உளவுத்துறைத் தலைவர் உள்துறை அமைச்சருக்கு
அமானுஷ்யன் நாளை மாலை நான்கு மணி அளவில் வருவதைத் தெரிவித்து விட்டுச் சொன்னார். “அமானுஷ்யனை உங்கள் அலுவலகத்திலோ,
வீட்டிலோ சந்திப்பதை விட வேறு எங்காவது சந்திப்பது நல்லது என்று நினைக்கிறேன். ராஜேஷ்வர்ஜியும் அவருடைய மகளுடன்
ரகசியமாய் அங்கே வருவது நல்லது.”
உள்துறை அமைச்சர் யோசித்து வேறு ஒரு நண்பரின் பெயரில் இருக்கும்
அவருடைய ரகசிய பங்களா ஒன்றில் இந்த சந்திப்பை வைத்துக் கொள்ள முடிவு செய்து அதை உளவுத்துறைத்
தலைவரிடம் தெரிவித்தார். அத்தகவல் ராஜேஷ்வருக்கும் உடனடியாகத் தெரிவிக்கப்பட்டது.
ராஜேஷ்வர் தன் மகளுடன் தனி விமானத்தில் தான் டெல்லிக்குச் சென்றார்
என்றாலும் வீட்டிலிருந்து விமான தளத்திற்கும், டெல்லி விமான நிலையத்திலிருந்து உள்துறை அமைச்சர்
சொல்லியிருந்த ரகசிய பங்களாவுக்கும், வழக்கமான உயர்ரகக் கார்களில்
செல்லாமல் அவர்கள் இருவரும் சாதாரண கார்களில் சென்றார்கள். எப்போதும்
உடன் செல்லும் பாதுகாவல் வீரர்களும் பாதியாகக் குறைக்கப்பட்டார்கள். உடன் சென்ற பாதுகாவல் வீரர்களும்
சீருடையில் இல்லாமல் சாதாரண உடைகளில் இருந்தார்கள். ராஜேஷ்வர் தன்னுடைய இந்தப் பயணம் ஊடகங்களில் செய்தியாக வர விரும்பவில்லை.
ராஜேஷ்வர் நிர்ப்பயாவிடம் அமானுஷ்யனைப் பற்றிச் சொன்ன தகவல்கள்
அவளுக்குப் பிரமிக்கும்படியாக இருந்தன.
அவள் மனதிலும் ஒரு நம்பிக்கைக் கீற்று பிறந்தது. ராஜேஷ்வர் மகளை நிறைய நம்ப வைத்து பின் அவள் ஏமாற்றமடைந்து விடக்கூடாது என்பதற்காக
அமானுஷ்யன் அவர்கள் கோரிக்கைக்கு மறுப்பு தெரிவிக்கும் வாய்ப்பும் இருக்கிறது என்பதையும்
அவளிடம் தெரிவிக்க நினைத்தார். அவனுடைய குடும்பத்தினர் இதுபோன்ற ஆபத்தான வேலைகளில் இனி ஈடுபட வேண்டாம்
என்று தடுப்பதால் அவன் இதற்கு முன் சில வேலைகளை மறுத்திருக்கிறான் என்பதையும் அவளிடம்
தயக்கத்துடன் அவர் தெரிவித்த போது அவளுக்கு அமானுஷ்யனின் குடும்பத்தார் மீது குறை காண
முடியவில்லை. அவரவர் பாதுகாப்பு அவரவருக்கு முக்கியமே அல்லவா?
ஒருவிதத்தில் அவளுடைய கணவனின் உயிரைக் காப்பாற்ற அமானுஷ்யனை ஆபத்திற்கு
உள்ளாக்குவது கூட அவளுக்குத் தவறாகவே தோன்றியது. ’இதுவும் சுயநலமே
அல்லவா?’ என்று அவளுடைய மனசாட்சி உறுத்தினாலும் அவளுக்கு கணவனைக்
காப்பாற்ற வேறு வழி எதுவும் தெரியவில்லை.
அக்ஷய் உளவுத்துறை அலுவலகமல்லாமல்
ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் உள்ள ஒரு தனி பங்களாவுக்குச் செல்ல வேண்டியிருக்கும் என்றோ, அங்கே உள்துறை அமைச்சரைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றோ சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை.
உள்துறை அமைச்சர் உள்ளே இருக்கிறார் என்பதற்கான அறிகுறியே வெளியே தெரியவில்லை.
உள்ளே சென்ற பிறகு தான் அவரை அவன் பார்த்து திகைத்தான். அவருடன் வேறு ஒரு நபரும் இருந்தார். முதலில் அவர் தன்னை
உளவுத்துறைத் தலைவராக அறிமுகம் செய்து கொண்டார். அவரை அவன் இதற்கு
முன் பார்த்ததில்லை. சில வேண்டுகோள்களுக்காகவும், ஆலோசனைக்காகவும் இதுவரை உளவுத்துறையிலிருந்து வேறு அதிகாரிகள் தான் தான் அவனிடம்
பேச வந்திருக்கிறார்கள்.
இந்த உள்துறை அமைச்சரையும் அவன் சந்திப்பது முதல் முறை தான்
என்றாலும், அவர்
அவனை நீண்ட கால நண்பனை வரவேற்பது போல் அன்பாக வரவேற்று உட்கார வைத்தார். அவர் அவனை நலம் விசாரித்துக் கொண்டு இருக்கையில் தான் ராஜேஷ்வரும்,
நிர்ப்பயாவும் உள்ளே வந்தார்கள்.
ராஜேஷ்வரை அங்கு பார்ப்பது அக்ஷய்க்கு அடுத்த திகைப்பாய்
இருந்தது. அமைச்சர் அவனுக்கு அவர்கள் இருவரையும், அவர்களிருவருக்கு அவனையும் அறிமுகம் செய்து வைத்தார். உலகப் பணக்காரர்களில் ஒருவரும், நாட்டின் முதல் பணக்காரருமான
ராஜேஷ்வரை யாரும் அறிமுகம் செய்து வைக்க வேண்டியதில்லை. அக்ஷய் அவருக்கு மரியாதையாய் வணக்கம் தெரிவித்தான். அவனுடைய
கவனம் நிர்ப்பயா மீது தங்கியது.
இரண்டு வாரங்களுக்கு முன் உமன்ஸ் வர்ல்டு பத்திரிக்கையில் அவளைப்
பற்றிய கட்டுரையைப் படித்து அவனுடைய மனைவி சஹானா மிகவும் சிலாகித்ததோடு அந்தக் கட்டுரையை
அவனையும் படிக்க வைத்திருக்கிறாள்.
காதலுக்காக அரச பதவியைத் துறந்த இங்கிலாந்து மன்னர் எட்வர்டுக்கு இணையாக
அவள் நிர்ப்பயாவைப் புகழ்ந்து சொல்லியிருக்கிறாள்.
“தியாகம்னு கூட இதைச் சொல்ல முடியாது அக்ஷய்.
தன்னோட வாழ்க்கையை, தான் விரும்பிய விதத்தில் வாழும்
தைரியமாகத் தான் இதைச் சொல்லணும். அதுவும் சில பேர் மாதிரி தான்தோன்றித்
தனமாக வாழ ஆசைப்படாமல் ஒரு உன்னதமான வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு அப்படியே வாழ்ந்து காட்ட
எத்தனை பேரால முடியும் அக்ஷய்?”
மனைவி சிலாகித்துச் சொன்னது சரியாகத் தான் அக்ஷய்க்கும் தோன்றி இருக்கிறது.
ஆனால் சில நாட்களுக்குள் நிர்ப்பயாவின் கணவன் யுவராஜ் காணாமல் போன செய்தி
வந்தது. அது சஹானாவுக்கும் அக்ஷய்க்கும்
அதிர்ச்சியாக இருந்தது.
சஹானா வருத்தத்துடன் அவனிடம் சொன்னாள். “கடவுள் ஏன் நல்லவங்களை
இப்படி சோதிக்கிறார்? அந்தப் பொண்ணு சொத்து வேண்டாம்,
பணம் வேண்டாம்னு சொல்லி எளிமையான ஒரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து சந்தோஷமாய்
இருந்தால், அதற்கும் இப்படி ஒரு தடங்கலா? என்ன நடந்திருக்கும்னு நினைக்கறீங்க?”
அவனுக்கும் யுவராஜ் காணாமல் போனது வருத்தமாகத் தான் இருந்தது. “யுவராஜ் கைது பண்ணின ஆட்கள்ல
யாராவது அவனை கடத்தியிருக்கலாம்.” என்று அன்றைக்கு அவன் மனைவியிடம்
சொன்னான். ஆனால் இன்றைக்கு அவனை வரவழைத்த உளவுத்துறைத் தலைவரோடு
உள்துறை அமைச்சர், ராஜேஷ்வர், நிர்ப்பயா ஆகியோரும் சேர்ந்து கொண்டது
அவன் நினைத்த அளவு எளிமையானதாக அந்தக் கடத்தல் இல்லை என்பதை அக்ஷய்க்குப் புரிய வைத்தது. முன்பே அவன் அனுமானித்தது போல
பிரச்சினை பெரிதாக இல்லாமல் அவனை அங்கே அவர்கள் வரவழைத்திருக்க வாய்ப்பில்லை.
ஆனால் மகளின் பிரச்சினையான நேரத்தில் கௌரவம் பார்க்காமல் ராஜேஷ்வர் மகளைத்
தன்னுடன் சேர்த்துக் கொண்டது அவனுக்கு ஆறுதலாக இருந்தது. எத்தனையோ
பேர் அவர்களுடைய வரட்டு கௌரவத்தால் குடும்பத்தினரைக் கஷ்டப்படுத்துவதை அக்ஷய் பார்த்திருக்கிறான். இந்த மனிதர் அந்த அளவு மோசமில்லை…
நிர்ப்பயாவும் அக்ஷயை ஆச்சரியத்துடன்
பார்த்துக் கொண்டிருந்தாள். அத்தனை திறமை வாய்ந்தவன் பார்க்க சாதாரணமாகத் தோற்றமளிப்பான்
என்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. சுமார் ஐம்பது வயதை
அவன் எட்டியிருக்கக்கூடும் என்றாலும், தலைமுடிகளில் அங்குமிங்கும்
சில நரைமுடிகளும் இருந்தாலும் இளமையாகவே அவன் தெரிந்தான். அவனைக்
கூர்ந்து பார்த்த போது அவனிடம் ஒருவித அசாத்திய அமைதியும், மிகக் கூர்மையான
பார்வையும் இருப்பதை அவளால் கவனிக்க முடிந்தது. எதுவும்
அவனை அசைத்து விட முடியாது போலத் தோன்றியது. அவள் அவனைக்
கூர்ந்து பார்ப்பதைப் பார்த்து அவன் சினேகத்துடன் முறுவலித்தான். ஒரு சிறிய
புன்னகை அவனை அழகானவனாக்கியது. சினேகத்துடன் புன்னகை பூத்தவனிடம் ஆபத்தானதொரு உதவியைக் கேட்க
வந்திருப்பது அவளை உறுத்தியது. அவளும் அவனைப் பார்த்து சோகமாகப் புன்னகைத்தாள்.
அக்ஷயிடம் உள்துறை அமைச்சர் தான் பேச ஆரம்பித்தார். ராஜேஷ்வருக்குக்
கடத்தல்காரர்கள் போன் செய்ததைச் சொன்னார். மிகவும் பழகிய நண்பனிடம்
மனம் திறந்து சொல்வது போல், அப்சல்கானை விடுவித்து யுவராஜை மீட்க
அவர் தயாராக இருந்ததைப் பற்றியும் சொன்னார். சாதாரண சமயங்களில்
இந்த மனிதரிடம் ஒரு அப்பாயின்மெண்ட் வாங்கக் கூட பல மாதங்கள் காத்து இருக்க வேண்டும்
என்பதை நினைவுபடுத்திக் கொண்ட அக்ஷய்க்கு அவர் போன்ற அரசியல்
தலைவர்கள் காலத்திற்கேற்ப எப்படியும் மாறுவதை எப்படி அனாயாசமாகச் செய்கிறார்கள் என்ற
பிரமிப்பு மேலிட்டது. பேசிக் கொண்டிருப்பதை யாராவது பார்த்தால்
அவர்களுக்கு இது அவனுடனான முதல் சந்திப்பு என்று சொல்லவே முடியாது.
ஆனால் அடுத்ததாக அவர் நிர்ப்பயா அப்சல்கானை விடுவிக்க ஒத்துக்
கொள்ளாமல் காரணத்தோடு மறுத்ததைச் சொன்ன போது கூடுதல் பிரமிப்பு ஏற்பட்டது. மனிதர்கள் நல்லவர்களாகவே
இருந்தாலும் கூட சொந்த காரியங்கள் என்று வரும் போது தங்கள் லாபங்களிலேயே கண்ணும் கருத்துமாய்
இருப்பதை அவன் எப்போதும் கண்டு வருகிறான். மற்ற சமயங்களில் அவர்கள்
பேசும் நியாயம், அவர்களுடைய சொந்தக் காரியங்கள் ஆக வேண்டியிருக்கையில்
காணாமல் போய், சுயநலமும், சுயலாபமுமே பிரதானமாய்
மேலோங்குவதையும், அதனால் அடுத்தவர்களுக்கு ஏற்படும் நஷ்டங்களைக்
காணவும் மறுக்கும் மனநிலை
இயல்பாக இருப்பதையும் அவன் பார்த்திருக்கிறான். முதல் முறையாக
வித்தியாசப்படும் அந்தப் பெண்ணை அவன் உண்மையிலேயே மதித்தான்.
அமைச்சர் தொடர்ந்து சொன்னார். “அப்சல்கானை விடுவிக்காமலும் யுவராஜைக் காப்பாற்ற
முடியுமா என்று நிர்ப்பயா கேட்ட போது, எங்களுக்கு உங்கள் நினைவு
வந்தது. சாதாரணமாக யாராலும் முடியாது என்று நினைத்த எத்தனையோ
வேலைகள் உங்களால் முடிந்திருக்கின்றன. தீவிரவாதிகளை நீங்கள் அனாயாசமாக
இதற்கு முன்பும் சமாளித்திருக்கிறீர்கள். மைத்திரேய புத்தரை சீனாவிலிருந்து
இரண்டு முறை காப்பாற்றி இந்தியாவுக்குக் கொண்டு வந்திருக்கிறீர்கள்…. நீங்கள் மனது வைத்தால் யுவராஜையும் உங்களால் காப்பாற்ற முடியும் என்பது அடியேனின்
நம்பிக்கை...”
(தொடரும்)
என்.கணேசன்


Many thanks
ReplyDelete