என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, January 27, 2020

தோல்வி என்பது இடைவேளை நூல் அமேசான் கிண்டிலில் வெளியீடு



ன்பு வாசகர்களுக்கு வணக்கம். தோல்வி என்பது இடைவேளை நூல் அமேசான் கிண்டிலில் இன்று வெளியாகியுள்ளது.

நமக்குள்ளே ஒரு அக்னி இருந்தால், நம் ஆசை உறுதியானதாக இருந்தால், நம் இலக்கு நமக்கு மிக முக்கியமானதாக இருந்தால், நம் முயற்சிகள் ஆரம்பத்தில் வெற்றி தராமல் போனாலும் தோல்வி என்பது இடைவேளை தான். முடியாது என்பதெல்லாம் நாம் முயலாதது மட்டுமே. 

தோல்விகளுக்குப் பல காரணங்கள் இருக்கலாம். தோல்விக்குக் காரணம் எண்ணங்களின் வீரியக் குறைவாக இருக்கலாம்; முயற்சிகள் போதாமல் போயிருக்கலாம்; அறிவுபூர்வமான அணுகுமுறை இல்லாமல் போயிருந்திருக்கலாம்; காலமும், சூழ்நிலைகளும் கூடக் காரணமாக இருக்கலாம். ஆனால் அவற்றிலிருந்து கற்றுக் கொண்டு, நம்மை மாற்றி அமைத்துக் கொண்டு, மறுபடியும் தொடர்வதில் தான் வெற்றியின் ரகசியமே இருக்கிறது. 

அந்த வகையில் தோல்வியின் காரணங்களையும், வெற்றியின் இரகசியங்களையும், நமக்குள் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்களையும் அலசும் தன்னம்பிக்கைக் கட்டுரைகளின் தொகுப்பான இந்த நூல் எண்ணங்களை மேம்படுத்தி, செயல்களை அறிவுபூர்வமாக்கி, வாழ்க்கையை விசாலமாக்கி, மாபெரும் மாற்றத்தை உங்களுக்குள் உண்டாக்கி மகத்தான வெற்றி அடையத் தேவையான அனைத்திற்கும் வித்திடும்.

அமேசான் கிண்டிலில் படிக்க லிங்க் -


படித்துப் பயன் அடையுங்கள்.

அன்புடன்
என்.கணேசன்




Saturday, January 25, 2020

சங்கீத மும்மூர்த்திகள் நூல் அமேசான் கிண்டிலில் வெளியீடு!




அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.


என் சங்கீத மும்மூர்த்திகள் நூல் அமேசான் கிண்டிலிலும் தற்போது வெளியாகியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். லிங்க்-


நூலில் இருந்து சில பகுதிகள்:


சியாமா சாஸ்திரி, தியாகராஜர் மற்றும் முத்துசாமி தீட்சிதர் ஆகியோர் தான் சங்கீத மும்மூர்த்திகள் என்றழைக்கப்பட்டவர்கள். மூவரும் தஞ்சை மாவட்டத்தில் திருவாரூரில் பிறந்தவர்கள்.

ஜனனாத் கமலாலயே, தர்ஷனாத் அப்ரசதாசி

ஸ்மரணாத் அருணாசலம், காசி து மரணாந் முக்தி!


என்கிறது ஒரு சமஸ்கிருத சுலோகம். அதாவது கமலாலயம் இருக்கும் திருவாரூரில் பிறப்பதும், சிதம்பரத்தை தரிசிப்பதும், அருணாச்சலத்தை நினைப்பதும், காசியில் இறப்பதும் முக்தியைக் கொடுக்கும் என்பது இந்த சுலோகத்தின் பொருள். அதற்கேற்றாற் போலவே சங்கீத மும்மூர்த்திகளும் இதே திருத்தலத்தில் பிறந்து முக்திக்கு வழி வகுத்துக் கொண்டார்களோ என்று எண்ணவும் தோன்றுகிறது.
.....

தியாகராஜரைத் தமது சபைக்கு அழைத்து தம்மைப் பற்றியும் பாடச் செய்ய வேண்டுமென சரபோஜி விரும்பினார். பட்டு, பீதாம்பரம், பொற்காசுகள் எல்லாம் கொடுத்தனுப்பி அரசவைக்கு வந்து தன்னைப் பாட மன்னர் தியாகராஜருக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் தியாகராஜர் அரசவைக்கு செல்ல மறுத்து ‘நிதிசால சுகமா” என்ற கிருதியைக் கல்யாண இராகத்தில் பாடினார்.

(நிதியும் செல்வமும் மிகுந்த இன்பத்தைக் கொடுக்கக் கூடியவைகளா, அல்லது ஸ்ரீராமனின் சன்னிதியில் சேவை புரிவது அதிக சுகம் தருமா? மனமே, இதற்கு உண்மையான பதிலைக் கூறு. தயிர், வெண்ணெய், பால் ஆகியவை சுவை தருமா, அல்லது தசரத குமாரன் இராமனைத் தியானித்துப் பாடல் அதிக சுவை தருமா? அடக்கம், சாந்த குணங்கள் அமைந்த கங்கா ஸ்நானம் சுகம் தருமா அல்லது சிற்றின்பச் சேறு நிறைந்த கிணற்று நீர் சுகம் தருமா? அகம்பாவம் நிறைந்த மனிதர்களைப் பாடும் நரஸ்துதி சுகமா அல்லது நல்ல மனம் படைத்த தியாகராஜன் வணங்கும் தெய்வத்தைத் துதித்தல் சுகமா?)
......

“ப்ரோத்து பொய்யெனு” என்று துவங்கும் தோடி ராகக் கிருதியில் மனித வாழ்க்கை எப்படியெல்லாம் கழிகிறது என்று தியாகையர் சொல்லும் விதம் வெகு யதார்த்தம். ”பொழுது போனது- உறக்கத்துடன் சில நாள், விஷய எண்ணங்களுடன் சில நாள், அற்ப ஆசைகளுக்காக மனிதரைப் புகழ்ந்து சில நாள், பட்டி மாடு போல கண்ட இடங்களில் உண்டு கழித்து ஏதுமறியாமல் சில நாள், முறை தவறிய தீய மக்களிடம் மூடத்தனமாய் உரையாடி சில நாள், களிப்புடன் செல்வம், மக்கள் வீடுகளை செருக்குடன் நோக்கி சில நாள், முடிவில் அறிவு தவறிய முதுமையுடன் முன்பின் தெரியாமலே சில நாள்...” இப்படியெல்லாம் ராமனை அறியாமலே நாட்கள் சென்றன என்று ஆத்மவிசாரம் செய்கிறார் தியாகையர்.
......

ஓ மனசா என்று மனதைக் கேள்வி கேட்கும் விதமாக அவர் பல அருமையான பாடல்கள் பாடி உள்ளார். எத்தனை தான் ஞானம் பெற்றிருந்தாலும் பல சமயங்களில் அலைபாய்ந்து முரண்டு பிடிக்கும் இயல்புடையது மனித மனம். ஒரு நேரம் வசப்பட்டது போலத் தோன்றினாலும் இன்னொரு சமயம் மனம் கட்டுக்கடங்காமல் தன் போக்கில் செல்லக் கூடியது. இதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்திருப்போம். தியாகையர் மனதிற்கு புத்தி சொல்லியும், நியாயம் சொல்லியும் பாடி இருக்கும் பாடல்கள் பலவும் நமக்காகவும், நம் மனதிற்காகவும் பாடப்பட்டது போலத் தோன்றும் அளவு இயல்பானவை.
......

ஏற்கெனவே அச்சில் வந்திருக்கும் இந்த நூல் அமேசான் கிண்டிலிலும் வெளியாகி உள்ளதால் வெளிநாடுகளில் உள்ள இசையார்வம் மிக்க வாசகர்களும் இதைப் படிப்பது எளிதாக இருக்கும். அச்சில் உள்ள இந்த நூலை வாங்கிப் படிக்க விரும்புபவர்கள் பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம். அச்சு நூலின் விலை ரூ.75/-

அன்புடன்
என்.கணேசன்.

Friday, January 24, 2020

என் வாசகர்கள் குரல் - 2

அன்பு வாசகர்களுக்கு

வணக்கம்.

சென்னை புத்தகக் காட்சியில் என் புத்தகங்கள் குறித்துப் பேசிய சில வாசகர்கள் குரல் ....



இங்கு பேசியவர்களுக்கும், இதே எண்ணப் போக்கைக் கொண்டவர்களுக்கும் என் அன்பு வணக்கங்கள். ஒரு எழுத்தாளனை ஊக்குவிப்பதும், உயர்த்துவதும் உண்மையில் அவனது வாசகர்களே! எனவே அனைத்துப் பெருமையும் உங்களுக்கே.

அன்புடன்
என்.கணேசன்

Thursday, January 23, 2020

இல்லுமினாட்டி 33


டுத்துக் கொண்டிருந்த மனோகர் படபடப்புடன் எழுந்து உட்கார்ந்ததைக் கவனித்த ராஜேஷ் கொட்டாவி விட்டபடி கேட்டான். “என்ன ஆச்சு?”

அவன் கேட்ட பிறகு தான் அவனும் உறங்காமல் விழித்துக் கொண்டிருப்பது மனோகருக்குத் தெரிந்தது. உண்மையைச் சொல்லத் தோன்றாமல் மெல்லஏதோ கனவுஎன்று சொல்லி அவன் சமாளித்தான்

நல்ல வேளையாக ராஜேஷ் அடுத்து கேள்வி எதுவும் கேட்கவில்லை. மனோகர் கண்களை மூடிக் கொண்டான். கண்களை மூடிக் கொண்டு அசையாமல் சிலை போல் சிறிது நேரம் அமர்ந்து மிகவும் கூர்மையாகத் தன்னை அண்டும் உணர்வுகளைக் கவனித்தான். அவன் முன்பு உணர்ந்ததை மறுபடி உணர முடியவில்லை. சிறைக்காவலர்கள் இருவர் சிரித்துப் பேசும் சத்தம் கேட்டது. பின் பேரமைதி. ஆனால் அந்தப் பேரமைதியிலும் அவனால் கூடுதலாக எதையும் உணர முடியவில்லை. நீண்ட நேரம் காத்திருந்து பின் மறுபடியும் அவன் படுத்துக் கொண்டான். முன்பு மெலிதாக உணர்ந்தது விஸ்வத்தின் சக்தி அலைகள் தானா, இல்லை தன்னுடைய கற்பனையா என்ற சந்தேகம் அவனைத் தொற்றிக் கொண்டது. விஸ்வத்தின் சக்தி அலைகள் இவ்வளவு பலவீனமாகத் தீண்டாதே என்று சந்தேகப்பட்டான். க்ரிஷ் அல்லது அவனுடைய மாஸ்டர் போல யாராவது அவனுடன் விளையாடுகிறார்களா என்ற சந்தேகமும் வந்தது. குழப்பத்தில் பல விதமாக யோசித்து சலித்து அப்படியே மனோகர் உறங்கிப் போனான்.

அவனைச் சிறையறையிலிருந்த ரகசியக் காமிரா மூலம் கண்காணித்துக் கொண்டிருந்த அதிகாரிக்கு அவனுடைய நடவடிக்கை இது வரை இல்லாத அதிசயமாகப் பட்டது. அவன் நடவடிக்கைகளில் ஏதாவது வித்தியாசமாகத் தெரிந்தால் உடனடியாகத் தெரிவிக்கும்படி முன்பே செந்தில்நாதன் உத்தரவிட்டிருந்தார். அந்த அதிகாரி கடிகாரத்தைப் பார்த்தார். இரவு மணி இரண்டு. இந்த நேரத்தில் அழைப்பதா இல்லை அதிகாலையில் அழைக்கலாமா என்ற யோசனையில் ஆழ்ந்தவர் பின் அவர் அலைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தி மட்டும் அனுப்பினார். “மனோகர் சற்று முன் வித்தியாசமாக நடந்து கொண்டான்”

அடுத்த அரைமணி நேரத்தில் செந்தில்நாதன் அங்கிருந்தார். அவர் அந்தக் காமிராப் பதிவைக் கவனமாகப் பார்த்தார். அவருக்கு அது அசாதாரணமாகவே பட்டது. ராஜேஷிடம் அவன் கனவு என்று சொல்லிச் சமாளித்தாலும் அவன் பின் உறங்கவே இல்லை என்பதால் அது பொய் என்பதில் சந்தேகமில்லை. வெளியில் இருந்து பார்வைக்குத் தெரிந்த மாதிரியோ, காதுக்குக் கேட்கிற மாதிரியோ எந்தச் செய்தியும் அவனை எட்டவில்லை என்பது தெளிவு. அப்படியானால் அவர்கள் சந்தேகப்பட்டது போல் அது விஸ்வத்தின் தொடர்பாக இருக்கலாம். உடனடியாக அவர் நேரம் காலம் பார்க்காமல் க்ரிஷை அழைத்தார். அப்போது மணி அதிகாலை 3.15

க்ரிஷ் தூக்கக்கலக்கத்தோடு ”ஹலோ” சொன்னான். அவர் சொன்ன தகவலைக் கேட்ட பிறகு அவனுடைய தூக்கம் விடைபெற்றது. அவனும் அந்தக் காமிராப் பதிவை இரண்டு முறை பார்த்தான். இல்லுமினாட்டிக்குத் தெரிவிக்கும் முன் ஒரு உளவியல் நிபுணர் கருத்தையும் கேட்பது உத்தமம் என்று அவனுக்குத் தோன்றியது.  

காலை 9.10க்கு அந்தக் காமிராப் பதிவை ஒரு உளவியல் நிபுணருக்குக் காண்பித்தான். அவர் நிதானமாகவும், கூர்மையாகவும் அதைப் பார்த்து விட்டுச் சொன்னார். “திடீரென்று எதோ ஞாபகம் வந்து அவன் எழுந்த மாதிரி தெரிகிறது. கணநேரத்தில் அவன் முகம் மலர்ந்ததைப் பார்த்தால் அது நல்ல நினைவு மாதிரி தான் தெரிகிறது.  மறந்து போயிருந்த ஏதோ நல்ல விஷயம் மறுபடி நினைவு வந்தது போல் இருக்கிறது. ஆனால் அது முழுமையாக இல்லை போல் இருக்கிறது. அதனால் தான் அவன் எழுந்து உட்கார்ந்து கண்களை மூடி முழுதாகத் தெரிந்து கொள்ள கவனம் செலுத்துகிறான். ஆனால் அவன் எதிர்பார்த்த அந்தக் கூடுதல் தகவல் கிடைக்கவில்லை என்பது அவன் முக உணர்ச்சிகளைப் பார்த்தால் தெரிகிறது. அது நினைவுக்கு வரும் என்று எதிர்பார்த்துக் காத்து உட்கார்ந்திருந்தது போலத் தோன்றுகிறது.  ஆனால் அது நடக்கவில்லை என்பதால் அந்த ஏமாற்றம் முகத்தில் தெரிகிறது. நினைவுக்கு வந்த தகவல் சரிதானா என்ற சந்தேகம் அல்லது அது சம்பந்தமாகப் புரிந்து கொண்டது சரிதானா என்ற குழப்பம் அவனை அலைக்கழிப்பது போல இருக்கிறதுகடைசியில் அவன் பல முரண்பாடான எண்ணங்களையே யோசித்துக் களைத்து உறங்கப் போன மாதிரி தான் தெரிகிறது…”

அந்த உளவியல் நிபுணருக்கு இந்த நிகழ்வுக்குப் பின்னணியான உண்மைகள் தெரியாதென்பதால் அவர் தன் கருத்துகளைச் சொன்னார். பின்னணி தெரிந்திருந்த க்ரிஷ் அவர் சொன்னதை மாற்றிக் கொண்டு சரியாகவே புரிந்து கொண்டான். மனோகருக்கு நினைவு வந்த விஷயம் அரைகுறையாக இருக்கவோ, அரைகுறையாகப் புரிந்து கொண்டிருக்கவோ வழியில்லை. விஸ்வம் தன் சக்தி அலைகளை அனுப்பி மனோகரைத்  தொடர்பு கொள்ள முயன்றிருக்கலாம். அது மனோகரை எட்டி இருக்கலாம். அதனால் அவன் ஆச்சரியமும், மகிழ்ச்சியும் அடைந்து உட்கார்ந்திருக்கிறான். ஆனால் பழையது போல் முழுமையாக வராததால் அல்லது தொடராததால் மனோகர் ஏமாற்றமடைந்திருக்க வாய்ப்பு இருக்கிறது…

அவன் நினைப்பது சரியாக இருந்தால், டேனியலின் உடலில் நரம்பு மண்டலம் எத்தனை தான் பலவீனமாக இருந்தாலும், அதையும் மீறி விஸ்வம் இவ்வளவு சீக்கிரம் பலவீனமாகவாவது மனோகரைத் தன் சக்தியால் தொடர்பு கொண்டான் என்பது ஆபத்தான செய்தி. விஸ்வத்தால் இனி எத்தனை சீக்கிரம், எவ்வளவு தூரம் தன் சக்திகளைத் திரும்பப் பெற முடியும் என்பது தெரியவில்லை. ஆனால் இயல்பிலேயே சக்திவாய்ந்த அவர்களது எதிரி தன் ஆற்றலைத் திரும்பப் பெறும் முயற்சியில் முழுமூச்சோடு இறங்கி விட்டான் என்பதற்கு அறிகுறி தெரிந்து விட்டது.  

க்ரிஷ் இந்த அபாயச் செய்தியை உடனடியாக எர்னெஸ்டோவுக்குத் தெரிவிப்பது அவசியம் என்ற முடிவுக்கு வந்தான்.



ர்னீலியஸின் கார் ஒரு சிக்னலில் நின்ற போது தான் யாரோ அவரைக் கூர்ந்து கவனிப்பது போல் உணர்ந்தார். அவருடைய பார்வை இரண்டு பக்கமும் ஊடுருவியது. அங்கே நிறைய வாகனங்கள் நின்றிருந்தன. அவற்றில் ஏதாவது ஒரு வாகனத்திலிருந்து யாரோ அவரைக் கண்காணிக்கிறார்களா? இந்த சந்தேகம் வந்ததும், அந்த சிக்னலிலிருந்து நகர்ந்த பின்னர் அவரை யாராவது பின்தொடர்கிறார்களா என்று கவனிக்க ஆரம்பித்தார். சில வாகனங்கள் பின்னால் இருந்தன. அத்தனையும் அவரைப் பின்  தொடர்வதாக நினைப்பது முட்டாள்தனம்… அவர் வங்கிக்குப் போகும் தெருவில் எப்போதுமே வாகனப் போக்குவரத்து அதிகம். அந்தத் தெருவில் பயணித்தால் அவரைப் பின் தொடரும் வாகனத்தைக் கண்டுபிடிப்பது கஷ்டம். எனவே ஓரிடத்தில் அந்தத் தெருவிலேயே தொடர்ந்து செல்லாமல் வலது பக்கம் இருந்த ஒரு குறுக்குத் தெருவில் அவர் காரைத் திருப்பினார். அந்தத் தெருவிற்கு அவர் கார் திரும்பிய போது கூடவே ஒரு வேனும், வேறொரு காரும் மட்டும் தான் திரும்பின. கர்னீலியஸ் அந்த வேனைக் கவனித்தார். அது உணவுப் பொருட்களை வினியோகிக்கும் வேன். அதை ஓட்டிக் கொண்டு வந்த ஆள் சத்தமாக ஏதோ பாட்டைக் கேட்டுக் கொண்டே தலையாட்டியபடி இருந்தான். அந்த இசைப்பிரியன் அவரைக் கண்காணிப்பது போல் தெரியவில்லை. இன்னொரு காரை ஓட்டி வந்த கருப்பினப் பெண்மணி தன் அருகில் அமர்ந்திருந்த ஆளிடம் காரசாரமாக எதையோ விவாதித்துக் கொண்டிருந்தாள்.

                                                                       

கர்னீலியஸ் தன் காரின் வேகத்தைக் குறைத்துக் கொண்டார். அந்த வேனும், காரும் அவர் காரைத் தாண்டிச் சென்றன. அவர் குறைந்த வேகத்திலேயே சிறிது தூரம் சென்றார். இப்போது எந்த வாகனமும் அவர் காரைத் தொடர்வது போல் தெரியவில்லை. புதிது புதிதாய் வாகனங்கள் அவர் காரைத் தாண்டிப் போயின. ஆனாலும் யாரோ அவரைக் கண்காணிப்பது போன்ற உணர்வு ஏனோ குறையவில்லை. மாறாக அது கூடியது. திடீரென்று, கண்காணிப்பது விஸ்வமாக இருக்குமோ என்று தோன்றிய போது அவர் இதயத் துடிப்பு ஒரு கணம் நின்று பின் ஓட்டம் எடுத்தது.

(தொடரும்)
என்.கணேசன்


Wednesday, January 22, 2020

எதையும் தீர்மானிப்பது சிரத்தையே!


கவத் கீதையின் பதினேழாம் அத்தியாயமான சிரத்தாத்ரய விபாக யோகத்தின் ஆரம்பத்திலேயே அர்ஜுனன் சாஸ்திர விதிமுறைகளை மீறி சிரத்தையால் உந்தப்பட்டு வழிபாடு செய்பவர்களையும், யாகம், தானம், தவம் முதலியவற்றைச் செய்கின்றவர்களையும் எந்த வகையில் எடுத்துக் கொள்வது என்று கேட்கிறான்.

அதற்கு ஸ்ரீகிருஷ்ணர் இவ்வாறு பதிலளிக்கிறார்.

எல்லோருடைய சிரத்தையும் அவரவருடைய உள்ளத்தின் நிலையை ஒட்டியே இருக்கும். மனிதன் சிரத்தையே உருவமாக இருப்பவன்.. ஆகையால் மனிதன் எந்தச் சிரத்தையோடு கூடியவனோ அந்தச் சிரத்தையின் தன்மையானவனாகவே இருப்பான்.

எதையும் எந்த அளவில், எந்த வகையில் சிரத்தையுடன் மனிதன் செய்கிறானோ அதுவே அவன் செயலை மட்டுமல்லாமல் அவனையும் தீர்மானிக்கும் காரணியாகி விடுகிறது என்கிறார் பகவான். இன்று பலரும் அலட்சியப்படுத்தும் உண்மை இது. எதையும் எந்திரத்தனமாகச் செய்கிறோம். உண்மையான ஆர்வத்துடனும், சிரத்தையுடனும் நாம் செயல்புரிவது மிகவும் குறைவாகி இருக்கிறது. புறத்தில் இருந்து வரும் கட்டாயத்திற்காக, எதிர்பார்ப்புக்காக கடனே என்று செய்யும் பழக்கமே எங்கும் வியாபித்திருக்கிறது.  செய்யா விட்டால் என்ன நினைத்துக் கொள்வார்கள், என்ன சொல்வார்கள் என்ற அச்சமும், செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற கட்டாயமுமே பலரையும் செயல்புரியத் தூண்டுகிறது. சிரத்தை இல்லாத செயல்களாலேயே சமூகம் எந்திரத்தனமாகவும், விளைவுகளைக் குறித்த பிரக்ஞை இல்லாத கீழ்த்தரமாகவும் மாறிக் கொண்டிருக்கிறது.

யாகம், தானம், தவம் என்ற மூன்றையுமே அர்ஜுனன் கேட்டிருப்பதால் யாகத்தைப் பற்றி பகவான் சொல்ல ஆரம்பிக்கிறார். இந்தக் காலத்தில் யாகம் செய்வது மிக அபூர்வம். அதனால் இக்காலத்திற்குப் பொருத்தமாக எடுத்துக் கொள்வதென்றால் வழிபாடு என்று எடுத்துக் கொள்வது சரியாக இருக்கும்.

பலனைக் கோராமல், சாஸ்திரத்தில் சொல்லிய முறையில்யாகம் செய்வது என் கடமைஎன்று மனத்தை ஒரு நிலையில் நிறுத்திக் கொண்டு எந்த யாகமானது செய்யப்படுகிறதோ அது சாத்வீகம் எனப்படும்.

பலனைக் கோரியாவது, அல்லது ஆடம்பரத்திற்காகவாவது எந்த யாகம் செய்யப்படுகின்றதோ அதை ராஜஸமென்று அறிவாயாக.

சாஸ்திர முறையைப் பின்பற்றாததும், அன்ன தானமில்லாததும்,  மந்திரங்கள் அற்றதும், தட்சிணையில்லாததும், சிரத்தையில்லாததுமாகச் செய்யப்படும் யாகம் தாமஸம் எனப்படும்.

ஒரு செயலைக் கடமை என்று செய்வது வேறு, கடனே என்று செய்வது வேறு. மனதை ஒருநிலைப்படுத்தி, பல வேண்டுகோள்களை வைத்து வியாபாரம் பேசாமல், எந்த எதிர்பார்ப்பும் இன்றி இறைவனை வழிபடுவது சாத்வீகமானது. ஏன் பகவான் கடமை என்று சொல்கிறார். மனிதன் வழிபாடுகளால் தன் மாசுகளைக் களைந்து கொண்டு பரிசுத்தமாகிறான். இறை சிந்தனையும் வழிபாடும் அவன் தீய வழிகளில் போகாமல் தடுக்கின்றது.

உள்ளத்தில் அழுக்கிருந்தால் அல்லவா அது தவறான வாக்காகவும், செயலாகவும் வெளிப்பட்டு அவனையும் அவன் சம்பந்தப்பட்டவர்களையும் பாதிக்கிறது. அதைத் தவிர்க்க வேண்டுமானால் மனம் சுத்தமாக வேண்டும். மனம் சுத்தமாக இறைவனை விட்டால் வேறென்ன வழி? அந்தப் பரம்பொருளை வணங்குவதைத் தவிர வேறென்ன வழி? மனிதனின் மனத்தூய்மைக்கும் சமூக நன்மைக்கும் வழிவகுப்பதால் இறை வழிபாடு மனிதன் கடமையாகிறது.

பலனைக் கோரி, இறைவனிடம் “நான் உனக்கு இதைச் செய்கிறேன். எனக்கு நீ அதைச் செய்” என்று வியாபாரம் பேசி வழிபாடு செய்வது ராஜஸம். இதில் கோரிக்கை இல்லா விட்டால் வழிபாடு இல்லை. ராஜஸத்தின் இன்னொரு குணாதிசயம், ஆடம்பரம். அடுத்தவன் பார்க்க வேண்டும் என்று ஆடம்பரமாக வழிபாடு நடத்துவது இன்று அடிக்கடி நாம் காண முடிந்த காட்சி.

பெரும் செலவு செய்து பூஜைகள் செய்து மாலை மரியாதைகளை ஏற்றுக் கொண்டு எத்தனை பேர் நம்மைப் பார்க்கிறார்கள், வியக்கிறார்கள் என்பதில் கூடுதல் கவனம் செலுத்தும் இந்த ராஜஸ வழிபாட்டில் இறைவனை விட அதிக முக்கியத்துவத்தை வழிபடுபவன் பெற முயலும் வேடிக்கையை நாம் நிறைய இடங்களில் பார்க்க முடியும். இங்கே சிரத்தை இருக்கிறது என்றாலும் சிரத்தையில் பக்தி இல்லை என்பதே குறைபாடு.

பெரிய வழிபாடுகளில் சாஸ்திரமும் பின்பற்றப்படாமல், செவிக்கும், கருத்துக்கும் இனிமையான மந்திரங்களும் சொல்லப்படாமல், நாலு பேர் வயிறும் நிறையாமல், ஏழைகளுக்கு தட்சிணையும் கிடைக்காமல், செய்பவருக்குச் சிரத்தையும் இல்லாமல் கடனே என்று ஏதோ ஒரு கட்டாயத்திற்காக வழிபாடு செய்வது தாமஸம். இந்தத் தாமஸ வழிபாட்டில் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை என்பதே விசேஷ குணம்.

எப்போதுமே பெரிய பூஜைகளில், வழிபாடுகளில் அன்னதானம் விசேஷமானது. வயிறு நிறையும் வரை விரும்பிச் சாப்பிட்டு வயிறு நிறைந்தவுடன் மனதாரப் போதும் என்று சொல்வது உணவைத்தான். பணமோ, பொருளோ எத்தனை கொடுத்தாலும் மனிதன் திருப்தியடைவது கடினம். அதனால் மனிதனை முழுத்திருப்தி அடைய வைக்கும் அன்னதானம் வலியுறுத்தப்படுகிறது.

மந்திரங்கள் செவிக்கும், கருத்துக்கும் இனிமையானது. மனிதனை இறைவழி கவனத்தை திருப்ப வல்லது. அதுவும் இந்த தாமஸ வழிபாட்டில் இல்லை. அதே போல தட்சிணையும் இல்லாமல், சிரத்தையும் இல்லாமல் வழிபாடு என்ற பெயரில் எந்திரத்தனமான சடங்கை நடத்தி முடிப்பது தாமஸ வழிபாடு.

உங்கள் இறைவழிபாடு இதில் எந்த வகையைச் சேர்கிறது என்று யோசியுங்கள்.

(தொடரும்)
என்.கணேசன்  

  

Tuesday, January 21, 2020

அமேசான் கிண்டிலில் என் ஆன்மீக சிந்தனைகளின் தொகுப்பு “பிரசாதம்” வெளியீடு!



அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.


இன்று அமேசான் கிண்டிலில் என் ஆன்மீகச் சிந்தனைகளின்  தொகுப்பு “பிரசாதம்” வெளியாகியுள்ளது. லிங்க்.

https://www.amazon.in/dp/B08429C2L1


நூலின் முன்னுரை


ன்மீகம் மனிதனை இறைநிலையை உணரவும் பிரதிபலிக்கவும் தூண்டுகிறது என்பதே அதன் நோக்கமும் அவசியமுமாக இருக்கிறது. ஆன்மீகத்தின் மூலமாக இறைவனின் உள்ளம் குளிர வைக்கவும், அதன் மூலமாக அருள் பெறவும் மனிதன் முயல்வது அவனது ஞானத்தின் குறைபாடாகவே கருத வேண்டும். ஏனென்றால் உலகத்தைப் படைத்துக் காக்கும் இறைவன் தன் படைப்புகள் தன்னைத் தொழ வேண்டும் என்றும், கௌரவிக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார் என்று நினைப்பதே இறைவனைத் தன் தரத்துக்கு மனிதன் இழுக்கும் முயற்சியாகவே எண்ண வேண்டும்.

நம் முன்னோரின் கதைகளிலும், புனித நூல்களிலும் பேரறிவையும், ஞானத்தையும் கொண்ட ஆழ்ந்த கருத்துகளும் இருக்கின்றன. அதே போல் அறிவுக்கு உகந்ததாய் இல்லாத கற்பனைகளும், அஞ்ஞான இடைச்செருகல்களும் கூடவே இருக்கத் தான் செய்கின்றன. ஒரு மனிதன் சொல்லும் சாதாரண வாக்கியமே கூட ஒருவர் இன்னொருவருக்குச் சொல்ல ஆரம்பித்தால் ஐம்பதாவது ஆள் சொல்லும் வாக்கியம் ஆரம்ப வாக்கியத்துக்குச் சற்றும் சம்பந்தமில்லாததாகவே இருக்கும் வேடிக்கையை நம்மால் பார்க்க முடியும். அப்படி இருக்கையில் இறை தூதர்களாலும், ஞானிகளாலும் சொல்லப்பட்ட கருத்துகள் எந்த அளவு அதே புனிதத்துடன் சரியாக நம்மை வந்து சேர்ந்திருக்கின்றன என்பது கேள்விக்குறியே.

இறை வார்த்தைகளாகவும், ஞானிகள் வார்த்தைகளாகவும் இன்று ஆன்மீக மார்க்கத்தில் சொல்லப்படுபவை எந்த அளவு சரியாக இருக்கும் என்பதை மனிதன் தன் அறிவாலும், பக்குவத்தாலுமே அறிய முடியும். கண்மூடித்தனமான நம்பிக்கைகளும், அறிவைப் பயன்படுத்தாத பின்பற்றல்களும் ஆன்மீகத்தை மூட நம்பிக்கைகளாகவும், நாத்திகத்தை விட மோசமானதாக ஆக்கி விட முடியும் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

ஆகவே உண்மையின் உரைகல் நம் அறிவாகவும், ஞானமாகவும், பக்குவமாகவுமே இருக்க வேண்டும். அப்படி உண்மையாக இருப்பதையே ஒருவன் ஆன்மீகமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அந்த ஆன்மீகமே ஒருவனை இறைநிலைக்கும், மானுட நன்மைக்குமாய் உயர்த்தும். அந்த ஆன்மீகமே நாம் நாட வேண்டியதும். பின்பற்ற வேண்டியதுமான மார்க்கம்.

அந்த வகை ஆன்மீகத்தையும், ஞானத்தையும், வாழ்க்கை நெறியையும் அலசும் சில சிந்தனைகளைத் தொகுத்து “பிரசாதம்” என்ற இந்த நூலில் நான் தந்திருக்கிறேன். இந்த ஆத்ம சிந்தனைகள் உங்களுக்குள் ஒரு தேடலையும், தெளிவையும், மாற்றத்தையும் கண்டிப்பாக ஏற்படுத்தும் என்பதற்கு உறுதி அளிக்கிறேன்.

அன்புடன்

என்.கணேசன்



Monday, January 20, 2020

சத்ரபதி 108


லிமை மிக்கவனுக்கும், வலிமை குறைந்தவனுக்கும் இடையே ஏற்படும் ஒப்பந்தங்கள் இருசாராருக்கும் இணையான பலன்கள் ஏற்படுவதாக இருக்காது என்பது காலகாலமாக இருக்கும் நிலை. வலியவன் தனக்குச் சாதகமாக எழுதும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் உரிமை மட்டுமே மெலிந்தவனுக்கு உண்டு. ஆனாலும் பேச்சு வார்த்தைகளைத் தொடர்ந்து நடத்தினால் மற்றவர் பார்வைக்காவது வலியவன் சில சலுகைகள் சேர்த்திக் கொடுப்பான்.  கிடைத்த வரை இலாபம் என்று மெலிந்தவன் நினைப்பான். ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகள் கையெழுத்திடப்படும்.

இது தான் யதார்த்த நிலை என்பதால் சிவாஜி இப்போது சலுகைகளை அதிகபட்சமாகப் பெறுவதான இரண்டாம் கட்டத்திற்கு கவனம் செலுத்தினான். ராஜா ஜெய்சிங்கிடம் அவன் சொன்னான். “அரசே. நான் அமைதி ஒப்பந்தத்திற்கு முழுமனதுடன் தயார் என்றும், நட்புறவையே உண்மையில் எதிர்பார்க்கிறேன் என்றும் சக்கரவர்த்தியிடம் தெரிவியுங்கள். பின்பு இது குறித்து இரு தரப்பும் பேச்சு வார்த்தை நடத்தி நட்பின் பாதைக்குத் திரும்புவோம்.”

ராஜா ஜெய்சிங் சிவாஜி தில்லர்கானையும் சந்தித்துப் பேசுவது நல்லது என்று நினைத்தார். காரணம் முன்பு செயிஷ்டகான் ராஜா ஜஸ்வந்த்சிங்கும் சிவாஜியும் இந்துக்கள் என்பதால் கூட்டு சேர்ந்து சதி செய்து விட்டார்கள் என்று குற்றம் சாட்டிய செய்தி நினைவுக்கு வந்தது தான். அப்படி ஒரு குற்றச்சாட்டு வர இந்த முறை வழி ஏற்படுத்தி விடக்கூடாது என்று நினைத்தவராக அவர் சிவாஜியிடம் சொன்னார். “நீங்கள் தில்லர்கானிடமும் என்னிடம் கூறியதை நேரிலேயே சென்று கூறினால் நன்றாக இருக்கும். இது குறித்து எங்கள் இருவர் சிபாரிசும் சேர்ந்து போனால் சக்கரவர்த்தி உங்களிடம் தாராளம் காட்ட வாய்ப்புகள் அதிகம் என்பதால் தான் சொல்கிறேன்.”

சிவாஜி அவர் சொன்னதற்கும் சரியென்றான். பணிந்து போகும் குணம் அவன் இரத்தத்திலேயே இல்லாததால் பணிந்து போவது அவனுக்கு மிகவும் கஷ்டமாகத் தான் இருந்தது. ஒருவரிடம் பேசியாகி விட்டது. இன்னொருவனிடமும் போய் வேண்டிக் கொள்ள வேண்டும். அந்த இன்னொருவன் அவனுடைய புரந்தர் கோட்டையைக் கைப்பற்றக் கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கிறான். அவனிடம் அங்கேயே சென்று சிபாரிசு வேண்ட வேண்டும் என்ற போது மனம் மறுத்தது. அன்னையின் உணர்த்துதலை அவன் மறுபடி நினைவுபடுத்திக் கொண்டான். உடைவதை விட பணிவது நல்லது…..

தில்லர்கான்  புரந்தர் கோட்டையைப் பிடிக்க முடியாமல் தலைப்பாகை இல்லாமல் அவன் போராடிக் கொண்டிருக்கையில் ஜெய்சிங்கும், சிவாஜியும் பேச்சு வார்த்தைகள் முடித்து விட்டார்களா என்று கடுங்கோபத்தில் இருந்தான். பல போர்களில் பராக்கிரமம் காண்பித்த அவன் இந்தச் சிறியக் கோட்டையின் கீழ்ப்பகுதியைக் கைப்பற்றுவதற்கே பெரும்பாடு ஆகி விட்டது.

முரார்ஜி பாஜி என்ற படைத்தலைவன் போரில் இரு கைகளை இழந்தும் சரணடைய மறுத்து கடுமையான தாக்குதலைத் தொடுத்து முகலாயர்களுக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்திய பின்னரே உயிரை விட்டான். என்ன மனிதர்களிவர்கள் என்கிற திகைப்பு அவனுக்கு இப்போதும் இருக்கிறது. சிவாஜி இவர்களுக்கு என்ன வசியம் செய்து விட்டிருக்கிறான் என்று அவன் பல முறை கேட்டுக் கொண்டிருக்கிறான். அவர்களது தீவிரத்தை அடக்க முடியாதது அவன் வீரத்திற்கும், திறமைக்கும் சவால் என்று தோன்றியது. இந்தச் சமயத்தில் தான் ராஜா ஜெய்சிங்கிடம் சிவாஜி பேசி முடித்திருப்பதாக அவனுக்குத் தகவல் கிடைத்து ஆத்திரம் அடைந்திருந்தான்.

அந்த நேரத்தில் அவனுடைய வீரன் வந்து தெரிவித்தான். “பிரபு தங்களைச் சந்திக்க சிவாஜி வந்திருக்கிறார்”

தில்லர்கான் சிவாஜியின் வரவை எதிர்பார்த்திருக்கவில்லை. கடுமையான முகத்துடனேயே சிவாஜியைச் சந்தித்த தில்லர்கான் உறுதியாகச் சொன்னான். “இந்தக் கோட்டையில் எங்கள் கொடி பறக்கும் வரை அமைதிப் பேச்சுவார்த்தைக்கு நான் செவி சாய்க்க மாட்டேன் சிவாஜி, அனுமதிக்கவும் மாட்டேன்.”

சிவாஜி புன்னகை மாறாமல் சொன்னான். “பிரபு. அதற்கு ஏன் இத்தனை கோபப்படுகிறீர்கள்? இந்தக் கோட்டை உங்களுடையது. அதன் சாவியை உங்களிடம் ஒப்படைக்கிறேன். போதுமா?”

தில்லர்கான் திகைத்தான். கடுங்கோபத்தில் எரிமலையாய் வெடித்தவன் அடுத்த அரை மணி நேரத்தில் பனியாய் உருகிப் போனான். சிவாஜியின் பேச்சும், பணிவும், அவன் தந்த மரியாதையும் அவனைத் திக்குமுக்காடச் செய்து விட்டது. கடைசியில் சிவாஜி மிகவும் பணிவு காட்டிச் சொன்னான். “பிரபு. நான் அமைதியையே விரும்புகிறேன். தங்களிடம் நட்புக்கரம் நீட்டவே ஆசைப்படுகிறேன். அதற்கு விலை என்னவானாலும் நான் தரத் தயாராகவே இருக்கிறேன். அதற்காகவே ராஜா ஜெய்சிங் அவர்களைச் சந்தித்தேன். அவரிடமும் இதையே கூறினேன். அடுத்ததாகத் தங்களை நான் காண வந்திருக்கும் உத்தேசமும் அதுவே. நீங்களும், ராஜா ஜெய்சிங் அவர்களும், நான் அமைதியையும், நட்பையும் நாடி வந்திருப்பதைச் சக்கரவர்த்தியிடம் தெரிவித்து அவர் அதை ஏற்றுக் கொள்ளும்படி செய்ய வேண்டும்.”

சிவாஜியைப் போன்ற ஒரு மாவீரன் இவ்வளவு பணிவோடு வேண்டிக் கொண்டதில்  தில்லர்கான் உள்ளம் குளிர்ந்தான். “அரசே. ராஜா ஜெய்சிங் எனக்கும் மூத்தவர். அரசவை அந்தஸ்திலும் பெரியவர். அவரிடம் நீங்கள் பேசியிருப்பதே போதுமானது. அவர் பேச்சுக்கு சக்கரவர்த்தியிடம் மிகுந்த மரியாதை உண்டு. என் பங்குக்கு நானும் சக்கரவர்த்தியிடம் கூறுகிறேன்.” என்று கூறியவன் சிவாஜிக்குப் பட்டாடைகளும், வீரவாளும் பரிசளித்தான்.

அங்கிருந்து திரும்பி வரும் போது ரகுநாத் பந்தின் கண்கள் கலங்கியிருந்தன. சிவாஜி அறியாமல் அவர் கண்களைத் துடைத்துக் கொண்டார். இந்த வேண்டுகோள் விடுப்பதெல்லாம் சிவாஜியை எத்தனை துன்பப்படுத்தியிருக்கும் என்பதை அவர் நன்றாக அறிவார்….

பேச்சு வார்த்தைகள் தொடர்ந்தன. பேச்சு வார்த்தைகளின் சாராம்சங்களை அவ்வப்போது ஔரங்கசீப்புக்கு அனுப்பி வைத்த ராஜா ஜெய்சிங் மறுபடியும் சக்கரவர்த்தியிடமிருந்து குறிப்புகள் பெற்று சிவாஜிக்குத் தெரிவித்து கடைசியில் ஒரு வழியாக உடன்படிக்கை ஒன்று உருவாக்கப்பட்டது.

அதன்படி சிவாஜி தன்னுடைய ஆளுமையில் பன்னிரண்டு கோட்டைகளையும், ஒரு லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கும் பகுதிகளையும் தக்க வைத்துக் கொள்ளலாம். மீதமுள்ள புரந்தர், கொண்டனா உட்பட இருபத்தி மூன்று கோட்டைகளை முகலாயர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.  முகலாயர்களுக்குத் தேவைப்படும் போது சிவாஜி உதவ முன்வர வேண்டும். சிவாஜியின் மகன் சாம்பாஜி முகலாய சாம்ராஜ்ஜியத்தின் ஐயாயிரம் வீரர்கள் கொண்ட ஒரு படையின் மன்சப்தார் என்று கூறப்படும் தளபதி பொறுப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும். மேலும் நல்லுறவின் அடிப்படையில் முகலாயச் சக்கரவர்த்தியின் தர்ப்பாருக்கு சிவாஜி ஒரு முறை நேரிடையாக வருகை புரிய வேண்டும்.

சிவாஜிக்கு இந்தக் கடைசி நிபந்தனை பிடிக்கவில்லை. ஆனால் ராஜா ஜெய்சிங் அதற்கு சிவாஜியை வற்புறுத்தினார். “அரசே, நீங்கள் நேரடியாகச் சென்று சக்கரவர்த்தியைச் சந்தித்தால் மட்டுமே அவருக்குத் தங்கள் வார்த்தைகளின் மீது முழு நம்பிக்கை வரும். அதனால் ஒரே ஒரு முறை சென்று விட்டு வாருங்கள். பின் ஒரு முறை செல்ல நான் உங்களை வற்புறுத்த மாட்டேன்….”

சிவாஜி ராஜா ஜெய்சிங்கை நம்பியதில் நாலில் ஒரு பகுதியும் ஔரங்கசீப்பை நம்பவில்லை. அங்கே நேரில் சென்ற பின் பாதுகாப்பாய் திரும்பி வர முடியும் என்று அவனுக்குத் தோன்றவில்லை. தந்தை மற்றும் சகோதரர்களிடம் கூட முறையாக நடந்து கொள்ளாத ஔரங்கசீப் எதிரியான அவனை முறையாக நடத்தி திரும்ப அனுப்பி வைப்பான் என்று நம்புவது முட்டாள்தனமாகவே தோன்றியது.

ராஜா ஜெய்சிங்கிடம் சிவாஜி வெளிப்படையாகவே சொன்னான். “அரசே. உங்கள் சக்கரவர்த்திக்கு என் மேல் முழு நம்பிக்கை வர ஒரு முறை அங்கு தர்பாருக்குச் சென்று வர வேண்டும் என்று சொல்கிறீர்கள். ஆனால் எனக்கு அவர் மேல் முழுநம்பிக்கை வரும்படி என்ன உறுதிமொழி தருகிறீர்கள்?”


ராஜா ஜெய்சிங் சிறிது யோசித்து விட்டுச் சொன்னார். “நான் தங்கள் தயக்கத்தைச் சக்கரவர்த்திக்குத் தெரிவித்து அவரையே தங்களுக்கு மடல் அனுப்பச் சொல்கிறேன்….” 


அப்போதும் சிவாஜி தயங்கினான். அதைக் கண்ட ராஜா ஜெய்சிங் மிக உறுதியாக அவனிடம் சொன்னார். “அரசே. இங்கு பேச்சு வார்த்தைக்கு நீங்கள் வரும் பொருட்டு உங்கள் அமைச்சரிடம் உங்கள் உயிருக்கு எந்த ஆபத்தும் இங்கு ஏற்படாது என்று நான் உத்திரவாதம் தந்தேன். அதே உத்திரவாதத்தை அங்கு சென்று வருவதற்கும் நான் தருகிறேன். அங்கு என் மூத்த மகன் ராம்சிங் இருக்கிறான். அவன் தன் உயிரைக் கொடுத்தாவது உங்களைப் பாதுகாப்பான். இது நான் தனிப்பட்ட முறையில் தங்களுக்குத் தரும் வாக்கு!”

(தொடரும்)
என்.கணேசன்