சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Wednesday, December 18, 2019

நரகத்தின் மூன்று வாசல்கள்!


சுரகுணங்களை விவரித்த பின் ஸ்ரீகிருஷ்ணர் அந்தக் குணங்களின் விளைவுகளை இவ்வாறு விவரிக்கிறார்:

அப்படி என்னை வெறுக்கின்ற பாவிகளும், கொடியவர்களுமான மனிதப் பதர்களை அசுரப் பிறவிகளிலேயே மீண்டும் மீண்டும் தள்ளுகிறேன்.

குந்தி மகனே! அவ்வாறு அசுரப் பிறவியாகப் பிறந்த மூடர்கள் ஒவ்வொரு ஜென்மத்திலும் என்னை அடைய முடியாமல் முன்னிலும் தாழ்ந்த நிலையை அடைகிறார்கள்.

அசுரகுணங்கள் நிறைந்த பாவிகளைத் திரும்பத்திரும்ப அசுரப் பிறவிகளிலேயே தள்ளுவதாகவும், தொடரும் ஜென்மங்களில் அவர்கள் மேலும் மேலும் தாழ்ந்த நிலைக்குப் போவதாகவும் பகவான் கூறுவதை அவருடைய கருணையின்மையாக நாம் பார்க்கக்கூடாது. அவரவர் கர்மங்களின்படியே பலன் அளிக்க வேண்டியவராக இருப்பதால் தான் அசுர குணங்கள் நிறைந்த மனிதர்கள் அதற்கேற்றபடியே அசுரப் பிறவிகளில் பிறக்க நேர்கிறது. நன்மையோ தீமையோ ஒரே நிலையில் இருப்பதில்லை. அந்தப் பாதைகளில் பயணிக்கும் மனிதன் செல்கின்ற பாதையில் மேலும் முன்னேறவே செய்கிறான். அதனால் தீமைகள் அதிகம் செய்து செய்து மேலும் மேலும் தாழ்ந்து போகிறான்.

சரி. இப்படித் தாழ்ந்து கொண்டே போகும் இவர்கள் தப்பிப்பது தான் எப்போது? தீயகுணங்களில் ஆழ்ந்து ஆழ்ந்து அதில் அடையும் துன்பங்கள் உச்சத்திற்குப் போய் சலித்து, போதும் என்று தோன்றி, காரணம் அறியும் சுயபரிசோதனைக் காலம் வரும் வரை இவர்கள் தப்பிப்பதில்லை. அந்தச் சுயபரிசோதனையில் ஆன்மாவையும், இறைவனையும் உணர்ந்து திருந்தும் போது அவர்கள் அடியோடு மாறிவிடுகிறார்கள். அவர்களுக்கும் முக்தி கிடைக்கிறது.

இதற்கு கொள்ளைக்காரனாய் வாழ்ந்த வால்மீகி திருந்தியது மட்டுமல்லாமல் ராமாயணம் எழுதுமளவு உயர்ந்ததும், காமாந்தகனாக வாழ்ந்த அருணகிரிநாதர் வருந்தி, திருந்தி, திருப்புகழ் பாடுமளவு மாறியதும் சிறந்த உதாரணங்கள். தங்கள் செயலில் பெருந்துக்கமும், பச்சாதாபமும் அடையும் காலம் வந்த பின் தான் சுயபரிசோதனையும், அதன்பின் ஆத்மஞானமும் வந்து அவர்களைக் காப்பாற்றும். அது வரை அவர்களுக்கு விதவிதமான நரகங்கள் தான்.

மேலும் ஸ்ரீகிருஷ்ணர் கடைத்தேற அர்ஜூனனுக்கு வழி சொல்கிறார்.

காமம், குரோதம், லோபம் இவை மூன்றும் நரகத்திற்கு மூன்று வாயில்கள். அவை ஆத்மாவை இழிநிலைக்குத் தள்ளக் கூடியவை. ஆகவே இம்மூன்றையும் விட்டுவிட வேண்டும்.

இந்த மூன்று நரக வாயில்களிலிருந்தும் விடுபட்ட மனிதன் தனக்கு நன்மையைச் செய்து கொள்கிறான். இதன் மூலம் பெரும்பேற்றை அடைகிறான்.

எவன் சாஸ்திர முறையைத் துறந்து தன் மனம் போனபடி நடந்து கொள்கிறானோ அவன் சித்தி பெறுவதில்லை. பெரும்பேற்றை அடைவதில்லை; சுகத்தையும் அடைவதில்லை.

ஆகவே செய்யத்தக்கது, செய்யத்தகாதது என்பதை முடிவு செய்வதில் சாஸ்திரம் தான் உனக்குப் பிரமாணம். சாஸ்திரத்தில் கூறிய முறையை அறிந்து கர்மங்களைச் செய்வாயாக!

காமம், வெறுப்பு, பேராசை இந்த மூன்றும் நரகத்தின் வாசல்கள் என்று பகவான் கூறுகிறார். இந்த வாசல்கள் மிகவும் பகட்டானவை, கண்ணையும் கருத்தையும் கவரக்கூடிய அளவு கவர்ச்சியானவை, எத்தனை ஆட்களும் போக முடிந்த அளவு விசாலமானவை. அதனால் தான் அவற்றின் வழியே மனிதர்கள் திரளாய் போய்ச் சிக்கிக் கொள்கிறார்கள். உள்ளே போன பிறகு பாதிப்பில்லாமல் திரும்பி வருவது சாத்தியமில்லை. அதனால் தான் அந்த வழியில் போனால் ஆனந்தம் கிடைக்கும் என்று ஏமாந்து போகாமல் எச்சரிக்கையுடன் தவிர்ப்பவன் தனக்கே நன்மை செய்து கொள்கிறான் என்றும், அதன்மூலம் பெரும்பேற்றை அடைகிறான் என்றும் சொல்கிறார்.

மனித வாழ்க்கை மிகவும் குறுகியது. தவறான பாதையில் எத்தனை தூரம் போகிறோமோ அத்தனை தூரமும் திரும்பி வரவும் வேண்டியிருக்கிறது. தவறான வழியில் போகத் தேவையாக இருந்த காலம் அளவுக்கு, திரும்பி வருவதற்கான காலமும் தேவைப்படுகிறது. இப்படிப் போய்ப் போய் திரும்பி வருபவன் நிறைய காலத்தை வீணடிக்க நேர்கிறது. திருந்தி, உணர்ந்து தான் போக வேண்டிய உண்மையான இடத்திற்குச் செல்ல முயற்சிக்கும் போது கடைசிவரை போய்ச் சேரத் தேவையான காலம் அவனுக்கு மிஞ்சியிருக்குமா என்பது சந்தேகமே! அதனால் தான் தவறான வழியில் போகாமல் இருப்பவன் தனக்கு நன்மை செய்து கொள்வதாகவும், அவன் பெற வேண்டிய பெரும்பேறை சிரமமில்லாமல் பெறுகிறான் என்கிறது கீதை.

இங்கே சாஸ்திரங்கள் சொல்லும்படி வாழ வேண்டும் என்று சொல்வதை பழைய நூல்களில் சொல்லப்பட்டிருக்கும் சடங்குகள் என்று எடுத்துக் கொள்ளக்கூடாது. அது பிழையாகி விடும். ”தர்மக்‌ஷேத்ரே” என்று தர்மத்தை முதல் சொல்லாக வைத்து ஆரம்பிக்கும் பகவத்கீதை தர்மங்களையும், மெய்ஞானத்தையும் விவரிக்கும் புனித நூல்களையே சாஸ்திரம் என்று சொல்வதாக எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் பகவத்கீதையும் ஒரு சாஸ்திரமே. வாழும் நெறிகளை விளக்கும் அந்த வகை நூல்களே உண்மையான சாஸ்திரங்கள். அந்த வாழ்க்கை நெறியே நாம் பின்பற்ற வேண்டியது. அந்த தர்ம சாஸ்திர, மெய்ஞான வழிகளில் போனால் தான் வெற்றி கிடைக்கும், சுகம் கிடைக்கும்,  முக்தி கிடைக்கும்.

அதற்கு எதிர்மாறான வாழ்க்கை மனிதன் வெற்றியையும், சுகத்தையும், முக்தியையும் கண்டிப்பாக இழக்கிறான். இப்படி வாழ்க்கையின் முக்கியங்களையும் உன்னதங்களையும் இழக்கும்படியான வழிகள் நமக்குத் தேவையா என்பதைப் பகுத்தறிவுள்ள மனிதன் தனக்குள்ளே கேட்டுக் கொள்ள வேண்டும். எப்படி வாழ வேண்டும், என்ன செய்ய வேண்டும், எதையெல்லாம் செய்யக்கூடாது என்ற கேள்விகளுக்குப் பதில்களை பகவத்கீதை போன்ற தர்மநெறி சாஸ்திரங்களில் அவன் தெரிந்து கொள்ளலாம்.

இத்துடன் கீதையின் பதினாறாவது அத்தியாயம் நிறைவு பெற்றது.

பாதை நீளும்...

என்.கணேசன்

2 comments:

  1. தீய வழியில் சென்றால் காலம் எவ்வாறு வீணாகிறது? என்ற விளக்கமும்....

    சாஸ்திரங்களுக்கான விளக்கமும்... அற்புதம்...

    ReplyDelete
  2. good I Like it,I am a Psychologist , My suggestion is every Psychologist and Psychology Student Must Read En. Ganesan's Books.Mr Ganesan,Ayushman Bhava.

    ReplyDelete