சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, December 16, 2019

சத்ரபதி 103


னயதுல்லா கான் தன் முன் வந்து நின்ற அந்த முரட்டு இளைஞனிடம் கேட்டான். “நீ இது வரை எத்தனை பேரைக் கொன்றிருப்பாய்?”

அந்த இளைஞன் அலட்சியமாகச் சொன்னான். “சரியாக நினைவில்லை”.

இனயதுல்லா கான் புன்னகைத்தபடி சொன்னான். ”சிவாஜியை மட்டும் கொன்று விட்டு வந்தாயானால் இது வரை நீ கொன்று சம்பாதித்ததை விட ஆயிரம் மடங்கு செல்வம் உனக்குக் கிடைக்கும். இங்கே இருக்கிற வணிகர்களிடமிருந்து மட்டுமல்ல முகலாயச் சக்கரவர்த்தியிடமிருந்தே உனக்கு நீ கனவிலும் நினைத்திராத சன்மானத்தை நான் வாங்கித் தருவேன். உனக்கு சக்கரவர்த்தி ஏதாவது பதவியைக் கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை”

அந்த இளைஞன் தலையசைத்தான்.

“சிவாஜியை நீ குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது. அவன்…..”

அதற்கு மேல் இனயதுல்லா கான் சொன்னதை எல்லாம் கேட்டு மூளையில் இருத்திக் கொள்ள அந்த முரட்டு இளைஞன் சிரமப்படவில்லை. இனயதுல்லா கான் தொடர்ந்து சொன்ன அப்சல்கான், செயிஷ்டகான், என்ற பெயர்களுக்கு அவன் அதிக முக்கியத்துவம் தரவில்லை. அவன் செவி  வழிச் செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அவனைப் பொருத்த வரை கொலை ஒரு கலை. உடல் வலிமையை விட உபயோகிக்கும் யுக்திகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. கொலை முயற்சிகளில் வெற்றி தோல்விகளை நிர்ணயம் செய்வது அவையே. அவன் கத்தியைச் சரியாக உபயோகிக்கத் தெரிந்தவன். அவன் இது வரை எந்தக் கொலை முயற்சியிலும் தோற்றதில்லை. அதனால் சிவாஜி எவ்வளவு வலிமையானவன் என்பதெல்லாம் அவனுக்கு அனாவசியம்.

”தங்களைச் சந்திக்க சூரத் கவர்னர் இனயதுல்லா கான் அவர்களிடமிருந்து தூதன் ஒருவன் வந்திருக்கிறான் அரசே” என்று காவல் வீரன் சிவாஜியிடம் அறிவித்த போது சிவாஜி சில மனிதர்கள் சுலபமான வழியில் எதையும் கற்றுக் கொள்வதில்லை என்று நினைத்தான். இல்லாவிட்டால் இத்தனை காலம் தாமதித்து ஒரு தலைவன் செயல்படுவானா?

“உள்ளே அனுப்பு” என்று சொன்ன போது கூட தூதன் என்ற பெயரில் ஒரு கொலையாளியை இனயதுல்லா கான் அனுப்பியிருக்கக் கூடும் என்ற சந்தேகம் சிவாஜிக்கு வரவில்லை.

உள்ளே வந்த முரட்டுத்தனமான, கட்டுமஸ்தான உருவம் கூட அவனைச் சந்தேகப்பட வைக்கவில்லை. பெரும்பாலும் தூதர்களாக முரட்டுத்தனமான, கட்டுமஸ்தான ஆட்கள் அனுப்பப்படுவதில்லை. ஒரு தூதன், தான் எடுத்து வந்த செய்தியைத் தெளிவாகத் தெரிவிப்பது மட்டுமல்லாமல், அந்தச் செய்தி எப்படி எடுத்துக் கொள்ளப்படுகிறது, எதிர்வினைகள் என்ன என்பதை எல்லாம் விரிவாகத் திரும்ப வந்து சொல்லக் கடமைப்பட்டவன். அது கூர்மையான அறிவுள்ளவர்களுக்கே கூடுதல் சாத்தியம் என்பதால் உடல் வலிமையைக் காட்டிலும், அறிவு வலிமையான ஆட்களே அனுப்பப்படுவது வழக்கம். ஆனால் அவசரச் சமயங்களில் வெறும் செய்தி மட்டும் அனுப்ப நேரும் போது இருக்கின்ற வீரர்களில் ஒருவனே தூதனாக அனுப்பப்படுவது உண்டு. ஒரு ஓலையைக் கொண்டு வந்து கொடுப்பதும், பதில் ஓலையைத் திரும்பக் கொண்டு போய் கொடுப்பதும் தான் அவன் வேலையாக இருக்கும். அதற்கு அதிகமான தகவல்களையோ, நிலவரங்களையோ அவன் கவனித்து உணர்ந்து  தெரிவிக்க வேண்டிய அவசியம் இருப்பதில்லை. சிவாஜி இப்போது வந்தவன் இந்த இரண்டாம் ரகத்தில் வந்த வீரனாகவே நினைத்தான்.

வந்தவன் தலை தாழ்த்தி வணங்கி விட்டு ”வணக்கம் மன்னா. சூரத் நகர கவர்னரான இனயதுல்லா கான் அவர்கள் ஒரு விண்ணப்பத்தைத் தங்களுக்கு அனுப்பியிருக்கிறார்.” என்று சொல்லி ஒரு ஓலையை சிவாஜியிடம் நீட்டினான்.

அவன் கையை நீட்டிய விதத்தில் ஒரு வித்தியாசத்தை சிவாஜி கண்டான். கை வேகமாகவும், லாவகமாகவும் நீண்டது. கொரில்லா தாக்குதல் போன்ற திடீர்த் தாக்குதல் புரிய முடிந்த மனிதனின் கை அது. மிக வேகமாகவும், மிக வலிமையாகவும் செயல்பட முடிந்த கை அது. அவன் கை நீட்டியது சிறிய உடலசைவே என்றாலும், அந்த அசைவில் அவன் கை சில வினாடிகளே குறைவாக எடுத்துக் கொண்டு வேகமாக நீண்டது என்றாலும்  வாழ்நாள் எல்லாம் மனிதர்களின் முக பாவனைகளிலும், அசைவுகளிலும் ஆயிரம் தகவல்கள் பெற முடிந்த சிவாஜி சற்று எச்சரிக்கை அடைந்தான்.

ஓலையை வாங்கிப் பிரித்த சிவாஜி அதைப் படிப்பது போல் பாவனை காட்டினான்.  வந்திருப்பவன் உத்தேசம் அவனைத் தாக்குவதாக இருக்குமானால் கண்டிப்பாக சிவாஜி அந்த ஓலையில் என்ன எழுதியிருக்கிறது என்பதை ஆழ்ந்து படிக்கும் போது தான் தாக்குவான் என்று அவன் அறிவு எச்சரித்தது. முழுக் கவனமும் எதிரிலிருப்பவனிடம் இருந்து நீங்கி அந்த ஓலையில் இருக்கையில் எதிர்பார்க்காத அந்த நேரத்தில் தாக்குவது தாக்க உத்தேசித்திருப்பவனுக்கு உகந்த நேரம்.

இனயதுல்லா கான் அனுப்பியிருந்த கொலையாளி சிவாஜி ஓலையைப் படித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் மறைத்து வைத்திருந்த கூரிய கத்தியை எடுத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் சிவாஜி மேல் பாய்ந்தான்.
அடுத்த கணம் பெரும் சத்தம் கேட்டு, திகைப்புடன் உள்ளே நுழைந்த சிவாஜியின் வீரர்கள் சிவாஜியும், இனயதுல்லா கான் அனுப்பிய தூதனும் கட்டிப்பிடித்துக் கொண்டு தரையில் உருள்வதைப் பார்த்தார்கள். இருவர் உடையிலும் இரத்தம் பரவிக் கொண்டிருந்தது. சிவாஜியின் உடையில் கூடுதலாக இரத்தம் பரவியதாகத் தோன்றியதால் அதிர்ச்சி அடைந்து கூக்குரலிட்டார்கள். சிவாஜியின் படைத் தலைவன் ஒருவன் வேகமாக உள்ளே வந்தான்.

என்ன நடக்கிறது என்று புரிந்து கொள்ள முடியாமல் அவர்கள் திகைத்துக் கொண்டிருந்த போது சிவாஜி அந்தத் தூதனின் உயிரற்ற சடலத்தைத் தள்ளி விட்டு எழுந்து நின்றான். தூதனின் இதயத்தில் அவன் கொண்டு வந்திருந்த கூரிய கத்தி சொருகப்பட்டிருந்தது.

படைத்தலைவன் கோபத்துடன் சொன்னான். “இனயதுல்லா கானுக்கு என்ன ஒரு துணிச்சல் இருந்தால் உங்களையே கொல்ல ஆளனுப்புவான். அவனுக்கு நல்லதொரு படிப்பினை நாம் தந்தாக வேண்டும். இந்த நகரைத் தீயிட்டுக் கொளுத்துங்கள் வீரர்களே”

சிவாஜி அமைதியாகத் தடுத்தான். “அவனுடைய முட்டாள்தனத்தில் முதலிலேயே இந்த நகர மக்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இனியும் அவர்களைத் துன்புறுத்துவது நியாயமல்ல.”

படைத்தலைவன் சிவாஜியின் பெருந்தன்மையை வியந்து பார்த்தான். சிவாஜி அவனிடம் கூடுதலாக விவரிக்கவில்லை. அவன் ஆசிரியர் அவன் மனதில் சாதாரண குடிமக்களின் நலன் குறித்த அக்கறையை ஆழமாகவே விதைத்திருந்தார். அவன் மக்களோ, அடுத்த நாட்டு மக்களோ அனாவசியமாகத் துன்புறுவதை அவனால் சகிக்க முடியாது.

அன்று இரவு சிவாஜிக்கு முகலாயப்படை சூரத்தை நோக்கி வந்து கொண்டிருப்பதாக ஒற்றர்கள் மூலம் தகவல் கிடைத்தது. ஒன்றரை நாளில் வந்து விடக்கூடும் என்று தெரிந்தது. சிவாஜி அதற்கு மேல் சூரத்தில் தங்க விரும்பவில்லை. படையோடு இரவோடு இரவாக சூரத்தை விட்டு அவன் கிளம்பினான்.

அந்த நகர மக்கள் யாருக்குமே சிவாஜி தான் சில தினங்களுக்கு முன் சிறிய வணிகனாக அந்த நகரத்தில் நுழைந்தவன் என்பது கடைசி வரை தெரியவில்லை. அந்தச் சந்தேகம் சிறிது கூட அவர்கள் மனதில் எழாதபடி இருந்தது மன்னனுக்கும், வணிகனுக்கும் இடையே இருந்த வித்தியாசம்.

இனயதுல்லா கான் சிவாஜி போய் விட்டான் என்று உறுதியான பிறகு மறு நாள் காலை வெளியே வந்தான். நகர வீதிகளில் அவன் நடந்த போது பல வீடுகளின் உப்பரிகைகளில் இருந்து சாணம் கலந்த நீர் அவன் மீது கொட்டப்பட்டது. முழுவதுமாய் நனைந்து கோபத்துடன் கொந்தளித்த அவன் தலையுயர்த்திப் பார்த்த போது அந்த உப்பரிகைகளில் யாரும் தெரியவில்லை.

ஷாஹாஜி முன்பு போலவே துடிப்பும், சுறுசுறுப்பும் கொண்ட மாவீரராகவே மாறியிருந்தார். சிவாஜியைப் பார்த்து விட்டு வந்த அவருக்கு சகல மரியாதைகளையும் அளித்திருந்த பீஜாப்பூர் சுல்தான் அலி ஆதில்ஷா கூடுதலாக கர்னாடக எல்லைகளில் கிளர்ச்சியாளர்களை அடக்கும் பொறுப்பையும் தந்திருந்தான். அவர் அந்தக் கிளர்ச்சியாளர்களை அடக்கி வெற்றி கண்டிருந்தார். மகன் சிவாஜியின் வலிமையும் அவருடன் சேர்ந்து கொண்டது போல் ஒரு உணர்வு அவருக்கிருந்தது.

சிவாஜியின் பெருமையை அவர் சந்திக்கும் நண்பர்களிடம் எல்லாம் சலிக்காமல் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் அவரது அந்த உற்சாகத்தில் அவரது கடைசி மகன் வெங்கோஜியும், அவரது இரண்டாம் மனைவியும் பங்கு கொள்ளவில்லை. அவர் சிவாஜியைப் புகழும் போதெல்லாம் அவர்கள் இருவரும் இறுக்கமான முகத்துடனேயே இருந்தார்கள். அவருக்கு அது மனத்தாங்கலாகவே இருந்தது. கிளர்ச்சியாளர்களை ஒடுக்கி விட்டு ஓய்வில் ஒரு வேட்டைக்கு அவர் சென்று கொண்டிருந்த போது அவர் மகன் சாம்பாஜி இப்போது உயிருடன் இருந்திருந்தால் தம்பியின் வெற்றியில் அவரை விடவும் அதிகம் மகிழ்ந்திருப்பான் என்று தோன்றியது. வாழ்ந்த காலத்தில் எப்போதும் தம்பியைப் பற்றிப் பெருமையாகப் பேசியவன் அவன் ….

தூரத்தில் ஒரு கரடி சென்று கொண்டிருப்பதைப் பார்த்து ஷாஹாஜி தன் குதிரையை முடுக்கினார். குதிரை வேகமெடுத்தது. சிறிது தூரம் கடந்த பின் தரையில் படர்ந்திருந்த ஒரு வலிமையான தாவரத்தின் கொடி அந்தக் குதிரையின் காலைத் தடுக்க குதிரை கீழே சாய்ந்தது. ஷாஹாஜியும் கீழே விழுந்தார். தலையில் அடிபட்டு அவர் நினைவிழந்து கொண்டிருக்கையில் அவரது அன்பு மகன் சாம்பாஜி தெரிந்தது போலிருந்தது. அவர் பாசத்துடன் புன்னகைத்தார்.


பின்னால் குதிரைகளில் வந்து கொண்டிருந்த ஷாஹாஜியின் வீரர்கள் அவர் கீழே விழுந்ததைப் பார்த்து பதற்றத்துடன் வேகமாக அவரை நெருங்கினார்கள். அவர்கள் வந்து பார்த்த போது ஷாஹாஜி புன்னகையுடன் இறந்திருந்தார்.

(தொடரும்)
என்.கணேசன்  

3 comments:

  1. From the beginning till his death you have portrayed Shahaji's character excellently taking into account of his all plus and minus. Hats off to you for bringing alive the historical characters.

    ReplyDelete
  2. இனையதுல்லா கான் ஒரு கோழை

    ReplyDelete
  3. இனையதுல்லா போன்ற முட்டாளின் ஆட்சியின் கீழ் இருப்பவர்கள் எவ்வளவு துன்பப்படுவார்கள்? என்பதை நான் பல முறை அனுபவித்திருக்கிறேன்....
    இந்த பகுதி எனக்கும் நல்ல படிப்பினையை கொடுத்தது நன்றி ஐயா...

    ReplyDelete