சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, September 8, 2022

சாணக்கியன் 21

 

சேனாதிபதி சின்ஹரனை மயக்கத்திலிருந்து எழுப்ப சேவகனுக்குச் சிறிது நேரம் தேவைப்பட்டது. மயக்கம் தெளிந்த பின்னும் எங்கே இருக்கிறோம் என்பது சின்ஹரனின் மூளைக்கு உடனடியாக எட்டவில்லை. அந்தக் கிராதகி தாசி கடுமையான மயக்க மருந்தைப் பயன்படுத்தியிருக்க வேண்டும் என்று நினைத்தபடியே சேவகன் சின்ஹரனின் தோளைப் பிடித்து உலுக்கியபடியே மெல்ல அழைத்தான். “சேனாதிபதி.... சேனாதிபதி.....”

 

நிலவொளியில் அருகில் தெரிந்த தன் மூத்த சேவகனின் முகத்தைப் பார்த்து திகைத்த சின்ஹரன் சுற்றும் முற்றும் பார்த்தான். அவனுக்குத் தான் இருக்கும் இடம் மெல்ல நினைவுக்கு வந்தது. ”எங்கே மைனிகா? நீ எதற்கு இங்கே வந்தாய்?” என்று திகைப்புடன் கேட்டான்.

 

சின்ஹரன் மயங்கியிருந்த வேளையில் அன்று அதிகாலையிலேயே கேகயப் படை தட்சசீலத்திற்குள் நுழைந்ததையும், போருக்கு காந்தாரப்படை தயாராவதற்கு முன் காந்தார அரண்மனையை ஆக்கிரமித்து விட்டதையும் சேவகன் சொல்ல, சின்ஹரன் தன் தலையில் இடி விழுந்ததைப் போல உணர்ந்தான். ”இப்போது நேரம் என்ன?” என்று அதிர்ச்சியுடன் கேட்டான்.

 

“பௌர்ணமி நடுநிசியாகி விட்டது சேனாதிபதி”

 

அப்போது தான் கிட்டத்தட்ட ஒரு நாள் முழுவதும் மயக்க நிலையில் இருந்திருப்பது சின்ஹரனுக்குப் புலனாகியது. “மைனிகா?” என்று பலவீனமான குரலில் சின்ஹரன் கேட்டான்.

 

“அவள் அதிகாலையிலேயே இங்கிருந்து ஓடி விட்டாள். அவளும் இந்தச் சதியில் ஒரு அங்கம் சேனாதிபதி. அவள் கேகய நாட்டுக்காரியாக இருக்க வேண்டும்...”

 

சேனாதிபதி சின்ஹரனுக்கு நம்ப முடியவில்லை. அவனுடைய மைனிகா தாசியாக இருக்கலாம். ஆனால் அவனை அவள் ஆழமாகக் காதலித்தாள் என்பது உண்மை என்று தான் இப்போதும் முதலில் அவன் மனம் எண்ணியது. ஆனால் அது உண்மையல்ல, அவள் சதிகாரி என்ற உண்மை சிறிது சிறிதாக உறைத்து அவன் இதயத்தைப் பிளக்க ஆரம்பித்தது. அதை விட முக்கியமாய் அவன் தன் தாய்நாட்டைக் காப்பாற்றத் தவறிவிட்டான் என்ற நிஜம் மரண வேதனையை அளித்தது. நடுங்கும் குரலில் சின்ஹரன் கேட்டான். “மன்னர்?”

 

“மன்னர் பாதுகாப்பாகவும் நலமுடனும் இருக்கிறார். கேகயப்படை ஆம்பி குமாரனுக்கு பாடம் புகட்டத்தான் வந்திருக்கிறது என்று கேகய அமைச்சர் கூறினாராம். கேகயப்படை இப்போது இங்கிருந்து சென்றும் விட்டது. ஆனால் இளவரசன் ஆம்பி குமாரன் தங்கள் மீது எல்லையில்லாத கோபத்தில் இருக்கிறான். தாங்கள் மைனிகாவுடன் இங்கிருந்து ஓடிப் போய் விட்டீர்கள் என்று அவன் நம்புகிறான். தாங்கள் திரும்பி வந்தால் உடனே அவனைப் போய் காண வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருக்கிறான். ஆனால் அவன் அனுப்பியிருக்கும் ஆட்களைப் பார்த்தால் கண்டதும் உங்களைக் கொன்று விட அவன் உத்தரவு பிறப்பித்திருப்பான் போலத் தெரிகிறது. எனவே தங்கள் உயிருக்கு ஆபத்து சேனாதிபதி. நீங்கள் திரும்பவும் மாளிகைக்கு வந்து விடாதீர்கள் என்று தங்களை எச்சரிக்கத் தான் நான் இங்கே வந்தேன்….”

 

சின்ஹரன் தன் மீதே அளவுகடந்த வெறுப்பை உணர்ந்தவனாய் சொன்னான். “உயிரோடு வாழ்வதை விட அவன் ஆட்களால் கொல்லப்படுவது மேலானது என்றே எனக்கும் தோன்றுகிறது.  அவன் கோபத்தில் தவறில்லை….”

 

சேவகன் அவனை இரக்கத்துடன் பார்த்து விட்டுச் சொன்னான். “சேனாதிபதி. சதியில் சிக்கி மயக்கத்தில் விழுந்து கிடந்ததால் தாங்கள் கடமையாற்ற முடியாமல் போனதே ஒழிய தாங்கள் அறிந்து எந்தத் தவறையும் செய்யவில்லை. எனவே தாங்கள் தயவு செய்து இந்தக் கொடுமையான வார்த்தைகளைக் கூற வேண்டாம்.  சில காலம் மறைவாய் இருந்து கொள்ளுங்கள். ஆம்பி குமாரன் உண்மை உணர்ந்து கோபம் தணியும் வரை வெளிப்பட வேண்டாம்….”

 

சின்ஹரன் விரக்தியுடன் கண்களை மூடிக் கொண்டு தலையசைத்தான்.

 

“அதிக நேரம் நான் அங்கே இல்லாமல் போனால் அவர்கள் சந்தேகம் என் மீதும் எழ வாய்ப்பிருக்கிறது. நான் கிளம்புகிறேன் சேனாதிபதி. எங்காவது தப்பித்துச் சென்று மறைவாகவும், எச்சரிக்கையாகவும் இருங்கள்….”

 

வணங்கி விட்டு அந்தச் சேவகன் போய் விட்டான். சின்ஹரன்  மனசாட்சியின் உறுத்தலுடன் சிறிது நேரம் சிலை போல் அங்கேயே அமர்ந்திருந்தான். அவனுக்கு உயிர்வாழச் சிறிதும் விருப்பமில்லை. காமத்தைக் காதல் என்று எடுத்துக் கொண்டு ஒரு அழகிய தாசியால் ஏமாற்றப்பட்டு ஏமாந்த வரலாற்றைச் சொல்லிக் கொண்டு, தீராத பழியைச் சுமந்து கொண்டு வாழ்வதை விட மரணம் எத்தனையோ மேலானது…. அவன் கை இடையில் இருந்த குறுவாளை எடுத்தது. “என் தாய்நாடே என்னை மன்னித்து விடு” என்று தீராத குற்றவுணர்வுடன் சொல்லி விட்டு அதை ஓங்கிய போது ஒரு அமைதியான குரல் கேட்டது.


”தற்கொலை செய்து கொள்வதால் உன் பழி தீர்ந்து விடுமா சேனாதிபதி”

 

சின்ஹரன் ஒரு கணம் அதிர்ந்து மறு கணம் கூனிக் குறுகினான். யாரும் அவனைக் காண்பதற்கு முன்னால் பிணமாகி விட வேண்டும் என்பதைத் தவிர வேறு எதையும் அவன் இப்போது ஆசைப்படவில்லை. ஆனால் அதற்கும் விதி கருணை காட்டவில்லை. யாரோ அங்கிருக்கிறார்கள்….

 

சின்ஹரன் பலவீனமான குரலில் கேட்டான். “யாரது?”

 

குரலுக்குடைய நபர் இருட்டிலிருந்து நிலவொளிக்கு வந்தார்.  “என்னை விஷ்ணுகுப்தன் என்றழைப்பார்கள். நான் இங்குள்ள கல்விக்கூடத்தில் ஆசிரியராக இருக்கிறேன்…”

 

சின்ஹரன் அவரை அறிவான்.  தட்சசீல கல்விக்கூடத்தின் ஆச்சாரியர் விஷ்ணுகுப்தரை அறியாதவர்கள் காந்தாரத் தலைநகரில் குறைவு.  பேரறிவாளியும், பெருமரியாதைக்குரியவருமான அவரை இந்தக் கேவலமான தருணத்தில் சந்திக்க நேர்வது அவனுடைய துர்ப்பாக்கியமே….

 

“ஆச்சாரியரே. இறந்தாலும் பழி தீராதென்று நான் அறிவேன். ஆனால் வாழத் தகுதியில்லாத இந்த இழிந்தவனுக்கு மரணமே தண்டனையாக இருக்கட்டும் என்று தான் உயிரை விடத் தீர்மானித்தேன்… தயவு செய்து தடுக்காமல் இந்த இழிபிறவி இறப்பதற்கு அனுமதியுங்கள்”

 

விஷ்ணுகுப்தர் சேனாதிபதி சின்ஹரனை இரக்கத்துடன் பார்த்தார். சின்ஹரன் மைனிகாவுடன் போயிருக்க மாட்டான் என்பதை உறுதியாக நம்பியவர்களில் அவர் முதலாமானவர். சின்ஹரனைப் போன்றவர்கள் எவ்வளவு முயன்றாலும் ஓரளவுக்கு மேல் தாழ்ந்து போக முடியாது.  காமமும், காதலும் மனித இயல்புகள். சில சமயங்களில் ஒரு மனிதனின் சிந்தனா சக்தியை அவை குறைத்து விடுவதென்னவோ உண்மை தான். அப்படி அவன் ஏமாந்து விட்டிருக்க வேண்டும் என்பதை அவன் போர் புரிய வரவில்லை என்பதை வைத்தே யூகித்திருந்தார்.   என்ன நடந்திருக்கும் என்பதையும் கூட யூகித்திருந்த அவர் இந்திரதத் கிளம்பிப் போய் ஊரும் உறங்கும் வரைக் காத்திருந்து விட்டுக் கிளம்பி வந்தார். அவர் அங்கே வந்த போது தான் சேவகன் மைனிகாவின் வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தான். அவன் பின்னாலேயே சத்தமில்லாமல் நுழைந்து நடப்பதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அவருக்குத் தன்னுடைய கணக்கு பொய்க்கவில்லை என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள முடிந்தது.

 

அவர் அமைதியாகச் சொன்னார். “ஒரு முறை கடமை தவறியதற்காக ஒவ்வொருவரும் இறக்க ஆரம்பித்தால் மீதமுள்ள கடமைகளை நிறைவேற்ற ஒருவருமே ஒரு நாட்டுக்கு மிஞ்ச மாட்டார்கள் சேனாதிபதி. அப்படி நிகழ்ந்தால் அதை விட ஒரு நாட்டுக்குத் துர்ப்பாக்கியம் இருக்க முடியாது.”

 

சின்ஹரன் மெல்லக் கேட்டான். “என்ன சொல்ல வருகிறீர்கள் ஆச்சாரியரே?”

 

“நீ கடமை தவறினாலும் காந்தாரம் பாதிக்கப்பட்டு விடவில்லை சேனாதிபதி. நாடும் அரசரும் நலமாகவே இருக்கிறார்கள். கேகய நாட்டு வீரர்கள் இங்கே எதையும் கைப்பற்றி விடவில்லை. எதையும் ஆக்கிரமித்து விடவில்லை. இங்கிருந்து அவர்கள் சென்றும் விட்டார்கள்….”

 

“இருக்கலாம். ஆனால் நான் செய்திருப்பது மன்னிக்க முடியாத குற்றம் அல்லவா ஆச்சாரியரே?” சின்ஹரன் ஆழ்ந்த வருத்தத்துடன் கேட்டான்.

 

“உன் உயர்ந்த பார்வையில் அப்படித் தோன்றினாலும் குற்றத்திற்கு நீ பிராயச்சித்தம் தான் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் தான் உன் தாய்நாட்டுக்கு நீ பட்டிருக்கும் கடன் தீரும் சேனாதிபதி. உன் மரணத்தினால் அந்தக் கடன் தீராது. உன் தாய்நாட்டுக்கு நீ செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. அதன் மன்னர் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார். இளவரசனோ அகங்காரமும், அறியாமையும் கொண்டவனாக இருக்கிறான். இந்த நிலையில் அதன் சேனாதிபதியும் இறந்து போவது நாட்டை மேலும் பலவீனப்படுத்தி விடுவது போல் ஆகி விடாதா சேனாதிபதி யோசித்துப் பார். ஒரு முறை கடமை தவறிய நீ, இக்கட்டான நிலைமையில் இருக்கும் உன் நாட்டுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் மேலும் ஏராளமாக இருக்கும் போது, அதைச் செய்யாமல் இறக்கத் தீர்மானிப்பது நாட்டுக்கு இழைக்கும் அநீதியாக ஆகி விடாதா?”

 

(தொடரும்)

என்.கணேசன்

இந்த நாவலையும், அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -

(அல்லது)

என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்(ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)

நூல்களின் குறிப்பு மற்றும் விலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் - என்.கணேசன் நூல்கள்


அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.


நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை  nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும். 

    

6 comments:

  1. அருமையாக சென்று கொண்டிருக்கிறது...நன்றி ஐயா

    ReplyDelete
  2. 5th paragraph to be corrected at the end for gender

    ReplyDelete
  3. 8th paragraph sevagan tone is in singularity when he is addressing Ambi Kumaran, should not he give respect to the prince while addressing.

    ReplyDelete