என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, November 19, 2026

சதுரங்கம் 45

 


நன்றாக யோசித்த போது அந்த ஆள் தொலைபேசி எண்ணை மாற்றி இருக்க வாய்ப்பில்லை என்பது விமலுக்குப் புரிந்தது. அந்த ஆள் தொலைபேசி எண்ணை மாற்றியிருந்தால், ‘தாங்கள் தொடர்பு கொண்ட எண் தற்போது உபயோகத்தில் இல்லை’ என்ற அறிவிப்பு தான் வந்திருக்கும். முக்கியமான ஏதாவது வேலையிலோ, நிகழ்விலோ அந்த ஆள் இருந்திருப்பார். அதனால் தான் ‘ஸ்விட்ச்டு ஆஃப்’ செய்து வைத்திருப்பார்.

 

மார்க்கெட் பகுதியை அடுத்து இருக்கும் ஒரு பூங்காவிற்குச் சென்று அமர்ந்த விமல் உட்கார்ந்து கொண்டிருக்கும் இடத்தில் சிசிடிவி காமிரா ஏதாவது இருக்கிறதா என்று கவனமாகப் பார்த்தான். நல்ல வேளையாக எதுவும் இருக்கவில்லை. அவனுக்கு மிக அருகிலும் ஆட்கள் இல்லை. சற்று தள்ளி இருந்த புல்வெளியில் இரண்டு பெண்மணிகள் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, சுமார் ஐந்தாறு வயதுச் சிறுவர்கள் இருவர் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பெண்மணிகள் ஏதோ மிக சுவாரசியமான விஷயத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்ததால் அவன் சற்று தள்ளி உள்ள சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்ததைக் கூடக் கவனிக்கவில்லை. அவர்கள் எந்த மொழியில் பேசிக் கொள்கிறார்கள் என்று அவன் கவனித்தான். அது ஹிந்தி தான். தமிழ் அல்ல.

 

விமல் திருப்தியடைந்தான். ஒருவேளை அவன் பேச்சை அவர்கள் கேட்டாலும் கூட அவர்களுக்குப் புரிய வாய்ப்பு குறைவு. ஆனாலும் அவன் அவர்கள் காதில் விழும்படி பேசப்போவதில்லை. மறுபடி அலைபேசியை எடுத்து கொலையாளியை அவன் அழைத்தான். இப்போது அலைபேசி அடித்தது. விமலின் இதயம் மிகவும் சத்தத்துடன் துடிக்க ஆரம்பித்தது.

 

மறுமுனையில் அலைபேசி எடுக்கப்பட்டாலும் ‘ஹலோ’ என்னும் வார்த்தை கூடக் கேட்கவில்லை. இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டதோ என்ற சந்தேகம் வந்து விமல் தன் அலைபேசியை உற்றுப் பார்த்தான். இணைப்பில் தான் இருக்கிறான்….

 

“ஹலோ நான் விமல் பேசறேன் சார்” என்றான் விமல். அதற்கும் பதில் இல்லை. விமலுக்கு இதயத்துடிப்பு கூடுதல் வேகம் எடுத்தது. ஆனாலும் கூடுமான வரை தன்னை அமைதிப்படுத்திக் கொண்டு, அவன் பல முறை ஒத்திகை பார்த்திருந்ததைச் சொன்னான்.

 

“நர்மதா சொன்ன வீடியோவோட காப்பி என் கிட்ட இருக்கு. எனக்குப் பணம் வேணும்….”

 

அதற்கும் எந்தப் பதில் பேச்சும் மறுமுனையிலிருந்து வரவில்லை. விமல் இதை எதிர்பார்த்திருக்கவில்லை. பயமும், கோபமும் மாறி மாறி அவனுக்குள் எழுந்து முடிவில் கோபமே மேலோங்கி நின்றது. ‘இந்த ஆள் என்னை என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறான்!

 

விமல் கோபத்தை முடிந்தவரையில் கட்டுப்படுத்திக் கொண்டு கேட்டான். “ஏன் ஒன்னுமே பேசமாட்டேங்கறீங்க?”

 

அதற்கும் மறுமுனையில் இருந்து பதில் இல்லை. அவன் சொன்னான். “உங்களுக்கு அந்த வீடியோவை என்கிட்ட இருந்து வாங்கிக்க ஆர்வம் இல்லாட்டி பரவாயில்லை. அதை நான் உங்க எதிர்க்கட்சிக்காரங்க கிட்ட கூட வித்துடலாம். அவங்களும் நான் கேட்கற பணம் தருவாங்க.”

 

முதல் முறையாக குரல் கேட்டது. “பாரு. இப்ப இருக்கற தொழில் நுட்பத்துல எந்த வீடியோலயும் யாரை வேணும்னா மார்பிங் செஞ்சுக்கலாம். அது மக்களுக்கும் தெரியும்.”

 

விமல் அந்த ஆளின் சாமர்த்தியத்தை எண்ணி வியந்தான். எதையும் ’மார்பிங் செய்த வீடியோ’ என்று என்னால் சொல்ல முடியும். அதையும் மக்கள் நம்பி விடுவார்கள் என்று அந்த ஆள் சொல்லாமல் சொல்கிறார்.

 

“எதிர்க்கட்சிக்காரங்க அதை ஒரிஜினல்னு நிரூபிச்சுக்குவாங்க. அப்படின்னா அவங்களுக்கே வித்துடவா?”

 

“எவ்வளவு வேணும் உனக்கு?”

 

“ஏழு கோடி”

 

”அவள் கூட அவ்வளவு கேட்கலை”

 

“அவள் ஏற்கெனவே பெரிய பணக்காரி. சொத்தும் நிறைய இருக்கு. நான் ஒன்னுமில்லாதவன். உங்களுக்கு இந்தக் காசு பிச்சைக்காசு. கடல்ல இருந்து ஒரு குடம் எடுத்த மாதிரி தான் இது. எந்தக் குறைவும் உங்களுக்கு வந்துடாது. நீங்க நர்மதாவுக்கே பணம் கொடுத்திருக்கலாம். அவளைக் கொன்றிருக்க வேண்டிய அவசியமே உங்களுக்கிருக்கலை.”

 

“ஏன் இப்படி அபாண்டமாய் பொய் சொல்றே. அவள் செத்தது தற்கொலை இல்லைன்னா நீ தான் அவளைக் கொலை செஞ்சிருக்கணும்னு நினைக்கிறவங்க இங்கே நிறைய பேர் இருக்காங்க. அந்தச் சந்தேகத்தை உறுதிப்படுத்தற மாதிரி நீ தலைமறைவாயிட்டே. தப்பு செய்யாதவன் ஏன் தலைமறைவாகணும்.”

 

விமலுக்கு ரத்தம் கொதித்தது. நர்மதாவைக் கொன்று விட்டு எவ்வளவு சாமர்த்தியமாக இவன் அவனைக் குற்றம் சாட்டுகிறான். பின் தான் ஒரு உண்மை உறைத்தது. இந்தப் பேச்சையும் விமல் பதிவு செய்து கொண்டிருக்கலாம் என்று அந்த ஆள் நினைத்திருக்கலாம். அதனால் தான் கவனமாகப் பேசுகிறான். 

 

“நான் தப்பு செஞ்சுட்டேன். உங்களுக்கு போன் செய்யறதுக்குப் பதிலா எதிர்க்கட்சி ஆளுங்களுக்குப் போன் செஞ்சிருக்கணும். பரவாயில்லை. இனி அவங்க கிட்டயே பேசிக்கறேன்.”

 

“உனக்கு பணம் கொடுத்தேன்னா நீ மறுபடி மறுபடி கேட்க மாட்டேன்னு என்ன உத்தரவாதம் இருக்கு?”

 

“சார் சத்தியமாய் நான் இந்த ஒரு தடவை தான் கேட்பேன். அதனால தான் ஒரேயடியாய் ஏழு கேட்கறேன். நீங்க தர்ற பணத்துல நான் கடைசி வரைக்கும் தான் வாழ்ந்தாகணும். அதனால தான் கேட்கறேன். ஒரு பொருளுக்கு ஒரு தடவை காசு வாங்கறது நியாயம் .அதுக்கே திரும்பத் திரும்ப கேட்டு உங்களைத் தொந்தரவு செஞ்சா அது அராஜகம். அப்படி செஞ்சா நீங்க என்னைச் சுலபமா தீர்த்துக் கட்டிட முடியும். நான் தனி மனுஷன். எனக்கு எந்த செல்வாக்கோ, ஆள் பலமோ இல்லை. அதை நான் புரிஞ்சு தான் வெச்சிருக்கேன். அதனால பேராசைப்பட்டு உங்களைப் பகைச்சுக்க மாட்டேன்.”

 

“நீ அதையே இன்னொரு காப்பி எடுத்து இப்போ என் கிட்ட பேசின பேரத்தையே நீ முதல்ல சொன்ன மாதிரி மற்றவங்க கிட்டேயும் பேச மாட்டாய்னு என்ன நிச்சயம்?”

 

”அதான் நான் சொன்னேனே. . நீங்களாவது எதையும் சொல்லி அரசியல்ல எப்படியும் தாக்குப் பிடிச்சுக்க முடியலாம். ஆனால் உங்களை ஏமாற்றி நான் பிழைச்சிருக்க வழி இல்லை.”

 

“சரி பணத்தை எப்போ எப்படித் தர்றது?”

 

“நானே போன் செஞ்சு சொல்றேன். ஆனால் ஒன்னு, நான் கண்டிப்பாய் உங்களை ஏமாற்ற மாட்டேன். நீங்க என்னை ஏமாற்ற திட்டம் போட்டு என்னைப் பிடிக்கவோ கொல்லவோ நினைக்கறது எனக்குத் தெரிய வந்தால், அந்த வீடியோ எங்கே போகணுமோ அங்கே போய்ச் சேர்ந்துடும். அது மட்டும் நிச்சயம்.”

 

“உனக்கு நானும் அதையே சொல்றேன். ஒரு வேளை நீ ஏமாற்றப் போகிறாய்னு எனக்குத் தெரிஞ்சா அதுக்கு நீ தர்ற விலை நீ தாங்க முடியாததாய் இருக்கும். இனி எப்போ போன் செய்வாய்?”

 

“ஒரு வாரத்துல போன் செய்யறேன்” என்று சொன்ன விமல் இணைப்பைத் துண்டித்தான்.

 

இப்போதும் அந்தப் பெண்மணிகள் பேசிக் கொண்டு தானிருந்தார்கள். சிறுவர்கள் ஆடிக் கொண்டுதானிருந்தார்கள். யாரும் அவனை உற்றுக் கவனித்ததாய்த் தெரியவில்லை. அவன் எழுந்து மெட்ரோ ஸ்டேஷன் நோக்கி நடக்க ஆரம்பித்தான்.  சொன்னபடி நர்மதாவின் கொலையாளி பணத்தைக் கொடுத்து வீடியோவை வாங்கிச் செல்வானா, இல்லை பொறி வைத்து அவனைப் பிடிக்க முற்படுவானா என்று தெரியவில்லை. கிடைக்கப் போவது ஏழு கோடியா, இல்லை மரணமா என்றும் தெரியவில்லை. சரியாகத் தான் இதைக் கையாண்டிருக்கின்றானா என்றும் தெரியவில்லை.  மெட்ரோ ரயிலில் செல்லும் போதும், ஓரிடத்தில் இறங்கி அங்கிருந்த ஓட்டலில் அவனுக்குப் பிடித்த அசைவ உணவைத் திருப்தியாகச் சாப்பிட்ட போதும், சாப்பிட்டு முடித்து விட்டு பேருந்தில் அவன் ரிஷிகேசத்திற்குச் சென்று கொண்டிருந்த போதும் அவன் மனதின் ஒரு பகுதி ‘இனி என்ன நடக்கும்?’ என்று கவலைப்பட்டது. அவன் மனதின் இன்னொரு பகுதி ஏழு கோடி பணத்தை எங்கே எப்படி வாங்குவது என்று யோசிக்க ஆரம்பித்தது. 


(தொடரும்)

என்.கணேசன்

No comments:

Post a Comment