என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, August 19, 2021

இல்லுமினாட்டி 116



சாலமன் வெளியேறிய பின் ஒளிர்கின்ற மெழுகுவர்த்தியை அணைத்த விஸ்வம் சாலமனின் கார் கிளம்பிப் போகிற வரை காத்திருந்துவிட்டுப் பின் மேடைப் பகுதியின் ஒரு மூலையில் தெரிந்த சிறிய அசைவைப் பார்த்துவிட்டு ஜிப்ஸியைக் கேட்டான். “நீ என்ன நினைக்கிறாய்?”

ஜிப்ஸி அவன் எதிரில் வந்தமர்ந்தான். விஸ்வத்தின் இப்போதைய கண்கள் கூட இருட்டில் இருந்து கொண்டே அனைத்தையும் பார்க்கும் திறனைப் பெற்று விட்டது என்று வியப்புடன் ஜிப்ஸி நினைத்தான். அவன் சொன்னான். “முதல் பேச்சிலேயே நல்ல முன்னேற்றம் தான். இங்கிருந்து வாஷிங்டன் போய் வருவதற்குக் கூட ஏற்பாடு செய்து விட்டாய் சபாஷ்.”

விஸ்வம் அந்தப் பாராட்டைப் பெரிதுபடுத்தாமல் கேட்டான். “சாலமன் எர்னெஸ்டோவின் பங்களாவில் இருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் சொன்னாரே, அது முழுவதும் சரியா, இல்லை எதாவது முக்கிய விவரத்தை விட்டிருக்கிறாரா?”

ஜிப்ஸி சொன்னான். “சொன்னது முழுவதும் சரி தான். எதையும் விட்டுவிடவில்லை”

விஸ்வம் நிம்மதி அடைந்தான். ஒரு மனிதன் சின்னச் சின்ன விஷயங்களில் எல்லாம் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறான் என்பதை விஸ்வம் உறுதியாய் நம்பினான். சாலமன் அந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஒருசில விஷயங்களைச் சொல்லாமல் விட்டிருந்தால் கூட, அல்லது ஏதாவது சிலவற்றை மாற்றிச் சொல்லியிருந்தால் கூட, அவரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அவன் முடிவு செய்திருப்பான்.

விஸ்வம் கேட்டான். “வாங் வே?”

“அவர் சொன்னதிலும் பொய்யோ, சூழ்ச்சியோ இல்லை” என்றான் ஜிப்ஸி. ”அவர் உன்னை விரும்புகிறாரோ இல்லையோ, எர்னெஸ்டோவை வெறுக்கிறார். அந்த ஆளை இல்லுமினாட்டியின் தலைமைப் பதவியிலிருந்து இறக்கி வைக்க சைத்தான் காலைப் பிடிக்க வேண்டியிருந்தாலும் அதைச் சந்தோஷமாகச் செய்வார்.... வாங் வே தான் இல்லுமினாட்டியின் வரலாற்றிலேயே தலைமைக்கு எதிராகத் தைரியமாய் இறங்கியிருக்கும் முதல் ஆள். அவரும் உன்னை மாதிரி ஒருவன் இருப்பதால் தான் தைரியம் பெற்று இறங்கியிருக்கிறார். கண்டுபிடிக்கப்பட்டால் அவரும் சாலமனும் இறப்பது உறுதி...”

விஸ்வம் புரிகிறது என்று தலையசைத்தான். நடப்பது எல்லாம்  சாதகமாகத் தான் இருக்கின்றன. விதி அவனுக்கு வேண்டியவர்களை எப்படியாவது அவனிடம் இழுத்து வந்து விடுகின்றது. முதலில் ஜிப்ஸி... இப்போது இவர்கள்...

ஜிப்ஸியைப் பொருத்த வரை அவன் யாரென்பதை விஸ்வம் ஓரளவு யூகித்து விட்டிருந்தான். ஆரம்பத்தில் அவன் சாதாரணமானவன் அல்ல அவனைவிடப் பல மடங்கு சக்தி வாய்ந்தவன் என்பதை விஸ்வம் புரிந்து கொண்டிருந்தான். ஆனால் அப்படிப்பட்ட ஒருவன் இந்த உலகத்தில் இருந்து, அவனை அறியாமல் விஸ்வம் இருந்திருப்பது சாத்தியமேயில்லை. சில யோகிகள், சித்தர்கள் வேண்டுமானால் அவனை விடச் சக்தி வாய்ந்தவர்களாக இருக்கலாம். அவர்களைப் பொதுக்கணக்கில் எடுக்க முடியாது. அவர்கள் இது மாதிரி வேலையில் எல்லாம் ஈடுபட மாட்டார்கள். அப்படி இருக்கையில் ஜிப்ஸி அவனை விடவும் சக்தி வாய்ந்தவனாய் இருந்து இப்படி அவனுக்கு உதவவும் முன் வந்திருக்கிறான் என்பதே விஸ்வத்தை நிறைய யோசிக்க வைத்தது. அதன் பிறகு அவன் கூர்மையாக ஜிப்ஸியைக் கவனித்து வந்தான்.

ஜிப்ஸியின் மற்றசில நடவடிக்கைகள் அவனைக் காட்டிக் கொடுத்து விட்டன. உதாரணத்திற்கு, ஜிப்ஸி என்றுமே அவனுடன் அமர்ந்து எதாவது சாப்பிட்டோ, குடித்தோ விஸ்வம் இது வரை பார்த்தது கிடையாது. விஸ்வத்துக்குச் சாப்பிட உணவும், நீரும் ஒரு நாளைக்கொரு முறை கொண்டு வந்து தருவான். அது எங்கிருந்து என்று அவன் சொன்னது கிடையாது. அவன் கார் எடுக்கும் சத்தமோ, நிறுத்தும் சத்தமோ இங்கு வந்ததிலிருந்து அவனுக்குக் கேட்டது கிடையாது. சொல்லப்போனால் இங்கே வந்த பின்பு அவன் காரையே விஸ்வம் பார்த்தது கிடையாது. ஒரு முறை விஸ்வம் கேட்ட போது சற்று தூரத்தில் ஓரிடத்தில் ஒளித்து வைத்திருப்பதாக ஜிப்ஸி சொன்னான்.

அதே போல் அவன் உறங்கியும் விஸ்வம் பார்த்தது கிடையாது. படுப்பதற்குத் தயாராவது போல் ஒரு விரிப்பு இருக்கும். அவன் படுத்தும் பார்த்திருக்கிறான். ஆனால் ஆழ்ந்த உறக்கத்திற்கு அவன் போய் இது வரைக்கும் விஸ்வம் பார்த்ததில்லை.   ஜிப்ஸி உட்கார்ந்தும், நின்றும், நடந்தும், படுத்தும் பார்த்திருந்தாலும் ஆழ்ந்த உறக்கத்தில் அவனைப் பார்க்க முடியாதது விஸ்வத்துக்கு விசித்திரமாகவே இருந்தது.  அதே போல் அவன் காலைக்கடன் கழிக்கப் போயோ சிறுநீர் கழிக்கப் போயோ கூட விஸ்வம் பார்த்ததில்லை. அதனாலேயே அவன் மனிதன் அல்ல என்பது விஸ்வத்துக்குத் தெளிவாகத் தெரிந்துவிட்டது. 

அக்‌ஷயின் புகைப்படம் ஒன்று வேண்டும் என்று விஸ்வம் கேட்ட போது ஒத்துக் கொண்ட ஜிப்ஸி ஏழு மணி நேரம் தான் அவன் பார்வையில் இல்லாமல் இருந்தான். அந்த ஏழு மணி நேரத்தில் அவன் காரில் அதிவேகமாகப் போனாலும் விமானநிலையம் போய் அக்‌ஷயைப் புகைப்படங்கள் எடுத்து விட்டுத் திரும்ப வந்திருக்கவே முடியாது. மனித முயற்சியாக இருந்தால் குறைந்த பட்சம் பன்னிரண்டு மணி நேரமாவது தேவைப்பட்டிருக்கும்.

ஆனால் விஸ்வம் ஜிப்ஸியின் உண்மை அடையாளத்தை யூகித்ததைக் காட்டிக் கொள்ளவில்லை. ஜிப்ஸி ஏதோ நாடகம் நடத்துகிறான். அவன் நட்பில் மட்டும் சந்தேகம் வராததால் நடத்தட்டும் இந்த நாடகத்தை என்று விஸ்வம் விட்டு விட்டான்.

ஜிப்ஸி சொன்னான். “ஒன்றை மட்டும் நினைவு வைத்துக் கொள். எர்னெஸ்டோவைக் கொன்றது நீ தான் என்ற சிறிய சந்தேகம் இல்லுமினாட்டி உறுப்பினர்களுக்கு வந்தால் கூடப் பின் நீ இல்லுமினாட்டியின் தலைவனாக ஆக முடியாது..”

விஸ்வம் அமைதியாகச் சொன்னான். “இல்லுமினாட்டியைப் பொருத்த வரை நான் ஜெர்மனியிலேயே அடைபட்டு இருப்பவன். வாங் வே, சாலமன் தவிர அவர்கள் யாருக்கும் நான் வாஷிங்டன் போவது தெரியப்போவதில்லை. அதனால் வாஷிங்டனில் கிழவர் இறந்தால் ஜெர்மனியில் இருக்கும் என்னை எப்படிக் காரணம் சொல்ல முடியும்?”

ஜிப்ஸி புன்னகைத்தான். இன்னும் வாஷிங்டனில் எர்னெஸ்டோவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றியோ அவர் பயண நேரங்கள் பற்றியோ, தங்கும் இடங்கள் பற்றியோ விஸ்வத்துக்குத் தெரியவில்லை. ஆனால் அங்கு எர்னெஸ்டோவைக் கொல்வது உறுதி என்ற நம்பிக்கை மட்டும் அவனுக்கு இருக்கிறது…

விஸ்வம் அவனைக் கேட்டான். “உனக்கும் வாஷிங்டன் போக ஒரு டிக்கெட் செய்யச் சொல்லட்டுமா?”
                 
“வேண்டாம். நான் வந்து கொள்கிறேன்” என்று ஜிப்ஸி சொன்னான்.



உன் வேற்றுக்கிரகவாசி நண்பன் எப்போது வருவான்? அவன் வந்தால் தான் இந்தப் போட்டி சரியாக இருக்கும்” என்று   எர்னெஸ்டோ சொன்னதற்கு க்ரிஷ் மெல்லிய சோகத்துடன் சொன்னான். “அவன் வந்தாலும் இந்தப் போட்டியில் நம் பக்கம் சேர்ந்து கொள்ள மாட்டான்…”
                  
எர்னெஸ்டோ ஆச்சரியத்துடன் கேட்டார். “ஏன்?”

“அவனிடம் ஒரு முறை எதிரியை நீயே அழித்து விடலாமே, இந்த உலகத்திற்கு உபகாரமாய் இருக்குமே என்று  நான் கேட்டிருக்கிறேன். அதற்கு அவன் மாட்டேன் என்று சொல்லி விட்டான். அவன் சொன்னான். “நான் அவனை அழித்து விட்டுப் போனால் அவனைப் போலவே சீக்கிரமே இன்னொருவன் உருவாகி விடுவான். அப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் உன் உலகம் இருக்கிறது. அவனை அழித்து அந்தத் தீமைக்கான சூழ்நிலையையும் அழித்தால் மட்டுமே உன் உலகம் காப்பாற்றப்படும். அதை வெளியிலிருந்து யாரும் செய்வது தற்காலிகத் தீர்வாகுமே ஒழிய நிரந்தரத் தீர்வாகாது” என்றான். அதனால் அவன் இப்போது வந்தாலும் நமக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை…”

இம்மானுவல் கேட்டான். “உன் ஏலியன் நண்பன் இங்கே இன்னொரு ஏலியன் வந்திருப்பதையோ, அது எதிரிக்கு உதவுவதையோ பற்றி உன்னிடம்  சொல்லியிருக்கிறானா?”

“இல்லை” என்று சொன்ன க்ரிஷுக்கு அந்த இன்னொரு ஏலியன் பற்றி வேற்றுக்கிரகவாசி நண்பனுக்குத் தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை என்று தோன்றியது. ஏனென்றால் இவர்கள் அலைவரிசைகளை வைத்துக் கண்டுபிடித்திருப்பதைப் பார்த்தால் சில வருடங்களுக்கு முன்பே விஸ்வத்தின் கூட்டாளி இரண்டு தடவை வந்து சென்றிருக்கிறான். அப்படியிருந்தும் கூட  அதைப் பற்றி வேற்றுக்கிரகவாசி நண்பன் ஏன் சொல்லவில்லை என்று தெரியவில்லை...

அக்‌ஷய் க்ரிஷிடம் தன் சந்தேகத்தைக் கேட்டான். “உன் வேற்றுக்கிரகவாசி நண்பன் அப்படிச் சொன்னான், இப்படிச் சொன்னான் என்று சொல்கிறாயே உருவமே இல்லாமல் அவன் உன்னிடம் எப்படிச் சொன்னான்? அசரீரி போல் அவன் சொல்லும் சத்தம் மட்டும் கேட்குமா?”

க்ரிஷ் சிரித்தான். “இல்லை. அவன் என் உணர்வு நிலையில் புகுந்து கொள்ள அனுமதி தந்திருந்தேன். அதனால் காதால் கேட்டு மூளை அதை உள்வாங்கித் தெரிந்து கொள்வதெல்லாம் இல்லை. நேரடியாக நம் மனதிலும் மூளையிலும் அவன் சொல்வது பதிந்து விடும்...”


அவர்களுக்கு அவன் சொன்னது மிக வினோதமாக இருந்தது என்பது அவர்கள் மூவரின் முகபாவனையிலேயே தெரிந்தது. 


(தொடரும்)
என்.கணேசன் 

Monday, August 16, 2021

யாரோ ஒருவன்? 45



ஜெய்ராமின் முகம் போன போக்கைப் பார்த்து ஆசிரமத் தலைவர் வாய்விட்டுச் சிரித்து விட்டார். ”துறவறம் வாங்கினால் தான் சீடன் என்று இல்லை. குருவாக ஏற்றுக் கொண்டு குருவின் நிழலாகவே இருப்பவன் துறவறம் மேற்கொண்டாலும், மேற்கொள்ளாவிட்டாலும் சீடன் தான். அதே போல் ஒரு துறவிக்குக் குரு துறவியாகவே இருக்க வேண்டும் என்பதில்லை...”

ஜெய்ராமுக்குக் குழப்பம் கூடுவது போலிருந்தது. இந்த ஆள் என்ன இப்படி வார்த்தைகளில் ஜாலம் காட்டுகிறான்...

ஆசிரமத்தலைவர் சிரிப்பு குறையாமல் சொன்னார். “ஆன்மீக நூல்கள் எல்லாம் எழுதியிருக்கிறீர்களே உங்களுக்குத் தெரியாதா? சுகப்பிரம்ம ரிஷிக்குக் குரு யார்? ஜனகர் அல்லவா? ஜனகர் ஒன்றும் துறவி அல்லவே?”

ஜெய்ராம் இந்த ஆன்மீக எழுத்தாளர் வேடம் பிரச்சினைக்குரியது என்பதை இப்போது புரிந்து கொண்டான். இதில் இன்னும் ஆழமாய்ப் போவது தனக்கு நல்லதல்ல என்று கணக்குப் போட்டவனாய் தானும் சிரித்து மழுப்பினான். “உண்மை... உண்மை.... நான் தான் பொதுவான ஒரு அபிப்பிராயத்தில் இருந்து விட்டிருக்கிறேன். சரி சுவாமிஜி. புத்தகம் எழுத எனக்கு முக்தானந்தாஜி பற்றிய முழுவிவரம் தேவைப்படுகிறது...”

நல்ல வேளையாக ஆன்மீகச் சொற்பொழிவுக்குப் போகாமல் அவனிடம் ஆசிரமத்தலைவர் சொல்ல ஆரம்பித்தார். “ஸ்வாமி லக்னோவில் ஒரு கோர்ட் குமாஸ்தாவுக்கு மூன்றாவது மகனாய் பிறந்தவர். சிறிய வயதிலிருந்தே அவருக்கு ஆத்மஞானத்தில் ஈடுபாடு அதிகமாய் இருந்தது. எங்கே ஆன்மீகச் சொற்பொழிவுகள் இருந்தாலும் போய் விடுவார்....”

எழுதப் போகாத கதையைக் கேட்பது கொடுமையாகத் தான் இருந்தது என்றாலும்  எடுத்த வேடத்திற்குப் பொருத்தமான ஆர்வத்தைக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருந்த ஜெய்ராம் ஆர்வத்தைக் காட்டி, அவர் சொல்லச் சொல்ல குறிப்புகள் எடுத்துக் கொண்டான். இருபது நிமிடங்கள் பேசி அவனை இம்சைக்கு உள்ளாக்கி விட்ட ஆசிரமத்தலைவர் கடைசியில் “எல்லாம் எங்கள் ஆசிரம வெப்சைட்டில் இருக்கிறது” என்று சொன்னார்.

“பாவி, இத்தனை நேரம் இந்த அறுவைக் கதை சொல்வதற்குப் பதிலாய் ஆரம்பத்திலேயே அதைச் சொல்லித் தொலைத்திருக்கலாமே. நான் கேட்க வேண்டியிருந்த முக்கியக் கேள்விகளை எல்லாம் கேட்க ஆரம்பித்திருப்பேனே” என்று நினைத்துக் கொண்ட ஜெய்ராம் அந்த ஆசிரம வெப்சைட்டையும் குறித்துக் கொண்டான்.

”இந்த ஆசிரமம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது?”

“பதினெட்டு வருடங்களுக்கு முன்னால்”

“நீங்கள் அப்போது இங்கிருந்தீர்களா?”

“இல்லை. நான் இங்கே வந்து பதினைந்து வருடம் ஆகிறது...”

“இங்கே ஆசிரமம் அமைப்பதற்கு முன் சுவாமிஜி எங்கிருந்தார்?”

“குறிப்பாய் ஒரு இடத்தில் என்று சொல்வதற்கில்லை. இமயமலையில் பல இடங்களில் இருந்திருக்கிறார்...”

“மகராஜ் சுவாமிஜியுடன் எப்போது எங்கே சேர்ந்தார்?”

“சரியாகத் தெரியவில்லை.... ஆனால் சுவாமி அவரைச் சின்னக்குழந்தை போலவே தான் பாசத்துடன் பார்த்துக் கொண்டார். அதனால் சின்னப் பையனாக இருக்கும் போதே மகராஜ் சுவாமியுடன் சேர்ந்து கொண்டிருக்க வேண்டும்...”

இப்படித் தோராயமாய் அவர் பதில் சொன்னது ஜெய்ராமை அதிருப்திக்கு உள்ளாக்கியது. என்ன இவர் அனுமானமாய் தான் சொல்கிறார் என்று நினைத்தவனாய்க் கேட்டான். “உங்களுக்கே சரியாகத் தெரியவில்லையா?”

அவர் தனக்குத் தெரியாததை அப்படியே சொல்வதில் எந்த கவுரவக்குறைவும் காணவில்லை. “ஆமாம். சுவாமி பழங்கதைகளைக் கிளறிக் கேட்பதை ரசிப்பதில்லை. ஆத்மஞானம் தேடி வந்தவனுக்கு அடுத்தவன் கதை எதற்கு? உன்னையே கவனி. நீ யார் என்பதை உணர்ந்து கொள் என்று சொல்வார்”

இப்போதைய ஆசிரமத்தலைவருக்குக் கூடத் தெரியாத தகவல் என்பது ஜெய்ராமுக்குப் பலத்த சந்தேகத்தைக் கிளப்பியது. மறுபடி நாகராஜ் பற்றிய கேள்விகளைக் கேட்க ஆசைப்பட்டாலும் ஆசிரமத்தலைவருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று நினைத்த ஜெய்ராம், சுற்றி வளைத்து மீண்டும் பிறகு இதற்கு இயல்பாய் வருவது போல் வரலாம் என எண்ணினான்.  

“நான் முக்கியமாய் சுவாமிஜியுடன் நெருங்கிப் பழகியவர்களின் அனுபவங்கள் பற்றி எழுதலாம் என்றிருக்கிறேன். அதனால் உங்கள் அனுபவங்களைச் சொல்ல முடியுமா?”

ஆசிரமத்தலைவர் சந்தோஷமாய் சொல்ல ஆரம்பித்தார். சுவாமி முக்தானந்தா, மிக எளிமையானவர், திரிகால ஞானி, ஞானக்கடல், எல்லார் மனதையும் ஊடுருவக்கூடியவர், எத்தனையோ சக்திகள் இருந்தாலும் அவற்றை அதிகமாய் வெளிப்படுத்தாதவர், ஒழுக்க விஷயத்தில் கண்டிப்பானவர் என்பதையெல்லாம் உதாரணங்களுடன் அவர் விரிவாகச் சொல்ல, ஆர்வத்துடன் கேட்பவன் போல கஷ்டப்பட்டு ஜெய்ராம் காட்டிக் கொண்டான். கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் அவர் பேசியதைக் குறிப்பு எடுப்பவன் போல ஜெய்ராம் கிறுக்கிக் கொண்டே வந்தான்.

அந்த மனிதர் களைத்துப் போய் அருகில் பாட்டிலில் வைத்திருந்த தண்ணீரைக் குடிக்கையில் இனியும் தொடர்ந்து விடுவாரோ என்ற பயத்தில் விஷயத்துக்கு வந்தான். “சுவாரசியம்.... சுவாரசியம்.... உண்மையில் என் நண்பர் சொன்ன கருத்துக்களையே நீங்களும் நல்ல உதாரணங்கள் சொல்லி உறுதிப்படுத்தினீர்கள். உங்கள் அனுபவங்களைப் போல மகராஜின் அனுபவங்களும் சுவாரசியமாக இருக்கும் என்று நம்புகிறேன். அவர் எப்போது தென்னிந்தியாவிலிருந்து திரும்புவார்?”

ஆசிரமத்தலைவர் சொன்னார். “தெரியவில்லை.”

அவர் கூடுதலாக எதையாவது சொல்வார் என்று எதிர்பார்த்து ஏமாந்த ஜெய்ராம் சொன்னான். “நான் வரும் குரு பூர்ணிமாவில் சுவாமி பற்றிய நூலை வெளியிடுவது பொருத்தமாய் இருக்கும் என்று நினைக்கிறேன். அதற்கு இன்னும் ஒன்றரை மாதங்கள் தானிருக்கின்றன. அதற்குள் மகராஜையும் சந்தித்து அவர் அனுபவங்களையும் கேட்டுக் கொண்டால் நல்லதல்லவா?”

”மகராஜிடம் ஆறு மாதங்கள் வரை அப்பாயின்மெண்ட் இல்லையே...” என்று ஆசிரமத்தலைவர் இரக்கத்துடன் அவனைப் பார்த்தார்.

எல்லாம் தெரிந்திருந்தும் தெரியாதவனைப் போல் ஜெய்ராம் குழப்பத்துடன் அவரைப் பார்த்தான். அவர் சொன்னார். “மகராஜ் ஒரு நாளுக்கு ஒருவரைத் தவிர வெளியாட்களைச் சந்திப்பதில்லை. அந்தச் சந்திப்புக்கு ஐந்து லட்சம் வாங்குகிறார். அதற்கே ஆறு மாதம் வரை பதிவு செய்து மக்கள் காத்திருக்கிறார்கள்.”

ஜெய்ராம் திகைப்பு காட்டி அவரைப் பார்த்தான். அவர் சொன்னார். “ஆசிரமம் எத்தனையோ தர்ம காரியங்களை அந்தப் பணத்தால் செய்து வருகிறது. அவர் தன்னுடைய அபூர்வ சக்திகளை அந்த அளவில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று சுவாமி அவருக்கு அறிவுறுத்தியிருக்கிறார். அதனால் தான் அப்படி”

ஜெய்ராம் சொன்னான். “நான் எனக்காக எதையும் கேட்கப் போவதில்லையே. அவருடைய குருவின் புத்தகம் எழுதத் தேவையான தகவல்களுக்காகத் தானே அவரைச் சந்திக்க விரும்புகிறேன்...”

“காரணம் எதுவாக இருந்தாலும் அவர் இந்தக் கட்டுப்பாட்டைத் தளர்த்துவதில்லை. எத்தனையோ பத்திரிக்கைக்காரர்கள், தொலைக்காட்சிக்காரர்கள் அவரைப் பேட்டி எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட போது கூட இந்த நிபந்தனையை அவர் தளர்த்தவில்லை. ஏனென்றால் மகராஜுடன் தனியாக அரை மணி நேரம் இருந்து விட்டுப் போனால் கூட பலருக்கு எத்தனையோ நல்லது நடந்து விடுகிறது. அதனால் எத்தனையோ பேர் அவரை ஒரு முறை சந்தித்தால் போதும் என்று நினைத்து இது போல் வேறு காரணங்கள் சொல்லி முயற்சி செய்கிறார்கள். அதனால் குருவின் வார்த்தையை வேதவாக்காக எடுத்துக் கொண்டு அவர் இந்த முடிவு எடுத்து அதில் மிக உறுதியாய் இருக்கிறார்...”

ஜெய்ராமுக்குச் சுருக்கென்றது. அவன் சிறிது யோசித்து விட்டுச் சொன்னான். “நீங்களே சுவாமிஜி பற்றி ஒரு நல்ல நூல் வெளிவர வேண்டும் என்று ஆசைப்படுவதாகச் சொன்னீர்கள். அதை மகராஜிடம் சொல்லி இருப்பதாகவும் சொன்னீர்கள். அப்படிப்பட்ட ஒரு முயற்சிக்குக் கூடவா அவர் உதவ மாட்டார்.”

ஆசிரமத்தலைவர் தயக்கமில்லாமல் சொன்னார். “அவரிடம் பேட்டி எடுத்து தான் அந்த நூல் வெளிவர வேண்டுமென்றால் அவர் அதை விரும்ப மாட்டார்.”

ஜெய்ராம் தான் உணர்ந்த திகைப்பை வெளிப்படையாகவே காட்டினான். அவர் அவனைப் புரிந்து கொண்டது போல் அமைதியாகச் சொன்னார். “அவர் சாதாரண மனிதரல்ல. அதனால் அவர் சாதாரண மனிதர்கள் நடந்து கொள்வது போல் நடந்து கொள்வார் என்று எதிர்பார்ப்பது வீண்”

இத்தனை நடிப்பும், முன்னேற்பாடும் இப்படி வீணாகி விடும் என்று ஜெய்ராம் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. இனி என்ன செய்வது என்று அவசரமாக யோசித்தான்.


(தொடரும்)
என்.கணேசன்  

Thursday, August 12, 2021

இல்லுமினாட்டி 115


எர்னெஸ்டோ இரண்டு நாட்களாக வெளியாட்கள் யாரையும் சந்திக்கவில்லை. கொடுத்திருந்த அப்பாயின்மெண்ட்களை எல்லாம் ரத்து செய்ய அவருடைய உதவியாளனிடம் சொல்லி விட்டார். அவர், அக்‌ஷய், க்ரிஷ், இம்மானுவல் நால்வரும் மட்டுமே தற்போதைய நிலவரங்களை அலசிக் கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் அதுவும் அவருக்குச் சலித்து விட்டது. “வேறெதாவது பேசுவோம். விஸ்வம், கூட்டாளி இந்த இரண்டு பேரைப் பற்றிப் பேசியே எனக்குச் சலித்து விட்டது” என்று எரிச்சலோடு சொன்னார். 


இது இம்மானுவலுக்குப் புதிதல்ல. பல முறை அவன் அவர் இது போல் அதிமுக்கியமான விஷயங்களை அலசிக் கொண்டிருந்து விட்டு திடீரென்று சம்பந்தமேயில்லாத வேறெதாவது ஒன்றில் ஆழ்ந்து போவது உண்டு. ஆரம்பத்தில் அது இம்மானுவலுக்குப் பொறுப்பற்ற செயலாகத் தோன்றியதுண்டு. மிக முக்கியமான சக்தி வாய்ந்த ஒரு அமைப்பின் தலைவர் இப்படி விளையாட்டுத்தனமாய் இருக்கலாமா என்று அவன் நினைத்ததுண்டு. ஆனால் அவர் அப்படி சம்பந்தமேயில்லாத வேறு விஷயங்களில் சிறிது நேரம் ஆழ்ந்து இருந்து விட்டு மறுபடி அந்த அதிமுக்கியமான விஷயங்களுக்கு வந்து மிகத் தெளிவாக ஒரு கச்சிதமான முடிவெடுப்பதைப் பார்த்து வியந்தும் இருக்கிறான். அதனால் இப்போது அந்த யுக்தியை அவர் கையாண்ட போது அவன் புன்னகைத்தான். 


எர்னெஸ்டோ திடீர் என்று நினைவு வந்தவராக அக்‌ஷயிடம் சொன்னார். “நீ பல வருடங்களுக்கு முன்னால் புத்தரின் அவதாரம் என்று சொல்லப்படும் சிறுவனைத் திபெத்திலிருந்து இந்தியாவுக்குக் காப்பாற்றிக் கொண்டு போனாய் என்று கேள்விப்பட்டேனே அந்தப் பையன் உண்மையில் புத்தரின் அவதாரம் தானா?” 


”அப்படித் தான் தலாய் லாமாவும், திபெத்தில் இருந்த சம்யே மட புத்த பிக்குகளும் சொன்னார்கள்” என்று அக்‌ஷய் சொன்னான். 


“அவன் பெயர் என்ன?” 


“மைத்ரேயன்” என்று அக்‌ஷய் மென்மையாகச் சொன்னான். அந்தச் சிறுவனின் நினைவு அவன் மனதை லேசாக்கியது. அவன் நினைவு வரும் போதெல்லாம் சோகமும், மென்மையும் சேர்ந்து அவன் மனதை சூழ்ந்து கொள்ளத் தவறுவதில்லை. 


எர்னெஸ்டோ ஆர்வத்தோடு சொன்னார். “அவனைப் பற்றிச் சொல்லேன்” 


அக்‌ஷய் சொல்ல ஆரம்பித்தான். ஆரம்பத்திலிருந்து அவன் சொன்ன அந்தச் சுவாரசிய நிகழ்வுகளில் மற்ற மூவருமே காலத்தை மறந்தார்கள். அவன் சொன்னதை வைத்தே அவர்கள் மூவரும் மைத்ரேயனைத் தங்கள் மனக்கண்ணில் தெளிவாகப் பார்த்தார்கள். எதனாலும் பாதிக்கப்படாத அமைதி, பயம், கர்வம் இந்த இரண்டையுமே அறியாத அவன் இயல்பு இதெல்லாம் அவர்களை வியக்க வைத்தன. 


அக்‌ஷய் சொன்னான். “என் வாழ்க்கையில் உயர்ந்ததும், தாழ்ந்ததுமான எத்தனையோ மனிதர்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் நான் பார்த்ததில் மனதை முழுவதுமாய் வென்று ஒவ்வொரு கணமும் நினைக்க வேண்டியதை மட்டுமே நினைத்து விலக்க வேண்டியதை விலக்கியே வைக்க முடிந்த ஒரே ஒரு மனிதப்பிறவி மைத்ரேயன் தான்.... திபெத்தில் சம்யே மடாலயத்தில் அவனை ஒருவன் கொல்ல வந்த போது அந்த ஆளை நான் தடுத்துத் தாக்கிச் சாய்த்து விட்டேன். அத்தனை களேபரத்திலும் சிறிது கூடப் பாதிக்கப்படாமல் வேறெங்கோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் மைத்ரேயன். நான் அவனிடம் கேட்டேன். “அவனைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?” என்று. அப்போது அவன் சொன்னான். “ஒன்றும் நினைக்கவில்லை” என்று. நான் அவனை ஏனென்று கேட்டேன். அதற்கு அவன் “அந்த ஆளைப் பற்றி ஏன் நினைக்க வேண்டும்?” என்று என்னைக் கேட்டான். அது நடிப்போ பாசாங்கோ அல்ல. உண்மையாகவே அவன் நினைக்கவில்லை. அவன் எதிரிகள் அவன் உடலை மட்டுமல்ல அவன் எண்ணங்களைக் கூட ஆக்கிரமிக்க முடியவில்லை என்பது தான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்....” 


எர்னெஸ்டோ பிரமிப்போடு சொன்னார். ”உண்மையில் அது தான் ஆளுமை. அது தான் உச்சம். நீ அதிர்ஷ்டசாலி அக்‌ஷய். உன் வாழ்க்கையில் நீ அப்படிப்பட்டவனுடன் சில காலம் வாழ்ந்திருக்கிறாய்...” 


அக்‌ஷய் கண்கள் ஈரமாகச் சொன்னான். “என் வாழ்க்கையில் என் பெற்றோரை இழந்த சோகத்திற்கு அடுத்தபடியாக நான் அதிக சோகத்தை உணர்ந்தது அவனைப் பிரிந்த போது தான். ஆனால் அவன் வாழ்க்கையில் ஆட்கள் வரும் போதும், போகும் போதும் அதிகமாய் பாதிக்கப்பட்டதே இல்லை. ஒரு முறை அவன் என்னிடம் சொல்லியிருக்கிறான். “நம் வாழ்க்கையில் யார் எத்தனை காலம் நம்முடன் இருக்க வேண்டும் என்று தீர்மானிப்பது விதி தான். அவ்வப்போது சில பேரைச் சேர்க்கும், சில பேரை விலக்கும். இதில் விதி நம் அபிப்பிராயங்களை லட்சியம் செய்வதில்லை. வாழ்க்கை முழுவதும் இப்படித் தான் என்று இருக்கையில் யார் நம் வாழ்க்கையில் வந்தாலும் அவர்கள் இருக்கும் வரை அன்பாகவும், இணக்கமாகவும் இருந்து விட்டு, அவர்கள் போகும் போது புரிதலோடு விடை கொடுப்பது தானே புத்திசாலித்தனம்....” இது நம் அறிவுக்கும் எட்டுகிறது. ஆனால் இதயத்திற்குத் தான் எட்டுவதில்லை. ஆனால் அவனைப் பொருத்த வரை அறிவும் இதயமும் இணைந்தே செயல்படுவது போலத்தான் தெரிந்தது…” 


க்ரிஷ் ஆச்சரியத்துடன் சொன்னான். “என் வேற்றுக்கிரகவாசி நண்பனும் மனிதகுலம் அடைய வேண்டிய அடுத்த நிலை அறிவும் இதயமும் ஒன்று சேர்ந்த நிலை என்று சொன்னான். உங்கள் மைத்ரேயன் அப்படி அந்த உயர்நிலையை முன்பே எட்டி விட்டான் பார்த்தீர்களா?” 


இம்மானுவல் அதிகம் ரசித்தது அக்‌ஷய் திபெத்திலிருந்து மைத்ரேயனுடன் தப்பித்து வந்த யுக்திகளைத் தான். ஒவ்வொரு இடத்திலும் அக்‌ஷய் எப்படியெல்லாம் வித்தியாசமாய் சிந்தித்துச் செயல்பட்டுத் தப்பித்திருக்கிறான் என்பதை அவனால் மெச்சாமல் இருக்க முடியவில்லை. இவனைப் போல் ஒருவன் எதிரியாக இருந்தால் சமாளிப்பது யாருக்கும் கஷ்டம் தான் என்று அவனுக்குத் தோன்றியது. 


மைத்ரேயனும் கடைசியில் தவம் செய்ய இமயத்திற்குச் சென்று விட்டான் என்ற செய்தி எர்னெஸ்டோவை ஆச்சரியப்பட வைத்தது. “எங்கள் இல்லுமினாட்டித் துறவி அகஸ்டின் போனதும் அங்கே தான்… க்ரிஷின் மாஸ்டர் போனதும் அங்கே தான்… நிஜமாகவே இமயமலை ஒரு புனித மலை தான் என்று தோன்றுகிறது. அங்கே போனால் இது போலப் பல ஞானிகளைப் பார்க்கலாம் போலிருக்கிறது…” 


க்ரிஷ் சிரித்துக் கொண்டே சொன்னான். “அங்கே கஞ்சா, போதை மருந்து சாப்பிட்டுத் திரிபவர்களையும் நீங்கள் பார்க்கலாம் தலைவரே. எங்கள் செந்தில்நாதன் விஸ்வத்தைப் பற்றி விசாரிக்கப்போன போது அப்படியும், அதை விட மோசமாயும் கூடப் பார்த்திருக்கிறார்….” 


மற்ற மூவரும் கூடச் சிரித்தார்கள். இம்மானுவல் மெல்ல நிகழ்காலப் பிரச்னையைத் திரும்பக் கொண்டு வந்தான். “இப்போது விஸ்வத்தின் கூட்டாளி கூட ஏலியன் தான் என்று தெரிந்து விட்டது. அது நினைத்த உருவத்தை எடுக்க முடியும் என்றும் தெரிந்து விட்டது. எங்கேயும் எப்படியும் போய் வர முடிந்த அந்த ஏலியன் விஸ்வத்திற்கு எந்த வகையிலும் உதவலாம் என்கிற நிலைமை இருக்கிறது. அப்படி இருக்கையில் நாம் என்ன திட்டம் போட்டாலும் கூட அந்த ஏலியன் மனம் வைத்தால் அதை எப்படியும் தவிடுபொடியாக்கி விடலாம் அல்லவா?” 


எர்னெஸ்டோ சொன்னார். “உண்மை தான். ஆனால் அவனும்  க்ரிஷின் வேற்றுக்கிரகவாசி நண்பனைப் போல ஏதோ சில கட்டுப்பாடுகளை வைத்திருக்கிற மாதிரி தான் தெரிகிறது. சில உதவிகளை மட்டும் செய்திருக்கிறான். ஆனால் அதற்கு மேலும் முடியும் என்றாலும் செய்யவில்லை. அதை மறந்து விடக்கூடாது” 


“ஆனால் தலைவரே. இதுவரை அப்படிச் செய்யவில்லை என்பதால் எதிர்காலத்திலும் அப்படிச் செய்யாமலேயே இருந்துவிடும் என்பதற்கு என்ன உத்திரவாதம் இருக்கிறது?” என்று இம்மானுவல் கேட்டான். “நீங்களே நேற்று சுட்டிக் காட்டியது போல் க்ரிஷின் ஏலியன் நண்பன் போல ஓரளவு உதவி செய்து விட்டுப் போய் விடாமல் இன்னும் கூடவே இருந்து கொண்டிருக்கிறானே. விஸ்வம் தோற்பது மாதிரி இருந்தால் அந்தக் கட்டுப்பாடுகளை எல்லாம் விட்டு விட்டு எதை வேண்டுமானாலும் செய்யத் துணிந்தால் அது ஆபத்தல்லவா?” 


எர்னெஸ்டோவுக்கு அதை மறுக்க முடியவில்லை. க்ரிஷிடம் கேட்டார். “உன் வேற்றுக்கிரகவாசி நண்பன் எப்போது வருவான்? அவன் வந்தால் தான் இந்தப் போட்டி சரியாக இருக்கும்” 


(தொடரும்) 

என்.கணேசன்