ஆம்பி குமாரன் இந்தக் கேள்வியின் போக்கை வெறுத்தான். இது அவனுடைய
தேசம். அவன் என்ன செய்ய வேண்டும், என்ன செய்திருக்கிறான் என்பதெல்லாம் அடுத்தவர்களுக்குத்
தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. அலெக்ஸாண்டரிடம் நட்புக்கரம் நீட்டிய காரணத்தாலும்,
அலெக்ஸாண்டர் அவனை விட மேலானவனும் உலகாளப் பிறந்தவனுமான சக்கரவர்த்தி என்பதாலும் அலெக்ஸாண்டர்
இப்படி விசாரித்திருந்தாலும் அவன் விடை சொல்லக் கடமைப்பட்டவன் என்று எடுத்துக் கொள்ளலாம்.
ஆனால் அலெக்ஸாண்டரிடம் சேவகம் செய்யும் சேவகன் அவனால் சத்ரப் ஆக நியமிக்கப்பட்ட காரணத்தாலேயே
ஆம்பி குமாரனிடம் கேள்விகள் கேட்க அதிகாரம் படைத்தவனாகி விடமுடியாது. இப்படியெல்லாம்
கேட்டு உள்மனம் கொதித்தாலும் அதை வெளியே கொட்டி எதிர்ப்பு தெரிவிக்க முடியாதவனாய் ஆம்பி
குமாரன் சொன்னான். ”காந்தாரத்தின் ஒற்றர்களில் பாதி பேர் தங்களால் மற்ற வேலைகளில் ஈடுபடுத்த
எடுத்துக்கொள்ளப்பட்ட பின்பு மீதமிருக்கும் ஒற்றர்களை வைத்து அனைத்தையும் விரைவில்
செய்து விட முடியாத நிலை இருக்கிறது. இருப்பவர்களை வைத்துக் கொண்டு முடிந்த வரை முயற்சி
செய்து வருகிறேன்”
பிலிப் அவனை மரியாதையில்லாத
ஒரு பார்வை பார்த்தான். ஆம்பி குமாரன் பொறுமையாக அமைதியாக அமர்ந்திருக்கக் கடுமையான
முயற்சியை மேற்கொள்ள வேண்டியிருந்தது.
பிலிப் அவனாகப்
புரிந்து கொள்வான் என்று எதிர்பார்த்துக் காத்திருந்து விட்டுச் சொன்னான். “ஆயுதக்கிடங்கில்
இருந்து ஆயுதங்கள் களவு போயிருக்கின்றன என்றால் காவலுக்கு நிறுத்தியிருந்த காவலாளிகளை
விசாரிக்கிற முறையில் விசாரித்தால் உண்மை தெரிந்து விடப் போகிறது. அதை விட்டு விட்டு
ஒற்றர்கள் மூலமாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தாங்கள் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது
ஆம்பி குமாரரே”
ஆம்பி குமாரன் சொன்னான்.
“காந்தார ஒற்றர்கள் மட்டுமல்லாமல் படைவீரர்கள், காவல் வீரர்கள் கூட ஏராளமாக மற்ற வேலைகளுக்கு
எடுத்துக் கொள்ளப்பட்டிருப்பதால் இங்கு மீதமிருக்கும் ஆட்கள் எல்லாப் பிரிவுகளிலும்
குறைவு. ஆயுதக்கிடங்கு பாதுகாப்பான கட்டிடத்தில் பெரிய சங்கிலிகளுடன் கூடிய பூட்டினால்
பூட்டப்பட்டிருப்பதால் அதற்கு காவல் வீரர்களை சில சமயங்களில் நிறுத்துவதில்லை. மேலும்
இது வரை இப்படி ஆயுதங்கள் திருட்டுப் போனதுமில்லை...”
பிலிப் தனக்குள்
எழுந்த கோபத்தைக் கட்டுப்படுத்தியவனாய் பெருமூச்சு விட்டான். ‘நீங்கள் எங்கள் ஆட்களை
அழைத்துப் போய் விட்டீர்கள். மீதம் இருப்பவர்களை வைத்துக் கொண்டு என்னால் என்ன தான்
செய்துவிட முடியும்?’ என்கிற வகையில் கேட்பவனிடம் என்ன தான் பேசுவது? இவனிடம்
ஆள் போதாமை பற்றிப் பேசுவது காலத்தை வீணடிப்பது தான்….
பிலிப்
கேட்டான். “உங்கள் கல்விக்கூடத்தின் மாணவர்கள் தொலைதூர தேசங்களிலும் பல இடங்களில் நடமாடுகிறார்கள்.
கேட்டால் கல்விக்கூடத்தில் ஆட்சேர்ப்பு நடக்கவிருப்பது குறித்துப் பேச வந்திருக்கிறோம்
என்கிறார்கள். எல்லா இடங்களிலும் முக்கியஸ்தர்களிடம் பேசுகிறார்கள். இதெல்லாம் இங்கு
எப்போதும் நடக்கும் நடைமுறை தானா?”
ஆம்பி
குமாரன் முகம் சுளித்தபடி சொன்னான். “அப்படியெல்லாம் இல்லை. இங்கே கல்வி கற்க சேர்த்துக்
கொள்வதே ஒரு கௌரவமான விஷயம் என்று எடுத்துக் கொள்ளப்படுகிறது. வரும் எல்லோரையும் அவர்கள்
சேர்த்துக் கொள்வதுமில்லை. அதனால் இந்த அறிவித்தல் வேலைக்கு அவசியமே இல்லை. இருந்தும்
இந்த முறை விசித்திரமாக இப்படி எல்லாம் நடந்து வருவது ஆச்சரியமாகத் தான் இருக்கிறது….”
சொன்னவன்
தீவிர யோசனையில் ஆழ்ந்தான். என்ன நடக்கிறது? இங்குள்ள மாணவர்கள் அங்கெல்லாம் எதற்குப்
போக வேண்டும்? ஆச்சாரியரும் இப்போது இங்கில்லை. அவர் எங்கு போயிருக்கிறாரோ தெரியவில்லை.
“இந்த
ஆயுதத்திருட்டில் அவர்கள் பங்கு இருக்க வாய்ப்பு இருக்கிறதா?” பிலிப் சந்தேகத்துடன்
கேட்டான்.
“அதற்கு சாதாரணமாக அவர்களுக்கு அவசியம் இல்லை. ஏனென்றால்
அவர்களுக்கு ஆயுதப்பயிற்சியும் உண்டு என்றாலும் அதற்கு வேண்டிய ஆயுதங்கள் அவர்களிடம்
தாராளமாக இருக்கின்றன. ஆனால் அவசியம் இல்லாமல் வேறுபல தொலைதூரப்
பகுதிகளிலும் அவர்கள்
சுற்றுகிறார்கள் என்று நீங்கள் சொல்லும் போது எனக்கு அவர்கள் மீது சந்தேகமும் எழத்
தான் செய்கிறது. ஏனென்றால் இங்கேயும் அவர்கள் அகால நேரங்களில் நடமாடுகிறார்கள். குற்றம்
செய்வதற்கான தடயங்களோ, சந்தேகப் படுவதற்கான வலுவான காரணங்களோ இல்லை என்பதால் தடுக்கவோ
தண்டிக்கவோ வழியில்லை.”
பிலிப் சந்தேகத்துடன் சொன்னான். “பொதுவாக மாணவர்கள் தானாக
இது போன்ற வேலைகளில் ஈடுபடுவதில்லை. அவர்களை யாரோ இயக்கிக் கொண்டிருக்கிறார்கள்
என்று நான் நினைக்கிறேன். அது யாரென்ற யூகம் ஏதாவது இருக்கிறதா
ஆம்பி குமாரரே?”
“அவர்களுக்கு விஷ்ணுகுப்தர் என்று ஒரு ஆசிரியர் இருக்கிறார். அவர் எனக்கும் முன்பு ஆசிரியராக இருந்தவர். அவர் சிறந்த
அறிவாளி என்றாலும் ஒரு பிரச்சினையான நபர். மிகுந்த கர்வம் பிடித்தவர்.
யாரையும் மதிக்க மாட்டார். மாணவர்களின் நடவடிக்கைகளுக்குப்
பின்னணியில் நிச்சயம் அவர் தான் இருப்பார் என்று நான் நம்புகிறேன்.”
“அவருடைய நோக்கம் தான் என்ன ஆம்பி குமாரரே?”
”அது எனக்குத் தெரியவில்லை பிலிப்.” சொல்கையில் ஆம்பி
குமாரனின் குரல் தாழ்ந்தது. முன்பாவது யவனர்களுக்கு எதிராக தட்சசீலத்தில்
அவர் புரட்சி செய்யக் கூடும் என்ற சந்தேகமாவது அவனுக்கு இருந்தது. தொலைதூரப் பிரதேசங்களிலும் அவரது மாணவர்கள் உலாவுகிறார்கள் என்று தெரிய வந்த
பின் அந்தச் சந்தேகத்திற்கு அர்த்தமில்லை என்று தோன்றியது. எல்லா
இடங்களிலும் அவரால் புரட்சி செய்ய முடியாது. அறிவும் யோசிப்பதும் அதிகமாகி அவர்
புத்தி பேதலித்திருக்கிறது என்றே அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. அவன் சொன்னான். “அவருக்குப் புத்தி பேதலித்து விட்டது
என்று நினைக்கிறேன். அவருடைய நடவடிக்கைகள் எல்லாம் அதைத்தான்
தெரிவிக்கின்றன சில காலத்திற்கு முன்பு அவர் மகதம் சென்று மகத மன்னனை ஆட்சியிலிருந்து
இறக்கி விடுவேன் என்று சபதம் செய்து விட்டு வந்திருக்கிறார் என்றும் கேள்விப்பட்டேன்”
பிலிப் கேட்டான்.
“மகதம் என்று நீங்கள் சொல்வது சக்கரவர்த்தி வெல்ல உத்தேசித்திருந்த பூமியையா,
இல்லை அதே பெயரில் சிறுபகுதி அருகில் எங்காவது இருக்கிறதா?”
“சக்கரவர்த்தி உத்தேசித்திருந்த அதே பகுதி தான் பிலிப்….”
பிலிப் திகைத்தான்.
நிஜமாகவே ஆம்பி குமாரனின் ஆசிரியருக்குப் புத்தி பேதலித்துத் தான் போயிருக்க
வேண்டும். ஆம்பி குமாரனைப்
போன்ற பல மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து சலித்ததால் அவருக்குப் புத்தி பேதலித்திருக்கலாம்
என்று நினைத்து மெலிதாய் அவன் புன்னகைத்தான்.
ஆம்பி குமாரனுக்கு பிலிப் மனதில் ஓடிய எண்ணங்கள் தெரிய வராததால்
அவனும் புன்னகைத்தான். தூரத்திலிருக்கும்
ஒரு வலிமையான பரந்த தேசத்தின் மன்னனிடமே இங்கிருந்து சென்ற ஒரு ஆசிரியன்
சவால் விட்டிருப்பது பைத்தியத்தால் தானிருக்க வேண்டும் என்று எண்ணி பிலிப் புன்னகைப்பதாக
அவன் அனுமானித்துக் கொண்டான்.
பிலிப் கேட்டான்.
“அவர் உங்கள் ஆசிரியராக இருந்தவர் என்பதால் சந்தேகத்தின் பேரில் கடுமையாக விசாரிக்க
முடியாமல் மரியாதை தடுத்திருக்கிறது என்று புரிகிறது. ஆனால் மகத மன்னர் எப்படி உங்கள் ஆசிரியரைத் தண்டிக்காமல் விட்டார்?
ஒருவேளை அவருக்கும் இவர் தான் ஆசிரியரோ?”
ஆம்பி குமாரன் சொன்னான். “பிலிப். ஆச்சாரியர் விஷ்ணுகுப்தர்
நான் கல்வி கற்ற காலத்தில் எனக்குக் கல்வி கற்றுக் கொடுக்க மறுத்து பாதியில்
அங்கிருந்து அனுப்பி வைத்தவர். அதனால் அந்த ஆள்
மீது எனக்கு எந்த மரியாதையும் துளியும் இல்லை… ஆனால் அவர் மீது
நிரூபிக்க முடிந்த குற்றம் எதுவும் கூட இல்லை என்பதால் என்னால் எதையும் செய்ய முடியவில்லை.…
.”
ஆம்பி குமாரனுக்குக் கல்வி கற்றுத் தர மறுத்தவர் என்றால் அவர்
பைத்தியக் காரராய் இருக்க வாய்ப்பில்லை என்று பிலிப்புக்குத் தோன்ற ஆரம்பித்தது.
ஆம்பி குமாரன் தொடர்ந்து சொன்னான். ”… மகத மன்னர் என்னைப் போல்
இளையவரும் அல்ல. இங்கே வந்து படித்தவரும் அல்ல. அவரிடம் இவர் சபதம் இடுமளவு அவர் இவரை அவமானப்படுத்தியிருக்கலாம். ஆனால் இவர் இங்கிருந்து அங்கே ஏன் போனார் என்று தெளிவாகத் தெரியவில்லை.
புத்தி பேதலித்து விட்டதால் கூடப் போயிருக்கலாம். அறிஞர்களும், குழந்தைகளும் என்ன தான் அதிகப்பிரசங்கித்
தனமாக நடந்து கொண்டாலும் அரசர்கள் அவர்களிடம் நிதானத்துடனேயே நடக்க வேண்டியிருக்கிறது.
உங்கள் சக்கரவர்த்தி கூட இங்கே வனத்தில் தண்டராயசுவாமி அவரை அலட்சியப்
படுத்தியதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது நினைவிருக்கலாம்….”
பிலிப் மெல்லச் சொன்னான். “அந்த ஆசிரியருக்குப் புத்தி பேதலித்திருக்கலாம்.
ஆனால் அவர் பல இடங்களுக்கு அனுப்பியிருக்கும் மாணவர்களுக்கும் பைத்தியம்
பிடித்திருக்க வாய்ப்பில்லை அல்லவா? இதில் நமக்குப் புரியாதது
என்னவோ இருக்கிறது ஆம்பி குமாரரே. எதற்கும் அவரை எப்போதும் நம்
கண்காணிப்பிலேயே வைத்திருப்பது நல்லதென்று தோன்றுகிறது.”
ஆம்பி குமாரன் யோசனையுடன் சொன்னான். “நீங்கள் சொல்வது சரி தான்.
ஆனால் ஆச்சாரியர் இப்போது தட்சசீலத்தில் இல்லை. எங்கே போயிருக்கிறாரோ தெரியவில்லை.”
(தொடரும்)
என்.கணேசன்
விஸ்ணுகுப்தரின் திட்டத்தை இவர்கள் கண்டறிவதற்குள்.... பல இடங்களில் இவர் திட்டம் நிறைவேற ஆரம்பித்திருக்கும்....
ReplyDelete