என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, July 13, 2023

சாணக்கியன் 65

 

ஸ்காவதி நகரத்தை மாளவத்தைப் போல பிரச்சினையான பகுதியாக யவனர்கள் நினைக்கவில்லை என்பதால் அங்கே நகரக் காவலதிகாரி அதீத எச்சரிக்கை கொண்டவனாக இருக்கவில்லை.  அந்த நகருக்குள் நுழைந்த சாணக்கியர் மீது அவனுக்குச் சந்தேகம் எழவில்லை. தனியாக வந்த அந்த அந்தணர் அவன் பார்வைக்கு ஒரு சாதாரண யாத்திரீகராகவே தோன்றினார். விசாரித்த போது அவரும் தீர்த்த யாத்திரைக்குக் கிளம்பியிருக்கும் தட்சசீல வாசியாகவே தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.  

 

நீங்கள் இங்கே வந்திருக்கும் காரணம்?”

 

என் நண்பரின் உறவினர் இங்கே வசிக்கிறார். யாத்திரை போகும் வழியில் அவரை நலம் விசாரித்துக் கொண்டு வரும்படி என் நண்பர் சொன்னதால் வந்திருக்கிறேன்

 

உங்கள் நண்பரின் உறவினர் பெயர்?”

 

சாரகன்

 

அதற்கு மேல் கேள்விகள் எதுவும் அவரிடம் அவன் கேட்கவில்லை. சாணக்கியர் அமைதியாக நகரத்தினுள் பிரவேசித்தார். வீதிகளில் தெரிந்த மக்கள் அமைதியாகத் தெரிந்தார்கள். யவன வீரர்களும், மஸ்காவதி வீரர்களும் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட சரிசமமாகவே தெரிந்தாலும் அவர் பார்வைக்கு இரு படைவீரர்களிடையே நிறைய வேற்றுமைகள் தெரிந்தன. இன்னும் மஸ்காவதி வீரர்களால் யவன வீரர்களுடன் இயல்பாகக் கலந்துறவாட முடியாதது தெளிவாகவே தெரிந்தது. வழியில் மாடு மேய்த்துக் கொண்டு வந்த ஒரு இளைஞனிடம்  சாரகனின் வீடு எங்கிருக்கிறது என்று விசாரித்துத் தெரிந்து கொண்டு சாணக்கியர் சாரகனின் வீட்டை அடைந்தார். சில மாதங்களுக்கு முன்பு வரை சாரகன் கொல்லனாக இருந்ததன் அறிகுறியாக பழைய பட்டறை ஒன்று வீட்டின் முன்புறம் இருந்தது.    

 

வீட்டின் வெளியே வெறித்த பார்வை பார்த்தபடி அமர்ந்திருந்த கிழவர் தான் சாரகனாக இருக்க வேண்டும் என்று சாணக்கியர் யூகித்தார். ஆனால் தன் வீட்டின் முன் வந்து நிற்கும் அந்தணர் வழி தவறி அங்கே வந்து விட்டதாகவே சாரகன் நினைத்தது போலிருந்தது. அதனால் சாணக்கியர் தவறான இடத்திற்கு வந்து விட்டதை உணர்ந்து தானாகவே அங்கிருந்து போய் விடுவார் என்று எதிர்பார்த்தது போல் சாரகன் சலனமில்லாமல் அமர்ந்திருந்தார்.

 

ஆனால் சாணக்கியர் அப்படிப் போய் விடாமல் வணக்கம் தெரிவித்து முன்னாலேயே நின்ற போது தன்னைத் தேடி தான் வந்திருக்கிறார் என்பது உறுதியாகி சாரகன் மெல்லத் தளர்ச்சியுடன் எழுந்து நின்றார்.   

 

சாணக்கியர் கைகளைக் கூப்பியபடி சொன்னார். “நான் விஷ்ணுகுப்தன். தட்சசீலத்திலிருந்து வருகிறேன்.”

 

சாரகனும் இரு கைகளையும் கூப்பி வணங்கினார். ஆனால் எந்த வார்த்தைகளும் அவர் வாயிலிருந்து வெளிவரவில்லை.

 

சாணக்கியர் சொன்னார். “உள்ளே சென்று பேசுவோமா?”

 

சாரகன் அதை எதிர்பார்க்காதது போலிருந்தது. அவர் மெல்லச் சொன்னார். “பல அந்தணர்கள் எங்கள் வீட்டிற்குள்ளே வருவதில்லை. அதனால் தான் தங்களை உள்ளே அழைக்கவில்லை. மன்னிக்கவும்.”

 

சாணக்கியர் சொன்னார். “என் தாய் மண்ணில் நான் மிதிக்கக்கூடாத இடமென்று எதையும் நினைப்பதில்லை.”

 

சாரகன்வாருங்கள் அந்தணரேஎன்று சொன்னபடி தளர்ச்சியுடன் வீட்டுக்குள் நுழைந்தார். சாணக்கியர் அவரைப் பின் தொடர்ந்து வீட்டுக்குள் சென்றார். வீட்டிற்குள் பொருட்கள் எல்லாம் அங்கங்கேயே விழுந்து கிடந்தன. கிழவர் பொருட்களை ஒழுங்கிபடுத்தி வைக்கும் சிரமத்தை மேற்கொள்ளவில்லை என்பது தெரிந்தது. சாணக்கியரின் பார்வை வீட்டை ஒரு முறை அலசியதைக் கவனித்த சாரகன் வரண்ட குரலில் சொன்னார். ”ஒரு காலத்தில் நேசிக்கும் ஆட்கள் வீட்டிலும், வாழ்க்கையிலும் இருந்ததால் எல்லாமே ஒழுங்காக இருந்தன. இப்போது ஆட்களும் இல்லை. அர்த்தமும் இல்லை, ஒழுங்கும் இல்லை….”

 

சொல்லி விட்டு, பாய் எங்கே இருக்கிறது என்று அவர் ஒரு கணம் யோசித்தது போல் இருந்தது. அவர் கண்கள் மந்தமாக அங்குமிங்கும் பார்த்துக் கடைசியில் வீட்டின் ஒரு மூலையில் சாத்தி வைக்கப்பட்டிருந்த பாயைக் கண்டுபிடித்தன. அந்தப் பாயைத் தரையில் விரித்துஅமருங்கள் அந்தணரேஎன்றார்.

 

சாணக்கியர் அந்தப் பாயில் அமர்ந்தார்.  சாரகன் அவர் எதிரே தரையில் இருந்த இரண்டு மண்பாண்டங்களை ஒதுக்கி வைத்து விட்டு அமர்ந்தபடி மெல்லக் கேட்டார். “தாங்கள் என்ன விஷயமாக என்னைக் காண வந்திருக்கிறீர்கள் என்பதை நான் அறிந்து கொள்ளலாமா?”

                                                        

சாணக்கியர் சொன்னார். “எனக்கு நிறைய ஆயுதங்கள் வேண்டியிருக்கின்றன. இந்தப் பிரதேசத்திலேயே உங்களை விடச் சிறப்பாய் ஆயுதங்கள் செய்பவர் யாரும் இல்லை என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்….”

 

சாரகன் ஒரு கணம் கண்களை மூடியிருந்து விட்டுச் சொன்னார். “நான் தொழிலை நிறுத்தி பல மாதங்களாகி விட்டது. மூச்சு நிற்பதற்காக இந்த வீட்டில் தன்னந்தனியாகக் காத்திருக்கிறேன் அந்தணரே. மஸ்காவதி படையில் வீரர்களாக இருந்த என் இரண்டு பிள்ளைகளும் யவன வீரர்களால் அநியாயமாகக் கொல்லப்பட்டார்கள். அலெக்ஸாண்டர் அவன் படையில் சேர விருப்பமில்லாத வீரர்கள் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு இங்கிருந்து சென்று விடலாம் என்று எங்கள் அரசியிடம் அனுமதி அளித்தான். அவன் வார்த்தைகளை நம்பி நிறைய வீரர்கள் வெளியேறினார்கள். வெளியேறிய வீரர்களில் என் மகன்களும் இருந்தார்கள். பின்னாலேயே போய் யவனப்படை நிராயுதபாணிகளாய் இருந்த அவர்களைக் கொன்று குவிக்கும் என்று அவர்கள் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். உலகாள வந்தவனாக தன்னை உயர்த்திச் சொல்லும் அவன் தன் வாக்கைக் காப்பாற்றாத நீச்சனாக இருப்பான் என்று அவர்களுக்குச் சந்தேகமும் வந்திருக்காது. ஆனால் அப்படியே நடந்தது அந்தணரே. என் மகன்கள் இறந்து போனார்கள். நான் இன்னும் இருக்கிறேன்….. அவர்கள் உயிரை எடுத்துக் கொண்ட இறைவன் என் உயிரையும் அப்போதே எடுத்துக் கொள்ளாமல் ஏன் இன்னும் விட்டு வைத்திருக்கிறான் என்று இறைவனிடம் நான் கேட்காத நாளில்லை. இறைவன் ஏனோ மௌனமாகவே இருக்கிறான்….” சொல்லும் போது அவர் கண்கள் கலங்கின. குரல் தழுதழுத்தது.

 

சாணக்கியர் அமைதியாகச் சொன்னர். “உங்களுக்குப் பதிலளிக்கத் தான் இறைவன் என்னை இங்கே அனுப்பி வைத்திருக்கிறான், சாரகரே      

 

சாரகன் முகத்தில் திகைப்பு தெரிந்தது. அவர் சாணக்கியரைக் கூர்ந்து பார்த்தார். சாணக்கியர் முகத்தில் கேலி செய்யும் அறிகுறி எதுவும் தெரியவில்லை.  இந்த மனிதர் சித்தரோ? இறைவனின் தூதுவரோ?

 

சாணக்கியர் அமைதியாகச் சொன்னார். “உங்கள் உயிரையும் அப்போதே இறைவன் எடுத்து விட்டிருந்தால் உங்கள் மகன்களின் உயிரைப் பறித்த யவனர்களை யார் பழி வாங்குவார்கள் சாரகரே. பழி வாங்கிக் கணக்கைத் தீர்க்கத் தான் உங்களை இறைவன் வாழ வைத்திருக்கிறான் சாரகரே

 

சாரகன் முகத்தில் ஒரு மின்னல் வெட்டி மறுபடியும் இருள் சூழ்ந்தது.  அவர் சோகமாகச் சொன்னார். “மகன்கள் உயிரோடு இருந்த காலத்தில் தனியாக நின்று இரண்டு மூன்று வீரர்களையாவது வீழ்த்தும் திராணி இந்த உடலுக்கு இருந்தது அந்தணரே. ஆனால் என் பிள்ளைகளுடன் அனைத்துப் பலத்தையும் நான் இழந்து விட்டேன். இப்போது ஒரு வீரனைச் சமாளிக்கும் பலம் கூட இல்லாத நான் யவனர்களைப் பழி வாங்குவதென்பது முடியாத காரியம்….”

 

சாணக்கியர் சொன்னார். “தனியாக நின்று நீங்கள் யவனர்களுடன் போரிட வேண்டியதில்லை சாரங்கரே. அதற்காக எத்தனையோ வீரர்கள் தயாராக இருக்கிறார்கள். அவர்கள் யவனர்களுடன் போரிட அவர்களுக்கு நீங்கள் ஆயுதங்கள் செய்து கொடுத்தால் போதும்….”

 

சாரங்கனிடம் தெரிந்த சோகம், விரக்தி, மந்தத் தன்மை எல்லாம் ஒரு கணம் விடைபெற்றன. அவர் தீர்க்கமாகக் கேட்டார். “நீங்கள் யார் அந்தணரே. நான் பல தேசங்களுக்கு ஆயுதங்கள் தயாரித்துத் தந்திருக்கிறேன். பல அரசர்கள், சேனாதிபதிகள், படைத்தளபதிகள் தங்களுக்காகப் பிரத்தியேகமாக ஆயுதங்கள் என்னிடமிருந்து வாங்கிக் கொண்டு போயிருக்கிறார்கள். ஆனால் இது வரை எந்த அந்தணரும் இந்தக் கோரிக்கையோடு என்னிடம் வந்ததில்லை….”

 

சாணக்கியர் சொன்னார். “இந்தப் புனிதமான பாரத மண்ணின் புத்திரன் நான். யவனர்கள் என் தாய் மண்ணை ஆக்கிரமிப்பது கண்டு பொறுக்க முடியாத ஒரு சாதாரண அந்தணன். இந்தத் தேசத்தின் மிகப்பெரிய சாபக்கேடு பிரிவினை தான் சாரகரே. நீங்கள் மஸ்காவதியை உங்கள் தாய்நாடாக நினைக்கிறீர்கள். உங்கள் சிந்தனை அதைத் தாண்டி பாரதத்தைத் தாயகமாக நினைக்க அனுமதிக்கவில்லை. இப்படி ஒவ்வொருவரும் சிறு துண்டு நிலங்களைத் தங்கள் தாய்நாடாக நினைக்கிறார்கள். அதைத் தாண்டி அவர்கள் சிந்தனைகள் செல்வதில்லை.  இந்தக் குறுகிய சிந்தனையால் நாம் சிறு சிறு பிரிவுகளாய் பிரிந்து பலவீனமாக நிற்பதால் தான் அலெக்ஸாண்டர் இந்த மண்ணில் காலடி வைக்கவும், சிறு சிறு பகுதிகளாக ஆக்கிரமித்துக் கொண்டே போகவும் முடிந்தது. ஒட்டு மொத்த பாரதமாக வலிமையோடு சேர்ந்து எதிர்த்திருந்தால் அலெக்ஸாண்டர் இங்கே வந்திருக்க முடியாது. நாம் தனித்தனியாகப் போராடித் தோற்கிறோம். தனித்தனியாக எல்லாவற்றையும் இழக்கிறோம். தனித்தனியாக துக்கத்தில் மூழ்குகிறோம். ஆனால் ஒன்றாகச் சேர்ந்து நின்றால் தோல்விக்கும், இழப்பிற்கும், துக்கத்திற்கும் வாய்ப்பே இருக்காது.  இந்தப் பாடத்தை இப்போதாவது கற்றுக் கொண்டால் நாம் யவனர்களை இந்த மண்ணிலிருந்து துரத்த முடியும்….”

 

சாணக்கியர் நீண்ட நேரம் பேசினார். நிறைய விஷயங்கள் பேசினார். அவர் பேசிய நிறைய விஷயங்கள் சாரகனுக்குப் புரியவில்லை. ஆனால் யவனர்களுக்கு எதிராக ஒரு பேரியக்கம் தயாராகிக் கொண்டிருக்கின்றது என்ற செய்தி அழுத்தந்திருத்தமாகப் புரிந்தது. அந்த இயக்கம் யவனர்களோடு போர் புரிய சாணக்கியர் ஆயுதங்கள் செய்து தரக் கேட்கிறார் என்பது புரிந்தது.  அவர் உருவாக்கித் தரும் ஒவ்வொரு ஆயுதமும், அவர் மகன்களைக் கொன்ற யவனரை வீழ்த்தவும், துரத்தவும் பயன்படும் என்பதும் புரிந்தது. அதன் பிறகு வேறு எதுவும் புரிய வேண்டியதில்லை என்று நினைத்தார் அவர். சாரகனின் சோர்வான உடலில் சக்தியும், சோகமான மனதில் உற்சாகமும் தானாகப் பெருக்கெடுக்க ஆரம்பித்தது….    

 

(தொடரும்)

என்.கணேசன்

Monday, July 10, 2023

யோகி 4

 

கிருஷ்ணமூர்த்தி ஒரு கணம் பேச்சிழந்தார். அவர் மகளை அவர் மிக நன்றாக அறிவார். அவளுடைய தந்தை அவளுக்கு ஆபத்து என்று கேள்விப்பட்டு வந்திருக்கிறார், ஆபத்தில்லாமல் பாதுகாப்பாக இருப்பதாக அவளே நேரடியாகச் சொன்னால் நிம்மதியாகப் போய் விடுவார் என்ற நிலைமை இருக்கையில், ஆசிரமத்தின் அற்ப விதியைக் காரணம் காட்டி நேரில் வர மறுப்பவள் அல்ல அவர் மகள். இந்த மனிதர் பொய் சொல்கிறார். உண்மையில் அவர் மகளுக்கு இங்கே ஆபத்து இருக்கிறது

 

அவர் வெளிப்படையாகச் சொன்னார். “நீங்க பொய் சொல்றீங்க. என் மகள் அப்படிச் சொல்லியிருக்க மாட்டா

 

அந்த நடுத்தர வயதுத் துறவி அவரை இரக்கத்தோடு பார்ப்பது போல் பார்த்துச் சொன்னார். ”எல்லா உறவுகளையும் துறந்து வருவதற்குப் பெயர் தான் துறவு. நீங்கள் இன்னும் மகள் என்ற பழைய பாசத்தோடு தான் இருக்கிறீர்கள். அதை திரும்பவும் வளர்த்து விட விரும்பாமல் தான் அவர்கள் உங்களைச் சந்திக்க விரும்பவில்லை என்ற உண்மையைத் தயவு செய்து நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் ஐயா. தயவு செய்து நிம்மதியாகப் போங்கள். அவருக்கு ஆபத்து இல்லை. அப்படி அவருக்கு ஏதாவது ஆபத்து வர நாங்கள் அனுமதிக்க மாட்டோம்…”

 

அவர் இரக்கத்தோடு பார்த்ததும், சொன்னதும் கிருஷ்ணமூர்த்தியை மிகவும் ஆத்திரமடையச் செய்தது. வாசலில் நின்றிருந்த திடகாத்திரமான இளைஞர்கள் இப்போது உள்ளே விட்டார்கள். அவர்கள் கிருஷ்ணமூர்த்தியைப் பார்த்த பார்வையும் ரவுடித்தனமாக இருந்தது. அவர் இனியும் ஏதாவது முரண்டு பிடித்தால் அவரைத் தூக்கி வெளியே வீசவும் அவர்கள் தயங்க மாட்டார்கள் போலத் தோன்றியது.

 

கிருஷ்ணமூர்த்தி ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு உறுதியான குரலில் அந்த நடுத்தர வயதுத் துறவியைப் பார்த்து சொன்னார். என் மகள் நீங்க சொல்ற மாதிரி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை. எனக்கு இப்ப அந்த மொட்டைக் கடிதம் உண்மை தானோன்னு சந்தேகமாயிருக்கு. உங்க வார்த்தைகளை நம்பி நான் நிம்மதியாய் போக முடியாது.”

 

திரும்பவும் நீங்கள் அவரை உங்கள் மகள் என்றே சொல்கிறீர்கள். அந்த பந்தத்தை அவர் எப்போதோ துறந்து விட்டார். இப்போது அவர் எங்கள் ஆசிரமத்து சன்னியாசினி.”

 

கிருஷ்ணமூர்த்தி பொரிந்து தள்ளினார். “துறந்தது அவள் தான், நானல்ல. எனக்கு எப்பவும் அவள் என் மகள் தான். என்னய்யா பெரிய விதிமுறை. ஆனானப்பட்ட ஆதிசங்கரரே அம்மா இறந்தவுடன, அம்மாவுக்கு கொள்ளி போட ஓடோடி வந்தவருய்யா. அவரை விடப் பெரிய துறவிகளாய்யா நீங்கல்லாம்…”  

 

அதற்கு பதில் சொல்லும் அவசியம் இல்லை என்பது போல்  அந்தத் துறவி அமைதியாக நின்றார். கிருஷ்ணமூர்த்திக்கு இருந்த ஆத்திரத்தில் அந்த ஆளை ஓங்கி ஒரு அறை அறைந்தால் என்ன என்று தோன்றியது. தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு சொன்னார். “என் மகளைப் பார்த்துப் பேச எனக்கு அனுமதி தராட்டி நான் போலீஸ்ல  புகார் தர வேண்டியிருக்கும்….”

 

அந்தத் துறவி அலட்சியம் கலந்த அமைதியுடன் சொன்னார். “உங்கள் விருப்பப்படி செய்யுங்கள் ஐயா

 

கிருஷ்ணமூர்த்திக்குத் தன் காதுகளை நம்ப முடியவில்லை. என்ன மனிதர்கள் இவர்கள் என்று தோன்றியது. அதற்கு மேல் அவர்களிடம் பேச ஒன்றுமில்லை என்று நினைத்தவராக அங்கிருந்து வேகமாக வெளியேறினார்.

 

யோகாலயத்தின் உள்ளே கண்காணிப்பு காமிரா பதிவில், வரவேற்பறையில் நடப்பதை எல்லாம் ஒரு மனிதர் பார்த்துக் கொண்டிருந்தார். அவருடைய கூர்மையான பார்வை கிருஷ்ணமூர்த்தியை விட்டு, கண நேரமும் அகலவில்லை. அங்கிருந்து கிருஷ்ணமூர்த்தி வெளியேறும் வரை பார்த்துக் கொண்டிருந்த அந்த மனிதர்,  அவர் வெளியேறியவுடன், தன்னருகில் நின்று கொண்டிருந்த அடியாளிடம் அமைதியாகச் சொன்னார். “அந்த ஆள் எங்கே போறான், என்ன செய்யறான்னு பாரு

 

அந்த அடியாள் தலையசைத்து விட்டு நகர்ந்தான்.

 

கிருஷ்ணமூர்த்தி யோகாலயத்திலிருந்து கிளம்பி சிறிது தூரம் சென்று காரை நிறுத்தி விட்டு யோசித்தார்.  அவர் காரைத் தொடர்ந்து, பைக்கில் வந்து கொண்டிருந்தவனும் தன் பைக்கை நிறுத்தி தன் கைபேசியை எடுத்துப் பேசுவது போல் பாவனை செய்தான். ஆனால் அதற்கு அவசியமே இருக்கவில்லை. கிருஷ்ணமூர்த்திக்கு, தன்னை ஒருவன் பின் தொடர்ந்து வருவதோ, தான் காரை நிறுத்தியவுடன் சற்று தொலைவில் அவனும் நின்று விட்டதோ தெரிந்திருக்கவில்லை. அவர் கவனமெல்லாம் அவர் மகள் பற்றிய யோசனைகளிலேயே இருந்தது.

 

சைத்ராவுக்கு உண்மையிலேயே ஆபத்து ஏற்பட்டிருக்கிறது என்பது இப்போது அவருக்கு உறுதியாகத் தெரிந்து விட்டது. அப்படி ஆபத்து இருக்கா விட்டால் அவர்கள் அந்த முட்டாள்தனமான விதிமுறையைச் சொல்லி அனுமதி மறுத்திருக்க மாட்டார்கள். ஒரு நிமிடம் அவள் வந்து பேசி விட்டுப் போவதில் இருபக்கத்தாருக்கும் பிரச்சினை தீர்ந்து போயிருக்கும். அந்தச் சின்ன விஷயத்தையும் அவர்கள் செய்யாமல் விட்டது, அது அவர்களுக்குச் சின்ன விஷயமாக இல்லை என்பதையே காண்பிக்கிறது. அதனால் இனி யோசிக்க எதுவும் இல்லைபோலீஸில் புகார் செய்வதைத் தவிர வேறு வழியில்லை

 

ஒரு முடிவுக்கு வந்தவராக, கிருஷ்ணமூர்த்தி கைபேசியை எடுத்து, யோகாலயம் எந்தப் பகுதி போலீஸ் ஸ்டேஷனின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது என்று இணையத்தில் தேடிக் கண்டுபிடித்தார். பின் காரைக் கிளப்பினார். அப்போதும் சரி, அதன் பின்னும் சரி, தன்னை ஒருவன் பைக்கில் பின் தொடர்வதை அவர் அறியவில்லை. மகளும், மகளின் பாதுகாப்பும் மட்டுமே அவர் மனதில் நிறைந்திருந்ததால், வேறு எதற்கும் அவர் மனதில் இடம் இருக்கவில்லை.

 

போலீஸ் ஸ்டேஷனில் அவர் உள்ளே நுழைந்த போது போலீஸ் இன்ஸ்பெக்டர் இருக்கவில்லை. அவருக்குத் தன்னுடைய புகாரை ஏட்டிடம் தந்து விட்டுச் செல்ல மனமிருக்கவில்லை.

 

ஏட்டிடம் அவர் கேட்டார். “இன்ஸ்பெக்டர் எப்ப வருவார்?”

 

அரை மணி நேரத்துல வந்துடுவார் சார்.”

 

கிருஷ்ணமூர்த்தி தலையசைத்து விட்டு அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டார். அங்கு காத்திருக்கும் போதும் அவர் மனம் மகளுக்காக மிகவும் கவலைப்பட்டது. அவளுக்கு என்ன ஆபத்து, அது நிகழ்ந்து விட்டதா, இல்லையா என்று எதுவுமே புரியாத நிலைமை கொடுமையாகத் தோன்றியது. இன்ஸ்பெக்டருக்காகக் காத்திருக்கும் சமயத்தில் அப்பாவுக்குப் போன் செய்து தெரிவிக்க வேண்டும் என்று தோன்றினாலும், இந்த கவலைக்குரிய தகவலை அவருக்குத் தெரிவித்து அவர் நிம்மதியையும் கெடுக்க வேண்டாம் என்றும் தோன்றியது.

 

நல்ல வேளையாக இருபது நிமிடங்களிலேயே இன்ஸ்பெக்டர் வந்து விட்டார். கிருஷ்ணமூர்த்தியைப் பார்த்தபடியே தன் அறைக்குள் அவர் போக, ஏட்டு சொன்னார். “நீங்க போய்ப் பாருங்க சார்

 

கிருஷ்ணமூர்த்தி இன்ஸ்பெக்டரிடம் சென்று விசிட்டிங் கார்டு தந்து  தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். இன்ஸ்பெக்டரின் மேசையில் இருந்த பெயர்ப்பலகை அவர் பெயர்செல்வம்என்று தெரிவித்தது. 

 

டாக்டர் என்று பார்த்தவுடனேயே இன்ஸ்பெக்டர் முகத்தில் மரியாதை தெரிந்தது. “உட்காருங்க சார்

 

உட்கார்ந்த கிருஷ்ணமூர்த்தி, தான் வந்த காரணத்தை அவரிடம் சொன்னார். இடைமறிக்காமல் அவர் சொன்னதை எல்லாம் கேட்டுக் கொண்ட இன்ஸ்பெக்டர் கேட்டார். “அந்த மொட்டைக் கடிதத்தைக் கொண்டு வந்திருக்கீங்களா சார்?”

 

அது வீட்டுல இருக்கு. நான் எடுத்துகிட்டு வரல. யோகாலயத்துல சைத்ராவைப் பார்க்க அனுமதிக்க மாட்டாங்கங்கற யோசனையே எனக்கு வரல…”

 

இன்ஸ்பெக்டர் புரிகிறது என்பது போல் தலையசைத்து விட்டுச் சொன்னார். “சார் அவங்க பெரிய இடம். யோகி பிரம்மானந்தாவைப் பார்க்க முதலமைச்சர், கவர்னர், பிரதமர் எல்லாம் வந்துட்டுப் போறாங்க. அதனால நீங்க அந்த மொட்டைக் கடிதத்தோட உங்க புகாரையும் எழுத்து வடிவுல தந்தா தான் நான் அங்கே போய் விசாரிக்கவே முடியும்... இல்லாட்டி சரியான காரணம் இல்லாமல் நான் போய் அவங்கள தொந்தரவு செய்யறதா அவங்க மேலிடத்துல புகார் செய்யக்கூடியவங்க…”

 

கிருஷ்ணமூர்த்திக்குப் புரிந்தது. அவர் சொன்னார்  தாராளமா புகாரை எழுதித் தர்றேன். அந்த மொட்டைக் கடிதத்தையும் உடனே போய் எடுத்துகிட்டு வந்து தர்றேன்ஆனா நீங்க எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் விசாரிக்கணும்….”

 

சொல்லி விட்டு வேகமாகப் போகும் அவரையே பார்த்துக் கொண்டு இருந்த, அவர் கார் கிளம்பும் சத்தம் கேட்டவுடன் யோகாலயத்துக்குப் போன் செய்தார்.


(தொடரும்)

என்.கணேசன்






Thursday, July 6, 2023

சாணக்கியன் 64

 

ம்பி குமாரன் இந்தக் கேள்வியின் போக்கை வெறுத்தான். இது அவனுடைய தேசம். அவன் என்ன செய்ய வேண்டும், என்ன செய்திருக்கிறான் என்பதெல்லாம் அடுத்தவர்களுக்குத் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. அலெக்ஸாண்டரிடம் நட்புக்கரம் நீட்டிய காரணத்தாலும், அலெக்ஸாண்டர் அவனை விட மேலானவனும் உலகாளப் பிறந்தவனுமான சக்கரவர்த்தி என்பதாலும் அலெக்ஸாண்டர் இப்படி விசாரித்திருந்தாலும் அவன் விடை சொல்லக் கடமைப்பட்டவன் என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அலெக்ஸாண்டரிடம் சேவகம் செய்யும் சேவகன் அவனால் சத்ரப் ஆக நியமிக்கப்பட்ட காரணத்தாலேயே ஆம்பி குமாரனிடம் கேள்விகள் கேட்க அதிகாரம் படைத்தவனாகி விடமுடியாது. இப்படியெல்லாம் கேட்டு உள்மனம் கொதித்தாலும் அதை வெளியே கொட்டி எதிர்ப்பு தெரிவிக்க முடியாதவனாய் ஆம்பி குமாரன் சொன்னான். ”காந்தாரத்தின் ஒற்றர்களில் பாதி பேர் தங்களால் மற்ற வேலைகளில் ஈடுபடுத்த எடுத்துக்கொள்ளப்பட்ட பின்பு மீதமிருக்கும் ஒற்றர்களை வைத்து அனைத்தையும் விரைவில் செய்து விட முடியாத நிலை இருக்கிறது. இருப்பவர்களை வைத்துக் கொண்டு முடிந்த வரை முயற்சி செய்து வருகிறேன்”

 

பிலிப் அவனை மரியாதையில்லாத ஒரு பார்வை பார்த்தான். ஆம்பி குமாரன் பொறுமையாக அமைதியாக அமர்ந்திருக்கக் கடுமையான முயற்சியை மேற்கொள்ள வேண்டியிருந்தது.

 

பிலிப் அவனாகப் புரிந்து கொள்வான் என்று எதிர்பார்த்துக் காத்திருந்து விட்டுச் சொன்னான். “ஆயுதக்கிடங்கில் இருந்து ஆயுதங்கள் களவு போயிருக்கின்றன என்றால் காவலுக்கு நிறுத்தியிருந்த காவலாளிகளை விசாரிக்கிற முறையில் விசாரித்தால் உண்மை தெரிந்து விடப் போகிறது. அதை விட்டு விட்டு ஒற்றர்கள் மூலமாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தாங்கள் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது ஆம்பி குமாரரே”

 

ஆம்பி குமாரன் சொன்னான். “காந்தார ஒற்றர்கள் மட்டுமல்லாமல் படைவீரர்கள், காவல் வீரர்கள் கூட ஏராளமாக மற்ற வேலைகளுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருப்பதால் இங்கு மீதமிருக்கும் ஆட்கள் எல்லாப் பிரிவுகளிலும் குறைவு. ஆயுதக்கிடங்கு பாதுகாப்பான கட்டிடத்தில் பெரிய சங்கிலிகளுடன் கூடிய பூட்டினால் பூட்டப்பட்டிருப்பதால் அதற்கு காவல் வீரர்களை சில சமயங்களில் நிறுத்துவதில்லை. மேலும் இது வரை இப்படி ஆயுதங்கள் திருட்டுப் போனதுமில்லை...”

 

பிலிப் தனக்குள் எழுந்த கோபத்தைக் கட்டுப்படுத்தியவனாய் பெருமூச்சு விட்டான். ‘நீங்கள் எங்கள் ஆட்களை அழைத்துப் போய் விட்டீர்கள். மீதம் இருப்பவர்களை வைத்துக் கொண்டு என்னால் என்ன தான் செய்துவிட முடியும்?’ என்கிற வகையில் கேட்பவனிடம் என்ன தான் பேசுவது?   இவனிடம் ஆள் போதாமை பற்றிப் பேசுவது காலத்தை வீணடிப்பது தான்….

 

பிலிப் கேட்டான். “உங்கள் கல்விக்கூடத்தின் மாணவர்கள் தொலைதூர தேசங்களிலும் பல இடங்களில் நடமாடுகிறார்கள். கேட்டால் கல்விக்கூடத்தில் ஆட்சேர்ப்பு நடக்கவிருப்பது குறித்துப் பேச வந்திருக்கிறோம் என்கிறார்கள். எல்லா இடங்களிலும் முக்கியஸ்தர்களிடம் பேசுகிறார்கள். இதெல்லாம் இங்கு எப்போதும் நடக்கும் நடைமுறை தானா?”

 

ஆம்பி குமாரன் முகம் சுளித்தபடி சொன்னான். “அப்படியெல்லாம் இல்லை. இங்கே கல்வி கற்க சேர்த்துக் கொள்வதே ஒரு கௌரவமான விஷயம் என்று எடுத்துக் கொள்ளப்படுகிறது. வரும் எல்லோரையும் அவர்கள் சேர்த்துக் கொள்வதுமில்லை. அதனால் இந்த அறிவித்தல் வேலைக்கு அவசியமே இல்லை. இருந்தும் இந்த முறை விசித்திரமாக இப்படி எல்லாம் நடந்து வருவது ஆச்சரியமாகத் தான் இருக்கிறது….”

 

சொன்னவன் தீவிர யோசனையில் ஆழ்ந்தான். என்ன நடக்கிறது? இங்குள்ள மாணவர்கள் அங்கெல்லாம் எதற்குப் போக வேண்டும்? ஆச்சாரியரும் இப்போது இங்கில்லை. அவர் எங்கு போயிருக்கிறாரோ தெரியவில்லை.

 

“இந்த ஆயுதத்திருட்டில் அவர்கள் பங்கு இருக்க வாய்ப்பு இருக்கிறதா?” பிலிப் சந்தேகத்துடன் கேட்டான்.

 

அதற்கு சாதாரணமாக அவர்களுக்கு அவசியம் இல்லை. ஏனென்றால் அவர்களுக்கு ஆயுதப்பயிற்சியும் உண்டு என்றாலும் அதற்கு வேண்டிய ஆயுதங்கள் அவர்களிடம் தாராளமாக இருக்கின்றன. ஆனால் அவசியம் இல்லாமல் வேறுபல தொலைதூரப் பகுதிகளிலும் அவர்கள் சுற்றுகிறார்கள் என்று நீங்கள் சொல்லும் போது எனக்கு அவர்கள் மீது சந்தேகமும் எழத் தான் செய்கிறது. ஏனென்றால் இங்கேயும் அவர்கள் அகால நேரங்களில் நடமாடுகிறார்கள். குற்றம் செய்வதற்கான தடயங்களோ, சந்தேகப் படுவதற்கான வலுவான காரணங்களோ இல்லை என்பதால் தடுக்கவோ தண்டிக்கவோ வழியில்லை.”

 

பிலிப் சந்தேகத்துடன் சொன்னான். “பொதுவாக மாணவர்கள் தானாக இது போன்ற வேலைகளில் ஈடுபடுவதில்லை. அவர்களை யாரோ இயக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். அது யாரென்ற யூகம் ஏதாவது இருக்கிறதா ஆம்பி குமாரரே?”

 

அவர்களுக்கு விஷ்ணுகுப்தர் என்று ஒரு ஆசிரியர் இருக்கிறார். அவர் எனக்கும் முன்பு ஆசிரியராக இருந்தவர். அவர் சிறந்த அறிவாளி என்றாலும் ஒரு பிரச்சினையான நபர். மிகுந்த கர்வம் பிடித்தவர். யாரையும் மதிக்க மாட்டார். மாணவர்களின் நடவடிக்கைகளுக்குப் பின்னணியில் நிச்சயம் அவர் தான் இருப்பார் என்று நான் நம்புகிறேன்.”

 

அவருடைய நோக்கம் தான் என்ன ஆம்பி குமாரரே?”

 

அது எனக்குத் தெரியவில்லை பிலிப்.” சொல்கையில் ஆம்பி குமாரனின் குரல் தாழ்ந்தது. முன்பாவது யவனர்களுக்கு எதிராக தட்சசீலத்தில் அவர் புரட்சி செய்யக் கூடும் என்ற சந்தேகமாவது அவனுக்கு இருந்தது. தொலைதூரப் பிரதேசங்களிலும் அவரது மாணவர்கள் உலாவுகிறார்கள் என்று தெரிய வந்த பின் அந்தச் சந்தேகத்திற்கு அர்த்தமில்லை என்று தோன்றியது. எல்லா இடங்களிலும் அவரால் புரட்சி செய்ய முடியாதுஅறிவும் யோசிப்பதும் அதிகமாகி அவர் புத்தி பேதலித்திருக்கிறது என்றே அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. அவன் சொன்னான். “அவருக்குப் புத்தி பேதலித்து விட்டது என்று நினைக்கிறேன். அவருடைய நடவடிக்கைகள் எல்லாம் அதைத்தான் தெரிவிக்கின்றன சில காலத்திற்கு முன்பு அவர் மகதம் சென்று மகத மன்னனை ஆட்சியிலிருந்து இறக்கி விடுவேன் என்று சபதம் செய்து விட்டு வந்திருக்கிறார் என்றும் கேள்விப்பட்டேன்

 

பிலிப் கேட்டான். “மகதம் என்று நீங்கள் சொல்வது சக்கரவர்த்தி வெல்ல உத்தேசித்திருந்த பூமியையா, இல்லை அதே பெயரில் சிறுபகுதி அருகில் எங்காவது இருக்கிறதா?”

 

சக்கரவர்த்தி உத்தேசித்திருந்த அதே பகுதி தான் பிலிப்….”

 

பிலிப் திகைத்தான். நிஜமாகவே ஆம்பி குமாரனின் ஆசிரியருக்குப் புத்தி பேதலித்துத் தான் போயிருக்க வேண்டும்ஆம்பி குமாரனைப் போன்ற பல மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து சலித்ததால் அவருக்குப் புத்தி பேதலித்திருக்கலாம் என்று நினைத்து மெலிதாய் அவன் புன்னகைத்தான்.

 

ஆம்பி குமாரனுக்கு பிலிப் மனதில் ஓடிய எண்ணங்கள் தெரிய வராததால் அவனும் புன்னகைத்தான். தூரத்திலிருக்கும் ஒரு வலிமையான பரந்த தேசத்தின் மன்னனிடமே  இங்கிருந்து சென்ற ஒரு ஆசிரியன் சவால் விட்டிருப்பது பைத்தியத்தால் தானிருக்க வேண்டும் என்று எண்ணி பிலிப் புன்னகைப்பதாக அவன் அனுமானித்துக் கொண்டான்.

 

பிலிப் கேட்டான். “அவர் உங்கள் ஆசிரியராக இருந்தவர் என்பதால் சந்தேகத்தின் பேரில் கடுமையாக விசாரிக்க முடியாமல் மரியாதை தடுத்திருக்கிறது என்று புரிகிறது. ஆனால் மகத மன்னர் எப்படி உங்கள் ஆசிரியரைத் தண்டிக்காமல் விட்டார்? ஒருவேளை அவருக்கும் இவர் தான் ஆசிரியரோ?”

 

ஆம்பி குமாரன் சொன்னான். “பிலிப். ஆச்சாரியர் விஷ்ணுகுப்தர் நான் கல்வி கற்ற காலத்தில் எனக்குக் கல்வி கற்றுக் கொடுக்க மறுத்து பாதியில் அங்கிருந்து அனுப்பி வைத்தவர். அதனால் அந்த ஆள் மீது எனக்கு எந்த மரியாதையும் துளியும் இல்லைஆனால் அவர் மீது நிரூபிக்க முடிந்த குற்றம் எதுவும் கூட இல்லை என்பதால் என்னால் எதையும் செய்ய முடியவில்லை.… .”

 

ஆம்பி குமாரனுக்குக் கல்வி கற்றுத் தர மறுத்தவர் என்றால் அவர் பைத்தியக் காரராய் இருக்க வாய்ப்பில்லை என்று பிலிப்புக்குத் தோன்ற ஆரம்பித்தது.

 

ஆம்பி குமாரன் தொடர்ந்து சொன்னான். ”… மகத மன்னர் என்னைப் போல் இளையவரும் அல்ல. இங்கே வந்து படித்தவரும் அல்ல. அவரிடம் இவர் சபதம் இடுமளவு அவர் இவரை அவமானப்படுத்தியிருக்கலாம். ஆனால் இவர் இங்கிருந்து அங்கே ஏன் போனார் என்று தெளிவாகத் தெரியவில்லை. புத்தி பேதலித்து விட்டதால் கூடப் போயிருக்கலாம். அறிஞர்களும், குழந்தைகளும் என்ன தான் அதிகப்பிரசங்கித் தனமாக நடந்து கொண்டாலும் அரசர்கள் அவர்களிடம் நிதானத்துடனேயே நடக்க வேண்டியிருக்கிறது. உங்கள் சக்கரவர்த்தி கூட இங்கே வனத்தில் தண்டராயசுவாமி அவரை அலட்சியப் படுத்தியதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது நினைவிருக்கலாம்….”

 

பிலிப் மெல்லச் சொன்னான். “அந்த ஆசிரியருக்குப் புத்தி பேதலித்திருக்கலாம். ஆனால் அவர் பல இடங்களுக்கு அனுப்பியிருக்கும் மாணவர்களுக்கும் பைத்தியம் பிடித்திருக்க வாய்ப்பில்லை அல்லவா? இதில் நமக்குப் புரியாதது என்னவோ இருக்கிறது ஆம்பி குமாரரே. எதற்கும் அவரை எப்போதும் நம் கண்காணிப்பிலேயே வைத்திருப்பது நல்லதென்று தோன்றுகிறது.”

 

ஆம்பி குமாரன் யோசனையுடன் சொன்னான். “நீங்கள் சொல்வது சரி தான். ஆனால் ஆச்சாரியர் இப்போது தட்சசீலத்தில் இல்லை. எங்கே போயிருக்கிறாரோ தெரியவில்லை.”  

 

(தொடரும்)

என்.கணேசன்





Monday, July 3, 2023

யோகி 3

 


யோகாலயத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கையில், கிருஷ்ணமூர்த்தியால் அமைதியாக இருக்க முடியவில்லை. மகள் உயிருக்கு ஆபத்து என்று பொழுது போகாத போக்கிரிப் பயல் எவனாவது தான்  மொட்டைக்கடிதம் எழுதியிருப்பான் என்று நம்ப முயன்றார். ஆனால் உண்மை என்ன என்பதைத் தெரிந்து கொள்ளும் வரை                                                 நிம்மதியாக இருக்க முடியாமல் தவித்த  அவர் வேகமாக யோகாலயத்தைச் சென்றடைந்தார்.

 

யோகாலயத்தின் பெரிய வெளிக்கதவு வருபவர்களுக்கெல்லாம் உடனடியாகத் திறந்து விடப்படுவதில்லை. நடந்து வருபவர்கள், இரு சக்கர வாகனத்தில் வருபவர்கள், ஆட்டோரிக்ஷாவில் வருபவர்கள், கால் டாக்ஸியில் வருபவர்கள், சாதாரண கார்களில் வருபவர்கள் ஆகியோரை வெளியிலேயே விசாரித்து வடிகட்டி தான் வெளிக்காவலாளி உள்ளே அனுப்புவார். ஆனால் விலையுயர்ந்த கார்களில் வருபவர்களுக்கு உடனடியாக வெளிக்கதவு திறக்கப்பட்டு விடும். முதல் வெளிக்கதவு தாண்டியவுடன் வரவேற்பறை, தியானம் யோகா ஆகியவற்றைக் கற்றுத் தரும் வகுப்பறைகள், கற்பவர்கள் தங்கும் அறைகள், சமையலறை மற்றும் சாப்பாட்டு அறை ஆகியவை இருந்தன. யோகாலயத்துக்கு வரும் பெரும்பாலானவர்கள் அதையும் தாண்டி உள்ளே போவது எளிதல்ல. அங்கே இருக்கும் பெரிய கதவு எப்போதும் மூடியே இருக்கும். ரோல்ஸ் ராய்ஸ் காரிலேயே வந்தாலும் அங்கு இருக்கும் காவலாளி உள்ளிருந்து அனுமதி கிடைக்காமல் அந்தக் கதவைத் திறப்பது கிடையாது. அந்த இரண்டாவது கதவையும் தாண்டி யோகாலயத்தை நிறுவியவரான யோகி பிரம்மானந்தா முதலான முக்கியஸ்தர்களும், மற்ற துறவிகளும் வசிக்கிறார்கள். அங்கே போகிறவர்கள் அதிகமாக, யோகி பிரம்மானந்தாவைச் சந்திக்கப் போகிறவர்களாகத் தான் இருப்பார்கள். அந்தப் பாக்கியம் மிகச்சிலருக்கே கிடைக்கும். மற்றவர்கள் வரவேற்பறையில் உள்ளவர்களைச் சந்தித்து, அவர்கள் தரும் பதில்களில் திருப்தியடைந்து, யோகாலயம் விற்கும் படங்கள் மற்றும் பொருள்கள் வாங்கிக் கொண்டு போய் விடவேண்டியது தான்.

 

கிருஷ்ணமூர்த்தி விலையுயர்ந்த காரில் வந்ததால் வெளிக் காவலாளியின் விசாரணக்குட்படாமல் வெளிக்கதவைத் தாண்டி காரை உள்ளே நிறுத்த முடிந்தது. அவர் காரிலிருந்து இறங்கி அவசர அவசரமாக அலுவலக- வரவேற்பறையை அடைந்தார். வரவேற்பறையில் இருந்த ஒரு இளம் துறவி அவரைக் கேள்விக்குறியுடன் பார்த்தார்.

 

கிருஷ்ணமூர்த்தி அமைதியாகப் பேச, கடும் முயற்சி எடுத்துக் கொண்டார். “இங்கே சன்னியாசினியாய் இருக்கற சைத்ராவோட அப்பா நான். நான் அவசரமாய் அவளைப் பார்த்து பேச வேண்டியிருக்குஎன்று சொல்லும் போது அவர் குரல் நடுங்குவதை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை.

 

மன்னிக்க வேண்டும் ஐயா. சன்னியாசம் வாங்கிய பிறகு, குடும்பத்தாரைப் பார்க்க இங்கே அனுமதி தருவதில்லை.” என்று அந்த இளம் துறவி பணிவாகச் சொன்னார்.

 

கிருஷ்ணமூர்த்தி சுற்றி வளைத்துப் பேசாமல் வெளிப்படையாகவே சொன்னார். “நான் அவளைப் பார்த்தேயாகணும். அவ உயிருக்கு இங்கே ஆபத்துன்னு எனக்கு ஒரு மொட்டைக் கடிதம் வந்திருக்கு. அப்படி எதுவும் இல்லை, அவ  நலமாய் பாதுகாப்பாய் தான் இருக்கான்னு எனக்குத் தெரிஞ்சா போதும்.”

 

ஒரு கணம் அந்த இளம் துறவி திகைத்தது தெரிந்தது. பின் சுதாரித்துக் கொண்டு அந்தத் துறவி சொன்னார். “பொழுது போகாத விஷமி யாராவது அதை எழுதி இருக்கலாம் ஐயா. இங்கே இருக்கற எல்லா சன்னியாசிகளும் நலமாய், பாதுகாப்பாய் தான் இருக்கிறோம். அதனால் நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை.”

 

இதை அவள் வாயாலயே கேட்டுட்டா நான் நிம்மதியாய் போயிடுவேன்கிருஷ்ணமூர்த்தி சொன்னார்.

 

அந்த இளம் துறவி தயக்கத்துடன் யோசித்து விட்டுச் சொன்னார். “நீங்கள் உட்காருங்கள் ஐயா. நான் கேட்டு விட்டுச் சொல்கிறேன்

 

கிருஷ்ணமூர்த்தி அங்கிருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்தார். அந்த இளம் துறவி இண்டர்காமில் மிக மெல்லிய குரலில் பேசினார். பேசிய பின் அவர் கிருஷ்ணமூர்த்தியைப் பார்ப்பதைத் தவிர்த்தார்.

 

இரண்டு நிமிடங்களில் ஒரு நடுத்தர வயதுத் துறவி வந்தார். அவர் கிருஷ்ணமூர்த்தியைப் பார்த்து கைகூப்பினார். கிருஷ்ணமூர்த்தியும் கைகூப்பினார்.  அந்தத் துறவி அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்து  அமைதியான குரலில் சொன்னார். “நமஸ்காரம். உங்கள் மகள் உயிருக்கு ஆபத்து இருக்கிறதாக உங்களுக்கு ஒரு மொட்டைக் கடிதம் வந்திருப்பதாகவும், அதில் நீங்கள் பயந்து போய் சுவாமினி சைத்ராவைப் பார்க்க வந்திருப்பதாகவும் கேள்விப்பட்டேன். எங்கள் ஆசிரமத்து வளர்ச்சியில் வயிற்றெரிச்சல் கொண்டவர்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்கள் ஏதாவது குழப்பத்தை ஏற்படுத்தி எங்களுடைய ஆன்மீகச் சேவையைத் தடுத்து நிறுத்தி விடலாம் என்று பார்க்கிறார்கள். அப்படிப்பட்ட யாரோ செய்திருக்கிற வேலையாய் தான் இது இருக்க வேண்டும். நீங்கள் அதைப் படித்து பதறி வந்திருப்பதில் தவறில்லை. ஆனால் சன்னியாசம் வாங்கிய பிறகு நாங்கள் யாரும் குடும்பத்தினரைச் சந்திக்க ஆசிரமம் அனுமதிப்பதில்லை. அப்படிச் சந்திக்க அனுமதிப்பது எங்கள் துறவறத்தை அர்த்தமில்லாததாக்கி விடும் என்பது தான் காரணம்...”

 

வரவேற்பு மேசைக்குப் பின் இருந்த இளம் துறவியைக் கைகாட்டி கிருஷ்ணமூர்த்தி சொன்னார். “இதைத் தான் அவரும் சொன்னார். நான் என் மகள் கிட்ட குடும்ப விஷயங்களையோ, கதையோ பேசப் போகிறதில்லை. அவள் நேர்ல வந்துஅந்த மொட்டைக் கடிதத்துல எழுதின மாதிரி ஆபத்துல நான் இல்லை. நலமாயிருக்கேன்னு சொல்லிட்டு போயிடட்டும். நானும் நிம்மதியாய் போயிடுவேன்...”

 

எத்தனை விளக்கிச் சொல்லியும் புரிந்து கொள்ளாமல் அடம் பிடிக்கிற சிறு குழந்தையைப் பெரியவர்கள் பார்ப்பது போல் அந்தத் துறவி அவரைப் பார்த்தார். “உங்களுக்கு நான் என்ன சொல்கிறேன் என்று புரியவில்லை.  துறவு, தியானம் என்று இறைவழி போகிற வாழ்க்கையில் ஆபத்துக்கு என்ன காரணம் இருக்க முடியும்?”

 

அவர் அப்படிச் சொல்லும் போது வரவேற்பறை வாசலில் இரண்டு ஆஜானுபாகுவான இளைஞர்கள் தெரிந்தார்கள். கிருஷ்ணமூர்த்தி ஏதாவது பிரச்சினை செய்தால் அவரை அப்புறப்படுத்த வந்தவர்கள் போல் அவர்கள் இருவரும் தெரிந்தார்கள். துறவு தியானம் என்று ஆன்மீக வாழ்க்கை வாழ்கிற ஆட்களாக அவர்கள் தெரியவில்லை. அவர்களைப் பார்த்தவுடன் கிருஷ்ணமூர்த்தியின் சந்தேகம் அதிகரித்தது.

 

இது போன்ற சமயங்களில் கீழ்மட்ட ஆட்களிடம் பேசுவதை விட தலைமைப் பொறுப்பில் இருப்பவரிடமே பேசுவது பலன் தருவதாக இருக்கும் என்று கிருஷ்ணமூர்த்திக்குத் தோன்றியது. அவர் சொன்னார். “வேணும்னா நான் ப்ரம்மானந்தா கிட்டயே பேசறேன்

 

கிருஷ்ணமூர்த்தி அப்படிச் சொன்னதை அந்தத் துறவி ரசிக்கவில்லை என்பது அவர் முகபாவனையில் தெரிந்தது. அவர் சொன்னார். “நீங்கள் ஒரு கோரிக்கையோடு ஒரு அரசாங்க அலுவலகத்துக்குப் போகிறீர்கள்.  அங்கேயிருக்கிற அதிகாரிஅரசு விதிப்படி அதற்கு அனுமதி தர முடியாதுஎன்று சொன்னால் நீங்கள் உடனேவேண்டுமானால் நான் முதலமைச்சரிடம் பேசுகிறேன்என்பது சரியாய் இருக்குமா?”

 

இது ஒரு அரசு அலுவலகம் போன்ற அமைப்பு, பிரம்மானந்தா மாநில முதலமைச்சருக்கு இணையானவர்என்ற வகை ஒப்பீட்டில் கோபம் அடைந்த கிருஷ்ணமூர்த்தி சொன்னார். “அந்த அரசாங்க அலுவலகத்துக்குள்ளே என் மகள் இருந்து, அந்த அதிகாரி முட்டாள்தனமான ஏதாவது விதிமுறையை காரணம் காட்டி, அவளை நான் சந்திக்க அனுமதிக்கலைன்னா, நான் அங்கே என்ன சொன்னாலும் அது தப்பாயிருக்காது. முதல்ல நான் சொல்றதைப் புரிஞ்சுக்க பாருங்க. என் மகள் உயிருக்கு ஆபத்துன்னு ஒரு மொட்டைக் கடிதம் வரலைன்னா, அவள் சன்னியாசியான பிறகும் நான் ஏன் இங்கே வரப்போறேன்?”

 

அந்தத் துறவி சொன்னார். “அந்த மொட்டைக் கடிதத்தைக் காட்ட முடியுமா?”

 

அதை நான் கொண்டு வரலை. அது வீட்ல இருக்கு.”

 

தேவையான ஒரு மிக முக்கிய ஆவணத்தை எடுத்துக் கொண்டு வராமல், பெரிய கோரிக்கையை முன் வைக்கிற நபரை ஒரு உயரதிகாரி பார்ப்பது போல், அந்தத் துறவி கிருஷ்ணமூர்த்தியைப் பார்த்தார். பின் ஒரு தீர்மானத்திற்கு வந்தவர் போல் எழுந்து நின்று சொன்னார். “இது விதிமுறைக்கு எதிரானது என்றாலும் உங்களுக்காக நான் சுவாமினி சைத்ராவிடம் நீங்கள் சொல்வதைச் சொல்றேன்... அவர் சம்மதித்தால் நீங்கள் அவருடன் பேசலாம்...”

 

கிருஷ்ணமூர்த்திக்கு அவர் சொன்னது பெரும் ஆறுதலாக இருந்தது. கோபம் தணிந்துநன்றி சுவாமிஜிஎன்றார்.

 

அந்தத் துறவி தலையசைத்து விட்டுச் சென்றார். ஆனால் வாசலில் இருந்த இரண்டு திடகாத்திரமான இளைஞர்களும் அங்கேயே நின்று கொண்டிருந்தார்கள்.

 

கிருஷ்ணமூர்த்திக்கு காத்திருக்கும் ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு யுகமாகக் கழிவது போல் இருந்தது. ரிசப்ஷனில் இருந்த இளம் துறவி, தப்பித் தவறியும் அவரைப் பார்த்து விடக்கூடாது என்று சங்கல்பம் எடுத்துக் கொண்டவர் போல் எதோ ஒரு ரிஜிஸ்டரைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

 

சிறிது நேரத்தில் அந்த நடுத்தரத் துறவி வந்தார். ஆனால் அவருடன் சைத்ரா இருக்கவில்லை. வந்தவர் அமரவில்லை. நின்று கொண்டே கிருஷ்ணமூர்த்தியிடம் சொன்னார். “சுவாமினி சைத்ரா ஆசிரம விதிமுறைக்கு புறம்பாக நடந்து கொள்ள விரும்பவில்லை. அவர் பரிபூரண பாதுகாப்போடு இங்கே இருப்பதாகவும், அதனால் கவலைப்படாமல் இருக்கும்படியும், உங்களிடம் தெரிவிக்கச் சொன்னார்.”

 

(தொடரும்)

என்.கணேசன்


தற்போது விற்பனையில்