சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, December 23, 2019

சத்ரபதி 104


ஷாஹாஜியின் மறைவுச் செய்தி சிவாஜியைத் துக்கத்தில் ஆழ்த்தியது. என்றைக்குமே தொலைவிலேயே இருந்த அவன் தந்தை தொலைவிலேயே இறந்தும் போனது, அவருடைய கடைசி தருணங்களில் அவருடன் இருக்க முடியவில்லையே என்ற வருத்தத்தை அவன் மனதில் ஏற்படுத்தியது. கடைசி தருணத்தில் அவர் அருகில் இல்லாமல் போனது அவன் மட்டுமல்ல, வெங்கோஜியும் தான் என்றாலும் அந்தச் சமயத்தில் தஞ்சாவூரில் இருந்த வெங்கோஜி தகவல் கிடைத்ததும் விரைந்து சென்று அவருக்கு ஈமக்கிரியை செய்து அவர் இறந்த இடத்திலேயே அவரைப் புதைத்து அவருக்கு ஈமக்கிரியைகள் செய்து விட்டுப் போயிருந்தான். சிவாஜிக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஷாஹாஜியின் மரணச்செய்தி சிவாஜியைப் பாதித்ததை விட ஜீஜாபாயை இருமடங்கு பாதித்தது. அவருடன் அவள் மகிழ்ச்சியாக வாழ்ந்த காலம் மிகவும் குறைவு தான் என்றாலும் அந்தக் குறைவான காலத்தை மனதில் ஒரு மூலையில் பொக்கிஷமாக வைத்திருந்து திரும்பத் திரும்ப வாழ்ந்தவள் அவள். எங்கோ ஒரு தொலைவிடத்தில் தான் அவர் என்றும் இருந்தவர் என்றாலும் எங்கோ இருக்கிறார் என்ற ஆசுவாசத்தில் இருந்தவள் அவள். இப்போது அந்த ஆசுவாசமும் பறி போய் வெறுமையை அவள் உணர்ந்தாள்.

அவருடனான கடைசி சந்திப்பு இப்போதும் அவள் மனதில் பசுமையாக நினைவு இருக்கிறது. கடைசியாக சாம்பாஜியைப் பற்றி அவளிடம் பேசினார். அவள் கையைக் கண்கலங்கப் பிடித்துக் கொண்டார். ”நான் கிளம்புகிறேன் ஜீஜா…” என்றார், அது உலகத்திலிருந்து கிளம்புவதற்குமான கடைசி விடைபெறல் ஆகி விட்டதே என்று ஜீஜாபாய் மௌனமாக அழுதாள்.

சிவாஜி சிங்கக்கோட்டையில் தந்தைக்கு ஈமக்கிரியைகள் செய்து முடித்த பின் தந்தையின் சமாதியைக் கண்டு வணங்கி விட்டு வருவதற்காகச் சென்றான். ஷாஹாஜியின் மறைவு பீஜாப்பூர் சுல்தானை எதிர்த்து கிளர்ச்சி செய்தவர்களுக்குச் சொந்தமான பகுதியில் நிகழ்ந்திருந்தது. அங்கேயே வெங்கோஜி அவரைப் புதைத்து விட்டுச் சென்றிருந்தான்.

அங்கே சென்ற சிவாஜிக்கு, தந்தை அவனுடைய இடத்திலும் இல்லாமல் அவருடைய இடத்திலும் இல்லாமல் ஏதோ ஒரு அன்னிய பூமியில் இறந்து, வெங்கோஜி அங்கேயே அவரைப் புதைத்து, அவருடைய சமாதி மதிப்பு மரியாதை அற்றுக் கவனிப்பாரும் இல்லாமல் அமைந்திருப்பது மிகுந்த மனவருத்தம் தந்தது. ஆன்மாவுக்கு அழிவில்லை, அழியும் உடலில் அதிக அக்கறை காட்டுவது உசிதமும் அல்ல என்று தத்துவம் அறிந்திருந்த போதும் அது அவன் மனவருத்தத்தைத் தணித்து விடவில்லை. அவர் சமாதி அருகே நிறைய நேரம் அமர்ந்திருந்தான்.

சிவாஜி வந்திருக்கும் செய்தி அறிந்து அப்பகுதியில் இருப்பவர்களும், அருகில் இருப்பவர்களும், அந்தப் பகுதிக்கு உரிமையாளரான பிரபுவும் அங்கு வந்து சேர்ந்தார்கள். சிவாஜி அவர்களிடம் தன் தந்தையின் மரணம் பற்றி விவரமாகக் கேட்டறிந்தான். வாழ்ந்த நாளெல்லாம் சொல்லொணாத் துயரங்களுக்கு ஆளாகியிருந்த அவர் வாழ்வின் கடைசித் தருணத்தில் புன்னகையுடன் இந்த உலகில் இருந்து விடைபெற்றது மட்டும் நெகிழ்ச்சியாகவும், நிறைவாகவும் இருந்தது.

தந்தையின் நினைவாக அப்பகுதியில் இருந்த ஏழைகளுக்கு சிவாஜி நிறைய தானங்கள் செய்தான். பின் அப்பகுதியின் உரிமையாளரான பிரபுவிடமிருந்து அந்த நிலத்தைப் பெற்று அங்கே ஒரு சமாதிக்கட்டிடம் எழுப்பி தினமும் இரவும் பகலும் அங்கு விளக்கு எரியும்படி ஏற்பாடு செய்து விட்டு சிவாஜி தன் இருப்பிடம் திரும்பினான்.


ரங்கசீபுக்கு சிவாஜியின் செயல்பாடுகள் குறித்துக் கிடைத்துக் கொண்டிருந்த தகவல்கள் எல்லாம் உருவாகிக் கொண்டிருக்கும் மிகப்பெரிய அபாயத்தையே அடையாளம் காட்டின. அவனுடைய மகன் முவாசிம் மீதும் ராஜா ஜஸ்வந்சிங் மீதும் கடுமையான அதிருப்தி அவன் மனதில் ஏற்பட்டிருந்தது.

ஆரம்பத்தில் சிங்கக் கோட்டையில் சிவாஜியை எதிர்த்துப் போராடித் தோற்றதற்கு அவர்கள் சகாயாத்ரி மலையில் அவனுக்கு இருந்து வரும் சாதக அம்சங்களைக் காரணமாகச் சொன்னார்கள். ஆனால் அதற்குப் பின் சிவாஜியைப் பிடிக்க அவர்கள் எந்தப் பெரிய முயற்சியும் எடுக்கவில்லை. அது ஏன் என்பது அவர்களும் அல்லாவுமே அறிந்த ரகசியமாக இருந்தது.

சிங்கக் கோட்டையிலிருந்து சூரத் வரை உள்ள தொலைவு குறைவானதல்ல. முகலாயர்கள் பகுதிகளின் எல்லைப் புறங்களிலேயே சிவாஜி பயணித்துச் சென்றிருக்கிறான். அவனை அந்தச் சமயத்தில் பிடிக்க முறையாக முயன்றிருந்தால் முகலாயப்படை கண்டிப்பாக வெற்றி பெற்றிருக்கும். ஏனென்றால் அவனுக்குப் பாதுகாப்பான சகாயாத்ரி மலையிலிருந்து விலகி அவன் வந்திருக்கிறான். அப்படி இருந்தும் அவனைப் பிடிப்பதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்கப்படவில்லை. அதற்கான காரணங்கள் கேட்ட போது குழப்பங்கள் நிறைந்த பதில்களே கிடைத்தன.

சிவாஜி அவர்கள் பகுதிகளைத் தாக்கவில்லை, அவன் யாத்திரை தான் போனான், அப்படி அவனைத் தாக்கினாலும் அவன் தப்பித்து விடுவான், அவன் சாமர்த்தியம் அப்படி, சூரத் போவான் என்று எதிர்பார்க்கவில்லை என்று எல்லாம் பல பூச்சு வார்த்தைகளில் கூறினார்கள். அந்த வார்த்தைகளுக்குப் பின்னணியில் அவர்களுக்கு அவன் மீது ஏற்பட்டிருந்த பயம் தான் ஔரங்கசீப்புக்குத் தெளிவாகத் தெரிந்தது.

அவன் மாயாவி, மறைமுகத் தாக்குதல்களில் வல்லவன், அவனை யாரும் எதுவும் செய்து விட முடியாது என்பது போன்ற நம்பிக்கைகள் அவர்களிடம் வேரூன்றி இருந்தன. அதை நிரூபிப்பது போலவே சூரத்தில் உள்ளே நுழைந்து எல்லாவற்றையும் சிவாஜி கொள்ளையடித்துச் சென்றான். அங்கே கவர்னர் என்ற பெயரில் இருந்த அறிவும், தைரியமும் அற்ற ஜந்து படையனுப்பத் தகவல் அனுப்பி விட்டு, படை வரும் வரை சிவாஜியிடம் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டோ, குறைந்தபட்சத் தொகை கொடுத்தோ காலம் தாழ்த்தாமல், கோட்டைக்குள் ஒளிந்து தன் உயிரைப் பத்திரப்படுத்திக் கொண்டிருக்கிறான். இத்தனை கேவலமாக நடந்து கொண்ட அந்த ஜந்து நகர மக்கள் தன் மேல் சாணியைக் கரைத்து ஊற்றியதாகப் புகாரையும் அனுப்பியதை ஔரங்கசீப்பால் தாங்க முடியவில்லை. நியாயமாக அந்த நகர மக்கள் இனயதுல்லா கான் மீது வெடிகுண்டு வீசியிருக்க வேண்டும் என்று ஔரங்கசீப்புக்கே ஆத்திரம் வந்தது.  எப்படிப்பட்டவர்களை எல்லாம் வைத்துக் கொண்டு ஆட்சி புரிய வேண்டியிருக்கிறது என்று அவன் விதியையே நொந்து கொண்டான்.

தக்காணக் கவர்னராக இருந்த அவன் மகன் முவாசிம் அந்தப் பதவிக்குச் சிறிதும் பொருத்தமில்லை என்பது நிரூபணமான பின் அவனை அந்தப் பதவியில் வைத்திருப்பது முட்டாள்தனம் என்பது புரிந்த பின்னும் ஔரங்கசீப் மகனை அந்தப் பதவியிலிருந்து விலக்குவதற்கு யோசித்தான்.  அவனுக்கு அவன் மகன்கள் தலைநகரில் இருப்பது வேறு விதமான ஆபத்துகளை ஏற்படுத்தக் கூடும் என்ற பயம் இருந்தது. பழைய சரித்திரம் அவன் காலத்திலும் அரங்கேறுவதை அவன் விரும்பவில்லை. ஆனால் சிவாஜி போன்ற ஒரு பேராபத்தை தக்காணத்தில் வைத்துக் கொண்டு முவாசிம்மைப் போன்ற செயலற்றவனையும் அங்கே வைத்திருப்பது மாபெரும் தவறாக இருக்கும் என்று அவனது அறிவு எச்சரித்தது.

இந்த நிலைமையில் இந்தச் சிந்தனைகளில் ஔரங்கசீப் ஆழ்ந்திருந்த போது தான் ஒரு ஒற்றன் அடுத்த இரண்டு தகவல்களைக் கொண்டு வந்தான். முதலாவது சிவாஜி தன் பெயரில் தங்க செப்பு நாணயங்களை அச்சடித்து வெளியிட்டிருந்தான். சிவாஜியே அரசனாக இருந்த போதிலும் தந்தை உயிரோடு இருந்த வரை அவன் தன் பெயரில் நாணயங்களை அச்சடித்ததில்லை. இப்போது அதையும் செய்து தன் சுயராஜ்ஜியத்தை அவன் பகிரங்கப்படுத்திக் கொண்டிருக்கிறான்.

இன்னொரு தகவல் சிவாஜி கப்பற்படையையும் பலப்படுத்திக் கொண்டிருக்கிறான் என்பதாக இருந்தது. ஏற்கெனவே மலைப்பகுதியில் அவன் வீழ்த்தப்பட முடியாதவன் என்ற நிலையை உருவாக்கி விட்டான். சமவெளிகளிலும் அவ்வப்போது அவன் சாகசம் புரிந்து வருகிறான். இப்போது நீர்ப்பரப்பிலும் அவன் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது என்ற தகவல், விஸ்வரூபம் எடுத்து வரும் அபாயத்தை அவனுக்கு எச்சரித்தது.

முத்தாய்ப்பாய் தூதன் சொன்னான். “ஹஜ் யாத்திரை செல்லும் செல்வந்தர்களின் படகுகளையும், கப்பல்களையும் நீர்ப்பரப்பில் இடைமறித்துத் தாக்கி பணயத்தொகை கொடுத்த பிறகே நேதாஜி பால்கர் தலைமையிலிருக்கும் சிவாஜியின் கப்பற்படை விடுவிக்கிறது சக்கரவர்த்தி. இந்த வழிப்பறிக் கொள்ளையில் நம் பிரஜைகள் மட்டுமல்ல, பீஜாப்பூரின் பிரஜைகளும் சிக்கிப் பெரும் செல்வத்தை இழந்திருக்கிறார்கள்”

அத்தகவலும் கிடைத்த பின் உடனடியாக எதையாவது செய்தேயாக வேண்டும் என்று ஔரங்கசீப் முடிவெடுத்தான். சிவாஜியைச் சமாளித்து வெல்ல சாதாரணத் திறமையும் வலிமையும் போதாது என்பதைப் புரிந்து கொண்டிருந்த அவன் முவாசிம்மை திரும்ப வரவழைத்து, சிவாஜியை வீழ்த்த முடிந்த அசாதாரணத் திறமையும், மன உறுதியும், வீரமும் கொண்ட செயல்வீரன் யாரையாவது அங்கு அனுப்ப முடியுமா என்று யோசித்தான்.


அவனுடைய அதிர்ஷ்டமாகவும், சிவாஜியின் துரதிர்ஷ்டமாகவும் அப்படிப்பட்ட மாவீரன் ஒருவனல்ல இருவர் ஔரங்கசீப்பின் கவனத்தில் வந்தார்கள்.

(தொடரும்)
என்.கணேசன்


3 comments:

 1. Who is that person? Twist and suspense is here also.

  ReplyDelete
 2. ஔரங்கசீபின் சிந்தனையும்...செயலும் அபாரம்....

  சிவாஜியை வீழ்த்தக் கூடிய அந்த இரு மாவீரர்கள் யாராக இருப்பார்கள்?

  ReplyDelete
 3. ஔரங்கசீப்பின் உறக்கத்தை கெடுத்தான் சத்ரபதி

  ReplyDelete