மஸ்காவதி நகரத்தை மாளவத்தைப் போல பிரச்சினையான பகுதியாக யவனர்கள்
நினைக்கவில்லை என்பதால் அங்கே நகரக் காவலதிகாரி அதீத எச்சரிக்கை கொண்டவனாக இருக்கவில்லை. அந்த நகருக்குள் நுழைந்த சாணக்கியர் மீது அவனுக்குச் சந்தேகம்
எழவில்லை. தனியாக வந்த அந்த அந்தணர் அவன் பார்வைக்கு ஒரு சாதாரண யாத்திரீகராகவே
தோன்றினார். விசாரித்த போது அவரும் தீர்த்த யாத்திரைக்குக் கிளம்பியிருக்கும்
தட்சசீல வாசியாகவே தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
“நீங்கள்
இங்கே வந்திருக்கும் காரணம்?”
“என் நண்பரின்
உறவினர் இங்கே வசிக்கிறார். யாத்திரை போகும் வழியில் அவரை நலம் விசாரித்துக் கொண்டு வரும்படி
என் நண்பர் சொன்னதால் வந்திருக்கிறேன்”
“உங்கள்
நண்பரின் உறவினர் பெயர்?”
“சாரகன்”
அதற்கு மேல் கேள்விகள் எதுவும் அவரிடம்
அவன் கேட்கவில்லை. சாணக்கியர் அமைதியாக நகரத்தினுள் பிரவேசித்தார். வீதிகளில்
தெரிந்த மக்கள் அமைதியாகத் தெரிந்தார்கள். யவன வீரர்களும், மஸ்காவதி
வீரர்களும் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட சரிசமமாகவே தெரிந்தாலும் அவர் பார்வைக்கு இரு
படைவீரர்களிடையே நிறைய வேற்றுமைகள் தெரிந்தன. இன்னும்
மஸ்காவதி வீரர்களால் யவன வீரர்களுடன் இயல்பாகக் கலந்துறவாட முடியாதது தெளிவாகவே தெரிந்தது. வழியில்
மாடு மேய்த்துக் கொண்டு வந்த ஒரு இளைஞனிடம் சாரகனின் வீடு எங்கிருக்கிறது என்று விசாரித்துத் தெரிந்து
கொண்டு சாணக்கியர் சாரகனின் வீட்டை அடைந்தார். சில மாதங்களுக்கு
முன்பு வரை சாரகன் கொல்லனாக இருந்ததன் அறிகுறியாக பழைய பட்டறை ஒன்று வீட்டின் முன்புறம்
இருந்தது.
வீட்டின் வெளியே வெறித்த பார்வை பார்த்தபடி
அமர்ந்திருந்த கிழவர் தான் சாரகனாக இருக்க வேண்டும் என்று சாணக்கியர் யூகித்தார். ஆனால் தன்
வீட்டின் முன் வந்து நிற்கும் அந்தணர் வழி தவறி அங்கே வந்து விட்டதாகவே சாரகன் நினைத்தது
போலிருந்தது. அதனால் சாணக்கியர் தவறான இடத்திற்கு வந்து விட்டதை உணர்ந்து
தானாகவே அங்கிருந்து போய் விடுவார் என்று எதிர்பார்த்தது போல் சாரகன் சலனமில்லாமல்
அமர்ந்திருந்தார்.
ஆனால் சாணக்கியர் அப்படிப் போய் விடாமல்
வணக்கம் தெரிவித்து முன்னாலேயே நின்ற போது தன்னைத் தேடி தான் வந்திருக்கிறார் என்பது
உறுதியாகி சாரகன் மெல்லத் தளர்ச்சியுடன் எழுந்து நின்றார்.
சாணக்கியர் கைகளைக் கூப்பியபடி சொன்னார். “நான் விஷ்ணுகுப்தன். தட்சசீலத்திலிருந்து
வருகிறேன்.”
சாரகனும் இரு கைகளையும் கூப்பி வணங்கினார். ஆனால் எந்த
வார்த்தைகளும் அவர் வாயிலிருந்து வெளிவரவில்லை.
சாணக்கியர் சொன்னார். “உள்ளே சென்று
பேசுவோமா?”
சாரகன் அதை எதிர்பார்க்காதது போலிருந்தது. அவர் மெல்லச்
சொன்னார். “பல அந்தணர்கள் எங்கள் வீட்டிற்குள்ளே வருவதில்லை. அதனால்
தான் தங்களை உள்ளே அழைக்கவில்லை. மன்னிக்கவும்.”
சாணக்கியர் சொன்னார். “என் தாய்
மண்ணில் நான் மிதிக்கக்கூடாத இடமென்று எதையும் நினைப்பதில்லை.”
சாரகன் “வாருங்கள்
அந்தணரே” என்று சொன்னபடி தளர்ச்சியுடன் வீட்டுக்குள் நுழைந்தார். சாணக்கியர் அவரைப் பின் தொடர்ந்து
வீட்டுக்குள் சென்றார். வீட்டிற்குள் பொருட்கள் எல்லாம் அங்கங்கேயே விழுந்து கிடந்தன. கிழவர் பொருட்களை ஒழுங்கிபடுத்தி வைக்கும் சிரமத்தை மேற்கொள்ளவில்லை என்பது
தெரிந்தது. சாணக்கியரின் பார்வை வீட்டை ஒரு முறை அலசியதைக் கவனித்த
சாரகன் வரண்ட குரலில் சொன்னார். ”ஒரு காலத்தில் நேசிக்கும் ஆட்கள்
வீட்டிலும், வாழ்க்கையிலும் இருந்ததால் எல்லாமே ஒழுங்காக இருந்தன.
இப்போது ஆட்களும் இல்லை. அர்த்தமும் இல்லை,
ஒழுங்கும் இல்லை….”
சொல்லி விட்டு,
பாய் எங்கே இருக்கிறது என்று அவர் ஒரு கணம் யோசித்தது போல் இருந்தது.
அவர் கண்கள் மந்தமாக அங்குமிங்கும் பார்த்துக் கடைசியில் வீட்டின் ஒரு
மூலையில் சாத்தி வைக்கப்பட்டிருந்த பாயைக் கண்டுபிடித்தன. அந்தப்
பாயைத் தரையில் விரித்து ”அமருங்கள் அந்தணரே” என்றார்.
சாணக்கியர் அந்தப் பாயில் அமர்ந்தார்.
சாரகன் அவர் எதிரே தரையில் இருந்த இரண்டு மண்பாண்டங்களை ஒதுக்கி
வைத்து விட்டு அமர்ந்தபடி மெல்லக் கேட்டார். “தாங்கள் என்ன விஷயமாக
என்னைக் காண வந்திருக்கிறீர்கள் என்பதை நான் அறிந்து கொள்ளலாமா?”
சாணக்கியர் சொன்னார். “எனக்கு நிறைய ஆயுதங்கள்
வேண்டியிருக்கின்றன. இந்தப் பிரதேசத்திலேயே உங்களை விடச் சிறப்பாய்
ஆயுதங்கள் செய்பவர் யாரும் இல்லை என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்….”
சாரகன் ஒரு கணம் கண்களை மூடியிருந்து விட்டுச்
சொன்னார். “நான்
தொழிலை நிறுத்தி பல மாதங்களாகி விட்டது. மூச்சு நிற்பதற்காக இந்த
வீட்டில் தன்னந்தனியாகக் காத்திருக்கிறேன் அந்தணரே. மஸ்காவதி
படையில் வீரர்களாக இருந்த என் இரண்டு பிள்ளைகளும் யவன வீரர்களால் அநியாயமாகக் கொல்லப்பட்டார்கள்.
அலெக்ஸாண்டர் அவன் படையில் சேர விருப்பமில்லாத வீரர்கள் ஆயுதங்களை ஒப்படைத்து
விட்டு இங்கிருந்து சென்று விடலாம் என்று எங்கள் அரசியிடம் அனுமதி அளித்தான்.
அவன் வார்த்தைகளை நம்பி நிறைய வீரர்கள் வெளியேறினார்கள். வெளியேறிய வீரர்களில் என் மகன்களும் இருந்தார்கள். பின்னாலேயே
போய் யவனப்படை நிராயுதபாணிகளாய் இருந்த அவர்களைக் கொன்று குவிக்கும் என்று அவர்கள்
கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். உலகாள வந்தவனாக தன்னை உயர்த்திச்
சொல்லும் அவன் தன் வாக்கைக் காப்பாற்றாத நீச்சனாக இருப்பான் என்று அவர்களுக்குச் சந்தேகமும்
வந்திருக்காது. ஆனால் அப்படியே நடந்தது அந்தணரே. என் மகன்கள் இறந்து போனார்கள். நான் இன்னும் இருக்கிறேன்…..
அவர்கள் உயிரை எடுத்துக் கொண்ட இறைவன் என் உயிரையும் அப்போதே எடுத்துக்
கொள்ளாமல் ஏன் இன்னும் விட்டு வைத்திருக்கிறான் என்று இறைவனிடம் நான் கேட்காத நாளில்லை.
இறைவன் ஏனோ மௌனமாகவே இருக்கிறான்….” சொல்லும் போது
அவர் கண்கள் கலங்கின. குரல் தழுதழுத்தது.
சாணக்கியர் அமைதியாகச் சொன்னர். “உங்களுக்குப் பதிலளிக்கத்
தான் இறைவன் என்னை இங்கே அனுப்பி வைத்திருக்கிறான், சாரகரே”
சாரகன் முகத்தில்
திகைப்பு தெரிந்தது. அவர் சாணக்கியரைக் கூர்ந்து பார்த்தார். சாணக்கியர்
முகத்தில் கேலி செய்யும் அறிகுறி எதுவும் தெரியவில்லை. இந்த மனிதர் சித்தரோ? இறைவனின்
தூதுவரோ?
சாணக்கியர் அமைதியாகச்
சொன்னார். “உங்கள் உயிரையும் அப்போதே இறைவன் எடுத்து விட்டிருந்தால்
உங்கள் மகன்களின் உயிரைப் பறித்த யவனர்களை யார் பழி வாங்குவார்கள் சாரகரே. பழி வாங்கிக்
கணக்கைத் தீர்க்கத் தான் உங்களை இறைவன் வாழ வைத்திருக்கிறான் சாரகரே”
சாரகன் முகத்தில்
ஒரு மின்னல் வெட்டி மறுபடியும் இருள் சூழ்ந்தது. அவர் சோகமாகச் சொன்னார். “மகன்கள்
உயிரோடு இருந்த காலத்தில் தனியாக நின்று இரண்டு மூன்று வீரர்களையாவது வீழ்த்தும் திராணி
இந்த உடலுக்கு இருந்தது அந்தணரே. ஆனால் என் பிள்ளைகளுடன் அனைத்துப் பலத்தையும் நான் இழந்து
விட்டேன். இப்போது ஒரு வீரனைச் சமாளிக்கும் பலம் கூட இல்லாத நான் யவனர்களைப்
பழி வாங்குவதென்பது முடியாத காரியம்….”
சாணக்கியர் சொன்னார். “தனியாக
நின்று நீங்கள் யவனர்களுடன் போரிட வேண்டியதில்லை சாரங்கரே. அதற்காக
எத்தனையோ வீரர்கள் தயாராக இருக்கிறார்கள். அவர்கள்
யவனர்களுடன் போரிட அவர்களுக்கு நீங்கள் ஆயுதங்கள் செய்து கொடுத்தால் போதும்….”
சாரங்கனிடம் தெரிந்த
சோகம், விரக்தி, மந்தத் தன்மை எல்லாம்
ஒரு கணம் விடைபெற்றன. அவர் தீர்க்கமாகக் கேட்டார். “நீங்கள்
யார் அந்தணரே. நான் பல தேசங்களுக்கு ஆயுதங்கள் தயாரித்துத் தந்திருக்கிறேன். பல அரசர்கள், சேனாதிபதிகள், படைத்தளபதிகள்
தங்களுக்காகப் பிரத்தியேகமாக ஆயுதங்கள் என்னிடமிருந்து வாங்கிக் கொண்டு போயிருக்கிறார்கள். ஆனால் இது
வரை எந்த அந்தணரும் இந்தக் கோரிக்கையோடு என்னிடம் வந்ததில்லை….”
சாணக்கியர் சொன்னார். “இந்தப்
புனிதமான பாரத மண்ணின் புத்திரன் நான். யவனர்கள் என் தாய்
மண்ணை ஆக்கிரமிப்பது கண்டு பொறுக்க முடியாத ஒரு சாதாரண அந்தணன். இந்தத்
தேசத்தின் மிகப்பெரிய சாபக்கேடு பிரிவினை தான் சாரகரே. நீங்கள்
மஸ்காவதியை உங்கள் தாய்நாடாக நினைக்கிறீர்கள். உங்கள்
சிந்தனை அதைத் தாண்டி பாரதத்தைத் தாயகமாக நினைக்க அனுமதிக்கவில்லை. இப்படி
ஒவ்வொருவரும் சிறு துண்டு நிலங்களைத் தங்கள் தாய்நாடாக நினைக்கிறார்கள். அதைத் தாண்டி
அவர்கள் சிந்தனைகள் செல்வதில்லை. இந்தக்
குறுகிய சிந்தனையால் நாம் சிறு சிறு பிரிவுகளாய் பிரிந்து பலவீனமாக நிற்பதால் தான்
அலெக்ஸாண்டர் இந்த மண்ணில் காலடி வைக்கவும், சிறு சிறு
பகுதிகளாக ஆக்கிரமித்துக் கொண்டே போகவும் முடிந்தது. ஒட்டு மொத்த
பாரதமாக வலிமையோடு சேர்ந்து எதிர்த்திருந்தால் அலெக்ஸாண்டர் இங்கே வந்திருக்க முடியாது. நாம் தனித்தனியாகப்
போராடித் தோற்கிறோம். தனித்தனியாக எல்லாவற்றையும் இழக்கிறோம். தனித்தனியாக
துக்கத்தில் மூழ்குகிறோம். ஆனால் ஒன்றாகச் சேர்ந்து நின்றால் தோல்விக்கும், இழப்பிற்கும், துக்கத்திற்கும்
வாய்ப்பே இருக்காது. இந்தப்
பாடத்தை இப்போதாவது கற்றுக் கொண்டால் நாம் யவனர்களை இந்த மண்ணிலிருந்து துரத்த முடியும்….”
சாணக்கியர் நீண்ட
நேரம் பேசினார். நிறைய விஷயங்கள் பேசினார். அவர் பேசிய
நிறைய விஷயங்கள் சாரகனுக்குப் புரியவில்லை. ஆனால் யவனர்களுக்கு
எதிராக ஒரு பேரியக்கம் தயாராகிக் கொண்டிருக்கின்றது என்ற செய்தி அழுத்தந்திருத்தமாகப்
புரிந்தது. அந்த இயக்கம் யவனர்களோடு போர் புரிய சாணக்கியர் ஆயுதங்கள்
செய்து தரக் கேட்கிறார் என்பது புரிந்தது. அவர் உருவாக்கித் தரும் ஒவ்வொரு ஆயுதமும், அவர் மகன்களைக்
கொன்ற யவனரை வீழ்த்தவும், துரத்தவும் பயன்படும் என்பதும் புரிந்தது. அதன் பிறகு
வேறு எதுவும் புரிய வேண்டியதில்லை என்று நினைத்தார் அவர். சாரகனின்
சோர்வான உடலில் சக்தியும், சோகமான மனதில் உற்சாகமும் தானாகப் பெருக்கெடுக்க ஆரம்பித்தது….
(தொடரும்)
என்.கணேசன்
சாரகனைப் போன்ற தனியாக வாழும் பெரியவர் வீட்டிற்கு சென்று அனுபவம் எனக்கு உள்ளது... அங்குள்ள சூழல் மற்றும் அமைப்பு அனைத்தும் அப்படியே சரியாக உள்ளது...ஐயா அவர்களின் எழுத்து அற்புதம்.....
ReplyDeleteThanks for sharing this blog.
ReplyDeleteInstagram Marketing Strategies: Build Your Brand and Engage Your Audience
Strategies for Using Influencer Marketing in Engineering College Marketing
"How QR Codes Can Boost Your Business "
From Zero to Social Media Hero: A Step-by-Step Guide to Launching Your Career