்ப வந்த போதும் அவனைத் தொடர்ந்து யாரும் வரவில்லை. முன்பே வந்திருந்து அவனைப் பின் தொடரவும் இல்லை..”

இம்மானுவல் சொன்னதை எல்லாம் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்த எர்னென்ஸ்டோ அவன் மேஜையில் வைத்த ஃபைலை எடுத்துப் பிரித்துப் பார்த்தார். விஸ்வம் இந்தியாவில் தொடர்பில் இருந்தவர்கள், அவர்கள் பற்றிய விவரங்கள், அவர்களை அவன் எத்தனை முறை சந்தித்திருக்கிறான் என்பதிலிருந்து ஏராளமான தகவல்கள் வரிசைப்படுத்தப்பட்டிருந்தன. இல்லுமினாட்டியின் கவனத்திற்கு விஸ்வம் வந்த பிறகோ சிறிய தகவல்கள் கூட விடுபட்டிருக்கவில்லை. அவன் இரண்டு முறை ம்யூனிக் வந்த போதும் விமானத்தில் அவனுடன் பயணித்த பயணிகளில் எத்தனை பேர் அவன் தங்கிய ஓட்டலிலேயே தங்கினார்கள், எத்தனை பேர் அருகிலிருந்த ஓட்டல்களில் தங்கினார்கள், அவர்களில் யாரிடமெல்லாம் விஸ்வம் ஒரு வார்த்தையாவது பேசினான் என்பது முதற்கொண்டு எல்லாத் தகவல்களும் பல புகைப்படங்களோடு இருந்தன. ம்யூனிக் நகரத்திற்குப் பயணத்திற்கான இரண்டு முறைப் பயணத்திலும் பயணம் செய்திருந்த ஒரு பயணியின் வாழ்க்கை வரலாறே அந்த ஃபைலில் இருந்தது. அதே போல் இரண்டு முறையும் அவன் தங்கியிருந்த ஓட்டலில் அதே நாட்களில் தங்கியிருந்த இரண்டு நபர்களின் வாழ்க்கை வரலாறுகளும் இருந்தன. இந்த மனிதர்கள் எல்லோருமே வெவ்வேறு சமயங்களில் அந்த இடத்தை விட்டுப் போயிருக்கிறார்கள். இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற தகவல்கள் கூட அந்த ஃபைலில் இருந்தன.

அந்த ஃபைலின் பக்கங்களை மேலோட்டமாகப் புரட்டிக் கொண்டே வந்து அவ்வப்போது ஒரு சில விவரங்களைக் கூடுதல் கவனத்துடன் படித்து விட்டு ஃபைலை மூடிய எர்னெஸ்டோ இதற்கு மேல் கண்காணிக்க எதுவுமில்லை என்று நினைத்தபடி இம்மானுவலிடம் அமைதியாகக் கேட்டார். “இத்தனை தகவல்களுக்குப் பின்னும் அவன் கூட்டாளியைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதைத் தவிர வேறு எந்த முடிவை நீ எட்டி இருக்கிறாய் இம்மானுவல்?”

அந்த ஆள் விஸ்வத்தை விட அதிகமான சக்திகள் படைத்த ஆள் என்பதில் சந்தேகமில்லை. அந்த அதீத சக்திகள் மூலமாகவே விஸ்வத்துக்குத் தெரியாமலேயே அந்த ஆள் அவனைக் கண்காணித்திருக்க வேண்டும். ஏனென்றால் விஸ்வத்தின் குணாதிசயங்களை அலசியதில் அவன் இன்னொருவர் கண்காணிப்பில் இருப்பதை ரசிப்பான் என்று தோன்றவில்லை. அதனால் அப்படி அதிகமான சக்திகள் படைத்த அந்த ஆளை விஸ்வத்திற்குத் தெரிந்திருக்க வழியில்லை. அப்படித் தெரிந்திருந்தால் அந்த ஆளிடம் தானும் கற்று அந்த ஆளை மிஞ்சியிருக்காமல் விஸ்வம் இருந்திருக்க மாட்டான்... ”

இம்மானுவல் சொன்னதை ஒரு நிமிடம் யோசித்து விட்டு எர்னெஸ்டோ சொன்னார். ”முன்பின் தெரியாத ஆள் விஸ்வத்தின் நடவடிக்கைகளை ஏன் கவனித்து வந்திருக்க வேண்டும்? அவன் ஏன், எந்த வகையில் விஸ்வத்தைத் தொடர்பு கொண்டான்? அப்படித் தெரியாதவன் ஒருவனை நம்பி விஸ்வம் அவனுடன் காரில் போயிருப்பானா?”
                                          
இம்மானுவல் சொன்னான். “அதையும் நாங்கள் சிந்திக்காமல் இல்லை. ஒருவேளை அந்த அதிசக்தி மனிதன் விஸ்வத்திற்குப் பரிச்சயமான, ஆனால் அதிகம் தொடர்பில் இல்லாத ஆளாய் இருக்கலாம். அந்த ஆள் தன் சக்தி மூலமாகவே விஸ்வத்துக்கே தெரியாமல் அவனைக் கண்காணித்துக் கொண்டும் இருந்திருக்கலாம். இன்னொரு யூகமும் இருக்கிறது...”

சொல்லி விட்டு அவரை இம்மானுவல் தயக்கத்துடன் பார்த்தான். எர்னெஸ்டோ சொன்னார். “எதுவாக இருந்தாலும் தயங்காமல் சொல்

இம்மானுவல் சொன்னான். “க்ரிஷை ஒரு ஏலியன் தொடர்பு கொண்டது போல் விஸ்வத்தைத் தொடர்பு கொண்டதும் ஒரு ஏலியனாகவோ, அல்லது அதற்கு இணையான அமானுஷ்ய சக்தியாக இருக்கலாம்ஏனென்றால் விஸ்வத்தின் மரணத்தைப் பற்றித் தெரிந்து கொண்டதிலிருந்து அவனை இன்னொரு உடம்பில் புகுந்து கொள்ள வைத்து ரகசியமாய் அழைத்துக் கொண்டு போயிருக்கும் விதத்தையும் பார்த்தால் அமானுஷ்ய முத்திரை தான் தெரிகிறது. ஆழமாக யோசித்துப் பார்த்தால் க்ரிஷ் விஷயத்தில் நடந்தது தான் விஸ்வத்தின் விஷயத்திலும் நடந்திருக்கிறது...

”எதைச் சொல்கிறாய்?”

“க்ரிஷைக் கடுமையான விஷப்பாம்பு கடித்து இறக்க இருந்த சமயத்தில் ஏலியன் தான் அவனைக் காப்பாற்றியிருக்கிறது.  இரண்டு நிமிடங்களில் கிட்டத்தட்ட 16000 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிற அமேசான் காடுகளுக்கு அவனைத் தூக்கிக் கொண்டு போய் விஷமுறிவு மருந்து தந்து காப்பாற்றி இருக்கிறது. அது மனிதர்களால் முடிந்த காரியம் அல்ல. சில வினாடிகளுக்குப் பின் சாட்டிலைட் காமிராவுக்குக் கூட சம்பந்தப்பட்ட காட்சிகள் அகப்படவில்லை. விஸ்வமும் இறந்து போய்க் கிட்டத்தட்ட இதே போல் அமானுஷ்ய முறையில் தான் காப்பாற்றப்பட்டு இருக்கிறான். அவனுடைய கூட்டாளி நம்முடைய இத்தனை துல்லியமான கண்காணிப்பில் கூட எந்த விதத்திலும் நமக்கு அகப்படாமல் இருப்பதற்கு அதே காரணமாக ஏன் இருக்கக்கூடாது?....”

எர்னென்ஸ்டோ அவனைத் திகைப்புடன் பார்த்தபடி சொன்னார். “எனக்குத் தலை சுற்றுகிறது. இன்னொரு ஏலியனா?”

இம்மானுவல் சொன்னான். “யூகம் தான். ஏலியனாக இல்லாவிட்டால் வேறெதோ அமானுஷ்ய சக்தியாக இருந்திருக்கலாம். விஸ்வத்தின் கூட்டாளி ஒரு மனிதனாக இருந்திருந்தால் நாங்கள் கண்டிப்பாகக் கண்டுபிடித்திருப்போம்...”

எர்னெஸ்டோ சிறிது யோசித்து விட்டுச் சொன்னார். ”க்ரிஷை அந்த ஏலியன் தொடர்பு கொண்ட சமயம் அந்த இடங்களில் எத்தனையோ வித்தியாசமான அலைவரிசைகளை நாசாவும், இஸ்ரோவும் கண்டுபிடித்தன....”  

இம்மானுவல் சொன்னான். “அதே போல் இப்போது இங்கேயும் அந்த அலைவரிசைகளில் ஏதாவது வித்தியாசத்தை நாசாவும் இஸ்ரோவும் கண்டுபிடித்திருக்கலாம். அதைப் பார்த்து விட்டுச் சொல்லும்படி நாசா, இஸ்ரோ இரண்டிலுமே ஆட்களை ஏற்பாடு செய்திருக்கிறேன். நம் உறுப்பினர் விஸ்வேஸ்வரய்யாவிடம் நீங்களும் பேசுவது நல்லது...”

அவன் தீவிரமாகவே தன் யூகத்தை நம்ப ஆரம்பித்திருக்கிறான் என்பது எர்னெஸ்டோவுக்கு இன்னும் ஆச்சரியமாகத் தான் இருந்தது. அவர் சொன்னார். “அந்தக் கூட்டாளி ஏலியனாக இருந்திருந்தால் க்ரிஷைத் தூக்கிக் கொண்டு போனது போல தூக்கிக் கொண்டு போயிருக்கலாம். அல்லது நீ சொன்னது போல் அமானுஷ்ய சக்தியாக இருந்திருந்தாலும் இப்படிக் காரில் வந்து கூட்டிக் கொண்டு போயிருக்கும் என்று தோன்றவில்லை...”

இம்மானுவலுக்கு அவருடைய அந்த வாதத்தை மறுக்க முடியவில்லை. காரில் அழைத்துப் போவது ஏலியன் அல்லது அமானுஷ்ய சக்தியின் வேலையாக இருக்கும் என்று நினைப்பதே அவனுக்கும் அபத்தமாகப் பட்டது. ஆனால் விஸ்வத்தின் மரணத்தை அது நிகழும் போதே உணர முடிந்தது சாதாரண மனித சக்தியாகவும் தோன்றவில்லை.

அவன் மெல்லச் சொன்னான். “அப்படியானால் நான் முன்பே சொன்னது போல விஸ்வத்தைக் காட்டிலும் கூடுதல் சக்திகள் கொண்ட ஏதோ ஒரு மனிதன் தன் சக்திகள் மூலமாக ஏதோ ஒரு காரணத்துடன் அவனைக் கண்காணித்துக் கொண்டே இருந்திருக்கலாம். தன் அமானுஷ்ய சக்தி மூலம் அவனைக் காப்பாற்றி அழைத்துக் கொண்டு போயிருக்கலாம்....”

கடைசியில் இந்த யூகத்தில் இருவரும் உடன்பட்டாலும் அந்த ஏதோவொரு காரணம் என்னவாக இருக்கும் என்பதை இருவராலும் கணிக்க முடியவில்லை.

(தொடரும்)
என்.கணேசன்

ஜனவரியில் நாவல் வெளிவரவுள்ளது




10 comments:

  1. மர்ம முடிச்சுகள் போட்டுக் கொண்டே போய் தொடரும் என்று போட்டது வழக்கம் போல் ஏமாற்றம் தான். ஆனால் ஜனவரியில் வரும் இல்லுமினாட்டி நாவலின் அட்டைப்படத்தைப் போட்டு மகிழ வைத்து விட்டீர்கள். சூப்பர்.

    ReplyDelete
  2. Very interesting as usual. Novel's wrapper is nice and mysterious.

    ReplyDelete
  3. அட்டைப்படம் மிகவும் அருமை

    ReplyDelete
  4. இறுதியில் நமக்கும் குழப்பமே மிஞ்சியது....
    யார் தான் அந்த ஜிப்சி??

    ReplyDelete
  5. அருமை.. சென்னை புத்தகக் கண்காட்சி தினத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்..

    ReplyDelete
  6. அப்படியானால் விஸ்வம் யாராலோ ஆட்டுவிக்கப்படுகிறான்

    ReplyDelete
  7. Very nice episode.
    அட்டைப்படம் மிகவும் அருமை.

    ReplyDelete
  8. Week by week suspense overloaded

    ReplyDelete
  9. பயங்கர சஸ்பென்ஸ்.ஜிப்ஸி யார்..மறுபடி க்ரிஷை ஏலியன் மீட் பண்ணுமா அமானுஷ்யன் எப்போ.வருவார்..நெறய கேள்வி இருக்கு புக் வந்த உடனே படிக்கணும்

    ReplyDelete