காட்டுக்குள் நடந்ததை ஒனெஸ்க்ரீட்டஸ் வந்து சொன்னவுடன் அலெக்ஸாண்டர் சிறிது நேரம் எந்த உணர்ச்சியும் காட்டாமல் அவனையே பார்த்தான். தண்டராய சுவாமி அவனுடைய அன்பளிப்புகளை ஏற்க மறுத்தது அலெக்ஸாண்டரைப் பெரிதாகப் பாதிக்கவில்லை. ”எனக்கு விருப்பமும், பயனும் இல்லாத இந்தப் பொருள்களை நீ திரும்பவும் எடுத்துச் செல்வாயாக!” என்று தண்டராய சுவாமியால் சொல்ல முடிந்தது அந்தத் துறவியின் துறவு உண்மையானது என்பதையே சுட்டிக் காட்டுவதாக அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் “யாரையும் சென்று சந்திக்கும் உத்தேசம் எனக்கு இல்லை என்று உன்னை அனுப்பியவனிடம் சொல்வாயாக!” என்று தண்டராய சுவாமி சொன்னது அவனை மெள்ள கோபமூட்டியது.
அலெக்ஸாண்டர் ஆம்பி குமாரனை நண்பன் என்று அழைத்தாலும் அவன் உள்மனதைப் பொருத்தவரை காந்தாரம் அவன் வென்ற பூமி தான். ஆம்பி குமாரன் எதிர்த்திருந்தால் அவனை வென்று இந்தப் பூமியை அவன் அடைந்திருப்பான். ஆம்பி குமாரன் மிகவும் புத்திசாலித்தனமாக நட்புக்கரம் நீட்டி தொடர்ந்து காந்தாரத்தை ஆள அனுமதி பெற்றிருக்கிறானேயொழிய உண்மையில் இப்பகுதியின் ஆட்சியாளன் இப்போது அலெக்ஸாண்டர் தான். அப்படி இருக்கையில் ஆள்பவன் அழைத்த பிறகும் வர மறுத்ததோடு, அரசன் என்றும் அழைக்க மறுத்து ‘உன்னை அனுப்பியவன்’ என்று அலட்சியமாகச் சொன்னது மன்னிக்க முடிந்த குற்றமாக அவனுக்குத் தோன்றவில்லை. துறவிக்கும் அகம்பாவம் நல்லதல்ல....
நினைக்க நினைக்க சிறிது சிறிதாக கோபம் மேலெழ ஆரம்பித்தவுடன் அலெக்ஸாண்டர் முகம் சிவந்து போனது அவன் நிறத்துக்கு மிக நன்றாகவே தெரிந்தது. ஆம்பி குமாரன் முதல் முறையாக அவன் கோபத்தைப் பார்த்ததால் பயந்தே போனான். அரசனான தானே நிலைமை புரிந்து அனுசரித்துப் போகையில் ஒரு துறவி இப்படித் திமிராக நடந்து கொள்வதை அவனுக்கும் அகங்காரத்தின் உச்சமாகவே தோன்றியது. அலெக்ஸாண்டர் கோபப்பட்ட பிறகு, தான் கோபப்படாமலிருப்பது சரியல்ல என்று எண்ணியவனாக அவன் கோபத்துடன் கூறினான். “அகம்பாவத்துடன் பேசிய அந்தத் துறவியை மூட்டையைக் கட்டித் தூக்கி வருவது போல தூக்கிக் கொண்டு வர வேண்டியது தானே. அதை விட்டு அந்த ஆள் சொன்னதைக் கேட்டுக் கொண்டு வந்து தகவல் தெரிவிக்கிறீர்களே”
ஒனெஸ்க்ரீட்டஸ் ஒன்றும் சொல்லாமல் அலெக்ஸாண்டரைப் பார்த்தான். அலெக்ஸாண்டர் ஒரு தீர்மானத்திற்கு வந்தவனாக எழுந்தான்.
ஆம்பி குமாரன் அலெக்ஸாண்டரிடம் கேட்டான். “என்ன நண்பா?”
“அந்த அகம்பாவத் துறவியை நானே சென்று சந்திக்கிறேன். சிலருக்கு வாளின் மூலமாகத் தான் மரியாதையைக் கற்றுக் கொடுக்க வேண்டியிருக்கிறது. அப்படியும் கற்றுக் கொள்ள மறுத்தால் வாளுக்கு இரையாக்கவும் வேண்டியிருக்கிறது”
ஆம்பி குமாரனுக்குத் துறவிகளைக் காண்பதும், பேசுவதும் துன்பமாகவே இருந்த காரணத்தால் அவன் உடன் செல்ல விரும்பவில்லை. ஆனாலும் காந்தாரத்தில் அலெக்ஸாண்டர் ஓரிடம் செல்லும் போது உடன் செல்லா விட்டால் அது மரியாதையாக இருக்காது என்றும் தோன்றியதால் ”நானும் வரட்டுமா நண்பா?” என்று கேட்டு வைத்தான்.
ஆம்பி குமாரனின் மனநிலையைப் படிக்க முடிந்த அலெக்ஸாண்டர் புன்னகையுடன் சொன்னான். “வேண்டாம் நண்பா. நான் ஒனெஸ்க்ரீட்டஸையும் சில வீரர்களையும் அழைத்துச் செல்கிறேன்.”
காட்டின் அமைதியைக் குதிரைகளின் குளம்படிகள் சத்தம் குலைத்தது. ஒனெஸ்க்ரீட்டஸுடன் சென்றதை விட அலெக்ஸாண்டருடன் அதிக வீரர்கள் குதிரைகளில் சென்றதால் அதிகப்படியாக ஒலித்த ஓசை கேட்டு காட்டு விலங்குகள் பல வித குரல்களில் கத்தி, வரக்கூடிய ஆபத்தைத் தங்கள் சகாக்களுக்கு அறிவித்தன.
தண்டராய சுவாமி அந்த ஆபத்தை உணர்ந்த மாதிரி தெரியவில்லை. குதிரைகளின் குளம்படிச் சத்தம் நெருங்கி விட்ட போதும் அவர் மூடிய கண்களைத் திறக்காமல் இப்போதும் படுத்த நிலையிலேயே இருந்தார்.
ஒனெஸ்க்ரீட்டஸ் சற்று தொலைவில் பாறை மீது படுத்துக் கொண்டிருந்த தண்டராய சுவாமியைக் கைகாட்டினான். அலெக்ஸாண்டர் உடன் வந்த வீரர்களை அங்கேயே நிறுத்தி விட்டு ஒனெஸ்க்ரீட்டஸை மட்டும் தன்னுடன் வர சமிக்ஞை செய்து விட்டு குதிரையுடன் அந்தத் துறவியை நெருங்கினான்.
அலெக்ஸாண்டர் தன்னை நெருங்கிய பிறகும் தண்டராய சுவாமி கண்களைத் திறக்கவில்லை. அலெக்ஸாண்டர் அந்தத் துறவியிடமிருந்து தேஜஸுடன் வெளிப்பட்ட ஞான அலைகளை உணர்ந்தான். ஆனாலும் எப்போதும் மனதில் இருப்பதைத் தேவைப்பட்டால் ஒழிய முகத்தில் காட்டிக் கொள்ளும் பழக்கம் இல்லாத அலெக்ஸாண்டர் இடி முழக்கமிடும் குரலில் கர்ஜித்தான். “துறவியே”
தண்டராய சுவாமி மெல்லக் கண்களைத் திறந்து பார்த்தார். ஒனெஸ்க்ரீட்டஸ் அவருக்கு அலெக்ஸாண்டரை அறிமுகப்படுத்தும் வகையில் அறிவித்தான். “கடவுளின் புத்திரனும், மாவீரருமான சக்கரவர்த்தி அலெக்ஸாண்டர் வந்திருக்கிறார்...”
படுத்த நிலையிலிருந்த தண்டராய சுவாமி அலெக்ஸாண்டரைப் பார்த்த பின்னும் எழுந்திருக்கும் சிரமத்தை மேற்கொள்ளவில்லை. பார்த்த முதல் கணத்திலேயே பலர் கண்களில் காணும் பிரமிப்பை தண்டராய சுவாமியின் கண்களில் காண முடியவில்லை. அவர் விழிகளில் ஞான ஒளியைக் கண்ட போதும் அலெக்ஸாண்டரால் அவருடைய அலட்சியத்தை அலட்சியம் செய்ய முடியவில்லை. அவனுக்குள் கோபம் பொங்கியது. அதைக் கவனிக்க மறுத்தவராக அவர் ஒனெஸ்க்ரீட்டஸிடம் சொன்னார். ”அனைவரும் கடவுளின் புத்திரர்களே. நீயும், நானும், தள்ளி நிற்கும் அந்த வீரர்களும், அவர்களையும் தாண்டி இந்த வனமெல்லாம் நிறைந்திருக்கும் துறவிகளும் கூடக் கடவுளின் புத்திரர்களே. இந்தப் பெருமையை மானிடர்கள் மட்டுமே பெற்றவர்கள் அல்ல. விலங்குகளும், அனைத்து உயிரினங்களும் அப்படியே பெற்றிருக்கின்றன...”
அமைதி மாறாமல் சொன்ன தண்டராய சுவாமியின் சொற்களை ஒனெஸ்க்ரீட்டஸ் மொழி பெயர்த்துச் சொல்ல அலெக்ஸாண்டர் அனல் பறக்கும் பார்வையுடன் தண்டராய சுவாமியைப் பார்த்தபடியே தன் இடையில் சொருகியிருந்த வாளை உருவினான்.
உருவிய வாளைப் பார்த்த பின்பும் தண்டராய சுவாமி தன் அமைதியைச் சிறிதும் இழக்கவில்லை. அலெக்ஸாண்டர் கர்ஜனை செய்தான். “எனக்குச் சொந்தமான நிலத்தில் படுத்திருக்கிறாய் துறவியே. அப்படியிருந்தும் நான் அழைத்தும் நீ வர மறுக்கிறாய் என்பது தண்டனைக்குரியது.”
ஒனெஸ்க்ரீட்டஸ் அதை மொழிபெயர்த்துச் சொன்னதும் தண்டராய சுவாமி அலட்டாமல் புன்னகையுடன் சொன்னார். ”இந்த நிலம் யாருக்கும் சொந்தமானதல்ல. ஆனாலும் உன்னைப் போலவே இந்த நிலத்தை முன் எத்தனையோ காலங்களில் எத்தனையோ பேர் சொந்தம் கொண்டாடியிருக்கிறார்கள். இனி வரும் காலங்களிலும் அப்படியே பலர் இதை சொந்தம் கொண்டாடக்கூடும். ஆனாலும் இந்த வினோதம் தொடர்ந்து கொண்டு தானிருக்கிறது”
அந்த தத்துவார்த்த சிந்தனையை மெச்சாத அலெக்ஸாண்டர் சொன்னான். “இருக்கலாம். நான் நிகழ்காலத்தைப் பற்றிப் பேசுகிறேன் துறவியே. இப்போது இது எனக்குச் சொந்தமானது.”
தண்டராய சுவாமி மறுபடியும் புன்னகைத்தார். ”என்ன வேடிக்கை. நீ சொல்லும் இந்த நிகழ்காலத்தில் இந்தப் பாறையின் அடியில் உள்ள பூச்சிகள் இந்த நிலத்தை அவற்றுக்குச் சொந்தமானதாக எண்ணிக் கொண்டிருக்கின்றன.”
இந்த வகைப் பேச்சை இனியும் வளர்த்த விரும்பாத அலெக்ஸாண்டர் தன்னுடைய வாளை தண்டராய சுவாமியின் தொண்டையருகே நீட்டினான். ”நான் நினைத்தால் இந்தக் கணமே உன் உயிரை மாய்த்து விட முடியும் முட்டாள் துறவியே.”
அப்போதும் அலெக்ஸாண்டரால் தண்டராய சுவாமியின் விழிகளில் பயத்தைப் பார்க்க முடியவில்லை. தண்டராய சுவாமியின் புன்னகையும் முகத்தில் குறையவில்லை. ”இந்தக் கணமில்லா விட்டாலும் ஏதோ ஒரு கணம் இழக்கப் போகிற உயிர் எப்போது போனால் என்ன அலெக்ஸாண்டர்? அதில் கலங்குவதற்கோ பயப்படுவதற்கோ என்ன இருக்கிறது?”
தத்துவங்கள் பேசும் எத்தனையோ மனிதர்களை அலெக்ஸாண்டர் கண்டிருக்கிறான். ஆனால் மரணத்தின் வாயிலில் நிற்க வைக்கிற போது விதிவிலக்காக விரல் விட்டு எண்ணக்கூடிய ஒருசில மனிதர்களைத் தவிர மற்றவர்களிடம் வெளிப்படுவது பயம் மட்டுமே. தத்துவங்கள் நின்று போய் பயம் மட்டுமே தங்கும் சந்தர்ப்பங்கள் அவை. இந்த மனிதரும் ஒரு விதிவிலக்கே. சாக்ரசிடீஸைப் போல. எத்தனையோ முறை சாக்ரசிடீஸைப் பற்றி அலெக்ஸாண்டர் பிரமிப்புடன் நினைத்துப் பார்த்திருக்கிறான். அந்தக் காலத்தில் வாழ்ந்திருந்தால் அந்த உயர்வை நேரடியாகப் பார்த்திருக்கலாம் என்று ஆசைப்பட்டு இருக்கிறான். அது முடியாவிட்டாலும் சாக்ரசிடீஸைப் போன்ற இந்த மனிதரைக் காணும் சந்தர்ப்பம் இன்று அவனுக்குக் கிடைத்திருக்கிறது. மகத்தான ஞானி என்று அவரது தேஜஸும் சொல்கிறது, அவர் நடந்து கொள்வதிலிருந்தும் தெரிகிறது...
அலெக்ஸாண்டர் வாளை அதன் உறையில் செருகி விட்டு அவரைத் தலைவணங்கினான். அவரிடம் நீண்ட நேரம் பேசினான். நிறைய கேள்விகள் கேட்டான். தண்டராய சுவாமியும் அமைதியாகவும், பொறுமையாகவும், ஆழமான கருத்துகளைச் சொன்னார். உலகாளக் கிளம்பிய சக்கரவர்த்தியாக அல்லாமல் அரிஸ்டாட்டிலின் சீடனாக அவரிடமிருந்து ஞானாமிர்த மொழிகளைக் கேட்டுக் கொண்டிருந்து விட்டுக் கடைசியில் நன்றி சொல்லி மறுபடியும் தலைவணங்கி விட்டுக் கிளம்பிய போது அலெக்ஸாண்டரின் மனம் லேசாக இருந்தது.
இந்த உணர்வு சில மணி நேரங்கள் தான் அவனிடம் தங்கப் போகிறது. மறுபடி ஏதோ ஒரு நாள் தனிமையில் அவன் இதை யோசிக்கலாம். எதுவும் அவனை மாற்றி விடப் போவதில்லை. அப்படி மாறிவிடவும் அவன் விரும்பவில்லை. ஆனாலும் அவ்வப்போது இந்த ஞானத்தை அவனால் தேடாமல் இருக்க முடியவில்லை. இதைப் பற்றிச் சிந்திக்காமல் இருக்க முடியவில்லை. சிறிது காலமே தங்கினாலும் இது தரும் ஆசுவாசம் மகத்தானது!
(தொடரும்)
என்.கணேசன்
You have brought out dual personality of Alexandre nicely sir.
ReplyDeleteநான் அலெக்சாண்டர்...தாண்டவராய சுவாமியை ஏதேனும் செய்து விடுவானோ என்று நினைத்தேன்... ஆனால், அலெக்சாண்டர் அவருடைய ஞானத்தை கண்டு அவரிடம் பணிவாக சென்றது சிறப்பு....
ReplyDeleteCan i buy on line copy,if so where, please let me know
ReplyDeleteGreatness of Alexander and Thandaraya Swamigal, Amazing!
ReplyDelete