அலெக்ஸ் சொன்னார். “சிந்திக்கத் தெரிஞ்சவங்களும்,
அறிவாளிகளும் உங்கப்பாவை தீவிரமாகவே ஆதரிக்கறதைப் பார்க்க முடியுது அர்ஜுன்”
“ஆனா அந்த மாதிரி ஆள்க ஓட்டுப்போடப் போவாங்களாங்கறதே கேள்விக்குறி தானே சார்?”
“உண்மை தான். ஆனா இப்ப சமீப காலமாய் கொஞ்சம் மாற்றம் தெரிய
ஆரம்பிச்சிருக்கு அர்ஜுன். குறிப்பாய் கடந்த ரெண்டு வருஷமாய்
உங்கப்பா கட்சியைப் பலரும் கவனிக்க ஆரம்பிச்சிருக்காங்க. கிட்டத்தட்ட
எல்லாருமே அவர் நேர்மையானவர்னு ஆணித்தரமாய் நம்பறாங்க.”
“அப்படி கவனிக்கறதும், நம்பறதும் ஓட்டாய் மாற வாய்ப்பிருக்கா?”
அலெக்ஸ் சொன்னார்.
“அது கேள்விக்குறி தான். போன தடவை ஐம்பது தொகுதிகள்ல
உங்கப்பா கட்சி மூனாவது இடத்துல இருந்துச்சுன்னா, இப்பவே தேர்தல்
வெச்சா எண்பது தொகுதிகள்ல மூனாவது இடத்துக்கு வரும். உங்கப்பா
நிக்கற தொகுதியில் அவர் ஜெயிக்க வாய்ப்பிருக்கு. அவ்வளவு தான்
சொல்ல முடியும்.”
அப்பா நிற்கும் தொகுதியில் அவர் வெற்றியடைய வாய்ப்பிருக்கிறது
என்பதும், முப்பது
கூடுதல் தொகுதிகளில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறும் என்பதும் அர்ஜுனுக்குப் பெரிய
சந்தோஷப்படும் தகவலாகத் தெரியவில்லை. அதை அவன் முகபாவனையில் இருந்தே
அலெக்ஸ் புரிந்து கொண்டார்.
அலெக்ஸ் சொன்னார்.
“உங்கப்பா, உன் தாத்தா பெயரைக் கூட ஆளும் கட்சி,
எதிர்க்கட்சி அளவுக்குப் பயன்படுத்தறதில்லை. பணத்தையோ,
செல்வாக்கு இருக்கற ஆள்களையோ கூட அவர் பயன்படுத்தறதில்லை, அர்ஜுன். அப்படியிருந்தும் கூட இந்த அளவு முன்னேறியிருக்கறது
லேசுப்பட்ட விஷயமல்ல. இதை நான் அவர் உன் அப்பாங்கறதுக்காகச் சொல்லலை.
நிஜமாவே இது அலட்சியமாய் நினைக்கற விஷயமில்லை…”
அர்ஜுனுக்கு சித்தப்பா சொன்ன மதிப்பெண் உதாரணம் நினைவுக்கு வந்தது. அதனால் அவனால் அலெக்ஸ் சொன்னதை
அலட்சியமாகத் தான் நினைக்க முடிந்தது.
ராஜாராமின் தனிபட்ட அலைபேசி இசைத்தது. பெயரைப் பார்த்து விட்டு
அவர் உடனே எடுத்துப் பேசினார். அவரை அழைத்திருக்கும் நபர் இன்ஸ்பெக்டர்
மதுசூதன் சொன்ன தகவல்களை அப்படியே அவரிடம் சொன்னார். ”…. உங்கண்ணா
பையன்கிறதால தான் உங்களுக்குத் தெரிவிக்கறது முக்கியம்னு சொல்றேன்.”
ராஜாராம் அமைதியாகச் சொன்னார். “அர்ஜுன் ஒரு தனி மனுஷன்.
அவன் தன் வேலையைச் செய்யறான். தனி மனுஷனான அவன்
மாதிரியே, போலீஸும் அவங்களுக்குக் கொடுத்திருக்கிற வேலையை ஒழுங்காய்
செஞ்சா நாம பயப்படவே தேவையில்லை. முதல்ல நம்ம போலீஸ் கிட்ட விமலைக்
கண்டுபிடிக்கச் சொல்லு.”
“அதுல போலீஸ் திவிரமாய் தான் இருக்காங்க. அவன் அக்கவுண்ட்ல
இருக்கற பணத்தைக்கூட பயன்படுத்தாம ரொம்ப எச்சரிக்கையாய் இருக்கான். எல்லா மாநில போலீஸுக்கும் தகவல் அனுப்பிச்சு அவனைப் பிடிக்கறது பெரிய விஷயமில்லை.
ஆனால் நாமளே இந்த விஷயத்தை விளம்பரப் படுத்தற மாதிரியாகிடும்னு தான்
அதைச் செய்யாமலிருக்கோம். அதனால தான் அவன் பதுங்கியிருக்கிற இடத்தை
நம்மால இன்னும் கண்டுபிடிக்க முடியல.”
“அவன் பதுங்கியே கடைசி வரைக்கும் இருந்துட்டா பிரச்சனை இல்லை. ஆனா வெளிய வர அவன் தீர்மானிச்சா தான் பெரிய பிரச்சனை. அதை மறந்துடாதே”
காத்திருப்பது எல்லோருக்கும் முடிந்த காரியம் அல்ல. காரணம், காத்திருக்கும் போது ஒவ்வொரு கணமும் கணக்கிடப்படுகிறது. மறுபடி, மறுபடி காத்திருக்க வேண்டியிருக்கும் போது ஒவ்வொரு கணமும், தாங்க முடியாத கனமாகி விடுகிறது. ’எத்தனை தான் காத்திருப்பது? காத்திருந்தது போதும், ஏதாவது செய், இந்த நிலைமையிலிருந்து தப்பித்துக் கொள்,’ என்று மண்டைக்குள் ஒலிக்கும் ஒலியின் அளவு அதிகரித்துக் கொண்டே போகிறது. பின் வேறெதையும் அது யோசிக்க விடுவதில்லை, செய்ய விடுவதில்லை. பின் காத்திருப்பதே சித்திரவதையாகி விடுகிறது. விமல் அந்தச் சித்திரவதையைத் தான் தினமும் அனுபவித்து வருகிறான்.
இப்போதெல்லாம் ஆசிரமத்தில் தரப்படும் உணவைச் சாப்பிடும் போது
குப்பையைச் சாப்பிடுவது போல் அவனுக்குத் தோன்றுகிறது. பஜனையைக் கேட்கும் போது
அது மரண ஓலத்தைக் கேட்பது போல் தோன்றுகிறது. ஆன்மீகச் சொற்பொழிவைக்
கேட்கும் போதோ காய்ச்சிய ஈயத்தைக் காதில் ஊற்றுவது போல்
அவனுக்கு இருக்கிறது.
ஆனால் இந்த உணவைச் சாப்பிட்டு,
இப்படி பஜனை பாடி, இந்த ஆன்மீகச் சொற்பொழிவுகளைக்
கேட்டு வாழும் வாழ்க்கையைப் பேரானந்தமாக, அவனுடன் அடிக்கடிப்
பேசும் துறவி ராஜ்நாத்
சொன்ன போது கேட்டு, அவனுக்குக் கண்ணீரே வந்து விட்டது.
ராஜ்நாத் அவன் கண்ணீரைப் பார்த்து நெகிழ்ந்து போனார். “நானும்
இதை ஆத்மார்த்தமாய் முதன்முதலில் உணர்ந்த போது உங்களைப் போல் ஆனந்தக் கண்ணீர் வடித்தேன்
சுவாமி. நீங்கள் ஏழரை கோடி சொத்தைத் தர்மத்துக்கு எழுதி விட்டு வந்தவர். நானும்
எல்லாவற்றையும் விட்டு விட்டு இங்கே வந்திருக்கிறேன். எதற்காக நாம் எல்லாவற்றையும்
விட்டு விட்டு வந்தோம்? இந்த ஆனந்தத்திற்காகத் தானே?”
ராஜ்நாத் கழுத்தை நெறித்து விட விமலின் கைகள் துடித்தன. ‘நானே துக்கம் தாளாமல் அழுகிறேன்.
இதை ஆனந்தக் கண்ணீர் என்று சொல்லி வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுகிறாயா
முட்டாளே”. ஆனால் அதையும் செயல்படுத்த முடிந்த நிலையில் தான்
இல்லாததை நினைத்து விமல் மேலும் கண்ணீர் வடித்தான்.
“அழாதீர்கள். நாம் பாக்கியசாலிகள். நமக்கு கடவுள் கருணையோடு வழியைக் காட்டியிருக்கிறார்.”
இருக்கிற கொடுமைகள் போதாதென்று, சூழ்நிலை புரியாமல் பேசும்
இந்த முட்டாளின் பேச்சையும் கேட்டுக் கொண்டிருக்கும் நிலைமையை இனி தாங்க முடியும் என்று
விமலுக்குத் தோன்றவில்லை. இனியும் அவனால் காத்திருக்க முடியாது.
நர்மதாவைக் கொன்றவனிடம் இனியும் காலம் தாழ்த்தாமல் பேச வேண்டும்.
இந்த ஆசிரமம், இந்த ஆள், இந்த பஜனை, இந்தச் சொற்பொழிவு, இந்த உப்பு சப்பில்லாத உணவு எல்லாவற்றிலிருந்தும் அவன் தப்ப வேண்டும்.
மறுநாளே டெல்லியிலிருக்கும் யோகமாயா கோயில் அவன் கனவில் வந்ததாகவும், போய் யோகமாயாவைத் தரிசித்து
விட்டு வர மனதில் ஏக்கம் வர ஆரம்பித்து விட்டது என்றும் சொல்லி விமல் கிளம்பி விட்டான்.
ராஜ்நாத் அவனிடம் சொன்னார். “எனக்கு உங்களைப் பார்க்கையில்
பொறாமையாக இருக்கின்றது. நீங்கள் நினைத்தால் உடனே கிளம்பி விடுகிறீர்கள்.
எனக்கும் உங்களுடன் வர ஆசையாகத் தான் இருக்கின்றது. ஆனால் கால்வலி தான் பயமுறுத்துகிறது. முன்பெல்லாம் நானும்
உங்களைப் போல் தான் நினைத்த இடங்களுக்குப் போய் வந்து கொண்டிருந்தேன். ஆனால் இப்போதெல்லாம் அப்படிப் போக முடிவதில்லை. எல்லாம்
போன வருடம் ஆரம்பித்த கால்வலி தான்.”
அந்தக் கால்வலி எப்படி ஆரம்பித்தது என்ற கதையை ராஜ்நாத் ஆரம்பித்து விடும் முன் விமல் சொன்னான். “நான் யோகமாயையிடம் உங்கள்
கால்வலிக்காகப் பிரார்த்தனை செய்கிறேன்.”
“உங்கள்
அன்புக்கு என்ன கைம்மாறு…”
அதற்கடுத்து அவர் என்ன சொன்னார் என்பது
விமலின் காதில் விழவில்லை. அவன் தெருவுக்கு வந்திருந்தான். இந்த முறையும்
அவன், செல்லும் வழியில் வேறு உடைக்கு மாறிவிட்டான். ஜீன்ஸ், டி ஷர்ட்
அணிந்திருந்தான். இந்த முறை அவன் மூக்குக் கண்ணாடி போட்டுக் கொள்ளவில்லை. அவன் தலைமுடியை
வேறு விதமாகச் சீவியிருந்தான். சென்ற முறையை விடத் தாடி கூடுதலாக வளர்ந்திருக்கிறது. அதனால் சென்ற முறை அவனைப் பார்த்தவர்களில் யாராவது இப்போது
பார்த்தால் கூட அவர்களுக்கு அவனை அடையாளம் தெரிய வாய்ப்பில்லை. அவனுடைய கன்னங்கள் இரண்டும் ஒடுங்கி உள்ளே போயிருந்தன. அந்த ஆசிரம
உணவைச் சாப்பிட்டு இன்னமும் அவன் உயிரோடு இருப்பதே ஆச்சரியம் தான். முன்பு
சினிமா மற்றும் சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்த விமல் தான் அவன் என்பதற்கான அறிகுறி
எதுவுமே இப்போது அவனிடம் இல்லை.
இப்போதும் அவன் டெல்லிக்குத் தான் சென்று
கொண்டிருக்கிறான். அவன் டெல்லி வாசி ஆகிவிட்டான் என்பதைக் கொலையாளி நம்பவேண்டும்
என்று அவன் நினைத்தான். துறவு வேடத்தில் இருக்கலாம் என்றோ ரிஷிகேசத்தில் இருக்கலாம்
என்றோ சிறிது சந்தேகமும் எழுவதற்கு அவன் காரணத்தை ஏற்படுத்திவிடக்கூடாது. ஏனென்றால்
பிரச்சினை ஆவது போலிருந்தால் அவன் தப்பியோடி
ஒளிந்து கொள்ள ஒரு பாதுகாப்பு இடம் அவனுக்கு வேண்டும்.
டெல்லி சென்று சேர்ந்து மெட்ரோ ரயில்
ஏறி சாந்த்னி சௌக் சென்று மார்க்கெட் பகுதிக்குச் சென்று மக்கள் நடமாட்டம் அதிகமிருக்கும்
தெருவில் நடந்து கொண்டே கொலையாளிக்குப் போன் செய்தான். ஸ்விட்ச்டு
ஆஃப் அறிவிப்பு வந்தது. விமல் இதை எதிர்பார்த்திருக்கவில்லை. அந்த ஆள்
தன் அந்தரங்க அலைபேசி எண்ணை உபயோகிப்பதை நிறுத்தி இருப்பாரோ? வேறு எண்ணுக்கு
மாறியிருப்பாரோ? மனம் பதைபதைத்தது. அப்படி
மாறியிருந்தால் அந்த ஆளிடம் பேச வேறு என்ன வழி? வழக்கமான
பொதுத் தொலைபேசி அல்லது பொது அலைபேசிஎண்ணில்
பேசி அந்த ஆளை எட்டுவது லேசுப்பட்ட காரியம் அல்லவே?
(தொடரும்)
என்.கணேசன்

No comments:
Post a Comment