அர்ஜுனுக்கு அவர் எடுத்த முடிவில் இப்போது குற்றம் காண முடியவில்லை. ஆனாலும்
அவன் ஒன்றும் சொல்லாமல் மௌனம் சாதித்தான். அவர் சொல்லும்
எதையும் அவன் தந்தை அறியாதவர் அல்ல. அவர் அறிவு ஆழமானது, சூட்சுமமானது...
ராஜாராம் தொடர்ந்து சொன்னார். “அண்ணா ரொம்ப
திறமையான வக்கீல். அண்ணா விரும்பினா கோர்ட்டில் வாதாட ஒரு மணி நேரத்திற்கு குறைந்த
பட்சம் ஐந்து லட்சமாவது வாங்க முடியும்னு என் கிட்ட ஒரு சுப்ரீம் கோர்ட் வக்கீல் ஒரு
தடவை சொன்னார். அந்த அளவு
திறமை இருக்கிற எங்கண்ணா இப்போ எவ்வளவு சம்பாதிக்கிறான் அர்ஜுன்?”
ஞானமூர்த்தி இப்போது ஒரு மாதத்திற்குக்
கூட அந்த அளவு சம்பாதிப்பதில்லை. அவர் அரசியலில்
தீவிரமாக இறங்கி விட்டதால் ஓரிரு வழக்குகளை மட்டும் ஏற்றுக் கொள்கிறார். அதிலும்
கட்சிக்காரன் பக்கத்தில் நியாயம் இருந்தால் மட்டுமே ஏற்றுக் கொள்கிறார். எந்த வழக்கையும் அவருடைய
வாதத்திறமையால் அவரால் வெல்ல முடியும் என்றாலும், பிழைப்புக்காகக்கூட
நியாயமில்லாத பக்கம் நிற்க அவர் சம்மதித்ததில்லை. நியாயமிருந்தும்
வழக்கிற்காகச் செலவு செய்ய முடியாத நிலையில் இருக்கிற ஏழைகளிடம்
அவர்களுக்குத் தர முடிந்த தொகையைத் தான் அவர் வாங்குகிறார். நியாயமிருந்தும் சில சட்டச்சிக்கல்களால்
நீதி கிடைக்க முடியாத நிலையில் இருக்கும் பணக்காரர்களிடம்
மட்டும் அவர் அதற்குரிய தொகையை வாங்குகிறார். அவர் செய்யும் தியாகத்தையும், பெருந்தன்மையையும் எத்தனை
பேர் நினைவு வைத்திருப்பார்கள் என்பது மிகப்பெரிய கேள்வியே! காரியம்
முடிந்ததும் கடவுளையே கூட மறக்கும் மனிதர்களிடம் அதிகம் எதிர்பார்ப்பதற்கில்லை!
”அர்ஜுன், நான் எங்கண்ணாவுக்கு இணையான அறிவாளியை இதுவரைக்கும்
பார்த்ததில்லை. ஆனால் ஆனால் அந்தப் பேரறிவு அவனோட சொந்த வாழ்க்கைக்குப்
பயன்பட்ட மாதிரி தெரியலை. வாதாட வேண்டியது தான் வக்கீலோட வேலை.
தீர்ப்பு சொல்றது நீதிமன்றத்தோட வேலை. ஆனா அண்ணா
என்ன செய்யறான்னா, அவனே நீதிபதியா இருந்து ஒரு வழக்கைப் பார்த்துட்டு
தான் அதை ஏற்கிறான், இல்லை மறுக்கறான். ஒருவிதத்துல இது முட்டாள்தனமில்லையா? அரசியல்லயும் அப்படித்
தான் செய்யறான். அவன் கட்சில மோசமான ஆட்களைச் சேர்த்துக்கறதில்லை.
அவனோட அரசியல் கொள்கைகள்லயும் கூட அவன் சமரசம் செய்துக்கறதில்லை.
இன்றைக்கிருக்கற சூழ்நிலையில் இப்படியெல்லாம் அரசியல் செய்ய முடியாது
அர்ஜுன். போன தேர்தல்ல அண்ணா தோற்றதும், பத்தே பத்து
தொகுதிகள் தவிர மற்ற எல்லா இடங்கள்லயும் டெபாசிட் இழந்ததும் அரசியல் களத்துல அண்ணா
எங்கே நிற்கறான்னு தெரிவிக்கலையா அர்ஜுன்? ”
அர்ஜுன் சொன்னான்.
“நீங்க சொல்றதெல்லாம் சரிதான் சித்தப்பா. ஆனால்
குறுகிய காலத்துல அவர் ஐம்பது தொகுதிகள்ல மூனாவது இடத்தில் இருக்கார். அது சின்ன விஷயமில்லையே?”
“நீ ஓட்டு சதவீதத்தைப் பார்த்தா தான் உனக்கு சரியான நிலவரம் தெரியும் அர்ஜுன்.
ஒரு வகுப்புல ஐந்து மாணவர்கள் இருக்காங்கன்னு வெச்சுக்கோ. முதல் மார்க் 80 இரண்டாவது 50 மூன்றாவது 8 நான்காவது 5 ஐந்தாவது 3.
இதில் 8 மார்க் வாங்கியவன் மூன்றாவது இடத்தில் இருக்கறதா சொல்ற நிலையில
தான் அண்ணாவும் இருக்கான் அர்ஜுன். அந்த ஐம்பது தொகுதிகள்ல
ஆளும் கட்சி 41.38% இருக்கு. எதிர்க்கட்சி
27.32% இருக்கு. அண்ணா கட்சி 6.28% இருக்கு. எதிர்க்கட்சிக்கு
இணையாக வரவே நாலுமடங்கு ஓட்டு வேண்டியிருக்கு.”
அவர் சொல்வது நிஜம் தான். ஆனால் நிஜம்
கசந்தது. அது
என்றைக்கு இனித்திருக்கிறது?
”ஒரு காலத்தில் ஊழல்ங்கறது மக்கள் கிட்ட அதிர்ச்சியை உண்டுபண்ணுச்சு.
ஆனால் இன்னைக்கோ ஊழல் இல்லைன்னா தான் மக்களுக்கு அது ஆச்சரியத்தை உண்டுபண்ணுது.
அந்த அளவு ஊழல், மக்களே ஏற்றுகிட்ட ஒரு விஷயமாயிடுச்சு.
எவன் வந்தாலும் ஊழல் தான்னு மக்கள் புரிஞ்சுகிட்டு அதுக்குத் தயாராயிட்டாங்க.
ஒரு
காலத்தில் விதிமுறைகளுக்குப் பொருந்தாத வேலைகள் ஆக வேண்டி தான் மக்கள் அரசு அதிகாரிகளுக்கு
லஞ்சம் கொடுத்தாங்க. இப்ப. விதிமுறைகளுக்குப் பொருந்தியிருந்தாலும் சரி எந்த வேலை அரசாங்க
அலுவலகத்தில் ஆக வேண்டியிருந்தாலும் லஞ்சம் தராமல் வேலை ஆவதில்லைன்னு ஆயிடுச்சு. இப்ப எல்லாம்
மக்களே லஞ்சம் எவ்வளவுன்னு கேட்டுத் தர்ற நிலைமை உருவாயிடுச்சு. லஞ்சம்
தந்தாலும் சீக்கிரம் வேலையானால் அதுவே பெரிய விஷயம்னு நினைக்கிற நிலைமைக்கு மக்கள்
வந்துட்டாங்க. இப்ப யாரும் உத்தமனைத் தேர்ந்தெடுக்கத் துடிக்கறதில்லை. எத்தனை
வேணும்னா சம்பாதிச்சுக்கட்டும், எங்களுக்கும் கொஞ்சமாவது நல்லது செஞ்சா போதும்னு நினைக்க
ஆரம்பிச்சுட்டாங்க. அந்த அளவு மக்கள் ஊழலை ஏற்றுகிட்டாங்க. ஊழல் எதிர்ப்புங்கறது
வெறும் மேடைப் பேச்சு சமாச்சாரமாயிடுச்சு. பேசறவனும்
அதை சீரியஸா நினைச்சு பேசறதில்லை. கேட்கறவனும் அதை சீரியஸாய் எடுத்துக்கறதில்லை. இப்படி
எல்லாருமே ஊழலை சீரியஸாய் நினைக்கற காலம் போன பிறகும் அண்ணா மேடைப்பேச்சையும் தாண்டி
அதை சீரியஸாய் எடுத்துகிட்டுருக்கான்….” ராஜாராமின் குரலில்
ஆழ்ந்த வருத்தம் இழையோடியது.
அவர் ஒரு கணம் நிறுத்தி அவன் ஏதாவது
கருத்து தெரிவிக்கிறானா என்று பார்த்தார். ஆனால் அவன்
அவரையே பார்த்துக் கொண்டிருந்தானேயொழிய ஒன்றும் சொல்லவில்லை. அவர் தொடர்ந்தார். “இப்போதெல்லாம்
எதிர்க்கட்சி கூட ஆளும் கட்சி கூடப் பேரம் படியாத போது தான் வெளிப்படையாய் புகார் சொல்லுது. ரகசியப்
பேச்சு வார்த்தைல பேரம் படிஞ்சுதுன்னா அவங்களும் சத்தமில்லாமல் இருந்துடறாங்க அர்ஜுன். மாநிலமானாலும், மத்திய
அரசானாலும் இது தான் வெளிப்படையாய் சொல்லிக்காத விதி அர்ஜுன். இதுலயும்
அண்ணா தான் விதிவிலக்கு. சரி இத்தனை நேர்மையாய் நியாயமாய் இருந்து அவன் மக்களுக்காகப்
போராடறான். அதற்காவது மக்கள் நன்றியுடையவர்களாக இருப்பாங்களான்னா அதுவும்
கிடையாது. தேர்தல் நேரத்துல ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும்
எண்ணிக் கொடுக்கற ரூபாய் நோட்டுகளுக்குத் தர்ற முக்கியத்துவத்தை மக்கள் அவனுக்கோ, அவனோட கட்சிக்கோ, தர மாட்டாங்க. மக்கள்
ஊழலை மறந்துடுவாங்க, மோசமான நிர்வாகத்தை மறந்துடுவாங்க, நிறைவேற்றாத
வாக்குறுதிகளை மறந்துடுவாங்க, கடந்த ஆட்சில ஏமாற்றப்பட்டதை மறந்துடுவாங்க. தேர்தல்
நேரத்துல தர்ற காசை மட்டுமே பார்த்து தான் ஓட்டுப் போடுவாங்க. இப்ப சொல்லு, ஏமாறுறது
மக்களா, எங்கண்ணாவா?”
பேரறிவு இருந்தும் இன்றைய அரசியல் களத்தில்
ஞானமூர்த்தி அடிமுட்டாள் ஆகத் தான் இருக்கிறார் என்பதைப் பார்க்கையில் அர்ஜுனுக்கு
வேதனையாகத் தான் இருந்தது. ராஜாராம் அலசிச் சொன்ன அளவுக்கு அவன் யோசித்திருக்கா விட்டாலும்
மேலெழுந்தவாரியாக கிட்டத்தட்ட இந்த நிலவரம் அவனுக்குப் புரிந்துதானிருந்தது.
கடைசியாக ராஜாராம் சொன்னார். “இந்தக்
காரணங்களுக்காகத் தான் நான் எங்கண்ணாவை ஆதரிக்கலை. கடைசில
அவன் எல்லாராலயும் கோமாளி ஆக்கப்படறத என்னால சகிக்க முடியல அர்ஜுன். என் குடும்பத்துல
இன்னொரு பலிக்கடா உருவாகறதை நான் விரும்பலை.”
அர்ஜுன் மெல்லக் கேட்டான். “நீங்க இதையெல்லாம்
எங்கப்பா கிட்ட சொல்லியிருக்கீங்களா சித்தப்பா?”
ராஜாராம் இல்லையென வருத்தத்துடன் தலையசைத்து
விட்டுச் சொன்னார். “சொல்லிப்
பிரயோஜனம் இல்லை அர்ஜுன். இந்த விஷயத்துல எங்கப்பாவை விட அண்ணா இரண்டு மடங்கு பிடிவாதக்காரன்.
”எங்கப்பாவுக்கு மகனாய் இருக்கற எல்லாத் தகுதியும், என்னை விட அண்ணாவுக்குத் தான் அதிகமாயிருக்குங்கறதை நான் பல தடவை உணர்ந்திருக்கேன்.
எங்கப்பா உயிரோட இருந்திருந்தா அவரோட முழு ஆதரவும் அண்ணாவுக்குத் தான்
இருந்திருக்கும். ஆனால் நான் அவராகவோ, அண்ணாவாகவோ
இருக்க விரும்பலை அர்ஜுன். இன்றைய அரசியல் ஒரு செஸ் விளையாட்டு
மாதிரி தான். தாக்கறதும், தாக்குப்பிடிக்கறதும்
தான் இதை விளையாடறவங்களோட குறிக்கோள். அடுத்தவங்க பலவீனத்தைப்
பயன்படுத்திக்கறதும், அவங்கள பலவீனப்படுத்த எல்லா முயற்சிகளையும்
எடுக்கறதும் ரொம்ப முக்கியம். மறைமுகமாய் நானும் அரசியல்வாதியாகி
இந்த விளையாட்டுல சேர்ந்துட்டேன். எங்கப்பா மாதிரியோ,
எங்கண்ணன் மாதிரியோ எனக்கு கொள்கை எல்லாம் கிடையாது. மக்களைப் பற்றியோ, மற்றவங்களைப் பற்றியோ நான் கவலைப்படறதில்லை.
எனக்கு நிரந்தர நண்பர்களோ, நிரந்தரப் பகைவர்களோ
கிடையாது. என்னை அனுசரிச்சுப் போறவங்களுக்கு, அவங்க அனுசரிச்சுப் போய்கிட்டிருக்கற வரைக்கும் நான் ஆதரவு தர்றேன்.
பின்னணியில் இருக்கறதால எனக்கு
எப்பவும் நஷ்டமோ, தோல்வியோ இல்லை. நான்
இதுவரைக்கும் இந்த அளவு வெளிப்படையாய் இதை யார் கிட்டயும் சொன்னதில்லை அர்ஜுன்.
உன் கிட்ட தான் சொல்றேன். வாசுதேவன் குடும்பத்தோட ஒரே வாரிசு நீ. நீ எங்க கிட்ட கோவிச்சுகிட்டு இருந்தால்
எங்களால தாங்க முடியாதுடா.” சொல்கையில்
ஒரு கணம் அவர் குரல் உடைந்தது.


Many thanks
ReplyDeleteRajaram character Explained peoples mindset now-a-days in this story very well. Every words are a real truth, but saddenly 99/100 peoples wont accept it.
ReplyDelete