தன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.
Monday, September 19, 2022
யாரோ ஒருவன்? 103
Thursday, September 15, 2022
சாணக்கியன் 22
விஷ்ணுகுப்தரின் பேச்சு சின்ஹரனின் துக்கத்தைக் குறைத்து விடவில்லை.
அவன் மிகுந்த விரக்தியுடன் சொன்னான். “இனி பிராயச்சித்தம் செய்ய என்ன இருக்கிறது ஆச்சாரியரே.
என்னால் என் தாய்நாட்டுக்குத் தீராத களங்கம் ஏற்பட்டு விட்டது. இனி நான் என்ன செய்தாலும்
அந்தக் களங்கம் மாறாதே. மேலும் நான் உயிரோடிருந்து என் தாய்நாட்டுக்காக எந்தச் சேவையும்
செய்ய ஆம்பிகுமாரன் அனுமதிக்க மாட்டான். அவனை நான் நன்றாக அறிவேன். முதலாவதாக நான் உயிரோடு தட்சசீலத்திலேயே
இருப்பதை அவன் அறிந்தால் என்னைக் கொன்று விட்டு தான் மறுவேலை பார்ப்பான். அவன் கையால் சாவதை விட என் கையாலேயே நான் இறப்பது
கௌரவமானது என்று நான் கருதுகிறேன் ஆச்சாரியரே. தயவு செய்து இங்கிருந்து சென்று விடுங்கள்.
இந்தக் குற்றவாளியைச் சாக அனுமதியுங்கள்”
விஷ்ணுகுப்தர் உறுதியாகச்
சொன்னார். “உன் தாய்நாட்டுக்கு நீ சேவை செய்வதற்கு ஆம்பிகுமாரனின் அனுமதி தேவையில்லை
சின்ஹரன். சொல்லப் போனால் யாரும் தங்கள் தாய்நாட்டுக்குச் சேவை செய்ய யாருடைய அனுமதியும்,
உதவியும் தேவையில்லை. ஒவ்வொருவரும் தாங்கள் இருக்கும் நிலைகளில், முடிந்த விதங்களில்
தாய்நாட்டுக்கு எத்தனையோ செய்ய முடியும். நீ உயிரோடு இருப்பது ஆம்பிகுமாரனுக்குத் தெரிய
வேண்டியதில்லை. உன் கையால் சாவது கௌரவமாக இருக்கும் என்று நீ சொன்னாய். ஒரு வீரனுக்குப்
போர்க்களத்தில் இறப்பது தான் கௌரவமாக இருக்குமே ஒழிய தற்கொலை கௌரவமாக இருக்காது. அது
எந்தக் களங்கத்தையும் போக்கி விடாது. உன் தாய்நாட்டுக்கு உன்னால் செய்ய முடிந்ததும்,
நீ செய்ய வேண்டியதும் நிறைய இருக்கின்றது சின்ஹரன். நீ அதைச் செய்யத் தயாரா?”
அவர் குரலில் இருந்த
உறுதியும் தெளிவும் சின்ஹரனை யோசிக்க வைத்தது.
ஆம்பிகுமாரன் இரண்டு நாட்களாக யாரிடமும் பேசவில்லை. அவன் அந்தப்புரத்திற்குப்
போகவில்லை. அவன் தனிமையில் ஆழ்ந்த ஆலோசனையில் இருந்தான். கேகயப் படையின் ஆக்கிரமிப்பால்
அவன் உணர்ந்த அவமான உணர்வு இப்போதும் குறைய மறுத்தது. அவர்கள் போட்ட பிச்சையால் அவன்
வாழ்ந்து கொண்டிருப்பது போன்ற உணர்வை கேகய
அமைச்சன் இந்திரதத் ஏற்படுத்தி விட்டுப் போனது தாங்க முடியாத
பாரமாக அவன் இதயத்தை அழுத்தியது.
அவன் தந்தையின்
வார்த்தைகள் இப்போதும் அவன் செவிகளை அறைகின்றன. “எல்லாம் நான் பார்த்துக்
கொள்கிறேன் என்று எனக்கு வாக்களித்த நீ என்ன பார்த்துக் கொண்டாய் ஆம்பி குமாரா.” தந்தைக்கு
அவன் பதில் அளிக்கவில்லை என்றாலும் அவன் மனசாட்சிக்கும், வீரத்திற்கும், தன்மானத்திற்கும்
அவன் பதில் அளிக்க முடியாமல் தவித்தான். அவன் ஒற்றர்களை கேகய நாட்டின் எப்பகுதிகளை
எப்படித் தாக்கலாம் என்று அறியத் தான் முழுவதுமாகப் பயன்படுத்தியிருந்தான். தந்தை வழியின்படியே அவர்கள் பணிபுரிய அவன்
அனுமதித்திருந்தால் கண்டிப்பாக நிலைமை இந்த அளவு மோசமாகியிருக்காது. யாராவது ஒரு ஒற்றனாவது
இந்தத் தாக்குதலை மோப்பம் பிடித்து வந்து சொல்லியிருப்பான். தயார்நிலையில் இருந்து
எளிதாக கேகயப்படையை சமாளித்திருக்கலாம். ஆனால் காலம் கடந்து யோசித்துப் பயனில்லை….
அவன்
தட்சசீல கல்விக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் அவனுக்கு ஆச்சாரியர் விஷ்ணுகுப்தரின்
போதனைகள் வேம்பாகக் கசக்கும் என்றாலும் அவருடைய சொற்கள் என்றும் வலிமையானவை, அர்த்தமுள்ளவை
என்பதில் அவனுக்கு எந்தச் சந்தேகமும் கிடையாது. அவர் அவனைப் பார்க்கும் பார்வை, தோரணை எல்லாம் கோபமூட்டுவதாக
இருக்கும் என்பதால் அவனும் அரைகுறையாய் தான் கவனம் செலுத்துவான் என்றாலும் அவனுக்கு
அவர் ஒரு முறை சொல்லியிருந்தது மனதின் ஒரு மூலையில் இப்போதும் நினைவு இருக்கிறது.
“அடுத்தவர் அனுபவங்களில் இருந்து முன்கூட்டியே
பாடம் கற்றுக் கொள்பவன் அறிவாளி. தன்னுடைய அனுபவங்களில் கஷ்டப்பட்டுப் பாடம் கற்றுக்
கொள்பவன் சாதாரண மனிதன். தன்னுடைய அனுபவங்களில் இருந்தும் பாடம் கற்றுக் கொள்ள முடியாதவன்
முட்டாள். அவன் எதிரிகளுக்கு என்றும் எளிதானவன். அவன் அழிவது நிச்சயம்…”
அறிவாளியாக
இருக்கும் வாய்ப்பை ஆம்பி குமாரன் நழுவ விட்டு விட்டான். சாதாரண மனிதனாகவாவது அவன்
இருக்க வேண்டும். ஏனென்றால் முட்டாளாக அழிவதற்கு அவனுக்கு விருப்பமில்லை. ஆம்பி குமாரன் ஆழமாக யோசித்துத் தன் தவறு
சிற்றின்பங்களில் அதிகம் கழித்தது தான் என்று நினைத்தான். அது தான் அவனது கவனத்தை உரிய
இடங்களில் செலுத்தத் தவற வைத்து விட்டது. அவனை மட்டுமல்ல அவனுடைய சேனாதிபதி சின்ஹரனையும்
கூடத் தவற வைத்து விட்டது. அந்த ஒரு தவறு இல்லாமலிருந்தால் சின்ஹரனாவது உடனடியாக எதாவது
பராக்கிரமம் காட்டி இருந்திருப்பான். சின்ஹரனை நினைக்கையில் அவனுக்கு ஆத்திரம் வந்தாலும்
கூட அவனைப் போலவே தானும் தவறிழைத்திருக்கிறோம் என்ற உண்மையை அவனுக்கு மறுக்க முடியவில்லை.
நேற்று தான் அவனுக்கு சின்ஹரனை மைனிகா கொன்று விட்டோ, மயக்க மருந்து கொடுத்து மயக்கத்தில்
ஆழ்த்தி விட்டோ சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் மனதில் எழுந்தது. ஆம்பி குமாரன் உடனடியாக
தன் வீரர்களை அனுப்பி மைனிகாவின் வீட்டைச் சோதனையிடச் சொன்னான். போய் வந்த வீரர்கள்
ஒரு கட்டிலைத் தவிர மைனிகாவின் வீட்டில் வேறு எதுவும் இருக்கவில்லை என்றும் சின்ஹரனோ
அவன் பிணமோ வீட்டுக்குள் இல்லை என்றும் சொன்னார்கள். காமாந்தகன் மைனிகாவுடனேயே தட்சசீலத்தை
விட்டு வெளியேறியிருக்க வேண்டும்….
ஆம்பி
குமாரன் பெருமூச்சு விட்டான். நடந்தது எதையும் அவன் மாற்ற முடியாது. ஆனால் இனியொரு
முறை இது போல் நடக்க அவன் கண்டிப்பாக அனுமதிக்க மாட்டான். இனியொரு முறை அலட்சியத்திற்கு
அவன் இடம் தர மாட்டான். அவன் தந்தை எந்த நேரத்திலும் உயிர்விட வாய்ப்பிருக்கிறது. இந்த
நிகழ்ச்சிக்குப் பின் மனிதர் மிகவும் நொந்து போய் விட்டார். தளர்ச்சி மிக அதிகமாக அவரிடம்
தெரிகிறது. அரசர் தன் வாழ்நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார் என்று அரண்மனை வைத்தியர்
அவனிடம் ரகசியமாகச் சொல்லி விட்டுச் சென்றிருக்கிறார். மிக விரைவில் அரியணை ஏறப்போகும் அவன் தன்னை வலிமைப்படுத்திக்
கொள்ள வேண்டும். கேகய நாட்டுக்குக் கடுமையாகப் பதிலடி தர வேண்டும்….
அவன்
எண்ணங்களை அவனுடைய காவல் வீரன் கலைத்தான். “தாங்கள் பாரசீகத்திற்கு அனுப்பியிருந்த
ஒற்றன் வந்திருக்கிறான் இளவரசே”
ஆம்பி
குமாரன் சொன்னான். “அவனை உள்ளே அனுப்பு வீரனே”
காவல்
வீரன் போய் ஒற்றன் உள்ளே நுழைந்தான்.
ஆம்பி
குமாரன் கேட்டான் “என்ன செய்தி ஒற்றனே”
ஒற்றன் சொல்ல ஆரம்பித்தான். “பாரசீகத்தைத் தற்சமயம் வென்றிருக்கும் அலெசாண்டர் கிரேக்கத்தில் உள்ள மாசிடோனியா என்ற நாட்டைச் சேர்ந்தவன் என்று சொல்கிறார்கள் இளவரசே. அவன் பார்க்க தேவலோகத்தைச் சேர்ந்த மாவீரனைப் போல் தெரிகிறான். அவன் படை மிகப் பெரியது. ஆனால் அவன் மாசிடோனியாவை விட்டுக் கிளம்புகையில் படை இந்த அளவில் இருக்கவில்லை என்றும் வழியில் வென்ற நாட்டின் வீரர்களைச் சேர்த்துக் கொண்டு தான் படையை அந்த அளவில் பெரிதாக்கி இருக்கிறான் என்றும் சொல்கிறார்கள். அவன் படையை விடவும் அவன் பராக்கிரமம் மேலும் பெரிதாக இருக்கிறது. பயம் என்பதையே அவன் அறியாதவன் என்று அனைவரும் சொல்கிறார்கள். எல்லாச் சந்தர்ப்பங்களிலும் தன்னுடைய நிதானத்தை இழக்காதவன் அவன் என்றும் சொல்கிறார்கள். எதிரியின் வலிமை பல மடங்கு இருந்தாலும் அதைப் பலவீனப்படுத்த விரைவில் அவன் வழி கண்டுபிடிப்பவன் என்றும் அந்த வழியில் வேகமாகவும், கச்சிதமாகவும் சென்று வென்று முடிப்பவன் என்றும் சொல்கிறார்கள். அதனாலேயே அவன் இது வரை தோல்வி காணவில்லை என்று கூறுகிறார்கள். அப்படிப்பட்ட அலெக்சாண்டர் இங்குள்ள நிலவரத்தை பலர் மூலம் கேட்டு அறிந்து கொண்டதுடன் இங்கே வருவதற்குக் கிளம்பி விட்டான் இளவரசே.…”
ஆம்பி குமாரனுக்கு அலெக்சாண்டரைப் பற்றிக் கேள்விப்பட்டதெல்லாம் பிரமிப்பாக இருந்தது. அவனைப் போன்றவனை நட்பாக்கிக் கொண்டால் அவனுடன் சேர்ந்து கொண்டு கேகயத்தை அல்ல மட்டும் அல்லாமல் மற்ற நாடுகளையும் கூட வென்று ஒரு புதிய சரித்திரம் படைக்கலாம் என்று அவனுக்குத் தோன்ற ஆரம்பித்தது. யோசிக்க யோசிக்க அந்த எண்ணம் வலுப்பெற ஆரம்பித்தது.
ஒற்றனை
அனுப்பி வைத்த ஆம்பி குமாரனுக்கு சிறிது நேரத்தில் அரசரின் உடல்நிலை கவலைக்கிடமாக ஆரம்பித்து
விட்டது என்ற செய்தி வந்து சேர்ந்தது. இந்தச் செய்தி அவன் முந்தைய எண்ணத்திற்கு நல்ல
சகுனமாக இருப்பதாக எண்ணிய ஆம்பி குமாரன் புன்னகைத்தான்.
(தொடரும்)
என்.கணேசன்
(அல்லது)
நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பே, போன் பே, மற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம். (ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)
நூல்களின் குறிப்பு மற்றும் விலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் - என்.கணேசன் நூல்கள்
அக்கவுண்ட் விவரங்கள் -
G-pay UPI ID : gshubha1968@oksbi
Phonepe UPI ID: nganeshanbooks@ybl
வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch
IFSC Code DBSS0IN0188
A/c No.0188386000001146
தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.
நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும்.
Tuesday, September 13, 2022
2 IN 1 Book - ”பிரசாதம் & தோல்வி என்பது இடைவேளை” நூல் வெளியீடு!
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.
நான் எழுதிய முதலிரண்டு நூல்கள் “பிரசாதம் (ஆத்ம தேடலும் தெளிவும்)” மற்றும் “தோல்வி என்பது இடைவேளை” இப்போது ஒரே நூலாக வெளியாகி உள்ளது.
பிரசாதம் - மெய்ஞான, ஆன்மீகக் கட்டுரைகளின் தொகுப்பு.
தோல்வி என்பது இடைவேளை - தன்னம்பிக்கைக் கட்டுரைகளின் தொகுப்பு.
என்.கணேசன் புக்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட இந்த 2 IN 1 நூல் 224 பக்கங்கள் கொண்டது. விலை ரூ.250/-
அக வாழ்க்கையில் ஆனந்தமும், அமைதியும் பெறவும், புற வாழ்க்கையில் வெற்றியும், முன்னேற்றமும் அடையவும், எல்லோருக்கும் பயன்படக்கூடிய பல கட்டுரைகள் அடங்கிய நூல் இது. வாங்கிப் படித்துப் பயனடையும்படி உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
நூலை வாங்கிப் படிக்க என்.கணேசன் புக்ஸை 94863 09351 எண்ணிலோ, nganeshanbooks@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளவும்.
அன்புடன்
என்.கணேசன்
என்.கணேசன் நூல்கள் (nganeshanbooks.blogspot.com)
உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பே, போன் பே, மற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்க அக்கவுண்ட் விவரங்கள் -
G-pay UPI ID : gshubha1968@oksbi
Phonepe UPI ID: nganeshanbooks@ybl
வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch
IFSC Code DBSS0IN0188
A/c No.0188386000001146
தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.
Monday, September 12, 2022
யாரோ ஒருவன்? 102
Thursday, September 8, 2022
சாணக்கியன் 21
சேனாதிபதி சின்ஹரனை மயக்கத்திலிருந்து எழுப்ப சேவகனுக்குச் சிறிது நேரம் தேவைப்பட்டது. மயக்கம் தெளிந்த பின்னும் எங்கே இருக்கிறோம் என்பது சின்ஹரனின் மூளைக்கு உடனடியாக எட்டவில்லை. அந்தக் கிராதகி தாசி கடுமையான மயக்க மருந்தைப் பயன்படுத்தியிருக்க வேண்டும் என்று நினைத்தபடியே சேவகன் சின்ஹரனின் தோளைப் பிடித்து உலுக்கியபடியே மெல்ல அழைத்தான். “சேனாதிபதி.... சேனாதிபதி.....”
நிலவொளியில் அருகில்
தெரிந்த தன் மூத்த சேவகனின் முகத்தைப் பார்த்து திகைத்த சின்ஹரன் சுற்றும் முற்றும்
பார்த்தான். அவனுக்குத் தான் இருக்கும் இடம் மெல்ல நினைவுக்கு வந்தது. ”எங்கே மைனிகா?
நீ எதற்கு இங்கே வந்தாய்?” என்று திகைப்புடன் கேட்டான்.
சின்ஹரன் மயங்கியிருந்த
வேளையில் அன்று அதிகாலையிலேயே கேகயப் படை தட்சசீலத்திற்குள் நுழைந்ததையும், போருக்கு
காந்தாரப்படை தயாராவதற்கு முன் காந்தார அரண்மனையை ஆக்கிரமித்து விட்டதையும் சேவகன்
சொல்ல, சின்ஹரன் தன் தலையில் இடி விழுந்ததைப் போல உணர்ந்தான். ”இப்போது நேரம் என்ன?”
என்று அதிர்ச்சியுடன் கேட்டான்.
“பௌர்ணமி நடுநிசியாகி
விட்டது சேனாதிபதி”
அப்போது தான் கிட்டத்தட்ட
ஒரு நாள் முழுவதும் மயக்க நிலையில் இருந்திருப்பது சின்ஹரனுக்குப் புலனாகியது. “மைனிகா?”
என்று பலவீனமான குரலில் சின்ஹரன் கேட்டான்.
“அவள் அதிகாலையிலேயே
இங்கிருந்து ஓடி விட்டாள். அவளும் இந்தச் சதியில் ஒரு அங்கம் சேனாதிபதி. அவள் கேகய
நாட்டுக்காரியாக இருக்க வேண்டும்...”
சேனாதிபதி சின்ஹரனுக்கு
நம்ப முடியவில்லை. அவனுடைய
மைனிகா தாசியாக இருக்கலாம். ஆனால் அவனை அவள் ஆழமாகக் காதலித்தாள் என்பது உண்மை என்று
தான் இப்போதும் முதலில் அவன் மனம் எண்ணியது. ஆனால் அது உண்மையல்ல, அவள் சதிகாரி என்ற
உண்மை சிறிது சிறிதாக உறைத்து அவன் இதயத்தைப் பிளக்க ஆரம்பித்தது. அதை விட முக்கியமாய்
அவன் தன் தாய்நாட்டைக் காப்பாற்றத் தவறிவிட்டான் என்ற நிஜம் மரண வேதனையை அளித்தது.
நடுங்கும் குரலில் சின்ஹரன் கேட்டான். “மன்னர்?”
“மன்னர்
பாதுகாப்பாகவும் நலமுடனும் இருக்கிறார். கேகயப்படை ஆம்பி குமாரனுக்கு பாடம் புகட்டத்தான்
வந்திருக்கிறது என்று கேகய அமைச்சர் கூறினாராம். கேகயப்படை இப்போது இங்கிருந்து சென்றும்
விட்டது. ஆனால் இளவரசன் ஆம்பி குமாரன் தங்கள் மீது எல்லையில்லாத கோபத்தில் இருக்கிறான்.
தாங்கள் மைனிகாவுடன் இங்கிருந்து ஓடிப் போய் விட்டீர்கள் என்று அவன் நம்புகிறான். தாங்கள்
திரும்பி வந்தால் உடனே அவனைப் போய் காண வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருக்கிறான்.
ஆனால் அவன் அனுப்பியிருக்கும் ஆட்களைப் பார்த்தால் கண்டதும் உங்களைக் கொன்று விட அவன்
உத்தரவு பிறப்பித்திருப்பான் போலத் தெரிகிறது. எனவே தங்கள் உயிருக்கு ஆபத்து சேனாதிபதி.
நீங்கள் திரும்பவும் மாளிகைக்கு வந்து விடாதீர்கள் என்று தங்களை எச்சரிக்கத் தான் நான்
இங்கே வந்தேன்….”
சின்ஹரன்
தன் மீதே அளவுகடந்த வெறுப்பை உணர்ந்தவனாய் சொன்னான். “உயிரோடு வாழ்வதை விட அவன் ஆட்களால்
கொல்லப்படுவது மேலானது என்றே எனக்கும் தோன்றுகிறது. அவன் கோபத்தில் தவறில்லை….”
சேவகன்
அவனை இரக்கத்துடன் பார்த்து விட்டுச் சொன்னான். “சேனாதிபதி. சதியில் சிக்கி மயக்கத்தில்
விழுந்து கிடந்ததால் தாங்கள் கடமையாற்ற முடியாமல் போனதே ஒழிய தாங்கள் அறிந்து எந்தத்
தவறையும் செய்யவில்லை. எனவே தாங்கள் தயவு செய்து இந்தக் கொடுமையான வார்த்தைகளைக் கூற
வேண்டாம். சில காலம் மறைவாய் இருந்து கொள்ளுங்கள்.
ஆம்பி குமாரன் உண்மை உணர்ந்து கோபம் தணியும் வரை வெளிப்பட வேண்டாம்….”
சின்ஹரன்
விரக்தியுடன் கண்களை மூடிக் கொண்டு தலையசைத்தான்.
“அதிக
நேரம் நான் அங்கே இல்லாமல் போனால் அவர்கள் சந்தேகம் என் மீதும் எழ வாய்ப்பிருக்கிறது.
நான் கிளம்புகிறேன் சேனாதிபதி. எங்காவது தப்பித்துச் சென்று மறைவாகவும், எச்சரிக்கையாகவும்
இருங்கள்….”
வணங்கி
விட்டு அந்தச் சேவகன் போய் விட்டான். சின்ஹரன் மனசாட்சியின் உறுத்தலுடன்
சிறிது நேரம் சிலை போல் அங்கேயே அமர்ந்திருந்தான். அவனுக்கு உயிர்வாழச் சிறிதும் விருப்பமில்லை. காமத்தைக் காதல்
என்று எடுத்துக் கொண்டு ஒரு அழகிய தாசியால் ஏமாற்றப்பட்டு ஏமாந்த வரலாற்றைச் சொல்லிக்
கொண்டு, தீராத பழியைச் சுமந்து கொண்டு வாழ்வதை விட மரணம் எத்தனையோ மேலானது…. அவன் கை
இடையில் இருந்த குறுவாளை எடுத்தது. “என் தாய்நாடே என்னை மன்னித்து விடு” என்று தீராத
குற்றவுணர்வுடன் சொல்லி விட்டு அதை ஓங்கிய போது ஒரு அமைதியான குரல் கேட்டது.
”தற்கொலை
செய்து கொள்வதால் உன் பழி தீர்ந்து விடுமா சேனாதிபதி”
சின்ஹரன்
ஒரு கணம் அதிர்ந்து மறு கணம் கூனிக் குறுகினான். யாரும் அவனைக் காண்பதற்கு முன்னால்
பிணமாகி விட வேண்டும் என்பதைத் தவிர வேறு எதையும் அவன் இப்போது ஆசைப்படவில்லை. ஆனால்
அதற்கும் விதி கருணை காட்டவில்லை. யாரோ அங்கிருக்கிறார்கள்….
சின்ஹரன்
பலவீனமான குரலில் கேட்டான். “யாரது?”
குரலுக்குடைய
நபர் இருட்டிலிருந்து நிலவொளிக்கு வந்தார். “என்னை விஷ்ணுகுப்தன் என்றழைப்பார்கள். நான் இங்குள்ள
கல்விக்கூடத்தில் ஆசிரியராக இருக்கிறேன்…”
சின்ஹரன்
அவரை அறிவான். தட்சசீல கல்விக்கூடத்தின் ஆச்சாரியர் விஷ்ணுகுப்தரை
அறியாதவர்கள் காந்தாரத் தலைநகரில் குறைவு. பேரறிவாளியும், பெருமரியாதைக்குரியவருமான அவரை இந்தக்
கேவலமான தருணத்தில் சந்திக்க நேர்வது அவனுடைய துர்ப்பாக்கியமே….
“ஆச்சாரியரே.
இறந்தாலும் பழி தீராதென்று நான் அறிவேன். ஆனால் வாழத் தகுதியில்லாத இந்த இழிந்தவனுக்கு
மரணமே தண்டனையாக இருக்கட்டும் என்று தான் உயிரை விடத் தீர்மானித்தேன்… தயவு செய்து
தடுக்காமல் இந்த இழிபிறவி இறப்பதற்கு அனுமதியுங்கள்”
விஷ்ணுகுப்தர்
சேனாதிபதி சின்ஹரனை இரக்கத்துடன் பார்த்தார். சின்ஹரன் மைனிகாவுடன் போயிருக்க மாட்டான்
என்பதை உறுதியாக நம்பியவர்களில் அவர் முதலாமானவர். சின்ஹரனைப் போன்றவர்கள் எவ்வளவு
முயன்றாலும் ஓரளவுக்கு மேல் தாழ்ந்து போக முடியாது. காமமும், காதலும் மனித இயல்புகள். சில சமயங்களில்
ஒரு மனிதனின் சிந்தனா சக்தியை அவை குறைத்து விடுவதென்னவோ உண்மை தான். அப்படி அவன் ஏமாந்து
விட்டிருக்க வேண்டும் என்பதை அவன் போர் புரிய வரவில்லை என்பதை வைத்தே யூகித்திருந்தார்.
என்ன நடந்திருக்கும் என்பதையும் கூட யூகித்திருந்த
அவர் இந்திரதத் கிளம்பிப் போய் ஊரும் உறங்கும் வரைக் காத்திருந்து விட்டுக் கிளம்பி
வந்தார். அவர் அங்கே வந்த போது தான் சேவகன் மைனிகாவின் வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தான்.
அவன் பின்னாலேயே சத்தமில்லாமல் நுழைந்து நடப்பதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அவருக்குத்
தன்னுடைய கணக்கு பொய்க்கவில்லை என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள முடிந்தது.
அவர்
அமைதியாகச் சொன்னார். “ஒரு முறை கடமை தவறியதற்காக ஒவ்வொருவரும் இறக்க ஆரம்பித்தால்
மீதமுள்ள கடமைகளை நிறைவேற்ற ஒருவருமே ஒரு நாட்டுக்கு மிஞ்ச மாட்டார்கள் சேனாதிபதி.
அப்படி நிகழ்ந்தால் அதை விட ஒரு நாட்டுக்குத் துர்ப்பாக்கியம் இருக்க முடியாது.”
சின்ஹரன்
மெல்லக் கேட்டான். “என்ன சொல்ல வருகிறீர்கள் ஆச்சாரியரே?”
“நீ
கடமை தவறினாலும் காந்தாரம் பாதிக்கப்பட்டு விடவில்லை சேனாதிபதி. நாடும் அரசரும் நலமாகவே
இருக்கிறார்கள். கேகய நாட்டு வீரர்கள் இங்கே எதையும் கைப்பற்றி விடவில்லை. எதையும்
ஆக்கிரமித்து விடவில்லை. இங்கிருந்து அவர்கள் சென்றும் விட்டார்கள்….”
“இருக்கலாம்.
ஆனால் நான் செய்திருப்பது மன்னிக்க முடியாத குற்றம் அல்லவா ஆச்சாரியரே?” சின்ஹரன் ஆழ்ந்த
வருத்தத்துடன் கேட்டான்.
“உன்
உயர்ந்த பார்வையில் அப்படித் தோன்றினாலும் குற்றத்திற்கு நீ பிராயச்சித்தம் தான் செய்ய
வேண்டும். அப்படிச் செய்தால் தான் உன் தாய்நாட்டுக்கு நீ பட்டிருக்கும் கடன் தீரும்
சேனாதிபதி. உன் மரணத்தினால் அந்தக் கடன் தீராது. உன் தாய்நாட்டுக்கு நீ செய்ய வேண்டியது
நிறைய இருக்கிறது. அதன் மன்னர் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார். இளவரசனோ அகங்காரமும்,
அறியாமையும் கொண்டவனாக இருக்கிறான். இந்த நிலையில் அதன் சேனாதிபதியும் இறந்து போவது
நாட்டை மேலும் பலவீனப்படுத்தி விடுவது போல் ஆகி விடாதா சேனாதிபதி யோசித்துப் பார்.
ஒரு முறை கடமை தவறிய நீ, இக்கட்டான நிலைமையில் இருக்கும் உன் நாட்டுக்குச் செய்ய வேண்டிய
கடமைகள் மேலும் ஏராளமாக இருக்கும் போது, அதைச் செய்யாமல் இறக்கத் தீர்மானிப்பது நாட்டுக்கு
இழைக்கும் அநீதியாக ஆகி விடாதா?”
(தொடரும்)
என்.கணேசன்
(அல்லது)
நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பே, போன் பே, மற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம். (ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)
நூல்களின் குறிப்பு மற்றும் விலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் - என்.கணேசன் நூல்கள்
அக்கவுண்ட் விவரங்கள் -
G-pay UPI ID : gshubha1968@oksbi
Phonepe UPI ID: nganeshanbooks@ybl
வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch
IFSC Code DBSS0IN0188
A/c No.0188386000001146
தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.
நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும்.





