கடத்தல்காரர்கள் அழைத்துப் பேசினால் உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என்று போலீசார் சொல்லியிருந்த போதும், ராஜேஷ்வர் அதைச் சொல்வதைத் தவிர்த்தார். கடத்தல்காரர்கள் சார்பாகப் பேசியவன் எச்சரித்தது போல போலீஸாரிடம் போகும் தகவல் சாதாரணமாகக் கசியாது என்றாலும் அவர் சம்பந்தப்பட்ட தகவலுக்கு விலை அதிகம் கிடைக்கும் என்பதால், வெளியே கசிவதற்கு வாய்ப்புகள் அதிகம். பொதுவெளிக்கு வந்தவுடன் எதையும் ரகசியமாகச் சாதித்துக் கொள்வது முடியாத காரியமாகி விடும். எனவே அவர் ரகசியமாகச் சென்று உள்துறை அமைச்சரைச் சந்தித்தார்.
உள்துறை அமைச்சர் நாற்பதாண்டு கால அரசியல் அனுபவம் உள்ளவர். ஆட்களைத் துல்லியமாக எடைபோடுவதில்
வல்லவர். எப்போதும் நகைச்சுவையாகப் பேசிக் கொண்டிருப்பவர் என்றாலும்
அதன் பின்னணியில் மிகவும் அழுத்தமானவர். எதிரிகளை எப்படி வீழ்த்த
வேண்டும் என்று அறிந்தவர். தந்திரக்காரர். கட்சிகளைத் தாண்டி அனைவரிடமும் சகஜமாகப் பேசக்கூடியவர். இதையெல்லாம் தாண்டி ராஜேஷ்வருக்கு மிக நெருக்கமானவர். அதனால் அவரை அவருடைய வீட்டில் சந்தித்து, கடத்தல்காரர்களின்
கோரிக்கையைச் சொல்வதில் ராஜேஷ்வருக்குத் தயக்கமோ, பிரச்சினையோ
இருக்கவில்லை.
உள்துறை அமைச்சர் கடத்தல்காரர்களின் கோரிக்கையைக் கேட்டு அதிர்ச்சி
அடையவில்லை. அரசியலுக்கு வந்து நாற்பதாண்டு கழிந்தும் எதற்காவது அதிர்ச்சி ஏற்பட்டால் அது
தான் ஆச்சரியம். அவர் அதிகம் யோசிக்காமல் ராஜேஷ்வரிடம் சொன்னார்.
“அப்சல்கானை அனுப்பி வைத்து விடலாம் ராஜேஷ்வர்ஜி. அவன் தப்பித்துச் சென்று விட்டதாக ஒரு கதை கட்டுவது ஒன்றும் பெரிய விஷயமல்ல.
உங்களுக்காக இதைக் கூடச் செய்ய முடியா விட்டால் நான் அதிகாரத்தில் இருப்பதில்
அர்த்தமில்லை.”
இதற்கு வழியிருப்பதை உணர்ந்து தான் கடத்தல்காரர்களும் யுவராஜைக்
கடத்தியிருக்கிறார்கள் என்று புரிந்து கொண்ட ராஜேஷ்வர் ‘திரை மறைவில் எத்தனை வேலைகள்
பொதுமக்களுக்குத் தெரியாமல் நடந்து கொண்டிருக்கின்றன’ என்று உள்ளுக்குள்
வியந்தார்.
ராஜேஷ்வர் சொன்னார்.
“ஆனால் என் மகளுக்கு அப்படி அப்சல்கானைத் தப்புவிப்பதில் உடன்பாடில்லை”
உள்துறை அமைச்சர் ஆச்சரியத்துடன் கேட்டார். “ஏன்?”
ராஜேஷ்வர் நிர்ப்பயா சொன்னதைச் சொன்ன போது உள்துறை அமைச்சர்
அவரை ஆச்சரியம் குறையாமல் சொன்னார்.
“ராஜேஷ்வர்ஜி உங்களுடைய மகள் வித்தியாசமானவள்”
ராஜேஷ்வர் பெருமிதமும், வருத்தமும் கலந்த தொனியில் சொன்னார்.
“ஆமாம். அவளை எங்களால் மாற்ற முடியவில்லை…..
அவள் சொன்னபடி அப்சல்கானை அனுப்பாமல் யுவராஜைக் காப்பாற்ற எதாவது வழியிருக்கிறதா?”
உள்துறை அமைச்சர் கண்களை மூடி இரண்டு நிமிடங்கள் யோசித்து விட்டுச்
சொன்னார். “மிகவும்
கஷ்டம் தான். ஏனென்றால் நம் ஒற்றர்களை வைத்து தோராயமாக யுவராஜை
எங்கே ஒளித்து வைக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடித்து விடலாம். அங்கே குண்டு கூடப் போட்டு அந்த இடத்தையே அழித்து விடலாம். அதற்கான தொழில் நுட்பத்தை நாம் என்றைக்கோ
எட்டியும் விட்டோம். தாக்க முடிந்த ஆட்களையும் கூட இப்போது வைத்திருக்கிறோம்.
ஆனால் இது போன்ற தாக்குதலில் நாம் யுவராஜையும் சேர்த்து பலி கொடுக்க
வேண்டியதாகி விடும். அப்சல்கானை
நாம் அனுப்பப் போவதில்லை என்று சிறிது சந்தேகம் வந்தாலும் அந்த தீவிரவாதிகளின் கூட்டம்
யுவராஜைச் சித்திரவதை செய்து,
நம்மிடம் மிரட்டியது போலவே நடந்து கொள்ளவும் ஆரம்பித்து விடும்.
அது ஆபத்து.”
இது ராஜேஷ்வர் எதிர்பார்த்த பதில் தான் என்றாலும் உள்துறை அமைச்சர்
வாயிலிருந்து அந்த வார்த்தைகள் வரக் கேட்ட போது அவருக்கு ஏமாற்றமாக தான் இருந்தது. அவர் கேட்டார்.
”என் மகள் சொன்னது போல் யுவராஜைக் காப்பாற்ற வேறு எதாவது வழியே இல்லையா?
என்ன செலவானாலும் அதை ஏற்றுக் கொள்ள நான் தயாராக இருக்கிறேன்ஜி.
அவள் என்னிடமிருந்து சொத்தைக் கூட எதிர்பார்க்காதவள். அவள் கணவனைக் கூட என்னால் மீட்டுக் கொடுக்க முடியாவிட்டால் நான் பிறகு என்னைப்
பற்றி எந்தப் பெருமையையும் உணர முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை.” சொல்லச் சொல்ல அவர் உணர்ச்சிவசப்பட்டார்.
அவர் சொன்னதும் உணர்ச்சிவசப்பட்டதும் உள்துறை அமைச்சரை அசைத்தது. எல்லா கட்சிகளுக்கும் ராஜேஷ்வர்
தாராளமாக கட்சி நிதி அளிக்கிறார் என்றாலும் அவர் மற்ற கட்சிகளுக்குத் தருவதை விட ஆளும்
கட்சிக்கு பல மடங்கு தருகிறார். அதனால் அவருக்கு இந்த உதவி செய்து
தர முடியாமல் போவது தங்கள் பக்கத்தின் குறைபாடாகத் தான் உள்துறை அமைச்சருக்கும் தோன்றியது.
சிறிது யோசித்த அவருக்குத் திடீரென்று ஒரு தகவல் நினைவுக்கு வந்தது.
“ஒரு நிமிஷம் பொறுங்கள் ராஜேஷ்வர்ஜி. உங்களுக்கு உதவ முடிந்த
ஒரு மனிதன் இருந்தான். இப்போதும் அவன் எங்கேயோ இருக்க வேண்டும்.
அவன் பெயர் சூப்பர் மேன்…. அல்ல….. அதிசய மனிதன்… அல்ல… அசகாய சூரன்….
அல்ல அல்ல…. அது போன்றதொரு பெயர்…. மிக வித்தியாசமான பெயர் அவனுடையது….. அவன் ஒரு காலத்தில்
தலிபான் தீவிரவாதிகளின் இடத்திற்கே போய் சாகசங்கள் செய்து வந்திருக்கிறான்.
இன்னொரு சமயம் தலாய் லாமாவின் வேண்டுகோளுக்காக பிரதமர் அவனிடம் வேண்டிக்
கொண்ட போது புத்தரின் அவதாரமாகச் சொல்லப்படும் குழந்தை ஒன்றை திபெத்திலிருந்து காப்பாற்றிக்
கூட்டி வந்திருக்கிறான். அதுவும் ஒரு முறை அல்ல, இரு முறை…. சீன உளவுத்துறை சர்வ பலத்துடன் அந்த அவதாரக்
குழந்தையை அழிக்க நினைத்திருந்தாலும்
அவன் காப்பாற்றி இருக்கிறான்…. பிறகு இல்லுமினாட்டி கூட ஒருமுறை
அவன் சேவையைக் கேட்டுப் பெற்றிருக்கிறது என்றும் கூடக் கேள்விப்பட்டேன். அது வதந்தியா உண்மையா என்று சரியாகத் தெரியவில்லை. ஆனால்
அவனைப் பற்றிக் கேள்விப்பட்டதெல்லாம் பிரமிப்பாக இருந்ததால் எனக்கு அவன் நினைவு வந்தது.
அவன் பட்டப் பெயர் தனித்துவமானவன், மிக வித்தியாசமானவன்
என்கிற வகையில் இருக்கும். ஹா…. அவன் பெயர்
அமானுஷ்யன்….”
ராஜேஷ்வர் பரபரப்புடன் நிமிர்ந்து உட்கார்ந்தார். ”அவன் இப்போது இருக்கிறானா?
எங்கே இருக்கிறான்? அவன் நமக்கு உதவுவானா?
அவன் என்ன தொகை எதிர்பார்த்தாலும் நான் தரத் தயார்.”
உள்துறை அமைச்சர் சொன்னார். “அதெல்லாம் தெரியவில்லைஜி. உளவுத்துறைத் தலைவரைக் கேட்டால் தெரியும். நான் கேட்டுச்
சொல்கிறேன்.”
ராஜேஷ்வரை அனுப்பி விட்டு உள்துறை அமைச்சர் உடனடியாக உளவுத்துறைத்
தலைவரைத் தொடர்பு கொண்டார்.
ராஜேஷ்வருக்குக் கடத்தல்காரர்களிடமிருந்து வந்த அலைபேசி அழைப்பைப் பற்றியும், ராஜேஷ்வர்
வைத்த கோரிக்கையையும்
அவரிடம் சொன்னார்.
அலைபேசி எண்ணைக் குறித்துக் கொண்ட உளவுத்துறைத் தலைவருக்கு அந்த
எண்ணை வைத்து எதையும் கண்டுபிடிக்க முடியாது என்று தெரியும். அதற்கான முழு ஏற்பாட்டை
கடத்தல்காரர்கள் செய்திருப்பார்கள். ஆனாலும் தங்கள் பக்கத்தில்
செய்ய வேண்டிய எதையும் அவர் செய்யாமல் இருக்க முடியாது. நிர்ப்பயா
அப்சல்கானை விடுவிக்க சம்மதிக்காமல் இருந்தது தான் உளவுத்துறைத் தலைவரை ஆச்சரியப்படுத்தியது.
இப்படியும் இன்றும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்று தனக்குள் அவர் வியந்தார்.
முடிவில் உள்துறை அமைச்சர் அமானுஷ்யன் என்ன தொகை கேட்டாலும்
தரத் தயார் என்று சொன்னதைக் கேட்டு சொன்னார்.
“நீங்கள் சொன்னது போல இந்த வேலைக்கு அவனை விடச் சிறந்த இன்னொரு ஆளை நாம்
கண்டுபிடிக்க முடியாது. ஆனால் அவன் பணத்திற்காக எதையும் செய்யும்
ஆள் அல்ல சார். அவனை நம் அதிகாரத்தைக் காட்டியும் நாம் எதையும்
செய்ய வைக்க முடியாது. உளவுத்துறை கடந்த ஐந்து வருடங்களில் மூன்று
முறை சில முக்கிய வேலைகளுக்கு அவன் உதவியைப் பெற முயன்றது. ஆனால்
அவன் உதவ முன்வரவில்லை. அவன் வீட்டாருக்கு அவன் இது போன்ற ஆபத்தான
வேலைகளில் இறங்குவதில் விருப்பமில்லையாம். அதைச் சொல்லி அவன்
அந்த வேலைகளில் ஈடுபட மறுத்து விட்டான். ஆனால் அந்த வேலை ஆவதற்கு
சில ஆலோசனைகள் சொல்லி உதவினான்.”
உள்துறை அமைச்சர் கேட்டார். “அவனைப் போல் வேறு யாராவது இருக்கிறார்களா?”
உளவுத்துறைத் தலைவர் யோசிக்காமல் சொன்னார். “இல்லை சார்.”
“அப்படியானால் அவனிடம் இந்த உதவியை நாம் பெற்றே ஆக வேண்டும். என்ன செய்வது?”
”நானோ, நீங்களோ, ராஜேஷ்வர்ஜியோ அவனிடம்
பேசி சம்மதம் வாங்க முடியும் என்று தோன்றவில்லை. ஆனால் நிர்ப்பயா
அவனிடம் பேசினால் அவன் சம்மதிக்க வாய்ப்புண்டு. ஏனென்றால் அவனும்
அவளைப் போல் உயர்ந்த சிந்தனைகளோடும், கொள்கைகளோடும் வாழ்பவன்.
தன்னைப் போன்ற ஒருத்தி வேண்டுகோள் விடுக்கும் போது அவன் நம்மிடம் மறுப்பது
போல் உடனடியாக மறுக்கத் தயங்குவான் என்று நினைக்கிறேன்.….”.
(தொடரும்)
என்.கணேசன்


ஒரு வழியா அமானுஷியன் வந்துட்டார்....
ReplyDeleteசென்ற வாரம் நான் போட்ட பதிவின்படியே கணேசன் சார், கதையை நகர்த்தியிருக்கிறார். அருமை அருமை
ReplyDeleteHappy Diwali sir
ReplyDeleteHappy Diwali
ReplyDeleteFinally Amanushyan entered..Thanks.
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteSuper Sir. Eagerly waiting for Amanusyan
ReplyDeleteAkshay entry - Super turning point.
ReplyDeleteஅமானுஷ்யன் வரவு நல் வரவாகட்டும்
ReplyDeleteதீப ஒளி வாழ்த்துக்கள்
Dear Ganeshan Ji, I am extremely thankful to you for offering wonderful reading. My prayers for your well being and a satisfying life, GOD BLSS YOU
ReplyDeleteManythanks for the bonus episode. Deepavali wishes to all.
ReplyDeleteGoosebump when home minister tells about Akshay... Welcome Akshay.
ReplyDelete