அருணாச்சலம் தெரிவித்த விவரங்களை எல்லாம் ராகவன் ஷ்ரவனிடம்
சொன்னார். ஷ்ரவன் அவர் சொன்னதை எல்லாம் இடைமறிக்காமல் கேட்டுக் கொண்டான். முடிவில்
ராகவன் சொன்னார். “இதுல ரொம்ப முக்கியம் என்னன்னா நாம இதைத் துப்பு துலக்கறோம்னோ, முதலமைச்சர்
இதோட பின்னணியில இருக்கிறார்னோ அவங்களுக்குக் கொஞ்சமும் சந்தேகம் வரக்கூடாது.”
ஷ்ரவன் தலையசைத்தான். ராகவன்
தயக்கத்துடன் தொடர்ந்து சொன்னார். “இதுல நாங்க உனக்கு மறைவாய் இருந்துட்டு ரகசியமாய் உதவலாமே
ஒழிய வெளிப்படையாய் எந்த உதவியும் செய்ய முடியாது.”
‘ஏதாவது
உதவி செய்தால் போலீஸும், முதல்வரும் பின்னணியில் இருப்பது வெளிப்பட்டு விடும் என்ற நிலை வரும் என்றால் அவர்கள் கண்டிப்பாக
உதவி செய்ய மாட்டார்கள்’ என்று ஷ்ரவன் அதை மொழிபெயர்த்துக் கொண்டான். அதில் அவன்
தவறு காணவில்லை. ராகவன் சொல்வதை வைத்துப் பார்க்கையில் அருணாச்சலம் தன் மிக
நெருங்கிய, மிக நல்ல நண்பனுக்கு உதவியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில்
தான் இதில் இறங்கி இருக்கிறார் என்பது புரிந்தது. இல்லா விட்டால்
அவரும் போலீஸும் இந்த விசாரணையை ஆரம்பித்தே இருக்க மாட்டார்கள்.
ஷ்ரவன் ராகவனிடம் கேட்டான். “பிரம்மானந்தா
இதுல எந்த அளவு ஈடுபட்டிருப்பார்னு நீங்க நினைக்கிறீங்க மாமா?”
ராகவன் சொன்னார். “அந்தப்
பொண்ணு மரணத்துல அவருக்கு எந்த அளவு பங்கு இருக்கலாம்னு என்னாலும் யூகிக்க முடியல ஷ்ரவன். ஆனா அவருக்குத்
தெரியாம எதுவும் நடந்திருக்க வாய்ப்பில்லை... ஏன்னா இந்தச்
சம்பவங்கள் நடந்தப்ப அவர் யோகாலயத்துலயே இருந்திருக்கார். எப்பவுமே
அவர் சுற்றுப் பயணங்கள்ல தான் அதிகம் இருக்கிறவர்னாலும் கோவிட் தாக்கம் எல்லா இடங்கள்லயும்
அதிகமாய் இருந்து கட்டுப்பாடுகளும் நிறைய இருந்ததால அவர் எங்கேயும் போகலை...”
ஷ்ரவன் சொன்னான். “அந்த மொட்டைக்
கடிதம் கிடைச்சவுடனே டாக்டர் கிருஷ்ணா முதல்ல யோகாலயத்துக்குப் போய் மகளைப் பார்க்க
அங்கே அனுமதிக்கலைன்னவுடனே போலீஸ்ல புகார் செய்தாரில்லையா. அதுக்குப்
பிறகு போலீஸ் போய் விசாரிச்சு சைத்ராவை நேரில் பார்த்தோம், அவ நல்லா
தான் இருக்கா, அவள் விருப்பமில்லாமல் தான் அப்பாவைப் பார்க்கலைன்னு தெரிவிச்சதில்லையா. போய் விசாரிச்ச
போலீஸ் அதிகாரி எப்படிப்பட்ட ஆள்? அவர் ரெகார்டு எப்படி இருக்கு?”
”எங்கே போனாலும்
சம்பாதிக்கக் கூடியவர்” என்று ராகவன் சுருக்கமாகச் சொன்னார்.
ஷ்ரவன் பெருமூச்சு விட்டான். ஒரு சிலரின்
பணம் சேர்க்கும் பேராசையால் எத்தனை பேர் எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறார்கள்! அந்தப்
போலீஸ் அதிகாரி நேர்மையான அதிகாரியாக இருந்தால் அவரைச் சென்று விசாரிக்க வேண்டும், அவர் சென்று
விசாரித்த போது யோகாலயத்தில் நடந்தது என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஷ்ரவன்
நினைத்திருந்தான். ஆனால் இப்போது அந்த அதிகாரியை விசாரிப்பது யோகாலயத்திற்கு
தங்கள் விசாரணையை அறிவிப்பது போல் ஆகி விடும் என்று புரிந்ததால் அந்த எண்ணைத்தை அவன்
கைவிட்டான்.
ராகவன் சொன்னார். “உன்னோட
செயல்திட்டம் என்ன ஷ்ரவன்?”
ஷ்ரவன் சிறிது யோசித்து விட்டுச் சொன்னான். “நானும்
சைத்ரா மாதிரியே யோகாலயத்துக்குள்ளே நுழையறது தான் ஒரே வழியாய் எனக்குத் தோணுது மாமா.”
ராகவனும் அதைத் தான் அருணாச்சலத்திடம்
சொல்லியிருந்தார் என்பதால் திருப்தியுடன் தலையசைத்தார்.
ஷ்ரவன் சொன்னான். “யோகாலயத்துக்குள்ளே
நமக்கு வேண்டப்பட்ட ஒரு ஆளும் இருக்குன்னு நினைக்கறேன் மாமா. சைத்ரா
உயிருக்கு ஆபத்திருக்கிறதாய் சொல்லி மொட்டைக் கடிதம் எழுதின ஆள் யோகாலயத்துக்குள்ளே
இருந்து தான் எழுதியிருக்கணும். அந்த ஆள் யாருன்னு கண்டுபிடிச்சா நமக்கு எல்லா உண்மைகளும்
தெரிய வாய்ப்பிருக்கு...”
ராகவன் சொன்னார். “அந்த ஆளையும்
அவங்க கண்டுபிடிச்சு இதுவரைக்கும் அப்புறப்படுத்தாம இருந்தால்”
“நீங்க சொல்றபடி
ஆயிருக்கவும் வாய்ப்பிருக்கு. பார்ப்போம். இது வரைக்கும் வேறெந்த
விபத்தோ, மரணமோ அங்கே நடந்த மாதிரி நம்ம கவனத்துக்கு வரலை அல்லவா?’
“இல்லை....”
என்று சொல்லி மேலும் ஏதோ சொல்ல முற்பட்டவர் எதுவும் சொல்லாமல் தவிர்த்தார்.
அதைக் கவனித்த ஷ்ரவன் புன்னகையோடு சொன்னான். “அப்படி
ஒரு விபத்தோ, மரணமோ அங்கே நடந்து நம்ம கவனத்துக்கு வராமலேயே போயிருக்கலாம். சில நாள்
கழிச்சு அது தெரிய வரவும் வாய்ப்பிருக்கு. அது தானே
நீங்கள் சொல்ல வந்தது...”
ராகவன் சிரித்து விட்டார். அவருடைய
மருமகனின் புத்திசாலித்தனம் அவருக்குப் பிடித்திருந்தது. “ஆமா....
ஆனா எல்லாத்தையும் நெகடிவ்வாவே ஏன் சொல்லிட்டு இருக்கணும்னு தான் விட்டுட்டேன்”
“அதை நினைக்கறதும், அதுக்கு
தயாராய் இருக்கறதும் தப்பில்லை மாமா. நீங்க அனுபவசாலிங்கறதால
எல்லாத்தையும் சரியாய் தான் யோசிச்சு வெச்சிருக்கீங்க. ஆனா நான்
அந்த மொட்டைக்கடிதம் எழுதின ஆள் இன்னேரம் செத்திருக்கலாம்னு நினைக்கலை. சைத்ரா
சாகறதுக்கு சில நாள் முன்பே அவளுக்கு இருக்கற ஆபத்தைச் தெரிஞ்சுகிட்டு அடுத்தவங்கள எச்சரிக்கற அளவு விவரமான
ஆள் தன்னைக் காப்பாத்திக்கற அளவு முன்கூட்டியே எச்சரிக்கையாய் இருக்காமல் போக வழியில்லைன்னு
என் உள்ளுணர்வு சொல்லுது. பார்ப்போம்.”
ராகவன் அவன் உள்ளுணர்வு சரியாக இருக்கலாம்
என்று எண்ணினார். அவன் சொன்னான். “நாம இன்னொரு பக்கத்துல
இருந்தும் விசாரணையை ஆரம்பிக்கிறது நல்லதுன்னு நினைக்கிறேன் மாமா. அந்த ஆஸ்பத்திரியில்
தான் சைத்ராவும், அந்த டாக்டரும் இறந்திருக்காங்க. அங்கேயும்
விசாரிக்கணும். ஆனா அங்கே யார் விசாரிக்கப் போனாலும் அது யோகாலயத்துக்குத்
தெரியாமல் போக வாய்ப்பில்லைன்னு தோணுது. அதனால நானும் போக முடியாது. விசாரிக்கப் போகிற ஆளும்
நேரடியாய் இந்த இரண்டு மரணங்களுக்காக மட்டும் விசாரிக்கப் போகிறதா இருக்கக் கூடாது.
விசாரணை பொதுவானதாய் இருக்கணும். கோவிட் சிகிச்சைக்கு
ஆஸ்பத்திரிகளுக்கு மானியமாய் ஒரு தொகை அரசாங்கம் தர்றதால, ஆஸ்பத்திரி
ரெகார்ட்ஸ் எல்லாம் சரியாய் இருக்கான்னு பொதுவாய் விசாரிக்கப் போகிற தணிக்கை அதிகாரி
மாதிரி ஒரு ஆள் போனா அது நம்பற மாதிரி இருக்கும்...”
ராகவன் சொன்னார். “நல்ல ஆலோசனை
ஷ்ரவன். நம்பிக்கைக்குரிய நல்ல திறமையான ஆள் ஒருத்தரை அதுக்கு நான்
உடனே ஏற்பாடு செய்யறேன். எங்க பக்கத்துல இருந்து நாங்க வேறென்ன பண்ணனும்?”
ஷ்ரவன் சிறிது நேரம் தீவிரமாக யோசித்து
விட்டுச் சொன்னான். ”யோகாலயம் கிட்டத்தட்ட 50 ஏக்கர்
இருக்கற பெரிய இடம். சுமார் ஐநூறு பேருக்கும் மேலே அங்கே வாழ்றாங்கன்னு கேள்விப்பட்டேன். அதனால அவங்களுக்கு
கூட்டிப் பெருக்க, சுத்தம் செய்ய, தோட்ட வேலை செய்ய, சமைக்க, சாமான்கள்
கொண்டு வந்து தரன்னு பல பேர் வேலைக்குத் தேவைப்படும். அதுல நிறைய
பேர் அடிக்கடி வெளியே போயிட்டு வரக்கூடியவங்களா இருப்பாங்க. அந்த மாதிரியான
வேலையில் நம்ம ஆள் ஒருத்தன் இருக்கறது நல்லது. ஏன்னா நான்
ஏதாவது முக்கியமான தகவல் அனுப்பணும்னா அவன் மூலமா உங்களுக்கு அனுப்பலாம். அதே மாதிரி
நீங்க ஏதாவது தகவல் எனக்கு அனுப்பணும்னாலும் அவன் மூலமாய் எனக்கு அனுப்பலாம்.”
ராகவன் சம்மதித்தார். “அதுக்கும்
ஒரு ஆளை உடனே ஏற்பாடு செய்யறேன்.”
ஷ்ரவன் சொன்னான். “அந்த ஆளை
உடனடியாய் அங்கே வேலையில் சேர்த்தறது நல்லது மாமா. ஏன்னா நானும்
அந்த ஆளும் ஒரே சமயத்துல அங்கே சேர்றது நாங்க ரெண்டு பேரும் எதிர்காலத்துல பேசிக்கறத
பார்க்கிற சமயங்கள்ல அவங்களுக்கு சந்தேகத்தை உண்டுபண்ணலாம். நான் சைத்ரா
பத்தி சேதுமாதவன் சார் கிட்டயும், அவளோட சிநேகிதிகள், வேலை செஞ்ச
இடத்து ஆள்கள் கிட்டயும் விசாரிச்சுத் தெரிஞ்சுக்க வேண்டியிருக்கு. அதுக்கும், சில அடிப்படை
வேலைகள் செய்யவும் எனக்குச் சில நாட்கள் தேவைப்படுது. நான் அங்கே
போய்ச் சேர பத்து நாளுக்கு மேல ஆகும். அதனால முதல்ல அந்த
ஆள் போய் சேர்ந்துக்கட்டும்.”
ராகவன் அதற்கும் சம்மதித்தார். அடுத்ததாக, விசாரணை சம்பந்தமான விஷயங்களுக்குத் தேவையான முக்கிய வேலைகளைச் செய்ய, தனக்கு முழு நம்பிக்கைக்கு உகந்த இரண்டு போலீஸ் இளைஞர்கள் வேண்டும் என்று ஷ்ரவன் சொன்னான். அதற்கும் அவர் சம்மதித்தார்.
சிறிது நேரம் அவர்கள் குடும்ப விஷயங்களைப்
பேசிக் கொண்டிருந்தார்கள். கடைசியில் ஷ்ரவன் அவரிடம் விடைபெற்ற போது அவர் சொன்னார். “ஷ்ரவன்
நீ ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கணும். இதுல நிறைய ஆபத்து
இருக்குங்கறதையும் நான் சொல்லி ஆகணும்.”
ஷ்ரவன் புன்னகையுடன் சொன்னான். “ஆபத்து
சாதாரணமாய் தெருவுல நடந்து போகறதுலயும் கூட இருக்கு மாமா. எவனாவது
குடிச்சிட்டோ, கட்டுப்பாடு இல்லாமயோ அவன் ஓட்டிகிட்டு வர்ற வண்டியை நம்ம
மேலே ஏத்திடலாம். அந்த வாய்ப்பு இருக்குங்கறதால நாம் தெருவில் நடக்காமயா இருந்துடறோம். ஆபத்து
நம்ம உத்தியோகத்தோட சேர்ந்தே இருக்கு. எச்சரிக்கையும்
நம்ம ரத்தத்துல கலந்தே தான் இருக்குங்கறதால பயப்பட எதுவும் இல்லை மாமா”
ராகவன் பெருமையுடன் தன் மருமகன் தோளைத்
தட்டிக் கொடுத்தார். என்னவொரு தெளிவு!
"ஒரு ஆளும் இருக்குன்னு" என்பது "ஒரு ஆளும் இருக்கார்ன்னு" என்று இருந்தால் நலம். ஆவல் அதிகமாகிறது. நன்றி.
ReplyDeleteபேச்சு வழக்கில் இலக்கணம் சிலசமயங்களில் கடைப்பிடிக்கப்படுவதில்லை. அதுவே இயல்பாகவும் இருக்கிறது. எனவே இது வேண்டுமென்றே அப்படி எழுதப்பட்டது. நன்றி.
Deleteஷர்வன் சீக்கிரம் யோகாலயம் உள்ளே போக வேண்டும் .... அதன் பின் தான் விருவிருப்பு கூடும்....
ReplyDelete