தன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.
Monday, January 16, 2023
யாரோ ஒருவன்? 121
Thursday, January 12, 2023
சாணக்கியன் 39
கேகய நாட்டுக்கு அலெக்ஸாண்டர் அனுப்பிய தூதன் திரும்பி வந்து சொன்ன செய்தி ஆம்பி குமாரனின் காதுகளில் தேனாய் பாய்ந்தது. இந்தப் பதிலைக் கேட்டு அலெக்ஸாண்டர் கடுங்கோபம் அடைவான் என்று அவன் எதிர்பார்த்து ஏமாந்து போனான். கோபத்திற்கு மாறாக அலெக்ஸாண்டர் முகத்தில் சிறிய புன்முறுவல் பூத்தது. இந்தப் பதில் அலெக்ஸாண்டர் எதிர்பார்த்திருந்தது தான். முன்பே காஷ்மீரம், சிந்து, மல்லையநாடு போன்ற பகுதிகளை எல்லாம் வென்று மலைகளை வென்ற அரசன் என்று பொருள்படும் பர்வதேஸ்வரன் என்ற பெயரைப் பெற்றிருந்த புருஷோத்தமன், அவன் தூதனுப்பிய உடனே பணிந்து வருவான் என்று எதிர்பார்த்திருக்கவில்லை…
அவனையே பார்த்துக் கொண்டிருந்த ஆம்பி
குமாரன் சொன்னான். “நான் முன்பே சொன்னேனல்லவா நண்பா. புருஷோத்தமன்
அகம்பாவம் பிடித்தவன். எப்படி பதில் அனுப்பியிருக்கிறான் பார்த்தாயா? அவன் பதில்
உனக்குக் கோபமூட்டாமல் இருப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது… நாம் அவனுக்குச்
சரியான பாடத்தைக் கற்பிக்க வேண்டும்…”
அலெக்ஸாண்டர் புன்னகையுடன் சொன்னான். “மாசிடோனியாவில்
இருந்து இங்கு வந்து சேரும் வரை எத்தனையோ பேர் என்னை எதிர்த்திருக்கிறார்கள். அதனால்
எனக்கு எதிர்ப்பு புதியதல்ல. எதிர்த்தவர்கள் மீதெல்லாம் நான் கோபம் கொள்ள வேண்டுமானால்
என் மனநிலையை நான் கெடுத்துக் கொண்டு கஷ்டப்படுவது போலாகி விடும். மேலும், எதிர்த்தவர்கள்
மீது கோபம் கொள்வது எனக்கு கால விரயமாகவே தோன்றுகிறது. எதிர்த்தவர்களுக்குப்
பாடம் கற்பிப்பதும் என் வேலையல்ல. என் வேலை அவர்களை வெல்வது மட்டுமே. புருஷோத்தமனையும் நாம் வெல்வோம். அதற்கு
அதிகமாக அவனுக்கு என் மனதில் நான் ஏன் அதிக இடம் தர வேண்டும்?”
ஆம்பி குமாரன் என்ன சொல்வதென்று தெரியாமல்
திகைத்தான். அவனுக்கு இது போன்ற சிந்தனைகள் புதிது. எதிர்ப்பவர்கள்
மீது கோபமும், பாடம் புகட்ட வேண்டும் என்ற வெறியும் அவனுக்கு எப்போதும்
இயல்பாகவே இருந்திருக்கிறது. அதிலும் புருஷோத்தமன் மீது அவனுக்கு ஆரம்பத்திலிருந்தே இந்த
உணர்வு அதிகமாக இருந்திருக்கிறது. அதனால் அலெக்ஸாண்டர் மனநிலை அவனுக்குப் புதிராக இருந்தது. நேற்றும் தண்டராய
சுவாமி மேல் கோபமாக அலெக்ஸாண்டர் போன போது அந்தத் துறவியைக் கொன்று விட்டு தான் வருவான்
என்று ஆம்பி குமாரன் எதிர்பார்த்திருந்தான். ஆனால் நேற்று
அந்தத் துறவியைக் கொல்லாமல் அந்த ஆளிடம் நிறைய நேரம் பேசி விட்டு அலெக்ஸாண்டர் வந்ததும்
அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. மேலும் நேற்று வந்த பின்பு யாரிடமும் பேசாமல் தனிமையில் நீண்ட
நேரம் அலெக்ஸாண்டர் கழித்ததும் அவனுக்கு வித்தியாசமாகத் தெரிந்தது. சசிகுப்தனிடம்
பேசிய போது ஞானிகளிடம் நீண்ட நேரம் பேசி விட்டு வந்தாலோ, ஞான சிந்தனைகளில்
ஆழமாக யோசிக்க ஆரம்பித்தாலோ அலெக்ஸாண்டர் அப்படித் தான் தனிமையில் சிந்தனையில் ஆழ்வான்
என்று சொன்னான். ஞானம் பற்றி யாராவது பேசினால் காதுகளைப் பொத்திக் கொண்டு
காத தூரம் ஓடும் ஆம்பி குமாரனுக்கு இதெல்லாம் ஆச்சரியமான குணாதிசயங்களாகத் தோன்றின…
அலெக்ஸாண்டர் தன் சேனைத் தலைவன் செல்யூகஸை வரச் சொல்லி ஒரு வீரனை அனுப்பி
விட்டு ஆம்பி குமாரனிடம் சொன்னான். “என்ன யோசித்துக்
கொண்டிருக்கிறாய் நண்பா. நாம் கேகய நாட்டுடன் போருக்கு ஏற்பாடுகளை ஆரம்பிக்க வேண்டாமா?”
தன் எண்ண ஓட்டத்திலிருந்து விடுபட்ட
ஆம்பி குமாரன் காதுகளில் அந்த வார்த்தைகள் தேவாமிர்தமாக விழுந்தன. “நான் இந்தக்
கணத்திற்காகத் தான் பல நாளாகக் காத்துக் கொண்டிருக்கிறேன் நண்பா…”
அலெக்ஸாண்டர் புன்னகையுடன் சொன்னான். “சரி கேகய
நாட்டுப் படைபலம் பற்றிச் சொல்”
சசிகுப்தன் மூலமாகவும் வேறு சிலர் மூலமாகவும்
ஏற்கெனவே இது குறித்து அலெக்ஸாண்டர் நிறைய தகவல்கள் பெற்றிருக்கிறான்
என்பதை அறியாத ஆம்பி குமாரன் இந்தக் கேள்விக்கு ஆர்வத்துடன் பதில் சொல்ல ஆரம்பித்தான்.
அலெக்ஸாண்டர் ஏற்கெனவே தெரிந்த தகவல்கள்
அவை என்பதைக் காட்டிக் கொள்ளாமல் ஆம்பி குமாரன் சொல்வதைப் பொறுமையாகக் கேட்டான். இது போல்
கேட்கையில் ஒவ்வொருவரிடமிருந்தும் கூடுதலாக ஒரு சிறு தகவலாவது அவனுக்குக் கிடைக்காமல்
இருப்பதில்லை….
எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு விட்டு
அலெக்ஸாண்டர் கேட்டான். “படைபலம் தவிர அவனுடைய கூடுதல் பலம் என்ன நண்பா?”
ஆம்பி குமாரன் சிறிது யோசித்து விட்டுச்
சற்றுத் தாழ்ந்த குரலில் சொன்னான். “அவனிடம் கைதேர்ந்த
ஒற்றர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்”
சாணக்கியர் அன்று மதியம் தான் தட்சசீலம் வந்து சேர்ந்தார். முடியாத
குடுமியுடன் இருந்த அவர் பாடலிபுத்திரத்தில் மகத அரசவையில் நடந்ததைச் சுருக்கமாக பொதுவில்
அனைவர் முன்னிலையிலும் சொன்னார். அதை ஒரு தகவலைச் சொல்வது போல் சொன்னாரேயொழிய சொல்கையில் எந்த
உணர்ச்சியையும் வெளிப்படுத்தவில்லை. சந்திரகுப்தனிடம்
அவன் தாயும் மாமனும் நலமாக இருக்கிறார்கள் என்றும் அவனைக் காண ஆவலாக இருக்கிறார்கள்
என்ற தகவலை மட்டும் சொன்னார். நீண்ட பயணத்திற்குப் பின் அவர் வந்திருப்பதால் சந்திரகுப்தனும், அவருடைய
அன்பிற்கும், நம்பிக்கைக்கும் உரிய மற்ற மாணவர்களும் மற்றவர்கள் முன்னிலையில்
அவரை கூடுதல் தகவல்கள் கேட்டுத் தொந்தரவு செய்யவில்லை.
ஆனால் அவர்கள் இரவு அவர் அறைக்கு வந்தார்கள். ஏதோ எழுதிக்
கொண்டிருந்த அவர் தன் பிரியமான மாணவர்களைப் பார்த்த பிறகு அதைத் தள்ளி வைத்தார். ”இங்கு என்ன
செய்தி?” என்று கேட்டார்.
சாரங்கராவ் சொன்னான். “அலெக்ஸாண்டர்
தட்சசீலத்தில் விருந்தினர் மாளிகையில் தான் இருக்கிறான். சற்று முன்
கிடைத்த தகவலின் படி கேகயத்துடன் போர் துவங்க யவனப்படையும், காந்தாரப்படையும்
தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.”
சாணக்கியர் முதல் முறையாக வருத்தம்
முகத்தில் தெரியச் சொன்னார். “எது நடக்கக் கூடாதென்று நினைத்தோமோ அது நடந்து விட்டது. ஆம்பி குமாரன்
அன்னியனிடம் நட்புக்கரம் நீட்டுவதற்குப் பதிலாக புருஷோத்தமனிடம் நட்புக்கரம் நீட்டியிருந்தால்
அவர்கள் இருவருமாகச் சேர்ந்து அலெக்ஸாண்டரை எல்லையிலேயே துரத்தியடித்து இருக்கலாம். இனி நடப்பதெல்லாம்
அலெக்ஸாண்டரின் அடுத்த ஆக்கிரமிப்புகளாகத் தான் இருக்கப் போகிறது.”
மாணவர்களும் வருத்தப்பட்டார்கள். சிறிது
நேர மௌனத்திற்குப் பின் சாணக்கியர் இயல்பு அமைதிக்குத் திரும்பி கேட்டார். “வேறென்ன
செய்திகள்?”
மாணவர்கள் அலெக்ஸாண்டரைப் பார்த்த காட்சியைச்
சொன்னார்கள். அவன் தட்சசீலத்தில் அவனுடைய வெற்றிகளுக்கு பலி கொடுத்து பூஜைகள்
செய்ததைச் சொன்னார்கள்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு தகவலைச் சொல்ல
விஜயன் மட்டும் அமைதியாக இருந்ததால்
சாணக்கியர் அவனைக் கேள்விக்குறியுடன் பார்க்க அவன் சொன்னான். “நம் தலைமை
ஆசிரியர் ஆம்பி குமாரனின் பட்டாபிஷேக நிகழ்ச்சிக்குப் போயிருந்தார். அவருக்கு
நிறைய சன்மானங்களும் கிடைத்திருக்கின்றன. அவருடன் துணைக்குப்
போன மாணவனுக்கும் ஆம்பி குமாரன் தாராளமாகப் பரிசுகள் தந்திருக்கிறான்”
மற்ற மாணவர்கள் கஷ்டப்பட்டு சிரிப்பைக்
கட்டுப்படுத்திக் கொள்ள, சாணக்கியர் கேட்டார். “ஏன் நீ
அவருடன் போகவில்லை. போயிருந்தால் உனக்குக் கிடைத்திருக்குமல்லவா?”
விஜயன் மெல்லச் சொன்னான். “நான் அவர்
செல்லும் போது கூட வரட்டுமா என்று கேட்டேன். அவர் வேண்டாம்
என்று சொல்லி இன்னொரு மாணவனை அழைத்துச் சென்று விட்டார். நான் போனால்
அங்கு ஏதாவது செய்து அவருக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி விடுவேனாம்.”
இரண்டு பேர் வாய் விட்டே சிரித்து விட
சாணக்கியர் லேசாகப் புன்னகை செய்தார். சிலர் பெரிய பெரிய
விஷயங்களை யோசிப்பதில்லை. சில்லறை விஷயங்களிலேயே திருப்தி அடைந்து விடுகிறார்கள். அப்படிப்பட்ட
மனிதர்கள் வரலாற்றில் காலடிச் சுவடுகளைப் பதிப்பதில்லை என்றாலும் கூட பெரிய வருத்தங்கள்
இல்லாமல் சில்லறைத் திருப்தியுடனேயே வாழ்ந்து விட்டு விடை பெற்றுக் கொள்கிறார்கள். ஒரு விதத்தில்
பார்க்கப்போனால் பெரிய பிரச்சினைகளில் மாட்டிக் கொள்ளாத சிக்கலில்லாத வாழ்க்கையது!
சாணக்கியர் சந்திரகுப்தனிடம் கேட்டார். “அலெக்ஸாண்டரைப்
பார்த்தாயா? அவனைப் பற்றி என்ன நினைக்கிறாய்?”
“துடிப்பானவனாகவும், மாவீரனாகவும், தெளிவானவனாகவும்
தெரிகிறான்.”
“அவனைப்
பற்றி நாம் கேள்விப்பட்டதெல்லாம் உண்மை என்று தோன்றுகிறதா?”
“நூறு சதவீதம்
சரியென்றே தோன்றுகிறது ஆச்சாரியரே”
சாணக்கியர் பெருமூச்சு விட்டார். விதி வலிது!
(தொடரும்)
என்.கணேசன்
Monday, January 9, 2023
யாரோ ஒருவன்? 120
Thursday, January 5, 2023
சாணக்கியன் 38
காட்டுக்குள் நடந்ததை ஒனெஸ்க்ரீட்டஸ் வந்து சொன்னவுடன் அலெக்ஸாண்டர் சிறிது நேரம் எந்த உணர்ச்சியும் காட்டாமல் அவனையே பார்த்தான். தண்டராய சுவாமி அவனுடைய அன்பளிப்புகளை ஏற்க மறுத்தது அலெக்ஸாண்டரைப் பெரிதாகப் பாதிக்கவில்லை. ”எனக்கு விருப்பமும், பயனும் இல்லாத இந்தப் பொருள்களை நீ திரும்பவும் எடுத்துச் செல்வாயாக!” என்று தண்டராய சுவாமியால் சொல்ல முடிந்தது அந்தத் துறவியின் துறவு உண்மையானது என்பதையே சுட்டிக் காட்டுவதாக அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் “யாரையும் சென்று சந்திக்கும் உத்தேசம் எனக்கு இல்லை என்று உன்னை அனுப்பியவனிடம் சொல்வாயாக!” என்று தண்டராய சுவாமி சொன்னது அவனை மெள்ள கோபமூட்டியது.
அலெக்ஸாண்டர் ஆம்பி குமாரனை நண்பன் என்று அழைத்தாலும் அவன் உள்மனதைப் பொருத்தவரை காந்தாரம் அவன் வென்ற பூமி தான். ஆம்பி குமாரன் எதிர்த்திருந்தால் அவனை வென்று இந்தப் பூமியை அவன் அடைந்திருப்பான். ஆம்பி குமாரன் மிகவும் புத்திசாலித்தனமாக நட்புக்கரம் நீட்டி தொடர்ந்து காந்தாரத்தை ஆள அனுமதி பெற்றிருக்கிறானேயொழிய உண்மையில் இப்பகுதியின் ஆட்சியாளன் இப்போது அலெக்ஸாண்டர் தான். அப்படி இருக்கையில் ஆள்பவன் அழைத்த பிறகும் வர மறுத்ததோடு, அரசன் என்றும் அழைக்க மறுத்து ‘உன்னை அனுப்பியவன்’ என்று அலட்சியமாகச் சொன்னது மன்னிக்க முடிந்த குற்றமாக அவனுக்குத் தோன்றவில்லை. துறவிக்கும் அகம்பாவம் நல்லதல்ல....
நினைக்க நினைக்க சிறிது சிறிதாக கோபம் மேலெழ ஆரம்பித்தவுடன் அலெக்ஸாண்டர் முகம் சிவந்து போனது அவன் நிறத்துக்கு மிக நன்றாகவே தெரிந்தது. ஆம்பி குமாரன் முதல் முறையாக அவன் கோபத்தைப் பார்த்ததால் பயந்தே போனான். அரசனான தானே நிலைமை புரிந்து அனுசரித்துப் போகையில் ஒரு துறவி இப்படித் திமிராக நடந்து கொள்வதை அவனுக்கும் அகங்காரத்தின் உச்சமாகவே தோன்றியது. அலெக்ஸாண்டர் கோபப்பட்ட பிறகு, தான் கோபப்படாமலிருப்பது சரியல்ல என்று எண்ணியவனாக அவன் கோபத்துடன் கூறினான். “அகம்பாவத்துடன் பேசிய அந்தத் துறவியை மூட்டையைக் கட்டித் தூக்கி வருவது போல தூக்கிக் கொண்டு வர வேண்டியது தானே. அதை விட்டு அந்த ஆள் சொன்னதைக் கேட்டுக் கொண்டு வந்து தகவல் தெரிவிக்கிறீர்களே”
ஒனெஸ்க்ரீட்டஸ் ஒன்றும் சொல்லாமல் அலெக்ஸாண்டரைப் பார்த்தான். அலெக்ஸாண்டர் ஒரு தீர்மானத்திற்கு வந்தவனாக எழுந்தான்.
ஆம்பி குமாரன் அலெக்ஸாண்டரிடம் கேட்டான். “என்ன நண்பா?”
“அந்த அகம்பாவத் துறவியை நானே சென்று சந்திக்கிறேன். சிலருக்கு வாளின் மூலமாகத் தான் மரியாதையைக் கற்றுக் கொடுக்க வேண்டியிருக்கிறது. அப்படியும் கற்றுக் கொள்ள மறுத்தால் வாளுக்கு இரையாக்கவும் வேண்டியிருக்கிறது”
ஆம்பி குமாரனுக்குத் துறவிகளைக் காண்பதும், பேசுவதும் துன்பமாகவே இருந்த காரணத்தால் அவன் உடன் செல்ல விரும்பவில்லை. ஆனாலும் காந்தாரத்தில் அலெக்ஸாண்டர் ஓரிடம் செல்லும் போது உடன் செல்லா விட்டால் அது மரியாதையாக இருக்காது என்றும் தோன்றியதால் ”நானும் வரட்டுமா நண்பா?” என்று கேட்டு வைத்தான்.
ஆம்பி குமாரனின் மனநிலையைப் படிக்க முடிந்த அலெக்ஸாண்டர் புன்னகையுடன் சொன்னான். “வேண்டாம் நண்பா. நான் ஒனெஸ்க்ரீட்டஸையும் சில வீரர்களையும் அழைத்துச் செல்கிறேன்.”
காட்டின் அமைதியைக் குதிரைகளின் குளம்படிகள் சத்தம் குலைத்தது. ஒனெஸ்க்ரீட்டஸுடன் சென்றதை விட அலெக்ஸாண்டருடன் அதிக வீரர்கள் குதிரைகளில் சென்றதால் அதிகப்படியாக ஒலித்த ஓசை கேட்டு காட்டு விலங்குகள் பல வித குரல்களில் கத்தி, வரக்கூடிய ஆபத்தைத் தங்கள் சகாக்களுக்கு அறிவித்தன.
தண்டராய சுவாமி அந்த ஆபத்தை உணர்ந்த மாதிரி தெரியவில்லை. குதிரைகளின் குளம்படிச் சத்தம் நெருங்கி விட்ட போதும் அவர் மூடிய கண்களைத் திறக்காமல் இப்போதும் படுத்த நிலையிலேயே இருந்தார்.
ஒனெஸ்க்ரீட்டஸ் சற்று தொலைவில் பாறை மீது படுத்துக் கொண்டிருந்த தண்டராய சுவாமியைக் கைகாட்டினான். அலெக்ஸாண்டர் உடன் வந்த வீரர்களை அங்கேயே நிறுத்தி விட்டு ஒனெஸ்க்ரீட்டஸை மட்டும் தன்னுடன் வர சமிக்ஞை செய்து விட்டு குதிரையுடன் அந்தத் துறவியை நெருங்கினான்.
அலெக்ஸாண்டர் தன்னை நெருங்கிய பிறகும் தண்டராய சுவாமி கண்களைத் திறக்கவில்லை. அலெக்ஸாண்டர் அந்தத் துறவியிடமிருந்து தேஜஸுடன் வெளிப்பட்ட ஞான அலைகளை உணர்ந்தான். ஆனாலும் எப்போதும் மனதில் இருப்பதைத் தேவைப்பட்டால் ஒழிய முகத்தில் காட்டிக் கொள்ளும் பழக்கம் இல்லாத அலெக்ஸாண்டர் இடி முழக்கமிடும் குரலில் கர்ஜித்தான். “துறவியே”
தண்டராய சுவாமி மெல்லக் கண்களைத் திறந்து பார்த்தார். ஒனெஸ்க்ரீட்டஸ் அவருக்கு அலெக்ஸாண்டரை அறிமுகப்படுத்தும் வகையில் அறிவித்தான். “கடவுளின் புத்திரனும், மாவீரருமான சக்கரவர்த்தி அலெக்ஸாண்டர் வந்திருக்கிறார்...”
படுத்த நிலையிலிருந்த தண்டராய சுவாமி அலெக்ஸாண்டரைப் பார்த்த பின்னும் எழுந்திருக்கும் சிரமத்தை மேற்கொள்ளவில்லை. பார்த்த முதல் கணத்திலேயே பலர் கண்களில் காணும் பிரமிப்பை தண்டராய சுவாமியின் கண்களில் காண முடியவில்லை. அவர் விழிகளில் ஞான ஒளியைக் கண்ட போதும் அலெக்ஸாண்டரால் அவருடைய அலட்சியத்தை அலட்சியம் செய்ய முடியவில்லை. அவனுக்குள் கோபம் பொங்கியது. அதைக் கவனிக்க மறுத்தவராக அவர் ஒனெஸ்க்ரீட்டஸிடம் சொன்னார். ”அனைவரும் கடவுளின் புத்திரர்களே. நீயும், நானும், தள்ளி நிற்கும் அந்த வீரர்களும், அவர்களையும் தாண்டி இந்த வனமெல்லாம் நிறைந்திருக்கும் துறவிகளும் கூடக் கடவுளின் புத்திரர்களே. இந்தப் பெருமையை மானிடர்கள் மட்டுமே பெற்றவர்கள் அல்ல. விலங்குகளும், அனைத்து உயிரினங்களும் அப்படியே பெற்றிருக்கின்றன...”
அமைதி மாறாமல் சொன்ன தண்டராய சுவாமியின் சொற்களை ஒனெஸ்க்ரீட்டஸ் மொழி பெயர்த்துச் சொல்ல அலெக்ஸாண்டர் அனல் பறக்கும் பார்வையுடன் தண்டராய சுவாமியைப் பார்த்தபடியே தன் இடையில் சொருகியிருந்த வாளை உருவினான்.
உருவிய வாளைப் பார்த்த பின்பும் தண்டராய சுவாமி தன் அமைதியைச் சிறிதும் இழக்கவில்லை. அலெக்ஸாண்டர் கர்ஜனை செய்தான். “எனக்குச் சொந்தமான நிலத்தில் படுத்திருக்கிறாய் துறவியே. அப்படியிருந்தும் நான் அழைத்தும் நீ வர மறுக்கிறாய் என்பது தண்டனைக்குரியது.”
ஒனெஸ்க்ரீட்டஸ் அதை மொழிபெயர்த்துச் சொன்னதும் தண்டராய சுவாமி அலட்டாமல் புன்னகையுடன் சொன்னார். ”இந்த நிலம் யாருக்கும் சொந்தமானதல்ல. ஆனாலும் உன்னைப் போலவே இந்த நிலத்தை முன் எத்தனையோ காலங்களில் எத்தனையோ பேர் சொந்தம் கொண்டாடியிருக்கிறார்கள். இனி வரும் காலங்களிலும் அப்படியே பலர் இதை சொந்தம் கொண்டாடக்கூடும். ஆனாலும் இந்த வினோதம் தொடர்ந்து கொண்டு தானிருக்கிறது”
அந்த தத்துவார்த்த சிந்தனையை மெச்சாத அலெக்ஸாண்டர் சொன்னான். “இருக்கலாம். நான் நிகழ்காலத்தைப் பற்றிப் பேசுகிறேன் துறவியே. இப்போது இது எனக்குச் சொந்தமானது.”
தண்டராய சுவாமி மறுபடியும் புன்னகைத்தார். ”என்ன வேடிக்கை. நீ சொல்லும் இந்த நிகழ்காலத்தில் இந்தப் பாறையின் அடியில் உள்ள பூச்சிகள் இந்த நிலத்தை அவற்றுக்குச் சொந்தமானதாக எண்ணிக் கொண்டிருக்கின்றன.”
இந்த வகைப் பேச்சை இனியும் வளர்த்த விரும்பாத அலெக்ஸாண்டர் தன்னுடைய வாளை தண்டராய சுவாமியின் தொண்டையருகே நீட்டினான். ”நான் நினைத்தால் இந்தக் கணமே உன் உயிரை மாய்த்து விட முடியும் முட்டாள் துறவியே.”
அப்போதும் அலெக்ஸாண்டரால் தண்டராய சுவாமியின் விழிகளில் பயத்தைப் பார்க்க முடியவில்லை. தண்டராய சுவாமியின் புன்னகையும் முகத்தில் குறையவில்லை. ”இந்தக் கணமில்லா விட்டாலும் ஏதோ ஒரு கணம் இழக்கப் போகிற உயிர் எப்போது போனால் என்ன அலெக்ஸாண்டர்? அதில் கலங்குவதற்கோ பயப்படுவதற்கோ என்ன இருக்கிறது?”
தத்துவங்கள் பேசும் எத்தனையோ மனிதர்களை அலெக்ஸாண்டர் கண்டிருக்கிறான். ஆனால் மரணத்தின் வாயிலில் நிற்க வைக்கிற போது விதிவிலக்காக விரல் விட்டு எண்ணக்கூடிய ஒருசில மனிதர்களைத் தவிர மற்றவர்களிடம் வெளிப்படுவது பயம் மட்டுமே. தத்துவங்கள் நின்று போய் பயம் மட்டுமே தங்கும் சந்தர்ப்பங்கள் அவை. இந்த மனிதரும் ஒரு விதிவிலக்கே. சாக்ரசிடீஸைப் போல. எத்தனையோ முறை சாக்ரசிடீஸைப் பற்றி அலெக்ஸாண்டர் பிரமிப்புடன் நினைத்துப் பார்த்திருக்கிறான். அந்தக் காலத்தில் வாழ்ந்திருந்தால் அந்த உயர்வை நேரடியாகப் பார்த்திருக்கலாம் என்று ஆசைப்பட்டு இருக்கிறான். அது முடியாவிட்டாலும் சாக்ரசிடீஸைப் போன்ற இந்த மனிதரைக் காணும் சந்தர்ப்பம் இன்று அவனுக்குக் கிடைத்திருக்கிறது. மகத்தான ஞானி என்று அவரது தேஜஸும் சொல்கிறது, அவர் நடந்து கொள்வதிலிருந்தும் தெரிகிறது...
அலெக்ஸாண்டர் வாளை அதன் உறையில் செருகி விட்டு அவரைத் தலைவணங்கினான். அவரிடம் நீண்ட நேரம் பேசினான். நிறைய கேள்விகள் கேட்டான். தண்டராய சுவாமியும் அமைதியாகவும், பொறுமையாகவும், ஆழமான கருத்துகளைச் சொன்னார். உலகாளக் கிளம்பிய சக்கரவர்த்தியாக அல்லாமல் அரிஸ்டாட்டிலின் சீடனாக அவரிடமிருந்து ஞானாமிர்த மொழிகளைக் கேட்டுக் கொண்டிருந்து விட்டுக் கடைசியில் நன்றி சொல்லி மறுபடியும் தலைவணங்கி விட்டுக் கிளம்பிய போது அலெக்ஸாண்டரின் மனம் லேசாக இருந்தது.
இந்த உணர்வு சில மணி நேரங்கள் தான் அவனிடம் தங்கப் போகிறது. மறுபடி ஏதோ ஒரு நாள் தனிமையில் அவன் இதை யோசிக்கலாம். எதுவும் அவனை மாற்றி விடப் போவதில்லை. அப்படி மாறிவிடவும் அவன் விரும்பவில்லை. ஆனாலும் அவ்வப்போது இந்த ஞானத்தை அவனால் தேடாமல் இருக்க முடியவில்லை. இதைப் பற்றிச் சிந்திக்காமல் இருக்க முடியவில்லை. சிறிது காலமே தங்கினாலும் இது தரும் ஆசுவாசம் மகத்தானது!
(தொடரும்)
என்.கணேசன்








