சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, August 16, 2021

யாரோ ஒருவன்? 45



ஜெய்ராமின் முகம் போன போக்கைப் பார்த்து ஆசிரமத் தலைவர் வாய்விட்டுச் சிரித்து விட்டார். ”துறவறம் வாங்கினால் தான் சீடன் என்று இல்லை. குருவாக ஏற்றுக் கொண்டு குருவின் நிழலாகவே இருப்பவன் துறவறம் மேற்கொண்டாலும், மேற்கொள்ளாவிட்டாலும் சீடன் தான். அதே போல் ஒரு துறவிக்குக் குரு துறவியாகவே இருக்க வேண்டும் என்பதில்லை...”

ஜெய்ராமுக்குக் குழப்பம் கூடுவது போலிருந்தது. இந்த ஆள் என்ன இப்படி வார்த்தைகளில் ஜாலம் காட்டுகிறான்...

ஆசிரமத்தலைவர் சிரிப்பு குறையாமல் சொன்னார். “ஆன்மீக நூல்கள் எல்லாம் எழுதியிருக்கிறீர்களே உங்களுக்குத் தெரியாதா? சுகப்பிரம்ம ரிஷிக்குக் குரு யார்? ஜனகர் அல்லவா? ஜனகர் ஒன்றும் துறவி அல்லவே?”

ஜெய்ராம் இந்த ஆன்மீக எழுத்தாளர் வேடம் பிரச்சினைக்குரியது என்பதை இப்போது புரிந்து கொண்டான். இதில் இன்னும் ஆழமாய்ப் போவது தனக்கு நல்லதல்ல என்று கணக்குப் போட்டவனாய் தானும் சிரித்து மழுப்பினான். “உண்மை... உண்மை.... நான் தான் பொதுவான ஒரு அபிப்பிராயத்தில் இருந்து விட்டிருக்கிறேன். சரி சுவாமிஜி. புத்தகம் எழுத எனக்கு முக்தானந்தாஜி பற்றிய முழுவிவரம் தேவைப்படுகிறது...”

நல்ல வேளையாக ஆன்மீகச் சொற்பொழிவுக்குப் போகாமல் அவனிடம் ஆசிரமத்தலைவர் சொல்ல ஆரம்பித்தார். “ஸ்வாமி லக்னோவில் ஒரு கோர்ட் குமாஸ்தாவுக்கு மூன்றாவது மகனாய் பிறந்தவர். சிறிய வயதிலிருந்தே அவருக்கு ஆத்மஞானத்தில் ஈடுபாடு அதிகமாய் இருந்தது. எங்கே ஆன்மீகச் சொற்பொழிவுகள் இருந்தாலும் போய் விடுவார்....”

எழுதப் போகாத கதையைக் கேட்பது கொடுமையாகத் தான் இருந்தது என்றாலும்  எடுத்த வேடத்திற்குப் பொருத்தமான ஆர்வத்தைக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருந்த ஜெய்ராம் ஆர்வத்தைக் காட்டி, அவர் சொல்லச் சொல்ல குறிப்புகள் எடுத்துக் கொண்டான். இருபது நிமிடங்கள் பேசி அவனை இம்சைக்கு உள்ளாக்கி விட்ட ஆசிரமத்தலைவர் கடைசியில்எல்லாம் எங்கள் ஆசிரம வெப்சைட்டில் இருக்கிறதுஎன்று சொன்னார்.

பாவி, இத்தனை நேரம் இந்த அறுவைக் கதை சொல்வதற்குப் பதிலாய் ஆரம்பத்திலேயே அதைச் சொல்லித் தொலைத்திருக்கலாமே. நான் கேட்க வேண்டியிருந்த முக்கியக் கேள்விகளை எல்லாம் கேட்க ஆரம்பித்திருப்பேனேஎன்று நினைத்துக் கொண்ட ஜெய்ராம் அந்த ஆசிரம வெப்சைட்டையும் குறித்துக் கொண்டான்.

இந்த ஆசிரமம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது?”

பதினெட்டு வருடங்களுக்கு முன்னால்

நீங்கள் அப்போது இங்கிருந்தீர்களா?”

இல்லை. நான் இங்கே வந்து பதினைந்து வருடம் ஆகிறது...”

இங்கே ஆசிரமம் அமைப்பதற்கு முன் சுவாமிஜி எங்கிருந்தார்?”

குறிப்பாய் ஒரு இடத்தில் என்று சொல்வதற்கில்லை. இமயமலையில் பல இடங்களில் இருந்திருக்கிறார்...”

மகராஜ் சுவாமிஜியுடன் எப்போது எங்கே சேர்ந்தார்?”

சரியாகத் தெரியவில்லை.... ஆனால் சுவாமி அவரைச் சின்னக்குழந்தை போலவே தான் பாசத்துடன் பார்த்துக் கொண்டார். அதனால் சின்னப் பையனாக இருக்கும் போதே மகராஜ் சுவாமியுடன் சேர்ந்து கொண்டிருக்க வேண்டும்...”

இப்படித் தோராயமாய் அவர் பதில் சொன்னது ஜெய்ராமை அதிருப்திக்கு உள்ளாக்கியது. என்ன இவர் அனுமானமாய் தான் சொல்கிறார் என்று நினைத்தவனாய்க் கேட்டான். “உங்களுக்கே சரியாகத் தெரியவில்லையா?”

அவர் தனக்குத் தெரியாததை அப்படியே சொல்வதில் எந்த கவுரவக்குறைவும் காணவில்லை. “ஆமாம். சுவாமி பழங்கதைகளைக் கிளறிக் கேட்பதை ரசிப்பதில்லை. ஆத்மஞானம் தேடி வந்தவனுக்கு அடுத்தவன் கதை எதற்கு? உன்னையே கவனி. நீ யார் என்பதை உணர்ந்து கொள் என்று சொல்வார்

இப்போதைய ஆசிரமத்தலைவருக்குக் கூடத் தெரியாத தகவல் என்பது ஜெய்ராமுக்குப் பலத்த சந்தேகத்தைக் கிளப்பியது. மறுபடி நாகராஜ் பற்றிய கேள்விகளைக் கேட்க ஆசைப்பட்டாலும் ஆசிரமத்தலைவருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று நினைத்த ஜெய்ராம், சுற்றி வளைத்து மீண்டும் பிறகு இதற்கு இயல்பாய் வருவது போல் வரலாம் என எண்ணினான்.  

நான் முக்கியமாய் சுவாமிஜியுடன் நெருங்கிப் பழகியவர்களின் அனுபவங்கள் பற்றி எழுதலாம் என்றிருக்கிறேன். அதனால் உங்கள் அனுபவங்களைச் சொல்ல முடியுமா?”

ஆசிரமத்தலைவர் சந்தோஷமாய் சொல்ல ஆரம்பித்தார். சுவாமி முக்தானந்தா, மிக எளிமையானவர், திரிகால ஞானி, ஞானக்கடல், எல்லார் மனதையும் ஊடுருவக்கூடியவர், எத்தனையோ சக்திகள் இருந்தாலும் அவற்றை அதிகமாய் வெளிப்படுத்தாதவர், ஒழுக்க விஷயத்தில் கண்டிப்பானவர் என்பதையெல்லாம் உதாரணங்களுடன் அவர் விரிவாகச் சொல்ல, ஆர்வத்துடன் கேட்பவன் போல கஷ்டப்பட்டு ஜெய்ராம் காட்டிக் கொண்டான். கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் அவர் பேசியதைக் குறிப்பு எடுப்பவன் போல ஜெய்ராம் கிறுக்கிக் கொண்டே வந்தான்.

அந்த மனிதர் களைத்துப் போய் அருகில் பாட்டிலில் வைத்திருந்த தண்ணீரைக் குடிக்கையில் இனியும் தொடர்ந்து விடுவாரோ என்ற பயத்தில் விஷயத்துக்கு வந்தான். “சுவாரசியம்.... சுவாரசியம்.... உண்மையில் என் நண்பர் சொன்ன கருத்துக்களையே நீங்களும் நல்ல உதாரணங்கள் சொல்லி உறுதிப்படுத்தினீர்கள். உங்கள் அனுபவங்களைப் போல மகராஜின் அனுபவங்களும் சுவாரசியமாக இருக்கும் என்று நம்புகிறேன். அவர் எப்போது தென்னிந்தியாவிலிருந்து திரும்புவார்?”

ஆசிரமத்தலைவர் சொன்னார். “தெரியவில்லை.”

அவர் கூடுதலாக எதையாவது சொல்வார் என்று எதிர்பார்த்து ஏமாந்த ஜெய்ராம் சொன்னான். “நான் வரும் குரு பூர்ணிமாவில் சுவாமி பற்றிய நூலை வெளியிடுவது பொருத்தமாய் இருக்கும் என்று நினைக்கிறேன். அதற்கு இன்னும் ஒன்றரை மாதங்கள் தானிருக்கின்றன. அதற்குள் மகராஜையும் சந்தித்து அவர் அனுபவங்களையும் கேட்டுக் கொண்டால் நல்லதல்லவா?”

மகராஜிடம் ஆறு மாதங்கள் வரை அப்பாயின்மெண்ட் இல்லையே...” என்று ஆசிரமத்தலைவர் இரக்கத்துடன் அவனைப் பார்த்தார்.

எல்லாம் தெரிந்திருந்தும் தெரியாதவனைப் போல் ஜெய்ராம் குழப்பத்துடன் அவரைப் பார்த்தான். அவர் சொன்னார். “மகராஜ் ஒரு நாளுக்கு ஒருவரைத் தவிர வெளியாட்களைச் சந்திப்பதில்லை. அந்தச் சந்திப்புக்கு ஐந்து லட்சம் வாங்குகிறார். அதற்கே ஆறு மாதம் வரை பதிவு செய்து மக்கள் காத்திருக்கிறார்கள்.”

ஜெய்ராம் திகைப்பு காட்டி அவரைப் பார்த்தான். அவர் சொன்னார். “ஆசிரமம் எத்தனையோ தர்ம காரியங்களை அந்தப் பணத்தால் செய்து வருகிறது. அவர் தன்னுடைய அபூர்வ சக்திகளை அந்த அளவில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று சுவாமி அவருக்கு அறிவுறுத்தியிருக்கிறார். அதனால் தான் அப்படி

ஜெய்ராம் சொன்னான். “நான் எனக்காக எதையும் கேட்கப் போவதில்லையே. அவருடைய குருவின் புத்தகம் எழுதத் தேவையான தகவல்களுக்காகத் தானே அவரைச் சந்திக்க விரும்புகிறேன்...”

காரணம் எதுவாக இருந்தாலும் அவர் இந்தக் கட்டுப்பாட்டைத் தளர்த்துவதில்லை. எத்தனையோ பத்திரிக்கைக்காரர்கள், தொலைக்காட்சிக்காரர்கள் அவரைப் பேட்டி எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட போது கூட இந்த நிபந்தனையை அவர் தளர்த்தவில்லை. ஏனென்றால் மகராஜுடன் தனியாக அரை மணி நேரம் இருந்து விட்டுப் போனால் கூட பலருக்கு எத்தனையோ நல்லது நடந்து விடுகிறது. அதனால் எத்தனையோ பேர் அவரை ஒரு முறை சந்தித்தால் போதும் என்று நினைத்து இது போல் வேறு காரணங்கள் சொல்லி முயற்சி செய்கிறார்கள். அதனால் குருவின் வார்த்தையை வேதவாக்காக எடுத்துக் கொண்டு அவர் இந்த முடிவு எடுத்து அதில் மிக உறுதியாய் இருக்கிறார்...”

ஜெய்ராமுக்குச் சுருக்கென்றது. அவன் சிறிது யோசித்து விட்டுச் சொன்னான். “நீங்களே சுவாமிஜி பற்றி ஒரு நல்ல நூல் வெளிவர வேண்டும் என்று ஆசைப்படுவதாகச் சொன்னீர்கள். அதை மகராஜிடம் சொல்லி இருப்பதாகவும் சொன்னீர்கள். அப்படிப்பட்ட ஒரு முயற்சிக்குக் கூடவா அவர் உதவ மாட்டார்.”

ஆசிரமத்தலைவர் தயக்கமில்லாமல் சொன்னார். “அவரிடம் பேட்டி எடுத்து தான் அந்த நூல் வெளிவர வேண்டுமென்றால் அவர் அதை விரும்ப மாட்டார்.”

ஜெய்ராம் தான் உணர்ந்த திகைப்பை வெளிப்படையாகவே காட்டினான். அவர் அவனைப் புரிந்து கொண்டது போல் அமைதியாகச் சொன்னார். “அவர் சாதாரண மனிதரல்ல. அதனால் அவர் சாதாரண மனிதர்கள் நடந்து கொள்வது போல் நடந்து கொள்வார் என்று எதிர்பார்ப்பது வீண்

இத்தனை நடிப்பும், முன்னேற்பாடும் இப்படி வீணாகி விடும் என்று ஜெய்ராம் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. இனி என்ன செய்வது என்று அவசரமாக யோசித்தான்.


(தொடரும்)
என்.கணேசன்  

2 comments:

  1. Nagaraj maharaj seems to be a mysterious man. Will Jayaram find out anything special about him? I am very eager to know.

    ReplyDelete
  2. நான் கூட ஜெயராம் உண்மை கண்டுபிடித்து விடுவான்...என்று நினைத்தேன்... எங்கள் எதிர்பார்ப்பும் வீணாகி விட்டதே...

    ReplyDelete