என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, March 23, 2026

யோகி 148

 

ஷ்ரவனை அன்றிரவு பாண்டியன் இருப்பிடத்திற்கு வரும்படி கண்ணன் மாலையிலேயே சொல்லி விட்டுப் போனார். இதுவரையில் அவர்களுக்கே தெரிந்த விஷயங்களை வைத்துச் சொல்லி அவன் சமாளித்தாகி விட்டது. அவர்களுடைய நம்பிக்கையைச் சம்பாதித்தாகி விட்டது. இன்று என்ன சொல்லப் போகிறான் என்பது அவனுக்கே நிச்சயமில்லை.

 

அன்றிரவு அங்கு அவன் போன போது டாக்டர் சுகுமாரனும் ஏற்கெனவே வந்திருந்தார். பாண்டியனோடு பேசிக் கொண்டிருந்த அவர் அவனை உற்சாகமாக வரவேற்றார். பாண்டியனும் அவனை நட்புடன் பார்த்தார். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, முகூர்த்த நேரத்திற்கு சுமார் 20 நிமிடம் முன்பே ஷ்ரவன் கண்களை மூடி ஆரம்பித்தான்.

 

மனதார பிரார்த்தனை செய்து விட்டு ஷ்ரவன் மந்திர ஜபத்தைச் சொல்ல ஆரம்பித்து சிறிது நேரத்தில் மந்திரத்தோடு அவன் ஐக்கியமானான். அவன் முகத்தில் சாந்தி தெரிய ஆரம்பித்தது. அவர்கள் இருவரும் அவனையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். அலாரம் அடித்து அவனை மந்திரத்தில் இருந்து பிரித்தது.

 

அவன் கண்களைத் திறக்கவில்லை. அவன் ஏதாவது வழி காட்டச் சொல்லி ஓநாயை எண்ணி வேண்டினான். ஆனால் அன்று ஓநாய் அவன் காட்சிக்குக் கிடைக்கவில்லை. இந்த மேலான சக்திகள் அவனைக் குழப்பின. எதிர்பாராத சமயங்களில் காணக் கிடைக்கின்றன. அவனுக்கு ஏதாவது வழிகாட்டுகின்றன. ஆனால் திடீரென்று வருவது போலவே திடீரென்று அவை வருவது நின்றும் போகின்றன. அதற்கான காரணங்கள் மனித அறிவுக்கு எட்டுவதில்லை.

 

என்ன சொல்வது என்று ஷ்ரவன் யோசித்தான். பாண்டியன் எப்போதும் அமர்ந்திருக்கும் அறையைத் தாண்டி ஒரு அறை இருக்கிறது. அந்த அறைக்கு பாண்டியனைத் தவிர யாரும் உள்ளே போவதில்லை. போவதென்றால் பாண்டியனின் மேசையில் ஏறி இறங்கித் தான் அந்த அறைக்கு ஒருவர் போக முடியும். அப்படி வழியை அடைத்து தான் பாண்டியனின் மேசை இருந்தது. மறுபக்கத்தில் இருப்பதால் பாண்டியன் அந்த அறைக்குத் தாராளமாகப் போக முடியும் என்றாலும், பாண்டியனே மற்றவர்கள் இருக்கையில் அதற்குள் போவதில்லை. அந்த அறைக்குள் என்ன இருக்கின்றது என்று ஷ்ரவனுக்குத் தெரியவில்லை. ஒரு முறை அவன் அவரைச் சந்திக்க அறைக்கு வந்த போது அவர் உள் அறையில் இருந்தார்.   அவருக்காக ஷ்ரவன் காத்திருந்த போது உள் அறையில் பீரோவைச் சாத்திப் பூட்டும் சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் பாண்டியன் வெளியே வந்தார். அது ஷ்ரவனுக்கு நினைவு வந்தது.

 

ஷ்ரவன் ஆபத்தான விளையாட்டு என்றாலும் உள்ளுணர்வால் உந்தப்பட்டு ஆரம்பித்தான். “ஓநாய் தெரிகிறது.... அது வாசலில் தான் இருக்கிறது....    அதன் கண்களில் தீ எரிகிறது.... அது என்னையே கோபத்தோடு பார்ப்பது போலிருக்கிறது...” ஷ்ரவன் கண்களை மூடிக் கொண்டே முகத்தைத் திருப்பிக் கொண்டான்..

 

இருவரும் படபடப்புடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். பாண்டியன் மெல்ல எழுந்து ஜன்னல் வழியே வெளியே பார்த்தார்.  ஓநாய் தெரியவில்லை. கையிலிருக்கும் தாயத்தைக் கழட்டினால் அது தெரிய வரலாம்.

 

சுகுமாரன் அவரிடம் சைகையால் கேட்டார். “ஓநாய் தெரிகிறதா?” பாண்டியன் இல்லையென்று தலையசைத்தார். இருவரும் ஷ்ரவனையே அதிக படபடப்புடன் பார்க்க ஆரம்பித்தார்கள்.

 

ஷ்ரவன் லேசான நடுக்கத்துடன் சொன்னான். “அது…. அது….. ஐயையோ அது பாய்ந்து உள்ளே வருகிறது…”

 

டாக்டர் சுகுமாரன் பாண்டியனைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.

 

ஷ்ரவன் தொடர்ந்து சொன்னான். “… உங்கள் மேசையின் மீது தாவுகிறதுஅப்படியே அங்கிருந்து குதித்து உங்கள் உள் அறைக்குப் போகிறது…. அங்கே பூட்டியிருக்கும் பீரோவுக்குள் ஊடுருவி உள்ளே போய் விட்டது…..”

 

பாண்டியனின் முகத்தில் திகைப்பு தெரிந்தது. அவருடைய உள் அறைக்கு ஷ்ரவன் வந்ததில்லை. டாக்டர் சுகுமாரனே கூட வந்ததில்லை. அதனால் அறைக்குள் என்ன இருக்கிறது என்பது கூட ஷ்ரவனுக்குத் தெரிய வாய்ப்பில்லை.

 

பாண்டியன் மெல்ல கேட்டார். “அப்புறம் என்ன தெரிகிறது?”

 

ஷ்ரவன் மிக உன்னிப்பாகப் பார்ப்பது போல் பார்த்து பின் ஏமாற்றத்தைக் காட்டிக் கொண்டு ஷ்ரவன் சொன்னான். “எல்லாம் மறைந்து விட்டது….. இப்போது எதுவுமே தெரியவில்லை…”

 

ஷ்ரவன் கண்விழித்தான். அவன் பார்வை சற்று திகிலோடு அந்த உள் அறை வாசலுக்குப் போனது. அதைக் கவனித்த சுகுமாரன் பாண்டியனின் உள் அறையைப் பீதியுடன் பார்த்தார். “உள்ளே போனதை வெளியே துரத்த என்ன வழி?”

 

ஷ்ரவன் மெல்ல சொன்னான். “அந்தக் காட்சி தெரிந்தபடியே ஆகியிருக்கும்கிறது நிச்சயமில்லை. அன்னைக்கு இந்த வாசல்ல குழி தோண்டற வேலையை ஓநாய் ஆரம்பிச்சதாய் நான் காட்சி பார்த்தேன். ஆனால் நேர்ல வந்தப்ப குழியெல்லாம் இருக்கலை. இந்தக் காட்சிகள்  வரப்போகிற நிகழ்வு எதையாவது சூட்சுமமாய் சொல்றதாய் இருக்கலாம்.”

 

பாண்டியன் யோசிக்க, சுகுமாரன் சொன்னார். “எதுக்கும் பீரோவுக்குள்ளே பார்த்துடறது நல்லது

 

ஷ்ரவன் பாண்டியனிடம் சொன்னான். “ஆமாம்ஜி. வேணும்னா போய்ப் பார்த்துக்கோங்க

 

பாண்டியன் மேசையில் ஏறி அமர்ந்து அந்தப் பக்கம் கால் வைத்துத் தாண்டினார். சுகுமாரன் சொன்னார். “நீங்கள் போய்ப் பார்த்தால் உங்களுக்கு என்ன தெரியப் போகுது? இது இருக்கே.” என்று தாயத்தைக் காட்டினார்.

 

ஷ்ரவன் அமைதியாய் இருந்தான். அவனையே அவர்கள் பார்க்கச் சொல்கிற வாய்ப்புக்காகத் தான் அவன் காத்திருந்தான். ஆனால் அதை அவர்களாகச் சொல்ல வேண்டும். அங்கு போய்ப் பார்க்க அவன் ஆர்வம் காட்டுவதாய் அவர்கள் நினைத்துவிடக்கூடாது. பாண்டியன் சற்றுத் தயங்கினார். தேவையில்லாமல் யாரையும் அவர் அந்த அறைக்குள் அனுமதிப்பதில்லை. யோசித்த போது ஒரு பீரோவை அவனுக்குத் திறந்து காண்பிப்பதால் எந்தப் பிரச்சினையும் வந்துவிடாது என்று அவருக்குத் தோன்ற ஆரம்பித்தது.

 

பாண்டியன் ஷ்ரவனிடம் சொன்னார். “நீங்களே வந்து பாருங்களேன்.”

 

ஷ்ரவன் தயக்கத்தோடு மேசையைத் தாண்ட, டாக்டர் சுகுமாரனும் அப்படியே தாண்டினார். மூவரும் அந்த உள் அறைக்குள் நுழைந்தார்கள்.

 

அந்த உள் அறை பெரியதாக இருந்தது. அங்கு பெரிய காட்ரேஜ் பீரோக்கள் ஏழு இருந்தன. பாண்டியன் ஷ்ரவனிடம் கேட்டார். “எந்த பீரோவுக்குள்ளே போனதைப் பார்த்தீர்கள்?”

 

ஷ்ரவன் சும்மா ஒரு பீரோவைக் காட்டினான். “இதற்குள்ளே போனதைத் தான் நான் பார்த்தேன்ஜி

 

பாண்டியன் ஒரு பீரோவின் மேலே உள்ளே தள்ளி மறைவாய் வைத்திருந்த சாவிக் கொத்தை எடுத்து ஷ்ரவன் காட்டிய பீரோவைத் திறந்தார். உள்ளே எல்லா அடுக்குகளிலும் வீடு மற்றும் நிலப்பத்திரங்கள் போல் தெரிந்தவை அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன.

 

பாண்டியனும் சுகுமாரனும் அவனையே பார்ப்பதைக் கவனித்த ஷ்ரவன் சற்று நெருங்கிப் போய் பார்த்தான். அவை சொத்துப் பத்திரங்கள் தான் என்பது அவனுக்கு உறுதியானது. ஷ்ரவன் இத்தனை பத்திரங்களா என்று திகைத்தாலும் அதை முகத்தில் காட்டிக் கொள்ளவில்லை. மற்ற பீரோக்களிலும் இப்படிப் பத்திரங்களே இருக்குமா, வேறு எதாவது இருக்குமா?

 

உள்ளே ஓநாய் தெரியவில்லைஎன்றான்.  உண்மையில் ஓநாய் உள்ளே இருக்கக்கூடிய அளவு காலி இடம் பீரோவில் இல்லை.  

 

பாண்டியன் அவனிடம் கேட்டார். “அப்படியானால் நீங்கள் பார்த்த காட்சிக்கு என்ன அர்த்தம் இருக்க முடியும் ஷ்ரவனானந்தா?”

 

ஷ்ரவன் சொன்னான். “இந்த பீரோவில் இருப்பவை சம்பந்தமான விஷயங்களில் எதாவது பிரச்சினை ஏற்படுத்த அது முயற்சி செய்யலாம் என்று நான் நினைக்கிறேன்…”

 

பாண்டியன் யோசனையுடன் தலையசைத்தார். அதற்கு மேல் அவர் அவனிடம் எதுவும் கேட்கவில்லை. அந்த அறையிலிருந்து மூவரும் வெளியே வந்தார்கள்.

 

தேவானந்தகிரி அனுப்பிய ஆள் யோகாலயத்துக்கு மதியம் வந்து சேர்ந்தான். அவனுக்குத் திரும்பிச் செல்ல மாலையில் விமானத்தில் டிக்கட் முன்பதிவு ஆகியிருந்தது. அதனால் அவனுக்கு அங்கு அதிக நேரம் தங்கும் உத்தேசமில்லை. அப்படித் தங்க அவனுக்குக் காரணமும் இருக்கவில்லை. அவன் தெரிவிக்க வேண்டிய தகவல் சுருக்கமானது. அதற்கு ஐந்து நிமிடத்திற்கு மேல் அவசியமில்லை.

 

அவன் மனப்பாடம் செய்து வந்ததை பாண்டியனிடம் ஒப்பித்தான். “எதிரி உங்கள் யோகாலயத்தில் தான் இப்போது இருப்பதாக சுவாமிஜி சொல்லி அனுப்பியிருக்கிறார். அவர் வைத்துப் பார்த்த பிரஷ்னம் மூலம் அதை அறிந்திருக்கிறார். விசேஷ சக்திகள் உள்ளதாகச் சொல்லிக் கொண்டு உங்களிடம் வந்திருக்கும் துறவியே உங்கள் எதிரியாக இருக்க வேண்டும் என்று அவர் நம்புகிறார்.  இதை போனில் தெரிவிப்பது கூட ஆபத்து என்று  அவர் எண்ணியதால் தான், இதை நேரடியாகத் தெரிவிக்க என்னை இங்கே அனுப்பியிருக்கிறார்.”

 

பாண்டியன் தலையில் இடி விழுந்ததைப் போல் உணர்ந்தார்.

 

(தொடரும்)

என்.கணேசன்




4 comments:

  1. ஷர்வன் மூன்று முறையும் ஒன்றும் பெரிதாக சொல்லவில்லை..யோகியை நேரில் சந்தித்த போதும்,பெரிதாக ஒன்றும் நடக்கவில்லை...

    ReplyDelete
  2. இடி பாண்டியன் தலையில் மட்டுமா... எங்கள் தலையிலும்தான் இறங்கியுள்ளது...

    ReplyDelete
  3. SARALA DEVI MARIMUTHUMarch 23, 2026 at 8:07 PM

    Oh my god

    ReplyDelete