சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, August 19, 2021

இல்லுமினாட்டி 116



சாலமன் வெளியேறிய பின் ஒளிர்கின்ற மெழுகுவர்த்தியை அணைத்த விஸ்வம் சாலமனின் கார் கிளம்பிப் போகிற வரை காத்திருந்துவிட்டுப் பின் மேடைப் பகுதியின் ஒரு மூலையில் தெரிந்த சிறிய அசைவைப் பார்த்துவிட்டு ஜிப்ஸியைக் கேட்டான். “நீ என்ன நினைக்கிறாய்?”

ஜிப்ஸி அவன் எதிரில் வந்தமர்ந்தான். விஸ்வத்தின் இப்போதைய கண்கள் கூட இருட்டில் இருந்து கொண்டே அனைத்தையும் பார்க்கும் திறனைப் பெற்று விட்டது என்று வியப்புடன் ஜிப்ஸி நினைத்தான். அவன் சொன்னான். “முதல் பேச்சிலேயே நல்ல முன்னேற்றம் தான். இங்கிருந்து வாஷிங்டன் போய் வருவதற்குக் கூட ஏற்பாடு செய்து விட்டாய் சபாஷ்.”

விஸ்வம் அந்தப் பாராட்டைப் பெரிதுபடுத்தாமல் கேட்டான். “சாலமன் எர்னெஸ்டோவின் பங்களாவில் இருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் சொன்னாரே, அது முழுவதும் சரியா, இல்லை எதாவது முக்கிய விவரத்தை விட்டிருக்கிறாரா?”

ஜிப்ஸி சொன்னான். “சொன்னது முழுவதும் சரி தான். எதையும் விட்டுவிடவில்லை”

விஸ்வம் நிம்மதி அடைந்தான். ஒரு மனிதன் சின்னச் சின்ன விஷயங்களில் எல்லாம் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறான் என்பதை விஸ்வம் உறுதியாய் நம்பினான். சாலமன் அந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஒருசில விஷயங்களைச் சொல்லாமல் விட்டிருந்தால் கூட, அல்லது ஏதாவது சிலவற்றை மாற்றிச் சொல்லியிருந்தால் கூட, அவரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அவன் முடிவு செய்திருப்பான்.

விஸ்வம் கேட்டான். “வாங் வே?”

அவர் சொன்னதிலும் பொய்யோ, சூழ்ச்சியோ இல்லைஎன்றான் ஜிப்ஸி. ”அவர் உன்னை விரும்புகிறாரோ இல்லையோ, எர்னெஸ்டோவை வெறுக்கிறார். அந்த ஆளை இல்லுமினாட்டியின் தலைமைப் பதவியிலிருந்து இறக்கி வைக்க சைத்தான் காலைப் பிடிக்க வேண்டியிருந்தாலும் அதைச் சந்தோஷமாகச் செய்வார்.... வாங் வே தான் இல்லுமினாட்டியின் வரலாற்றிலேயே தலைமைக்கு எதிராகத் தைரியமாய் இறங்கியிருக்கும் முதல் ஆள். அவரும் உன்னை மாதிரி ஒருவன் இருப்பதால் தான் தைரியம் பெற்று இறங்கியிருக்கிறார். கண்டுபிடிக்கப்பட்டால் அவரும் சாலமனும் இறப்பது உறுதி...”

விஸ்வம் புரிகிறது என்று தலையசைத்தான். நடப்பது எல்லாம்  சாதகமாகத் தான் இருக்கின்றன. விதி அவனுக்கு வேண்டியவர்களை எப்படியாவது அவனிடம் இழுத்து வந்து விடுகின்றது. முதலில் ஜிப்ஸி... இப்போது இவர்கள்...

ஜிப்ஸியைப் பொருத்த வரை அவன் யாரென்பதை விஸ்வம் ஓரளவு யூகித்து விட்டிருந்தான். ஆரம்பத்தில் அவன் சாதாரணமானவன் அல்ல அவனைவிடப் பல மடங்கு சக்தி வாய்ந்தவன் என்பதை விஸ்வம் புரிந்து கொண்டிருந்தான். ஆனால் அப்படிப்பட்ட ஒருவன் இந்த உலகத்தில் இருந்து, அவனை அறியாமல் விஸ்வம் இருந்திருப்பது சாத்தியமேயில்லை. சில யோகிகள், சித்தர்கள் வேண்டுமானால் அவனை விடச் சக்தி வாய்ந்தவர்களாக இருக்கலாம். அவர்களைப் பொதுக்கணக்கில் எடுக்க முடியாது. அவர்கள் இது மாதிரி வேலையில் எல்லாம் ஈடுபட மாட்டார்கள். அப்படி இருக்கையில் ஜிப்ஸி அவனை விடவும் சக்தி வாய்ந்தவனாய் இருந்து இப்படி அவனுக்கு உதவவும் முன் வந்திருக்கிறான் என்பதே விஸ்வத்தை நிறைய யோசிக்க வைத்தது. அதன் பிறகு அவன் கூர்மையாக ஜிப்ஸியைக் கவனித்து வந்தான்.

ஜிப்ஸியின் மற்றசில நடவடிக்கைகள் அவனைக் காட்டிக் கொடுத்து விட்டன. உதாரணத்திற்கு, ஜிப்ஸி என்றுமே அவனுடன் அமர்ந்து எதாவது சாப்பிட்டோ, குடித்தோ விஸ்வம் இது வரை பார்த்தது கிடையாது. விஸ்வத்துக்குச் சாப்பிட உணவும், நீரும் ஒரு நாளைக்கொரு முறை கொண்டு வந்து தருவான். அது எங்கிருந்து என்று அவன் சொன்னது கிடையாது. அவன் கார் எடுக்கும் சத்தமோ, நிறுத்தும் சத்தமோ இங்கு வந்ததிலிருந்து அவனுக்குக் கேட்டது கிடையாது. சொல்லப்போனால் இங்கே வந்த பின்பு அவன் காரையே விஸ்வம் பார்த்தது கிடையாது. ஒரு முறை விஸ்வம் கேட்ட போது சற்று தூரத்தில் ஓரிடத்தில் ஒளித்து வைத்திருப்பதாக ஜிப்ஸி சொன்னான்.

அதே போல் அவன் உறங்கியும் விஸ்வம் பார்த்தது கிடையாது. படுப்பதற்குத் தயாராவது போல் ஒரு விரிப்பு இருக்கும். அவன் படுத்தும் பார்த்திருக்கிறான். ஆனால் ஆழ்ந்த உறக்கத்திற்கு அவன் போய் இது வரைக்கும் விஸ்வம் பார்த்ததில்லை.   ஜிப்ஸி உட்கார்ந்தும், நின்றும், நடந்தும், படுத்தும் பார்த்திருந்தாலும் ஆழ்ந்த உறக்கத்தில் அவனைப் பார்க்க முடியாதது விஸ்வத்துக்கு விசித்திரமாகவே இருந்ததுஅதே போல் அவன் காலைக்கடன் கழிக்கப் போயோ சிறுநீர் கழிக்கப் போயோ கூட விஸ்வம் பார்த்ததில்லை. அதனாலேயே அவன் மனிதன் அல்ல என்பது விஸ்வத்துக்குத் தெளிவாகத் தெரிந்துவிட்டது

அக்ஷயின் புகைப்படம் ஒன்று வேண்டும் என்று விஸ்வம் கேட்ட போது ஒத்துக் கொண்ட ஜிப்ஸி ஏழு மணி நேரம் தான் அவன் பார்வையில் இல்லாமல் இருந்தான். அந்த ஏழு மணி நேரத்தில் அவன் காரில் அதிவேகமாகப் போனாலும் விமானநிலையம் போய் அக்ஷயைப் புகைப்படங்கள் எடுத்து விட்டுத் திரும்ப வந்திருக்கவே முடியாது. மனித முயற்சியாக இருந்தால் குறைந்த பட்சம் பன்னிரண்டு மணி நேரமாவது தேவைப்பட்டிருக்கும்.

ஆனால் விஸ்வம் ஜிப்ஸியின் உண்மை அடையாளத்தை யூகித்ததைக் காட்டிக் கொள்ளவில்லை. ஜிப்ஸி ஏதோ நாடகம் நடத்துகிறான். அவன் நட்பில் மட்டும் சந்தேகம் வராததால் நடத்தட்டும் இந்த நாடகத்தை என்று விஸ்வம் விட்டு விட்டான்.

ஜிப்ஸி சொன்னான். “ஒன்றை மட்டும் நினைவு வைத்துக் கொள். எர்னெஸ்டோவைக் கொன்றது நீ தான் என்ற சிறிய சந்தேகம் இல்லுமினாட்டி உறுப்பினர்களுக்கு வந்தால் கூடப் பின் நீ இல்லுமினாட்டியின் தலைவனாக ஆக முடியாது..”

விஸ்வம் அமைதியாகச் சொன்னான். “இல்லுமினாட்டியைப் பொருத்த வரை நான் ஜெர்மனியிலேயே அடைபட்டு இருப்பவன். வாங் வே, சாலமன் தவிர அவர்கள் யாருக்கும் நான் வாஷிங்டன் போவது தெரியப்போவதில்லை. அதனால் வாஷிங்டனில் கிழவர் இறந்தால் ஜெர்மனியில் இருக்கும் என்னை எப்படிக் காரணம் சொல்ல முடியும்?”

ஜிப்ஸி புன்னகைத்தான். இன்னும் வாஷிங்டனில் எர்னெஸ்டோவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றியோ அவர் பயண நேரங்கள் பற்றியோ, தங்கும் இடங்கள் பற்றியோ விஸ்வத்துக்குத் தெரியவில்லை. ஆனால் அங்கு எர்னெஸ்டோவைக் கொல்வது உறுதி என்ற நம்பிக்கை மட்டும் அவனுக்கு இருக்கிறது…

விஸ்வம் அவனைக் கேட்டான். “உனக்கும் வாஷிங்டன் போக ஒரு டிக்கெட் செய்யச் சொல்லட்டுமா?”
                 
“வேண்டாம். நான் வந்து கொள்கிறேன்” என்று ஜிப்ஸி சொன்னான்.



ன் வேற்றுக்கிரகவாசி நண்பன் எப்போது வருவான்? அவன் வந்தால் தான் இந்தப் போட்டி சரியாக இருக்கும்என்று   எர்னெஸ்டோ சொன்னதற்கு க்ரிஷ் மெல்லிய சோகத்துடன் சொன்னான். “அவன் வந்தாலும் இந்தப் போட்டியில் நம் பக்கம் சேர்ந்து கொள்ள மாட்டான்…”
                  
எர்னெஸ்டோ ஆச்சரியத்துடன் கேட்டார். “ஏன்?”

“அவனிடம் ஒரு முறை எதிரியை நீயே அழித்து விடலாமே, இந்த உலகத்திற்கு உபகாரமாய் இருக்குமே என்று  நான் கேட்டிருக்கிறேன். அதற்கு அவன் மாட்டேன் என்று சொல்லி விட்டான். அவன் சொன்னான். “நான் அவனை அழித்து விட்டுப் போனால் அவனைப் போலவே சீக்கிரமே இன்னொருவன் உருவாகி விடுவான். அப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் உன் உலகம் இருக்கிறது. அவனை அழித்து அந்தத் தீமைக்கான சூழ்நிலையையும் அழித்தால் மட்டுமே உன் உலகம் காப்பாற்றப்படும். அதை வெளியிலிருந்து யாரும் செய்வது தற்காலிகத் தீர்வாகுமே ஒழிய நிரந்தரத் தீர்வாகாது” என்றான். அதனால் அவன் இப்போது வந்தாலும் நமக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை…”

இம்மானுவல் கேட்டான். “உன் ஏலியன் நண்பன் இங்கே இன்னொரு ஏலியன் வந்திருப்பதையோ, அது எதிரிக்கு உதவுவதையோ பற்றி உன்னிடம்  சொல்லியிருக்கிறானா?”

“இல்லை” என்று சொன்ன க்ரிஷுக்கு அந்த இன்னொரு ஏலியன் பற்றி வேற்றுக்கிரகவாசி நண்பனுக்குத் தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை என்று தோன்றியது. ஏனென்றால் இவர்கள் அலைவரிசைகளை வைத்துக் கண்டுபிடித்திருப்பதைப் பார்த்தால் சில வருடங்களுக்கு முன்பே விஸ்வத்தின் கூட்டாளி இரண்டு தடவை வந்து சென்றிருக்கிறான். அப்படியிருந்தும் கூட  அதைப் பற்றி வேற்றுக்கிரகவாசி நண்பன் ஏன் சொல்லவில்லை என்று தெரியவில்லை...

அக்‌ஷய் க்ரிஷிடம் தன் சந்தேகத்தைக் கேட்டான். “உன் வேற்றுக்கிரகவாசி நண்பன் அப்படிச் சொன்னான், இப்படிச் சொன்னான் என்று சொல்கிறாயே உருவமே இல்லாமல் அவன் உன்னிடம் எப்படிச் சொன்னான்? அசரீரி போல் அவன் சொல்லும் சத்தம் மட்டும் கேட்குமா?”

க்ரிஷ் சிரித்தான். “இல்லை. அவன் என் உணர்வு நிலையில் புகுந்து கொள்ள அனுமதி தந்திருந்தேன். அதனால் காதால் கேட்டு மூளை அதை உள்வாங்கித் தெரிந்து கொள்வதெல்லாம் இல்லை. நேரடியாக நம் மனதிலும் மூளையிலும் அவன் சொல்வது பதிந்து விடும்...”


அவர்களுக்கு அவன் சொன்னது மிக வினோதமாக இருந்தது என்பது அவர்கள் மூவரின் முகபாவனையிலேயே தெரிந்தது. 


(தொடரும்)
என்.கணேசன் 

6 comments:

  1. Thanks for early update. Going very interesting. It seems to be two aliens are there. Both seem to be powerful. Next what? Eagerly waiting.

    ReplyDelete
  2. விஸ்வமும் ஜிப்ஸி தெரிந்து கொண்டான்....கிரிஷ் கூட்டணி தான் அடுத்த அடி எடுக்காமலே உள்ளனர்...

    ReplyDelete
  3. Appo viswam kum gypsy alien nu theriyum pola,
    Alien epdi viswathuku, viswaasam ah irukkum, Krish sonna pola intha ulagam azhiyum bothu viswam kooda thaan azhivaan nu avanuku purilaye..

    ReplyDelete
  4. ஒரு முறை விஸ்வம் கேட்ட போது சற்று தூரத்தில் ஓரிடத்தில் ஒளித்து வைத்திருப்பதாக *விஸ்வம்(ஜிப்ஸி) சொன்னான்.

    ReplyDelete
    Replies
    1. திருத்தி விட்டேன். நன்றி.

      Delete
  5. Sir, I am not sure as why Akshay raises this question of how the alien communicates with Krish and then getting shocked. He must be knowing that people can communicate in waves being a yogic person. This question might have been raised by Immanuvel or Ernasto but not from Akshay. Thanks.

    ReplyDelete