சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, September 5, 2022

யாரோ ஒருவன்? 101




வேலாயுதம் வேகமாகப் போய் கல்யாணிடம் சற்று முன் தீபக் சொன்னதைத் தெரிவித்தார்.  கல்யாண் திகைத்தான். பல லட்சங்கள் கொடுத்தாலும் ஐந்து மாதங்கள் கழித்து தான் அப்பாயின்மெண்ட் தர முடியும் என்று உறுதியாகச் சொல்பவன் ரஞ்சனிக்கு மட்டும் இவ்வளவு சீக்கிரம் தந்தான்? தீபக் எப்படி இதைச் சாதித்தான்? இருக்கின்ற தலைவலி போதாது என்று இப்போது இது வேறா என்று கல்யாண் நொந்து போனான். இனி சீக்கிரத்திலேயே சரத்தின் போன் வரும். ஏற்கெனவே அவன் தொடைநடுங்கி. இதை தீபக் மூலம் கேள்விப்பட்டபின் அவனால் நிம்மதியாக இருக்க முடியாது... இருபத்தியிரண்டு வருடங்களுக்கு முன் மணாலி போய் வந்த பிறகு சில நாட்கள் அவனுக்கும் உள்ளூரப் பயம் இருந்து கொண்டு தான் இருந்தது. எந்த நேரமும் போலீஸ்காரர்கள் வந்து விசாரிக்கலாம் என்ற அச்சம் அவனுக்கு இருந்து வந்தது. ஆனால் போகப் போக அவனுக்கு அந்தப் பயம் விலகிப் போய் விட்டது. அதன் பின் வாழ்க்கையில் வெற்றி மேல் வெற்றி கிடைக்க ஆரம்பித்தவுடன் அசாத்திய தைரியமும், அதன் பின் அலட்சியமும் வந்து தங்கி விட்டது. பழைய பயமெல்லாம் பழங்கனவாய் அனாவசியமானதாய் தோன்ற ஆரம்பித்து விட்டது.

ஆனால் இருபத்தியிரண்டு வருடங்கள் கழித்து இப்போது அந்தப் பழைய நிகழ்வு திரும்பத் திரும்ப ஞாபகப்படுத்தப்படுகிறது. யாராவது அதை நினைவுபடுத்துகிறார்கள். மொட்டைக்கடுதாசி வருகிறது. ரா அதிகாரி கூட விசாரிக்க வருகிறான். ’பழங்கால சாட்சியங்கள் எதுவும் எங்கும் தங்கி இருக்க முடியாது. யாரும் எதையும் நிரூபிக்க முடியாதுஎன்று அவன் திரும்பத் திரும்ப தைரியப்படுத்திக் கொண்டாலும் நெருப்பில்லாமல் புகையாது என்ற பழமொழியும் நினைவுக்கு வந்து தொலைத்தது....

செல்போன் பாடியது. யாரென்று பார்த்தான். சரத்! தன் கவலைகளையும் சந்தேகங்களையும் ஒதுக்கி விட்டு சரத்துக்கு முழு தைரியம் ஏற்படும்படி பேசி விட்டுச் சொன்னான். ”பாரு சரத்! ரஞ்சனி கிட்ட நாகராஜ் என்ன சொல்றான்னு பார்ப்போம். அதை வெச்சு நாம அவனையும் எடை போட முடியும். அவன் எல்லா உண்மையையும் கண்டுபிடிச்சு சொன்னாலும்  அவன் என்ன ஆதாரம் வெச்சிருக்க முடியும்? கொஞ்சம் யோசிச்சு பாரு. அவன் சொல்றது எதுவாவே இருந்தாலும் நாம ஒத்துகிட்டா தான் பிரச்சனை. நாம ஒரே நிலையில நிற்போம். ஞாபகம் வெச்சுக்கோ. பழைய தடயம் ஏதாவது இருந்திருந்தா இவ்வளவு நாள் யாரும் சும்மா இருந்திருக்கவும் மாட்டாங்க. அதனால இத்தனை வருஷம் கழிச்சு நம்மள யாரும் எதுவும் பண்ணிட முடியாது. அதனால நாகராஜைப் பத்தி தெளிவான ஒரு முடிவெடுக்க நமக்குக் கிடைச்சிருக்கற சந்தர்ப்பம்னு நாம சந்தோஷப்படணுமே ஒழிய பயப்படறதுல அர்த்தமில்லை....”

சரத்தை ஓரளவு அமைதிப்படுத்தி விட்டு கல்யாண் செல்போனைக் கீழே வைத்த போது களைப்பை உணர்ந்தான். சரத்தின் மிகப் பெரிய பலவீனமே ரஞ்சனி தான். வேறு எதையுமே அவன் தாங்கிக் கொள்வான். அவளுடைய வருத்தத்தையும், துக்கத்தையும் தாங்கிக் கொள்ள மாட்டான் அவன்.  ரஞ்சனியை நினைக்கையில் கல்யாண் மனம் கடந்த காலத்திற்குப் பயணம் போனது.

கல்யாண், சரத், மாதவன் மூவருடனும் ரஞ்சனி நட்பு கொண்டிருந்தாலும் அவர்கள் ஒவ்வொருவருடனும் ரஞ்சனி பழகிய விதங்களில் வித்தியாசம் நிறைய இருந்தது. கல்யாணும் அவளும் அறிவு சார்ந்த விஷயங்களில் எப்போதும் ஒத்துப் போவார்கள். புதிய விஷயங்களைப் புரிந்து கொள்வதில் அவர்கள் ஒரே அலைவரிசையில் இருப்பார்கள். சீக்கிரமே எதையும் புரிந்து கொள்வார்கள். அதனால் அவர்கள் இருவரும் அறிவார்ந்த விஷயங்கள் பற்றித் தான் அதிகம் பேசிக் கொள்வார்கள். சரத் மிக நெருங்கிய நண்பன் என்ற வகையில் அவள் வாழ்க்கையில் இருந்தான்.  எந்த விஷயத்தையும் அவள் அவனிடம் மனம் விட்டுச் சொல்வாள். அவன் மிகவும் பொறுமையாகக் கேட்பான். எப்போதும் அதற்கு அவன் சலித்ததோ மறுத்ததோ இல்லை. அவன் மீது அவளுக்கு ஆழமான நம்பிக்கை இருந்தது.  மாதவன் அவளுடன் உணர்வு பூர்வமான நெருக்கத்தில் இருந்தான். அவளுடைய கவிதைகளை எல்லாம் அவள் அவனிடம் தான் வாசித்துக் காட்டுவாள். அவள் என்ன உணர்கிறாளோ அதை அதே அலைவரிசையில் உணர முடிந்தவனாக மாதவன் இருந்தான். அவள் எப்போது என்ன நினைக்கிறாள் என்பதை முகம் பார்த்தே சொல்லக்கூடியவன் மாதவன் தான். பல நேரங்களில் அவள் முகம் பார்க்காமலேயே கூட இந்த விஷயத்தில் அவள் எடுக்கும் நிலைப்பாடு இதுவாகத் தான் இருக்கும் என்று கூட உறுதியாகப் புரிந்து கொள்ள முடிந்தவன் அவன்.

அவர்கள் நால்வரது நட்பை கல்லூரியில் பலரும் நால்வர் அணி என்று சொல்வார்கள். கல்லூரியில் எப்போதும் அவர்கள் நால்வரும் சேர்ந்தே காணப்படுவார்கள். அவர்களுடைய குடும்பம் மற்றும் பொருளாதார சூழ்நிலைகளும் கூட கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத் தான் இருந்தன.  எல்லா விஷயங்களைப் பற்றியும் பேசுவார்கள், விவாதிப்பார்கள், நட்பு ரீதியாக ஒருவரை ஒருவர் விமர்சித்துக் கொள்வார்கள்.

எல்லாம் மாதவனின் மரணத்திற்குப் பின் மாறிப் போனது. பின் எப்போதும் ரஞ்சனி கவிதைகள் எழுதியதில்லை. சரத்தை அவள் திருமணம் செய்து கொண்ட பின் அவர்கள் இருவருடைய வாழ்க்கையும் ஒன்றானது. ஆனாலும் அவர்கள் மூவருமே முந்தைய நண்பர்களாக இருக்கவில்லை. பழைய விவாதங்களோ, பழைய நினைவுகளின் பரிமாற்றங்களோ இல்லாதபடி மாதவனின் மரணம் அவர்களை மாற்றி விட்டது. அடிக்கடி இல்லா விட்டாலும் எப்போதாவது ரஞ்சனி கல்யாணின் வீட்டுக்கு வருவதுண்டு. அப்படி வந்தாலும் மேகலாவுடனும் தர்ஷினியுடனும் பேசிய அளவுக்கு அவள் கல்யாணுடன் பேசியதில்லை. சூட்சுமமான இடைவெளி ஒன்று அவர்களுக்குள் வந்து விட்டிருந்தது....

மீண்டும் கல்யாணின் செல்போன் பாடியது. இந்த முறை அழைத்தது அவனுடைய ப்ரொடக்‌ஷன் மேனேஜர். கம்பெனியின் முக்கியமான மெஷினரி ஒன்று ரிப்பேராகி விட்டதாகச் சொன்னான். மகன் அருகில் நின்று கொண்டு மகன் முகத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியைக் கவனித்துக் கொண்டிருந்த வேலாயுதம் கேட்டார். “என்னடா?”

“மெஷின் ஒன்னு ரிப்பேராம். என்னவோ தெரியலைப்பா. நேரமே சரியில்லை. திரும்பின பக்கமெல்லாம் பிரச்சன. ஒன்னு விட்டா ஒன்னு வந்துகிட்டே இருக்கு. ஆஸ்திரேலியா எக்ஸ்போர்ட் பொருள்களை அவங்க திருப்பியனுப்பிச்சா இது வரைக்கும் சம்பாதிச்சதெல்லாம் இழக்கற அளவுக்கு நஷ்டமாயிடும். என்ன பண்றதுன்னே தெரியலை”

வேலாயுதம் மகனருகில் உட்கார்ந்து அவன் காதுக்கு மட்டும் கேட்கும்படி தாழ்ந்த குரலில் சொன்னார். இன்னைக்கு பீரோல இருக்கிற நாகரத்தினத்த எடுத்து சாமி முன்னாடி வெச்சி பூஜை பண்ணிட்டு மறுபடி உள்ளே வை. பக்கத்து வீட்டுக்காரன் அத்தனை சக்தி இருந்தாலும் அடிக்கடி பூஜை பண்றான் பார்த்தியில்ல. அதெல்லாம் அர்த்தத்தோட தான். இந்த நாகரத்தினம் வந்த பிறகு தான் நம்ம வாழ்க்கைல அதிர்ஷ்டமே எட்டிப்பாத்துச்சு. அதோட சக்தி இப்ப மங்கி இருக்கலாம். அதை பூஜை பண்ணி திருப்பி வெச்சிட்டா பழையபடி எல்லாம் சரியாக ஆரம்பிச்சுடும். வேணும்னா செஞ்சு பாரேன்”

கல்யாணுக்கு அவர் சொல்வதும் சரியென்றே பட்டது. அவன் எழுந்து போக வேலாயுதமும் பின்னாலேயே போனார். கல்யாண் தனதறைக்குள் போய் தன் பீரோவைத் திறந்தான். பீரோவுக்குள் பொருத்தப்பட்டிருந்த பணம் வைத்திருக்கும் லாக்கரைத் திறந்தான். உள்ளே கட்டுக் கட்டாய் இருந்த பணம், நகைகள் தாண்டி கையை உள்ளே விட்டு மூலையில் துழாவினான். நாகரத்தினத்தை வைத்திருந்த சிவப்புப் பட்டுத்துணி கைக்கு அகப்படவில்லை.  

அதை அவன் முகபாவனையிலிருந்தே உணர்ந்த வேலாயுதம் எல்லாம் வெளியே எடுத்து பொறுமையாய் தேடிப்பார்.” என்றார்.

கல்யாண் லாக்கருக்குள் இருந்த பணம் மற்றும் நகைகளை எடுத்து வெளியே வைத்து விட்டுப் பார்த்தான். லாக்கர் காலியாகவே இருந்தது. சிவப்புப் பட்டுத்துணி அங்கேயில்லை. கல்யாண் அதிர்ச்சியுடன் அவரைப் பார்த்தான்.

வேலாயுதம் சொன்னார். “ரெண்டு மூனு வாரத்துக்கு முன்னால தான நாம இதை எடுத்துப் பார்த்தோம். நீ எடுத்துப் பார்த்து திருப்பி வெச்சியா இல்லையா”

“உங்க முன்னாடி தானப்பா அதை திருப்பி வெச்சேன்”

வேலாயுதம் சிறிது யோசித்துப் பார்த்து விட்டு சொன்னார். “ஆமா…. பின்னே எப்படி காணாம போயிடுச்சு. உன் சம்சாரத்தைக் கேளு. அவ அதை எடுத்து வேறெங்காவது வெச்சிருக்கலாம்”

கல்யாண் பதற்றத்துடன் மனைவியை அழைத்து அந்த சிவப்பு பட்டுத் துணியில் வைத்திருந்த ரத்தினத்தை எடுத்தாயா என்று கேட்க அவள் “நான் உங்க பீரோவையே திறக்கறதில்லை. நீங்களே எங்கயாவது வெச்சிருப்பீங்க பாருங்க” என்றாள்

அதன் பின் எல்லா இடங்களையும் வேலாயுதமும், கல்யாணும் தேடிப்பார்த்து விட்டார்கள். சிவப்புத் துணியும், ரத்தினமும் வீட்டுக்குள் எங்கும் இல்லை.

(தொடரும்)
என்.கணேசன்

2 comments:

  1. Super Revenge for Kalyan and Sarath! Exciting to read next epi...

    ReplyDelete
  2. இப்போது தான் புரிகிறது... அவர்களிடம் நாகரத்தினம் போகவும் அதிர்ஷ்டமும் போய் விட்டது....
    அன்றைக்கு மணி திருடியது இவுங்க நாகரத்தினத்தை தான்....
    நாகராஜ் இங்கு வந்து தங்கியதன் நோக்கம் இந்த நாகரத்தினத்தை எடுப்பது...

    ReplyDelete