சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, January 9, 2023

யாரோ ஒருவன்? 120


ண்பனையே காரணமில்லாமல் யாராவது கொல்வார்களா என்ற ரஞ்சனியின் கேள்விக்கு நாகராஜ் அமைதியாகப் பதில் சொன்னான். “அவங்க ரெண்டு பேரும் உயிரோட தான் இருக்காங்க. உங்களுக்கு நெருக்கமா தான் இருக்காங்க. அவங்கள நீங்க நேரடியாவே கேட்கலாம்....”

ரஞ்சனி குரல் நடுங்கச் சொன்னாள். “இந்த அபாண்டமான குற்றச்சாட்டைச் சொல்லி அவங்க கிட்ட கேட்கக்கூட எனக்கு நாக்கு கூசுதுங்க”  

நாகராஜ் சொன்னான். “நீங்க நாலு பேரும் ரொம்ப நெருங்கின நண்பர்களாய் இருந்ததா சொல்றீங்க. உங்க அளவு மாதவனை அவங்களும் நேசிச்சதா சொல்றீங்க. இந்த 22 வருஷங்கள்ல நீங்க மூனு பேரும் சேர்ந்து மாதவனைப் பத்தி எத்தனை தடவை பேசியிருப்பீங்க. பழைய நினைவுகளை பகிர்ந்திருப்பீங்க.”

ரஞ்சனி சிறிது யோசனைக்குப் பின் சொன்னாள். “அவனைப் பத்தி பேசி பழைய நினைவுகள நினைச்சு மனச ரணமாக்கிக்க அவங்க ரெண்டு பேருக்கும் மனசிருக்கல”

“மாதவன் உயிரோட இருந்த காலத்துல எத்தனையோ நாட்கள் மாதவனோட வீட்டுல அவன் அம்மாவோட அருமையான சமையல சாப்டுட்டு நாலு பேரும் கதை பேசிட்டிருந்தீங்க. அவன் இறந்ததுக்கப்புறம் அந்த வீட்டுக்கு எத்தனை தடவை போயிருப்பீங்க?”

அவன் கேட்டவுடன் அவள் இரண்டு நிமிடங்கள் பேச்சிழந்து போனாள். அவள் முகத்தில் முதல் முறையாக குற்றவுணர்ச்சி தெரிந்தது.   பின் அவள் பலவீனமான குரலில் சொன்னாள். ”அதுக்கும் அதே காரணம் தான் சொன்னாங்க...”

நாகராஜ் கேட்டான். “உங்க வாழ்க்கைல மாதவன் ஒரு பகுதியாவே ஆயிட்டதா சொன்னீங்க. உங்களுக்கு அவனை அப்பப்ப நினைக்காமல் இருக்க முடியலைன்னு சொன்னீங்க. ஆனா உங்க அளவுக்கே அவனை நேசிச்ச அவங்களுக்கு மட்டும் அவனைப்பத்தி பேசினாலோ, நினைச்சாலோ, அவன் வீட்டுக்குப் போனாலோ மனசு ரணமாயிடும்கிறது முரண்பாடா உங்களுக்குத் தெரியலையா?”

மறுபடி தர்மசங்கடமான மௌனம். பின் மெல்ல ரஞ்சனி சொன்னாள். “ஒவ்வொருத்தர் எடுத்துக்கற விதம் ஒவ்வொரு மாதிரி. சில பேருக்கு நினைவுபடுத்திகிட்டு வாழ முடியுது. சில பேருக்கு நினைவுபடுத்தறது தாங்க முடியாத ரணமாய் போயிடுது”

நாகராஜ் சொன்னான். “நினைவுபடுத்திக்கறது ரணமாய் இருக்கும்னா ரெண்டு பேரும் தீபக்கை எப்படி தினமும் பார்க்கிறாங்க?”

இந்த முறை அதிர்ச்சி ஒரேயடியாக அவளைப் பேச்சிழக்க வைத்தது. அவள் மனதில் புயல் வீச ஆரம்பித்தது. கொந்தளிக்கும் உணர்ச்சிகள் அலைமோத அவனை வெறித்துப் பார்த்தாள்.

“நண்பனைப் பத்தி அவங்க பேச மறுக்கறதுக்கு குற்றவுணர்ச்சி கூட காரணமாய் இருக்கலாம். அவங்க மறக்க நினைக்கறது அவங்க குற்றத்தையா கூட இருக்கலாம்.” அமைதியாக நாகராஜ் சொன்னான்.

அவள் இப்போதும் ஒன்றுமே சொல்லவில்லை. இடி விழுந்தவள் போல் பேச்சிழந்து அமர்ந்திருந்த அவளைப் பார்க்கையில் அவள் வேதனையைப் பரிபூரணமாக நாகராஜால் உணர முடிந்தது. அவன் இரக்கத்துடன் சொன்னான். “மன்னிக்கணும். நீங்க இந்தக் கேள்வியைக் கேட்காமல் இருந்திருக்கணும். நானும் உண்மையைச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்திருப்பேன். நடந்ததை கடவுளால் கூட மாற்ற முடியாது. அதனால் நானும் மாற்றிச் சொல்ல முடியாது. ஒன்னே ஒன்னு மட்டும் என்னால் செய்ய முடியும். உங்க மகன் கனவுல மாதவனோட ஆத்மா வந்து தொந்திரவு செய்ததை நிறுத்தின மாதிரி  அவன் ஆத்மா உங்களை வந்து தொந்திரவு செய்யறதையும் என்னால் நிறுத்த முடியும்...”

அவள் கண்கலங்க அவனைப் பார்த்துக் கைகூப்பினாள். “இந்த உடம்புல உயிர் இருக்கற கடைசி நிமிஷம் வரைக்கும் அவன் ஆத்மா வர்றதை தொந்திரவுன்னு நான் நினைக்க மாட்டேங்க. உயிருக்குயிரா நான் அவனைக் காதலிச்சுருக்கேன். அது அவனோட மரணத்துல கூட மாறல. இனியும் மாறாது. ஆனா அந்த நல்ல ஆத்மா ஏன் மோட்சமடையலங்கற வருத்தத்துல தான் உங்களைக் கேட்க வந்தேன். நன்றிங்க”

அவள் தளர்ச்சியுடன் எழுந்தாள். ஆயிரம் வார்த்தைகள் வெளிப்படுத்த முடியாத அவளது துக்கத்தை அவளிருந்த நிலை நாகராஜுக்கு உணர்த்தியது. இங்கே நுழையும் போதிருந்த ரஞ்சனி அல்ல அவள்... இரண்டடி எடுத்து வைத்த அவள் தடுமாறி தான் அமர்ந்திருந்த நாற்காலியைப் பிடித்து தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்டாள். அவன் தன் இதயத்திலும் காயம் உடைந்து ரணம் புதுப்பிக்கப்படுவதை உணர்ந்தான். சத்தியமங்கலத்து வீட்டில் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டது போல் இப்போது கட்டுப்படுத்திக் கொள்வது சுலபமாய் இல்லை. அங்கே அவன் கண்டது ஆறிய காயங்களை. இங்கே அவன் அவளைக் காயப்படுத்தியிருக்கிறான். அவள் மன ரணத்தை சகிப்பது சுலபமாயில்லை...

அவள் அங்கிருந்து நடைப்பிணமாக வெளியேறினாள். நாகராஜ் கருப்புக் கண்ணாடியைக் கழற்றி விட்டு கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டான்.


தீபக்கால் வீட்டிற்குள் இருக்க முடியவில்லை. தர்ஷினி பேசிய பேச்சுகளில் மனம் தங்கவில்லை. அதைக் கவனித்து அவள் கோப்பபட்டதையும் அவன் பொருட்படுத்தவில்லை. “இவங்க என்ன கேட்கறாங்களோ, அங்கிள் என்ன சொல்றாரோ தெரியல. என்னவோ மனசு படபடங்குது தர்ஷினி” என்று அவன் கவலையுடன் சொன்னவுடன் அவள் கோபம் பறந்து போனது. அவன் தாய் மீது எவ்வளவு பாசம் வைத்திருக்கிறான் என்பதை அவள் அறிவாள்.

“என்னவோ முதல் நாள் குழந்தையை ஸ்கூலுக்கு அனுப்பிச்சுட்டு என்ன செய்யுதோன்னு கவலைப்படற அம்மா மாதிரி ஏண்டா இப்படி இருக்கே.” என்று செல்லமாய் அவன் மண்டையில் அவள் கொட்டினாள்.

சாதாரணமாக இது போல் அவள் எதாவது செய்தால் அக்கம்பக்கம் பார்த்து விட்டு அவனும் பதிலுக்கு எதாவது குறும்பு செய்வான். ஆனால் இன்று ஏனோ அவன் மனம் ஒரு நிலையில் இல்லை. ”நாம வெளியவே உட்கார்ந்துக்கலாமா தர்ஷினி” என்று சொன்னான்.

”சரிடா வா” என்று அவள் அவனை அழைத்துக் கொண்டு போனாள்.

ஏற்கெனவே வெளியே புல்வெளியில் தான் நாற்காலிகளைப் போட்டு வேலாயுதம், சரத், கல்யாண் மூவரும் பக்கத்து வீட்டையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார்கள். அவர்களுடன் போய் உட்கார மனமில்லாமல் தீபக் போர்ட்டிகோவின் மேடையைக் காட்டி தர்ஷினியிடம் சொன்னான். “நாம இங்கேயே உட்கார்ந்துக்கலாம்”

இருவரும் அங்கேயே உட்கார்ந்து கொண்டார்கள்.

தர்ஷினி தீபக்கிடம் சொன்னாள். “எப்பவோ இறந்து போன ஆத்மா உங்கம்மா நினைவுல அடிக்கடி வருதாம். அதைப் பத்திக் கேட்கத் தான் அங்கே போறதா அவங்க எங்கம்மா கிட்ட சொன்னது காதுல விழுந்துச்சு”

தீபக் திகைத்தான். “எனக்கு கூட ஒரு ஆத்மா ‘நான் இயற்கையா சாகல. என்னை கொன்னுட்டாங்கன்னு’ சொல்ற மாதிரி மூனு நாள் கனவு வந்ததா உன் கிட்ட சொன்னது ஞாபகம் இருக்கா? அம்மா சொல்றதும், நான் சொல்றதும் ஒரே ஆத்மாவான்னு தெரியலையே...”

தர்ஷினி சலிப்புடன் சொன்னாள். “இருக்கறவனப் பத்தி கவலைப்படறதுக்கே இங்கே அவனவனுக்கு நேரமில்லை. நீங்கள்லாம் ஏண்டா செத்த ஆத்மாவுக்கு இப்படி கவலைப்படறீங்க?”

அவள் சொன்னதைக் கேட்டு ஒரே நேரத்தில் அவனுக்குச் சிரிப்பும், கோபமும் வந்தன. அதற்குள் பக்கத்து வீட்டுக் கதவைத் தாண்டி ரஞ்சனி தளர்ச்சியுடன் வருவது அவனுக்குத் தெரிந்தது. அவள் நடையில் தெரிந்த தளர்ச்சி அவனைப் பதற வைத்தது. பதற்றத்துடன் ஓடினான்.

ரஞ்சனி தளர்ச்சியுடன் பக்கத்து வீட்டு கேட்டை நெருங்கிய விதம் சரத், கல்யாணையும் கூடப் பதற வைத்தது. சரத் அழாத குறையாகச் சொன்னான். “அவன் உண்மையை அவ கிட்ட சொல்லிட்டான் போலருக்குடா”

தீபக் மின்னல் வேகத்தில் ஓடி பக்கத்து வீட்டுக் கேட்டருகே தாயை அடைந்தான். “அம்மா... அம்மா... என்னாச்சும்மா?”

கலங்கிய கண்களுடன் ரஞ்சனி மகனைப் பார்த்தாள். தாயை அந்த மாதிரியான கோலத்தில் இது வரை என்றுமே பார்த்திராத தீபக் உடல் நடுங்கியபடி மறுபடி கேட்டான். “சொல்லும்மா. என்னாச்சு. அவர் எதாவது வருத்தப்படற மாதிரி பேசிட்டாராம்மா. சொல்லும்மா.”

அவள் ஆமாம் என்று சொல்லி இருந்தால் வேறெதையும் பற்றி யோசிக்காமல் நாகராஜிடம் போய் தீபக் எரிமலையாய் வெடித்திருப்பான்.

ரஞ்சனி எதையும் சொல்லும் மனநிலையில் இல்லை. இல்லை என்று தலையை மட்டும் அசைத்து விட்டு அவனைக் கைத்தாங்கலாகப் பிடித்துக் கொண்டு அந்த வீட்டை விட்டு வெளியேறினாள். ஆனால் மகனைப் பிடித்துக் கொண்டவுடன் அவளுக்குத் தானாய் கண்கள் குளமாகி அருவியாய் கண்ணீர் வழிய ஆரம்பித்தது.

தீபக் என்ன செய்வதென்று அறியாமல் தாயை கல்யாணின் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்தான். சரத்தும், கல்யாணும் அவளைப் பதற்றத்துடன் பார்த்துக் கொண்டிருக்க அவளும் அவர்களைப் பார்த்தாள். அவள் கண்களில் தீப்பந்தங்கள் எரிந்தன.

(தொடரும்)
என்.கணேசன்  

14 comments:

  1. Touching and Thrilling.

    ReplyDelete
  2. Madavan's son is deepak, our guess is correct😊

    ReplyDelete
  3. Who is Deepak? Why should both of them hesitate to see Deepak? Behind Deepak birth some secret is there, am I correct?

    ReplyDelete
  4. Behind Deepak birth some secret is there, am I correct?

    ReplyDelete
  5. Sir , how many episodes are there in total?

    ReplyDelete
  6. பல விதமான உணர்ச்சிகள் படிப்பவர் மனதிலும் அலை மோதுகின்றன

    ReplyDelete
  7. அவர்கள் இருவரும் தான் 'மாதவனை ஏதாவது செய்திருப்பார்கள்' என்பது அனுமானித்த ஒன்று தான்... ஆனால், ரஞ்சனியின் வலியை எழுத்தில் துல்லியமாக கொண்டுவந்து...எங்களையும் சோகத்தில் ஆழ்த்தி விட்டீர்கள் ஐயா....

    அவர்களின் இந்த செயலுக்கு தண்டனை எப்படி கிடைக்கப் போகிறதோ...? தெரியவில்லை....!

    ReplyDelete
  8. Sir, நல்ல நடை, தேவயான வசனம். உங்களின் தனிதன்மை அருமை.

    ReplyDelete
  9. ரஞ்சனி, தீபக், நாகராஜ் ன் உணர்வுகள், படிப்பவரின் மனத்தை ஆக்கிரமிக்கின்றது. மிக அருமை...

    ReplyDelete
  10. I don't get why nagaraj gets involved? is he involved due to relationship of madavan with him related to nagaratham and nagas... if sarath and kalyan don't like madavan , how would they accept Deepak whom seems to be so of madavan.

    ReplyDelete
  11. Sir, Please upload special episode of 121 for Pongal

    ReplyDelete