ஷ்ரவனுக்கு பிரம்மானந்தா யோகியெல்லாம் கிடையாது என்று சேதுமாதவன் உறுதியாகச் சொன்ன விதம் புன்னகையை வரவழைத்தது. “எதனால அப்படிச்
சொல்றீங்க சார்?”
“சில காலமாவது
ஆன்மீகத்துல ஆழமாயிருக்கற யாருக்குமே யார் யோகி, யார் யோகியில்லைன்னு
தெரியாமப் போகாது தம்பி. அவர் ஆன்மீகத்துல நிறைய படிச்சிருக்கார், பேச்சுத்
திறமை இருக்குன்னு வேணும்னா சொல்லலாம். ஆனா யோகிங்கறது
எல்லாம் பெரிய வார்த்தை...”
“நீங்க உங்க
கருத்தை சைத்ரா கிட்ட சொல்லியிருக்கீங்களா சார்.”
“சொல்லியிருக்கேன்.”
“நீங்க சொன்னதை
அவங்க எப்படி எடுத்துகிட்டாங்க?”
”அவளுக்கு
நான் சொன்னது ஏமாற்றமா இருந்துச்சுன்னு நினைக்கிறேன். அவ ”யோகி பிரம்மானந்தா
வெளிநாடுகள்ல எல்லாம் போய் நம்ம மதத்தோட பெருமைகளைப் பேசறார் தாத்தா. அங்கேயெல்லாம்
கூட அவரைப் பூஜிக்கிறாங்க. அப்படிப்பட்டவரை ஏன் நீங்க யோகியில்லைன்னு சொல்றீங்க”ன்னு கேட்டா. வெளிநாட்டுல
போய் நம்ம மதத்தைப் பேசறவங்க எல்லாம் விவேகானந்தராயிட முடியுமா? விஷய ஞானமோ, பேச்சுத்
திறமையோ, ஒருத்தரை யோகியாக்கிடாது, ஆத்மஞானமும், அதற்கேற்ற
வாழ்க்கையும் தான் ஒருத்தரை யோகியாய் அடையாளம் காட்ட முடியும்னு சொன்னேன்...”
‘வெளிநாட்டுல
போய் நம்ம மதத்தைப் பேசறவங்க எல்லாம் விவேகானந்தராயிட முடியுமா?’ என்று அவர்
சொன்னதை ஷ்ரவன் ரசித்தான். கிழவர் மற்றவர்களது புகழை எல்லாம் பெரிதாக லட்சியம் செய்வதில்லை. அவருக்கென்று
ஆணித்தரமான கருத்துகளை வைத்திருக்கிறார்...
”உங்க பேத்தி
துறவியாக முடிவெடுத்ததை நீங்களும், உங்க பிள்ளையும்
எப்படி எடுத்துகிட்டீங்க?”
“ரொம்பவே
வருத்தமாய் இருந்துச்சு. ஆனா தன்னோட வாழ்க்கை எப்படிப் போகணும்னு முடிவெடுக்க வேண்டியவ
அவள் தான். அவளோட எந்த விருப்பத்துக்கும் குறுக்கே நிக்க கிருஷ்ணா விரும்பல. அதனால ”எதையும்
யோசிச்சு செய்”னு மட்டும் கிருஷ்ணா சொன்னான். அவ அதுல
பிடிவாதமா இருந்தா. பிறகு ஒத்துகிட்டோம்...”
“அவங்க அங்கே
போகிறதுக்கு முன்னாடி கடைசியாய் என்ன சொன்னாங்க.”
“அழுதா. தன்னோட
கடமைகளை செய்யத் தவறிட்ட குற்றவுணர்ச்சி இருக்கிறதா சொன்னா. ஆனா துறவியாகிறதுல
தான் நிம்மதி கிடைக்கும்னு நம்பறதால போகறதா சொன்னா...” சொல்கையில்
சேதுமாதவனின் குரல் கரகரத்தது. மரணத்திலாவது அவளுக்கு நிம்மதி கிடைத்திருக்குமா என்று அவர்
தனக்குள் கேட்டுக் கொண்டார்.
”சைத்ரா
யோகாலயம் போய் துறவியானதுக்கப்பறம் நீங்களோ, உங்க பிள்ளையோ
போய் அவங்களைப் பார்த்திருக்கீங்களா?”
“இல்லை. அதற்கு
அங்கே அனுமதியில்லை. அவளைப் பிறகு நாங்கள் பார்த்ததே கோர்ட்டில் தான்”
“அங்கே அவங்க
உங்க கிட்ட தனியா எதுவும் பேசலையா?”
“பேசலை..”
“உங்களுக்கு
அவங்க உயிருக்கு ஆபத்திருக்குன்னு சொல்லி வந்த மொட்டைக் கடிதம் இப்ப உங்க கிட்ட இருக்கா?”
“இல்லை...
கிருஷ்ணா யோகாலயத்துக்கு அவளைப் பார்க்கப் போய் அனுமதிக்கலைன்னவுடனே போலீஸ்ல
புகார் தந்தோமில்லையா, அப்ப போலீஸ்ல கேட்டாங்கன்னு அந்த மொட்டைக் கடிதத்தை அவங்க
கிட்ட கொடுத்துட்டோம். அதைத் திருப்பிக் கேட்டப்ப அது போலீஸ் ரிகார்டுக்கு வேணும்னு
சொல்லி போலீஸ் ஸ்டேஷன்ல திருப்பித் தரலை”
“அந்த மொட்டைக்
கடிதம் எப்படி வந்துச்சு? தபால்லயா?”
“ஆமா. சாதாரண
தபால்ல.”
“தபால் யார்
பேருக்கு வந்தது? அந்தக் கடிதத்துல இருந்த வாசகங்களை அப்படியே சொல்ல முடியுமா?”
”கிருஷ்ணா
பேருக்கு தான் தபால் வந்தது. அதுல “”உங்கள் மகள் உயிருக்கு யோகாலயத்தில் பேராபத்து இருக்கிறது. எப்படியாவது
அவளைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.”னு எழுதி இருந்துச்சு”
”கடிதம்
கையால எழுதப்பட்டதா இல்லை ப்ரிண்ட்டடா”
“கையால எழுதப்பட்டது
தான். யாரோ இடது கையால எழுதின மாதிரி இருந்துச்சு,...”
“தபால்ல
போஸ்ட் ஆபிஸ் சீல் இருந்திருக்குமே, அது எந்த போஸ்ட்
ஆபிஸ் சீல்னு பார்த்திருக்கீங்களா?”
அதை அவரும் கிருஷ்ணாவும் பார்த்திருக்கிறார்கள். அவர் சொன்னார். “யோகாலயம்
இருக்கற ஏரியா போஸ்ட் ஆபிஸ் சீல் தான் அதுல இருந்துச்சு”
பிறகு ஷ்ரவன் சைத்ராவுக்கு கோவிட் என்று
தெரிவித்து யோகாலயத்தில் இருந்து தகவல் வந்ததிலிருந்து டாக்டர் வாசுதேவனின் மரணம் வரையான
தகவல்களை விரிவாகக் கேட்டுத் தெரிந்து கொண்டான். செவென்
ஸ்டார் மருத்துவமனையில் டாக்டர் வாசுதேவன் கிருஷ்ணமூர்த்தியிடம் சொன்னதைக் கேட்ட போது
அவனுக்கே ரத்தம் கொதித்தது. கிருஷ்ணமூர்த்திக்கு எப்படி இருந்திருக்கும் என்று யோசித்த
போது அவன் மனம் இரங்கியது.
அங்கிருந்து கிளம்புவதற்கு முன் ஷ்ரவன்
சொன்னான். “சார் உங்களுக்கு எவ்வளவு நெருக்கமான ஆளாய் இருந்தாலும் இந்த
விசாரணை நடக்கறதைப் பத்தி அவங்க கிட்ட நீங்க எதுவுமே சொல்லிடாதீங்க. இது ரகசியமாய்
இருந்தா தான் அவங்க குறுக்கீடு இல்லாம நாம உண்மையைக் கண்டுபிடிக்க முடியும்...”
சேதுமாதவன் தலையசைத்தார். “நான் யார்
கிட்டயும் சொல்ல மாட்டேன்” என்று சொன்னவருக்கு ஹாலில் இருந்த கிருஷ்ணமூர்த்தியின் படம்
ஏதோ சொல்வது போல் தோன்றியது. ஒரு கணம் மகனின் படத்தைப் பார்த்து விட்டு, ஷ்ரவனின்
கையைப் பிடித்துக் கொண்டு ஆவலோடு அவர் கேட்டார். “தம்பி எப்படியாவது
உண்மையைக் கண்டுபிடிச்சுடுவீங்கல்ல.”
ஷ்ரவன் நெகிழ்ச்சியுடன் உறுதியாகச்
சொன்னான். “கண்டிப்பாய் கண்டுபிடிச்சுடுவோம் சார்.”
சேதுமாதவன் லேசாகக் கண்கலங்கியபடி அவனைப்
பார்த்துக் கைகூப்பினார். அவரை அன்போடு
அணைத்தபடி தலையசைத்து ஷ்ரவன் விடைபெற்றான்.
ஷ்ரவன் தான் தங்கியிருந்த ஓட்டலுக்குத்
திரும்பி வந்தான். ராகவனின் மனைவி அவர்கள் வீட்டிலேயே தங்க வற்புறுத்திய போதும்
அவன் மறுத்து விட்டான். ராகவனின் உறவினனாக யாரும் அவனை அறிந்து கொள்ளாமல் இருப்பதே
நல்லதென்று அவன் நினைத்தான். அதே காரணத்தால் ராகவனும் அவனைத் தங்கள் வீட்டில் தங்க வற்புறுத்தவில்லை.
ஓட்டல் அறைக்கு வந்த ஷ்ரவன் சைத்ரா
சம்பந்தமான பழைய செய்திகளை எல்லாம் இணையத்தில் தேடித் தேடிப் படித்தான். கிருஷ்ணா
போலீஸில் புகார் செய்ததற்குப் பின் தான் சைத்ரா பிரபலமாகியிருந்தாள். அதற்கு
முன்பு வரை முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் கூட அவள் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாததால்
இணையத்தில் எந்தத் தகவலும் இருக்கவில்லை.
பிரபலமான பின் அவளுடைய முழு வரலாற்றையும்
தோண்டியெடுத்து பத்திரிக்கைகள் எழுதியிருந்தன. பின் நடந்த
நிகழ்வுகள் உடனுக்குடன் வந்திருந்தன.
அருணாச்சலத்திடம் சேதுமாதவன்
மனத்தாங்கலுடன் சொன்னது போல் உண்மை என்ன என்பது குறித்த அக்கறை எதிலும் பூரணமாகத் தெரியவில்லை. நிறைய கேள்விக்குறிகள்,
ஆச்சரியக்குறிகள் எல்லாம் போட்டு கற்பனைகளை வஞ்சனையில்லாமல் சேர்த்து
எழுதியிருந்தார்கள். அதையே தான் தொலைக்காட்சிகளிலும் செய்திருந்தார்கள்.
ஷ்ரவன் முக்கியமாய் கோர்ட்டுக்கு சைத்ரா வந்த நியூஸ் வீடியோக்களைக் கூர்ந்து பார்த்தான். அவள் கோர்ட்டுக்கு வந்ததில் இருந்து திரும்பிச் செல்லும் வரை அவளை, காமிராக்கள் மையப் படுத்தியிருந்தன. காமிராக்கள் அடுத்தபடியாக சேதுமாதவனையும், கிருஷ்ணாமூர்த்தியையும் அதிகம் காட்டின. இருவர் முகத்திலும் சோகம் தெரிந்தாலும் கிருஷ்ணமூர்த்தியின் முகத்தில் வேதனையும் சோகமும் பல மடங்காய் தெரிந்தது. ஒரு தந்தையின் தவிப்பை ஷ்ரவன் அவர் தோற்றத்தில் அழுத்தமாகவே உணர்ந்தான். சைத்ராவுடன் இருந்த இரண்டு துறவிகளும் துறவிகள் போல் தெரியவில்லை. இராணுவத்தில் பணி புரியும் வீரர்கள் போல் அவர்கள் விறைப்பாய் இருந்தார்கள்.
கோர்ட்டுக்குள் வீடியோ பதிவுகளுக்கு அனுமதி இல்லை என்பதால் உள்ளே
நடந்தது பற்றிய வீடியோ பதிவுகள் இருக்கவில்லை. கோர்ட்டில் சைத்ரா தான் பூரண சுதந்திரத்துடன்
நலமாக இருப்பதாகச் சொன்னதையும், தனக்கு ஆபத்திருப்பதாகச் சொல்லப்படுவதில்
உண்மை சிறிதும் இல்லை என்றும் துறவியான பின் உறவுகளைச் சந்திப்பதில் தனக்கு விருப்பமில்லாத
காரணத்தால் தான் தந்தை வந்த போது அவரைச் சந்திக்க மறுத்ததாகவும் சொன்னாள் என்பதையும்
நிருபர்கள் பரபரப்புடன் ஒளிபரப்பினார்கள். கோர்ட்டுக்குள்ளேயும்
அவள் தந்தை, தாத்தா பக்கம் திரும்பவில்லை என்று சொன்னார்கள்.
சைத்ரா கோர்ட்டிலிருந்து வெளியே வந்தபின்
காரில் ஏறுவதற்கு முன்பு மட்டும் அவள் கடைசியாக ஒருமுறை தந்தை
தாத்தா பக்கம் திரும்பிப் பார்த்தாள். அதுவும் மூன்றே வினாடிகள்
தான். பின் காரினுள் அமர்ந்து கொள்ள கார் வேகமாகச் சென்றது.
அந்த மூன்று வினாடிகள் வீடியோ ஓட்டத்தை நிறுத்தி ஷ்ரவன் கூர்ந்து பார்த்தான்.
அவள் முகத்தில் தெரிந்த வேதனை அவனை என்னவோ செய்தது.
(தொடரும்)
என்.கணேசன்