அர்ஜுன் அன்று அதிகாலையிலேயே வீட்டிலிருந்து கிளம்பி விட்டான். நர்மதாவின்
வீட்டருகே இருக்கும் பெரிய பூங்காவிற்கு அவன் காலை ஆறு மணிக்கு வந்து சேர்ந்து விட்டான்.
நர்மதாவின் வீடிருக்கும் பகுதி செல்வச்
சீமான்கள் வசிக்கும் பகுதி. அவர்கள் யாரும் நட்பில் இருந்தால் ஒழிய அண்டை வீட்டுக்காரர்களால்
கூட அணுக முடியாதவர்கள். அடுத்த வீட்டில் என்ன நடக்கிறது என்பதை அறிய ஆர்வமோ, அக்கறையோ
இல்லாதவர்கள் அவர்கள். நர்மதா மரணத்திற்குப் பிறகு போலீஸ்காரர்கள் சென்று அவர்களை
அதிகாரபூர்வமாக விசாரிக்க முடிந்ததேயொழிய பத்திரிக்கையாளர்களால் அந்த வீட்டுக்காரர்களை
நெருங்க முடியவில்லை. கஷ்டப்பட்டு நெருங்கினாலும் “எங்களுக்கு
ஒன்றும் தெரியாது.” என்று ஒரே வாக்கியத்தை மட்டும் தான் அவர்களிடமிருந்து பத்திரிக்கையாளர்கள்
திரும்பத் திரும்ப கேட்க நேர்ந்தது.
நர்மதாவின் வலது பக்கத்து பங்களாக்காரர்
ஒரு தொழிலதிபர். அவர் தினமும் அதிகாலையில் அந்தப் பூங்காவில் நடைப்பயிற்சிக்குத்
தவறாமல் வருபவர். நிருபராய் அவருடைய வீட்டுக்குச் சென்று பேசினால் அந்த ஒரு
வாக்கியத்தோடு தான் திரும்பி வர நேரிடும் என்பதால் தான் அவரிடம் பேச அர்ஜுன் அங்கே
அந்த நேரத்தில் வந்திருக்கிறான். இப்போதும் கூட அவர் அவனைக் கண்டு கொள்ளாமல், பேச்சை
வெட்டி விட்டு நகரும் வாய்ப்பிருக்கிறது என்றாலும் அர்ஜுன் முயன்று பார்க்க வந்திருக்கிறான்.
அவர் 6.05க்கு பூங்காவிற்குள்
நுழைந்தார். அவர் அரை சுற்று செல்லும் வரை அர்ஜுன் அவரைத் தொந்தரவு செய்யவில்லை. அவன் அது
வரை அங்கு ஒரு பகுதியில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தான். பின் மெல்ல
ஓடி அவரை நெருங்கினான். “குட் மார்னிங் சார்”
அவர் புன்னகையில்லாமல் அவனைப் பார்த்து “குட்மார்னிங்” என்றார்.
“சார், நான் அர்ஜுன். விடிவெள்ளி பத்திரிக்கை நிருபர்... உங்களைத் தொந்தரவு செய்யறதுக்கு மன்னிக்கணும்.” சொல்லி விட்டு மன்னிப்பு கேட்கும் பாவனையில் அவரைப் பார்த்தபடி அவருடன் அவனும் வேகமாய் நடந்தான்.
“நர்மதா பற்றி தானே கேட்கப் போறீங்க தம்பி. தயவு செய்து ஆளை விடுங்க.
எனக்கு ஒன்னும் தெரியாது.” என்று கடுகடுத்த குரலில்
அவர் சொன்னார்.
அவன் தலையாட்டினாலும் அவருடனே நடந்தான். அவரை எதுவும் கேட்கவில்லை. அவனும் அங்கு நடக்கத்தான்
வந்திருப்பவன் போல அவருடன் அவன் அமைதியாக நடந்தது மூன்று நிமிடங்களில் அவர் முகத்தின்
கடுமையை நீக்கியது.
“சமீபத்துல சமூகத்தில் பெருகி வரும் மோசடிகள்னு ஒரு கட்டுரை உங்க பத்திரிக்கைல
வந்ததே, அதை எழுதியது நீங்கள் தானா?” என்று அவர்
கேட்க அர்ஜுனுக்குப் பெருமையாய் இருந்தது. அவன் கட்டுரையைப்
படித்திருப்பதுடன் அவன் பெயரையும் அவர் நினைவு வைத்திருக்கிறார். ஒரு கட்டுரையாளனுக்கு
இதை விடப் பெரிய அங்கீகாரம், விருது எல்லாம் கிடையாது. “ஆமாம் சார்” என்றான்.
“அத்தனை
நல்ல கட்டுரை எழுதினவர் இந்த சினிமா நடிகை தற்கொலை பற்றி எல்லாம் எழுதறது அவசியம் தானா?”
அவன் புன்னகைத்தான். “யாரோடதானாலும்
ஒரு உயிர், உயிர் தானே சார். நடிகையோட
உயிர்ங்கறதால அதற்கு மதிப்பில்லைன்னு ஆயிடுமா சார்?”
அவன் கேட்டது அவரைப் பாதித்தது போல்
இருந்தது. அவர் ஒன்றும் சொல்லாமல் சிறிது தூரம் நடந்த பின் சொன்னார். ”அதான் போலீஸ்காரங்க
வந்து எல்லாம் கேட்டுட்டுப் போய்ட்டாங்களே. நீங்களும்
ஏன் கேட்க வர்றீங்க? அது கொலையாயிருந்தா அவங்க கண்டுபிடிச்சுடுவாங்களே.”
“அது கொலைதான்கிறதை
மறைக்க போலீஸ்தரப்புல முயற்சி எடுக்கறதா எங்களுக்குச் சந்தேகமாய் இருக்கு சார்”
“ஏன்?” அவர் திகைப்புடன்
கேட்டார்.
“கொலை செஞ்சது
செல்வாக்கு உள்ள நபராய் இருக்கலாம்கிறது எங்க சந்தேகம்”
ஒரு நிமிடம் மௌனமாக நடந்த அவர் பின்
மெல்லச் சொன்னார். “எங்க பகுதில நாங்க யாரும் ஒருத்தருக்கொருத்தர் அதிகமாய் பேசிக்கறவங்க
இல்லை. ஆறு வருஷமாய் நானும் நர்மதாவும் பக்கத்து வீட்டுக்காரங்களாய்
இருந்தாலும் நான் நர்மதா கிட்ட இதுவரைக்கும் நர்மதா கிட்ட ரெண்டே தடவை தான் பேசியிருக்கேன். அதுவும், எங்களுக்குப்
பொதுவாய் இருக்கற காம்பவுண்ட் சுவருக்கு பெயிண்ட் அடிக்கற சம்பந்தமாய் தான் பேசியிருக்கோம்...”
“கொலை நடந்த
சமயத்துல நடந்த ஏதாவது சந்தேகப்படற மாதிரியோ, வித்தியாசமாயோ
இருந்திருக்கிறதாய் உங்களுக்கு ஞாபகம் வருதா சார்?”
அவர் சற்று யோசித்து விட்டுச் சொன்னார். ”சாகறதுக்கு
ரெண்டு நாள் முன்னாலிருந்து ஒரு பிச்சைக்காரன் எங்களுக்கு எதிர் வீட்டு கேட் கிட்ட
உக்கார்ந்து இருந்தான். அந்த வீட்டுக்காரர் வெளிநாட்டுக்குப் போயிருந்ததால யாரும்
எதுவும் சொல்ல முடியல. எனக்கு
ஆரம்பத்துல அவன் என் வீட்டை தான் பார்த்துகிட்டிருக்கிறானான்னு சந்தேகம் வந்துச்சு. அதனால நான்
தொடர்ந்து அவனை ரகசியமாய் கண்காணிச்சேன். என் வீட்டையும்
அவன் பார்க்கிறான்னாலும் அதிகமாய் அவன் அவள் வீட்டைத் தான் பார்க்கிறான்னு பிறகு தெரிஞ்சுது. அவன் எதோ
திருட்டு வேலைக்காக கண்காணிக்கிறான்னு நான் நினைச்சுகிட்டேன். அவள் செத்த
மறுநாளில் இருந்து அவனைக் காணோம். அந்தப் பிச்சைக்காரனை எங்க ஏரியாவுல அதுக்கு முன்னாடியும்
நான் பார்த்ததில்லை, பின்னாடியும் பார்த்ததில்லை.”
“இதை நீங்க
போலீஸ் கிட்ட சொன்னீங்களா சார்?”
“சொன்னேன்.”
ஆனால் அதைப் பற்றி போலீஸ் தரப்பிலிருந்து எந்தத் தகவலும் வெளிவராதது அர்ஜுனின் சந்தேகத்தை உறுதிப்படுத்துவது போலிருந்தது. அவருக்கு நர்மதா பற்றியோ, அவள் கொலை பற்றியோ வேறு எதுவும் சொல்ல இருக்கவில்லை. அந்தப் பிச்சைக்காரனே அவர் வீட்டைப் பார்க்கிறானோ என்ற சந்தேகம் எழுந்திரா விட்டால் அவனும் அவர் கவனத்திற்கு வந்திருக்க மாட்டான் என்பதை அர்ஜுன் புரிந்து கொண்டான். அவள் வீட்டிற்கு யார் வருகிறார்கள் என்றெல்லாம் கவனிக்கும் பழக்கம் அவருக்கு இல்லாததும் அவனுக்குத் தெரிந்தது. அவரிடம் அவன் மேலும் சில கேள்விகளைக் கேட்டான். அவற்றில் அவர் ஒரு கேள்விக்குச் சொன்ன பதில் அவனுக்கு மிக முக்கியமானதாகத் தோன்றியது. அவர் சில நாட்களில் கம்பெனியிலிருந்து இரவு வீடு திரும்பும் போது நர்மதா எதோ ஒரு கருப்பு பென்ஸ் காரில் வீட்டிலிருந்து செல்வதைப் பார்த்திருப்பதாகச் சொன்னார். சில சமயங்களில் அந்த பென்ஸ் கார் அவள் வீட்டு வாசலில் நின்றிருப்பதைப் பார்த்திருப்பதாகவும் அவர் சொன்னார். அந்த பென்ஸ் கார் அவளுடையது அல்ல என்பதால் அது குறித்து மேலும் அறிய அர்ஜுன் ஆர்வம் காட்டினான்.
ஆனால் அவருக்கு அடுத்த வீட்டு விவகாரங்களில் ஆர்வம் சிறிதும்
இல்லாத காரணத்தால் அவர் அதிகமாய் அந்தக் கார் சம்பந்தமாக, கூடுதலாகக் கவனித்திருக்கவில்லை.
ஒரு வயதான டிரைவரைத் தான் அந்தக் காரில்
அவர் பார்த்திருக்கிறார். நர்மதாவையும், அந்த டிரைவரையும் தவிர வேறு யாரும் அந்தக் காரில்
வருவதையோ, போவதையோ அவர் பார்த்திருக்கவில்லை. அந்தக்
காரின் எண்ணைக் கூட அவர் பார்த்திருக்கவில்லை. அந்தக்
கார் அவளைக் கொன்றவனின் காராகக் கூட இருக்கலாம் என்று அர்ஜுன் நினைத்தான். அவர் வீட்டுக்கு வரும் நேரங்கள்
என்பதால், அந்தக் காரை அவள் வீட்டருகே பார்த்த நேரங்கள் உத்தேசமாக
இரவு ஒன்பது மணி முதல் பத்து மணிக்குள்ளாகத் தான் ஒவ்வொரு முறையும் இருந்திருக்கிறது
என்பதை அவரால் உறுதியாகச் சொல்ல முடிந்தது. சில நாட்கள் அந்தக்
காரில் டிரைவர் மட்டும் அமர்ந்திருப்பதையும் அவர் பார்த்திருக்கிறார். அந்தச் சமயங்களில் அந்த காரின் சொந்தக்காரனான மர்ம நபர் நர்மதாவுடன் வீட்டுக்குள்ளே
இருந்திருக்கலாம்.
அவருக்கு நன்றி சொல்லி விட்டு அர்ஜுன்
கிளம்பினான். யோசிக்க யோசிக்க, அந்தக்
கருப்பு பென்ஸ் காரில் வந்து போகும் நபர் தான் கொலையாளியாக இருக்க வாய்ப்பு அதிகமாக
இருக்கும் என்ற எண்ணம் அர்ஜுனுக்கு உறுதியாகியது.
(தொடரும்)
என்.கணேசன்


No comments:
Post a Comment