சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, August 12, 2021

இல்லுமினாட்டி 115


ர்னெஸ்டோ இரண்டு நாட்களாக வெளியாட்கள் யாரையும் சந்திக்கவில்லை. கொடுத்திருந்த அப்பாயின்மெண்ட்களை எல்லாம் ரத்து செய்ய அவருடைய உதவியாளனிடம் சொல்லி விட்டார். அவர், அக்‌ஷய், க்ரிஷ், இம்மானுவல் நால்வரும் மட்டுமே தற்போதைய நிலவரங்களை அலசிக் கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் அதுவும் அவருக்குச் சலித்து விட்டது. “வேறெதாவது பேசுவோம். விஸ்வம், கூட்டாளி இந்த இரண்டு பேரைப் பற்றிப் பேசியே எனக்குச் சலித்து விட்டது” என்று எரிச்சலோடு சொன்னார். 


இது இம்மானுவலுக்குப் புதிதல்ல. பல முறை அவன் அவர் இது போல் அதிமுக்கியமான விஷயங்களை அலசிக் கொண்டிருந்து விட்டு திடீரென்று சம்பந்தமேயில்லாத வேறெதாவது ஒன்றில் ஆழ்ந்து போவது உண்டு. ஆரம்பத்தில் அது இம்மானுவலுக்குப் பொறுப்பற்ற செயலாகத் தோன்றியதுண்டு. மிக முக்கியமான சக்தி வாய்ந்த ஒரு அமைப்பின் தலைவர் இப்படி விளையாட்டுத்தனமாய் இருக்கலாமா என்று அவன் நினைத்ததுண்டு. ஆனால் அவர் அப்படி சம்பந்தமேயில்லாத வேறு விஷயங்களில் சிறிது நேரம் ஆழ்ந்து இருந்து விட்டு மறுபடி அந்த அதிமுக்கியமான விஷயங்களுக்கு வந்து மிகத் தெளிவாக ஒரு கச்சிதமான முடிவெடுப்பதைப் பார்த்து வியந்தும் இருக்கிறான். அதனால் இப்போது அந்த யுக்தியை அவர் கையாண்ட போது அவன் புன்னகைத்தான். 


எர்னெஸ்டோ திடீர் என்று நினைவு வந்தவராக அக்‌ஷயிடம் சொன்னார். “நீ பல வருடங்களுக்கு முன்னால் புத்தரின் அவதாரம் என்று சொல்லப்படும் சிறுவனைத் திபெத்திலிருந்து இந்தியாவுக்குக் காப்பாற்றிக் கொண்டு போனாய் என்று கேள்விப்பட்டேனே அந்தப் பையன் உண்மையில் புத்தரின் அவதாரம் தானா?” 


”அப்படித் தான் தலாய் லாமாவும், திபெத்தில் இருந்த சம்யே மட புத்த பிக்குகளும் சொன்னார்கள்” என்று அக்‌ஷய் சொன்னான். 


“அவன் பெயர் என்ன?” 


“மைத்ரேயன்” என்று அக்‌ஷய் மென்மையாகச் சொன்னான். அந்தச் சிறுவனின் நினைவு அவன் மனதை லேசாக்கியது. அவன் நினைவு வரும் போதெல்லாம் சோகமும், மென்மையும் சேர்ந்து அவன் மனதை சூழ்ந்து கொள்ளத் தவறுவதில்லை. 


எர்னெஸ்டோ ஆர்வத்தோடு சொன்னார். “அவனைப் பற்றிச் சொல்லேன்” 


அக்‌ஷய் சொல்ல ஆரம்பித்தான். ஆரம்பத்திலிருந்து அவன் சொன்ன அந்தச் சுவாரசிய நிகழ்வுகளில் மற்ற மூவருமே காலத்தை மறந்தார்கள். அவன் சொன்னதை வைத்தே அவர்கள் மூவரும் மைத்ரேயனைத் தங்கள் மனக்கண்ணில் தெளிவாகப் பார்த்தார்கள். எதனாலும் பாதிக்கப்படாத அமைதி, பயம், கர்வம் இந்த இரண்டையுமே அறியாத அவன் இயல்பு இதெல்லாம் அவர்களை வியக்க வைத்தன. 


அக்‌ஷய் சொன்னான். “என் வாழ்க்கையில் உயர்ந்ததும், தாழ்ந்ததுமான எத்தனையோ மனிதர்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் நான் பார்த்ததில் மனதை முழுவதுமாய் வென்று ஒவ்வொரு கணமும் நினைக்க வேண்டியதை மட்டுமே நினைத்து விலக்க வேண்டியதை விலக்கியே வைக்க முடிந்த ஒரே ஒரு மனிதப்பிறவி மைத்ரேயன் தான்.... திபெத்தில் சம்யே மடாலயத்தில் அவனை ஒருவன் கொல்ல வந்த போது அந்த ஆளை நான் தடுத்துத் தாக்கிச் சாய்த்து விட்டேன். அத்தனை களேபரத்திலும் சிறிது கூடப் பாதிக்கப்படாமல் வேறெங்கோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் மைத்ரேயன். நான் அவனிடம் கேட்டேன். “அவனைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?” என்று. அப்போது அவன் சொன்னான். “ஒன்றும் நினைக்கவில்லை” என்று. நான் அவனை ஏனென்று கேட்டேன். அதற்கு அவன் “அந்த ஆளைப் பற்றி ஏன் நினைக்க வேண்டும்?” என்று என்னைக் கேட்டான். அது நடிப்போ பாசாங்கோ அல்ல. உண்மையாகவே அவன் நினைக்கவில்லை. அவன் எதிரிகள் அவன் உடலை மட்டுமல்ல அவன் எண்ணங்களைக் கூட ஆக்கிரமிக்க முடியவில்லை என்பது தான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்....” 


எர்னெஸ்டோ பிரமிப்போடு சொன்னார். ”உண்மையில் அது தான் ஆளுமை. அது தான் உச்சம். நீ அதிர்ஷ்டசாலி அக்‌ஷய். உன் வாழ்க்கையில் நீ அப்படிப்பட்டவனுடன் சில காலம் வாழ்ந்திருக்கிறாய்...” 


அக்‌ஷய் கண்கள் ஈரமாகச் சொன்னான். “என் வாழ்க்கையில் என் பெற்றோரை இழந்த சோகத்திற்கு அடுத்தபடியாக நான் அதிக சோகத்தை உணர்ந்தது அவனைப் பிரிந்த போது தான். ஆனால் அவன் வாழ்க்கையில் ஆட்கள் வரும் போதும், போகும் போதும் அதிகமாய் பாதிக்கப்பட்டதே இல்லை. ஒரு முறை அவன் என்னிடம் சொல்லியிருக்கிறான். “நம் வாழ்க்கையில் யார் எத்தனை காலம் நம்முடன் இருக்க வேண்டும் என்று தீர்மானிப்பது விதி தான். அவ்வப்போது சில பேரைச் சேர்க்கும், சில பேரை விலக்கும். இதில் விதி நம் அபிப்பிராயங்களை லட்சியம் செய்வதில்லை. வாழ்க்கை முழுவதும் இப்படித் தான் என்று இருக்கையில் யார் நம் வாழ்க்கையில் வந்தாலும் அவர்கள் இருக்கும் வரை அன்பாகவும், இணக்கமாகவும் இருந்து விட்டு, அவர்கள் போகும் போது புரிதலோடு விடை கொடுப்பது தானே புத்திசாலித்தனம்....” இது நம் அறிவுக்கும் எட்டுகிறது. ஆனால் இதயத்திற்குத் தான் எட்டுவதில்லை. ஆனால் அவனைப் பொருத்த வரை அறிவும் இதயமும் இணைந்தே செயல்படுவது போலத்தான் தெரிந்தது…” 


க்ரிஷ் ஆச்சரியத்துடன் சொன்னான். “என் வேற்றுக்கிரகவாசி நண்பனும் மனிதகுலம் அடைய வேண்டிய அடுத்த நிலை அறிவும் இதயமும் ஒன்று சேர்ந்த நிலை என்று சொன்னான். உங்கள் மைத்ரேயன் அப்படி அந்த உயர்நிலையை முன்பே எட்டி விட்டான் பார்த்தீர்களா?” 


இம்மானுவல் அதிகம் ரசித்தது அக்‌ஷய் திபெத்திலிருந்து மைத்ரேயனுடன் தப்பித்து வந்த யுக்திகளைத் தான். ஒவ்வொரு இடத்திலும் அக்‌ஷய் எப்படியெல்லாம் வித்தியாசமாய் சிந்தித்துச் செயல்பட்டுத் தப்பித்திருக்கிறான் என்பதை அவனால் மெச்சாமல் இருக்க முடியவில்லை. இவனைப் போல் ஒருவன் எதிரியாக இருந்தால் சமாளிப்பது யாருக்கும் கஷ்டம் தான் என்று அவனுக்குத் தோன்றியது. 


மைத்ரேயனும் கடைசியில் தவம் செய்ய இமயத்திற்குச் சென்று விட்டான் என்ற செய்தி எர்னெஸ்டோவை ஆச்சரியப்பட வைத்தது. “எங்கள் இல்லுமினாட்டித் துறவி அகஸ்டின் போனதும் அங்கே தான்… க்ரிஷின் மாஸ்டர் போனதும் அங்கே தான்… நிஜமாகவே இமயமலை ஒரு புனித மலை தான் என்று தோன்றுகிறது. அங்கே போனால் இது போலப் பல ஞானிகளைப் பார்க்கலாம் போலிருக்கிறது…” 


க்ரிஷ் சிரித்துக் கொண்டே சொன்னான். “அங்கே கஞ்சா, போதை மருந்து சாப்பிட்டுத் திரிபவர்களையும் நீங்கள் பார்க்கலாம் தலைவரே. எங்கள் செந்தில்நாதன் விஸ்வத்தைப் பற்றி விசாரிக்கப்போன போது அப்படியும், அதை விட மோசமாயும் கூடப் பார்த்திருக்கிறார்….” 


மற்ற மூவரும் கூடச் சிரித்தார்கள். இம்மானுவல் மெல்ல நிகழ்காலப் பிரச்னையைத் திரும்பக் கொண்டு வந்தான். “இப்போது விஸ்வத்தின் கூட்டாளி கூட ஏலியன் தான் என்று தெரிந்து விட்டது. அது நினைத்த உருவத்தை எடுக்க முடியும் என்றும் தெரிந்து விட்டது. எங்கேயும் எப்படியும் போய் வர முடிந்த அந்த ஏலியன் விஸ்வத்திற்கு எந்த வகையிலும் உதவலாம் என்கிற நிலைமை இருக்கிறது. அப்படி இருக்கையில் நாம் என்ன திட்டம் போட்டாலும் கூட அந்த ஏலியன் மனம் வைத்தால் அதை எப்படியும் தவிடுபொடியாக்கி விடலாம் அல்லவா?” 


எர்னெஸ்டோ சொன்னார். “உண்மை தான். ஆனால் அவனும்  க்ரிஷின் வேற்றுக்கிரகவாசி நண்பனைப் போல ஏதோ சில கட்டுப்பாடுகளை வைத்திருக்கிற மாதிரி தான் தெரிகிறது. சில உதவிகளை மட்டும் செய்திருக்கிறான். ஆனால் அதற்கு மேலும் முடியும் என்றாலும் செய்யவில்லை. அதை மறந்து விடக்கூடாது” 


“ஆனால் தலைவரே. இதுவரை அப்படிச் செய்யவில்லை என்பதால் எதிர்காலத்திலும் அப்படிச் செய்யாமலேயே இருந்துவிடும் என்பதற்கு என்ன உத்திரவாதம் இருக்கிறது?” என்று இம்மானுவல் கேட்டான். “நீங்களே நேற்று சுட்டிக் காட்டியது போல் க்ரிஷின் ஏலியன் நண்பன் போல ஓரளவு உதவி செய்து விட்டுப் போய் விடாமல் இன்னும் கூடவே இருந்து கொண்டிருக்கிறானே. விஸ்வம் தோற்பது மாதிரி இருந்தால் அந்தக் கட்டுப்பாடுகளை எல்லாம் விட்டு விட்டு எதை வேண்டுமானாலும் செய்யத் துணிந்தால் அது ஆபத்தல்லவா?” 


எர்னெஸ்டோவுக்கு அதை மறுக்க முடியவில்லை. க்ரிஷிடம் கேட்டார். “உன் வேற்றுக்கிரகவாசி நண்பன் எப்போது வருவான்? அவன் வந்தால் தான் இந்தப் போட்டி சரியாக இருக்கும்” 


(தொடரும்) 

என்.கணேசன்

6 comments:

  1. It is very pleasant to recall the incidents of Buddham Saranam Kachami mentioned by Akshay. It is a real masterpiece by you Ganeshan Sir. The bond between Akshay and Maitreyan was explained very powerfully by you. I still read some portions of the novel again and again.

    ReplyDelete
  2. Vera level sir..
    MITHRAYAN....Still in my soul

    ReplyDelete
  3. Wowww.., maithreyan en mandhai thotta character, intha part la antha wordings use aagarthu romba romba swarasyam ah iruku.,

    ReplyDelete
  4. புத்தம் சரணம் கச்சாமியில் மைத்ரேயன் சொன்ன இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. பல நேரங்களில் இந்த வரிகள் மனதை லேசாக்கி என்னை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் வரிகளும் ஒன்று.

    ReplyDelete
  5. மிளிர்வன்August 13, 2021 at 1:43 AM

    115 ஆம் அத்தியாயம் உயர்ந்த மனநிலையில் இருக்கும்போது எழுதப்பட்டது போலும்..மைத்ரேயனைப் பற்றிய விவரிப்பு, ஒவ்வொருவருக்கும் அவரவர் மனநிலைக்கேற்ப தாக்கத்தை ஏற்படுத்துவது கோடிகாட்டப்பட்டிருக்கிறது. ""எதனாலும் பாதிக்கப்படாத அமைதி, பயம், கர்வம் இந்த இரண்டையுமே அறியாத அவன் இயல்பு இதெல்லாம் அவர்களை வியக்க வைத்தன. "" என்றிருப்பதில் ""எதனாலும் பாதிக்கப்படாத அமைதி., பயம், கர்வம் இந்த இரண்டையுமே அறியாத அவன் இயல்பு இதெல்லாம் அவர்களை வியக்க வைத்தன. "" என்றிருந்தால் இன்னும் பொருத்தமாக இருக்குமோ..? நிறுத்தற்குறி(punctuation) ஐ பற்றி குறிப்பிடுகிறேன்.. ஒருவருடைய எழுத்தில் ஆழ்வது, ஒருவகையில் அவருடைய சிறந்த குணபாவங்களோடு ஒருதலையாக உறவாடுவது போலத்தான். சமகாலத்தில் என் கணேசன் சார் he is the only one of its(his) own kind.

    ReplyDelete
  6. மைத்ரேயன் பற்றி பேசும் போது நமக்குள்ளும் ஒருவித அமைதி ஏற்படுகிறது....
    எனக்கு ஒரு சின்ன வருத்தம் என்னவென்றால்.... மைத்ரேயனை பற்றி பேசியே தொடர் முடிந்து விட்டதே.... அவர்களுடைய அடுத்த நகர்வு என்ன? எனபது தெரியவில்லையே...

    ReplyDelete