சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, January 12, 2023

சாணக்கியன் 39

 

கேகய நாட்டுக்கு அலெக்ஸாண்டர் அனுப்பிய தூதன் திரும்பி வந்து சொன்ன செய்தி ஆம்பி குமாரனின் காதுகளில் தேனாய் பாய்ந்தது. இந்தப் பதிலைக் கேட்டு அலெக்ஸாண்டர் கடுங்கோபம் அடைவான் என்று அவன் எதிர்பார்த்து ஏமாந்து போனான். கோபத்திற்கு மாறாக அலெக்ஸாண்டர் முகத்தில் சிறிய புன்முறுவல் பூத்தது. இந்தப் பதில் அலெக்ஸாண்டர் எதிர்பார்த்திருந்தது தான்.   முன்பே காஷ்மீரம், சிந்து, மல்லையநாடு போன்ற பகுதிகளை எல்லாம் வென்று மலைகளை வென்ற அரசன் என்று பொருள்படும் பர்வதேஸ்வரன் என்ற பெயரைப் பெற்றிருந்த புருஷோத்தமன், அவன் தூதனுப்பிய உடனே பணிந்து வருவான் என்று எதிர்பார்த்திருக்கவில்லை

 

அவனையே பார்த்துக் கொண்டிருந்த ஆம்பி குமாரன் சொன்னான். “நான் முன்பே சொன்னேனல்லவா நண்பா. புருஷோத்தமன் அகம்பாவம் பிடித்தவன். எப்படி பதில் அனுப்பியிருக்கிறான் பார்த்தாயா? அவன் பதில் உனக்குக் கோபமூட்டாமல் இருப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறதுநாம் அவனுக்குச் சரியான பாடத்தைக் கற்பிக்க வேண்டும்…”

 

அலெக்ஸாண்டர் புன்னகையுடன் சொன்னான். “மாசிடோனியாவில் இருந்து இங்கு வந்து சேரும் வரை எத்தனையோ பேர் என்னை எதிர்த்திருக்கிறார்கள். அதனால் எனக்கு எதிர்ப்பு புதியதல்ல. எதிர்த்தவர்கள் மீதெல்லாம் நான் கோபம் கொள்ள வேண்டுமானால் என் மனநிலையை நான் கெடுத்துக் கொண்டு கஷ்டப்படுவது போலாகி விடும். மேலும், எதிர்த்தவர்கள் மீது கோபம் கொள்வது எனக்கு கால விரயமாகவே தோன்றுகிறது. எதிர்த்தவர்களுக்குப் பாடம் கற்பிப்பதும் என் வேலையல்ல. என் வேலை அவர்களை வெல்வது மட்டுமே.  புருஷோத்தமனையும் நாம் வெல்வோம். அதற்கு அதிகமாக அவனுக்கு என் மனதில் நான் ஏன் அதிக இடம் தர வேண்டும்?”

 

ஆம்பி குமாரன் என்ன சொல்வதென்று தெரியாமல் திகைத்தான். அவனுக்கு இது போன்ற சிந்தனைகள் புதிது. எதிர்ப்பவர்கள் மீது கோபமும், பாடம் புகட்ட வேண்டும் என்ற வெறியும் அவனுக்கு எப்போதும் இயல்பாகவே இருந்திருக்கிறது. அதிலும் புருஷோத்தமன் மீது அவனுக்கு ஆரம்பத்திலிருந்தே இந்த உணர்வு அதிகமாக இருந்திருக்கிறது. அதனால் அலெக்ஸாண்டர் மனநிலை அவனுக்குப் புதிராக இருந்தது. நேற்றும் தண்டராய சுவாமி மேல் கோபமாக அலெக்ஸாண்டர் போன போது அந்தத் துறவியைக் கொன்று விட்டு தான் வருவான் என்று ஆம்பி குமாரன் எதிர்பார்த்திருந்தான். ஆனால் நேற்று அந்தத் துறவியைக் கொல்லாமல் அந்த ஆளிடம் நிறைய நேரம் பேசி விட்டு அலெக்ஸாண்டர் வந்ததும் அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. மேலும் நேற்று வந்த பின்பு யாரிடமும் பேசாமல் தனிமையில் நீண்ட நேரம் அலெக்ஸாண்டர் கழித்ததும் அவனுக்கு வித்தியாசமாகத் தெரிந்தது. சசிகுப்தனிடம் பேசிய போது ஞானிகளிடம் நீண்ட நேரம் பேசி விட்டு வந்தாலோ, ஞான சிந்தனைகளில் ஆழமாக யோசிக்க ஆரம்பித்தாலோ அலெக்ஸாண்டர் அப்படித் தான் தனிமையில் சிந்தனையில் ஆழ்வான் என்று சொன்னான். ஞானம் பற்றி யாராவது பேசினால் காதுகளைப் பொத்திக் கொண்டு காத தூரம் ஓடும் ஆம்பி குமாரனுக்கு இதெல்லாம் ஆச்சரியமான குணாதிசயங்களாகத் தோன்றின

 

அலெக்ஸாண்டர்  தன் சேனைத் தலைவன் செல்யூகஸை வரச் சொல்லி ஒரு வீரனை அனுப்பி விட்டு ஆம்பி குமாரனிடம் சொன்னான். “என்ன யோசித்துக் கொண்டிருக்கிறாய் நண்பா. நாம் கேகய நாட்டுடன் போருக்கு ஏற்பாடுகளை ஆரம்பிக்க வேண்டாமா?”

 

தன் எண்ண ஓட்டத்திலிருந்து விடுபட்ட ஆம்பி குமாரன் காதுகளில் அந்த வார்த்தைகள் தேவாமிர்தமாக விழுந்தன. “நான் இந்தக் கணத்திற்காகத் தான் பல நாளாகக் காத்துக் கொண்டிருக்கிறேன் நண்பா…”

 

அலெக்ஸாண்டர் புன்னகையுடன் சொன்னான். “சரி கேகய நாட்டுப் படைபலம் பற்றிச் சொல்

 

சசிகுப்தன் மூலமாகவும் வேறு சிலர் மூலமாகவும் ஏற்கெனவே இது குறித்து அலெக்ஸாண்டர் நிறைய தகவல்கள் பெற்றிருக்கிறான் என்பதை அறியாத ஆம்பி குமாரன் இந்தக் கேள்விக்கு ஆர்வத்துடன் பதில் சொல்ல ஆரம்பித்தான்.  

 

அலெக்ஸாண்டர் ஏற்கெனவே தெரிந்த தகவல்கள் அவை என்பதைக் காட்டிக் கொள்ளாமல் ஆம்பி குமாரன் சொல்வதைப் பொறுமையாகக் கேட்டான். இது போல் கேட்கையில் ஒவ்வொருவரிடமிருந்தும் கூடுதலாக ஒரு சிறு தகவலாவது அவனுக்குக் கிடைக்காமல் இருப்பதில்லை….

 

எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு விட்டு அலெக்ஸாண்டர் கேட்டான். “படைபலம் தவிர அவனுடைய கூடுதல் பலம் என்ன நண்பா?”

 

ஆம்பி குமாரன் சிறிது யோசித்து விட்டுச் சற்றுத் தாழ்ந்த குரலில் சொன்னான். “அவனிடம் கைதேர்ந்த ஒற்றர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்

 

சாணக்கியர் அன்று மதியம் தான் தட்சசீலம் வந்து சேர்ந்தார்.   முடியாத குடுமியுடன் இருந்த அவர் பாடலிபுத்திரத்தில் மகத அரசவையில் நடந்ததைச் சுருக்கமாக பொதுவில் அனைவர் முன்னிலையிலும் சொன்னார். அதை ஒரு தகவலைச் சொல்வது போல் சொன்னாரேயொழிய சொல்கையில் எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்தவில்லை. சந்திரகுப்தனிடம் அவன் தாயும் மாமனும் நலமாக இருக்கிறார்கள் என்றும் அவனைக் காண ஆவலாக இருக்கிறார்கள் என்ற தகவலை மட்டும் சொன்னார். நீண்ட பயணத்திற்குப் பின் அவர் வந்திருப்பதால் சந்திரகுப்தனும், அவருடைய அன்பிற்கும், நம்பிக்கைக்கும் உரிய மற்ற மாணவர்களும் மற்றவர்கள் முன்னிலையில் அவரை கூடுதல் தகவல்கள் கேட்டுத் தொந்தரவு செய்யவில்லை.

 

ஆனால் அவர்கள் இரவு அவர் அறைக்கு வந்தார்கள். ஏதோ எழுதிக் கொண்டிருந்த அவர் தன் பிரியமான மாணவர்களைப் பார்த்த பிறகு அதைத் தள்ளி வைத்தார். ”இங்கு என்ன செய்தி?” என்று கேட்டார்.

 

சாரங்கராவ் சொன்னான். “அலெக்ஸாண்டர் தட்சசீலத்தில் விருந்தினர் மாளிகையில் தான் இருக்கிறான். சற்று முன் கிடைத்த தகவலின் படி கேகயத்துடன் போர் துவங்க யவனப்படையும், காந்தாரப்படையும் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.”

 

சாணக்கியர் முதல் முறையாக வருத்தம் முகத்தில் தெரியச் சொன்னார். “எது நடக்கக் கூடாதென்று நினைத்தோமோ அது நடந்து விட்டது. ஆம்பி குமாரன் அன்னியனிடம் நட்புக்கரம் நீட்டுவதற்குப் பதிலாக புருஷோத்தமனிடம் நட்புக்கரம் நீட்டியிருந்தால் அவர்கள் இருவருமாகச் சேர்ந்து அலெக்ஸாண்டரை எல்லையிலேயே துரத்தியடித்து இருக்கலாம். இனி நடப்பதெல்லாம் அலெக்ஸாண்டரின் அடுத்த ஆக்கிரமிப்புகளாகத் தான் இருக்கப் போகிறது.” 

மாணவர்களும் வருத்தப்பட்டார்கள். சிறிது நேர மௌனத்திற்குப் பின் சாணக்கியர் இயல்பு அமைதிக்குத் திரும்பி கேட்டார். “வேறென்ன செய்திகள்?”

 

மாணவர்கள் அலெக்ஸாண்டரைப் பார்த்த காட்சியைச் சொன்னார்கள். அவன் தட்சசீலத்தில் அவனுடைய வெற்றிகளுக்கு பலி கொடுத்து பூஜைகள் செய்ததைச் சொன்னார்கள்.

 

ஒவ்வொருவரும் ஒவ்வொரு தகவலைச் சொல்ல விஜயன் மட்டும் அமைதியாக இருந்ததால்  சாணக்கியர் அவனைக் கேள்விக்குறியுடன் பார்க்க அவன் சொன்னான். “நம் தலைமை ஆசிரியர் ஆம்பி குமாரனின் பட்டாபிஷேக நிகழ்ச்சிக்குப் போயிருந்தார். அவருக்கு நிறைய சன்மானங்களும் கிடைத்திருக்கின்றன. அவருடன் துணைக்குப் போன மாணவனுக்கும் ஆம்பி குமாரன் தாராளமாகப் பரிசுகள் தந்திருக்கிறான்

 

மற்ற மாணவர்கள் கஷ்டப்பட்டு சிரிப்பைக் கட்டுப்படுத்திக் கொள்ள, சாணக்கியர் கேட்டார். “ஏன் நீ அவருடன் போகவில்லை. போயிருந்தால் உனக்குக் கிடைத்திருக்குமல்லவா?”

 

விஜயன் மெல்லச் சொன்னான். “நான் அவர் செல்லும் போது கூட வரட்டுமா என்று கேட்டேன். அவர் வேண்டாம் என்று சொல்லி இன்னொரு மாணவனை அழைத்துச் சென்று விட்டார். நான் போனால் அங்கு ஏதாவது செய்து அவருக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி விடுவேனாம்.”

 

இரண்டு பேர் வாய் விட்டே சிரித்து விட சாணக்கியர் லேசாகப் புன்னகை செய்தார். சிலர் பெரிய பெரிய விஷயங்களை யோசிப்பதில்லை. சில்லறை விஷயங்களிலேயே திருப்தி அடைந்து விடுகிறார்கள். அப்படிப்பட்ட மனிதர்கள் வரலாற்றில் காலடிச் சுவடுகளைப் பதிப்பதில்லை என்றாலும் கூட பெரிய வருத்தங்கள் இல்லாமல் சில்லறைத் திருப்தியுடனேயே வாழ்ந்து விட்டு விடை பெற்றுக் கொள்கிறார்கள். ஒரு விதத்தில் பார்க்கப்போனால் பெரிய பிரச்சினைகளில் மாட்டிக் கொள்ளாத சிக்கலில்லாத வாழ்க்கையது!

 

சாணக்கியர் சந்திரகுப்தனிடம் கேட்டார். “அலெக்ஸாண்டரைப் பார்த்தாயா? அவனைப் பற்றி என்ன நினைக்கிறாய்?”

 

துடிப்பானவனாகவும், மாவீரனாகவும், தெளிவானவனாகவும் தெரிகிறான்.”

 

அவனைப் பற்றி நாம் கேள்விப்பட்டதெல்லாம் உண்மை என்று தோன்றுகிறதா?”

 

நூறு சதவீதம் சரியென்றே தோன்றுகிறது ஆச்சாரியரே

 

சாணக்கியர் பெருமூச்சு விட்டார். விதி வலிது!

 

(தொடரும்)

என்.கணேசன்
3 comments:

  1. Alexander is really cool person. Good characterization. Eager to know how Chanakya outwit him.

    ReplyDelete
  2. அலெக்சாண்டர் மனதளவிலும் வலிமையானவன்‌‌.... அவனை வெல்வது கடினமாக தான் இருக்கும் போல...

    ReplyDelete
  3. Ganeshan Sir, I am disappointed for.not having an episode for Pongal in one of the novel.

    ReplyDelete